வேணு தயாநிதி கவிதைகள்

கல் குழந்தை

சன்னல் ஓரத்தில்
ஒரு அமைதியான தொட்டில்
அதில் அசைவற்று படுத்திருக்கும் அழகாய்
ஒரு கூழாங்கல்.
அமைதியின் திரையை கிழிக்கும்
சிணுங்கல்கள் இல்லை
அழுகுரல் கேட்டு நள்ளிரவில் பதறி எழுந்து
பால் குப்பியை தேட வேண்டியதில்லை
மருத்துவத்திற்கும் காப்பகத்திற்கும் அழுது கொண்டு ஓடவோ
இரவு பகலாய் உடன் இருக்கவோ
அவசியம் இல்லை.
நீ வளர்வதும் இல்லை
இனி தேய்வதும் இல்லை
இன்று இருப்பது போலவே
இருப்பாய் எப்போதும்.
ஒரு பயணத்தின்
எதிர்பாராத நிறுத்தத்தில்
தூரத்தில் பெயர் தெரியாத பறவை ஒன்று
யாரையோ பெயர் சொல்லி அழைத்துக்கொண்டிருக்க
யாரும் பார்க்க வராத நதி ஒன்று
வைத்திருந்தது உனை
அதன் வரவேற்பரையில்.
மாலை வெயிலின் கிரணங்களில் ஜொலித்தாய்
ஓடிப்போய்
உடனே எடுத்து அணைத்தேன்
ஒரு தேரையாகி ஒட்டிக்கொண்டேன்.
வழுவழுத்த உன் கரிய உடலை
வடிகட்டிய குளிர் நீரில் கழுவுகிறேன்
மெத்து துவாலையால் துடைத்து
உலகின் விலை உயர்ந்த ஆடையை
அணிவிக்கிறேன்
திலகமிட்டு மலர் சூட்டுகிறேன்
என் குழந்தை என்று சொல்வதை கேட்டு
பலர் சிரிக்கலாம்
ஒரு தாயின் அன்பு
சிலருக்கு புரியும்.
என் இதயத்தை
நீ ஒருபோதும் உடைக்க மாட்டாய்
தாமதமாய் வீடு திரும்பி
உன் அன்னையிடம்
சுடுசொல் கூற மாட்டாய்

கோபித்துக்கொண்டு தூரப்போய்
தொடர்பை துண்டிக்க மாட்டாய்
அந்த மாம்பழ நிற சுவாவா நாய்க்குட்டியைப்போல
நோயுற மாட்டாய்
என்னை கதறி அழ விட்டு
இல்லாமல் ஆக மாட்டாய்
என் கூட்டை விட்டு
எப்போதும் நீங்க மாட்டாய்
என் அன்பின் ஆழத்தை
உன் இதயத்தில் தாங்கிக் கொள்வாய்.
என்னுள்
ஆழமாக செதுக்கப்பட்டது உன் முகம்
எதிர்பார்ப்புகள் ஏதுமற்று
கருணையில் ஊறும்
அமைதியான பிரியத்தால்
என் உலகத்தை நிரப்புகிறாய்
அன்றாடமும்.
என் பிரியத்தின் வடிவான கூழாங்கல்லே!
இந்த பூமியில்
என்றும் மாறாத
மிக அழகிய குழந்தை நீதான்.
நீ என்னை விட மூத்தவனா? இருக்கலாம்
எனக்கு பிறகும்
நீ நீண்டு வாழலாம்.
நான் இறந்த பிறகும்
நம் உறவு நீடிக்க
நான் ஒரு பாசுரம் எழுதுவேன்
ஒரு கோயில் கட்டி அலங்கரித்து உன்னை
கருவறையில் வைப்பேன்.
காலத்தை கடந்தும்
சரிதைகளில் வாழ்வோம்
எப்போதும்
நாம்

000

நினைவுகளின் தந்துகி

சற்று முன் ஜன்னல் ஓரம்
குதித்து இறங்கிய குட்டி அணில்
என் வீட்டு முகப்பின்
வண்ணத்தின் தேர்வை கடிந்து
தன் எதிர்ப்பை தெரிவிக்கிறது.
முற்றத்தின் புல்வெளியை
நான் நறுக்கி வைத்திருக்கும் ஒழுங்கை
பல முறை சோதித்து பார்த்த பின்
வாலாட்டி பாராட்டி குரல் எழுப்பும்
தெருவுக்குள் புதிதாய் வந்திருக்கும்
நீல நிறக்குருவி.
ஓக் மரத்தின் கவிகைகள்
தசை பெருத்து
எடைகூடி கவிழ்ந்த கோடையில்
பச்சை விரிப்பை பார்த்தபடி
நடைப்பயிற்சி பயிலும்
முதிய பாதசாரிகளுக்கு
உடன் செல்பவருடன்
எதைப்பற்றியாவது
ஏதாவது ஒன்று
சொல்ல இருக்கிறது.
நாம் விளையாடிக்களித்த
கிராமத்து வீட்டு முற்றத்தின்
கிளிகள் இல்லா இலவமரம்.
அதன் வண்ணத்தை
கவிகையில் நிறைத்து
மாடி அறையின்
சாளரம் தொட்டு நிற்கும்
புதிதாய் இலைவிட்ட
வெள்ளி மேப்பிள் மரம்.
தந்துகிகளில் விரவிச்செல்லும்
சாற்றின் இனிமையில் லயித்து
சிலிர்த்து நடுங்கும் கைகள்
மருதாணியில் சிவந்த
விரல் இடுக்குகள் வழி
மின்னி மறையும் கதிர்கள்.
நம் பிரிவின் சாபத்தால்
ஒரு எளிய ஆரஞ்சுப்பழமாகி
சற்றே சாய்ந்து விட்ட பூமிக்கோளம்
அதன் தூரத்து ரேகையில்
கடல் கடந்த வேறொரு கண்டம்
எதோ ஒரு ஊரின் ஏதோ ஒரு தெருவின்
மாலை வெயிலில்
வட துருவத்திலிந்து பீறிடும்
குளுமையில் ஆழ்ந்து

செவ்வந்திகள் மறைக்கும்
நடை பாதையில்
சொற்கள் அற்று அமர்ந்திருப்போம்
அருகருகே
ஒருவருக்கு ஒருவர் துணையாய்
நீ அமரத் தவறிய
காலி நாற்காலியும்
நானும்.

000

பெயரென்ப

பெயரென்பது வெறும் சொல்
சொல்லென்பது வெறும் ஒலி
ஒலியென்பது ஒரு மூச்சு
என் மூச்சென்பது நீதான்
நீயென்பது ஒரு பெயர்
பெயரென்பது வெறும் சொல்
சொல்லென்பது வெறும் ஒலி
ஒலியென்பது ஒரு மூச்சு
என் மூச்சென்பது நீதான்

000

வேணு தயாநிதி

வேணு தயாநிதி இலக்கியத்திலும், இசையிலும் அதிகம் நாட்டம் கொண்டவர். தற்சமயம் அமெரிக்காவில் வசித்துவருகிறார்.  புற்றுநோய் மூலக்கூறு உயிரியலில் ஆராய்ச்சியில் நிபுணத்துவம் கொண்டவர்


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

உரையாடலுக்கு

Your email address will not be published.

கடந்தவை

திரட்டு

சேகரம்

Go toTop

Don't Miss