மௌன மனிதர்கள்- ஆல்பர்ட் காம்யூ

தமிழில்- ரவிச்சந்திரன் எம்

அது கடுமையான குளிர்காலமாக இருந்தாலும் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கியிருந்த அந்த நகரத்தின் மீது ஒளிரும் சூரியன் உதித்துக் கொண்டிருந்தது. துறைமுக முனையில், கடலும் வானும் ஒன்றிணைந்து ஒரு திகைப்பூட்டும் ஒற்றைப் பேரொளியாகக் காட்சி தந்தன. இவார்ஸ் அவற்றைப் பார்க்கவில்லை. அவன் துறைமுகத்திற்கு அப்பால் இருந்த அகன்ற வீதிகளில் மெதுவாகத் தன் மிதிவண்டியை ஓட்டிச் சென்றுகொண்டிருந்தான். மிதிவண்டியில் பொருத்தப்பட்ட ஒரு பெடலின் மீது அவனது ஊனமுற்ற கால் விறைப்பாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்க, இரவின் ஈரப்பதத்தால் இன்னும் வழுக்கலாக இருந்த பாதையை எதிர்கொள்ள அவனது மற்றொரு கால் கடுமையாக வேலை செய்து கொண்டிருந்தது. சேணத்தின் மீது அமர்ந்திருந்த ஒல்லியான இவார்ஸ், தன் தலையை உயர்த்தாமலேயே, முன்பு ஓடிய பழைய டிராம் வண்டியின் தண்டவாளங்களைத் தவிர்த்து, மகிழுந்துகள் தன்னைக் கடந்து செல்வதற்காகத் திடீரெனத் கைப்பிடியைத் திருப்பினான்; அவனுக்கு மதிய உணவு வைத்துக் கொடுத்திருந்த துணிப்பையை முழங்கையால் முட்டித் தன் இடத்திற்குத் தள்ளிக் கொண்டான். அத்தகைய தருணங்களில், அவன் அந்தப் பையின் உள்ளடக்கத்தைப் பற்றிக் கசப்புடன் நினைத்துப் பார்ப்பான். கரடுமுரடான இரு ரொட்டித் துண்டுகளுக்கு இடையே, அவனுக்குப் பிடித்தமான ஸ்பானிஷ் ஆம்லெட்டோ அல்லது எண்ணெயில் பொரித்த மாட்டிறைச்சியோ இருப்பதற்குப் பதிலாக, அங்கே வெறும் பாலாடைக்கட்டி மட்டும்தான் இருந்தது.

அந்தப் பட்டறைக்கான பயணம் அவனுக்கு இதற்கு முன்பு ஒருபோதும் இவ்வளவு நீளமாகத் தோன்றியதில்லை. நிச்சயமாக, அவனுக்கு வயதாகிக் கொண்டிருந்தது. நாற்பது வயதில், ஒரு மனிதன் கொடி முந்திரியின் தண்டுபோல ஒல்லியாகவே இருந்தாலும், அவனது தசைகள் அவ்வளவு சீக்கிரத்தில் சூடாகி விடுவதில்லை. சில சமயங்களில், முப்பது வயது தடகள வீரர் ஒருவரை முதுபெரும் வீரர் என்று குறிப்பிடும் விளையாட்டுப் பத்திகளைப் படிக்கும்போது, அவன் தன் தோள்களைக் குலுக்குவான். “அவன் ஒரு முதுபெரும் வீரர் என்றால்,” என்று அவன் பெர்னான்டேவிடம் கூறுவான், “அப்படியானால் நான் ஏறக்குறைய ஒரு சக்கர நாற்காலியில் இருக்க வேண்டியவன்.” ஆயினும், அந்த நிருபர் சொல்வது முற்றிலும் தவறல்ல என்பதையும் அவன் அறிந்திருந்தான். முப்பது வயதில், ஒரு மனிதன் தனக்கே தெரியாமல் தன் மூச்சின் வேகத்தை இழக்கத் தொடங்குகிறான். நாற்பது வயதில் அவன் இன்னும் சக்கர நாற்காலியில் இல்லைதான், ஆனால் அவன் நிச்சயமாக அந்தத் திசையை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறான்.

அதனால்தான் நகரத்தின் மறுமுனையில் இருக்கும் அந்தப் பீப்பாய் செய்யும் பட்டறைக்குச் செல்லும் வழியில், அவன் இப்போது கடலின் பக்கம் பார்ப்பதைத் தவிர்த்தானா? அவனுக்கு இருபது வயதாக இருந்தபோது, கடற்கரையில் கழிக்கப்போகும் ஒரு மகிழ்ச்சியான வார இறுதியை அது எப்போதும் தன் வசம் வைத்திருந்ததால், அதைப் பார்ப்பதில் அவன் ஒருபோதும் சோர்வடைந்ததே இல்லை. தன் கால் ஊனத்தையும் மீறி—அல்லது அதன் காரணமாகவே—அவனுக்கு எப்போதும் நீந்துவது பிடித்திருந்தது. பின்னர் ஆண்டுகள் கடந்தன. பெர்னான்டே வந்தாள், மகன் பிறந்தான். குடும்பச் செலவுகளைச் சமாளிப்பதற்காக, சனிக்கிழமைகளில் பட்டறையில் கூடுதல் நேர வேலையும், ஞாயிற்றுக்கிழமைகளில் மற்றவர்களுக்கான பல்வேறு சில்லறை வேலைகளும் வந்தன. படிப்படியாக, அவனை நிறைவு செய்திருந்த அந்தத் தீவிரமான நாட்களின் பழக்கத்தை அவன் இழந்துவிட்டான். ஆழமான, தெளிவான நீர், சுட்டெரிக்கும் சூரியன், பெண்கள், அந்த உடலியல் வாழ்க்கை—இந்தத் தேசத்தில் அதைத் தவிர வேறு எந்த வகையான மகிழ்ச்சியும் இருந்ததில்லை. அந்த மகிழ்ச்சி இளமையுடனேயே மறைந்துவிட்டது. இவார்ஸ் தொடர்ந்து கடலை நேசித்தான்- மாலையின் இறுதியில், வளைகுடாவின் நீர் சற்று இருளடையும் போது மட்டும்தான். வேலை முடிந்து வந்து, தன் வீட்டின் அருகிலுள்ள திண்ணையில் அமரும் அந்தத் தருணம் இதமாக இருந்தது. பெர்னான்டே அவ்வளவு அழகாகத் தேய்த்துக் கொடுத்த அவனது சுத்தமான சட்டைக்கும், பனி படர்ந்த அந்த அனிசெட் மதுக் கிண்ணத்திற்கும் அவன் நன்றியுடையவனாக இருந்தான். மாலைப் பொழுது சாயும். வானம் முற்றிலும் மென்மையாகவும் இதமாகவும் மாறும். இவார்ஸுடன் பேசிக் கொண்டிருக்கும் பக்கத்து வீட்டுக்காரர்கள் திடீரென்று தங்களின் குரலைத் தாழ்த்திக் கொள்வார்கள். அத்தகைய நேரங்களில் தான் மகிழ்ச்சியாக இருக்கிறோமா அல்லது அழ வேண்டும் போல் உணர்கிறோமா என்று அவனுக்குத் தெரியாது. குறைந்தபட்சம், அந்தத் தருணங்களில் அவன் பிரபஞ்சத்தோடு இணக்கமாக உணர்ந்தான். எதற்காக என்று சரியாகத் தெரியாமலேயே, அமைதியாகக் காத்திருப்பதைத் தவிர அவனுக்கு வேறு வேலை எதுவும் இருக்கவில்லை.

மறுபுறம், காலையில் அவன் வேலைக்குச் செல்லும்போது, கடலைப் பார்ப்பதை அவன் விரும்பவில்லை. அது எப்போதும் அவனை வரவேற்பதற்காக அங்கே இருந்தாலும், மாலை வரை அதைப் பார்க்க அவன் மறுத்தான். இன்று காலை அவன் தன் தலையைக் குனிந்து கொண்டு, வழக்கத்தை விடவும் அதிகக் கனத்தை உணர்ந்தபடி மிதிவண்டியைச் செலுத்திக் கொண்டிருந்தான். அவனது இதயமும் கனத்திருந்தது. முந்தைய இரவு, அவன் கூட்டத்திலிருந்து திரும்பி வந்து, அவர்கள் மீண்டும் வேலைக்குச் செல்லப் போவதாக அறிவித்தபோது, பெர்னான்டே மகிழ்ச்சியுடன் சொன்னாள்: “அப்படியானால் முதலாளி உங்கள் அனைவருக்கும் சம்பள உயர்வு கொடுக்கிறாரா?” முதலாளி எந்தச் சம்பள உயர்வும் கொடுக்கவில்லை. அந்த வேலைநிறுத்தம் தோல்வியடைந்திருந்தது. அவர்கள் விஷயங்களைச் சரியாகக் கையாளவில்லை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அது ஒரு அவசரப்பட்டு எடுக்கப்பட்ட வேலைநிறுத்தம், தொழிற்சங்கம் அதில் அரைகுறை மனதுடன் ஆதரவு கொடுத்தது சரிதான். எல்லாவற்றிற்கும் மேலாக, சில பதினைந்து தொழிலாளர்கள் ஒரு பொருட்டே அல்ல. தங்களுடன் ஒத்துழைக்காத பிற பீப்பாய் பட்டறைகளையும் தொழிற்சங்கம் கணக்கில் கொள்ள வேண்டியிருந்தது.

தொழிற்சங்கத்தைக் குறைகூற முடியாது. டேங்கர் கப்பல்கள் மற்றும் டேங்கர் லாரிகளின் வரவால் அச்சுறுத்தலுக்குள்ளான பீப்பாய் தொழில் செழிக்கவில்லை. சிறிய மற்றும் பெரிய பீப்பாய்கள் செய்யப்படுவது குறைந்து கொண்டே வந்தது. வேலை என்பது முக்கியமாக கைவசம் இருக்கும் மாபெரும் தொட்டிகளைப் பழுதுபார்ப்பதாகவே இருந்தது. முதலாளிகள் தங்களின் வணிகம் ஆபத்தில் இருப்பதை உணர்ந்தார்கள் என்பது உண்மைதான். ஆனால் அப்படியிருந்தும் அவர்கள் தங்களின் லாப வரம்பைத் தக்கவைத்துக் கொள்ள விரும்பினர். வாழ்க்கைச் செலவுகள் உயர்ந்த போதிலும், ஊதியத்தை முடக்குவதே அவர்களுக்கு இன்னும் எளிதான வழியாகத் தோன்றியது. பீப்பாய் தொழிலே அழியும்போது பீப்பாய் செய்பவர்கள் என்ன செய்ய முடியும்? ஒரு தொழிலைக் கற்றுக்கொள்வதற்காக அத்தனை சிரமப்பட்ட பிறகு, நீங்கள் உங்கள் தொழிலை மாற்றிக் கொள்ள முடியாது. இது கடினமானதும், நீண்ட காலப் பயிற்சியைக் கோருவதுமான ஒரு தொழில். தன் வளைந்த மரப்பலகைகளைப் பொருத்தி, அவற்றை நெருப்பில் இரும்பு வளையத்தைக் கொண்டு, ரஃபியா ஓலைகளையோ அல்லது சணலையோ கொண்டு அடைக்காமல், ஏறக்குறைய காற்றுக்கூட புக முடியாதபடி இறுக்கும் ஒரு நல்ல பீப்பாய் தொழிலாளி கிடைப்பது அரிது. இவார்ஸ் இதை அறிந்திருந்தான். இதைப் பற்றிப் பெருமிதமும் கொண்டிருந்தான். தொழிலை மாற்றுவது ஒன்றும் பெரிய விஷயமல்ல. உங்களுக்குத் தெரிந்ததை, உங்களின் கைவினைத்திறனை விட்டுக்கொடுப்பது எளிதல்ல. வேலை வாய்ப்பில்லாத ஒரு சிறந்த கைவினைத்தொழிலைக் கையில் வைத்திருந்தால் நீங்கள் மாட்டிக் கொண்டீர்கள். நீங்கள் உங்களை விதியிடம் ஒப்படைத்துவிட வேண்டியதுதான். ஆனால் விதியை ஏற்றுக்கொள்வதும் எளிதல்ல. வாயை மூடிக்கொண்டு, எதையும் உண்மையாக விவாதிக்க முடியாமல், ஒவ்வொரு காலையும் தேங்கிப் போகும் சோர்வுடன் அதே பாதையில் பயணிப்பது கடினமாக இருந்தது. அதுவும் ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும் அவர்கள் கொடுக்க விரும்பும் அந்த மிகக் குறைந்த, போதுமானதாக இல்லாத ஊதியத்தைப் பெறுவதற்காக மட்டுமே.

அதனால் அவர்கள் கோபமடைந்தனர். அவர்களில் இருவர் அல்லது மூவர் தயங்கினர். முதலாளியுடனான முதல் விவாதங்களுக்குப் பிறகு அந்தக் கோபம் அவர்களுக்கும் பரவியது. முதலாளி அவர்களிடம் வெட்டவெளிச்சமாகவே கூறிவிட்டார். ஒண்ணு வேலையை ஏத்துக்கோங்க, இல்லன்னா கிளம்புங்க. ஒரு மனிதன் அப்படிப் பேசக் கூடாது. “அவன் நம்மிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறான்?” என்று எஸ்போசிட்டோ கேட்டான். “நாம் குனிந்து நின்று, நம் குண்டியில் உதை வாங்குவதற்காகக் காத்திருக்க வேண்டுமா?” இருப்பினும், முதலாளி ஒன்றும் கெட்ட மனிதரல்ல. அவர் அதைத் தன் தந்தையிடமிருந்து வாரிசாகப் பெற்றிருந்தார். அந்தப் பட்டறையிலேயே வளர்ந்தவர். பல ஆண்டுகளாகப் பல தொழிலாளர்களை அறிந்தவர். எப்போதாவது அவர் அவர்களைப் பட்டறையிலேயே சிற்றுண்டி உண்ண அழைப்பார். அவர்கள் மரச்சீவல்களின் நெருப்பில் மத்தி மீன்களையோ அல்லது இறைச்சியையோ சமைப்பார்கள். ஓரளவு மதுவின் புண்ணியத்தால், அவர் உண்மையில் மிகவும் நல்லவராகவே இருந்தார். புத்தாண்டு அன்று அவர் எப்போதும் தொழிலாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஐந்து பாட்டில்கள் பழமையான மதுவை வழங்குவார். பெரும்பாலும், அவர்களில் யாராவது நோய்வாய்ப்பட்டாலோ அல்லது திருமணம் அல்லது முதல் நற்கருணை போன்ற நிகழ்வுகளைக் கொண்டாடினாலோ, அவர் பணமாகப் பரிசு வழங்குவார். அவரது மகள் பிறந்தபோது, அனைவருக்கும் சர்க்கரை பூசப்பட்ட பாதாம் பருப்புகள் வழங்கப்பட்டன. இரண்டு அல்லது மூன்று முறை அவர் இவார்ஸைத் தன் கடற்கரைத் தோட்டத்தில் வேட்டையாட அழைத்திருந்தார். அவர் தன் தொழிலாளர்களை நேசித்தார் என்பதில் சந்தேகமில்லை. தன் தந்தை ஒரு தொழிலாளியாகத்தான் தொடங்கினார் என்பதை அவர் அடிக்கடி நினைவுகூர்வார். ஆனால் அவர் ஒருபோதும் அவர்களின் வீடுகளுக்குச் சென்றதில்லை. அவருக்கு அது தெரிந்திருக்கவில்லை. அவர் தன்னைத் தவிர வேறு எதையும் அறியாததால், அவர் தன்னைப்பற்றி மட்டுமே சிந்தித்தார். இப்போது அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளலாம் அல்லது வெளியேறலாம். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவரும் அதேபோல் பிடிவாதக்காரராக மாறியிருந்தார். அவரது நிலையில் இருந்துகொண்டு, அவரால் அப்படி இருக்க முடிந்தது.

அவர் தொழிற்சங்கத்தின் கைகளைக் கட்டிப்போட்டு, பட்டறையின் கதவுகளை மூடிவிட்டார். “வேலைநிறுத்தக் காவல் இருக்கும் சிரமத்தை எடுத்துக் கொள்ள வேண்டாம்,” என்று முதலாளி கூறியிருந்தார். “பட்டறை இயங்காதபோது, எனக்குப் பணம்தான் மிச்சமாகிறது.” அது உண்மையல்ல. அவர் தங்களுக்குத் தர்மமாகத்தான் வேலை கொடுக்கிறார் என்று அவர்களின் முகத்திற்கு நேராகச் சொன்னதால், அது நிலைமையை இன்னும் மோசமாக்கியது. எஸ்போசிட்டோ ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்று, அவர் ஒரு மனிதனே அல்ல என்று அவரிடம் சொன்னான். முதலாளிக்குக் கோபம் தலைக்கேறியது. இருவரையும் பிரிக்க வேண்டியிருந்தது. ஆனால், அதே நேரத்தில், அது தொழிலாளர்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. இருபது நாட்கள் வேலைநிறுத்தம். வீட்டில் மனைவிகள் சோகமாக இருந்தார்கள். அவர்களில் இருவர் அல்லது மூவர் ஊக்கமிழந்தனர். இறுதியில், இழந்த நாட்களைக் கூடுதல் நேர வேலையின் மூலம் மீட்டெடுக்கலாம் மற்றும் நடுவர் தீர்ப்பிற்கு வழிவிடலாம் என்ற வாக்குறுதியின் பேரில், தொழிற்சங்கம் அவர்களைப் பணியை ஏற்குமாறு அறிவுறுத்தியது. அவர்கள் மீண்டும் வேலைக்குச் செல்லத் தீர்மானித்தனர். உண்மையில் எல்லாம் முடிந்துவிடவில்லை. இதை மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்று வீம்பாகச் சொல்லிக் கொண்டார்கள். ஆனால் இன்று காலை, தோல்வியைப் போன்றதொரு சோர்வுடனும், இறைச்சிக்கு பதிலாகப் பாலாடைக்கட்டியுடனும், அந்த மாயை இனி சாத்தியமில்லாமல் போனது. சூரியன் எவ்வளவுதான் ஒளிர்ந்தாலும், கடல் இனி எந்தவொரு வாக்குறுதிகளையும் வழங்கப் போவதில்லை. இவார்ஸ் தன் ஒற்றைப் பெடலை அழுத்தினான். சக்கரத்தின் ஒவ்வொரு சுழற்சியிலும் அவனுக்கு வயது சற்று கூடிக்கொண்டே போவது போல் தோன்றியது. விரைவில் தான் மீண்டும் பார்க்கவிருக்கும் அந்தப் பட்டறையைப் பற்றியும், சக தொழிலாளர்களைப் பற்றியும், முதலாளியைப் பற்றியும் நினைக்கும்போது அவனது இதயம் இன்னும் சற்றுக் கனமாவதைத் தவிர்க்க முடியவில்லை. பெர்னான்டே கவலைப்பட்டிருந்தாள்: “நீங்கள் அவரிடம் என்ன சொல்வீர்கள்?” “ஒன்றுமில்லை.” இவார்ஸ் தன் மிதிவண்டியில் ஏறி, தன் தலையை ஆட்டியிருந்தான். அவன் தன் பற்களைக் கடித்திருந்தான். நுட்பமான அம்சங்களைக் கொண்ட அவனது சிறிய, இருண்ட, சுருக்கங்கள் நிறைந்த முகம் கடினமாக மாறியிருந்தது. “நாங்கள் மீண்டும் வேலைக்குச் செல்கிறோம். அது போதும்.” இப்போது அவன் தன் பற்களைக் கடித்தபடி, வானத்தையே இருளடையச் செய்யும் ஒரு சோகமான, வறண்ட கோபத்துடன் மிதிவண்டியைச் செலுத்திக் கொண்டிருந்தான்.

அவன் அகன்ற வீதியையும் கடலையும் விட்டு விலகி, பழைய ஸ்பானிஷ் பகுதியின் ஈரமான தெருக்களுக்குள் நுழைந்தான். அவை கொட்டகைகள், இரும்புக் கடைகள் மற்றும் வாகனப் பழுதுபார்க்கும் நிலையங்கள் மட்டுமே நிறைந்த ஒரு பகுதிக்கு இட்டுச் சென்றன. அங்கேதான் அந்தப் பட்டறை இருந்தது—பாதி தூரம் வரை கல்லால் கட்டப்பட்டு, பின்னர் தகரக் கூரை வரை கண்ணாடியால் மூடப்பட்ட ஒரு வகையான தாழ்வான கொட்டகை அது. இந்தப் பட்டறை பழைய பீப்பாய் செய்யும் இடத்திற்கு முன்னால் திறந்தது. அது ஒரு மூடப்பட்ட கொட்டகையால் சூழப்பட்ட ஒரு முற்றம். வணிகம் விரிவடைந்தபோது அது கைவிடப்பட்டு, இப்போது தேய்ந்துபோன இயந்திரங்கள் மற்றும் பழைய பீப்பாய்களின் கிடங்காக மட்டுமே பயன்பட்டது. முற்றத்திற்கு அப்பால், பழைய ஓடுகளால் மூடப்பட்ட ஒரு வகையான பாதையால் அதிலிருந்து பிரிக்கப்பட்டு, முதலாளியின் தோட்டம் தொடங்கியது. அதன் இறுதியில் அவரது வீடு நின்றது. பெரியதும் அவலட்சுமணமானதுமான அந்த வீடு, அதன் வெளிப்புறப் படிகளைச் சுற்றியிருந்த திராட்சைக் கொடிகளாலும் படர்ந்திருந்த தேன்பூக்களாலும் கவரக்கூடியதாக இருந்தது.

பட்டறையின் கதவுகள் மூடப்பட்டிருப்பதை இவார்ஸ் உடனே கண்டான். தொழிலாளர்களின் ஒரு குழு அவற்றின் முன்னால் மௌனமாக நின்றுகொண்டிருந்தது. அவன் இங்கே வேலை செய்யத் தொடங்கியதிலிருந்து, அவன் வந்தபோது கதவுகள் மூடப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. தான்தான் அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கிறேன் என்பதை முதலாளி வலியுறுத்த விரும்பியிருந்தார். இவார்ஸ் இடப்பக்கம் திரும்பி, அந்தப் பக்கமிருந்த கொட்டகையின் கீழ் தன் மிதிவண்டியை நிறுத்திவிட்டு, கதவை நோக்கி நடந்தான். தூரத்திலிருந்தே அவன் தனக்கு அருகில் வேலை செய்யும் உயரமான, கறுப்பான, அடர்ந்த முடிகளைக் கொண்ட எஸ்போசிட்டோவையும் டெனர் பாடகரின் முக அமைப்பைக் கொண்ட தொழிற்சங்கப் பிரதிநிதி மார்கோவையும் பட்டறையிலிருந்த ஒரே அரேபியனான சாயிதையும், பின்னர் அவன் வருவதை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்த மற்ற அனைவரையும் அடையாளம் கண்டுகொண்டான். ஆனால் அவன் அவர்களுடன் சேருவதற்கு முன்பே, அவர்கள் அனைவரும் திடீரென்று திறக்கத் தொடங்கிய பட்டறையின் கதவுகளின் திசையை நோக்கினர். ஃபோர்மேன் பாலேஸ்டர் அந்தத் திறப்பில் தோன்றினார். அவர் கனமான கதவுகளில் ஒன்றைத் திறந்து, தொழிலாளர்களுக்குத் தன் முதுகைக் காட்டியபடி, அதை இரும்புத் தண்டவாளத்தின் மீது மெதுவாகத் தள்ளினார்.

அனைவரிலும் வயதானவரான பாலேஸ்டர், வேலைநிறுத்தத்தை எதிர்த்தார். எஸ்போசிட்டோ அவரிடம், அவர் முதலாளியின் நலன்களுக்குச் சேவை செய்வதாகச் சொன்ன உடனே மௌனமாகிவிட்டார். இப்போது அவர் கதவின் அருகில், தன் கடற்படை-நீல நிற ஜெர்சியில், அகலமாகவும் குட்டையாகவும், வெறும் காலுடன் நின்றிருந்தார் (சாயிதைத் தவிர வெறும் காலுடன் வேலை செய்பவர் அவர்தான்). அவர் தன் பழைய, வெயிலில் காய்ந்த முகத்தில் நிறமற்றதாகத் தோன்றும் அந்த வெளிறிய கண்களாலும், தன் தடிமனான, தொங்கும் மீசைக்குக் கீழ் சோகமாக இருக்கும் வாயாலும் அவர்கள் ஒவ்வொருவராக உள்ளே செல்வதைப் பார்த்தார். அவர்கள் மௌனமாக இருந்தனர். தோல்வியடைந்தவர்களின் இந்தத் திரும்புதலால் அவமானமடைந்திருந்தனர். தங்களின் சொந்த மௌனத்தின் மீது கோபமடைந்திருந்தனர். ஆனால் அது நீடிக்க நீடிக்க, அதை உடைக்கும் திறனை அவர்கள் இழந்து கொண்டிருந்தனர். அவர்கள் பாலேஸ்டரைப் பார்க்காமல் உள்ளே சென்றனர். ஏனெனில் தங்களை அப்படி உள்ளே வர வைப்பதன் மூலம் அவர் ஒரு கட்டளையை நிறைவேற்றுகிறார் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். அவரது கசப்பான மற்றும் சோகமான பார்வை அவர் என்ன நினைக்கிறார் என்பதை அவர்களுக்கு உணர்த்தியது. இவார்ஸ் மட்டும் அவரைப் பார்த்தான். அவன் மீது அன்புகொண்ட பாலேஸ்டர், ஒரு வார்த்தையும் பேசாமல் தன் தலையை அசைத்தார்.

இப்போது அவர்கள் அனைவரும் நுழைவாயிலின் வலப்பக்கத்தில் உள்ள சிறிய ஆடை மாற்றும் அறையில் இருந்தனர். அது வண்ணம் பூசப்படாத மரப்பலகைகளால் பிரிக்கப்பட்ட, கதவுகளற்ற திறந்த தடுப்பறைகளைக் கொண்ட பகுதி; அந்த பலகைகளின் இருபுறமும் பூட்டப்பட்ட சிறிய அலமாரிகள் பொருத்தப்பட்டிருந்தன. அந்தப் பட்டறையின் சுவரோடு ஒட்டி அமைந்திருந்த கடைசித் தடுப்பறை மட்டும், மண் தரையைக் குடைந்து உருவாக்கப்பட்ட நீர் வடிகாலுக்கு மேலே, குளியலறையாக மாற்றப்பட்டிருந்தது. பட்டறையின் மையத்தில் பல்வேறு நிலைகளில் இருந்த வேலைகளைக் காண முடிந்தது. தளர்வான வளையங்கள் இடப்பட்டு, நெருப்பில் இறுக்கப்படுவதற்காகக் காத்திருக்கும் பணிமுடிந்த பெரிய பீப்பாய்கள், நீண்ட துளையைக் கொண்ட தடிமனான பெஞ்சுகள் (அவற்றில் சிலவற்றில் சீவப்படுவதற்காகக் காத்திருக்கும் வட்ட வடிவ மர அடிப்பாகங்கள் செருகப்பட்டிருந்தன), இறுதியாக அணைந்த அடுப்புகள். நுழைவாயிலின் இடப்பக்கச் சுவரில், வேலை செய்யும் பெஞ்சுகள் ஒரு வரிசையாக நீண்டிருந்தன. அவற்றின் முன்னால் சீவப்படுவதற்காகக் காத்திருக்கும் மரப்பலகைகள் குவியலாக இருந்தன. வலப்பக்கச் சுவரையொட்டி, ஆடை மாற்றும் அறைக்கு அருகில், நன்றாக எண்ணெய் பூசப்பட்ட, வலுவான, மௌனமான, இரண்டு பெரிய மின்சார ரம்பங்கள் பிரகாசித்தன.

சில காலத்திற்கு முன்பு, அந்தப் பட்டறை அங்கே வேலை செய்யும் ஒரு சில மனிதர்களுக்கு மிகவும் பெரியதாக மாறிவிட்டிருந்தது. இது கோடைகாலத்தில் ஒரு நன்மையாகவும், குளிர்காலத்தில் ஒரு தீமையாகவும் இருந்தது. ஆனால் இன்று, இந்த பரந்த இடத்தில், பாதி முடிக்கப்பட்ட வேலைகள், ஒவ்வொரு மூலையிலும் கைவிடப்பட்ட பீப்பாய்கள்—அவற்றின் அடிப்பகுதியை மட்டும் தாங்கி நிற்கும் ஒற்றை வளையத்துடன், மேல் பகுதி கரடுமுரடான மர மலர்களைப் போல விரிந்திருந்தது—பெஞ்சுகளையும், கருவிப் பெட்டிகளையும், இயந்திரங்களையும் மூடியிருந்த மரத்தூள்—எல்லாமே அந்தப் பட்டறைக்கு ஒரு கைவிடப்பட்ட தோற்றத்தைக் கொடுத்தன. தங்களின் பழைய ஜம்பர்களும் மங்கிப்போன, ஒட்டுப்போட்ட கால்சட்டைகளும் அணிந்திருந்த அவர்கள், அதைப் பார்த்துவிட்டுத் தயங்கினர். பாலேஸ்டர் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். “சரி,” அவர் சொன்னார், “வேலையைத் தொடங்கலாமா?” ஒரு வார்த்தையும் பேசாமல், அவர்கள் ஒவ்வொருவராகத் தங்களின் இடங்களுக்குச் சென்றனர். பாலேஸ்டர் ஒருவரிடமிருந்து மற்றொருவரிடம் சென்று, தொடங்க வேண்டிய அல்லது முடிக்க வேண்டிய வேலைகளைச் சுருக்கமாக நினைவூட்டினார். யாரும் பதிலளிக்கவில்லை. விரைவில், ஒரு பீப்பாயின் வளைந்த பகுதியின் மீது வளையத்தை இறுக்கும் இரும்பு முனைக் குத்தியின் மீது விழுந்த முதல் சுத்தியலின் சத்தம் எதிரொலித்தது. ஒரு மர முடிச்சின் மீது பட்டபோது ஒரு உளி முணுமுணுத்தது. எஸ்போசிட்டோவால் தொடங்கப்பட்ட இயந்திரங்களில் ஒன்று, அதன் கத்தியின் மாபெரும் சுழற்சிச் சத்தத்துடன் இயங்கத் தொடங்கியது.

சாயித் கேட்கும்போது மரப்பலகைகளைக் கொண்டு வருவான் அல்லது மரச்சீவல்களின் நெருப்பை மூட்டுவான். அந்த நெருப்பின் மீதுதான் பீப்பாய்கள் தங்களின் இரும்பு வளையங்களின் கவசத்திற்குள் உப்ப வைப்பதற்காக வைக்கப்பட்டன. யாரும் அவனைக் கூப்பிடாதபோது, அவன் ஒரு பெஞ்சின் அருகில் நின்று கனமான சுத்தியல் அடிகளால் துருப்பிடித்த பெரிய வளையங்களை ஆணி அடித்துக் கொண்டிருந்தான். எரியும் மரச்சீவல்களின் வாசனை பட்டறையை நிரப்பத் தொடங்கியது. எஸ்போசிட்டோவால் வெட்டப்பட்ட மரப்பலகைகளைச் சீவிப் பொருத்திக் கொண்டிருந்த இவார்ஸ், அந்தப் பழைய வாசனையை அடையாளம் கண்டுகொண்டான். அவனது இதயத்தின் பாரம் சற்று குறைந்தது. அனைவரும் மௌனமாக வேலை செய்து கொண்டிருந்தனர். ஒரு வெப்பம், ஒரு வாழ்க்கை படிப்படியாகப் பட்டறையில் மீண்டும் விழித்தெழத் தொடங்கியது. அகன்ற ஜன்னல்களின் வழியே ஒரு தூய்மையான புதிய ஒளி கொட்டகையை நிரப்பத் தொடங்கியது. பொன்னிறச் சூரிய ஒளியில் புகை நீல நிறமாக உயர்ந்தது. இவார்ஸ் தனக்கு அருகில் ஒரு பூச்சியின் ரீங்காரத்தைக் கூடக் கேட்டான்.

அந்தத் தருணத்தில், பழைய பட்டறைக்குள் செல்லும் கதவு திறந்தது. முதலாளி திரு. லாசாலே வாசற்படியில் வந்து நின்றார். ஒல்லியாகவும் கறுப்பாகவும் இருந்த அவருக்கு முப்பது வயதுக்கு மேல் இருக்காது. அவரது பழுப்பு நிறக் காபர்டின் உடையின் மேல் திறந்திருந்த அவரது வெள்ளை மேலங்கி, அவரது உடலுக்கு ஒரு நிதானத்தைக் கொடுத்தது. கோடாரியால் செதுக்கப்பட்டது போன்ற எலும்புகள் நிறைந்த முகம் இருந்தபோதிலும், உயிர் ஆற்றலை வெளிப்படுத்தும் பெரும்பாலான மனிதர்களைப் போலவே அவர் பொதுவாக அனைவராலும் விரும்பப்படுபவராக இருந்தார். ஆயினும் அவர் கதவு வழியே உள்ளே வரும்போது சற்றே சங்கடமாகத் தெரிந்தார். அவரது வாழ்த்து வழக்கத்தை விடக் குறைந்த சத்தத்துடனேயே இருந்தது. எப்படியிருந்தாலும், யாரும் அதற்குப் பதிலளிக்கவில்லை. சுத்தியல்களின் சத்தம் சற்று தயங்கி, தாளத்தை இழந்து, பின்னர் இன்னும் சத்தமாகத் தொடர்ந்தது. திரு. லாசாலே சில தயக்கமான அடிகளை எடுத்து வைத்தார். பின்னர் அவர்களுடன் ஒரு வருடத்திற்கு முன் பணியில் சேர்ந்த வாலரியை நோக்கி நடந்தார். மின்சாரக் கரத்திற்கு அருகில், இவார்ஸுக்கு சில அடிகள் தொலைவில், அவன் ஒரு பெரிய பீப்பாயின் அடிப்பாகத்தைப் பொருத்திக் கொண்டிருந்தான். முதலாளி அதைப் பார்த்துக் கொண்டிருந்தார். வாலரி எதுவும் பேசாமல் தொடர்ந்து வேலை செய்தான். “என்ன தம்பி,” திரு. லாசாலே கேட்டார், “எப்படி இருக்கு எல்லாம்?” அந்த இளைஞனின் அசைவுகள் திடீரென்று இன்னும் தடுமாற்றமாக மாறின. அவன் தனக்கு அருகில் இருந்த எஸ்போசிட்டோவைப் பார்த்தான். அவன் இவார்ஸிடம் கொண்டு செல்வதற்காகத் தன் மாபெரும் கைகளில் மரப்பலகைகளின் குவியலை அள்ளிக் கொண்டிருந்தான். எஸ்போசிட்டோவும் தன் வேலையைத் தொடர்ந்தபடியே அவனைக் கவனித்தான். வாலரி முதலாளிக்குப் பதிலளிக்காமல் மீண்டும் தன் பீப்பாய்க்குள் உற்றுப் பார்த்தான். லாசாலே, சற்று ஏமாற்றமடைந்தவராக, அந்த இளைஞனின் முன்னால் ஒரு கணம் நின்றார். பின்னர் தன் தோள்களைக் குலுக்கிக் கொண்டு மார்கோவை நோக்கித் திரும்பினார். மார்கோ தன் பெஞ்சின் மீது அமர்ந்து, மெதுவான, கவனமான அடிகளால் ஒரு அடிப்பாகத்தின் விளிம்பைக் கூர்மையாக்கும் இறுதி வேலைகளைச் செய்து கொண்டிருந்தான். “வணக்கம், மார்கோ,” லாசாலே இன்னும் தாழ்ந்த குரலில் சொன்னார். மார்கோ தன் மரத்திலிருந்து மிக மெல்லிய சீவல்களை எடுப்பதில் முழுமையாக ஈடுபட்டிருந்ததால் பதிலளிக்கவில்லை. “உங்களுக்கு என்னதான் ஆயிற்று?” லாசாலே மற்ற தொழிலாளர்களை நோக்கித் திரும்பியபடி உரத்த குரலில் கேட்டார். “நாம் உடன்படவில்லை என்பது உண்மைதான். ஆனால் அதற்காக நாம் ஒன்றாக வேலை செய்யக் கூடாது என்று அர்த்தமில்லை. பிறகு இதில் என்ன பயன்?”

மார்கோ எழுந்து, தன் அடிப்பாகத் துண்டை உயர்த்தி, அதன் வட்ட வடிவக் கூர்மையான விளிம்பைத் தன் உள்ளங்கையால் சரிபார்த்து, திருப்தியான பார்வையுடன் தன் சோம்பேறிக் கண்களைச் சுருக்கி, இன்னும் மௌனமாகவே, மற்றொரு பீப்பாயைப் பொருத்திக் கொண்டிருந்த மற்றொரு தொழிலாளியை நோக்கி நடந்தான். ஒட்டுமொத்தப் பட்டறையிலும் சுத்தியல்களின் சத்தமும் மின்சாரக் கரத்தின் சத்தமும் தவிர வேறு எதுவும் கேட்கவில்லை. “சரி,” லாசாலே சொன்னார். “உங்களுக்கு இந்த மனநிலை மாறும்போது, பாலேஸ்டர் மூலமாக எனக்குத் தெரியப்படுத்துங்கள்.” அவர் அமைதியாகப் பட்டறையை விட்டு வெளியேறினார்.

அதற்கு அடுத்த கணமே, பட்டறையின் இரைச்சலையும் மீறி, ஒரு மணி இரண்டு முறை ஒலித்தது. சிகரெட் சுருட்டுவதற்காக இப்போதுதான் அமர்ந்திருந்த பாலேஸ்டர், மெதுவாக எழுந்து அந்த இறுதியிலுள்ள கதவை நோக்கிச் சென்றார். அவர் சென்ற பிறகு, சுத்தியல்கள் குறைந்த சத்தத்துடன் எதிரொலித்தன. பாலேஸ்டர் திரும்பி வந்தபோது தொழிலாளர்களில் ஒருவர் வேலையை நிறுத்தியே விட்டார். கதவின் அருகிலிருந்தே அவர் சுருக்கமாகச் சொன்னார்: ” மார்கோ மற்றும் இவார்ஸ், முதலாளி உங்களை அழைக்கிறார்.” இவார்ஸின் முதல் எண்ணம் தன் கைகளைக் கழுவ வேண்டும் என்பதாக இருந்தது. ஆனால் மார்கோ கடந்து செல்லும்போது அவனது கையைப் பற்றிக் கொண்டான். இவார்ஸ் அவனுக்குப் பின்னால் நொண்டி நடந்தான்.

வெளியே முற்றத்தில், ஒளி அவ்வளவு தூய்மையாகவும், நீர்மமாகவும் இருந்ததால், இவார்ஸ் அதைத் தன் முகத்திலும் வெறும் கைகளிலும் உணர்ந்தான். அவர்கள் வெளிப்புறப் படிகளின் வழியே, இப்போதே பூக்க ஆரம்பித்திருந்த ஹனிசக்கில்(honeysuckle) கொடிகளை தாண்டிச் சென்றனர். நடைபாதை சுவரை சான்றிதழ்கள் மறைந்திருந்தன. அதை கடந்துசெல்லும்போது ஒரு குழந்தையின் அழுகைச் சத்தமும், திரு. லாசாலேவின் குரலும் கேட்டது: “மதிய உணவிற்குப் பிறகு அவளைப் படுக்க வை. இது சரியாகாவிட்டால் நாம் மருத்துவரை அழைப்போம்.” பின்னர் முதலாளி திடீரென்று நடைபாதையில் தோன்றி, அவர்களுக்கு பரிச்சயமான அந்தச் சிறிய அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்றார். அது செயற்கை கிராமத்து மரச்சாமான்களாலும், அதன் சுவர்கள் விளையாட்டுத் கோப்பைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. “அமருங்கள்,” லாசாலே தன் மேஜைக்குப் பின்னால் தன் இடத்தை எடுத்துக் கொண்டபடி சொன்னார். அவர்கள் நின்றுகொண்டே இருந்தனர். “நான் உங்களை அழைத்ததற்குக் காரணம், மார்கோ, நீங்கள்தான் பிரதிநிதி. இவார்ஸ், நீங்கள்தான் பாலேஸ்டருக்குப் பிறகு என் மிக மூத்த தொழிலாளி. இப்போது முடிந்துபோன விவாதங்களுக்குள் நான் மீண்டும் செல்ல விரும்பவில்லை. நீங்கள் கேட்பதை என்னால் கொடுக்க முடியாது, முற்றிலும் முடியாது. விஷயம் தீர்க்கப்பட்டுவிட்டது, வேலை மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்ற முடிவை நாம் எட்டியிருக்கிறோம். நீங்கள் என் மீது கோபமாக இருக்கிறீர்கள் என்பதை என்னால் உணரமுடிகிறது, அது எனக்கு வருத்தமளிக்கிறது; அதை நான் உணரும் விதமாகவே உங்களிடம் சொல்கிறேன். நான் இதைமட்டும் சேர்க்க விரும்புகிறேன்: இன்று என்னால் முடியாத ஒன்றை, வணிகம் சீரடையும் போது என்னால் செய்ய முடியும். என்னால் செய்ய முடிந்தால், நீங்கள் என்னிடம் கேட்பதற்கு முன்பே நான் அதைச் செய்வேன். அதுவரை, நாம் ஒன்றாக வேலை செய்ய முயற்சிப்போம்.” அவர் பேசுவதை நிறுத்தினார், ஏதோ சிந்திப்பது போல் இருந்தது, பின்னர் அவர்களை நிமிர்ந்து பார்த்தார். “என்ன சொல்கிறீர்கள்?” அவர் கேட்டார். மார்கோ ஜன்னல் வழியே வெளியே பார்த்துக் கொண்டிருந்தான். இவார்ஸ், தன் பற்களைக் கடித்தபடி, பேச விரும்பினான் ஆனால் அவனால் முடியவில்லை. “கேளுங்கள்,” லாசாலே சொன்னார், “நீங்கள் அனைவரும் உங்கள் மனதை மூடிக்கொண்டீர்கள். அது உங்களுக்கு மாறிவிடும். ஆனால் நீங்கள் மீண்டும் விவேகமுள்ளவர்களாக மாறும்போது, நான் இப்போது உங்களிடம் சொன்னதை மறந்துவிடாதீர்கள்.” அவர் எழுந்து, மார்கோவை நோக்கிச் சென்று, தன் கையை நீட்டினார். ” விடைபெறுகிறேன்!” அவர் சொன்னார். மார்கோ திடீரென்று வெளிறிப்போனான். அவனது பிரபலமான டெனர் பாடகரின் முகம் கடினமாகி, ஒரே ஒரு கணம் மட்டும், கொடூரமான தோற்றத்தைக் கொண்டது. பின்னர் அவன் திடீரென்று தன் கணுக்காலைத் திருப்பி வெளியே சென்றான். லாசாலேவும் அதேபோல் வெளிறிப்போய், தன் கையை நீட்டாமல் இவார்ஸைப் பார்த்தார். “தொலைந்து போங்கள்!” என்று அவர் கத்தினார்.

அவர்கள் மீண்டும் பட்டறைக்குள் சென்றபோது, ஆட்கள் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். பாலேஸ்டர் வெளியே சென்றிருந்தார். மார்கோ சுருக்கமாக, “வெறும் காற்று,” என்று மட்டும் சொல்லிவிட்டுத் தன் பெஞ்சிற்குத் திரும்பினான். எஸ்போசிட்டோ தன் ரொட்டியைக் கடிப்பதை நிறுத்திவிட்டு, அவர்கள் என்ன பதிலளித்தார்கள் என்று கேட்டான். இவார்ஸ் அவர்கள் எதுவும் பதிலளிக்கவில்லை என்றான். பின்னர் அவன் தன் துணிப்பையை எடுக்கச் சென்று, திரும்பி வந்து தன் வேலை பெஞ்சின் மீது அமர்ந்தான். அவன் சாப்பிடத் தொடங்கியபோது, தனக்கு அருகில், சற்றே குறைவான ஒளியைக் கொண்டிருந்த ஒரு வானத்தால் நீல நிறமாக மாறியிருந்த ஜன்னல்களை நோக்கித் தன் கண்கள் வெறுமனே பார்க்க, மரச்சீவல்களின் குவியலின் மீது தன் முதுகில் படுத்திருந்த சாயிதைக் கவனித்தான். சாப்பிட்டு முடித்துவிட்டாயா என்று அவனிடம் கேட்டான். சாயித் தான் தன் அத்திப்பழங்களைச் சாப்பிட்டுவிட்டதாகச் சொன்னான். இவார்ஸ் சாப்பிடுவதை நிறுத்தினான். லாசாலேவுடனான நேர்காணலுக்குப் பிறகு அவனை விட்டு நீங்காதிருந்த அந்த சங்கடமான உணர்வு, திடீரென்று மறைந்து ஒரு இதமான வெப்பத்திற்கு வழிவிட்டது. அவன் எழுந்திருக்கும்போது தன் ரொட்டியை இரண்டாக உடைத்தான். சாயிதின் மறுப்பை எதிர்கொண்டு, அடுத்த வாரம் எல்லாம் சிறப்பாக இருக்கும் என்று சொன்னான். “அப்போது உபசரிப்பது உன்னுடைய முறை,” அவன் சொன்னான். சாயித் புன்னகைத்தான். இப்போது அவன் இவார்ஸின் சாண்ட்விச்சின் துண்டைக் கடித்தான். ஆனால் பசியில்லாத ஒரு மனிதனைப் போல மிகவும் லேசாகவே கடித்தான்.

எஸ்போசிட்டோ ஒரு பழைய பாத்திரத்தை எடுத்து, மரச்சீவல்களாலும் துண்டுகளாலும் ஒரு சிறிய நெருப்பை மூட்டினான். அவன் ஒரு பாட்டிலில் கொண்டு வந்திருந்த காபியைச் சூடாக்கினான். வேலைநிறுத்தத்தின் தோல்வியைப் பற்றி அறிந்தபோது தன் மளிகைக் கடைக்காரர் பட்டறைக்குக் கொடுத்த பரிசு அது என்று அவன் சொன்னான். ஒரு கடுகு ஜாடி கைக்குக் கை மாறியது. ஒவ்வொரு முறையும் எஸ்போசிட்டோ சர்க்கரை முன்பே சர்க்கரை போட்ட காபியை ஊற்றினான். சாப்பிடுவதில் காட்டியதை விட அதிக மகிழ்ச்சியுடன் சாயித் காபியை விழுங்கினான். எஸ்போசிட்டோ மிச்சமிருந்த காபியை அந்த எரியும் பாத்திரத்திலிருந்தே நேரடியாகக் குடித்தான், தன் உதடுகளைத் தட்டித் திட்டியபடி. அந்தத் தருணத்தில் பாலேஸ்டர் மீண்டும் வேலை தொடர்வதற்கான சைகையைக் கொடுக்க உள்ளே வந்தார்.

அவர்கள் எழுந்து, காகிதங்களையும் பாத்திரங்களையும் தங்களின் துணிப்பைகளுக்குள் சேகரித்துக் கொண்டிருந்தபோது, பாலேஸ்டர் அவர்களின் நடுவில் வந்து நின்று, திடீரென்று இது அனைவருக்கும், அவருக்கும் கூடக் கடினமானதுதான் என்று சொன்னார். ஆனால் அதற்காகக் குழந்தைகளைப் போல நடந்துகொள்ளக் கூடாது என்றும், கோபித்துக் கொள்வதில் எந்தப் பயனும் இல்லை என்றும் கூறினார். பாத்திரத்தைக் கையில் வைத்திருந்த எஸ்போசிட்டோ அவரை நோக்கித் திரும்பினான். அவனது நீண்ட, கரடுமுரடான முகம் திடீரென்று சிவந்திருந்தது. அவன் என்ன சொல்லப் போகிறான்—மற்றும் அதே நேரத்தில் அனைவரும் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்—என்பது இவார்ஸுக்குத் தெரிந்திருந்தது: அவர்கள் ஒன்றும் கோபித்துக் கொள்ளவில்லை. அவர்களின் வாய்கள் மூடப்பட்டிருந்தன. அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது வெளியேற வேண்டும். கோபமும் தவிப்பும் சில சமயங்களில் உங்களை அலறக்கூட விடாதபடி அவ்வளவு அதிகமாக வலிக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக அவர்கள் மனிதர்கள். அவர்கள் புன்னகைக்கவும் கொஞ்சவும் தொடங்கப் போவதில்லை. ஆனால் எஸ்போசிட்டோ இதில் எதையும் சொல்லவில்லை. அவனது முகம் இறுதியாக நிதானமடைந்தது. மற்றவர்கள் தங்களின் வேலைக்குத் திரும்பியபோது அவன் பாலேஸ்டரின் தோளை லேசாகத் தட்டினான். மீண்டும் சுத்தியல்கள் ஒலித்தன. அந்த மாபெரும் கொட்டகை பழகிய இரைச்சலாலும், வியர்வையால் ஈரமான பழைய ஆடைகளின் வாசனையாலும் நிறைந்தது. பெரிய இயந்திரக் கை முணுமுணுத்து, எஸ்போசிட்டோ தனக்கு முன்னால் மெதுவாகத் தள்ளிக் கொண்டிருந்த மரப்பலகையின் புதிய மரத்தை அரியத் தொடங்கியது. இயந்திரக் கை அறுத்த இடத்தில், ஒரு ஈரமான மரத்தூள் தெறித்து, முணுமுணுக்கும் கத்தியின் இருபுறமும் மரத்தை உறுதியாகப் பற்றியிருந்த அந்த மாபெரும் அடர்ந்த முடிகளைக் கொண்ட கைகளை ரொட்டித் தூள்களைப் போன்ற ஒன்றால் மூடியது. மரப்பலகை கிழிக்கப்பட்டதும், மோட்டாரின் சத்தம் மட்டுமே கேட்டது.

தற்போது இவார்ஸ் உளியின் மீது குனியும்போது தன் முதுகில் உள்ள அழுத்தத்தை மட்டுமே உணர்ந்தான். பொதுவாகச் சோர்வு இவ்வளவு சீக்கிரத்தில் வருவதில்லை. இந்தச் செயலற்ற வாரங்களில் அவன் பயிற்சியை இழந்திருந்தான் என்பது தெளிவாகத் தெரிந்தது. ஆனால் அவன் வயதையும் பற்றிக் சிந்தித்தான். அது வெறும் துல்லியமான வேலை இல்லாதபோது கைமுறை உழைப்பைக் கடினமாக்குகிறது. அந்த அழுத்தமும் முதுமையின் முன்னறிவிப்பாகவே இருந்தது. தசைகள் சம்பந்தப்பட்ட எல்லா இடங்களிலும், வேலை இறுதியில் வெறுக்கத்தக்கதாக மாறுகிறது. அது மரணத்திற்கு முன்னதாகவே வருகிறது. மாபெரும் உடலுழைப்பைத் தொடரும் மாலைகளில் உறக்கமே மரணத்தைப் போல இருக்கிறது. அவனது மகன் ஒரு பள்ளி ஆசிரியராக விரும்பினான். அவன் செய்தது சரிதான். கைமுறை உழைப்பைப் பற்றிப் பழகிய வெற்று வார்த்தைகளைப் பேசுபவர்களுக்கு அவர்கள் எதைப் பற்றிப் பேசுகிறார்கள் என்றே தெரியாது.

இவார்ஸ் மூச்சு வாங்குவதற்காகவும், அதே நேரத்தில் இந்தத் தீய எண்ணங்களை விரட்டுவதற்காகவும் நிமிர்ந்தபோது, அந்த மணி மீண்டும் ஒலித்தது. அது விடாப்பிடியாக ஒலித்தது. ஆனால் நிறுத்தங்களுடனும் கட்டாயத் தொடக்கங்களுடனும் கூடிய ஒரு விசித்திரமான வழியில் ஒலித்ததால், மனிதர்கள் தங்களின் வேலையை நிறுத்தினர். பாலேஸ்டர் ஆச்சரியத்துடன் அதைக் கேட்டுவிட்டு, பின்னர் ஒரு முடிவுக்கு வந்து மெதுவாகக் கதவை நோக்கிச் சென்றார். அந்த ஒலி இறுதியாக நின்றபோது அவர் சில நொடிகள் மறைந்திருந்தார். அவர்கள் வேலையைத் தொடர்ந்தனர். மீண்டும் கதவு பலமாகத் திறக்கப்பட்டு, பாலேஸ்டர் ஆடை மாற்றும் அறையை நோக்கி ஓடினார். அவர் கேன்வாஸ் காலணிகளை அணிந்து கொண்டு, தன் ஜாக்கெட்டை மாட்டிக் கொண்டபடி கடந்து செல்லும்போது இவார்ஸிடம் சொன்னார்: “குழந்தைக்கு வலிப்பு வந்துவிட்டது. நான் ஜெர்மைனை அழைக்கப் போகிறேன்,” என்று சொல்லிவிட்டு முதன்மைக் கதவை நோக்கி ஓடினார். மருத்துவர் ஜெர்மைன் பட்டறையில் உள்ளவர்களின் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்பவர். அவர் இந்தத் தொலைதூரப் பகுதியில் வாழ்ந்தார். இவார்ஸ் எந்தவொரு கருத்தும் சொல்லாமல் அந்தச் செய்தியை மீண்டும் சொன்னான். அவர்கள் அவனைச் சுற்றி கூடி, சங்கடத்துடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். மின்சாரக் கரத்தின் மோட்டார் மட்டும் தனியாக ஓடும் சத்தத்தைத் தவிர வேறு எதுவும் கேட்கவில்லை. “அது ஒருவேளை ஒன்றுமில்லாமல் இருக்கலாம்,” அவர்களில் ஒருவர் சொன்னார். அவர்கள் தங்களின் இடங்களுக்குத் திரும்பினர். பட்டறை மீண்டும் அவர்களின் சத்தங்களால் நிறைந்தது. ஆனால் அவர்கள் ஏதோ ஒன்றிற்காகக் காத்திருப்பது போல மெதுவாக வேலை செய்து கொண்டிருந்தனர்.

கால் மணி நேரத்திற்குப் பிறகு, பாலேஸ்டர் மீண்டும் உள்ளே வந்தார். தன் ஜாக்கெட்டைத் தொங்கவிட்டு, ஒரு வார்த்தையும் பேசாமல் அந்தச் சிறிய கதவின் வழியே வெளியே சென்றார். ஜன்னல்களில் ஒளி மங்கிக் கொண்டிருந்தது. சற்றுப் பிறகு, இயந்திரக் கை மரத்தை அரியாத இடைவெளிகளில், ஒரு ஆம்புலன்ஸின் மந்தமான மணிச் சத்தம் கேட்டது. முதலில் தூரத்தில், பின்னர் அருகில், இறுதியாகச் சரியாக வெளியே. பின்னர் மௌனம். ஒரு கணத்திற்குப் பிறகு பாலேஸ்டர் திரும்பி வந்தார். அனைவரும் அவரை நோக்கிச் சென்றனர். எஸ்போசிட்டோ மோட்டாரை நிறுத்தியிருந்தான். , தன் அறையில் ஆடை மாற்றிக் கொண்டிருக்கும்போது அந்தச் சிறுமி அறுத்து வீழ்த்தப்பட்டது போலத் திடீரென்று விழுந்துவிட்டாள் என்றார் பாலேஸ்டர். “இப்படி ஒரு விஷயத்தை யாராவது கேட்டிருக்கிறீர்களா!” என்று மார்கோ சொன்னான். பாலேஸ்டர் தன் தலையை அசைத்து, பட்டறையை நோக்கித் தெளிவற்ற ஒரு சைகையைச் செய்தார். ஆனால் அவர் பெரும் அதிர்ச்சியடைந்தவர் போலக் காட்சியளித்தார். மீண்டும் ஆம்புலன்ஸ் மணிச் சத்தம் கேட்டது. அவர்கள் அனைவரும் அங்கே, அந்த மௌனமான பட்டறையில், கண்ணாடித் தகடுகளின் வழியே வந்த மஞ்சள் ஒளியின் கீழ், தங்களின் மரத்தூள் மூடிய பழைய கால்சட்டைகளின் ஓரமாக தங்களின் கரடுமுரடான, பயனற்ற கைகளைத் தொங்கவிட்டபடி நின்றுகொண்டிருந்தனர்.

மதியப் பொழுதின் எஞ்சிய பகுதி இழுத்துக்கொண்டே சென்றது. இவார்ஸ் இப்போது தன் சோர்வையும் தன் இன்னும் கனத்த இதயத்தையும் மட்டுமே உணர்ந்தான். அவன் பேச விரும்பியிருப்பான். ஆனால் அவனிடம் சொல்வதற்கு எதுவும் இருக்கவில்லை, மற்றவர்களிடமும் இல்லை. அவர்களின் பேசாத முகங்களில் சோகமும் ஒரு வகையான பிடிவாதமும் மட்டுமே வாசிக்கக் கூடியதாக இருந்தது. சில சமயங்களில் “பேரழிவு” என்ற வார்த்தை அவனுக்குள் வடிவம் பெற்றது. ஆனால் மிக லேசாகவே. ஏனெனில் அது உடனடியாக மறைந்துவிட்டது—ஒரு குமிழி தோன்றி அதே கணத்தில் வெடிப்பதைப் போல. அவன் வீட்டிற்குச் செல்ல விரும்பினான். மீண்டும் பெர்னான்டேவுடனும், தன் மகனுடனும் திண்ணையில் இருக்க விரும்பினான். அதற்கேற்ப, பாலேஸ்டர் வேலை முடியும் நேரத்தை அறிவித்தார். இயந்திரங்கள் நின்றன. அவசரப்படாமல், அவர்கள் நெருப்பை அணைத்து, தங்களின் பெஞ்சுகளில் எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தத் தொடங்கினர். பின்னர் அவர்கள் ஒவ்வொருவராக ஆடை மாற்றும் அறைக்குச் சென்றனர். சாயித் மட்டும் பின் தங்கியிருந்தான். அவன் பட்டறையைச் சுத்தம் செய்து, தூசி நிறைந்த தரையில் நீர் தெளிக்க வேண்டியிருந்தது. இவார்ஸ் ஆடை மாற்றும் அறையை அடைந்தபோது, அகலமான, அடர்ந்த முடிகளைக் கொண்ட எஸ்போசிட்டோ குளியலறையின் கீழ் இருந்தான். அவன் சத்தமாகத் சோப்புப் போட்டுக் கொள்ளும்போது அவனது முதுகு அவர்களை நோக்கித் திரும்பியிருந்தது. பொதுவாக, அவனது கூச்ச சுபாவத்தைப் பற்றி அவர்கள் அவனைக் கேலி செய்வார்கள். அந்த மாபெரும் கரடி, தன் அந்தரங்க உறுப்புகளைப் பிடிவாதமாக மறைத்துக் கொள்ளும். ஆனால் இந்தத் தருணத்தில் யாரும் அதைக் கவனித்ததாகத் தெரியவில்லை. எஸ்போசிட்டோ குளியலறையிலிருந்து பின்வாங்கி, ஒரு துண்டை இடுப்பாடை போலத் தன் மீது சுற்றிக் கொண்டான். மற்றவர்கள் தங்களின் முறையை எடுத்துக் கொண்டனர். மார்கோ தன் வெறும் பக்கவாட்டுகளைத் பலமாகத் தட்டிக் கொண்டிருந்தபோது, அந்த மாபெரும் கதவு அதன் இரும்புச் சக்கரத்தின் மீது மெதுவாகத் திறக்கும் சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். லாசாலே உள்ளே வந்தார்.

அவர் தன் முதல் வருகையின் போது அணிந்திருந்ததைப் போலவே ஆடை அணிந்திருந்தார். ஆனால் அவரது முடி சற்று கலைந்திருந்தது. அவர் வாசற்படியில் நின்று, அந்தப் பரந்த கைவிடப்பட்ட பட்டறையைப் பார்த்து, சில அடிகள் எடுத்து வைத்து, மீண்டும் நின்று, ஆடை மாற்றும் அறையை நோக்கிப் பார்த்தார். இன்னும் தன் இடுப்பாடையுடன் இருந்த எஸ்போசிட்டோ, அவரை நோக்கித் திரும்பினான். நிர்வாணமாக, சங்கடத்துடன், அவன் ஒரு காலிலிருந்து மற்றொரு காலுக்கு மாறினான். மார்கோதான் ஏதேனும் சொல்ல வேண்டும் என்று இவார்ஸ் நினைத்தான். ஆனால் தன்னைச் சுற்றியிருந்த நீர்த்திரைக்குப் பின்னால் மார்கோ கண்ணுக்குத் தெரியாமல் இருந்தான். எஸ்போசிட்டோ ஒரு சட்டையைப் பற்றிப் பிடித்து அதைச் சாதுரியமாக மாட்டிக் கொண்டிருந்தபோது, லாசாலே, “குட் நைட்” என்று சற்றே பலவீனமான குரலில் கூறிவிட்டு, அந்தச் சிறிய கதவை நோக்கி நடக்கத் தொடங்கினார். யாராவது அவரை அழைக்க வேண்டும் என்று இவார்ஸுக்குத் தோன்றியபோது, கதவு முன்பே மூடப்பட்டிருந்தது.

இவார்ஸ் குளிக்காமலேயே ஆடை அணிந்து கொண்டு, அவனும் குட் நைட் சொன்னான். ஆனால் தன் முழு இதயத்துடன் சொன்னான். அவர்களும் அதே இதத்துடன் பதிலளித்தனர். அவன் வேகமாக வெளியே சென்று, தன் மிதிவண்டியை எடுத்து, அதில் ஏறியபோது, தன் முதுகின் அழுத்தத்தை மீண்டும் உணர்ந்தான். அவன் இப்போது மாலையின் பிற்பகுதியில், வாகன நெரிசல் நிறைந்த நகரத்தின் வழியே மிதிவண்டியைச் செலுத்திக் கொண்டிருந்தான். அவன் வேகமாகச் சென்று கொண்டிருந்தான். ஏனெனில் அந்தப் பழைய வீட்டிற்கும் திண்ணைக்கும் திரும்ப அவன் ஆர்வமாக இருந்தான். அகன்ற வீதியின் தடுப்புச் சுவருக்கு மேலே, காலையை விடவும் இருண்டதாக அவனுடன் கூடவே வந்துகொண்டிருந்த கடலைப் பார்க்க அமர்வதற்கு முன்பு, அவன் கழுவும் இடத்தில் தன் கைகளைக் கழுவிக் கொள்வான். ஆனால் அந்தச் சிறுமியும் அவனுடன் வந்துகொண்டிருந்தாள். அவளைப் பற்றி நினைப்பதை நிறுத்த முடியவில்லை.

வீட்டில், அவனது மகன் பள்ளியிலிருந்து திரும்பி வந்து சித்திரப் புத்தகங்களைப் படித்துக் கொண்டிருந்தான். பெர்னான்டே இவார்ஸிடம் ”எல்லாம் சரியாகவிட்டதா” என்று கேட்டாள். அவன் எதுவும் சொல்லவில்லை. கழுவும் அறையில் தன்னை சுத்தமாக்கிக்கொண்டு, திண்ணையின் தாழ்வான சுவரையொட்டிய பெஞ்சில் அமர்ந்தான். பலவகையான தையல்கள் போடப்பட்டிருந்த துவைத்த துணிகள் அவனது தலைக்கு மேலே தொங்கின. வானம் தெளிந்து கொண்டிருந்தது. சுவரைத்தாண்டி மாலைநேர மென்மையுடன் கடல் தெரிந்தது. பெர்னான்டே அனிசெட் மதுவுடன், இரண்டு கிண்ணங்களும், குவளையில் குளிர்ந்த நீரும் கொண்டு வந்தாள். கணவனுக்கு அருகில் அமர்ந்தாள். திருமணமான ஆரம்ப நாட்களைப் போல அவன் அவளது கையைப் பற்றியபடி, அவளிடம் எல்லாவற்றையும் சொன்னான். அவன் பேசி முடித்தாலும் அசையாமல் கடலை பார்த்துக் கொண்டிருந்தான். தொடுவானின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை அந்திவெளிச்சம் வேகமாக அணைந்துகொண்டிருந்தது. “ஆ! அது அவருடைய தவறுதான்!” என்றான். அவனும், பெர்னான்டேவும் மீண்டும் இளைஞர்களாக இருந்திருந்தால், அவர்கள் அங்கிருந்து கடலைக் கடந்து வெகுதூரம் சென்றிருப்பார்கள்.

(ஆல்பர்ட் காம்யுவின் Exile and the Kingdom என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ள சிறுகதை)   

ரவிச்சந்திரன் எம்

கவிஞர். கவிதைகள், கவிதைகள் பற்றிய கட்டுரைகளையும் மொழிபெயர்த்திருக்கிறார். சிறுபத்திரிக்கை ஆசிரியர். கோவை மாவட்டம், போத்தனூரில் வசிக்கிறார். கணக்கு தணிக்கையாளராக பணியாற்றுகிறார்.

நூல்கள்:

1.மெய்நிகர்(கவிதைகள்)-லயம் வெளியீடு

2.கவிதையின் மெய்மை (கவிதைபற்றிய மொழிபெயர்ப்பு கட்டுரைகள்)- தமிழினி வெளியீடு


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

உரையாடலுக்கு

Your email address will not be published.

கடந்தவை

திரட்டு

சேகரம்

Go toTop