பயங்கரமா இருந்துச்சு : வா.மு. கோமு

ஓவியம் : திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்

எதையும் சரியாக உணர்ந்து, புரிந்து நடந்துகொள்வதில் ராமச்சந்திரனுக்கு தடுமாற்றமாய் இருந்தது. யாரேனும் எதையேனும் இவனிடம் தேடிவந்து தகவல்களை காதில் போட்டு வைப்பதாய் நினைத்து சொல்லிவிட்டுத்தான் செல்கிறார்கள். அவர்கள் அனைவருக்குமே தன்மீது அக்கறையாய் இருப்பதாய் இவனால் முடிவுக்கும் வரமுடியவில்லை. ஆனால் ஒன்றுமட்டும் நிச்சயமாக இவனுக்கு புரிகிறது. வந்து காதில் ஓதுபவர்கள் எல்லோருமே ஒரே விசயத்தைத்தான் மாற்றி மாற்றி வெவ்வேறு வடிவங்களில் சொல்கிறார்கள் அல்லது சொல்ல முயற்சிக்கிறார்கள். அவர்களுக்கு இதெல்லாம் தேவையற்ற விசயங்கள் தான். இருந்தும் பிறந்ததிலிருந்து ஊருக்குள் வாழும் ஒருவனாயும், அனைத்து குடும்பங்களுக்குமே அறிமுகமானவன் தான் என்பதாலும் அவர்கள் இவன் விசயத்தை ஒதுக்கிவிட்டு செல்ல முடியவில்லை. இவனிடம் பேசும் சமவயதுக்காரர்கள் கூட யோக்கியவான் என்கிற போர்வையொன்றை போர்த்திக்கொண்டு வந்து குசுகுசுப்பதாய் இவனுக்கு தோன்றியது. இதுவெல்லாம் எங்கே போய் முடியுமென்பதைப்பற்றி இவனுக்குள் எந்த எண்ணங்களும் இல்லை. இதுவரைக்கும் எல்லாமும் சரியாய் போய்க்கொண்டிருப்பதாய்த்தான் இவனும் நம்பிக்கொண்டிருந்தான்.

ராமச்சந்திரனுக்கு இப்போது வயது ஐம்பத்தி ஐந்து. டொக்கு விழுந்து விட்டதாய் கொஞ்சமேனும் நம்புகிறான். ஏற்கனவே தலைமுடியும், மீசைமுடியும் கறுமை நிறத்தை விட்டு வெண்மை நிறத்திற்கு மாறிவிட்டது. இவன் வயதுக்காரன்கள் ஊருக்குள் இன்னமும் நரை தெரியாமலிருக்க கருஞ்சாயம் பூசிக்கொண்டு மைனர் போல பைக்கில் செல்கிறார்கள். அவர்கள் அப்படி கருஞ்சாயம் பூசிக்கொண்டு ஊருக்குள் நடமாடுவதைப்பற்றியெல்லாம் இவனுக்கு எந்த அக்கறையும் இருந்ததில்லை. அவரவர்களுக்கான வாழ்க்கையை அவரவர்கள் வாழ்ந்துகொண்டுதானே இருக்கிறார்கள்!

ராமச்சந்திரனுக்கு நாற்பது வயதில் தான் திருமணம் முடிந்தது. எல்லோரையும் போல பெரியோர்கள் நிச்சயித்து நடந்த திருமணமல்ல. இவனுக்கும் அண்ணன் ஒருவன் இருந்தான். அவன் தன் நாற்பதாவது வயதில் ரயில்வே லைனில் தலையைக்கொடுத்து இறந்து போனான். அவன் எதற்காக இறந்தான் என்று பதினெட்டு வருடங்களாக யாருக்கும் தெரியவில்லை. அப்படியொருவன் ராமச்சந்திரனுக்கு அண்ணனாக இருந்தான் என்பதையே எல்லோரும் மறந்துவிட்டார்கள். ராமச்சந்திரனும்கூட மறந்திருந்தான்.

இவன் திருமணம் முடித்துக்கொண்டபோது இவன் குடும்பத்தில் யாருமில்லை. ஒத்தையாளாக தன் வீட்டில் தானே சமைத்து, தானே துணிமணி துவைத்து வாழ்ந்து வந்தான். சிறுவயதிலிருந்தே கோழிகள் வளர்த்துபவனாக இருந்துவந்தான் ராமச்சந்திரன். அவன் வீட்டை ச்சுற்றிலும் எப்போதும் கோழிகளின் கூச்சல் தான் இருக்கும். இப்போது கட்டுச்சேவல்கள் வளர்த்துகிறான். காகம், வெள்லை, செம்மி என ரகம் ரகமாய் அவன் வீட்டின் முன்பகுதியிலும், பின்பகுதியிலும் பெட்டி பெட்டியாய் மறைப்பிற்குள் எந்த நேரமும் ஒப்பாரி வைத்துக்கொண்டு அவைகள் நிற்கின்றன. காவலுக்கு என்று இவன் வீட்டில் டைகர் இருக்கிறது என்றுதான் பெயர். ஆனால் அது ஊர்சுற்றி நாய். திடீரென்று உள்ளூர் காரை வாடகைக்கு எடுத்துக்கொண்டு கேரளா, கர்நாடகா என்று சேவல்களோடு சென்றானென்றால் வருவதற்கு மூன்று நான்கு நாட்கள் ஆகும். ஒரு சேவல் பத்தாயிரம் வரை அங்கே விற்பதாய் கார் டிரைவர் கந்தசாமி ஊருக்குள் தகவலை கசியவிட்டிருக்கிறான்.

பத்துவருடம் முன்பாக தறிக்குடோனுக்குச் சென்று வாரக்கூலி வாங்கிப்பிழைத்தவன் தான் ராமச்சந்திரன். தறிக்குடோனில் தறியோட்ட வந்தவள் தான் கனகம். முப்பத்தியொன்பதாவது வயதில் தான் அவனுக்கு பெண் மீதான ஈர்ப்பே தோன்றியது. ஒண்டிக்கட்டையான அவனுக்கு பெண்கள் மீதான எண்ணமெல்லாம் தோன்றாதபடி வாழ்க்கை அவனை வளைத்துப்போட்டு சுருட்டி வைத்திருந்தது. அப்பா இறப்பு, அம்மா இறப்பு, அண்ணன் இறப்பு என்று தொடர்ந்து அரங்கேறிக்கொண்டே இருந்த வீடு அது. தறிக்குடோனில் இரண்டு ஷிப்ட். ஒருவாரம் இரவுப்பணி என்றால் மறுவாரம் பகல்.

இவனிடம் அப்போது போக வர எக்ஸெல் சூப்பர் ஒன்றிருந்தது. அண்ணன் ஓட்டிக்கொண்டிருந்த அட்லஸ் சைக்கிள் இப்போதும் வீட்டு பரண்மேல் படுத்துக்கிடக்கிறது. வாங்கிய பொருளை விற்பதற்கு ராமச்சந்திரன் என்றும் சம்மதம் சொல்வதில்லை. இப்போது ஐந்து வருடமாக ஹீரோ ஹோண்டா கியர் வண்டி ஓட்டிக்கொண்டிருக்கிறான். அதனால் எக்ஸெல் சூப்பரை தொகைக்கு கேட்டு ஊருக்குள் பலர் மோதிப்பார்த்தார்கள். ஒருகைப்பட ஓடின வண்டி நன்றாயிருக்குமென்பது அவர்கள் நினைப்பு. இதென்னடா? என்று யோசித்தவன் கனகத்திற்கு ஒருவாரகாலம் டிரெய்னிங் கொடுத்து ஓட்டிப்பழக்கிவிட்டான். கனகம் ஊரில் நூறுநாள் வேலைத்திட்டத்தில் சேர்ந்து போய்வந்து கொண்டிருந்தாள். சிந்தாமணிக்கு அரிசி வாங்கப்போகவும், செவ்வாய் சந்தைக்கு குறுநகரம் போய்வரவும் அவள் எக்ஸெல்லை பயன்படுத்திக்கொள்கிறாள். குடும்ப வாழ்க்கையில் இருவருக்கும் பிறந்த பையன் கண்ணன் உள்ளூர் பள்ளியில் இப்போது ஒன்பதாவதில் இருக்கிறான்.

ராமச்சந்திரன் புதிதாய் தறிக்குடோனுக்கு தறியோட்ட வந்து சேர்ந்த கனகத்தை பார்த்த நாள் முதலாய் மின்சாரத்தாக்குதலுக்கு ஆளானவன் போல ஆகிப்போனான். குடோனில் பத்துத்தறிகள் ஓடின. ஒரு ஷிப்டிற்கு இரண்டிரண்டு தறிகளுக்கு ஒரு ஆள். மற்றபடி தார்ப்போட மூன்று பெண்கள் வந்து கொண்டிருந்தார்கள். கனகம் முன்பாக குமராபாளையத்தில் தறியோட்டிக்கொண்டிருந்தவளாம். அவளைப்பற்றியான தகவல்கள் இவன் ஓரளவு சேகரிக்க ஒருமாதகாலம் ஆகிவிட்டது. அவளுக்கு வயது இருபத்தி நான்கு என்று சக தறியோட்டி சிவன் சொன்னான். அவளுக்கு திருமணமாகி கணவன் பைக் ஏக்ஸிடெண்டில் செத்துப்போய்விட்டான் என்று நூல் போடும் பொன்னி சொன்னாள். கனகத்திற்கு குழந்தை எதுவுமில்லை.

தறிக்குடோனுக்கு வரும் பெண்கள் எல்லாருமே மாநிறத்தைக்கொண்டவர்கள் தான். கனகமோ சுண்டினால் ரத்தம் வரும் சிவப்பு உடம்புக்காரி. ஒருமுறை அம்மாவாசை நாளில் ஈஸ்வரன் கோவில் முன்பிருந்த அரசமரத்திண்டில் சுடிதார் அணிந்து கொண்டு அமர்ந்திருந்த கனகத்தைப் பார்த்து மின்சார அதிர்வை மீண்டும் வாங்கினான் ராமச்சந்திரன். இவள் தறியோட்டத்தான் போய்வந்து கொண்டிருக்கிறாள் என்று யார் சொன்னாலும் நம்ப முடியாதவன் போன்று அவளையே பார்த்தபடி நின்றிருந்தான். சினிமாக்காரன் யாராச்சிம் பார்த்தால் அப்படியே அள்ளிக்கொண்டு போய் ஆர்யா, சூர்யாவிற்கு ஜோடியாய் பாட்டுப்பாடி ஆடவைத்து விடுவார்கள். சித்தங்கூரியத்தில் மூர்த்தி கோவிலினுள் இருந்து வந்தவன் அவளோடு போய் ஒட்டி அமர்ந்து கொண்டான். மூர்த்தி குடோனில் தறி ஓட்டுபவன் தான். ஆனால் அவனுக்கு வேறு ஷிப்ட். ஒருவேளை மூர்த்தி கனகத்தை கட்டிக்கொண்டானா? அப்படி யாரும் குடோனில் பேசிக்கொள்ளவில்லையே! இவன் அவர்களை கண்டு கொள்ளாதவன் போல திரும்பிவிட்டான்.

ஒருமாதத்தில் மூர்த்தி குறுநகர் மண்டபத்திலேயே திருமணம் என்று இவனுக்கும் பத்திரிக்கை அழைப்பு கொடுத்தான். வாங்கியவன் ‘கண்டிப்பாய் முதல் ஆளாக வந்துவிடுகிறேன்!’ என்று புன்னகையோடு சொல்லி பத்திரிக்கையை வாங்கிக்கொண்டான். அவன் சென்றபிறகு அழைப்பிதழில் பெண்ணின் பெயர் ஒருவேளை கனகமாக இருப்பாளோ என்று பார்த்தான். புவனேஷ்வரி என்றிருந்தது. அப்புறம் கனகத்தின் காதல் என்னவாயிற்று? அவள் இவனை கழற்றி விட்டுவிட்டாளா.. இல்லை இவன் அவளை கழற்றி விட்டுவிட்டானா?

திருமணத்திற்கு ராமச்சந்திரன் சென்றிருந்தான். ரோசாப்பூ நிற சுடிதாரில் மண்டபத்தில் தேவதை கணக்காய் கனகம் சிட்டாய் பறந்துகொண்டிருந்தாள். மண்டபத்தில் இருப்போரெல்லாம் அப்படியே பிரீஸ் ஆகி நிற்பது போலவும் கனகம் மட்டும் ஸ்லோமோசனில் லல்லா லல்லா! என்று பின்னணி இசை ஒலிக்க ஓடுவதாய் இவனுக்கு மட்டும் தோன்றியது. இரவு பத்துமணி என்கிறபோது மண்டபத்தில் கூட்டம் குறைந்துவிட்டது. மூர்த்தியின் சொந்தபந்தங்கள் சிலரும், பொண்ணுப்பிள்ளை புவனேஷ்வரி சொந்தபந்தங்களில் சிலரும் ஆங்காங்கே சேர்களில் அமர்ந்து அரட்டை போட்டுக்கொண்டிருந்தார்கள். வரவேற்பில் ஆள் இல்லை. இவனும் வீடு சென்று தூங்கிவிழித்து காலையில் முகூர்த்தத்திற்கு வந்துவிடலாமென்ற யோசனையில் மூர்த்தியிடம் சொல்லிக்கொண்டு மண்டபத்தை விட்டு வெளியில் வந்தான்.

வாகனங்கள் நிறுத்துமிடம் ஓரளவு காலியாகியிருந்தது. தெற்கு கடைசியில் புங்கை மரத்தடியில் விளக்கெரியவில்லை போல. அங்கே இரண்டு பைக்குகள் இருளில் நின்றிருந்தன. இருவர் நிற்பதான அலம்பலும் தெரிந்தது. இவன் ஹோண்டா இரண்டு மரங்கள் தாண்டி இந்தப்புறமே முன்னால் தனித்து நின்றிருந்தது. வண்டிக்கு அருகாமை சென்றவன் புங்கை மர இருளில் இருவர் கட்டியணைத்து முத்தமிட்டுக் கொண்டிருப்பதாய் தெரியவே ’ச்சை! இந்த இழவு வேறயா? அதும் மண்டப வாசலில்!’ என்று நினைத்தபடி தன் பைக்கில் சாவியை நுழைத்து ஏறியமர்ந்தான்.

ஸ்டார்ட் செய்து விளக்கைப் போட்டான். வண்டியை திருப்பினவன் ஹெட்லைட் வெளிச்சத்தில் அந்த இருவரையும் பார்த்தான். அது சிவனும், கனகமும் தான். அன்றிரவு முழுக்க அவனால் தூங்கவே முடியவில்லை. மூர்த்தியோடு அப்போ காதல் இல்லை போல கனகத்திற்கு. அது நட்பாகக்கூட இருக்கலாம். ஆனால் சிவனுக்கு ஏற்கனவே மனைவியும் குழந்தைகள் இரண்டு பேரும் இருக்கிறார்களே! மனைவிக்கு துரோகம் செய்கிறானா இந்த சிவன் பயல்? இல்லை தனக்கு திருமணம் ஆகவில்லை என்று கனகத்தை நம்பவைத்து காதல் நாடகம் நடத்துகிறானா? கனகம் நீயொரு அப்பாவிப் பெண்ணடி!

அடுத்த நாள் இவன் முகூர்த்தத்திற்கு செல்லவில்லை. இவன் போனிற்கு சிவன் கூப்பிட்டிருந்தான். என்னவென தெரிந்துகொள்ள ராமச்சந்திரன் போனை எடுத்தான். ‘மண்டபத்துக்கு வரலையாடா ராமச்சந்திரா?’ என்றான். இவன் ‘இல்லை’ என்றான். ‘ராத்திரி பார்த்ததை வெளிய குடோன்ல யாருகிட்டயும் சொல்லிட்டு இருக்காதடா ராமச்சந்தரா.. விஷயம் என் வீடு வரைக்கும் போயிடுச்சுன்னா என் பொண்டாட்டி எனக்கு சோத்துல விஷம் வெச்சு கொன்னுடுவா!’ என்றான். ‘இல்ல நான் யாருகிட்டயும் அதைப்பத்தி பேசமாட்டேண்டா! நீ தைரியமா இரு!’ என்றான். ‘அவ தான் முத்தம் ஒன்னு குடு சிவாண்ணே!.. அப்படின்னு கேட்டாடா!’ என்றான் சிவன். ‘சரி சரி காத்தால என்னடா பேச்சு இது!’ என்று போனை கட் செய்துகொண்டான்.

மூர்த்திக்கு திருமணம் என்பதால் இன்று குடோன் ஓனர் விடுப்பை வழங்கிவிட்டார். நிதானமாக எழுந்தவன் பைப்பில் தண்ணீர் வரவே குடிப்பதற்கு என்று இரண்டு குடம் பிடித்துக்கொண்டுவந்து வீட்டினுள் வைத்து விட்டு கோழிகளுக்கு தீவனம் போடும் வேலையில் இறங்கினான். இன்னமும் துணிமணிகள் துவைத்துப்போடும் வேலையும், உணவு தயாரிக்கும் வேலையும் மீதமிருந்தது. அலைபேசியை வீட்டின் வெளிவாசல் திண்ணையில் வைத்துவிட்டு தன் வேலைகளில் இருந்தான் ராமச்சந்திரன். அப்போது இவன் அலைபேசி மீண்டும் அலறியது. துணிக்கு சோப்பு போட்டுக்கொண்டிருந்தவன் கல்லின்மீது அப்படியே அதை போட்டுவிட்டு வந்து அலைபேசியை அழுத்தினான். புதிய எண்ணாக இருந்தது அது. ‘யாருங்க பேசுறது? என்ன விசயமுன்னு சொல்லுங்க!’ என்றான் ராமச்சந்திரன்.

“நான் கனகம் பேசுறனுங்க!” இவனுக்கு மின்சார அதிர்ச்சி திடீரென அடித்தது. நெஞ்சுக்கூடு வெடித்து இருதயம் வெளியே வந்து வாசலில் விழுந்துவிடுமென்றே நினைத்தான்.

“என்னங்க பேச்சையே காணம்? இருக்கீங்களா லைன்ல!”

“இருக்கேன்.. சொல்லுங்க!” என்றான்.

“முகூர்த்தத்துக்கு வருவீங்கன்னு பார்த்தேன்.. வரலைங்களா?”

“இல்ல.. தொவைக்கிற வேலை இருக்குதுங்க.. துணிமணிக ஒரு மோளி கிடக்குது. இன்னும் சாப்பாடு ஆக்கலை!”

“சொன்னாங்க சொன்னாங்க.. இன்னும் உங்களுக்கு கல்யாணம் ஆகலைன்னு குடோன்ல! உங்க வயசு நாப்பது இருக்குமுங்களா?”

“அதைக்கேட்டு நீங்க என்ன பண்டப்போறீங்க.. என்னை கட்டிக்கப்போறீங்களா? உங்களுக்குத்தான் சிவன் இருக்கான்ல.. அவனையே கட்டிக்கங்க.. பத்திரிக்கை குடுங்க.. வரவேற்புக்கு வந்து வாழ்த்தீட்டு ஒரு வாய் சோறு தின்னுட்டு வந்துடறேன்!”

“யாரு சிவனா? அவனொரு ஆகாவழிங்க.. என்கிட்ட அவனுக்கு கல்யாணம் ஆகலைன்னு சொன்னான். பார்த்தா நைட்டு மண்டபத்துல மூர்த்தி சொல்றான் கொழந்தைகுட்டியே அவனுக்கு இருக்குதாமா.. ஏனுங்க நீங்களே சொல்லுங்க.. எதுக்காக என்கிட்ட பொய்யச் சொல்லனும் அவன்? அப்படி அவன்கூட நான் பழகப்போயி அவன் பொண்டாட்டிக்கி விசயம் தெரிஞ்சு என்னைத்தேடிவந்து அவ ரோட்டுல தூக்கிப்போட்டு மிதிச்சா யாருக்குங்க கேவலம்? எனக்குத்தான? அவன் குடும்பத்தை பிரிச்ச பாவத்தை நான் ஏன் தேடிக்கணும்? நீங்களே சொல்லுங்க!”

“நான் எனத்தைங்க சொல்றது? உங்க சவுரியம் தான அதெல்லாம்!”

“சரி அவன் நாயத்தை உடுங்க.. காத்தால பதினொருமணி காட்சிக்கி பெருந்துறை போலாங்களா நாம ரெண்டுபேரும்? ஒரு சினிமாவை தியேட்டர்ல பார்த்து அஞ்சு வருசத்திக்கிம் மேல ஆயிடுச்சுங்க! என்னடா திடீருன்னு கூப்பிடுறாளேன்னு நினைக்காதிங்க… இன்னிக்கித்தான் குடோனை சாத்தீட்டாரே ஓனரு. ஊடு போய் சும்மாதான் கிடக்கணும் நானு!”

இவனுக்கு என்ன சொல்வது என்று உடனே முடிவெடுக்கவும் முடியவில்லை. மறுத்துவிட்டால் அவள் மீதான இவனது ஆசையை மூட்டைகட்டி வீசிவிட வேண்டியது தான். இத்தனை வயதாகி சொந்தத்தில் யாரும் பொண்ணு கொடுப்பதற்கான வாய்ப்புமில்லை. இப்படியே ஓரியாய் வாழ்ந்துவிட்டு போய்ச்சேர்ந்துவிட வேண்டியது தான். தலையில் அப்படித்தான் எழுதியிருக்கும்போல. அவளோடு பழகித்தான் பார்ப்போமே! நானாக கழற்றிவிடப்போவதில்லை அவளை. அவளாக கழற்றி விட்டாலும் மூலையில் அமர்ந்து தலைக்கும் மேல் கைவைத்து துக்கப்படுவதற்கும் தனக்கு நேரமில்லை. இப்படி யோசித்தவன் ‘சரி போலாம்’ என்று சொல்லிவிட்டான்.

அப்படித்தான் ஆரம்பமாயிற்று ராமச்சந்திரனுக்கும் கனகத்திற்கும் பழக்கம். பழக்கம் குடோன் ஓனர்வரை உடனேயே போய்விட்டது. இவன் மீது வயித்தெரிச்சலாய் இருந்த சிவன் செய்த தலையாய பணி அது. குடோன் ஓனர் தன்னை குடோனை விட்டு ’ஓடுடா நாயே!’ என்று விரட்டிவிடுவார் என்று தான் நினைத்தான் ராமச்சந்திரன். தறியோட்டுவதற்கு ஆட்கள் பற்றாக்குறையும் இருக்கிறது குறுநகரில். எடுத்தேன் கவிழ்த்தேன் என இவனை அப்படி விரட்டிவிடவும் முடியாது. பக்கத்து குடோன்காரன் லபக்கென ஆளை தன் குடோனுக்கு அபேஸ் செய்து கொள்வான். இருவரையும் தன் ஆபீஸ் அறைக்குள் வரவைத்து பேச்சைத் துவங்கினார் ஓனர்.

“என்னம்மா.. ராமச்சந்திரன் உன்னை கட்டிக்கறேன்னு சொல்றானா?”

”அவரு என்னங்க சொல்றது.. நானே அவரை கட்டிக்குவேன்!” என்றாள் கனகம். குடோன் ஓனர் அறுபத்தைந்து வயதில் தன் வாழ்வில் நூற்றிஏழாவது முறையாக புன்னகை பூத்தார்.

“இவன் எங்காளுத்தான் கனகம். பத்துவருஷமா என்கிட்ட தறி ஓட்டுறான். ஒரு பொம்பளைப்பிள்ளையை நிமிர்ந்து பார்க்க மாட்டான். எப்பிடியோ உன்னைப் பிடிச்சுப்போச்சு இவனுக்கு. தாயி தகப்பன் இல்லாதவன். ஊருக்குள்ளயும் பெருசா இவனுக்கு மதிப்பில்லே! கல்யாணம் காச்சின்னு காலாகாலத்துல பண்ணியிருந்தான்னா மதிப்பா இருந்திருப்பான் மத்தவங்களப்போல. அதுக்கு வழியில்லாமப் போச்சு! சரி கூடிய சீக்கிரம் நம்ம ஈஸ்வரன் கோயில்ல வச்சு தாலி கட்டி குடித்தனத்தை ஆரம்பிச்சுக்குங்க! ஏன்னா தள்ளிப்போட்டுட்டே போனீங்கன்னா உங்களுக்குள்ள சண்டை வந்துட்டா ஆளுக்கொருபக்கம் வெறச்சிட்டு போயிருவீங்க!” என்று ஆரம்பித்து அரைமணி நேரம் பேசினார். அவரே முன்னால் நின்று அடுத்த வாரத்திலேயே அந்த திருமணத்தை நடத்தி வைத்தார். ராமச்சந்திரன் உள்ளூர்க்காரர்களுக்கு தன் வீட்டிலேயே தனியாக திருமண விருந்து வைத்து குறைந்த செலவில் முடித்துக்கொண்டான்.

ஆரம்பத்தில் ஆறுமாதகாலம் இவனோடு பைக்கில் குடோனுக்கு தறியோட்டஜோடி போட்டு வந்துகொண்டிருந்தவள் வயிற்றில் உண்டானதும் குடோன் வேலைக்கு முழுக்குப்போட்டு வீட்டிலேயே தங்கிக்கொண்டாள். இருபத்திநான்கு வயதுக்காரியான கனகத்தின் சிவந்த உடல் உள்ளூர்க்காரிக்களுக்கு பொறாமையை தந்துகொண்டிருந்தது சிலகாலம். கனகம் மெதுவாக உள்ளூர்க்காரிகளிடம் பேச்சுக்கொடுத்து பழகிக்கொண்டாள். பெருந்துறை ஆஸ்பத்திரியில் வயிற்றைக்கிழித்து ஆண்பிள்ளை ஒன்றைப் பெற்றுக்கொண்ட கனகம் கையோடு அடுத்த குழந்தை இனித்தனக்கு வேண்டாமென தடை ஆப்பரேசனையும் முடித்துக்கொண்டு நிதானமாய் ஊருக்கு வந்து சேர்ந்தாள். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பையன் கண்ணனும் வளர ஆரம்பித்தான்.

ராமச்சந்திரன் மற்ற உள்ளூர்க்கார கணவன்மார்களைப்போலவே மனைவிக்கு அடங்கிய கணவனாக காலப்போக்கில் கனகத்திற்கு மாறிப்போனான். உள்ளூர் முழுக்கவே பெண்கள் ராஜ்யம் தான். கணவன்மார்கள் பெயருக்குத்தான். இதில் பனியன் கம்பெனிக்கு வேன் ஏறிப்போகும் உள்ளூர்ப்பெண்களும், நூறுநாள் வேலைத்திட்டத்திற்குப்போகும் வயதான பெண்களும், ஆடுகள் பத்திருபது உருப்படியை வைத்துக்கொண்டு அவற்றை மேய்த்து வருமானம் ஈட்டிக்கொள்ளும் ஏழெட்டு பெண்களும் இருந்தார்கள். இதுபோக கட்டிட வேலைக்கு சித்தாளாய் சென்று வருபவர்களுமிருந்தார்கள். பணத்தேவை உள்ளூர்ப்பெண்களை வாட்டி வதைத்துக்கொண்டே இருந்தது.

ஒருத்தி பீரோ முழுக்க தன் சேலையை அடுக்கி வைத்திருக்கிறாள் என்று தெரிந்தால் அனைவரும் அவள் மீது பொறாமை கொண்டார்கள். ஒருத்தி தன் வீட்டின் முன்பாக கார் நிறுத்தியிருக்கிறாள் என்றால் அவள் மீது பொறாமை கொண்டார்கள். ஒருத்தியின் பையன்கள் நல்ல சம்பாதிப்பில் இருக்கிறார்கள் என்றால் அவள்மீதும் பொறாமை கொண்டார்கள். ஊர்முழுக்க பொறாமை என்னும் பேய் வட்டமிட்டுக்கொண்டேயிருந்தது! அது ஊரை விட்டுச் செல்வேனா என்று பிடிவாதமாய் வீடு வீட்டுக்குள் நுழைந்து அட்டகாசம் செய்து சுற்றியது.

இதில் நான்கைந்து பெண்கள் ஈரோடுவரை திடீரென பிரயாணம் செய்து லாட்ஜில் பார்ட்டியை சந்தித்து பொழுதுவரை கிடந்து பொழுது சாயும் நேரத்தில் பர்ஸில் பணத்தை நிரப்பிக்கொண்டு வருபவர்களாயும் இருந்தார்கள். ஞாயிறு என்றால் குட்டான் கூடி பியர், பிராந்தி அடிக்கும் பெண்களும் இருந்தார்கள். அவர்களுக்கு சரக்கு வாங்கிவர உள்ளூரிலேயே ஆட்கள் இருந்தார்கள். போதையில், ‘உம்பட ஊட்டுக்காரன் சாமத்துல என்னடி பண்ணுறான்? கவுந்தடிச்சு படுத்துக்கறானா? ஒவைக்கறதுக்கு உன்னை இழுக்கறானா?” என்ற கேலிப்பேச்சுக்களையும் சாதாரணமாய் பேசினார்கள்.

கனகத்தின் பையன் உள்ளூர் பள்ளியில் ஆறாம் வகுப்பு செல்கையில் தான் மெதுவாய் கனகம் உள்ளூர் வசந்தாவோடு நெருங்கிய தொடர்பிலிருந்தாள். இருவரும் காதலர்கள் என்று கூட உள்ளூரில் பலரும் பேசிக்கொண்டார்கள். அவளோடு இணைந்து ஈரோடு பிரயாணப்பட்டாள் கனகம். பணப்புழக்காட்டம் அவள் கையில் அதிகமானது. ஒருமுறை தனி பார்டி அழைக்கிறதென வசந்தாவிடம் சொல்லிக்கொண்டு ஈரோடு பிரயாணப்பட்டாள் கனகம். லாட்ஜில் ரெய்டில் அன்று மாட்டிக்கொண்டு திருதிருவென விழித்தவள் வசந்தாவுக்கு தகவலை போனில் சொல்லிவிட்டாள். வசந்தா அலட்சியமாய் தனக்குத்தெரிந்த அதிகாரியை அழைத்து விசயத்தை சொல்லிவிட, அந்த அதிகாரியின் முயற்சியால் தப்பியவள் ஐந்தாயிரம் கொடுத்துவிட்டு தப்பித்தோம் பிழைத்தோமென ஊர் வந்து சேர்ந்தாள். பின்பாக வசந்தா என்னதான் அழைத்தும் ஈரோடோ, திருப்பூரோ செல்வதை தவிர்த்து விட்டாள். பணத்துக்காக என்றில்லாமல் ஆசைக்காகச் சென்றவள் கனகம். அதை லோக்கலிலேயே முடித்துக்கொள்ளலாமே என்று நூறுநாள் வேலைத்திட்டத்தில் தன்னை சேர்த்திக்கொண்டு சென்றுவந்துகொண்டிருந்தாள்.

அப்படி செல்கையில் கொட்டக்காட்டு பழனிச்சாமியை தன் வலையில் வீழ்த்துவதில் வெற்றியும் அடைந்தாள் கனகம். கொட்டக்காட்டு பழனிச்சாமிக்கு மனைவி இறந்து ஆறேழு வருடங்களாகிவிட்டது. அவரது ஒரே பெண்ணையும் அரச்சலூருக்கு கட்டிக்கொடுத்து மூன்று வருடமாகிற்று. அவருக்கு பேரப்பிள்ளையும் பிறந்தாகிவிட்டது. அவருக்கு வயது இருந்தால் அறுபதுக்கும் பக்கமாக இருக்கும் என்றாலும் பார்க்க அப்படித் தெரிய மாட்டார். உழைப்பாளியான அவர் ஆறடிக்கு உயர்ந்து நிற்பார். காடு அவருக்கு ஐந்து ஏக்கரா கிடக்கிறது. விவசாயம் யார் செய்கிறார்கள் இப்போது? எல்லோரும் நிலத்தை விற்கும் காலம் ஓடிக்கொண்டிருப்பதால் அவரும் நல்ல விலை வந்தால் கொடுத்துவிடும் முடிவில்தான் நூறுநாள் வேலைத்திட்டத்தில் மம்பட்டி தூக்கி வந்துகொண்டிருந்தார்.

கையகலத்தில் சாம்சங் போனை வைத்துக்கொண்டு யூடியூப்பில் வீடியோ பார்த்து மகிழும் பழக்கமுள்ளவரான கொட்டக்காட்டு பழனிச்சாமி சாலைப்பணியில் இருந்த சமயத்தில் அவரது போன் ஒருநாள் களவு போய்விட்டது. எல்லாப்பெண்கள் மீதும் சந்தேகப்பட்டவர் சாடை பேச்சை துவங்கவும் பெண்கள் கொந்தளித்தார்கள். ”நாங்க எதுக்குங்க உங்க போனை தூக்குறோம்? எங்களுக்கு எங்குளுதே இருக்குது! ஒன்னுக்கே ஒரு நாளைக்கி சிம்முக்காரன் தான் கூப்புட்டு பேசிட்டு இருக்கான்.. இப்ப என்ன நாங்க உங்க முன்னாடி அவுத்துக்காட்டுனாத்தான் எடுக்கலைன்னு நம்புவீங்களா?” என்ற கசமுசா சப்தத்தில் கனகம் மளாரென ‘பாத்துக்கோங்க!’ என்று சேலையை விலக்கி ஜாக்கெட்டை காட்டிக்கொண்டு நிற்கவும் பழனிச்சாமி மிரண்டுபோனார். பின்னர் தூக்கத்திலெல்லாம் கனகம் சேலையை விலக்கி ஜாக்கெட்டோடு நிற்கும் காட்சியே வந்து வந்து செல்லவும் தன் மீசையை வேறு தடவிக்கொண்டு ‘பயங்கரமா இருந்துச்சு!’ என்று முனகிக்கொண்டார்.

நரிதின்ன கோழி கூவவா போகுது? என்று நினைத்த பழனிச்சாமி பெருந்துறையில் ரெட்மீ போனை வாங்கிக்கொண்டார். அதற்கும் முன்பாக தன் போனைத்திருடனது யாரா இருந்தாலும் அவங்க குடும்பத்துக்கு கெடுதி மேல கெடுதி நீ கொடுக்கணும் சாமி! என்று சேவலை கோவில் முன்புறமிருக்கும் வேலில் உயிரோடு குத்தி வேண்டிக்கொண்டார். யாரேனும் குடும்பத்தில் சிரமங்கள் நடக்கிறதா? என்று கண்ணும் கருத்துமாய் கவனித்தார். அப்படியேதும் உடனேயே நடக்காமல் போனதால் சாமியை குற்றம் சாட்டினார். ’ரெண்டுகிலோ சேவல் வெட்டியாப்போச்சு!’ புலம்பினார். கனகம் பழனிச்சாமியை வீழ்த்தும் முயற்சியில் வெற்றியும் அடைந்தாள்.

ராமச்சந்திரன் சேவல்களோடு கேரளா சென்ற நாளில் பையனும் பள்ளிக்குச் சென்ற பிறகாக பழனிச்சாமியை வீட்டுக்கே வரவழைத்தாள். பழனிச்சாமி தன் எக்ஸெல் சூப்பரில் மதியமாய் அவள் வீடு வந்து சேர்ந்தார். அவர் வந்த அந்த முதல் நாள் மின்சாரமில்லை. அன்று ஷட்டவுன். பேன் ஓடாததால் இருவரும் வேர்த்துப்புப்பூத்து புழுக்கத்தில் கிடந்தார்கள். கிளம்பும் முன் கனகமும் பழனிச்சாமியும் ஒன்றாக இணைந்து பாத்ரூமில் குளியலை முடித்துக்கொண்டார்கள். ஆறுமாத காலத்தில் உள்ளூரில் எல்லார் வீட்டிலும் இவர்கள் இருவரின் தகவல்கள் கசிந்து பேசுபொருளாகினர்.

திடீரென பழனிச்சாமியை வீட்டுக்கு இனி வரவேண்டாமென சொல்லி நிப்பாட்டிவிட்டாள் கனகம். அவரிடமிருந்து பெரிதாக எதையுமே இவளால் கறக்க முடியவில்லை. எப்போதேனும் இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுகளை மட்டுமே கொடுப்பார். ‘என்னை என்னுங்க அந்த மாதிரி பொம்பளைன்னு நினைச்சுட்டீங்களா?’ என்று கோபமாய் பேசினாலும் கையில் வாங்கிக்கொள்வாள். ஒரு கட்டத்தில் அவர் சும்மா வந்து போவதாய் தோன்றவே அடுத்த நபரை பிடிக்கும் ஆசை அவளுக்குள் வந்துவிட்டது!

கொட்டக்காட்டு பழனிச்சாமிக்கு என்ன செய்வதென தெரியாமல் பைத்தியம் பிடித்தது போல ஆகிவிட்டது. கண்ணு! சாமி! என்று சாலைப்பணியில் இருக்கும்போது குரல்கொடுத்து பின்னால் வருவார். ‘இந்தா சாமி.. செலவுக்கு வெச்சுக்க!’ என்று இரண்டாயிரம் கொடுத்தார். வாங்கிக்கொண்டாள். ‘உன் புருஷன் கோழி பிடிச்சுட்டு போனாச் சொல்லு! நாம வச்சிக்கலாம்! இல்ல எங்கூட்டுக்கு வர்றியா தங்கம் இன்னிக்கி.. வேலை முடிஞ்சு நாம நாலு மணிக்கி எல்லோரும் கிளம்புறப்ப நேரா எங்கூட்டுக்கு போலாம்!’ என்று அவர் சொன்னாலும் எதுவும் பதில் அவருக்குச் சொல்லாமல் அகன்றாள். அவள் பழனிச்சாமியோடு இருக்கும் எண்ணத்திலேயே இல்லை. ‘பொம்பளைங்களை புரிஞ்சுக்கவே முடியலை!’ என்று தன் அறுபதாவது வயதில் நினைத்து வருத்தப்பட்டு சோறு இறங்காமல் நிலா பார்த்துக்கொண்டு கட்டிலில் கிடந்தார் பழனிச்சாமி.

ராமச்சந்திரனுக்கு உள்ளூர்க்காரர்களே அவன் மனைவி கனகத்தின் நடத்தையைப்பற்றி காதில் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். எல்லோருக்கும் கனகத்து மேல பொறாமை. வயித்தெரிச்சல்ல பேசுறாங்க! எவனாச்சிம் கூப்புட்டு பாத்துருப்பான். செருப்புல ரெண்டு போட்டிருப்பா! வாங்கிக்கட்டிக்கிட்டு எம்பட காதுல வந்து அவளப்பத்தி கொசலம் சொல்லீட்டு திரியறானுங்க! இவுனுங்க பொண்டாட்டிக வண்டவாளமெல்லாம் எனக்குத் தெரியாதுன்னு நினைச்சுட்டு இருக்கானுங்களா? நானென்ன இவனுங்க கிட்ட போயி கொசலமா சொல்றேன்? அடுத்தவன் நல்லா இருக்ககூடாது இவனுங்க கண்ணுக்கு! கோலுச்சொல்லி அவன் குடும்பத்தை பிரிச்சி நாசம் பண்ணீட்டு தான் மறுவேலை பார்ப்பானுங்களாட்ட இருக்குது. அப்பத்தான் இவனுங்களுக்கு வயித்துல சோறு எறங்குமாட்ட இருக்குது!

கனகத்து மேல இத்தனை காலம் கழிச்சி இவனுங்க ஏன் என்கிட்ட வந்து கோலு மூட்டறானுங்க! அவளுக்கே வயசு நாப்பதாச்சி.. என்னன்னா பாக்குறதுக்கு முப்பது முப்பத்தஞ்சி வயசுக்காரியாட்ட தெரியிறா! அந்த ஆசையே அத்துப்போயிருக்கும் இந்த நேரம். பையன் வேற ஒன்பதாம் கிளாசு போறான். இப்பப்போயி ‘வா.. வான்னு நான் போயி ஊட்டுக்குள்ள அவளை இழுத்துட்டு இருந்தா நல்லாவா இருக்கும்? என்னேரமும் அந்த நாயத்தையே பேசீட்டு திரியறானுங்க.. வேற நாயமே இல்லையா இவனுங்களுக்கு? கருணாநிதி பையன் தோத்துப்போயிட்டாப்ல! எடப்பாடியாரு கட்சி நாலாமூனா தேங்கா சிதறுனாப்ல ஆயிட்டு இருக்குது. விஜயி ஆச்சிக்கி வந்து கரண்டு இல்லீங்கறாங்க.. சாராயக்கடையில் பத்துரூவா பிரச்சனையாமா.. இப்பிடி பேசலாம்ல இவனுங்க! ஆளு நானு இல்லீன்னா என் பொண்டாட்டி மேலயே கண்ணு போட்டுட்டு ஊட்டையே சுத்துவானுங்களாட்ட இருக்குது. அதான் ஆயிரத்தெட்டு பிரச்சனையை உட்டுட்டு எம்பொண்டாட்டி நாயத்தை மட்டும் பேசுறானுங்க! ராமச்சந்திரன் மனசுக்குள் பேசுவதை வெளியேயே முனகிக்கொண்டான்.

அன்று அப்படித்தான் கர்நாடகாவுக்கு பத்து சேவல்களை தூக்கி காரில் போட்டுக்கொண்டு ராமச்சந்திரன் கிளம்பிவிட்டான். பெருந்துறை தாண்டுகையிலேயே பூனை ஒன்று குறுக்கே போவதை இவன் பார்த்துவிட்டு டிரைவர் கந்தசாமியிடம் ‘என்னப்பா பூனை குறுக்க போகுதே!’ என்றான். ‘அது அதுபாட்டுக்கு போகத்தாண்ணா செய்யும். எந்தக்காலத்துல இருக்கீங்க இன்னமும் நீங்க? பூனை போகக்கூடாது.. மொசல் போகக்கூடாதுன்னு சொல்லீட்டு’ என்று அடக்கிவிட்டான். பவானி தாண்டுகையில் பெரிய ஏக்ஸ்டெண்ட் ஒன்று அப்போதுதான் நடந்திருக்கும் போல! டிராபிக் ஜாமாகிக் கிடந்தது. ராமச்சந்திரனுக்கு மனது ஒப்பவில்லை. கந்தசாமி என்ன சொல்லியும் கேட்காமல் வண்டியைத் திருப்பச் சொல்லிவிட்டான். பெருந்துறை வந்து மதிய உணவை ஓட்டலிலேயே முடித்துக்கொண்டு ஊர் திரும்பினார்கள் இருவரும். வீட்டு வாசலில் காரை நிப்பாட்டியபோதுதான் கவனித்தான் நீலவர்ண சுஜுகி பைக் ஒன்று வாசலுக்கு வடபக்கமாய் நின்றிருந்தது. யாருது இது? கதவு சாத்தியிருந்தது. சரி யாராச்சிம் கொண்டாந்து உட்டுட்டு போயிருப்பாங்க.. பஞ்சரோ என்னமோ! கோழிகளை அதனதன் இடத்தில் ஒவ்வொன்றாய் தூக்கிப்போய் கட்டினான். கந்தசாமி மண்டையைச் சொரியவே அவன் கையில் ஆயிரம் கொடுத்து, ’இன்னும் ரெண்டுநாளு கழிச்சி போயிக்கலாம்!’ என்று சொல்லி தாட்டி விட்டான்.

வாசல் படிக்கட்டில் கனகம் செருப்போடு ஆம்பிளை செருப்பும் ஒட்டிக்கிடந்தது. ‘கனகம்.. தூங்கறியாடி?’ என்று கதவைத்தட்டினான். ‘ஏன் பெங்களூரு போவலியா?’ கனகம் குரல் கொடுத்துக்கொண்டே வந்து கதவை நீக்கினாள். இவன் வீட்டினுள் சென்றான். ஆசாரத்தில் சிகரெட் பிடித்துக்கொண்டு நாற்பது வயது மதிக்கத்தக்கவன் ஒருவன் பேண்ட் அணிந்து கால்மேல் கால் போட்டு அமர்ந்திருந்தான். மேலே பேன் ஓடிக்கொண்டிருந்தது. சிகரெட் வாசம் இவனுக்கு ஒத்துக்கொள்ளாது. இருமினான். அப்ப ஊர்க்காரங்க சொன்னதெல்லாம் நிசம்தான் போல! புருசன் செத்தவளுக்கு வாழ்க்கை குடுத்த பாவத்துக்கு இத்தனை காலம் கழிச்சி புருசனுக்கு செருப்புல மாலை போட்டுட்டாளே! அமர்ந்திருந்தவனை யாரென்றே இவனுக்கு அடையாளம் தெரியவில்லை. இந்தப்பக்கத்து ஆள் மாதிரி தெரியவில்லை. வெளியூர்க்காரனாட்டம். என்ன பேசுவது? கேட்பது? என்று ராமச்சந்திரனுக்குத் தெரியவில்லை. கனகமுமே அமர்ந்திருப்பவனை யாரென்று சொல்லாமல் அமைதிகாத்திருந்தாள்.

ராமச்சந்திரன் நிதானமாக வீட்டினுள்ளிருந்து வெளிவாசலுக்கு வந்து திண்ணையில் அமர்ந்தான். ஐந்து நிமிடம் கழித்து அந்த ஆசாமி வீட்டினுள்ளிருந்து வெளிவந்து தன் செருப்பைத் தொட்டுக்கொண்டு தன் பைக் நிற்குமிடத்திற்குச் சென்றான். கனகம் பின்னாலேயே வந்தவள் படிகளில் இறங்கி வாசலில் நின்று அவனை வழியனுப்புவதற்காக நின்றாள். அவன் பைக்கை ஸ்டார்ட் செய்து திருப்பிக்கொண்டு வந்து வாசலில் அவளருகில் நின்றான். இவனுக்கு கேட்டாலும் பரவாயில்லை என்று நினைத்தவன் போல, ‘அப்ப நான் புறப்படறேன் கனகம். போன் பண்ணு!’ என்றான்.

ராமச்சந்திரன் ’கனகம்’ என்று அவளை அழைத்தான். ‘என்ன?’ என்பது போல அவள் ராமச்சந்திரனை திரும்பிப்பார்த்தாள்.

“நீயும் சாரோடையே கிளம்பிப்போயிரு” என்றான் ராமச்சந்திரன்.

000

வா.மு. கோமு

வா.மு. கோமு (ஜூன் 20, 1969). இயற்பெயர்: வா.மு.கோமகன். நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், இலக்கிய விமர்சனங்கள் ஆகியவற்றை எழுதி வருகிறார். பகடி கலந்த எழுத்து முறைக்காகவும் புனிதங்களை கடந்த பாலியல் மீறல் எழுத்துக்காகவும் அறியப்படுபவர். தமிழ் விக்கியில்


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

4 Comments உரையாடலுக்கு

  1. அட்டகாசம் அண்ணே.
    அருமையான கதை.

  2. ராமச்சந்திரன் எனும் பெயரை வைத்ததற்காகவே வா.மு.கோமுவைப் பாராட்டலாம். அவர் தெரிந்து வைத்திருக்க வாய்ப்பில்லை என்|றும் ந்ம்புகிறேன். எப்படியோ, நீண்ட் நாட்களுக்குப் பிறகு வா.மு.கோமுவின் கதையை வாசிக்கும் வாய்ப்பு; அகழுக்கு நன்றி

  3. ‘நீயும் சாரோடயே கிளம்பிப்போயிரு’ என்றான் ராமச்சந்திரன்.
    பைக், கனகத்தை திரும்பிப் பார்த்தவாறு கிளம்பி போச்சது. கனகம் வாசலில் நின்றவாறு பைக்கிற்கு கையாட்டினாள்.
    கனகம், ராமச்சந்திரனை பார்த்து, ‘ஏனுங்’ என்றாள்.
    அப்போது, ‘அம்மா’ என்றவாறு, மகன் பள்ளிக்கூடத்திலிருந்து வந்து கொண்டிருந்தான்.
    ராமச்சந்திரன், கனகத்திடம், ‘போச்சாது போ!’ … என்று கூறியவன், மகனை வாரிக்கொண்டான்.
    கனகம், பைக் தெருவிலிருந்து மறையும் வரை பார்த்துக்கொண்டிருந்தாள்.

    – கருணாகரன் ஆறுமுகம், சோழவந்தான்.

  4. என்னை என்னவோ செய்த கதை.. ராமச்சந்திரனோடும் கனகத்தோடும் யார் யாரையோ பொருத்திப் பார்க்கிறது மனம். சில நேரங்களில் எங்கோ நிகழ்ந்தவை கதையாகும் போது சில கதைகள் எங்கும் நிகழக் கூடாது என்று என் மனம் தவிக்கத் தொடங்கியிருக்கும். அப்படி ஒரு கதை.
    வாழ்த்துக்கள் வா.மு கோமு சார்.

உரையாடலுக்கு

Your email address will not be published.

திரட்டு

சேகரம்

Latest Posts

Go toTop