
“பன்முகப்பட்ட சிந்தனைக் குரல்கள் எந்த தணிக்கையும் இல்லாமல் சுதந்திரமாக உரையாடுவதும் முரண்பட்டு விவாதிப்பதுமே ஆரோக்கியமான ஒரு அறிவுச் சூழலுக்கான சான்றுகள். உரையாடலே உயிர்த்தன்மை என்றும் சொல்லலாம்.”
சென்றமுறை, அகழ் சார்பில் முன்னெடுக்கப்பட்ட இணையக் கூடுகை சிறப்பான முறையில் நடைபெற்றது.
கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியனுடனான உரையாடல் நவீன தமிழ் இலக்கியத்தின் நெடுங்கவிதை மரபு சார்ந்து ஒரு குறுக்கு வெட்டு சித்திரத்தை அளிப்பதாக இருந்தது. கவிஞர்களும், வாசகர்களும் பங்கேற்ற நிகழ்வில், தீவிரமான கருத்துக்கள் பகிரப்பட்டன. விவாதங்கள் நிகழ்ந்தன.
இப்போது அகழின் அடுத்த இணையக் கூடுகை, “ஜீலை 11, 2026” அன்று திட்டமிடப்பட்டுள்ளது. புகைப்படக் கலைஞரும் கலை விமர்சகருமான ஏ.வி.மணிகண்டன் இந்த கலந்துரையாடலில் பங்கேற்கிறார்.
தமிழ் இலக்கியப் பரப்பில் காண்பியல் கலைக்கு தொடர்ச்சியாக கவனம் கிடைப்பது அரிதாகவே இருக்கிறது. இச்சூழலில் ஏ.வி.மணிகண்டன் அகழ் இணையதளத்தில் ஓவியம் சார்ந்தும் புகைப்படக் கலை சார்ந்தும் பல கட்டுரைகள் எழுதியிருக்கிறார். பெருந்தொகுப்பாக வெளியிடும் எண்ணிக்கையில் அவர் கட்டுரைகள் அகழில் இடம்பெற்றுள்ளன. கோதிக் கலையை மையப்படுத்தி “ஆவிக்கு ஒரு ரோஜா” என்ற தலைப்பில் ஒரு குறுந்தொடரும் எழுதியுள்ளார். அவருடைய விரிவான நேர்காணலும் அகழ் தளத்தில் பிரசுரமாகி உள்ளது. உடன், ஏ.வி.மணிகண்டனின் புகைப்படங்கள்மீதான வெவ்வேறு எழுத்தாளர்களின் வாசிப்புகளையும் வெளியிட்டுள்ளோம்.
அரசியல், சமூகம், அழகியல், கோட்பாடு என பல அறிவுத் துறைகள் ஊடாடகும் களமாக ஏ.வி.மணிகண்டனின் எழுத்துக்கள் உள்ளன. ஓருவகையில் சமகாலத்தில் கலையை அணுகுவது என்பது வெறுமனே அதை தரவரிசைப்படுத்துவதோ அல்லது புனிதப்படுத்துவதோ அல்லது பூடகமாக்குவதோ அல்ல. மேலும் மேலும் அதை ஆழப் பயில்வது என்பதனையே அவருடைய எழுத்துக்கள் காட்டுகின்றன.
கலை வாசிப்புக்கான அடிப்படை படைப்பூக்கத்தையும் கவித்துவத்தையும் அவர் கட்டுரைகள் எப்போதும் இழப்பதில்லை. காண்பியல் கலை பற்றிய கட்டுரைகளிலேயே தொடர்ந்து நவீன கவிதைகளுக்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவம் அதற்கான சான்று. தமிழ் நவீன கவிஞர்கள் பற்றியும் அவர் விமர்சனக் கட்டுரைகள் எழுதியுள்ளார். நாவல் விமர்சனங்களும் வெளியாகியுள்ளன. “முழுமையறிவு” அமைப்பிற்காக தொடர்ச்சியாக காண்பியல் கலை அறிமுக முகாம்களையும் நடத்தி வருகிறார்.
“படிமம்” அவர் எழுத்துக்களின் மையப்புள்ளியாக உள்ளது. படிமம் என்பது ஒரு குறியீட்டு வடிவம் (a representation/a form). தான் உருவான சட்டகத்தை மீறி பல்வேறு அர்த்த சாத்தியங்களை அடையக்கூடியது. தன் உடனடி வெளிப்பாட்டுக்கு அப்பால், பல தளங்களில் செயல்படக்கூடியது. அது எப்படி வெவ்வேறு ரூபங்களை எடுக்கிறது என்பதையே ஏ.வி.மணிகண்டன் தொடர்ந்து பேசுகிறார். அதன் நிமித்தமே அவருடனான உரையாடலுக்கு “படிமம் காணும் வழிகள்” என்று தலைப்பு வைத்துள்ளோம்.
அனைவரின் பங்கேற்பையும் ஆதரவையும் கோருகிறோம். முன்கூட்டியே கேள்விகள் அனுப்ப விரும்புவோர் “akazhonline@gmail.com” எனும் முகவரிக்கு அனுப்பலாம். நிகழ்வில் பங்கேற்க இயலாதவர்களும், விரும்பினால் கேள்விகளை மட்டும் அனுப்பி வைக்கலாம்.
கூகிள்மீட் விவரங்கள் விரைவில் தளத்தில் பகிரப்படும்
அகழ் ஆசிரியர் குழு
000
000
அகழ் இணையக் கூடுகைகள் – 02
புகைப்படக் கலைஞர், கலை விமர்சகர் ஏ.வி.மணிகண்டனுடன் வாசகர் கலந்துரையாடல்
தலைப்பு : “படிமம் காணும் வழிகள்”
காண்பியல் கலை மற்றும் இலக்கியம் சார்ந்து “அகழ்” இணையதளத்தில் வெளியான ஏ.வி.மணிகண்டனின் கட்டுரைகளை மையப்படுத்திய உரையாடல்.
கட்டுரைகள் பற்றிய அறிமுக உரை : எழுத்தாளர் விஷால் ராஜா
நாள் : 11 ஜீலை 2026 நேரம் : மாலை 4:00 முதல் 6:00 வரை
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.





















அகழ் இதழின் இலக்கிய குடுக்கைக்குகள் ஏற்பாட்டு குழுவிற்கு நன்றி. இலக்கியம் என்பது வாசித்து , உள்வாங்கி, அதன் பிறகு உரையாடல் மூலம் அடுத்த நிலையை நோக்கி நகர்வது என ஜெயமோகன் எழுதி வாசித்த நினைவு. நிச்சயம் தமிழ் இலக்கிய தளத்தை அடுத்த கட்டத்திற்கு இந்த நிகழ்வுகள் எடுத்து செல்லும். நன்றி
இலக்கிய கூடுகைகள் என்பது இலக்கிய குடுக்கைக்குகள் என பிழையாக இடம் பெற்று விட்டது. மன்னிக்கவும்.