சம்யுக்தா மாயா கவிதைகள்

ஏகாந்தம்

அசைவற்ற துடுப்புகளுடன்
நதி நடுவில் நிற்கும் படகு போல
மேகங்களற்ற நீல வானில்
விரிந்த சிறகுகளுடன்
மிதக்கிறது கழுகு.
நான் அதை – மிக உயரமான
பல மாடிக்கட்டிடத்தின்
கடைசித் தளத்திலிருக்கும் – என்
அலுவலக அறையிலிருந்து பார்க்கிறேன்.
கீழே – தொலைவில் – தரையில்
மௌனமாக ஊர்ந்து செல்லும் வாகனங்களை
அதிருப்தியுடன் ஈர்ப்பற்று
பார்க்கும் கழுகு
சாளரத்தில் வந்து
அயர்ந்து அமர்கிறது.
மெல்ல தலை நிமிர்த்துகையில்
நகரின் தொடுவானில்
பெரிய மஞ்சள் கோழிக்குஞ்செனத் தென்படும்
பின்மதிய சூரியனை
பரவசத்துடன் உற்று நோக்குகிறது.
ஏ….கா….ந்….த….ம்….
இப்போது
கண்ணாடி சுவரின் வழியே நுழைந்து
என் சருமத்தை மென்மையாகத் தொடும்
இப்பொன்வெயில் கொண்டிருப்பது
உன் பார்வையின்
அப்பழுக்கில்லாத இளஞ்சூட்டைத்தான்.

000

உன் பெயர்

உன் பெயரை உச்சரிக்கையில் – அது
என் உதடுகளிலிருந்து
மென்மையாக வழுக்கிச் செல்கிறது.
கண்ணாடி பதுமையொன்றை
போர்த்தியிருக்கும் – பட்டுத்துணி
காற்றில் நழுவுவது போல.
தொடர்ச்சியான மந்திர உச்சாடனம்
ஆன்மாவிற்கு உச்சம் அளிக்கும் என்று
முன்னர் எவர் சொல்லியும்
நான் நம்பியிருக்கவில்லை.
ஒரேயொரு இசைக்குறிப்பை
மீண்டும் மீண்டும் வாசிக்கும்
நினைவு பிசகிய இசைஞன் போல
உன் பெயரை மட்டுமே – விடாது
சொல்லிச் சொல்லித் திரிகிறது
எனதிந்த நாவு.
விண்மீன்கள் முளைவிடும் முன்னிரவில்
அவ்வளவு தொலைவுக்கு அப்பாலிருக்கும் உன்னை
அழைத்து அழைத்து கிறங்குகிறேன்.
இன்பத்தின் வேர்கள் இரகசியமாய்
கிளைவிடும் நிலத்தடியில்
இனிமையான ஓடையொன்று
பிசுபிசுப்பாய் நகர்கிறது.

000

சம்யுக்தா மாயா

சம்யுக்தா மாயா தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை சேர்ந்தவர். தற்போது தனியார் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். 2016ல் உயிர்மை பதிப்பகத்தில் இவருடைய "டல்ஹொஸியின் ஆரஞ்சு இரவு" என்கிற கவிதை நூலும் 2023ல் "தீ நின்ற பாதம்" என்கிற இரண்டாவது கவிதை நூல் சால்ட் பதிப்பகத்திலும் வெளிவந்துள்ளது.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

உரையாடலுக்கு

Your email address will not be published.

கடந்தவை

திரட்டு

சேகரம்

Go toTop

Don't Miss