முந்தைய பகுதிகள்: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12

விஜயகுமார்: கலை அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் ஒற்றைச் சாளர முறை இல்லாத நிலையில் இட ஒதுக்கீட்டு முறைகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா?
பெருமாள்முருகன்: இடஒதுக்கீட்டு நடைமுறைகளைப் பின்பற்றித் தானாக வேண்டும். அதில் பிரச்சினை வந்தால் கல்லூரி முதல்வர் பதில் சொல்ல வேண்டும். சேர்க்கைக் குழு பதில் சொல்ல வேண்டும். துறைத்தலைவர் பதில் சொல்ல வேண்டும். ஆகவே சிக்கல் வராமல் பார்த்துக் கொள்வார்கள். எனினும் இது சாதியச் சமூகம் அல்லவா? ஒவ்வொருவருக்குள்ளும் சாதி எங்கோ ஆழத்தில் சிம்மாசனம் இட்டு அமர்ந்து கொண்டிருக்கிறதே. அது தன் வேலையைக் காட்டாமல் இருக்குமா? அது மட்டுமல்ல. சமூக நீதி சமூக நீதி என்று எவ்வளவுதான் பேசினாலும் அதைப் பற்றிப் போதுமான புரிதலைப் பொதுச்சமூகத்திற்கு உருவாக்கவில்லை. பெரும்பட்டம் பெற்று ஆசிரியராக வருபவர்களுக்கும் அதைப் பற்றிய தெளிவில்லை. தெளிவின்மையுடன் சாதிப் பற்று சேர்ந்து கொண்டால் குளறுபடிகள் நடக்க வாய்ப்பு ஏற்படும். தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கும் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டு முறையைப் பற்றி விளக்கிச் சொல்லும்படி கேட்டால் பெரும்பான்மையான ஆசிரியர்கள் திணறுவார்கள். இடஒதுக்கீட்டால் பலன் பெற்றுக் கல்வியும் வேலைவாய்ப்பும் கிடைத்திருந்தாலும் அதைப் பற்றி அறிதல் இல்லை. அறிந்து கொண்டு அடுத்து வரும் தலைமுறைக்குச் சொல்ல வேண்டும், வழிகாட்ட வேண்டும் என்னும் உணர்வு கிடையாது. இத்தகைய காரணங்களால் ஏற்படும் குளறுபடிகள் சிலவற்றை என் அனுபவத்திலிருந்து சொல்ல முடியும்.
பட்டியலினத்தவருக்கு மட்டும் இடஒதுக்கீடு இருப்பது போல ஒருகருத்துப் பொதுவெளியில் நிலவுவதை அறிவோம். தமக்குக் கிடைப்பவை எல்லாம் இயல்பானவை என்றும் பட்டியலினத்தவருக்குக் கிடைப்பவை எல்லாம் சலுகையினால்தான் என்றும் எண்ணம் சாதிய மனதில் உருவான அல்லது பதிந்த கருத்து அது. பிற்படுத்தப்பட்ட சாதிக்கு இடஒதுக்கீடு இருக்கிறது என்று சொன்னால் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். தெரிந்தாலும் தெரியாதது போல இருப்பார்கள். எல்லாப் பிரிவினருக்கும் இடஒதுக்கீட்டில் பங்கு இருக்கிறது. முற்படுத்தப்பட்ட சாதிகளுக்கும் ‘பொதுப்போட்டி’ என்னும் முப்பத்தொரு விழுக்காட்டில் வர வாய்ப்பு இருக்கிறது. சமூக நீதி யாரையும் கைவிடவில்லை.
ஆனால் ஆதிக்கம் பெற்றவர்கள் தமக்கே எல்லாம் கிடைக்க வேண்டும் என்று விரும்புவார்கள். ஆதிக்கத்தை இழக்கச் சம்மதிக்க மாட்டார்கள். தக்க வைத்துக்கொள்ள எந்த நிலைக்கும் இறங்குவார்கள். பொதுப்போட்டியை ஆங்கிலத்தில் open competition என்போம். அதைச் சுருக்கமாக OC என்பது வழக்கம். OC என்பதற்கு other caste என்று விளக்கம் கொடுத்தோர் உண்டு. பிசி, எஸ்ஸி, எஸ்டி என எல்லோருக்கும் ஒதுக்கீடு இருக்கிறது. இப்பிரிவுகளில் இடம்பெறாத சாதிகள் எல்லாம் other caste எனச் சொன்னார்கள். மதிப்பெண் அடிப்படையில் பொதுப்போட்டியாகிய அதில் எந்தச் சாதியினரும் வரலாம் என்பதை மறைத்து அப்பிரிவில் முற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு மட்டுமே இடம் ஒதுக்கிய வரலாறு எல்லாம் நம்மிடம் உண்டு. தமிழ்நாடு தேர்வாணையத்திலேயே அப்படி நடந்தது எனவும் அதைக் கண்டறிந்த பிறகு OC என்பது other caste அல்ல, open competition என்று விளக்கம் கொடுத்து ஓர் அரசாணையே வெளியிட வேண்டியிருந்தது என்னும் செய்தியைக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
வி: இப்போது பொதுப்பிரிவு பற்றிய புரிதல் கூடியிருக்கிறது என்று கருதுகிறேன். அதனால் அப்படிப்பட்ட பிரச்சினைகள் இல்லைதானே?
பெமு: புரிதல் கூடியிருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் பிரச்சினை இல்லை என்று சொல்ல முடியாது. இப்போதும் OC பற்றிப் பல குளறுபடிகள் நடக்கின்றன. மதிப்பெண் குறைவாக இருப்பினும் முற்படுத்தப்பட்ட பிரிவைச் (FC) சேர்ந்தவர்கள் பெயரை முதலில் போட்டுவிட்டு அதன் தொடர்ச்சியாகப் பிற பிரிவினரைச் சேர்ப்பதும் நடக்கிறது. அரசு கல்லூரிகளுக்கு முற்படுத்தப்பட்ட பிரிவினரில் இருந்து மாணவர்கள் வருவதேயில்லை. இருபத்தைந்து ஆண்டு கால என் பணியனுபவத்தில் இரண்டே இரண்டு மாணவர்களைக் கண்டிருக்கிறேன். ஒருவர் தமிழிலக்கியம் படித்தார். இன்னொருவர் வணிகவியல் படித்தார். ஆனால் சில விண்ணப்பம் வருவதுண்டு. அவற்றைத் தரவரிசையில் எங்கே வைப்பது என்பதில் ஆசிரியர்களுக்குக் குழப்பம் உண்டு. மதிப்பெண்ணைப் பற்றிக் கவலைப்படாமல் முதலில் வரிசைப்படுத்துவார்கள்.
அரசு கல்லூரிகள் பலவற்றில் பிற்படுத்தப்பட்ட பிரிவில் குறைவான விண்ணப்பங்களே வரும். போட்டியே இருக்காது. பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும், இடம் கிடைத்துவிடும். நாமக்கல், ஆத்தூர் கல்லூரிகளில் அதைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். பல படிப்புகளில் பிசி பிரிவில் இடம் காலியாக இருக்கும். அப்பிரிவு மாணவர்கள் விண்ணப்பிக்கவில்லை என்றால் என்ன அர்த்தம்? அப்பிரிவைச் சேர்ந்த சாதியார் மருத்துவம், பொறியியல் எனத் தொழிற்கல்வி நோக்கி நகர்ந்துவிட்டார்கள் என்றும் அதிகப்பணம் செலுத்திச் சுயநிதிக் கல்லூரிகளில் சேருமளவு பொருளாதாரப் பலம் பெற்றிருக்கிறார்கள் என்றும் அர்த்தம். இதைப் புரிந்துகொள்ளாத ஆசிரியர்கள் உண்டு.
நாமக்கல் மாவட்டத்தில் அருந்தியர் எண்ணிக்கை அதிகம். கொல்லிமலை இருப்பதால் பழங்குடியினரும் எண்ணிக்கையும் கணிசம். அரசு கல்லூரிகளை நோக்கி அவர்கள் இப்போதுதான் வருகிறார்கள். ஆகவே அம்மாணவர்கள் அதிகமாக விண்ணப்பிப்பார்கள். பொதுப்பிரிவில் அவர்களுக்குள் தான் போட்டியிருக்கும். பிசி அல்லது எம்பிசி மாணவர்கள் ஓரிருவர் வருவர். வராமல் முழுமையாக எஸ்ஸி, எஸ்ஸிஏ, எஸ்டி மாணவர்களாலேயே பொதுப்பிரிவு இடங்கள் நிறைவடைவதும் உண்டு. இதைப் பொறுக்க முடியாத ஆசிரியர் சிலர் ‘அதெப்படி பொதுப்பிரிவில் எல்லோரும் அவர்களே வருவார்கள்?’ என்று கோபமாகக் கேட்பார்கள். ‘அவர்களே’ என்பதை ‘பட்டியலினம்’ என்னும் பொருளில்தான் பயன்படுத்துவார்கள். கோபத்தோடு நின்றால் எப்படியோ போகட்டும் என்று விட்டுவிடலாம். அதிக மதிப்பெண் கொண்ட பட்டியலின, பழங்குடி மாணவர்கள் பலரிருக்கக் குறைவான மதிப்பெண் பெற்ற பிசி, எம்பிசி மாணவர்களைப் பொதுப்பிரிவுக்குள் கொண்டு வந்து தம் சாதிப் பற்றைக் காட்டுவோர் இருக்கிறார்கள்.
வி: நீங்கள் முதல்வராக இருந்தபோது அப்படி ஏதும் நடந்ததுண்டா? அத்தகைய ஆசிரியர்களை எப்படிக் கையாண்டீர்கள்?
பெமு: நான் பணியில் சேர்ந்த காலத்திலிருந்து மாணவர் சேர்க்கைப் பணியில் ஈடுபட்டிருக்கிறேன். பலவித அனுபவங்கள் உண்டு. நான் முதல்வராக இருந்தபோது மேற்சொன்னது போல அதிக மதிப்பெண் கொண்ட எஸ்ஸி, எஸ்டி பிரிவு மாணவர்கள் இருந்தாலும் குறைந்த மதிப்பெண் கொண்ட பிசி, எம்பிசி மாணவர்களைப் பொதுப்பிரிவில் ஒரு துறைத்தலைவர் சேர்த்துவிட்டார். அந்த ஆசிரியரிடம் கடுமையாகப் பேச வேண்டியிருந்தது. என் கோபம் தணிந்தவுடன் ‘உங்கள் சாதிப்பற்று வாழ்க! குறைவான மதிப்பெண் கொண்ட மாணவர்களைப் பொதுப்பிரிவில் சேர்த்துவிட்டீர்கள். பிசிக்கான ஒதுக்கீட்டுப் பிரிவில் அத்தனை இடங்கள் காலியாகக் கிடக்கிறதே? அவற்றை நிரப்ப உங்கள் சாதியிலிருந்து மாணவர்களைக் கொண்டு வருவீர்களா?’ என்று கேட்டேன்.
பிசி, எம்பிசி பிரிவில் காலியிடம் இருப்பின் சேர்க்கை நடைமுறையின் கடைசிக்கட்டத்தில் அவ்விடங்களைப் பிற பிரிவினரைச் சேர்க்கும் வகையில் மாற்றம் செய்துகொள்ளலாம். அதற்கு ‘conversion’ என்று பெயர். தமிழில் பொதுவாக ‘மாற்றம்’ என்றுதான் சொல்வோம். ‘அப்படி மாற்றும்போது உங்கள் சாதிப் பிரிவுக்குரிய இடங்களில் ‘அவர்கள்’ வந்து சேர்வார்களே, என்ன செய்வீர்கள்?’ என்றும் அந்த ஆசிரியரிடம் கேட்டேன். அப்போதும் அவருக்குப் புரிந்ததோ என்னவோ. அவர் சேர்த்திருந்த மாணவர்களை அந்தந்தப் பிரிவுக்குள் கொண்டு சென்று அதிக மதிப்பெண் பெற்றிருந்த மாணவர்களைப் பொதுப்பிரிவில் சேர்த்து அந்தப் பிரச்சினையைச் சரிசெய்தோம்.
இன்னும் சிலரின் நடவடிக்கைகள் வெகுநுட்பமாக இருக்கும். அவர்களுக்கு பிசி, எம்பிசி, எஸ்ஸி என்னும் இடஒதுக்கீட்டுப் பிரிவுகள் பற்றிக் கவலையில்லை. தம் சாதி பற்றி மட்டுமே கவலைப்படுவார்கள். ஆசிரியர் பிசி பிரிவைச் சேர்ந்தவர் என்றாலும் பிசி பிரிவுக்குள் தம் சாதி மாணவர் வருகிறாரா என்று உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருப்பார். தம் சாதி மாணவர் வந்தால் அவரை எப்படியேனும் சேர்த்துவிட முயல்வார். இந்த வகை ஆசிரியர்கள் பலர். ஒரு துறைத்தலைவர் எஸ்ஸியில் ஒருகுறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர். எஸ்ஸி ஒதுக்கீட்டுப் பிரிவில் தம் சாதி மாணவர்களைச் சேர்ப்பதையே விரும்புவார். அவர்கள் எண்ணிக்கை மிகுந்திருக்க வேண்டும் என நினைப்பார். அதற்காக அவர் செய்யும் தந்திரங்கள் பல.
முதுநிலைப் படிப்பில் எஸ்ஸி பிரிவில் ஓரிடம் காலியாக இருந்தது. கல்லூரிக்கு அருகில் இருந்த ஊரைச் சேர்ந்த மாணவி ஒருவர் முன்கூட்டி விண்ணப்பிக்கவில்லை என்றாலும் சேர விருப்பப்பட்டு முதல்வராக இருந்த என்னை வந்து பார்த்தார். அவரைச் சேர்த்துக் கொள்ளும்படி குறிப்பெழுதி அத்துறைத்தலைவருக்கு அனுப்பினேன். அம்மாணவி அத்துறைத்தலைவரின் சாதியல்ல. உடனே அவரே நேராக என் அறைக்கு வந்துவிட்டார். இன்னொரு மாணவர் வருவதாகச் சொல்லியிருக்கிறார் என்றும் அவருக்கு வாக்குக் கொடுத்துவிட்டதாகவும் என்னிடம் சொன்னார். அம்மாணவியைச் சிலநாள் காத்திருக்கும்படி அனுப்பி வைத்தேன்.
அத்துறையின் பிற ஆசிரியர்களிடம் விசாரித்தபோது துறைத்தலைவர் சொன்னது உண்மையில்லை என்றறிந்தேன். சில நாட்களுக்குப் பிறகு அவர் சாதியைச் சேர்ந்த மாணவர் ஒருவரை எப்படியோ தேடிப் பிடித்துக் கோண்டு வந்து சேர்த்துவிட்டார். அம்மாணவியை விடவும் மதிப்பெண் குறைவுதான். அம்மாணவிக்கு இடம் கொடுக்க முடியவில்லையே என்று எனக்கு வருத்தமாயிற்று. எனினும் சேர்க்கை முடியும் வரை காத்திருக்கும்படி அம்மாணவியிடம் சொன்னேன். இன்னொரு மாணவர் ஏதோ காரணத்தால் மாற்றுச் சான்றிதழ் வாங்கினார். அவருக்கு மாற்றுச் சான்றிதழ் தயாராகிக் கொண்டிருந்த அதே நேரத்தில் அம்மாணவியை வரச் சொல்லிச் சேரும்படி செய்தேன். என் செயல் துறைத்தலைவருக்குப் பிடிக்கவில்லை. முடித்துச் செல்லும் வரை அம்மாணவிக்குப் பலவிதமான இடைஞ்சல்கள் கொடுத்தபடியே இருந்தார்.
ஒரே பிரிவாக இருப்பினும் அப்பிரிவில் உள்ள எல்லாச் சாதியையும் சமமாக ஏற்றுக்கொள்ளாமல் தம் சாதி மாணவர் வரும்வரை காத்திருக்கும் ஆசிரியர்கள் உண்டு. சாதி உணர்வு அப்படி நம் நாடி நரம்பிலெல்லாம் புகுந்து பரவியிருக்கிறது. இந்த நுட்மான தந்திரம் வெளியிலிருப்போருக்குத் தெரியாது.
வி: இது போல ஆசிரியர்கள் கையாளும் தந்திரங்கள் நிறைய இருப்பதாகச் சொன்னீர்கள். இன்னும் சிலவற்றைச் சொல்ல முடியுமா?
பெமு: சில நினைவுகள் வருகின்றன.
இணைய வழி விண்ணப்பம், ஒவ்வொரு கல்லூரிக்கும் கலந்தாய்வு முறை என்று இப்போது வந்துவிட்டது. இதற்கு முன்னால் ‘வராண்டா அட்மிஷன்’ என்று ஒன்றிருந்தது. மாணவர் சேர்க்கைக்கு என்று அரசு நிர்ணயித்திருக்கும் கடைசி நாளை ‘வராண்டா அட்மிஷன்’ என்று சொல்வோம். ‘வளாகச் சேர்க்கை’ என்று சொல்லலாம். காலியாக இருக்கும் இடங்களை எல்லாம் வெளிப்பட அறிவிப்புப் பலகையில் அறிவிக்க வேண்டும். ஏற்கனவே விண்ணப்பித்து இடம் கிடைக்காதோர், விண்ணப்பமே செய்யாதவர் என்று யார் வேண்டுமானாலும் வரலாம். அவர்களுக்கு ஒரு தன்விவரப் படிவம் தருவோம். அதை நிரப்பிக் கொடுப்பார்கள். அவற்றைக் கொண்டு மதிப்பெண் அடிப்படையில் எந்தப் பாடத்திற்குத் தகுதி என்பதைப் பார்த்து இடம் ஒதுக்க வேண்டும். சாதி ஒதுக்கீட்டையும் கறாராகப் பின்பற்ற வேண்டியதில்லை.
நான் பணியில் சேர்ந்த புதிது என்றாலும் துறைத்தலைவராக இருந்தேன். 1999 – 2000 கல்வியாண்டு என நினைக்கிறேன். வளாகச் சேர்க்கைக்கு வாங்கிய படிவங்களைத் தரம் பிரித்து அடுக்கியவர்கள் இரு ஆசிரியர்கள். நானும் முதல்வர் அறையில் உட்கார்ந்திருந்தேன். அவர்கள் பிரிப்பதை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தேன். எந்தெந்தப் பாடத்தில் எந்தெந்த மாணவரைச் சேர்ப்பது எனப் பிரித்து முடித்து அந்தந்தத் துறைத்தலைவரிடம் கொடுத்து அனுப்பினார்கள். அப்போதெல்லாம் தமிழ் இலக்கியப் படிப்பைக் கடைசி இடத்தில் வைத்திருப்பார்கள். அறிவியல் முடிந்து பிற கலைப்பாடங்களும் முடிந்த பிறகு கடைசியில் தமிழுக்கான படிவத்தைக் கொடுத்தார்கள். பிரித்த ஆசிரியர் ஒருவருக்கு அருகில் நான் உட்கார்ந்து கவனித்துக் கொண்டிருந்ததால் வெளியே வரும்போது மெல்ல ஒருசந்தேகம் கேட்டேன். பிசி, எம்பிசி பிரிவு மாணவர்கள் எல்லோரையும் கணினி அறிவியல், அடிப்படை அறிவியல் பாடப்பிரிவுகளில் சேரும்படி பிரித்து அனுப்பியிருந்தார்கள். எஸ்ஸி மாணவர்களைக் கலைப் பாடங்களுக்குப் பிரித்துக் கொடுத்திருந்தார்கள். ‘எல்லாம் கலந்துதான வரணும் சார்?’ என்று அவரிடம் கேட்டேன். அவர் என் காதுக்குள் வந்து ‘அவுங்களுக்கு எதுக்குக் கம்ப்யூட்டரும் அறிவியலும்?’ என்றார். அதிர்ந்து போனேன். அவர் பார்வையில் கலைப்பாடங்கள் தாழ்ந்தவை. கணினியும் அறிவியலும் தொழிற்பாடங்கள். அவற்றை ‘அவர்களுக்கு’ வழங்கக் கூடாது. அடேங்கப்பா… என்ன நுட்பம்! நானும் பிசி பிரிவைச் சார்ந்தவன் என்பதால் என்னிடம் அந்த ரகசியத்தை வெளிப்படுத்தினார் போலும். வேறு பிரிவினனாக இருந்தால் சொல்லியிருக்க மாட்டார். இப்படியெல்லாம் சாதி செயல்படுகிறது.
சில ஆசிரியர்கள் தம் துறையில் மாணவர் எண்ணிக்கையைக் கூட்டக் கூடாது என்று நினைப்பார்கள். கூட்டினால் தமக்கு வேலை அதிகமாகி விடும் என்பது காரணம். அறிவியல் துறையில் மாணவர் எண்ணிக்கை கூடினால் செய்முறைப் பயிற்சி, பதிவேடுகள் என வேலை கூடும். அதைத் தவிர்க்க நினைப்பார்கள். மாணவர் விண்ணப்பம் அதிகமாக இருந்தால் அரசிடம் அனுமதி பெற்று 20 விழுக்காடு எண்ணிக்கையைக் கூட்டி மாணவர்களைச் சேர்க்கலாம் என்று அரசு அனுமதி கொடுத்தது. ஆனால் பல அறிவியல் துறையினர் ‘கூடுதல் எண்ணிக்கை வேண்டாம்’ என்று சொல்லிவிட்டார்கள். அதற்கு ஒத்திருந்தால் இன்னும் எத்தனையோ மாணவர்களுக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கும்.
கலைப்பாடங்களிலும் குறைவான மாணவர்கள் இருந்தால் நல்லது என்று நினைக்கும் ஆசிரியர்கள் உண்டு. சான்றாக வரலாற்றுத் துறையில் தமிழ் வழி, ஆங்கில வழி என்று இருபிரிவு உண்டு. மாணவர் குறைவாக இருந்தால் இருபிரிவையும் ஒன்றாக வைத்துக் ‘கூட்டு வகுப்பு’ (compained class) நடத்திவிடலாம். அதிக மாணவர்கள் இருந்தால் தனித்தனியாக வகுப்பு நடத்த வேண்டும். அத்துறை ஆசிரியர்கள் ஒருநாளுக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே வகுப்பு எடுப்பார்கள். துறைத்தலைவருக்கு ஒரே ஒரு மணி நேரம்தான் வகுப்பு வரும். மாணவர் எண்ணிக்கை கூடினால் மூன்று மணி நேரம் வகுப்பு எடுக்க வேண்டும். பெரும்பான்மையான ஆசிரியர்கள் அடிநிலையில் இருந்து முதல் தலைமுறையாகக் கல்வி கற்றுப் பணிக்கு வந்தவர்கள்தான். ஆனால் தம்மைப் போன்ற நிலையிலிருந்து வரும் மாணவர்களுக்குப் படிக்க இடம் கொடுக்க மறுக்கும் இந்த மனநிலையை எப்படிப் புரிந்துகொள்வது?
வகுப்பில் மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்தால் கல்விக்கு நல்லதுதான். பள்ளிகளில் வகுப்பு இருபது மாணவர் அளவு போதும் என்கிறார்கள். உயர்கல்வியில் நாற்பது வரைக்கும் இருக்கலாம் என்கிறார்கள். இன்று கலைப் பாடங்களில் அறுபது வரைக்கும் உள்ளது. அறிவியல் பாடங்களில் நாற்பது. இது நல்லதுதான். வளர்ந்த நாடுகளில், கல்வி வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்கும் இடத்தில் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம். ஆனால் நம் நாட்டில் இப்போதுதான் பலர் முதல் தலைமுறையாகக் கல்விக்குள் வருகிறார்கள். அவர்கள் தாராளமாக உள்ளே வரும் வகையில் கதவுகளை எல்லாம் திறக்க வேண்டும். கொஞ்சம் கூடுதலாக இருந்தால் என்ன தவறு? அறுபது எண்ணிக்கையுள்ள வகுப்பில் விடுப்பு எடுப்போர் பத்து முதல் பதினைந்து பேர் இருப்பார்கள். இடைநிற்றலில் நான்கைந்து பேர் போய்விடுவார்கள். கடைசியாக வகுப்பில் எஞ்சுவது நாற்பது நாற்பத்தைந்து என்றுதான் இருக்கும்.
அரசு அனுமதிப்பதை ஆசிரியர்கள் தடுக்கிறார்கள். மாணவர்களை உள்ளே கொண்டு வருவதற்குப் பதிலாக வெளியே தள்ளுகிறார்கள். தம்மைப் போன்ற நிலையிலிருந்து வரும் சாதாரண மாணவர்களுக்கு இழைக்கும் பெருந்தீங்கு இது. கூடுதல் 20 விழுக்காட்டில் இடம் கிடைத்துப் படித்த என் மாணவர் ஒருவரைப் பற்றிக் கட்டுரை எழுதியிருக்கிறேன். அவர் இப்போது கிராம வங்கி ஒன்றில் பணியாற்றுகிறார். அவர் சொன்னார், ‘ஐயா, பட்டம் படித்ததால் தான் இப்போது பேண்ட் போட்டுக் கொண்டு நாற்காலியில் உட்கார்ந்து பணியாற்றுகிறேன்.’ அம்பேத்கார் ‘சமூக மேம்பாட்டுக் கருவி கல்வி. உயர்கல்வி பெற்று உயர்பதவிகளை அடைந்தவர்கள் தங்களது மக்களுக்கு உதவ வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு’ என்று சொன்னார். ஆனால் ஆசிரியர்கள் பலர் தம் மக்களுக்கு எதிராக இருக்கிறார்கள் என்பதை வருத்தத்தோடு பதிவு செய்கிறேன். அம்பேத்காரை மேற்கோள் காட்டுவதால் பட்டியலின ஆசிரியர்களை மட்டும் சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம். எல்லா இன ஆசிரியர்களிலும் பலர் இவ்வகையில் சுயநலமிகள்; சமூக உணர்வற்ற சோம்பேறிகள் என்றே சொல்வேன்.
வி: மாணவர்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு இடம் வழங்கக் கலைக்கல்லூரி மாணவர் சேர்க்கையில் வாய்ப்புண்டா?
பெமு: அதற்கும் வாய்ப்புண்டு. சிலர் அத்தகைய இழிசெயல்களில் ஈடுபடுவது உண்டு. ஆத்தூர் அரசு கல்லூரியில் ஐந்தாண்டுகள் பணியாற்றிவிட்டு 2001இல் நாமக்கல் கல்லூரிக்கு இடமாறுதல் பெற்று நான் வந்ததற்குக் காரணம் அதுதான். அப்போது கல்லூரி முதல்வர் பொறுப்பு வகித்தவர் பணப்பிசாசு. முடிந்தவரைக்கும் மாணவர் சேர்க்கையில் பணம் சம்பாதிக்க முனைந்தார். உள்ளூரில் அரசியல் செல்வாக்கும் சாதி ஆதரவும் கொண்டவர். அவரை எதிர்க்கும் அளவுக்கு ஆசிரியர் சங்கங்களும் வலுவாக இல்லை. லஞ்சம் வாங்குபவர்களால் சிலசமயம் நல்லதும் நடக்கும். எல்லாத் துறைகளிலும் 20 விழுக்காடு மாணவர் எண்ணிக்கையைக் கூட்டிச் சேர்க்க வேண்டும் என்பதில் அவர் கறாராக இருந்தார். அப்போதுதானே அதிகமான பணம் சம்பாதிக்க முடியும்!
அவர் லஞ்சத்துக்கு ஆதரவாக இருந்ததால் சில ஆசிரியர்கள் புரோக்கர்களாக மாறினார்கள். வரும் தொகையைப் பங்கிட்டுக் கொண்டார்கள். இறுதி வளாகச் சேர்க்கையின் போது ஒருகட்டு விண்ணப்பங்களைக் கொடுத்து அம்மாணவர்களை எல்லாம் தமிழ் இலக்கியப் பிரிவில் சேர்த்துக் கொள்ளும்படி சொன்னார். என்ன அடிப்படையில் இம்மாணவர்களைத் தேர்ந்தெடுத்தீர்கள் என்று தெரியாமல் நான் கையொப்பம் இட மாட்டேன் என்று விண்ணப்பங்களை முதல்வர் மேசையில் விட்டெறிந்து விட்டு வெளியே வந்துவிட்டேன். துறைத்தலைவர் கையொப்பம் இல்லாமலே முதல்வர் கையொப்பமிட்டு அம்மாணவர்களைச் சேர்த்துக் கொண்டார். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. அவர் தலைமையில் வேலை செய்வது இயலாத காரியம் என்று தோன்றியது. அடுத்த இரண்டு மாதத்தில் வந்த இடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்று நாமக்கல்லுக்கு வந்துவிட்டேன். சில ஆண்டுகள் அவர் முதல்வர் பொறுப்பில் இருந்தார். ஒருமாணவருக்கு நான்காயிரம் ஐந்தாயிரம் என்று பணம் வாங்கினார். எல்லா மாணவர்களுக்கும் அப்படி வாங்க முடியாது. ஆண்டுக்கு நூறு மாணவருக்கு வாங்கியிருந்தாலும் குறைந்தபட்சம் நான்கு லட்சம். 2000 வாக்கில் நான்கு லட்சம் என்றால் இப்போது எவ்வளவு வரும் என்று கணக்கிட்டுக் கொள்ளுங்கள். லஞ்சம் வாங்கச் சிறிதும் கூச்சப்படாத அற்பர் ஒருவரை அப்போதுதான் நேரில் கண்டேன்.
இன்னொரு முறை முதல்வர் விடுப்பு என்பதால் பொறுப்பிலிருந்தேன். ஆசிரியர் ஒருவர் பழங்குடியின மாணவர் நால்வரை அழைத்து வந்தார். விவரம் தெரியாதவர்கள், பழங்குடியின மாணவர்கள் என்றெல்லாம் சொல்லி அவர்களுக்கு உதவ வந்த ஆபத்பாந்தவனாகத் தன்னைக் காட்டிக் கொண்டார். எந்தப் படிப்பில் எல்லாம் காலியிடம் இருந்ததோ அதைப் பொருத்து அவர்களைச் சேர்த்துக் கொண்டேன். அடுத்த நாள் முதல்வர் வந்ததும் ‘நாலு பேரச் சேத்தீங்களா?’ என்று கேட்டார். ‘ஆமாம். பழங்குடியின மாணவர்கள். இந்த ஆசிரியர்தான் அழைத்து வந்தார்’ என்று சொன்னேன். முதல்வர் சிரித்தார். அழைத்து வந்த ஆசிரியர் ஒவ்வொரு மாணவரிடமும் நான்காயிரம் பணம் வாங்கியிருக்கும் தகவல் தனக்கு வந்ததாகச் சொல்லி ‘இப்படியா அப்பாவியாக இருப்பீர்கள்’ என்று மீண்டும் சிரித்தார். எனக்கு அவமானமாக இருந்தது. இருப்பினும் சமாளித்துக் கொண்டு சொன்னேன், ‘பழங்குடி மாணவர்களுக்கு இடம் கொடுத்த நான் ஏன் வருந்த வேண்டும்? அம்மாணவர்களிடம் பணம் வாங்கிய இழிசெயலுக்காக அவர்தான் வருந்த வேண்டும்’ என்று சொன்னேன்.
நாமக்கல் கல்லூரியில் முதல்வராக இருந்தபோது ஒருநிகழ்வு. இக்கல்லூரியில் எப்போதும் நூறிலிருந்து இருநூறு காலியிடங்கள் இருக்கும். இவ்வூர் தொழில் நகரம். எல்லாப் பிரிவிலும் சுயநிதிக் கல்லூரியை நாடும் அளவு பொருளாதார வசதி பெற்றோர் இருப்பர். ஆகவே தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து எம்பிசி, எஸ்ஸி பிரிவு மாணவர்கள் பலர் வந்து சேர்வார்கள். அப்படியும் இடம் இருக்கும். சேர்க்கைக்கெனக் கல்லூரிக்குள் வரும் மாணவரை ஏதாவது ஒருபாடத்தில் சேர்த்துவிட வேண்டும் என்பதைக் கொள்கை முடிவாகவே கொண்டிருந்தேன். அதனால் பல நெகிழ்வுகளை உருவாக்கினேன். எதிர்பார்த்தபடி மாணவர் சேர்க்கை எண்ணிக்கை அதிகரித்தது. இரண்டாம் நிலைக் கல்லூரியிலிருந்து முதல்நிலைக் கல்லூரியாக உயர்த்தும் அளவுக்கு மாணவர் எண்ணிக்கை கூடியது. அதற்கும் விண்ணப்பிக்க முடிந்தது.
ஓராண்டு மாணவர் சேர்க்கை முடியும் தருவாயில் சேலத்திலிருந்து தொலைபேசி அழைப்பு. சேலம் மாவட்ட நீதிபதி ஒருவர் பெயரைச் சொல்லி அவரது உதவியாளர் பேசுவதாகக் கூறினார். பழங்குடியின மாணவர்களுக்கு உதவும் ஓர் அமைப்பு இருப்பதாகவும் நீதிபதி அதன் மூலம் பலருக்கும் உதவுவதாகவும் சொன்னார். தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பத்து மாணவர்களுக்குக் கல்லூரியில் இடம் வேண்டும் என்று கேட்டார். அழைத்து வரும்படி சொன்னேன். அழைத்து வந்தார்கள். எல்லோருக்கும் வெவ்வேறு படிப்புகளில் இடம் கொடுத்துச் சேர்த்துக் கொண்டேன். பின்னர் விசாரித்த போது தெரிந்த உண்மை அவர்கள் சொன்ன பெயரில் நீதிபதியே இல்லை, ஒரு என்ஜிஓ அமைப்பு மாணவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு அவர்களை அழைத்து வந்து சேர்த்திருக்கிறார்கள் என்பதுதான். சரி, பத்து மாணவர்களுக்கு இடம் கொடுத்தோம் என்று திருப்தி கொண்டேன். அம்மாணவர்களில் சிலரை அழைத்து ‘இனிமேல் உங்கள் பகுதியில் இருந்து யாரும் சேர விரும்பினால் நேரில் நீங்களே அழைத்து வாருங்கள். யாருக்கும் பணம் கொடுக்க வேண்டாம்’ என்று சொன்னேன்.
ஒடுக்கப்பட்ட மக்களின் அறியாமையைப் பயன்படுத்திக் கொண்டு இப்படிப் பணம் பறிப்பவர்கள் இருக்கிறார்கள். தம் ஊரைச் சேர்ந்த ஆசிரியர் கல்லூரியில் பணியாற்றுகிறார் என்று நம்பி வந்து கேட்பவர்களிடம் லஞ்சம் வாங்கிய ஆசிரியர்களையும் அறிவேன். இயல்பாக இடம் கிடைத்திருந்தாலும் தாம் பரிந்துரை செய்து வாங்கிக் கொடுத்ததாகச் சொல்லிப் பணம் வாங்கியிருப்பார்கள். இப்படியெல்லாம் இழிவானவர்கள் இருக்கிறார்கள். என்ன செய்வது என்று தெரியவில்லை. ஒற்றைச் சாளர முறைக் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்றால் இந்த ஏமாற்றுக்களுக்கு வழி இருக்காது. இடஒதுக்கீடு தொடர்பாகச் சிறுமோசடியும் நடக்க வாய்ப்பிருக்காது. எல்லாம் வெளிப்படையாக இருக்கும். இன்றைய நிலையில் கைப்பேசியிலேயே இணையம் சார்ந்த பல பணிகளைச் செய்துவிடலாம். எங்கிருந்த போதும் பதின்பருவத்தினர் அதை இயல்பாகக் கையாள்வர். அவர்களுக்கு ஒற்றைச் சாளர முறை மிகுந்த பயன் தரும் என்பது என் எண்ணம்.
தொடரும்…

விஜயகுமார்
வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். தற்போது டோக்கியோ அறிவியல் நிறுவனத்தில் (Institute of Science, Tokyo) ஆய்வாளராக உள்ளார். நவீனத் தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் உள்ளவர். தமிழிலிருந்து மலையாளத்துக்கு கவிதைகள் மொழிபெயர்த்துள்ளார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.




















