
ஜான் ஆம்ஸ்ட்ராங் எழுதிய ‘நாகரிகத்தைத் தேடி: பொலிவிழந்த ஒரு கருத்தாக்கத்தின் மீளுருவாக்கம்’ (In Search of Civilization) நூலின் முதல் அத்தியாயம் இங்கு தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.
எனது மகனுக்கு உறக்க நேர கதையொன்றை வாசித்துக் கொண்டிருந்த ஒரு மாலை வேளையில்தான், நாகரிகத்தைப் பற்றி எழுத வேண்டும் என்னும் நாட்டம் எனக்குள் உருப்பெற்றது. ஆர்தர் ரான்சமின் (Arthur Ransome) குழந்தைகளை கவரும் வழக்கமான சிறுவயது சாகசக் கதையான ‘சீக்ரெட் வாட்டர்’ (Secret Water) – குழந்தைகளுக்கான சாகசக் தொடரான ‘ஸ்வாலோஸ் அண்ட் அமேசான்ஸ்’ (Swallows and Amazons)-ன் ஒரு பகுதி– என்ற அந்தப் புத்தகத்தில், வாக்கர் குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து குழந்தைகள், தீவிலுள்ள தங்கள் முகாமை விட்டு வெளியேறி, பிரதான நிலப்பகுதியை நோக்கி ஒரு சிறு பயணத்தை மேற்கொள்கிறார்கள். அவர்கள் தங்களை வேட்டையாடி வாழும் பழங்குடிகளாகப் பாவித்துக் கொள்கிறார்கள். தொலைவில் அவர்களுக்குச் சில சிறு குடில்களும், அறுவடை முடிந்த வயல்வெளிகளும், தந்தி கம்பங்களின் வரிசையும் தென்படுகின்றன; ஒரு காரின் முகப்பு கண்ணாடியில் சூரிய ஒளி பட்டுத் தெறிக்கிறது: அவர்கள் நாகரிக உலகின் ஒரு எல்லையை நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
உடனே “நாகரிகம் என்றால் என்ன?” என்று அக்குடும்பத்தின் கடைக்குட்டியான பிரிட்ஜெட் கேட்கிறாள்.
“ஐஸ்கிரீம்கள் மற்றும் அது போன்றவைகள்,” என அவளுடைய சகோதரன் ராஜர் விளக்குகிறான்.
ஆங்கில மொழியில் இச்சொல்லிற்கு வழங்கப்பட்ட மிகச் சுருக்கமான விளக்கம் இதுவாகத்தான் இருக்கும்.
ராஜரின் இந்தப் பதில் நாகரிகம் எனும் கருத்தாக்கத்திற்கு முழுமையான நியாயம் சேர்க்கவில்லை என்றாலும், அது ஒரு தேடலைத் தூண்டிவிடப் போதுமானதாக இருக்கிறது.
அது வெறும் ஐஸ்கிரீம் சம்மந்தப்பட்டது மட்டுமல்ல என்றால், உண்மையில் ‘நாகரிகம்’ என்பதுதான் என்ன?
ஒரு பரிச்சயமற்ற புது சொல்லின் அர்த்தத்தை தெரிந்துகொள்ள எழுந்தமையும் சிறு ஆர்வத்தைத் தாண்டி, இக்கேள்வி கூடுதலான ஆழத்தைக் கொண்டிருக்கிறது; உதாரணத்திற்கு ‘பியூஸ்’ (puce) அல்லது ‘எக்ஸிகுவஸ்’ (exiguous) போன்ற விசித்திரமான ஒலிகொண்ட சொற்களைக் கேட்கும்போது ஏற்படும் ஒருவித தற்காலிக குறுகுறுப்பைப் போன்றது அல்ல இது. மனித சமூகம் உருவாக்கியவற்றிலேயே மிகவும் பிரம்மாண்டமான, உன்னத லட்சியம் கொண்ட ஒரு கருத்தாக்கம் ‘நாகரிகம்’ என்பதாக இருக்கலாம் – ‘கடவுள்’ என்ற சொல் மட்டுமே இதற்கு விதிவிலக்கு. நாகரிகத்தின் மையப்பகுதியை நாம் சென்றடைந்து, அதன் ரகசிய அர்த்தத்தைக் கண்டறிய முடிந்தால், நம்மைப் பற்றியும், மனித இருப்பின் சாரத்தைப் பற்றியும் சில முக்கியத்துவம் வாய்ந்த ஆழமான புரிதல்களை அடையலாம். மேலும், இது இன்றைய சூழலுக்கு அத்தியாவசியமான ஒன்றாகவும் அமையும்.
ஆனால், ‘நாகரிகம் என்றால் என்ன?’ என்கிற கேள்வி பெரும் மலைப்பை ஏற்படுத்துகிறது. அந்தச் சொல் சுட்டிக்காட்டும் கருத்தாக்கத்தை நுணுக்கமாக விளக்க முற்படும்போது, நாம் திகைப்பிற்குள்ளாகி தோற்றுப்போகிறோம். ஒரு தெளிவான, அதேசமயம் வீரியமிக்க பதிலை வழங்குவது இவ்வளவு கடினமாக இருப்பதை நாம் எப்படி புரிந்துகொள்வது? ‘நாகரிகம்’ என்பதை வரையறுப்பதில் நமக்கு இருக்கும் இந்தத் தடுமாற்றம், ஒருவேளை நாகரிகத்தின் நிலை பற்றி ஏதேனும் சொல்கிறதா?
‘நீதி’, ‘காதல்’ அல்லது ‘நாகரிகம்’ போன்ற உன்னதமான கருத்தியல் சொற்கள் எதுவானாயினும், அவை பல்வேறு தொடர்புகளுடன் மிகப்பெரிய வலைப்பின்னலாய் விரிந்திருக்கின்றன; அவை அளவுகடந்த அர்த்தங்களைக் கொண்டிருப்பதாகத் தோன்றுகின்றன. நாகரிகம் என்பது சமையல் கலை, காப்பீடு, தொழில்நுட்பம், நற்பண்புகள் (நாகரிகமான நடத்தைகள்), புவிசார் அரசியல், கலைக்கூடங்கள், சட்டம், உரையாடல், தொல்லியல், தனிநபர் சுகாதாரம், நகரத் திட்டமிடல், அறம், அறிவியல், நுகர்வு-வணிகம், மதம், பாலின உறவு, கவிதை… என இவை அனைத்தோடும் ஏதோ ஒரு வகையில் தொடர்புடையதாக இருக்கிறது. இதனால்தான், அதனை வரையறுக்கச் சொல்லும்போது ஒருவிதப் பதற்றம் ஏற்படுகிறது.
‘நாகரிகம்’ போன்ற சொற்களைப் பற்றிய நமது தற்போதைய பார்வை பெரும்பாலும் ஒருவிதக் குழப்பம் நிறைந்த கலங்கிப்போன எண்ணங்களாகவே தொனிக்கின்றன. பொதுவாக நாம் இவற்றைப்பற்றிக் கவலைப்படுவதில்லை. ஆனால், தத்துவம் நம்மை இவ்விடத்தில் இன்னும் கூடுதல் தேடல் கொண்டவர்களாகவும், இன்னும் உன்னத லட்சியம் கொண்டவர்களாகவும் இருக்கத் தூண்டுகிறது; அல்லது, எதிர்மறையாகச் சொல்லப்போனால், நம்முடைய வழக்கமான குழப்பங்களைச் சகித்துக்கொள்ளும் மனநிலைக்கு மன்னிப்பளிக்க மறுக்கிறது.
‘நாகரிகம்’ என்று நாம் குறிப்பிடும் கருத்தாக்கத்தின் முக்கிய பரிமாணங்கள் என்னென்ன?” ஒரு கற்பனையான நள்ளிரவு விவாத மேடையில் — இதைச் சாக்ரடீஸின் உரையாடல்களுக்கு இணையான இன்றைய காலத்து வடிவமாகக் கொள்ளலாம் — நான்கு பங்கேற்பாளர்கள் இருப்பின், இன்று இந்தச் சொல்லோடு தொடர்புடைய நான்கு வெவ்வேறு சிந்தனைப் போக்குகளை முன்வைக்கக்கூடும்.
முதல் பங்கேற்பாளர், நாகரிகம் என்பது ஒரு சமூகத்தின் கூட்டு விழுமியங்கள் அல்லது ஒரு குறிப்பிட்ட வாழ்வியல் முறையைக் குறிப்பதாகச் சொல்கிறார்: ‘இன்று உலகில் ஒன்பது முக்கியமான நாகரிகங்கள் உள்ளன. இஸ்லாமிய, மேற்கத்திய, சீன, இந்திய மற்றும் ரஷ்ய நாகரிகங்கள் மிகப்பெரியவை; ஆனால் இன்னும் பல சிறிய நாகரிகங்களும் இருக்கின்றன: உதாரணமாக, ஆஸ்திரேலியாவின் உட்பகுதிகளில் மிகவும் தனித்துவமான மற்றும் பழமையான வாழ்வியலைக் கொண்ட ‘அபோரிஜினல்’ (Aboriginal) நாகரிகம் இன்றும் நிலவுகிறது.
ரோமானிய பேரரசின் நாகரிகம் என்பது, அதன் குடிமக்களிடையே பொதுவாகக் காணப்பட்ட அடிப்படை அனுமானங்கள் (கேள்விக்குட்படுத்தப்படாத நம்பிக்கைகள்), வாழ்வியல் நடத்தை முறைகள் மற்றும் சிந்தனைப் போக்குகளின் தொகுப்பாகும். ஒரு நாகரிகம் என்பது ஒட்டுமொத்தச் சமுதாயத்தாலும் பகிரப்பட்ட மற்றும் இயல்பாகவே ஏற்றுக்கொள்ளப்பட்ட (taken for granted) விஷயங்களோடு தொடர்புடையது’. அந்தப் பேச்சாளர் ஒரு மிடறு தண்ணீர் குடித்துவிட்டுத் தனது உரையைத் தொடர்கிறார்:
‘ஒரு நாகரிகம் அதனுள் இயங்கும் அனைவரின் அகவாழ்க்கையையும் கட்டமைக்கிறது. எது சரி, எது தவறு என்பது பற்றிய அவர்களின் புரிதலையும்; எதை உண்பது இயல்பானது, எப்படி வணிகம் செய்வது, எது உன்னதமானது அல்லது இழிவானது, எப்படி ஒரு உரையாடலைத் மேற்கொள்வது அல்லது எப்படி நகைச்சுவை புரிவது போன்ற அனைத்தையும் அதுவே தீர்மானிக்கிறது. அந்த நாகரிகத்திற்குள் இருப்பவர்களுக்கு இந்த வழிமுறைகள் இயல்பானதாகவும் சாதாரணமானதாகவும் தோன்றும்; ஆனால், வெளியில் இருப்பவர்களுக்கு அவை பெரும் புதிராகவோ அல்லது விசித்திரமானதாகவோ காட்சியளிக்கும். அதனால்தான் நாகரிகங்களுக்கு இடையே ஒருவகையான உரசல்கள் இருந்துகொண்டே இருக்கின்றன: வாழ்வின் கவித்துவங்கள் அனைத்தையும் மொழிபெயர்க்க இயலாது.’
இரண்டாவது பேச்சாளர் இதனை மறுக்கிறார். “இல்லை,” “நாகரிகம் என்பது ஒரு குறிப்பிட்ட அளவிலான பொருளாதார மற்றும் அரசியல் வளர்ச்சியைக் குறிக்கிறது’ என்றே சொல்லப்படுகிறது. நைல், கங்கை, மஞ்சள் நதி(சீனம்) மற்றும் மெசபடமிய (டைக்ரிஸ் – யூப்ரடீஸ் ஆறுகளுக்கு இடைப்பட்டது) ஆகிய நான்கு முக்கிய ஆற்றுப்படுகைகளின் கரைகளில்தான் நாகரிகம் முதன்முதலில் தோன்றியது என்று நாம் கூறும்போது, இந்த அர்த்தத்தில்தான் குறிப்பிடுகிறோம்.
நகரங்களை உருவாக்குவதற்கும், பிரம்மாண்டமான கட்டுமானத் திட்டங்களை மேற்கொள்வதற்கும் தேவையான பொருளாதார மற்றும் அரசியல் முதிர்ச்சி முதன்முதலில் உருவான இடங்கள் இவைதான். எனவே, நாகரிகம் என்பது உண்மையில் ஒரு சமூகம் பெற்றுள்ள தொழில்நுட்பத் திறன்களையும், ஒரு மாபெரும் கூட்டு முயற்சியைச் சாத்தியமாக்கும் சமூகக் கட்டமைப்பின் நிலையையும்தான் குறிக்கிறது. நாகரிகம் என்பது செல்வப்பெருக்கும், பொருள்சார் அதிகாரமும் (material power) நடைமுறை பயன்பாட்டில் வெளிப்படுவதோடு தொடர்புடையது.”
“நாம் பொதுவாக இப்படித்தான் கூறுவோம்: ‘நாகரிகத்திலிருந்து பல மைல்கள் தள்ளி இருக்கும் ஒரு மலைப் பகுதியில் நாம் வண்டியை ஓட்டிக்கொண்டிருக்கும்போது, ஒருவேளை அதன் கியர்பாக்ஸ் பழுதாகிப் போகும்பட்சத்தில், ஒரு மெக்கானிக் ஷெட்டை நம்மால் எங்கே கண்டுபிடிக்க முடியுமோ, அதுபோன்றதொரு இடமே நாகரிகம் எனப்படுவது. கோகேன் (Gauguin-பிரெஞ்சு ஓவியர்), “நாகரிகம் என்பது விஷம்” என்று கூறியபோதும் இதையேதான் அவர் மனதில் கொண்டிருந்திருக்க வேண்டும் — நவீன நகர வாழ்க்கை, வணிகம், தொழில்நுட்பம் மற்றும் பொது நிர்வாகம் ஆகியவற்றை நோக்கி அவர் மிக எதிர்மறையான பார்வையை கொண்டிருந்தார். இவற்றுக்கெல்லாம் வெகு தொலைவில் வாழ்வதில்தான் மிகுந்த மகிழ்ச்சியிருப்பதாகவும், மற்ற அனைவரும் கூட நிச்சயம் அப்படியே உணரக்கூடும் என்றும் அவர் எண்ணினார்.”
அங்கே ஒரு கணம் அமைதி நிலவுகிறது; அதுவரை அக்கறை அற்றவர்போல சோம்பலாகப் பின்னால் சாய்ந்திருந்த மூன்றாவது விருந்தினர், சற்றே முன்னோக்கி குனிந்தபடி தொடங்குகிறார்: “உண்மையில், இவை அனைத்துமே அதிநவீனத் தேடலோடு இன்பத்தை நாடும் விழைவினோடு தொடர்புடையது. பஃகண்டி (Burgundy) ஒயினும் அதன் உணவு வகைகளும் நாகரிகத்தின் ஆகச்சிறந்த வெற்றிகள்தான். அவற்றைச் சுவைத்து மகிழ்பவர்களுக்கு அரிய இன்பங்களை அவை வழங்குகின்றன. வாழ்வின் மகிழ்ச்சி, வசதி மற்றும் சுவாரஸ்யம் போன்றவற்றின் தனிப்பட்ட குரலாய் வெளிப்படுவதே நாகரிகம். இது அருங்காட்சியகங்களை விட, நேர்த்தியான குளியலறைகளுடனும், விதவிதமான பொருட்கள் நிறைந்த சமையலறைகளுடனும் தான் அதிகத் தொடர்புடையது. ‘அன்னா கரீனினா’ (Anna Karenina) நாவலில் அப்லான்ஸ்கி (Oblonsky) என்ற ஒரு சிறிய கதாபாத்திரம் வரும் — அவர் உலக இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டவற்றிலேயே ஆகச்சிறந்த மதிய உணவுகளில் ஒன்றை எடுத்துவர சொல்லிவிட்டு இப்படி கூறுகிறார்: ‘நாகரிகத்தின் ஒட்டுமொத்த நோக்கமே எல்லாவற்றையும் இன்பத்திற்கான ஒரு ஆதாரமாக மாற்றுவதுதான்’.”
அவர்(அப்லான்ஸ்கி) சொல்வது சரிதான். ஆனால் நான் ஒருவேளை வேறொரு உதாரணத்தைப் பயன்படுத்தியிருக்க வேண்டும்: அந்த மதிய உணவு உதாரணம் சற்று தவறாக வழிநடத்தக்கூடியது, ஏனெனில் அது மிகவும் விலை உயர்ந்தது. ‘நாகரிகம்’ என்று நான் எதை குறிப்பிடுகிறேன் என்பதற்கு, எய்டுவர் டு பொமியான் (Edouard de Pomiane) என்ற பிரெஞ்சு சமையல் கலைஞர் எழுதிய ‘பத்து நிமிடங்களில் சமையல்’ (Cooking in Ten Minutes) என்ற ஒரு அழகான சிறிய புத்தகம் இன்னும் சிறப்பானதொரு உதாரணமாக அமையக்கூடும். அவருடைய சமையல் குறிப்புகள் மிகவும் எளிமையானவை மற்றும் செலவு குறைந்தவை; அவர் முயற்சிப்பது என்னவென்றால், ஒரு ருசிகரமான மதிய உணவை எப்படி குறைவான நேரத்தில் சமைத்து உண்டு மகிழ முடியும் என்று மக்களுக்கு கற்பிப்பதுதான்; சத்துமிக்க, சுவையான உணவை ரசித்தபடி சிறிதே ஓய்வாக நேரத்தை ஒழுங்கமைத்து, சாப்பிடுவது, பேசுவது, இசை கேட்பது போன்றவற்றை பழக்குவதுதான். இந்த இடத்தில் பணம் ஒன்றும் முதன்மையான காரணி அல்ல.”
அடுத்ததாக நான்காவது நபர் சற்றே தீவிரத்தோடு குறுக்கிடுகிறார். “நீங்கள் எல்லாவற்றையும் தவறாகப் புரிந்துகொள்கிறீர்கள். நாகரிகத்திற்கு நிச்சயமாக மிக உயர்ந்த அளவிலான அறிவுசார் மற்றும் கலைசார் மேன்மை தேவைப்படுகிறது: உதாரணத்திற்கு, லூவ் (Louvre-அருங்காட்சியகம்) நாகரிகத்தின் ஒரு ஆலயம் எனலாம்; ஏனெனில் அங்குதான் உலகின் மிகவும் மதிக்கப்படும் எண்ணற்ற கலைப்படைப்புகளை உங்களால் காண முடியும். நாகரிகம் என்பது ஒரு சமூகத்தில் எது இயல்பானது என்பதைக் குறிப்பதில்லை; மாறாக அது மிக பிரமாண்டமான, உன்னத சாதனைகளை மட்டுமே தேர்ந்தெடுத்துக் காட்டுகிறது. இவை எப்போதுமே பொது வழக்கிற்கு மாறானவை. 1960-களின் பிற்பகுதியில் வந்த கென்னத் கிளார்க்கின் (Kenneth Clark) ஆவணப்படத் தொடர் உங்களுக்கு நினைவிருக்கிறதா? அவர் நாகரிகத்தை ‘வாழ்வளிக்கும் கருத்துக்களின்’ (life-giving ideas) வரலாறு என்று தொடர்ந்து கூறிக்கொண்டிருந்தார் — அவர் நிச்சயமாக மிகவும் பிரபலமான பொதுவான கருத்துக்களைக் குறிப்பிடவில்லை; வரலாற்றிலேயே மிக நாகரிகமான இடமாக அவர் கருதியது ஊர்பினோவில் (Urbino) அமைந்த மறுமலர்ச்சிக் கால அரசவையைத்தான் (Renaissance court) — அங்கே சில டஜன் மனிதர்கள் கூடி ஒரு நேர்த்தியான எழில்மிகுந்த வாழ்க்கை முறைக்கு வித்திட்டனர்.
நாகரிகம் வீழ்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பதாகக் கருதும் மனிதர்களில் நானும் ஒருவன்: ‘மேற்கத்திய நந்தவனங்கள் மூடப்படும் நேரம் இது’; ‘விளக்குகள் அணைந்து கொண்டிருக்கின்றன.’ இவையெல்லாம் மக்களுக்குப் பாத்திரங்கள் கழுவும் இயந்திரங்களோ அல்லது மருத்துவமனைப் படுக்கைகளோ கிடைக்காமல் போய்விடுமோ என்ற கவலையின் வெளிப்பாடுகள் அல்ல; மாறாக, கலாச்சாரத்தின் மிக உன்னதமான மலர்கள், சற்றே அதிதூய்மையும், நுட்பமான மென்மையும் கொண்டவையாக இருப்பது அவற்றை தப்பிப் பிழைத்து நிலைத்திருக்க அனுமதிக்குமா என்கின்ற கவலையின் பிரதிபலிப்புகள்தான் அவை.”

இவை யாவும் நாகரிகத்தைப் பற்றிய, ஒன்றையொன்று சாராத, சமமான தர்க்க மதிப்பு கொண்ட நான்கு தனித்தனி கருத்துக்களாகக் கருதப்படலாம். சாக்ரடீஸால் ஈர்க்கப்பட்ட ஒரு சிந்தனை மரபு உண்டு; ஒரு சொல்லைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் பல்வேறு அர்த்த முடிச்சுக்களை அவிழ்த்தெடுக்க முயல்வதே அதன் நோக்கம். ‘நாகரிகம்’ போன்ற ஒற்றைச் சொல், முற்றிலும் மாறுபட்ட கருத்துக்களை குறிப்பிட சற்றும் பாகுபாடின்றி பயன்படுத்தப்படும்போது இச்சிந்தனை மரபு அவற்றை மிகவும் வருத்தத்தோடு உற்றுநோக்குகிறது. நான்கு அர்த்தங்கள், ஒரே சொல்: குழப்பம் பின்தொடர்வது நிச்சயம்தான். சிந்திப்பது என்பது ஒரு பிரித்தறியும் கலை : நீங்கள் அதன் வெவ்வேறான இழைகளைத் தனித்தனியாகப் அடையாளப்படுத்தி ஆய்வு செய்கிறீர்கள். ஒருவேளை நாகரிகம் என்பதற்கு எந்த ஒரு மைய அர்த்தமும் இல்லாமல் இருக்கலாம், எந்த சாரமுமற்று அது வெவ்வேறு வரையறைகளின் வரிசைத்தொகுப்பாக மட்டுமே எஞ்சலாம். (இந்தப் பார்வையின்படி, பிரிட்ஜெட் பொறுமையோடிருந்து, தன் கேள்விக்கான நான்கு பதில்களையும் நிதானமாக கேட்க வேண்டியிருக்கும்.)
கடந்த கோடைகாலத்தில், ஒரு வார இறுதி நாளில் நான் எனது தோழியுடன் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். நாங்கள் இந்த புத்தகத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். ‘நீ பல்வேறு நாகரிகங்களின் வரலாற்றைப் பற்றி எழுதப் போகிறாயா’? — ஒரு ஈயை விரட்டியபடி கேட்டாள்; நாங்கள் அவரது வீட்டு தோட்டத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்— ‘அல்லது ஏதேனும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை மட்டும் மையமாகக் கொண்டு எழுதப் போகிறாயா?’ நான் இவை இரண்டையுமே செய்வதாக திட்டமிட்டிருக்கவில்லை. எனது தோழியின் இந்தக் கேள்வி, சிந்தனையின் மிகவும் இயல்பான, எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு போக்கை வெளிப்படுத்தியது. ஒரு கருத்தைப் பற்றி ஆழமாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், அதுகுறித்த வரலாற்று மற்றும் சமூகவியல் தகவல்களை மேலும் மேலும் குவித்துக்கொண்டே போவதுதான் வழி என்பது அவளது எண்ணமாக இருந்தது. ஒருவேளை, இந்தத் தலைப்பையொட்டி வெளிவந்த முக்கியமான சில நூல்களை அவள் தன் அரை நினைவிலிருந்து மீட்க முயற்சிசெய்தபடி இருந்திருக்கலாம்.
உதாரணமாக, நவீன கலை வரலாற்றின் தந்தைகளில் ஒருவரான ஜேகப் பர்க்ஹார்ட் (Jacob Burckhardt) 1860-ஆம் ஆண்டில், ‘இத்தாலிய மறுமலர்ச்சிக் காலகட்ட நாகரிகம்’ (The Civilization of the Renaissance in Italy) என்றொரு புத்தகத்தை வெளியிட்டார். அதில் அவர் அக்காலகட்டத்தின் ஆழமான அடிப்படை அபிலாஷைகளை அடையாளம் காண முயல்கிறார்: தனிமனித சுயத்திற்கு வளர்ந்து வரும் முக்கியத்துவம், அரசை ஒரு கலை வெளிப்பாடாகக் காணும் போக்கு: உள்ளுக்குள் ஒன்றிணைந்த மற்றும் சுயவிழிப்புணர்வு கொண்ட அரசு. அவர் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில், ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் என்ன நடந்து கொண்டிருந்தது என்பதை மட்டுமே விரிவாக ஆராய்கிறாரே தவிர, உண்மையில் நாகரிகம் என்ற ஒற்றைக் கருத்தாக்கத்தைப் பற்றிப் பேசுவதற்கு அவரிடம் பெரிதாக எதுவும் இல்லை (அல்லது – இன்னும் துல்லியமாகச் சொல்வதானால் – அந்த ஜெர்மன் புத்தகத் தலைப்பில் இடம்பெற்ற ‘குல்டூர்’ (Kultur) என்ற சொல் ‘நாகரிகம்’ என்று தோராயமாகவே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது). மாறாக, மறுமலர்ச்சிக் கால இத்தாலி என்பது நாகரிகத்திற்கு ஒரு சுவாரசியமான உதாரணம் என்ற நியாயமான அனுமானத்தோடு தொடங்கி, அதைப் பற்றிய விவரங்களையும் அவர் நமக்கு எடுத்துரைக்கிறார்.
இதேபோன்றதொரு அணுகுமுறையை, ‘தேம்ஸ் & ஹட்சன்’ (Thames & Hudson) என்ற புகழ்பெற்ற கலைப் புத்தகப் பதிப்பகத்தார் வெளியிட்ட ஒரு பிரம்மாண்டமான நூல் வரிசைத் தொடரின் பல பெருநூல்களில்(tomes) நாம் தெளிவாகக் காண முடிகிறது. ‘மாயன் நாகரிகம்’ (Maya Civilization), ‘அமெரிக்க நாகரிகம்’ (American Civilization), ‘அங்கோர் மற்றும் கெமர் நாகரிகம்’ (Angkor and the Khmer Civilization) போன்ற தலைப்புகளைக் கொண்ட அந்தப் புத்தகங்கள் யாவும், இவ்வேறுபட்ட சமூகங்களைப் பற்றியும் அவர்களின் கலாச்சாரச் சாதனைகளைப் பற்றியும் நமக்கு மிக விரிவாக எடுத்துரைக்கின்றன; ஆனால் அவை ‘நாகரிகம்’ என்ற கருத்தாக்கத்தைப் பற்றி எங்குமே விவாதிப்பதில்லை.
ஒரு சிப்பியை முறையாக சாப்பிடப் போராடிக்கொண்டிருந்த அத்தருணத்தில், நான் என்ன செய்யப் போகிறேன், ஏன் செய்யப் போகிறேன் என்பது குறித்த ஒரு விரிவான விளக்கத்தைத் திரட்ட என்னால் இயலவில்லை. நான் செய்ய விரும்புவதெல்லாம் நாகரிகத்தின் மையக் கருத்தைப் புரிந்துகொள்வதுதான். எனவே, நான் கையாளும் உதாரணங்கள் எந்தவொரு குறிப்பிட்ட சமூகத்தின் வரலாற்றைச் சொல்வதற்கோ, அல்லது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் அதன் கலாச்சாரத்தைப் படம்பிடித்துக் காட்டுவதற்கான நோக்கம் கொண்டவை அல்ல. மாறாக, அவை வேறுபாடுகளைத் தெளிவுபடுத்தவும், கோட்பாடுகளைக் கடத்தவும் மட்டுமே உத்தேசிக்கப்பட்டவை. ஒரு குறிப்பிட்ட விஷயமோ கருப்பொருளோ முன்னிலைக்கு வரும்போது அதை பிரதிநிதித்துவப்படுத்தும் தருணங்களை மட்டுமே நான் எதிர்நோக்கியபடி காத்திருக்கிறேன்.
மதிய உணவின் போது எனது தோழி, மற்றவர்கள் நாகரிகத்தைப் பற்றி என்ன நினைத்திருக்கிறார்கள் என்பதை துப்பறியும் சுமையை என் தலைக்குள் சுமத்த முயன்றுகொண்டிருந்தார். ஆனால் என்னை இயக்குவதோ மிகவும் தனிப்பட்ட ஒரு விஷயம்: ‘நான் என்ன நினைக்கிறேன்?’. இதை வேறு விதமாகக் கூறுவதானால், மனிதர்கள் நாகரிகத்தை எவ்வாறு வரையறுக்க நேரிட்டது என்ற வரலாற்று ரீதியான கேள்வியிலிருந்து, நாம் அதை எவ்வாறு வரையறுக்க வேண்டும் என்ற தத்துவ ரீதியான கேள்விக்கு நகர நான் விரும்புகிறேன்.
வரலாற்று ரீதியான கேள்வி மிகவும் சவாலானதுதான்: மக்கள் இக்குறிப்பிட்ட சொல்லை எவ்வாறு பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதைக் கண்டறிய நீங்கள் பலவிதமான புத்தகங்களை அலசி ஆராய வேண்டியிருக்கும்; மேலும், அச்சொல் எந்தச் சூழலில் அந்த அர்த்தத்தைப் பெற்றது என்பதை மீளுருவாக்கம் செய்ய முயற்சிக்க வேண்டும். ஆனால், தத்துவார்த்த ரீதியான தேடலோ முற்றிலும் வேறு வகையான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. மற்றொரு நபர் என்ன நினைத்தார் என்பதை ஆராய்வதை விட, நாம் என்ன நினைக்கிறோம், ஏன் அப்படி நினைக்கிறோம் என்பதை தெளிவுறக் கொணர்வது இன்னும் கடினமானது. ஒரு சொல்லின் பயன்பாட்டில் உள்ள பல்வேறு மாற்றங்களைப் பதிவு செய்வதை விட, அவற்றுள் எந்த அர்த்தம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்று தீர்ப்பளிப்பது மிகவும் கடினமானது. ஆனால், இந்த கடினமான பணியே எல்லாவற்றையும் விட மிக மிக முக்கியமானது. எல்லாவற்றிற்கும் மேலாக, மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைக் கண்டறிவதில் என்ன பொருள் இருக்கிறது? அது நம்முடைய சொந்தச் சிந்தனைகளைக் கண்டறிவதற்கான ஒரு தொடக்கப் புள்ளி மட்டுமே.

தென்னவன் சந்துரு
வங்கித் துறை ஊழியரான தென்னவன் சந்துரு கலை இலக்கியம் சார்ந்த கட்டுரைகளில் ஈடுபாடுடையவர். மொழிபெயர்ப்பாளர். நவீன தமிழ் இலக்கிய வாசிப்பில் ஆர்வம் கொண்டவர்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.




















