மம்மர் அறுக்கும் மருந்து (16) – அவனெல்லாம் ஒரு ஆளா? : பெருமாள்முருகன்

முந்தைய பகுதிகள்1 முதல் 15 வரை

பதிப்பாசிரியர் சி. வை. தாமோதரம்பிள்ளை சிலை அருகில் பெருமாள்முருகன், சிறுபிட்டி, யாழ்ப்பாணம் (2023)

விஜயகுமார்: தமிழ்நாட்டிலுள்ள அரசுக்கல்லூரிகளின் பெயரைப் பார்க்கும்போது சிலவற்றிற்கு அரசியலில் பங்களித்த தலைவர்கள் பெயர்கள் முன்னொட்டாகச் சேர்க்கப்பட்டுள்ளன; சிலவற்றிற்கு இடம் தானமாக வழங்கியவர் பெயர் உண்டு. இப்படிப் பெயர்கள் வைப்பது அவர்களை நிலைநிறுத்தி அறியத் தூண்டுகிறது. தற்போது இவ்வழக்கம் இல்லைபோல் தோன்றுகிறதே? பெரும்பாலான கல்லூரிகள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிஎன்கிற பெயரிலேயே அழைக்கப்படுகின்றனவே?

பெருமாள்முருகன்: பெயர் எப்போதும் நமக்குப் பிரச்சினைதான். மக்கட்பெயர், இடப்பெயர் எல்லாவற்றிலும் சாதி, மதம், மொழி என அரசியல் சுவடு பதிந்திருக்கிறது. பெயர் சூட்டுவதிலும் ‘வெச்சாக் குடுமி; செராச்சா மொட்டை’ என்பது போல அரசியல் இருக்கிறது. ஒருகாலத்தில் போக்குவரத்துக் கழகங்களுக்குத் தலைவர்களின் பெயர்களைச் சூட்டியிருந்தனர். மாவட்டங்களுக்கும் அப்படியே சூட்டினர். சமூகத்திற்குப் போராடியவர்களின் அடையாளங்களாக மட்டும் பெயர்கள் இல்லை. அவற்றைச் சாதிகள் தம் அடையாளமாகச் சுவீகரித்துக் கொண்டுள்ளன. ஒருபெயரை வைத்தால் அதன் சாதி அடையாளம் காரணமாக இன்னொரு சாதி எதிர்க்கிறது. வெவ்வேறு சாதிகள் தமக்குரிய பெயர்களைக் கொண்டு வருகின்றன. தேர்தல் அரசியலில் சாதிக்குப் பெரும்பங்கு இருப்பதால் இப்பிரச்சினையை அரசியல் கட்சிகளால் எளிதாகத் தீர்க்க முடியவில்லை. ஆகவே எல்லாப் பெயர்களையும் ஒருசேர நீக்கிவிட்டனர். இப்போதும் பெயர்ப் பிரச்சினை தீரவில்லை.

கடந்த திமுக ஆட்சியின் இறுதிக்காலத்தில் கோவையில் திறக்கப்பட்ட நெடும்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயரைச் சூட்டினர். அது பெரும் விவாதத்திற்கு உள்ளானது. கோவையில் ஆதிக்கம் பெற்றவை நாயுடு, கவுண்டர் என்னும் இருசாதிகள். கவுண்டர்கள் அதிமுகவைப் பெரும்பாலும் ஆதரிப்பவர்கள் என்பதால் நாயுடு சாதியைச் சேர்ந்த ஒருவர் பெயரைச் சூட்டிவிட்டனர் எனப் பேசப்பட்டது. ‘பெயரிலேயே நாயுடு என்றிருக்கிறது. இதுதான் சாதியை ஒழிக்கும் வழியா?’ என்னும் கேள்வியும் வந்தது. தமிழ்நாட்டில் கட்டிய பாலத்திற்குத் தெலுங்கர் ஒருவரின் பெயரைச் சூட்டுவதா எனத் தமிழ்த் தேசியக் குரலும் எழுந்தது. ஒருபெயருக்குள் எத்தனை எத்தனை அரசியல் பிரச்சினைகள். இதைத் தவிர்க்கும் வழியாக அரசு கல்லூரிகளுக்குப் பெயர் சூட்டுவதை நிறுத்திவிட்டனர் என்று நினைக்கிறேன்.

1967இல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஏராளமான உயர்கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. அறிஞர் அண்ணாவின் அகால மரணம் காரணமாக அவர் நினைவைப் போற்றும் வகையில் புதிதாகத் தொடங்கிய  சில கல்லூரிகளுக்கு அவர் பெயர் சூட்டப்பட்டது. என் பணிக்காலத்தின் பெரும்பகுதியை இரண்டு ’அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி’களில் கழித்தேன். அவை அறிஞர் அண்ணாவின் இறப்பிற்குப் பிறகு கலைஞர் முதல்வராக இருந்தபோது தொடங்கியவை. வாலாஜாபேட்டை மகளிர் கல்லூரியும் கடலூர் அரசு கல்லூரியும் அண்ணாவின் பெயரால் ஆனவை. இன்னும் சில கல்லூரிகள் உள்ளன.  மற்றபடி நிலம் வழங்கியவர்கள், உதவியவர்கள் பெயர்களைச் சூட்டினர். அரிதாக இராசிபுரத்தில் ‘திருவள்ளுவர் அரசு கல்லூரி’ எனப் பெயர் அமைந்தது.

இராசிபுரத்திற்குத் திருவள்ளுவர் எப்படி வந்தார் என்பது தெரியவில்லை. அது போல பழந்தமிழ் இலக்கியப் புலவர்களின் பெயர்களை அரசு கல்லூரிகளுக்குச் சூட்டினால் நன்றாகத்தான் இருக்கும். கபிலர் அரசு கல்லூரி, ஔவையார் அரசு கல்லூரி என்றெல்லாம் அமைந்தால் நல்லது. அதிலும் குறிப்பாக ஒன்பதாம் நூற்றாண்டுக்குப் பிறகு வந்த புலவர்களின் பெயர்களைச் சூட்ட முடியாது. அவர்களின் சாதியை எப்படி எப்படியோ ஊகம் செய்துவிடுகின்றனர். சங்க இலக்கியம், அற இலக்கியம், தொடக்க காலக் காப்பியங்கள் ஆகியவற்றை எழுதிய புலவர்களின் பெயர்களைச் சூட்டலாம். அவைதீக சமயங்களாகிய புத்தம், சமணம் சார்ந்த புலவர்களின் பெயர்களைச் சூட்டலாம். சாதி தெரியாத புலவர்களின் பெயர்களைச் சூட்டலாம். என்ன செய்வது? சாதியச் சமூகத்தில் இப்படித்தான் சிந்திக்க வேண்டியிருக்கிறது.

தமிழையும் இலக்கியத்தையும் விதந்து பேசினாலும் நடைமுறையில் அவற்றை இப்படியெல்லாம் பயன்படுத்தும் பார்வை அரசியல் கட்சிகளுக்குக் கிடையாது. மிக அரிதாகவே படைப்பாளர்களின் பெயர்கள் கல்லூரிகளுக்கோ கட்டிடங்களுக்கோ சூட்டப்பட்டுள்ளன. சென்னையில் தலைமைச் செயலகத்தில் உள்ள ஒருகட்டிடம் ’நாமக்கல் கவிஞர் மாளிகை’ என்று பெயர் பெற்றிருக்கிறது. இந்தி எதிர்ப்புப் போராட்ட வீரர்களாகிய ’நடராஜன் – தாளமுத்து’ பெயரில் ஒருகட்டிடம் இருக்கிறது. எழுத்தாளர்கள், கலைஞர்கள், அறிஞர்கள் பெயர்களை எல்லாம் சூட்டலாம். அவை அடையாளமாகவும் வரலாறாகவும் அமையும்.   சாதிக் கட்டுக்குள் அடைக்க இயலாத சமகால ஆளுமைகளின் பெயர்களையும் சூட்டலாம். அதற்கு இலக்கிய உணர்வும் விரிந்த பார்வையும் தேவை. அரசியல்வாதிகளுக்கு அவை இல்லை. அப்படி வைக்கக் கோரும் அறிவும் திராணியும் நம் மக்களுக்கு இல்லை.

இப்போது தொடங்கும் கல்லூரிப் பெயர்களில் ‘கலை மற்றும் அறிவியல்’ என்று போடுகிறார்கள்.  ‘மற்றும்’ தேவையில்லாத இடைச்செருகல்.   ‘கலை அறிவியல்’ என்று போட்டாலே போதும். கலையும் அறிவியலும் என விரியும் உம்மைத்தொகை அது. தமிழ் மொழியின் இயல்பு அது. ஆங்கிலத்தில் and என்பதற்கு நிகராக ’மற்றும்’ என்பதைப் பயன்படுத்துகின்றனர். இது தமிழ்த்தன்மையே அல்ல. மொழிக்கவனம் பொதுவெளியில் இல்லை என்பதற்கு இது சான்று.  பெயர் சூட்டும் சந்தர்ப்பங்களில் வல்லுநர் சிலரின் ஆலோசனையைப் பெறுவதைப் பற்றி யோசிப்பதும் இல்லை. அரசியல்வாதிகள், அதிகாரிகள் எல்லாம் இங்கே துறை வல்லுநர்களாக இருக்கிறார்கள். அதுவும் தமிழ், தமிழிலக்கியம் என்று வந்துவிட்டால் எல்லோரும் தாம்தான் அதில் வல்லுநர், தமக்குத் தெரியாதது எதுவுமில்லை என்று நினைக்கிறார்கள்.

இன்று கிட்டத்தட்ட நூற்று எண்பதுக்கும் மேற்பட்ட அரசு கலைக்கல்லூரிகள் உள்ளன. அவற்றில் நூற்றுக்கும் அதிகமான கல்லூரிகள்  ‘அரசு கல்லூரி’ என்றே பெயர் பெற்றுள்ளன. அவற்றுக்கெல்லாம் பழந்தமிழ்ப் புலவர்களின் பெயர்களைத் தாராளமாக வைக்கலாம். சங்க காலத்தை எடுத்துக்கொண்டால் சமகாலச் சாதிச்சகதி படியாத பெயர்களாக அவை இருக்கும்.  ’தொல்காப்பியர் அரசு கல்லூரி’ என்று எப்போதோ வைத்திருக்கலாம். மொழியியலாளர்கள் வியக்கும் இலக்கணத்தை இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்னரே எழுதியவர். ஆனால் அவர் பெயர் ’தொல்காப்பியப் பூங்கா’ என்று ஒரு பூங்காவுக்குச் சூட்டப்படுகிறது. இலக்கியத்தைப் பேசி ஆட்சியைப் பிடித்த திராவிட இயக்கத்திற்கே அப்பார்வை இல்லை என்றால் பிறரிடம் என்ன எதிர்பார்ப்பது?

வி: இந்த உரையாடலின் ஓரிடத்தில் மாணவர் அரசியலால் ஆட்சிக்கு வந்த திராவிட இயக்கங்கள் அதன் பிறகு அதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டன என்று வருத்தத்தைப் பதிவு செய்திருந்தீர்கள். பெரியார், அண்ணா, காமராஜர், பாரதியார் என அரசியல் பங்களிப்பு செய்த தலைவர்களின் பெயரில் பல்கலைக்கழகங்கள் உள்ள மாநிலத்தில் மாணவர் அரசியல் அமைப்பே இல்லாதது முரணாக உள்ளது. தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம், செஞ்சிலுவைச்  சங்கம் இவையெல்லாம் இருக்கும்போது மாணவர் அரசியலமைப்புகள் கல்லூரி வளாகத்தில் பங்களிப்பை நல்குமென நினைக்கிறீர்கள்?

பெமு: நான் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு  பயின்ற சமயம். இப்போதைய +2 வகுப்புகள் வராத காலம். எஸ்.எஸ்.எல்.சி.யே பள்ளி இறுதி வகுப்பாக இருந்த அந்தக் காலத்தில் பள்ளியிலேயே மாணவர் தலைவர் இருந்தார். மாணவர் தலைவரைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடந்தது. +2 தொடங்கப்பட்ட பிறகு மாணவர் தலைவர் முறை ஒழிக்கப்பட்டுவிட்டது. நான் கல்லூரியில் பயின்ற 1980களில் அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகள் எல்லாவற்றிலும் மாணவர் பேரவைத் தேர்தல் நடைபெற்றது. தலைவர், செயலர் பதவிகள் இருந்தன. அவையும் படிப்படியாக நிறுத்தப்பட்டன. 2015 – 2016ஆம் கல்வியாண்டில் மாநிலக் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்த போதுதான் அக்கல்லூரி மாணவர் பேரவைத் தேர்தல் நிறுத்தப்பட்டது. அதற்கு முன்பே எல்லாக் கல்லூரிகளிலும் நிறுத்தப்பட்டுவிட்டன. மாநிலக் கல்லூரிதான் கடைசி என்று நினைக்கிறேன்.

ஆசிரியர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் அவர்கள் பக்கமிருந்து பேச ‘ஆசிரியர் சங்கம்’ இருக்கிறது. கல்லூரி அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்குச் சங்கம் இருக்கிறது. ஒரு கல்லூரியில் ஐந்தாறு பேர்தான் ஆய்வக உதவியாளர் இருப்பர். அவர்களுக்கு மாநிலம் தழுவிய சங்கம் இருக்கிறது. கௌரவ விரிவுரையாளர் பிரச்சினை இன்று இத்தனை விரிவாகப் பொதுவெளியில் போய்ச் சேர்ந்திருக்கக் காரணம் என்ன? அவர்களுக்கென சங்கம் இருக்கிறது. தொழிற்சங்கம் அதன் உறுப்பினர் நலன்களைப் பாதுகாக்கிறது; போராடுகிறது. பெருந்திரளான எண்ணிக்கையில் இருக்கும் மாணவர் நலனைப் பாதுகாக்கவோ போராடவோ என்ன இருக்கிறது? ஒவ்வொரு கட்சியும் ‘மாணவர் அணி’ வைத்திருக்கிறது. அது சிலர் பதவி பெறவும் தம் கட்சிக்கு ஆள் சேர்க்கவும் உதவும் வேலை. அவையும் மாநில அளவில் இருக்கின்றன. இன்று பலவகைக் கல்வி நிறுவனங்கள் உள்ளன. ஒவ்வொரு வகை நிறுவனத்திலும் ஒவ்வொரு வகைப் பிரச்சினை. அவற்றால் பாதிக்கப்படுவோர் மாணவர்தான். மாணவர் சார்பாகக் குரல் எழுப்ப எந்த அமைப்பும் இல்லையே.

ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் மாணவர் அமைப்பு செயல்படுமானால் அவர்கள் நலனை அவர்களே பாதுகாத்துக் கொள்வார்கள். தனியார் பள்ளி ஒவ்வொன்றும் கட்டண விவரத்தை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று இன்றைய பள்ளிக் கல்வி அமைச்சர் கூறுகிறார். அறிவித்தார்களா இல்லையா, அறிவித்தவை சரியாக இருக்கின்றனவா, யாரிடமாவது கூடுதல் கட்டணம் வசூலிக்கிறார்களா என்பதை எல்லாம் மாணவர் அமைப்பு எளிதாகக் கண்காணித்து விடுமே. ஒரு கட்டணத்தில் பிரச்சினை இருக்கிறது என்றால் மாணவப் பிரதிநிதி நேரடியாகச் சென்று நிர்வாகத்திடம் விளக்கம் கேட்க முடியுமே. ஆசிரியரோடு மாணவருக்குப் பிரச்சினை என்றால் மாணவர் சார்பாகப் பேச யார் இருக்கிறார்கள்? மாணவர்களுக்கு ஒன்றும் தெரியாது, இளவயது, அனுபவம் இல்லை என்றெல்லாம் சொல்லிக் கொண்டு அவர்கள் மீது பலவிதமான அடக்குமுறைகளையும் சுரண்டலையும் செய்கிறோம். அவர்களுக்கென ஒரு அமைப்பு இருந்தால் இவற்றில் பெருமளவு குறையும்.

மாணவருக்கும் ஆசிரியருக்கும் மாணவருக்கும் நிர்வாகத்திற்கும் பாலமாக விளங்குவது மாணவர் அமைப்புத்தான். இவையல்லாமல் நாட்டு நடப்பை மாணவர் புரிந்துகொள்ளவும் அரசியலைக் கற்றுக் கொள்ளவும் மாணவர் அமைப்புத்தான் உதவும். கேரளத்தில் மாணவர் அமைப்புகள் வலுவாகச் செயல்படுகின்றன. அவை வாசிப்பு இயக்கம் நடத்துகின்றன. ஆண்டு விடுமுறையில் கலை இலக்கியம் சார்ந்து, அரசியல் கோட்பாடுகள் சார்ந்து பயிலரங்குகளை ஏற்பாடு செய்கின்றன. அவற்றில் எத்தனையோ விஷயங்களை அவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். திருவனந்தபுரத்திலும் இடுக்கியிலும் நடைபெற்ற இத்தகைய பயிலரங்குகளுக்குச் சிறப்பு விருந்தினராகச் சென்றிருக்கிறேன். பெருந்தலை என்று ஒருவரையும் பார்க்க முடியாது. ஏற்பாட்டின் சகல அம்சங்களையும் மாணவர்களே முன்னின்று செய்கிறார்கள். குழுக்களாகப் பிரித்துக்கொண்டு ஒவ்வொரு வேலையையும் அத்தனை திட்டமிட்டுச் செய்கிறார்கள். ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்வது அத்தனை எளிதானதா? அதை மாணவர்கள் செய்கிறார்கள் என்றால் அதன் மூலம் ஏராளம் கற்றுக் கொள்கிறார்கள் என்று அர்த்தம். சுயஒழுங்கு, சக மாணவர்களுடன் இணைந்து பழகுதல், ஒரு பிரச்சினையை அணுகும் முறை, தலைமைப் பண்பு என்று எத்தனையோ விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும். அமைப்பாக மாணவர்கள் திரளவில்லை என்றால் இதுவெல்லாம் கிடைக்குமா?

கேரளத்து ‘இந்திய மாணவர் சங்கம்’ நடத்திய நிகழ்வுகளிலும் பங்கேற்றிருக்கிறேன். பெரியவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் கிடைக்காத நிறைவு இவற்றில் கிடைத்திருக்கிறது. பெங்களூரில் உள்ள அசீம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் இணைந்து ‘சாவித்திரி அம்பேத்கார் பண்பாட்டு மையம்’ என்னும் அமைப்பை நடத்துகின்றனர். அதன் நிகழ்வு ஒன்றில் பங்கேற்கச் சென்றேன். என் உரையும் மாணவர்களுடன் கலந்துரையாடலும் என அமைந்திருந்த அந்நிகழ்வால் பெரிதும் உற்சாகம் பெற்றேன். அப்படியான அமைப்புகள் ஒவ்வொரு நிறுவனத்திலும் இருந்தால் மாணவர்களின் திறன்கள் வெளிப்படும்; வளரும். வாசிப்பு வலுப்படும். சமூகப் பிரச்சினைகளில் பார்வை பெறுவார்கள். மாணவர் அமைப்பு இல்லை என்றால் வேறு எங்கே இவை கிடைக்கும்? வகுப்பறைகளில் நிச்சயம் கிடைக்காது.

அசீம் பிரேம்ஜி பல்கலைக்கழக மாணவர்களுடன் பெருமாள்முருகன் (2025)

மாணவர்கள் ஒருவிஷயத்தை எடுத்தால் அதில் ஆழமாகக் காலூன்றி நிற்பார்கள். அதுதான் அரசுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பிரச்சினையாக இருக்கிறது. தமிழ்நாட்டில் 1965இல் நடைபெற்ற ‘இந்தி எதிர்ப்புப் போராட்டம்’ மாணவர்கள் முன்னெடுத்தது. அதன் முகமாக விளங்கித் திமுக ஆட்சியதிகாரத்தைப் பெற்றது. அஸ்ஸாமில் மாணவர் போராட்டத்தின் மூலம் மாணவர்களே ஆட்சியதிகாரத்தைப் பெற்றதும் சமகால வரலாறுதான். மாணவர் அமைப்புகள் இருந்தால், அவை வளர்ந்தால் ஆட்சியதிகாரம் வரைக்கும் வந்துவிடுவார்கள் என்னும் அச்சத்தின் காரணமாக அவற்றை அரசு முடக்க நினைக்கிறது.  

வி: மாணவர் இயக்கங்களைத் தடை செய்வதற்கு முக்கியமான காரணமாக வளாகத்தில் நடைபெறும் வன்முறைச் செயல்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. மாணவ அரசியலை அனுமதித்தால் வகுப்பிற்கு வருவதில்லை, படிப்பில் இருந்து கவனம் விலகி விடுகிறது போன்ற குற்றச்சாட்டுகளெல்லாம் வைக்கப்படுகின்றனவே? இதை ஆரோக்கியமயமாக்க என்னென்ன மாதிரியான நடவடிக்கைகள் செய்ய முடியும் என நினைக்கிறீர்கள்?

பெமு: என்ன வன்முறை? மாணவர் தேர்தல் நடந்தால் அரசியல் கட்சிகளின் அதீதத் தலையீடு இருக்கிறது. ஆளுங்கட்சியின் உள்ளூர் பிரமுகர், மாவட்டச் செயலர், எம்.எல்.ஏ., அமைச்சர் ஆகியோர் செல்வாக்கின் வெளிப்பாட்டுக் களமாக மாணவர் தேர்தலைப் பார்க்கின்றனர். எதிர்க்கட்சி அதற்குச் சளைத்ததா? அவர்களும் சமமாகக் களத்தில் இறங்குகின்றனர். ஆட்சியதிகாரப் போட்டி பிரதிபலிக்கும் களமாக ஒருகல்லூரித் தேர்தல் மாற்றப்படுகிறது. மாணவர் தேர்தலுக்கு அரசியல் கட்சியினர் நிதி வழங்குகின்றனர். பிரச்சாரம் செய்கின்றனர். அதைத் தங்கள் கௌரவப் பிரச்சினையாக மாற்றிக் கொள்கின்றனர்.

ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் இளங்கலை படித்தேன். அப்போது மூன்றாண்டும் தேர்தல் நடைபெற்றது. அதிமுக ஆட்சியில் சட்டமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்து இப்போது திமுகவில் இருக்கிறாரே, தோப்பு வெங்கடாசலம், பெருந்துறைப் பகுதியைச் சேர்ந்த அவர்தான் மாணவர் பேரவைச் செயலராக ஓராண்டும் தலைவராக ஓராண்டும் தேர்வு பெற்றுப் பதவி வகித்தார். அப்போதே அதிமுக ஆதரவு பெற்றுத்தான் போட்டியிட்டார். எல்லா மாணவர்களையும் ‘மாப்பிள மாப்பிள’ என்று முறை வைத்து அழைத்துக் கவர்ந்துவிடுவார். அப்போது அவருக்கு  ‘மாப்பிள்ளை வெங்கடாசலம்’ என்றே பெயர் இருந்தது.

தோப்பு வெங்கடாசலம் (படம் : இந்து தமிழ் திசை) 

அப்போது முக்கியமாக இருந்த ஈழப்பிரச்சினை போன்றவற்றில் மாணவர் போராட்டத்தை முன்னெடுத்தனர். அதில் எங்கள் கல்லூரியும் பங்கேற்றது. மாணவர் பேரவையே வழிநடத்தியது. வன்முறை எதுவும் நடக்கவில்லை. வென்றவர், தோற்றவர் இடையே பகையுணர்ச்சியை உருவாக்கி அதை அணையாமல் பாதுகாக்கும் வேலையைக் கட்சியினர்தான் செய்வர். அவர்களால் தான் வன்முறை உருவாகும். மாணவர் பேரவைத் தேர்தலில் கட்சியினர் ஈடுபடும் எல்லை பற்றி வரையறை வேண்டும். அன்பளிப்புப் பொருட்கள் கொடுத்தல், வேட்பாளரைக் கடத்துதல் என்பவை எல்லாம் கடுமையாகத் தடை செய்யப்பட வேண்டும். தேர்தல் நடைமுறையில் கல்லூரி நிர்வாகத்திற்குக் கட்சித் தலையீடு இல்லாத முழுச்சுதந்திரம் வேண்டும். அப்படி நடந்தால் மாணவருக்கு இடையே வன்முறை எல்லாம் நடக்க எந்த வாய்ப்பும் இல்லை.

வி: தோப்பு வெங்கடாசலம் போல மாணவர் அமைப்புகளில் இருந்து அரசியல்வாதி ஆனவர்கள் சிலரைப் பற்றிச் சொல்ல முடியுமா? அவர்களின் செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?

பெமு: திமுக, அதிமுக ஆகிய கட்சிகளில் சட்டமன்ற உறுப்பினர்களாகவும் அமைச்சர்களாகவும் பதவி வகித்த பலர் மாணவர் அமைப்புகளில் இருந்து வந்தவர்கள். 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்ற மாணவர் தலைவர்களில் ஒருவர் எழுத்தாளர் பா. செயப்பிரகாசம். செய்தி மக்கள் தொடர்புத்துறையில் உச்சப் பதவி வரை வகித்த அவர் ஒருமுறை என்னிடம் சொன்னார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்தி எதிர்ப்புப் போராட்ட மாணவர் தலைவர்களுக்கு இருவாய்ப்புகளை வழங்கியது. ஒன்று அரசியலுக்கு வருதல். இன்னொன்று அதிகாரப் பதவி பெறுதல். காளிமுத்து, துரைமுருகன் முதலியவர்கள் அரசியலைத் தேர்ந்தெடுத்தார்கள். பா.செயப்பிரகாசம் போன்றவர்கள் அதிகாரப் பதவியைத் தேர்வு செய்தார்கள். ஒரு கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த பா.செ. அதிகாரியானார்.

பா.செயப்பிரகாசம் இணையதளத்திலிருந்து

பிற்காலத்திலும் பல மாணவர் தலைவர்கள் அரசியலுக்கு வந்தார்கள். தோப்பு வெங்கடாசலம் நான் நேரில் பார்த்த ஒருவர். நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஒன்றிய அமைச்சராகவும் பதவி வகித்த செ.காந்திச்செல்வன் நாமக்கல் கல்லூரியில் மாணவர் தலைவராக இருந்தவர். அதிமுக, திமுக இரு ஆட்சிகளிலும் பிரபலமாக விளங்கிய, விளங்கும் செந்தில் பாலாஜி கரூர் கல்லூரியின் மாணவர் தலைவராக இருந்தவர். நாமக்கல் நகராட்சித் தலைவராகப் பதவி வகித்த கரிகாலனும் மாணவர் தலைவர். எனக்குத் தெரிந்தவர்கள் இவர்கள். இன்னும் நுணுகிப் பார்த்தால் தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் பலர் இருப்பர்.

மாணவர் தலைவராக இருந்து அரசியலுக்கு வரும் போக்கு 1990களில் படிப்படியாக முடிவுக்கு வந்துவிட்டது. அதற்குப் பல காரணம் இருப்பினும் முக்கியமானதாக நான் கருதுவது கட்சிகளின் வாரிசு அரசியல்தான். தலைமையில் இருக்கும் வாரிசுகளைப் பற்றியே பெரிதும் பேசுகிறோம். அடிமட்டம் வரைக்கும் வாரிசு அரசியல் இருக்கிறது. அமைச்சராகவோ சட்டமன்ற உறுப்பினராகவோ ஒருவர் இருந்தால் அவரைத் தொடர்ந்து அவரது வாரிசுகள் அரசியலுக்கு வருவதும் பதவி பெறுவதும் இயல்பு என்றாகிவிட்டது. தம் வாரிசை அரசியலுக்குக் கொண்டு வர விரும்பும் அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பாக இருந்தது மாணவர் இயக்கங்கள்தான். எந்தப் பின்புலமும் இல்லாத ஒருவர் கல்லூரி ஒன்றில் மாணவர் தலைவராக இருந்து துடிப்புடன் செயல்பட்டுப் பல போராட்டங்களில் முன்னின்று செல்வாக்குப் பெற்றுப் பொதுஅரசியலுக்கு வருவார். எதிலும் ஈடுபடாத வாரிசுக்கும் செயல்பாட்டுத் திறன் கொண்ட மாணவருக்கும் இடையில் போட்டி வரும்போது என்ன செய்வது?  மாணவர் அமைப்புகளில் இருந்து வருபவர்களை அரசியல்வாதிகளால் எளிதாகக் கையாள முடியவில்லை. ஆகவே  ’மாணவப் பருவத்தில் படிக்க வேண்டுமே தவிர அரசியலில் ஈடுபடக் கூடாது’ என்னும் கருத்தைத் திட்டமிட்டுப் பரப்பி மாணவர்களை வன்முறையாளர்களாகச் சித்திரித்து மாணவர் அமைப்புகளை ஒழித்தனர். பிறகு எங்கிருந்து அரசியல் தலைவர்கள் வர முடியும்? வாரிசாக இருந்தால் தான் வர முடியும் என்றாகிவிட்டது.

வாரிசுகளை மாணவர் தலைவராக்கி அதன்பின் அரசியலுக்குக் கொண்டு வரலாம் என்றால் வசதி வந்த பிறகு தம் பிள்ளைகளை வசதி குறைவான அரசு கல்வி நிறுவனங்களில் படிக்க வைப்பார்களா? 1990களுக்குப் பிறகு சுயநிதிக் கல்வி நிறுவனங்கள் பெருகிவிட்டன. அவற்றின் கட்டமைப்பு, கட்டுப்பாடு, கற்பித்தலோடு அரசு நிறுவனங்களை ஒப்பிட முடியாது. சுயநிதிக் கல்வி நிறுவனங்களுக்கோ வெளிநாட்டுக்கோ அனுப்பிப் படிக்க வைப்பது அரசியல்வாதிகளின் வழக்கமாகிவிட்டது. அப்படிப் படித்து வருபவர்கள் நேரடியாக அரசியலுக்கு வர ஆரம்பித்தார்கள். ஒரு அரசியல்வாதிக்கு இரண்டு மூன்று பிள்ளைகள் இருந்தால் யாருக்குக் கல்வி சரியாக வரவில்லையோ அவரை அரசியலில் ஈடுபட வைப்பதும் உண்டு. எப்படியோ குடும்பத் தொழிலாக அரசியல் ஆன பிறகு மாணவர் தலைவர்கள் தொந்தரவுதானே?

இன்னொரு முக்கியமான காரணம் மாணவர் தலைவராக இருந்து அரசியலுக்கு வருபவர்களில் பெரும்பான்மையோர் பணபலம் அற்றவர்கள். மாணவர் தேர்தலில் நின்று வெற்றி பெறவே அரசியல்வாதிகளின் நிதி உதவியை எதிர்பார்ப்பவர்கள். அப்படி நிதி உதவி பெற்று மாணவர் தலைவரானவர்கள் பின்னர் அரசியல்வாதிகளுக்குக் கையாளாகத்தான் இருக்க முடிந்தது. பொதுத்தேர்தலில் ஈடுபட வேண்டுமானால் பெருந்தொகை வேண்டும். வேட்பாளர் தேர்வுக்கு நேர்முகம் செய்யும் போது ’எத்தனை கோடி செலவிட முடியும்?’ என்பது முக்கியமான கேள்வியாக இருப்பதை நாம் அறிவோம். சாதாரணக் குடும்பத்திலிருந்து வரும் ஒரு மாணவர் தலைவர் பல கோடிகளுக்கு எங்கே செல்வார்? அப்படிச் சிலரை நம்பிவிட்டால் தாமே மொத்தச் செலவுக்கும் பணம் கொடுத்துத் தேர்தலில் நிற்க வைப்பது ஜெயலலிதாவின் வழக்கம். அது விதிவிலக்குத்தானே.

அரசியல் குடும்பத் தொழில் என்றாகி வாரிசுகள் அதில் ஈடுபடுவது வழக்கமானதாலும் தேர்தலில் நிற்பவருக்குப் பெருமளவு பணபலம் இருக்க வேண்டும் என்பதாலும் மாணவர் அமைப்புகளில் இருந்து அரசியலுக்கு ஆட்கள் வருவது நின்று போயிற்று. இல்லை, தடுத்துவிட்டனர் என்றே சொல்லலாம். ஜனநாயகத்தில் சாதாரணவர்கள் எப்படித்தான் அதிகாரத்தைப் பெறுவது? இன்று தமிழ்நாட்டில் ஆட்சியதிகார மாற்றம் நடந்திருப்பதை எப்படிப் புரிந்துகொள்வது என்று தெரியாமல் பலரும் குழம்புகின்றனர். மாணவர்கள், சாதாரணவர்கள் பார்வையில் இருந்து பார்த்தால் கூடுதலாகப் புரிந்துகொள்ள வாய்க்கும் என்று நினைக்கிறேன்.

வி: மாணவர் இயக்கங்கள் மாணவர்களின் பிரச்சினைகளை முன்னெடுக்கின்றன. உதாரணமாக தேர்வுக் கட்டணம் அல்லது பருவக் கட்டண உயர்வு, பேருந்து வசதியின்மை, முறைகேடுகளுக்கு எதிரான போராட்டங்களைச் சொல்லலாம். ஒரு வகையில் இவர்கள் விசிலூதிகள். அமைப்பின் குறைகளைச் சுட்டுவார்கள் என்பதாலும்  நிர்வாகங்கள் விரும்புவதில்லையா?

பெமு: அதுவும் ஒருவகையில் உண்மைதான். அரசுக்கு எது முதன்மைப் பிரச்சினை? சட்டம் ஒழுங்குதான். எந்த அரசும் போராட்டத்தை விரும்புவதில்லை. போராட்டம் தேவையில்லாத வகையில் ஆட்சி நடத்த வேண்டும் என்று நினைக்காமல் போராட்டத்தை ஒடுக்கிச் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றிவிடலாம் என்று நினைக்கின்றன. மாணவர் போராட்டத்தை அப்படி ஒடுக்கிவிட முடியாது. ஆளுங்கட்சி விசுவாசிகளாக எல்லா மாணவர்களும் இருக்க மாட்டார்கள். மாணவர் பிரச்சினைகளுக்கு மட்டுமல்லாமல், கல்விப் பிரச்சினைகள், பொதுப்பிரச்சினைகளுக்கும் மாணவர்கள் போராடுவார்கள். 1980களில் விலைவாசி உயர்வு, இந்தி எதிர்ப்பு உட்படப் பல பிரச்சினைகளுக்கு உடனுக்குடனே எதிர்ப்பு வந்தது மாணவர்களிடம் இருந்துதான். ஈழப் போராட்டம் இங்கே இத்தனை கவனம் பெற்றமைக்கும் மாணவர் போராட்டம் முக்கியமான காரணம். மாணவர் போராட்டம் என்பது சங்கிலித் தொடர். முதல்நாள் சில கல்லூரிகளில் போராட்டம் நடந்தால் அதைத் தொடர்ந்து அவ்வாரம் முழுவதும் வெவ்வேறு இடங்களில் போராட்டம் நடக்கும். கல்லூரியில் வகுப்புகளே நடைபெறாத அளவு போராட்டம் நடந்ததும் உண்டு. அது அரசுக்கும் சரி, அரசியல்வாதிகளுக்கும் சரி, தலைவலி தானே.

கல்லூரி நிர்வாகம், அது அரசாக இருந்தாலும் சரி, தனியாராக இருந்தாலும் சரி, மாணவர் அமைப்பாகத் திரள்வதை ஏற்காது. தன்னிச்சையாக நிர்வாகம் செயல்படுவதற்கு எதிரானது மாணவர் அமைப்பு. மாணவர் சேர்க்கையில் ஒருபிரச்சினை நடந்தால் அதை முதலில் தட்டிக் கேட்பது மாணவர் அமைப்பாகவே இருக்கும். அதன் மூலமாகவே வெளியுலகுக்குத் தெரியவரும். ஒருகட்டத்தில் மாணவர் தலைவர்களின் பரிந்துரைக்குச் சில இடங்களை ஒதுக்கி மோசடிகளில் அவர்களுக்கும் நிர்வாகம் பங்கு தர முன்வந்தது. மாணவர் தலைவர் சொல்லும் இருவருக்கு இடம் வழங்கிவிட்டால் அதன்பின் என்ன செய்தாலும் அவர் வந்து நியாயம் கேட்க முடியுமா? அந்தத் தார்மீக வலுவை இழந்துவிடுகிறார் அல்லவா? வாக்குக்குப் பணம் பெறுபவர்களாக மாற்றி மக்களையும் ஊழலில் பங்காளர்களாக மாற்றினார்களே, அப்படித்தான்.

மாணவர் தலைவர்களைச் சமாதானமாக வைத்துக்கொள்வது எல்லாச் சமயத்திலும் முடியாது. எல்லாத் தலைவர்களும் அப்படி இணங்கவும் மாட்டார்கள். மாணவர் பிரதிநிதித்துவமே இல்லாமல் செய்துவிட்டால் நிர்வாகத்தைக் கேள்வி கேட்க யாரும் இருக்க மாட்டார்கள். அதைத்தான் நிர்வாகம் விரும்பும். நான் கல்லூரி முதல்வராக இருந்தபோது ’இந்திய மாணவர் சங்கம்’ அமைப்பிலிருந்த சில மாணவர்கள் என்னைச் சந்திக்க வருவார்கள். அவர்கள் கோரிக்கையைக் கேட்பேன். முடிந்ததை நிறைவேற்றித் தருவேன். முடியாததை விளக்கம் சொல்லிப் புரிய வைப்பேன். மாணவர் சங்க மாணவர்களோடு நான் இணக்கமாக இருப்பதைச் சக ஆசிரியர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.  ’அவன் சொல்வதை எதற்குக் காது கொடுத்துக் கேட்க வேண்டும்?’ என்பார்கள். ’அவனெல்லாம் ஒரு ஆளா?’ என்று கேட்ட ஆசிரியர் உண்டு. அரசியலையே மாற்றிய மாணவர்களை ’ஒருஆளா?’ என்று கேட்கும் நிலை வந்திருக்கிறது.  

              தொடரும்

விஜயகுமார்

வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.  தற்போது டோக்கியோ அறிவியல் நிறுவனத்தில் (Institute of Science, Tokyo) ஆய்வாளராக உள்ளார். நவீனத் தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் உள்ளவர். தமிழிலிருந்து மலையாளத்துக்கு கவிதைகள் மொழிபெயர்த்துள்ளார்.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

உரையாடலுக்கு

Your email address will not be published.

திரட்டு

சேகரம்

Latest Posts

Go toTop

Don't Miss