மயிலுக்குத் துடிப்பவன் மனைவிக்குச் சுடுபவன் : இசை

பிலர் பாரியை மட்டும் பாடியவரில்லை. வேறு சில அரசர்களையும் போற்றியுள்ளார். அவர்களில் ஒருவன் திருமுடிக்காரி. மலையமான் திருமுடிக்காரி என்றும் அழைக்கப்படுபவன். கடையெழு வள்ளல்களில் ஒருவன். கபிலர் பாரி மகளிரை இவனது நாட்டில் உள்ள பார்ப்பனச் சேரியில்தான் அடைக்கலப் படுத்தியிருந்தார் என்று சொல்லப்படுகிறது.

பிறப்பால் அனைவரும் சமம். அதில் மாற்றமில்லை. ஆயினும் அதைத் தாண்டி ‘சிறப்பு’ என்கிற ஒன்று இருக்கவே செய்கிறது. ‘சிறப்பை’ அனைவருக்கும் சமமாக பங்கிட முடியாதுதான். அறிவில், ஆற்றலில், கலைகளில் சிறந்தோர் அதனதன் அளவில் போற்றப்பட வேண்டியவர்களே. ‘ வரிசையறிதல்’ என்கிற சொல் அடிக்கடி சங்கப் பாடல்களில் வருவதைக் காணலாம். அதை இப்படி விளக்குகிறது தமிழ் வளர்ச்சித் துறையின் புறநானூற்றுப் பதிப்பு..” சிறந்த புலவர்கள் வள்ளல்களிடத்துப் பரிசில் வேண்டிச் செல்லும் போது தம்முடைய தகுதியை அறிந்து அவ்வள்ளல்கள் பரிசளிக்க வேண்டும் என்று விரும்பினர். வள்ளல்களும் அதை நன்கு அறிந்திருந்தனர். இப்பண்பே ‘ வரிசையறிதல்’ எனப்படுகிறது”. ஒரு முறை திருமுடிக்காரி ‘ வரிசையறிதலில்’ பிழை செய்துவிட்டான் போல? அவன் வழங்கிய பரிசிலில் கபிலர்க்கு நிறைவில்லை. “பொது நோக்கு ஒழிமதி புலவர் மாட்டே” என்று மெல்லச் சினக்கிறார். அதாவது நானும் பிற புலவர்களும் சமமல்ல என்கிறார்.

ஒரு திசை ஒருவனை உள்ளி, நால் திசைப்
பலரும் வருவர், பரிசில் மாக்கள்
வரிசை அறிதலோ அரிதே; பெரிதும்
ஈதல் எளிதே; மா வண் தோன்றல்!
அது நற்கு அறிந்தனை ஆயின்
பொது நோக்கு ஒழிமதி, புலவர் மாட்டே! (புற; 121)

வள்ளல் ஒருவனை நாடி எல்லாத் திசைகளிலிருந்தும் இரவலர்கள் வந்து கொண்டேதான் இருப்பார்கள். எதையும் கருதாமல் ,எதையுமே ஆராயாமல் எல்லோருக்கும் வேண்டுமளவு பொருள் தந்துவிடுவது என்பது எல்லோருக்கும் எளிதே. ஆனால் பரிசில் கேட்பவன் யார்? அவன் தகுதி என்ன என்று ஆராய்ந்து அதற்கேட்ப அளிக்கத்தான் அறிவு வேண்டும். ஆகவே புலவரில் பொது நோக்கு ஒழி என்கிறார்.

கொள்ள வந்தவனின் தகுதி அறிய கொடுப்பவனுக்கும் கொஞ்சம் புலமையில் ,கவிதையில் அறிவு வேண்டுமல்லவா? ‘வாணியின் புதல்வன் ‘ என்று அவ்வப்போது எக்காளமிடும் கவிகள், சமயங்களில் ‘வாணியே நான்தான்’ என்று ஒரே குத்தாய் குத்தி டேபிளை நொறுக்குவதும் உண்டு. பாரதியின் கவிதை ஒன்று..

“…………..
ஞானாகாசத்து நடுவே நின்று நான்
“ பூமண்டலத்தில் அன்பும் பொறையும் விளங்குக!
துன்பமும் மிடிமையும் நோவுஞ்சாவும் நீங்கி
சார்ந்த பல்லுயிரெலாம் இன்புற்று வாழ்க என்பேன்!
இதனை நீ திருச்செவி கொண்டு திருவுளமிரங்கி
“ அங்ஙனே யாகுக” என்பாய், ஐயனே!”

இந்தக் கவிதையில் , கவி ஞான ஆகாசத்தில் ஏறி நின்று கொண்டு கடவுளின் எல்லா வேலைகளையும் அவரே பார்த்துக் கொள்கிறார். கடைசியில் போனால் போகிறதென்று கடவுளிடம் சின்ன தலையசைப்பை மட்டுமே கேட்கிறார்.

பாரதியும் நானும் ஒரே மொழியின் கவிகள் என்றாலும் நான் பாரதியல்ல என்பது எனக்கு உறுதியாகவே தெரியும். சேலம் சிவா லாட்ஜின் மொட்டை மாடியில், மலை நோக்கி அமர்ந்து நிகழ்ந்த நள்ளிரவுக் கொண்டாட்டத்தில் “நா ஒரு மகாகவிடா…!” என்று ஒரு முறை கர்ஜித்ததுண்டு. ஆயினும் அது ‘என்’ கணக்கில் வாராது.

எல்லோருக்கும் சமமாக பரிசில் அளிக்காதே என்று சொல்லும் கபிலர், திறன் குறைந்தோரும் பாடிப் பரிசில் பெறுவதை வெறுக்கவில்லை.

நாள் அன்று போகி, புள் இடை தட்ப
பதன் அன்று புக்கு, திறன் அன்று மொழியினும்
வறிது பெயர்க்குநர் அல்லர் நெறி கொளப்
பாடு ஆன்று, இரங்கும் அருவிப்
பீடு கெழு மலையன் பாடியோரே (புற; 124)

காரியிடம் பரிசில் பெறச் செல்ல நல்ல நாள் பார்க்கவேண்டியதில்லை. நல்ல தருணம் பார்க்க வேண்டியதில்லை. பறவைகள் காட்டும் சகுனம் சரியாக இல்லையென்று தயங்கி நிற்க வேண்டியதில்லை. அவர்கள் திறன் அற்ற மொழியில் கவிதைகள் பாடினாலும் காரி அவர்களை வெறுங்கையோடு அனுப்பவதில்லை.

‘பதம் பார்த்தல்’ நமக்குத் தெரியும். சோற்றில் பதம் பார்ப்பது போன்றே எல்லா மனிதர்களிலும் அவர்கள் பதமாகச் சமைந்திருக்கும் தருணம் என்று ஒன்று உண்டு. ‘மனிதனுக்குச் சற்று மேலே’ என்றிருக்கும் தருணம். மேலுள்ள கவிதையில்’ பதம் ‘ என்கிற சொல்’ பதன்’ என்று திரிந்துள்ளது. காரியிடம் எப்போதும் செல்லலாம் அவனிடம் பரிசில் பெற பதம் பார்க்க அவசியமில்லை.

காரி வள்ளல். உள்ளதையெல்லாம் வாரி வாரி வழங்கிவிடுபவன். அவனுக்கு என்று சொந்தமாக ஏதும் உள்ளதா? உள்ளது.. ஒரு சின்ன அளவு உள்ளது. சின்ன அளவெனில்..? அவன் மனைவியின் தோள் அளவு உள்ளது.

அவன் தன் மனைவியைத் தவிர சொந்தமாக எதையும் வைத்துக் கொள்ளவில்லை என்பதைச் சொல்ல வேண்டும் அதை ஒரு அளவாக மாற்றி உரைக்கையில் அங்கு கவிதையில் ஒரு ‘அட!’ பிறந்துவிடுகிறது.

“ ……. வடமீன் புரையும் கற்பின் மடமொழி
அரிவை தோள் அளவு அல்லதை
நினது என இலை நீ பெருமிதத்தையே “ (புற ; 122)

அவன் நாடு யாகங்கள் புரியும் அந்தணர்க்கு உரியது. அவனது பொருட்கள் அத்தனையும் இரவலர்க்கே உரியன. காரி போன்ற சிற்றரசர்கள் மூவேந்தர்களுக்கு துணையாக போர் புரியச் சென்று அவர்கள் தரும் செல்வங்களை பரிசாகப் பெற்று வந்திருக்கிறார்கள். அப்படிப் பெற்று வந்த செல்வங்கள் அனைத்தையும் இரவலர்க்கே அளித்துவிடும் கொடைச்சிறப்பு மிக்கவன் காரி.

“ …………………நின் நாடே;
அழல் புறம் தரூஉம் அந்தணரதுவே;
வீயாத் திருவின் விறல் கெழு தானை
மூவருள் ஒருவன், ‘ துப்பு ஆகியர்’ என
ஏத்தினர் தரூஉம் கூழே, நும் குடி
வாழ்த்தினர் வரூஉம் இரவலரதுவே…” (புற; 122)

‘துப்பு ஆதல்’ எனில் துணை செய்தல். ‘கூழ்’ எனில் அதற்குப் பரிசாக அளிக்கப்படும் பொருட்கள்.

அந்நாடு அந்தணர்க்கு உரியது என்று நான் சொல்லவில்லை. அந்த அந்தணப் புலவர் தான் சொல்கிறார். நான் பாட்டில் உள்ளதை ஒளிக்காது சொல்கிறேன் அவ்வளவே. ஆகவே என்னை எரித்தல் தகாது.

பேகன் கடையெழு வள்ளல்களில் ஒருவன். மயிலுக்குப் போர்வை தந்தவன் என்கிற கதைகள் பலரும் அறிந்தவை. ஆனால் அவன் தன் மனைவி கண்ணகியை விடுத்து வேறொருத்தியுடன் வாழ்ந்து வந்த கதை அதிகம் அறிய வராதது. புலவர்கள் சிலர் அவனுக்கு அறிவுரைத்துப் பாடியுள்ளனர். அவர்களில் கபிலரும் ஒருவர். கபிலர் பேகனின் மனைவி கண்ணகிக்கு இரங்கிப் பாடிய பாடல் ஒன்று புறநானூற்றில் உள்ளது

மயிலுக்குக் குளிரும் எனும்படிக்கு இரக்கம் கொண்டவனால் , மனைவிக்குக் கொதிக்கும் என்பதை அறியமுடியவில்லையா? அது அப்படித்தான். விசேஷமான ஒன்றில் ஆகச்சிறந்தவராய் விளங்கும் ஒருவர் , சாதாரண ஒன்றில் தடுமாறிச் சரிவதை நாம் காலகாலமாக பார்த்து வருகிறோம். மயிலுக்கு இரங்கி, மனைவிக்கு இரங்கா மாண்பை எந்தச் சோதனைக் கூடத்தில் இட்டு பரிசோதிப்பது? எவ்வளவு ஆய்ந்தாலும் அதில் குழப்பமான முடிவுகளே வரக்கூடும். மேலும் காமம், எதிலும் துளையிட்டுவிடும் ஒரு ராட்சத இயந்திரம்.

பசி வாட்டிய நானும் என் சுற்றமும் காட்டு வழி பல கடந்து மலை மீதுள்ள உன் வீட்டினை அடைந்தோம். ஆனால் அங்கே நீயில்லை. நாங்கள் உன் வீட்டின் முன் நின்று உனது புகழைப் பாடினோம். அதுகேட்டு குழல் இரங்கி அழுவது போல தன் முலைகள் முழுதும் நனையுமாறு நிறுத்தாமல் அழுது கொண்டேயிருந்தாளே அவள் யார்?

“ …… வாயில் தோன்றி , வாழ்த்தி நின்று
நின்னும் நின் மலையும் பாட
இன்னாது இகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள்,
முலையகம் நனைப்ப , விம்மி
குழல் இனைவதுபோல் அழுதனள் பெரிதே?” (புற; 143)

கவிதையில் அவன் மனைவி அழுத காட்சியை மட்டுமே காட்டுகிறார் கவி. வேறு பெரிய அறிவுரைகள் ஏதும் இல்லை. கண்ணீர் போதுமென்று அவர் எண்ணியிருக்கக் கூடும்.

குறவர்கள் தாமே விளைவித்து தாமே அறுத்து, தாமே உண்ணும் காட்சி ஒன்று இந்தக் கவிதையில் காட்டப்படுகிறது. அதில் ‘பிறன் மனை நாடா பண்பு’ குறிப்புணர்த்தப்படுவதாக அறிஞர்கள் சொல்கிறார்கள். ‘ இருக்கலாம்’ என்று நானும் கொஞ்சம் சந்தேகத்தோடு தலையாட்டி வைக்கிறேன்.

“மலை வான் கொள்க என, உயர் பலி தூஉய்
மாரி ஆன்று, மழை மேக்கு உயர்க எனக்
கடவுட் பேணிய குறவர் மாக்கள்
பெயல் கண் மாறிய உவகையர் சாரற்
புனத்தினை அயிலும் நாட! …..”
(புற; 143)

மலையை மேகம் சூழட்டும் என்று கடவுளை வேண்டுவர். போதுமான அளவு பொழிந்தபின் மழை நீங்கி வேறிடம் செல்லட்டும் என்று வேண்டுவர். அப்படியே ஆன பின் தங்கள் புனத்தினை அறுத்து உண்டு மகிழ்ந்திருப்பர். அத்தகைய நாட்டைச் சேர்ந்தவனே!

இக்கவிதை குறித்து ம.ரா. போ சொல்கிறார்…

“குறவர் மாக்கள் புனத்தினை உண்பர் என்பதன் குறிப்பு , அவர்கள் பாடுபட்டு விளைத்த தினையையே உண்கின்றனரேயன்றிக் கடைத் தினை அன்று என்பதாம். ‘ தம் இல் இருந்து தமது பாத்து உண்டற்று’ என்பது குறள் நெறிக் கருத்து”

அரசர்களைப் பாடாது கபிலர் பொதுவாகப் பாடிய பாடல்கள் இரண்டுண்டு. அவை ‘ மகட்பாற் காஞ்சி’ என்கிற துறையில் அமைபவை. அதாவது தன் வீட்டுப் பெண்ணை மணம் முடிக்க கேட்டு வரும் அரசனோடு அதற்கு மறுத்து பெண் வீட்டார் பகை கொள் சங்கப் பாடல்களில் சில பாடல்கள் முழுதாகவே கிடைக்கவில்லை. சில பாடல்கள் ஓரிரு அடிகள் சிதைந்து கிடைத்துள்ளன. இது போன்ற பாடல்களை முழுதும் பொருள் கொள்ள இயலாது. இந்த இரண்டு பாடல்களும் அப்படி ஓரிரு அடிகள் கிடைக்கப் பெறாதவை. பெண்ணின் பொருட்டு பெரும்போர் மூளுமோ என்கிற பதட்டம் இரண்டு கவிதைகளிலும் உள்ளது.

பெண் இற்செறிக்கப்பட்ட காட்சி காட்டப்படுகிறது.

“…………….
பாரி பறம்பின் பனிச்சுனை போலக்
காண்டற்கு அரியள் ஆகி மாண்ட
பெண்மை நிறைந்த பொலிவோடு மண்ணிய
துகில் விரி கடுப்ப நுடங்கி தண்ணென
அகில் ஆர் நறும்புகை ஐது சென்று அடங்கிய
கபில நெடுநகர்க் கமழும் நாற்றமொடு
மனைச் செறிந்தனளே, வாள் நுதல்……” (புற ; 337)

பொலிவும் , பெண்மையும் நிறைந்த அப்பெண் பறம்பு மலையின் சுனை போல் காண்பதற்கு அரியள் ஆகிவிட்டாள். தற்போது அவளது கபில நிறத்து மாளிகையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறாள். அவள் கூந்தலுக்கு ஊட்டிய அகிற்புகை வளைந்து நெளிந்து செல்வது, துவைத்துக் காய வைத்த துணி காற்றில் அலைவது போல் உள்ளதாம்.

இவளைப் பெண் கேட்டு வந்து நிற்கும் அரசனின் வீரம் எப்படிப்பட்டது? அதை எதிர்த்து நிற்கும் பெண் வீட்டார் வீரம் எத்தகையது?

முற்றிய நெல்லை கவளமாக உருட்டி உண்ணும் , சினம்மிக்க யானைப் படைகளை உடையவன் அவ்வரசன். இதோ வந்துவிட்டான்.. இங்கோ அவளுடைய தமையன்மார் போர்கள் பல கண்ட குருதி படிந்த வேலேந்தி காண்போர் அஞ்சும் தோற்றத்தில் உள்ளனர்

“………….
காய் நெல் கவளம் தீற்றி , காவு தொறும்
கடுங்கண் யானை காப்பனர் அன்றி,
வருதல் ஆனார் வேந்தர்; தன்னையர்
பொருசமம் கடந்த உருகெழு நெடுவேற்
குருதி பற்றிய வெருவரு தலையர்;” (புற ; 337)

இருபுறமும் இப்படி பகை திரண்டு நிற்க இனி அவளுக்கு மணம் ஆவதுதான் எப்படி? தேமல் படர்ந்த, யானைக் கொம்பினைப் போன்ற அவளது இளவனமுலைகளை அழுத்துவோன் யாரோ?

“யார் ஆகுவர் கொல் தாமே- நேரிழை
உருத்த பல் சுணங்கு அணிந்த
மருப்பு இளவனமுலை ஞெமுக்குவோரே? (புற ; 337)

இன்னொரு கவிதையில் பகை அரசனின் சினம்முற்றிய யானைகள் அந்த ஊரின் பருத்த மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருக்கின்றன. அவை அவ்வளவு பெரிய மரங்கள் ஆயினும் அதன் வேர்கள் தாளாது ஆடுகின்றன.

“ ………..
என் ஆவது கொல்தானே?……
விளங்குறு பராரைய ஆயினும், வேந்தர்
வினைநவில் யானை பிணிப்ப
வேர் துளங்கின, நம் ஊருள் மரனே” (புற; 347)

கபிலர் திருமுடிக்காரியைப் போற்றிப்பாடியிருக்கும் பாடல் ஒன்று உண்டு. எனக்குப் பிடித்தமானது.

நாள் கள் உண்டு , நாள் மகிழ் மகிழின்
யார்க்கும் எளிதே, தேர் ஈதல்லே;
தொலையா நல் இசை விளங்கு மலையன்
மகிழாது ஈத்த இழை அணி நெடுந்தேர்
பயன்கெழு முள்ளூர் மீமிசைப்
பட்ட மாரி உறையினும் பலவே (புற ; 123)

முள்ளூர் என்பது காரியின் நாட்டில் சிறப்பு மிக்க மலையூர்களில் ஒன்று. முள்ளூர் மலை மீது பொழியும் மழைத்துளிகளின் எண்ணிக்கையை காட்டிலும் அவன் வழங்கிய தேர்களின் எண்ணிக்கை அதிகமாம். அவன் புலவர்களுக்கு எண்ணற்ற தேர்களை வழங்குகிறான். அரசன் இப்படி தேர்கள் வழங்குவது சங்கப்பாடல்களில் அடிக்கடி சொல்லப்படும் ஒன்றுதான். ஆனால் கபிலர் அவன் எப்போது வழங்கினான் எப்படி வழங்கினான் என்பதைச் சொல்கிறார்.

காலையிலே நாட்பட்ட இனிய கள்ளை அருந்திவிட்டு, தன் சிம்மாசனத்தில் கொலு வீற்றிருக்கையில் பொங்கி வரும் பூரிப்பால் இரவலர்க்கு தேர்களை வாரி வழங்குதல் யார்க்கும் எளிதே . அதற்கு வள்ளன்மை வேண்டியதில்லை’ கள்’ மட்டுமே போதும். ஆனால் காரியோ கள்ளுண்டு களித்திராத பொழுதிலும் தேர்களை வழங்குபவன். அவனது கொடையில் தேர் வழங்குவது கள் அல்ல, மகிழ்வல்ல, பெருமிதம் அல்ல, ராஜபோகம் அல்ல அவனது தெளிந்த உள்ளம் உளமார அளிப்பவை அவை.

போதையில் நல்லவர்களாக இருப்பவர்களை, மிகமிக நல்லவர்களாக இருப்பவர்களை எனக்குத் தெரியும். ஆனால் பாவம், ஒரு மனிதர் எப்போதும் போதையிலேயே இருந்து விட முடியாதல்லவா?

தமிழர்களை ‘ இன்பத்துறையில் எளியர்’ என்றெண்ணி வருந்துகிறார் ம.ரா.போ குருசாமி . மேலும் அவர் எழுதுகிறார்….

“சங்க காலமே தமிழர் வாழ்வின் பொற்காலம்; உண்மைதான். ஆனால் அந்தக் கால வாழ்விலே கள்ளும், கணிகையும் இடம் பெற்று நாகரிக நலிவுக்கு வழிவகுத்தன என்பதையும் ஆக்கம் கருதுவோர் எண்ணிப் பார்க்க வேண்டும். “

ஆம். அய்யா நானும் அவ்வண்ணமே கருதுகிறேன். ஆனாலும் இனி வரலாற்றை மாற்றமுடியாதல்லவா?

இசை

கவிஞர் இசை தமிழில் நவீனக்கவிதைகளை எழுதி வரும் கவிஞர். மென்மையான நகையுணர்வு கொண்டவை இவருடைய கவிதைகள். உறவுகளின் சிக்கல்களையும் சமகாலத்தின் அரசியலையும் கேலி இல்லாமல் புன்னகையுடன் கூறுபவை.

நன்றி : தமிழ் விக்கி


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

1 Comment உரையாடலுக்கு

  1. வாழ்த்துக்கள் இசை. இன்னும் கொஞ்சம் கூடுதலான வார்த்தைக் கட்டுடன் எழுதினால் சாலச்சிறந்த படைப்பாகிடும். நன்றி

உரையாடலுக்கு

Your email address will not be published.

கடந்தவை

திரட்டு

சேகரம்

Go toTop

Don't Miss