ஏ.கே.ராமானுஜன் கவிதைகள்

தமிழில்: ஷங்கர்ராமசுப்ரமணியன்

ஓர் அறிக்கை

வீட்டுக்கு வண்ணமடிப்பவனான ஹிட்லர்
வார்சா முழுக்க செவ்வண்ணம் பூசினான்
அர்ஜெண்டினாவில் தப்பித்திருந்ததாக வதந்தி
இப்போது இறந்துவிட்டான்
ஸ்டாலின் முகத்தில் கரிபூசப்பட்டது
தொலைபேசி அருங்காட்சியகத்தின் பெயர் லெனின்
வியட்நாம்
வசூலில் வெற்றிபெற்ற திரைப்படம்.
காந்தியும் கிங்கும் கருப்பு வெள்ளைப் புகைப்படங்களில்
சிரிக்கிறார்கள்
பீடிக்கடைகளில்.
அவர்கள் வாழ்கிறார்கள்
சாகிறார்கள்
மீண்டும் மீண்டும்
தொண்டர்களோ
உருளைக்கிழங்குகளை
வெளிநாட்டுக் கார்களை
அல்லது
பீடிகளையாவது வாங்குகின்றனர்.
நாணயங்களிலும்
ரூபாய் நோட்டுகளிலும்
காந்திகளும் கிங்குகளும்
முத்திரைகளாக மாறுகின்றனர்.
கட்சிமாறுவதற்கு பேர்பெற்ற
நமது மரங்களைப் போல
அவர்களது நாயகர்களின் படுக்கையறைகள் அல்லது
பிரசார விடுதிகளில்
புதிய பாணியில்
நிறத்தை மாற்றிக்கொள்ளும்
வாழ்க்கை சரிதங்களென
அரங்கேறுகின்றன.

.

அர்ஜென்டினா அல்லது போனுக்கு
பழைய சர்வாதிகாரிகள் தப்பிப்போயிருக்காவிட்டால்
வடக்கு டகோடாவில் மேய்ச்சல் நிலங்களை வாங்கி
வியட்னாமிய சமையல்காரர்களால் விட்டமின் ஊட்டப்பட்ட
தீனி ஊட்டப்பட்டு
சூரியனின் ஏழு குதிரைகளென
கனைத்து முழங்கும் குதிரைகளில் சவாரி செய்தபடி
தங்கத்தில் செய்யப்பட்ட சட்டை
முழங்கைசுற்றுப்பட்டைகளை அணிந்துகொண்டு
தானியங்கித் துப்போக்கிகளோடு அலையும் குண்டர்களின்
பாதுகாப்போடு வலம்வருவர்.
அர்ஜென்டினாவுக்கோ போனுக்கோ பழைய சர்வாதிகாரிகள் தப்பிச்சென்றிருக்காவிட்டால்
விடிவதற்கு இரண்டு மணிநேரங்களுக்கு முன்னரே
புதிய சர்வாதிகாரிகள்
அவர்களை வேட்டையாடி, குற்றம்சாட்டித்
தூக்கிலிடுகின்றனர்.
செல்வச் செழிப்பு மிக்க ஸ்பைஸ் ஐலேண்டில்
வாழும் பரம ஏழைகள்
தற்போது கொக்கெய்ன் அறுவடைகளால்
புழக்கடையில் அபின் செடிகளை வளர்த்துப் பிழைக்கின்றனர்.
இங்கே
சிக்காகோ மற்றும் சூரிச்சில்
உங்கள் மகளோ, மருமகனோ செத்துக் கொண்டிருக்க
தாதி, மதகுரு மற்றும் பாதுகாவலர்களின் நியமனத்துடன்
போதை ஊசிகள் புழங்கும் பூங்காக்கள்
முழுமை எய்தியுள்ளன.
ஒரு சகா, அவன் ஒருபாலுறவாளன் அல்ல, பெனின் அவன்
ஊரும் அல்ல
திரையரங்கத்திலேயே பொழுதைக் கழித்தவனும் அல்ல
நாள்பட்ட எய்ட்ஸுடன் போராடிக்கொண்டிருக்கிறான்
அன்னிய உடலில் பொருத்தப்பட்ட தலையாய்
பாம்பின் தோலைப் போல வறண்டிருக்கும் அவன் தேகத்தை
முத்தம் தருவதற்கோ, கைகொடுப்பதற்கோ
தழுவுவதற்கோ கூடத் தயங்கியபடி
நண்பர்கள் தொற்றைத் தடுக்கும் பிளாஸ்டிக் சூட்களை அணிந்து
சந்திக்க வருகின்றனர்.
தண்ணீரில் சகஜமாய் முன்பு
உற்சாகமாய்
தேவைகள் உடல் முழுக்க உந்த
அப்பட்டமாக
காமத் திளைப்பிலிருந்த
முதலைக் குஞ்சு அவன்.
இருப்பினும் என்னால் என்ன செய்யமுடியும்?
உப்பிற்கும் மிதக்கும் கழிவுகளுக்கும் அடியிலோ
அருகிலோ உள்ள இனிய நீர்நிலைகளுக்கும்
மரணத்துக்குமான கடவுளே,
நான் என்ன செய்வேன்?
தூங்குவதைத் தவிர
நேசத்திலும் தொழிலிலும்
உழைப்பதையும்
தப்பிதத்தில் ஈடுபடுவதையும் தவிர
உடைந்து விழுந்து போகாமல்
மீண்டும் உறங்கி
சிகாகோவில் ஒரு நீலநிறத்து
மைசூர் வீட்டைக் கனவுகாண்பதைத் தவிர.

000

இருபத்தி நான்கு புலன்கள்

இந்துக்கள் 24 புலன்கள் பற்றி உரைக்கின்றனர்
நாம் கண்களையும்
கண்களுக்குப் பின்னாலுள்ள கண்களையும்
கொண்டிருக்கிறோம்.
சருமத்தால் சிலசமயங்களில் மின்னல் வெட்டுகளை
பார்க்கமுடிகிறது.
கண்ணிமைகளால் கேட்கமுடிகிறது பாம்பின் நிசப்தத்தை
வெறும்பாதம் குளத்தின் பாசிகளை ருசிக்கிறது.
குட்டிக்கரணங்களில்
கல்லீரல் செல்களின் ஓட்டத்தைக் கண்காணிக்கிறது
கணையமோ
முகங்களின் சுழிப்புக்குள் திறக்கிறது
அட்லாண்டிக்கின் மத்தியில்
திமிங்கலப் பாடல்கள் ஒலிக்கும்போது
சினைப்பைகள் நகர்கின்றன.
தைராய்ட் சுரப்பியோ
மார்பில் குழந்தையின் அணைப்பை
உணர்கிறது
இன்னும் உருவாகாத கைவிரல்கள்
கால்விரல்களைக் கற்பனை செய்யும்
கருப்பையோ தொடர் சுரிப்புகளுக்கு உள்ளாகிறது.

000

இருப்பினும்

நம்மால் சரியாகச் சொல்லிவிட முடிகிறது
என்று சொல்லும்போதெல்லாம்
தப்பாகவே முடிகிறது
என்றாலும்
நாம் சொல்லிவிடுகிறோம்.
ஒரு பெண்,
ஒரு நண்பரின் மகள்
அவள் குளியலறையில் விழுந்து
இறந்து
இரண்டு நாள்களுக்குப் பிறகு
சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட போதும்.
நாம் சொல்வது தவறானாலும்
நாம் அதைச் சொல்கிறோம்.
புதிதாக அருகே குடிவந்தவரிடம்
சமீபத்தில் நடந்த திருமணத்துக்காக
நாங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தோம்…
கீழ்தளத்தில் திடீரென்று பற்றும் தீயைப்போல
தேனிலவு நாளில்
அவர் மனைவிக்குப் பைத்தியம் பிடித்ததை
உடனடியாகக் கேள்விப்பட்டோம்.

000

நங்கூரங்கள்

நீலம் ஏன் அவ்வளவு நீலமாக உள்ளது
பச்சையாக மாறாமல்
எனது உணர்வுநிலைகளைப் போல.
இளம்பாசித்திரளென பச்சைமூட்டம்
மூளையின் மடிப்புகள் அவிழ்கின்றன
கோடையில் இலைகள், வாதுமை அதன் உறைக்குள்
தனது தாய் மரத்துக்காக ஏங்கிக்கொண்டிருக்கிறது
இன்னும் பிரியாத விரல்களைக் கொண்ட கை
பனிக்குடத்தில்
கருப்பை அணுக்களைப் பற்றுகிறது,
முதல் வார்த்தை கடைசி வார்த்தையைத் தள்ளுகிறது.
ஆழமற்ற நீர்நிலையில்
நங்கூரம் அழுந்தி இறங்குகிறது
வாழ்க்கை வடிவுகள் சேற்றில்.
நீச்சல் குளத்தைச் சுற்றி
வெள்ளைத் தொப்பிகள் அணிந்திருக்கும் பெண்களிடம்
என்னால் பேசவியலாது.
க்ளோரின் நீலம்,
அழுத்தம் மெதுவாய் சுற்றிவளைக்கிறது,
நாள்கணக்கில் பசியிலிருக்கும் மலைப்பாம்பு,
பசியமிலம்
வயிற்றின் சுவர்களை அரித்துத் தின்கிறது.
சிறுமிகள் நாட்டார் கதைகளில்
மரங்களாக மாறுகின்றனர்
நான் அவர்களைத் தழுவும்போது
பதினான்கு வயதில்,
மூன்று வரிசைக்கு அப்பால்
தொடமுடியாத தூரத்தில்
அவள்
பேருந்தில் உட்கார்ந்திருக்க வேண்டுமென்று விரும்புகிறேன்
மல்லிகையும் நல்லெண்ணெயும்
காற்றில் மிதக்கும் வாசனைகள்.

000

ஷங்கர்ராமசுப்ரமணியன், தமிழில் எழுதிவரும் கவிஞர், விமர்சகர். ‘இகவடை பரவடை, நிழல் அம்மா, ஆயிரம் சந்தோ‌ஷ இலைகள், கல் முதலை ஆமைகள் முதலிய கவிதைத்தொகுதிகள் வெளிவந்துள்ளன. பிறக்கும்தோறும் கவிதை, நான் பிறந்த கவிதை, நினைவின் குற்றவாளி  ஆகிய கட்டுரைத் தொகுப்புகளையும்  எழுதியுள்ளார். விக்ரமாதித்யன் கவிதைகள் ,‘அருவம் உருவம்: நகுலன் 100’ உள்ளிட்ட தொகுப்பு நூல்களின் ஆசிரியர்.

தமிழ் விக்கியில் 


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

உரையாடலுக்கு

Your email address will not be published.

திரட்டு

சேகரம்

Latest Posts

Go toTop

Don't Miss