கோபயாஷி இஸ்ஸா கவிதைகள்

ஆங்கிலத்திலிருந்து தமிழில் : விஜயகுமார்

1990 ஆம் ஆண்டு நகானோ மாகாணத்தில் நிறுவப்பட்ட இஸ்ஸாவின் வெண்கலச் சிலை

இயற்பெயர் கோபயாஷி யதாரோ, கவிதைக்கென இஸ்ஸா என்கிற புனைப்பெயரைச் சூடிக்கொண்டார். இஸ்ஸா என்பதன் பொருள், ஒரு குவளை தேநீர். இவர் தன்னை ‘ஷிஹானோ மாகாணத்தின் தலைமை யாசகன்’ என்றும், ‘ஹைக்கூ ஆலய குருவின் குவளைத் தேநீர்’ என்றும் அழைத்துக்கொண்டார். ஜப்பானிய ஹைக்கூ கவிஞர்களில் முதன்மை நால்வர்களான பாஷோ, போஸான், சிக்கி இவர்களுள் ஒருவராக அறியப்படுகிறார்.

இஸ்ஸா தன்னுடைய மூன்றாம் வயதில் தாயை இழந்தவர்; பதினான்காம் வயதில் பாட்டியை. பதினைந்தாம் வயதில் வீட்டைவிட்டு வெளியேறினார்; அடுத்த பத்தாண்டுகளுக்கு அவர் குறித்த தகவல்களெதுவும் அறியப்படவில்லை. இருபத்தைந்தின் இறுதியில் அவரின் ஆசிரியர் சிக்குவா நடத்திய ஹைக்கூ பள்ளியில் சேர்கிறார்; ஆசிரியரை இருபத்தியெட்டாம் வயதில் இழந்தார். அதன்பின் ஜப்பானின் வெவ்வேறு மாகாணங்களுக்குப் பயணித்தார்; ஹைக்கூ கவிதைகள் புனைந்தார். 39 ஆம் வயதில் வீடு திரும்பினார், அதே வருடம் தந்தையையும் இழந்தார். தந்தையின் இழப்பிற்குப் பின் சிற்றன்னையிடம் போராடி 51 ஆம் வயதில் வரவேண்டிய சொத்துக்களை மீட்டார்; பூர்விக வீட்டிற்குச் சென்றார். 52 ஆம் வயதில் கிகுவைத் திருமணம் செய்து கொண்டார். 54 இல் மகன் சென்டரோ பிறந்து சில நாட்களிலேயே இறந்தார். 56 இல் மகள் சடோ; ஒரு வருடத்தில் பெரியம்மையால் உயிரிழந்தார். 58 இல் இரண்டாம் மகன் இஷிதாரோ பிறந்தார்; அதற்கடுத்த வருடம் அவரது அன்னை முதுகில் கட்டித் தூக்கிச் செல்கையில் மூச்சுத்திணறலால் உயிரிழந்தார். 60 ஆம் வயதில் மூன்றாம் மகன் கொன்சபுரோ பிறந்தார். 61 ஆம் வயதில் மனைவி, மகன் இருவரையும் இழந்தார். 62 ஆம் வயதில் யுகியை மணப்பதும் மணமுறிவும் நடந்தது. பிறகு யவோவை 64 இல் மணந்தார். 65 ஆம் அகவையில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

இஸ்ஸாவின் கவிதைகள் அன்றாடம் புழங்கும் மொழியில் இருப்பவை; மெல்லுணர்வு மற்றும் நகைச்சுவைத்தன்மை கொண்டவை. ஜப்பானிய மொழியில் பாஷோவிற்கு நிகராக, போஸானைவிட அதிகமாக இஸ்ஸாவின் படைப்புகள் இன்றும் வாசிக்கப்படுகின்றன. ஜப்பானுக்கு வெளியிலும் பரவலாக வாசிக்கப்படும் இஸ்ஸாவின் மொத்தக் கவிதைகள் கிட்டத்தட்ட 20,000. தாவரங்கள் மற்றும் சிற்றுயிர்களைப் பற்றி அதிகம் எழுதியுள்ளார். நத்தை (54), தேரை (15), தவளை (200), மின்மினி (230), கொசு (150) ஈ (90), சில்வண்டு (90) என்று பலவற்றை உள்ளடக்கிய 1000 ஹைக்கூக்கள் உள்ளன. இங்கு கொடுக்கப்பட்டுள்ள கவிதைகள் ராபர்ட் ஹாஸ் (கவிதைகள் 1-5) மற்றும் டேவிட் ஜி. லானோவ் ஆகியோரின் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. அவர்களின் முன் அனுமதியின்றி வெளியிடப்படுகின்றன.

1
பூச்சிகளுடன்கூட
சிலரால் பாடமுடியும்
சிலரால் முடியாது.

2
காதருகில் வரும் கொசு
என்ன நினைக்கிறது
எனக்குக் கேட்காது என்றா?

3
ஒவ்வொருமுறை புத்தனை வணங்கும்போதும்
கொல்ல வேண்டியிருக்கிறது
சில கொசுக்களை.

4
பனி உருகுகையில்
ஊருக்குள் பாய்கிறது
சிறுவர் வெள்ளம்.

5
அந்தி நிலவில்
இடுப்புவரை
உடைகளைகிறது நத்தை.

6
என்னோடு வா
நாம் சேர்ந்து விளையாடுவோம்
அன்னையற்ற குருவியே.

7
பிறப்புக் குளியலுக்கும்
இறப்புக் குளியலுக்கும் நடுவே
இந்த முழுமூடத்தனம்.

8
ஏய் மெலிந்த தவளையே, உன்னைத்தான்
அடிவாங்காதே, விட்டு விடாதே
இஸ்ஸா உன் பக்கம்.

9
திரும்பிப் படுக்கிறேன்
கொஞ்சம் தள்ளிப்படு
வெட்டுக்கிளியே.

10
நிறுத்து, அடிக்காதே அந்த ஈயை
அது கையைத் துடைத்துக்கொண்டிருக்கிறது
காலையும்.

மேற்கண்ட கவிதையின் அருகில் இஸ்ஸாவின் தற்படம்

11
ஏய் குட்டிக் குருவியே
பாதையிலிருந்து வெளியேறு
வரப்போகிறது முதலாளியின் குதிரை.

12
முள்ளங்கி பிடுங்குபவர்
முள்ளங்கி நீட்டிச் சுட்டுகிறார்
நான் போகவேண்டிய பாதையை.

13
சத்தமிடும் தவளையே
காணத் தயாராகு
என் மூத்திர அருவியை.

14
மூத்த துறவி
மலம் கழிக்கிறார்
குடையின் அடியில்.

15
நத்தையே
ஃபுஜி மலையில் ஏறு
மெதுவாக மிகமெதுவாக.

16
காட்டுத்தீயில் நுனிப்புட்கள்
புகையாகிப் போவதைக்
காண்பதே விதி.

17
முறைத்துப்பார்க்கும் போட்டியில்
சிக்கிக்கொண்டோம்
நானும் ஒரு தவளையும்.

18
மங்கிய இரவில்
நீருள் அடிவைக்கையில்
பாதை மறக்கிறேன்.

19
வாத்தே, ஓ காட்டு வாத்தே
எப்போது தொடங்கியது
உன் பயணம்?

20
புத்தனின் உடல்
ஏற்றுக்கொள்கிறது
குளிர்கால மழையை.

21
கதவைச் சாத்திவிட்டு
தூங்கப் போகிறது
ஒரு நத்தை.

22
ஆலயப் பரிதியில்
பாம்பு அவிழ்க்கிறது
தன்னுடைய சட்டையை.

23
நம்பு, புத்தனை நம்பு
உனக்கு வயது ஒன்றாகிறது
நாய்க்குட்டியே.

24
தட்டானின் வாலுக்கும்
நாளுக்குநாள்
வயதாகிறது.

25
தேயிலைத் தோட்டத்தில்
ஒளிந்து விளையாடுகின்றன
சிட்டுக்குருவிகள்.

26
மூங்கில் தளிர்களும்
குட்டி குருவிகளும்
ஒன்றாக விளையாடுகின்றன.

27
காட்டு வாத்துகள் முணுமுணுக்கின்றன
என்னைப் பற்றிய
ஏதும் வதந்தியா?

28
கொசுக்கூட்டம்
இவையும் போனால்
தனிமை சூழும்.

29
வருந்தாதீர் சிலந்திகளே
வீட்டை நான்
இப்படியே வைத்திருப்பேன்.

30
முதலாளிபோல் ஒரு தவளை
உயரமான இருக்கையில்
சத்தமிடுகிறது.

31
நேற்றைய பனி
மறைக்கவில்லை
குட்டிநாயின் மலத்தை.

32
கண்கள் மூடிய கோழிக்குஞ்சுகள்
கொத்திப் பார்க்கின்றன
செர்ரிப் பூக்களை.

விஜயகுமார்

வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.  தற்போது டோக்கியோ அறிவியல் நிறுவனத்தில் (Institute of Science, Tokyo) ஆய்வாளராக உள்ளார். நவீனத் தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் உள்ளவர். தமிழிலிருந்து மலையாளத்துக்கு கவிதைகள் மொழிபெயர்த்துள்ளார்.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

உரையாடலுக்கு

Your email address will not be published.

கடந்தவை

திரட்டு

சேகரம்

Go toTop

Don't Miss