முந்தைய பகுதிகள்: 1 2 3 4 5 6 7 8 9 10 11

விஜயகுமார்: மருத்துவம் மற்றும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு ஒற்றைச் சாளர முறையில் தமிழ்நாடு முழுவதும் சேர்க்கைகள் நடைபெறுகின்றன. இதன் சாதக பாதகங்கள் என்னென்ன?
பெருமாள்முருகன்: மாணவர் சேர்க்கையில் ஒற்றைச் சாளரமுறை என்பது மிகச் சிறந்த நடைமுறை. இது வந்த பிறகு எத்தனையோ சிக்கல்கள் தீர்ந்திருக்கின்றன. இடஒதுக்கீட்டுக் குளறுபடிகள், கல்லூரியைத் தேர்வு செய்யும் சிக்கல் எல்லாம் இப்போது இல்லை. வெளிப்படைத் தன்மை முழுமையாக இருக்கிறது. அலுவலக நடைமுறைகள் சார்ந்து மட்டுமே அரசு சிந்திப்பதால் சில சிக்கல்கள் நிலவுகின்றன. பெற்றோர், மாணவர் நோக்கிலிருந்து சிந்தித்தால் அவற்றை எளிதாகக் களைந்துவிடலாம். பொறியியில், மருத்துவம், கலை அறிவியல் ஆகிய முத்துறை சார்ந்தும் கலந்தாய்வில் ஒருங்கிணைப்பு இல்லை. ஒவ்வொன்றும் தனித்தனியாக நடக்கின்றது. அதனால் குறிப்பிட்ட அளவு மாணவர்கள் குழப்பத்தில் தவிக்கும் நிலை ஏற்படுகிறது.
அதிக மதிப்பெண் பெற்றிருக்கும் மாணவர் ஒருவர் முதலில் மருத்துவம் சேர விரும்புவதே பொதுப்போக்கு. ஒருவேளை அது கிடைக்கவில்லை என்றால் பொறியியல் படிப்பைத் தேர்வு செய்யத் திட்டம் இருக்கும். ஆனால் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வுதான் முதலில் நடக்கும். மருத்துவம் கிடைக்குமோ கிடைக்காதோ என்னும் குழப்பத்தில் பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்று ஒருகல்லூரியைத் தேர்வு செய்து சேர்ந்த பிறகு மருத்துவக் கலந்தாய்வுக்குச் சென்று அதில் இடம் கிடைத்தால் பொறியியல் படிப்பிலிருந்து விலகியாக வேண்டும். அதே போலப் பொறியியல் கலந்தாய்வுக்கு முன்பே கலை அறிவியல் படிப்புகளுக்கான சேர்க்கை தொடங்கிவிடுகிறது. இதில் சேர்ந்தவருக்குப் பொறியியலில் வாய்ப்புக் கிடைக்குமானால் இடைநின்று மாற்றுச் சான்றிதழ் பெற்றுச் செல்ல வேண்டும். இது தேவையற்ற அலைச்சலைப் பெற்றோருக்கும் மாணவருக்கும் உருவாக்குகிறது. கணிசமான மாணவர்கள் இப்படி அலைகழிகிறார்கள். மருத்துவம், பொறியியல், கலை அறிவியல் என்னும் வரிசையில் மாணவர் சேர்க்கை நாட்கள் அமைந்தால் இந்தச் சிக்கலைத் தீர்க்க முடியும். நீட் தேர்வும் இதில் தொடர்பு பட்டிருப்பதால் ஒன்றிய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்பட்டு இச்சிக்கலைத் தீர்க்க வேண்டும்.
மருத்துவப் படிப்பில் ஆங்கில மருத்துவம் (பல் மருத்துவம் உட்பட), கால்நடை மருத்துவம், இந்திய மருத்துவம் (ஆயுஷ் – ஆயுர்வேதம், இயற்கை, யுனானி, சித்தம், ஓமியோபதி) ஆகிய பிரிவுகள் உள்ளன. இவற்றுக்கான கலந்தாய்வு தனித்தனியாக நடக்கிறது. மாணவர்கள் மூன்றுக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். சிலர் மூன்று முறையும் கலந்தாய்வில் கலந்துகொள்ள வேண்டியிருக்கிறது. கிட்டத்தட்ட ஆறு மாத நடைமுறை இது. மூன்றும் வெவ்வேறு துறையாக அலுவல் வசதிக்கெனப் பிரிக்கப்பட்டிருந்தாலும் அரசு முயன்றால் ஒரே சமயத்தில் மூன்று துறையையும் இணைத்துக் கலந்தாய்வு நடத்தலாம். ஆங்கில மருத்துவம் கிடைக்காத ஒருவர் கால்நடை மருத்துவம் எடுக்க விரும்பலாம்; இந்திய மருத்துவத் துறைக்குச் செல்லலாம். ஒருமுறை கலந்தாய்வுக்குச் சென்றால் அவர் தேர்வு முடிந்துவிட வேண்டும். இதை எளிதாகச் செய்யலாம்.
கலந்தாய்வில் பங்கேற்கச் சென்னைக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. பொறியியல் கலந்தாய்வில் தம் ஊரிலிருந்தே இணைய வழியில் கலந்துகொள்ளலாம் என்னும் வசதி கடந்த ஆண்டிலிருந்து வந்திருக்கிறது. மருத்துவத்திற்கு இன்னும் அது வரவில்லை. வெவ்வேறு ஊர்களில் இருந்து சென்னை செல்ல வேண்டும். ஓரிரு மாதம் முன்னால் கலந்தாய்வு நாள் தெரிந்தால் முன்பதிவு செய்ய முடியும். அதற்கு வாய்ப்பில்லை. மாணவருடன் பெற்றோரும் செல்கிறார்கள். பயணத்திற்குப் பேருந்து கிடைக்காமல், ரயில் முன்பதிவுக்கும் வாய்ப்பில்லாமல் பெரிதும் சிரமப்படுகிறார்கள். போனால் தங்குவதற்கு விடுதி கிடைப்பதில்லை. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அருகில் விடுதிகள் குறைவு. அங்கே தங்கினால் செலவும் அதிகம். பலர் எங்கும் தங்காமல் அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலோ சாலையிலோ காத்திருக்கிறார்கள். கலந்தாய்வுக்கு வருவோருக்குப் பயண முன்னுரிமை வழங்கலாம். ரயிலில் கூடுதல் சிறப்புப் பெட்டிகள் இணைக்கலாம். அண்ணாப் பல்கலைக்கழக விடுதி உட்பட அரசு சார்ந்த சில இடங்களைத் தங்குவதற்கு வழங்கலாம்.
இவையெல்லாம் அரசின் பார்வையில் சாதாரணப் பிரச்சினைகளாக இருக்கின்றன. மக்கள் நிலையிலிருந்து யோசித்தால் அவர்கள் கஷ்டத்தைப் புரிந்துகொள்ளலாம். மாணவர் சேர்க்கை மகிழ்ச்சியான செயலாக எல்லோருக்கும் இருக்க வேண்டும். அதற்கு அலைவதை நினைத்தாலே மனம், உடல் எல்லாம் சோர்ந்து போய்விடும். அரசு நினைத்தால் இந்த ஆண்டே இப்பிரச்சினைகளை எளிதாகத் தீர்க்கலாம். மக்கள் மகிழ்ச்சியோடு தம் பிள்ளைகளின் படிப்பைத் தேர்ந்தெடுக்க உதவ முடியும்.
வி: அரசு கலைக் கல்லூரிகளில் ஒவ்வொரு கல்லூரியும் தனித்தனியாக விண்ணப்பங்களைக் கோருகிறார்கள். இதனால் மாணவர்களுக்கும் அலைச்சல்; இடம் கிடைக்குமோ கிடைக்காதோ என்கிற மனக்கவலையும் ஏற்படுகிறதே?
பெமு: கொரானோ காலத்திற்கு முன் ஒருகல்லூரிக்கு விண்ணப்பிக்க வேண்டுமானால் அக்கல்லூரிக்குச் சென்று படிவம் வாங்கி எழுதிக் கொடுக்கும் நிலையிருந்தது. பெரும்பாலான மாணவர்களுக்குக் கல்லூரிகள் எங்கெங்கே இருக்கின்றன என்பதே தெரியாது. அருகில் இருக்கும் கல்லூரிக்கு மட்டுமே பெரும்பாலும் விண்ணப்பிப்பர். எந்தெந்தக் கல்லூரியில் எந்தெந்தப் படிப்பு இருக்கிறது என்பதும் தெரியாது. ஏதோ அருகில் இருக்கும் கல்லூரியில் கிடைத்த படிப்பில் சேர்வதே வழக்கம். இப்போது அந்நிலை மாறியிருக்கிறது. இணையம் வழியாக ஒரே விண்ணப்பம் போதும். அதில் தாம் விரும்பும் எத்தனை கல்லூரிக்கு வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு கல்லூரியிலும் சேவை மையமும் செயல்படுகிறது. இவை நல்ல மாற்றங்கள்.
ஆனால் கலை அறிவியல் கல்லூரிகளுக்கு ஒற்றைச் சாளரமுறைக் கலந்தாய்வு இல்லை. விண்ணப்பித்தல் மட்டும்தான் இணைய வழியில் வந்திருக்கிறது. ஒரு கல்லூரியில் சேர வேண்டுமானால் நேரில்தான் செல்ல வேண்டும். அந்தக் கல்லூரி பழைய நடைமுறையில் வழக்கப்படி சேர்க்கையை நடத்துகிறது. சேர்க்கைத் தேதியை அந்தந்தக் கல்லூரியே தீர்மானித்துக் கொள்ளலாம். என்றைக்கு எந்தெந்தப் படிப்புக்குக் கலந்தாய்வு என்பதையும் அந்தந்தக் கல்லூரியே தீர்மானித்துக் கொள்ளலாம். நாமக்கல்லில் வசிக்கும் மாணவர் சென்னையில் சேர விரும்பினால் அக்கல்லூரியில் என்றைக்குச் சேர்க்கை நடக்கிறது என்பது குறித்து எப்படி அறிவது? புலனம் வழிச் செய்தி அனுப்புவார்கள். பத்திரிகைகளில் செய்தி கொடுப்பார்கள். சென்னை என்றால் அச்செய்தி சென்னைப் பதிப்பில் மட்டும் வரும். நாமக்கல் மாணவர் பார்க்க வாய்ப்பிருக்காது. புலனச் செய்தி எல்லோருக்கும் கிடைக்கும் என்று சொல்ல முடியாது.
பல கல்லூரிகளில் ஒரே நாளில் சேர்க்கை நடத்துகிறார்கள். மாணவர் எங்கே செல்வார்? தான் செல்லும் கல்லூரியில் தனக்கு இடம் கிடைக்கும் என்பதும் உறுதியில்லை. நாமக்கல் கல்லூரிக்கும் ராசிபுரம் கல்லூரிக்கும் விண்ணப்பிக்கும் ஒருவர் இரண்டிலும் ஒரே நாளில் சேர்க்கை என்றால் எங்கே செல்வார்? நாமக்கல் கல்லூரிக்குச் செல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அங்கே அவர் விரும்பும் படிப்பு கிடைக்கவில்லை. ஆனால் ராசிபுரம் சென்றிருந்தால் கிடைத்திருக்கும். அவருக்கான வாய்ப்பு பறி போய்விடுகிறதே. ஒரே நாளில் சென்னையில் ஒருகல்லூரியிலும் திருச்சியில் ஒருகல்லூரியிலும் கலந்தாய்வு நடக்கிறது என்றால் இரண்டுக்கும் ஒருமாணவர் செல்ல முடியுமா? தமக்கு அருகில் இருக்கும் கல்லூரிக்கே முன்னுரிமை கொடுக்க முடியும். விண்ணப்பித்தல் இணையம் வழியில் என்றாலும் சேர்க்கை நடைமுறை பழையதுதான்.
கலை அறிவியல் கல்லூரிச் சேர்க்கைக்கும் ஒற்றைச் சாளரக் கலந்தாய்வு முறை இருந்தால் இந்தச் சிக்கல்கள் நேராது. தமிழ்நாட்டில் எந்த நகரத்தில் இருக்கும் கல்லூரியிலும் எந்தக் கிராமத்து மூலையிலும் இருக்கும் கல்லூரியிலும் தமக்கு விருப்பமான படிப்பு கிடைக்குமானால் சென்று சேர வாய்ப்பு அமையும். அந்த வாய்ப்புக்கான கதவுகள் இப்போதைய சேர்க்கை முறையில் அடைபட்டுள்ளன. ஒருவர் தம் சொந்த ஊரை விட்டு, சொந்தச் சாதியை விட்டு வெளியேறிப் பிறரும் இவ்வுலகில் வாழ்கின்றனர் என்பதை அறிவதற்கான முதல் வாய்ப்பைக் கல்விக்காக இடம்பெயர்தல்தான் கொடுக்கிறது. கலை அறிவியல் படிப்புகளைத் தேர்வு செய்யும் மாணவர்களுக்கு அந்த இடம்பெயர்தலை இப்போதையை சேர்க்கை முறை வழங்குவதில்லை.
தமிழ் மரபு கல்விக்காக இடம்பெயர்தலை ஊக்குவிக்கும் வரலாறு கொண்டது. நம் அகப்பொருள் இலக்கணம் காதலர் பிரிவுக்கான காரணத்தை வகைப்படுத்தும் போது ‘ஓதற் பிரிவு’ என்பதையே முதலில் கூறுகிறது. திருமணம் செய்துகொண்ட பிறகு மூன்றாண்டு வரைக்கும் கல்விக்காகத் தலைவன் பிரிந்து செல்லலாம் எனக் கால எல்லையை வரையறுக்கிறது. இடையில் அவன் திரும்பி வருதல் இல்லை. கல்வி கற்று முடித்த பிறகே திரும்பலாம். இன்றைய உயர்கல்வியில் இளநிலைப் படிப்பின் கால அளவு மூன்றாண்டு என வைத்திருக்கிறோம். அதே கால அளவு அப்போதும் இருந்திருக்கிறது. உ.வே.சாமிநாதையர் குருகுல முறையில் கற்றவர். அவர் கல்விக்காக அவர் தனியாகவும் சிலசமயம் குடும்பத்துடனும் இடம்பெயர்தல் நடக்கும். தமிழின் தொடக்க கால நாவல்களில் ஒன்றான ‘பத்மாவதி சரித்திரம்’ வாசித்துப் பாருங்கள். அதில் வரும் முக்கியப் பாத்திரங்களாகிய நாராயணனும் கோபாலனும் கல்விக்காகப் பட்டணம் செல்வார்கள். கல்விதான் முதன்முதலில் ஒருவர் தம் குடும்பத்திலிருந்து, ஊரிலிருந்து பிரிந்து செல்லும் வாய்ப்பைக் கொடுக்கிறது.
பார்ப்பனர்களுக்கு இவ்வாய்ப்பு அமைந்திருக்கிறது. சாதியச் சமூகத்தில் பிற சாதியினர் கல்வி கற்பதும் இல்லை; கல்விக்காகப் பிரிவதும் இல்லை. சாதி இங்கே நிலைபெறும் முன் இருந்த நிலை என்ன? கல்வியையும் கல்விக்காக இடம்பெயர்தலையும் நம் மரபு அனுமதிக்கிறது; வலியுறுத்துகிறது. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்னும் பெருந்தொடர் எப்படி வந்தது? கல்வி சார்ந்து உருவான தொடர் அது. ‘யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையும் கல்லாத வாறு’ என்று திருவள்ளுவர் அதை விரித்துக் கல்வியோடு தொடர்புபடுத்திச் சொல்கிறார். எதுவாக இருந்தாலும் அது நாடுதான்; எதுவாக இருந்தாலும் அது ஊர்தான். அங்கே வசிப்பவர்கள் மக்கள் தானே? அதற்காகத் தயங்கிக் கல்வியை விட்டுவிடக் கூடாது என்பதை வற்புறுத்துவது நம் மரபு.
இருபது ஆண்டுகளுக்கு முன், உயர்கல்விக்கு வரும் மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்த அப்போதைய நிலையில் மாணவர் சேர்க்கைத் தரவ்வரிசைப் பட்டியல் தயாரிக்கும்போது சொந்த மாவட்டத்தைச் சேர்ந்த மாணவருக்குக் கூடுதலாக ஐந்து மதிப்பெண் கொடுத்து அவருக்கு முன்னுரிமை தரும் முறை இருந்தது. இப்போது அம்முறை இல்லை என்றாலும் சொந்த மாவட்டத்தில் பயில்வதை ஊக்குவிக்கும் நடைமுறையே தொடர்கிறது. தொழில்நுட்பம் வளர்ந்திருக்கும் இக்காலத்தில் விரும்பிய கல்லூரியைத் தேர்வு செய்யவும் விரும்பிய ஊரில் சென்று பயிலவும் விரும்பிய பாடத்தைத் தேர்வு செய்யவும் வாய்ப்பு வழங்குவது எளிது. ஒற்றைச் சாளர முறையைக் கொண்டு வருவதன் வழி அதைச் சாத்தியப்படுத்தலாம்.
வி: ஒருவர் தாம் விரும்பிய படிப்பைத் தேர்வு செய்து படிக்க வேறு ஊர்களுக்குச் செல்லும் வாய்ப்பை ஏன் மறுக்க வேண்டும்? மருத்துவம், பொறியியல் ஆகிய படிப்புகளுக்கு எந்த ஊராக இருப்பினும் சென்று சேர்கிறார்களே? கலைக்கல்லூரிகளுக்கு ஒற்றைச் சாளர முறையைக் கொண்டு வருவதில் என்ன சிக்கல் இருக்கிறது?
பெமு: சிக்கல் என்று பார்த்தால் ஒன்றுமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். மாணவர்கள் சென்று சேரத் தயாராகத்தான் இருக்கிறார்கள். அரசுதான் அத்தகைய வாய்ப்பை வழங்க மறுக்கிறது. இன்னும் குறிப்பாகச் சொன்னால் இரண்டு தடைகள் இருக்கின்றன என்று சொல்லலாம். முதல் தடை அரசியல்வாதிகள். தமக்கு வேண்டிய மாணவர்களுக்குப் பரிந்துரை செய்து இடம் வாங்கித் தருகிறார்கள். சென்னை போன்ற பெருநகரக் கல்லூரிகளுக்கு அரசியல்வாதிகளிடம் இருந்து வரும் பரிந்துரைகளின் எண்ணிக்கை மிக அதிகம். அங்கே பணியாற்றும் முதல்வர்களும் ஆசிரியர்களும் அரசியல்வாதிகளைப் பகைத்துக் கொள்ளாமல் இருக்கவும் அதேசமயம் இடஒதுக்கீட்டை மீறாமல் இருக்கவும் பெரும் பிரயத்தனப்படுகிறார்கள். இந்தப் பரிந்துரைகளில் அமைச்சர்களே ஈடுபடுவதும் உண்டு. கிராமத்துக் கல்லூரிகளுக்கு அப்பகுதிச் சட்டமன்ற உறுப்பினர் முதல் உள்ளூர் அரசியல்வாதிகள் வரைக்கும் பலரும் நேரிலேயே வந்துவிடுவார்கள். தாம் பரிந்துரை செய்யும் மாணவருக்கு இடம் வழங்கச் சொல்லிச் சண்டையிடுவதும் உண்டு. ஒற்றைச் சாளர முறை வந்துவிட்டால் இத்தகைய பரிந்துரைகளுக்கு இடமே இல்லை. அரசியல்வாதிகள் தமக்குக் கிடைத்திருக்கும் சலுகையாகவோ உரிமையாகவோ இத்தகைய பரிந்துரை வாய்ப்பைக் கருதுகிறார்கள். அதை இழக்க விரும்புவதில்லை.
இரண்டாவது தடை அரசு உதவி பெறும் கல்லூரி நிர்வாகங்கள். மாணவர் சேர்க்கையைத் தம் விருப்பப்படி நடத்திக் கொண்டிருக்கும் அவை தம் சுதந்திரத்தை இழக்க விரும்பவில்லை. பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவு வெளியான இரண்டு நாட்களில் சேர்க்கையை முடித்துவிடும் அரசு உதவிபெறும் கல்லூரிகள் இருக்கின்றன. சேர்க்கைத் தேதி தொடர்பான முடிவுகளை அவர்களே எடுத்துக் கொள்கிறார்கள். அவற்றில் இடஒதுக்கீடு முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கும் ஏற்பாடுகளும் முறையாக இல்லை. கட்டணமும் அரசு விதித்திருப்பதைவிட அதிகமாகவே இருக்கிறது. அரசு கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கை தொடர்பான நடவடிக்கைகளை உயர்கல்வித் துறையே மேற்கொள்கிறது. விண்ணப்பிக்கும் தேதி, சேர்க்கை தொடர்பான நாள் எல்லை என எல்லாம் உயர்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. அரசு உதவி பெறும் கல்லூரிகளின் சேர்க்கையில் இப்படி முழுமையாக அரசு தலையிடுவதில்லை.
சுயநிதிக் கல்லூரிகளும் ஒற்றைச் சாளர முறையை வலியுறுத்துவதில்லை. அது வந்தால் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல் தயாரிப்பார்கள். அதில் தம் கல்லூரியின் இடம் பின்னால் இருக்கும் என்றால் மாணவர் சேர வர மாட்டார்கள். பொறியியல் கல்லூரிகளில் அப்படியான நிலை ஏற்பட்டுச் சில கல்லூரிகளை மூடும் நிலைகூட வந்தது. இப்போது தரகர்கள் வழியாக மாணவர்களைப் பிடித்துக் கொண்டு வந்து சேர்க்கும் நிலை எல்லாம் இருக்கிறது. எப்படியோ மாணவர் எண்ணிக்கையைத் தக்க வைக்கிறார்கள். மாணவருக்கு அரசு தரும் உதவித்தொகையைக் கல்விக் கட்டணமாக எடுத்துக் கொள்ளும் கல்லூரிகளும் உள்ளன. ஒற்றைச் சாளர முறை வந்தால் தம் கல்லூரியின் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும். உட்கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்த வேண்டும். அப்போதுதான் மாணவர்கள் விரும்பிச் சேர்வர். பல சுயநிதிக் கல்லூரிகளை நடத்துவோர் அரசியல்வாதிகள்; அல்லது பினாமிகள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆகவே சுயநிதிக் கல்லூரிகளும் ஒற்றைச் சாளர முறையை விரும்புவதில்லை.
கல்வியை மாணவர் நோக்கிலிருந்து அணுக வேண்டும். அதைத் தொழிலாகக் கருதி லாபத்தை எண்ணும் நிலைதான் இப்போது இருக்கிறது. முதலாளிகள் லாபத்தைக் குறைத்துக் கொள்ள விரும்பாத காரணத்தால் ஒற்றைச் சாளர முறையைத் தவிர்க்கவே நினைக்கிறார்கள். ஒற்றைச் சாளர முறை வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றன. பலரும் எழுதியிருக்கிறார்கள். நானும் கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். கடந்த திமுக ஆட்சியில் இதைக் கொண்டு வர முயற்சி எடுக்கப்பட்டது. அதற்கென நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு என்னையும் அழைத்திருந்தனர். ஒரே ஒரு கூட்டம் தான் நடந்தது. அதில் பங்கேற்ற அரசு உதவி பெறும் கல்லூரி நிர்வாகத்தினர் பல சிக்கல்களைச் சொல்லித் தடுக்கவே முனைந்தனர். அவர்களுக்குச் சிறிதும் விருப்பமில்லை. தம் கட்டுப்பாட்டிலிருந்து அரசின் கட்டுப்பாட்டுக்குச் சேர்க்கை நடைமுறைகள் செல்வதை எப்படி விரும்புவார்கள்? அவர்களை ஒதுக்கிவிட்டு முதல் கட்டமாக அரசு கலைக் கல்லூரிகளுக்கு மட்டும் ஒற்றைச் சாளர முறையைக் கொண்டு வரலாம் என்பது என் எண்ணமாக இருந்தது. உதவி பெறும் கல்லூரிகளையும் சுயநிதிக் கல்லூரிகளையும் அதில் இணைப்பதைப் படிப்படியாகச் செய்தால் நடைமுறைப்படுத்துவது எளிதாக இருக்கும். தடை செய்பவர்களையே குழுவில் இணைத்தால் அவர்கள் எதிராகத்தான் செயல்படுவார்கள். பல தரப்பிலும் அதற்கு ஆதரவு இல்லை என்பதால் மேல்நடவடிக்கை ஏதுமில்லாமல் போய்விட்டது.
இப்போது ஆட்சி மாறியிருக்கிறது. புதியவர் உயர்கல்வி அமைச்சர் ஆகியிருக்கிறார். கலைக்கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு ஒற்றைச் சாளர முறை கொண்டு வந்தால் இந்த ஆட்சியின் சாதனையாக இருக்கும். இந்த ஆண்டு இனிமேல் சாத்தியமில்லை. அடுத்த ஆண்டில் அரசு கல்லூரிகளுக்கு மட்டும் ஒற்றைச் சாளர முறை எனத் திட்டமிட்டு இப்போதிருந்தே நடவடிக்கைகளைத் தொடங்கினால் சாத்தியமாகும்.

வி: அரசு கலைக் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் சேர்க்கையை ரத்து செய்துவிட்டு வேறு கல்லூரிகளுக்குச் செல்வதும் கிட்டத்தட்ட முதல் பருவம் முடியும் வரை கூட நடைபெறுகின்றதே?
பெமு: பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவு வந்தவுடன் ஒருமாதத்தில் உயர்கல்விச் சேர்க்கை முழுவதையும் முடித்துவிடும் வகையில் நடைமுறைகளை வகுக்க வேண்டும். மே மாதம் தொடங்கி நவம்பர் வரைக்கும் செல்வதைத் தவிர்க்க வேண்டும். இந்திய மருத்துவத் துறை சேர்க்கை அறிவிப்பையே செம்படம்பர், அக்டோபர் மாதத்தில்தான் வெளியிடுகிறது. நவம்பரில் சேர்க்கை நடைபெறுகிறது. அதுவும் நவம்பருக்குள் முடிக்க வேண்டும் என்று விதி இருக்கிறது. அம்மாணவர்களுக்குக் கல்வியாண்டே டிசம்பரில்தான் தொடங்குகிறது. ஒருவர் தம் வாழ்வில் ஆறு மாதத்தைக் காத்திருப்பிலேயே இழக்கிறார். ஒவ்வொரு நொடியும் எவ்வளவு முக்கியம் என்று சுயமுன்னேற்றக் கோட்பாடுகளை எல்லாம் உருவாக்கி வைத்திருக்கும் முதலாளித்துவ காலகட்டத்தில் ஒருவர் அநியாயமாக ஆறு மாதத்தை இழக்கிறார். அதுவும் அக்காலத்தில் எத்தனை மன உளைச்சல்கள்!
ஏற்கனவே ஒருபடிப்பில் சேர்ந்த பிறகு இன்னொரு படிப்பில் இடம் கிடைத்து மாறிச் செல்வது என்றால் எளிதல்ல. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மாற்றுச் சான்றிதழ் பெற்று இன்னொரு கல்லூரிக்குச் சென்று சேர வேண்டும். உடனே மாற்றுச் சான்றிதழ் கிடைக்காது. காத்திருக்க வேண்டும். அலைய வேண்டும். செலுத்திய கட்டணத்தைத் திரும்பப் பெற முடியாது. பெற்றே ஆக வேண்டும் என்றால் அதற்கு ஏராளமான நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. பலமுறை அலைய வேண்டியிருக்கும். நிர்வாகத்திற்கும் இது பிரச்சினைதான். ஒருமாணவர் சேர்ந்தால் அவர் பற்றிய விவரங்களை ஏழோ எட்டோ பதிவேடுகளில் எழுதிப் பதிவு செய்ய வேண்டும். ஒருவர் மாற்றுச் சான்றிதழ் பெற்றால் அதைத் தயார் செய்து கொடுப்பது மட்டுமல்ல, பதிவேடுகளில் எல்லாம் பதிவு செய்ய வேண்டும். மாற்றுச் சான்றிதழ் பிழையில்லாமல் இருக்க வேண்டும். சிறுபிழை வந்துவிட்டாலும் திருப்பி அனுப்பிவிடுவார்கள். அவசர அவசரமாகத் தயார் செய்யும்போது எப்படியேனும் பிழை வந்துவிடும். மூன்று முறை நான்கு முறை சரிபார்க்க வேண்டும். அந்த மாணவரையும் சரிபார்க்கச் சொல்வதுண்டு. அவர் கண்ணுக்கும் படாமல் பிழை வந்துவிடும்.
நான் முதல்வராக இருந்தபோது கல்வியாண்டின் முதல் நான்கு மாதம் மாற்றுச் சான்றிதழ் கொடுப்பதே பெருவேலையாக இருப்பதைக் கண்டிருக்கிறேன். அன்றாடம் ஐந்திலிருந்து பத்து மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் தயாரித்துக் கொடுப்போம். இன்னொரு கல்லூரியில் சேர்க்கைக் கடிதம் கொண்டு வருவோருக்கு முன்னுரிமை கொடுப்பதுண்டு. மாலையில் அலுவலக நேரம் முடியும் நேரத்தில் வந்து உடனே வேண்டும் என்று கேட்போர் உண்டு. தினமும் பத்துப் பேருக்கு மாற்றுச் சான்றிதழ் கொடுப்பது என்றால் ஒருவர் அந்த வேலையை மட்டுமே செய்ய வேண்டும். அந்தளவு அலுவலகப் பணியாளர்கள் இருக்க மாட்டார்கள். வேறு யாரையாவது தான் பயன்படுத்த வேண்டும். கணினிப் பயிற்சித் திட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள், கணினித் துறையில் பயிலும் மாணவர்களை எல்லாம் பயன்படுத்தி வேலையை முடித்திருக்கிறோம். மேலே இருக்கும் அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இந்தச் சிரமம் எல்லாம் தெரியாது. தெரிந்தாலும் காணாதது போல இருந்துவிடுவார்கள். எப்படியாவது வேலை முடிந்தால் போதும்.
கலைக்கல்லூரிகளில் ஆகஸ்ட் மாதம் முடியச் சேர்க்கை நடைபெறுகிறது. செப்டம்பர் பதினைந்து வரைக்கும் செல்வதும் உண்டு. ஆகஸ்டு, செப்டம்பரில் சேரும் ஒருவர் அக்டோபர் இறுதியில் பருவத்தேர்வு எழுத வேண்டும். பள்ளிக் கல்வியில் காலாண்டு, அரையாண்டு, முழுஆண்டு எனத் தேர்வு முறைக்குப் பழகிக் கல்லூரிக்கு வரும் மாணவர் பருவத் தேர்வு முறையைப் புரிந்துகொள்ளவே தாமதமாகும். அதை விளங்கிக் கொண்டு தேர்வுக்குத் தயாராகும் முன்னரே தேர்வு வந்துவிடும். ஜூன் மாதத்தில் நடைபெறும் முதற்கட்டச் சேர்க்கையில் இடம் கிடைத்துச் சேரும் மாணவருக்கு ஜூலையில் வகுப்பு தொடங்கும். கடைசி கட்டத்தில் வந்து சேரும் மாணவருக்கு முப்பது நாள்கூட வகுப்பு நடைபெறாது. அதைப் பற்றிய கவலை யாருக்கும் இல்லை. அதனால் முதலாண்டு மாணவர்களில் பெரும்பான்மையோர் முதல் பருவத்தில் நிலுவை வைப்பது சாதாரணம். அரசு கல்லூரி மாணவர்கள் பலரும் ஆங்கிலத் தாளில் தோல்வியடைந்து விடுவர். அது அவர்களை மனரீதியாகச் சோர்வுறச் செய்துவிடும். ஆங்கிலத்தின் மீதே வெறுப்பு வருவதற்கு இந்த முதற்பருவத் தாமதமும் ஒருகாரணம்.
கலைக்கல்லூரிகளில் பயில வருவோரில் பெரும்பான்மையோர் சாதிய ரீதியாக, பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களாக இருப்பதால்தான் அவர்களுக்கு நேரும் பிரச்சினைகளை எல்லாம் ஒருபொருட்டாகக் கருதுவதில்லையோ என்று தோன்றுகிறது. மாணவர் சேர்க்கை முற்றாக முடியாமல் மருத்துவக் கல்லூரிகளில் வகுப்புகள் தொடங்குவதில்லை. கலைக்கல்லூரிகளில் மட்டும் எப்படித் தொடங்குகிறார்கள்? இது கீழான படிப்பு என்னும் எண்ணம் பொதுமனதில் இருக்கிறது. ஆகவே இதைப் பற்றிக் கவனம் செலுத்துவதில்லை. நானே இந்த மனச்சிக்கலை அனுபவித்திருக்கிறேன்.
வி: அப்படியா? நீங்கள் சேர்ந்த காலத்திலும் இந்தப் பிரச்சினை இருந்ததா? என்ன மாதிரி மனச்சிக்கல் ஏற்பட்டது?
பெமு: நான் இளங்கலை சேர்ந்த போதுதான் ஆண்டுக்கு இருபருவம் என்னும் நடைமுறை கல்லூரிகளுக்கு வந்தது. ஆசிரியர்களுக்கும் அது புதிது. 1983ஆம் ஆண்டு. பாரதியார் பல்கலைக்கழகம் தொடங்கிச் சேர்ந்த முதல் மாணவர்கள் நாங்கள். சேர்க்கை தாமதம், பாடத்திட்டம் தாமதம், வகுப்புகள் தாமதம், எல்லாம் தாமதம். ஆனால் தேர்வு மட்டும் குறித்த நாளில் தொடங்கிவிட்டது. எங்கள் வகுப்பில் முதற்பருவ ஆங்கிலத் தாளில் எல்லோருமே தோல்வி. மற்ற தாள்களில் குறைவான மதிப்பெண்கள். பள்ளியில் எப்போதும் முதல் மூன்றிடத்திற்குள் இருந்து வந்த என்னை இது வெகுவாகப் பாதித்தது. ஆங்கிலப் பாடத்தை நினைத்தாலே அஞ்சும் நிலை வந்தது. என் மனநிலை பாதித்து அதனால் உடல்நிலையும் பாதிப்புக்கு உள்ளாயிற்று. நோயாளியானேன். ஆங்கில மருத்துவமும் பயன் தரவில்லை. என்னை அழைத்துக்கொண்டு ஈரோட்டுத் தனியார் மருத்துவமனைகளுக்கு என் அம்மா அலைந்தார். மந்திரம் மாயம் எல்லாம் பார்த்தோம்.
எங்கள் பரம்பரையில் முதல் ஆளாகக் கல்லூரிக்குச் சென்றவன் நான். அதனால் ஏற்பட்ட திருஷ்டிதான் காரணம் என்பது அம்மாவின் தீர்மானம். அப்போது ஒருவிபத்தும் ஏற்பட்டுக் கையில் அடி. எப்படி மீண்டு வந்தேன் என்பதை நினைத்தால் அதிசயமாக இருக்கிறது. நோயாளியான என்னுடன் திருச்செங்கோட்டிலிருந்து ஈரோட்டுக்கு அம்மாவும் வந்து காத்திருக்க இரண்டாம் பருவத் தேர்வு எழுதினேன். கொடுந்துயர்க் காலம் அது. இரண்டாம் பருவத்திலும் ஆங்கிலத் தாளில் தோல்வி. இரண்டு நிலுவகைத் தாள்களுடன் தான் இரண்டாமாண்டுக்குச் சென்றேன். பிறகு ஆசிரியர்களின் வழிகாட்டல், நண்பர்கள் ஊட்டிய உத்வேகம் ஆகியவற்றாலும் தீவிர வாசிப்பாலும் மீண்டு வந்தேன் என்று நினைக்கிறேன். அப்போதெல்லாம் ஒரே நாளில் ஒருநூலை வாசித்துவிடுவேன். இருநூறு பக்கம் என்பது என் வாசிப்புச் சராசரி. மூன்றாம் பருவத்தில் தேர்ச்சி பெற்றேன். நான்காம் பருவத்தில் மீண்டும் நிலுவை. மனமுடைந்த என்னைத் தேற்ற எத்தனையோ கரங்கள் தேவைப்பட்டன. ஐந்தாம் பருவத்தில்தான் நிலுவையற்ற நிலை ஏற்பட்டது.
எனக்கு ஏற்பட்ட இந்த மனப்பாதிப்புக்கு அப்போதைய கல்வி நடைமுறைதான் காரணம் என்பது பிற்காலத்தில் எனக்கு ஏற்பட்ட முடிவு. பள்ளியில் எந்தத் தேர்விலும் தோல்வி என்பதையே அறியாத மாணவன் நான். எழுபது, எண்பது சதவிகித மதிப்பெண் பெறுவது சாதாரணம். ஓரிரு மதிப்பெண்ணில் முதலிடத்தைத் தவறவிடுவேன். பன்னிரண்டாம் வகுப்பு அரசுத் தேர்வில் கணிதம், உயிரியல் வகுப்பு எடுத்துப் பயின்றேன். இரண்டாம் இடம் பெற்றேன். முதலிடத்திற்கும் எனக்கும் மூன்று மதிப்பெண் வேறுபாடு. பொறியியல் படிப்பையும் அறிவியல் படிப்புகளையும் வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டுக் கலைக்கல்லூரிக்கு வந்து தமிழ் இலக்கியம் பயிலச் சேர்ந்தேன். என்னை மனநலம் பாதிக்கச் செய்தது இந்த மாணவர் சேர்க்கை, பருவப் பிரிவு, புதிய பல்கலைக்கழகத் தாமதம் ஆகிய நடைமுறைகள்தான். கல்விப் பின்புலம் ஏதுமில்லாத நான் மீண்டு வருவதற்குப் பெரிதும் சிரமப்பட்டேன்.
கல்லூரி ஆசிரியராகப் பணிக்கு வந்த பின் முதலாண்டு வகுப்பை விரும்பி வாங்கிக் கொள்வேன். என் அனுபவத்தால் அவர்களுக்கு எத்தகைய பிரச்சினைகள் நேரும் என்பதௌ உணர்ந்திருந்தேன். ஆகவே பருவப் பிரிவு நடைமுறைகளையும் பாடத்திட்ட அமைப்பையும் விளக்கி அவர்களைத் தயார்ப்படுத்தும் வேலையைச் செய்வேன். முதற்பருவத்தில் வரும் பிரச்சினைகளைச் சொல்லி எச்சரிக்கை செய்வேன். அப்படியும் சிக்கலுக்கு உள்ளாகுபவர்களைத் தனித்து அழைத்துப் பேசி வழிகாட்டல் தருவேன். ஆம், மாணவர் சேர்க்கை நடைமுறைகள் காரணமாக இப்படியெல்லாம் பிரச்சினைகள் இருக்கின்றன. ஆனால் இவற்றை நம் சமூக அமைப்பு முறை முக்கியம் என்று கவனம் கொடுத்துக் கருதிப் பார்ப்பதில்லை.
தொடரும்…

விஜயகுமார்
வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். தற்போது டோக்கியோ அறிவியல் நிறுவனத்தில் (Institute of Science, Tokyo) ஆய்வாளராக உள்ளார். நவீனத் தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் உள்ளவர். தமிழிலிருந்து மலையாளத்துக்கு கவிதைகள் மொழிபெயர்த்துள்ளார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.




















