கண்டராதித்தன் கவிதைகள்

மைலி

பெண்ணையின் தலைமதகு நிலத்திலிருந்து
பிரியும் ஒற்றையடிப்பாதை வழியாக
வெகுதூரத்தில் உள்ளது வீடு
பசுக்களும்,கிடாரிகளும்
குடிசைக்கு வெளியே பட்டியில்
மடக்கிய உறவாயிருக்கிற அம்சம்
கானல் ஆடும் பகலேயென்றாலும்
ஆலமரக்கிளைகளின் பறவைச் சப்தங்களால்
நண்பகலும் கூடுதல் கிறக்கமாகயிருக்கும்
ஆடுகள் மேய்க்க வந்த மைலி தன்
வாஞ்சையாலே எனக்கு இணக்கமானாள்
ஒருநாள் அந்தியில் இருசம்பா சிப்பங்கள்
உரியடுக்கு பெரிய சால் நிறைய கம்புடன்
குடிசைக்குள் வந்ததால் ஒண்டிக்கொண்டோம்.
சதா தவிட்டுக்குருவி பனங்காடை
உப்புக்குருவி குறிசொல்ல
ஒருநாள் இருகையளவு
ஏக்கத்தை பட்டிக்கு வெளியே வீசினாள் மைலி
அது எருதின் மீதிருந்த கரிச்சானை விரட்டிக்கொண்டு
போன பெண்மீது பட்டுத் தெறிக்க
அவள் இரண்டுமுறை ஓவ்…என சப்தமிட்டு
சிரித்துக்கொண்டே போனாள்
மதகுத் நீரை மடக்கிவிட்டு நஞ்சையில்
கால்வைத்து நாற்று நடும் பெண்
கயிறுபிணைக்கும் பிறபகலில் மைலிக்கு
வெற்றிலை வைத்து கொடுத்தாள்
நீங்கள் நம்ப மாட்டீர்கள்
என் கண்மணியின் படுக்கையிலிருந்து
பதினேழு குழந்தைகள் வெளியேறின.
தட்டுத் தடுமாறிக்கொண்டிருந்த வாழ்வை
வாட்டசாட்டமான மைலி இணக்கமாக
இருக்கவைத்தாள்
நான் குளிர்ந்த இரவுகளை,
வெளிர்ந்த நிலவு நாட்களை
கதகதப்போடு வைத்துக்கொள்ளவும்
ஆற்றுப்பாசனத்தின் ஓயாத
சப்தங்களுடன் இருக்கவும்
கற்றுக்கொண்டேன்
வரப்புயர நீரோடுகிறது
மென்காற்று சிலிர்க்கிறது
தூரத்தே இருளில் தெரியும்

குன்று,கோபுரம் குடிசைகள் இந்த வாழ்வை
இவ்வாறே வாழச்சொல்லியிருக்கிறது
நம்பமாட்டீர்கள் நீங்கள் அவ்வளவு ருசியாய்
இருக்கிறது இந்தக் கனவும் இந்த வாழ்வும்.

(பழனிவேள் நினைவுகளுக்கு)

000

1
என் கண்களுக்கு மங்கலான
உயரத்திலிருந்து நோட்டமிடும்
கழுகிற்கு பசி
எனக்கும் நல்ல பசி
கழுகு தனித்திருக்கிறது
நானும் தனித்திருக்கிறேன்
மர உச்சியில்
அதற்கொரு கூடு,குடும்பம்,
குட்டிகள் இருக்கக் கூடும்
எனக்கும் ஊருக்குள் வீடிருக்கிறது.
சதா இறைச்சிக்காக
வேட்டையாடும் அக்கழுகை
எனக்கு தெரியும்.
ஏற்கனவே
வேட்டையாடப்பட்டவன்
என்பதால் என்னையும்
என் வீட்டையும்
கழுகிற்குத் தெரியாது.

2
நீங்கள் கழுகைத் தான்
சொன்னீர்களா
ஆம் எனக்கு
கழுகாகத்தான் தெரிந்தது.

    000

    நன்றி அறிவித்தல்

    மெய்யன்பர்களே, தகைசால் பெருமக்களே
    மற்றும் சாதாரண பொதுஜனங்களே
    உங்கள் அனைவருக்கும் வணக்கம்
    ”இந்தவாழ்வில்” என்பது எனக்கு
    கொடுக்கப்பட்டுள்ள தலைப்பு
    ஆகவே இந்த வாழ்வில்
    வளர்ந்த பிறகுதான் நாம் எவ்வளவு பேருக்கு
    நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்பது தெரிகிறது
    படிக்க வைத்தவர்கள்
    வேலைக்கு வழிகாட்டியவர்கள்
    சிபாரிசு செய்தவர்கள்
    தொழில் செய் என்றவர்கள்
    ஒன்றாக இயங்கலாம் என்றவர்கள்,
    ஒன்றுகூடும்போதே பிரிந்துபோனவர்கள்
    இலக்கியம் படி என்றவர்கள்
    அனுபவங்களைச் சேகரி என்றவர்கள்
    குறுந்தொகையை மேற்கோள் காட்டியவர்கள்
    புறநானூற்றை அகநானூற்றை அன்பளிப்பாகக் கொடுத்தவர்கள்
    காரில் உயர்ரக மதுவிடுதிக்குக் கூட்டிப்போனவர்கள்
    தொலைதூரக் கோவிலுக்குக் கூட்டிப்போனவர்கள்
    புருஷனுக்குத் தெரியாமல் படுக்கைக்கு வந்தவர்கள்
    படுக்கைக்கு வந்ததுபோலயில்லாமல்
    இடைவெளியுடன் பழகுபவர்கள்
    கடன் கொடுத்தவர்கள்
    கறாராகக் கொடுக்க மறுத்தவர்கள்
    கூடவே இருந்து கழுத்தறுத்தவர்கள்
    தூரச் சென்றும் கழுத்தறுப்பவர்கள்
    என்னால் கழுத்தறுபட்டவர்கள்
    என்னை மன்னித்தவர்கள்
    காட்டிக்கொடுப்பவர்கள்,கூட்டிக்கொடுப்பவர்கள்
    கூட்டத்தோடு கூட்டமாக நிற்கவைத்து
    மாவட்ட மந்திரியிடம் அறிமுகப்படுத்தியவர்கள்
    ஒன்றியக்குழுக் கூட்டந்தோறும்
    குவார்ட்டரும் பிரியாணியும் வாங்கிக்கொடுத்தவர்கள்
    நம்முடன் நண்பரின் வீடு குறித்து புறம் சொல்பவர்கள்,
    நண்பருடன் நம்வீடு குறித்து புறம் பேசுபவர்கள்
    நடுத்தெருவில் விட்டவர்கள்
    நடுத்தெருவிற்கு வந்தவர்கள்
    முன்னேறி கடனடைத்தவர்கள்
    ஊரைத் தலைமுழுகிப்போனவர்கள்,
    ஊர்முக்கியஸ்தர்கள்,ஊர்முக்கியஸ்தர்களாக
    தம்மைக் கருதிக்கொள்பவர்கள்
    பட்டும் படாமல் இருப்பவர்கள்
    பாசாங்கு ஆன்மீகவாதிகள்

    நம்மை பிடிக்காத
    எதிர்வீட்டு,பக்கத்துவீட்டுக்காரர்கள்
    உறவினர்கள்,தானப்பிரபுக்கள்,
    இலவச கண்சிகிச்சை சங்கத்தினர்கள்
    பக்தசேவா சங்கத்தினர்கள்
    ”அடாவடிடா எங்கள் தலைவர்” சங்கத்தின்
    வாலிபால் பேட்மின்டன் கிரிக்கெட்
    கிளப் இளைஞர்கள்,கிழடுகள்
    கிடந்துபோகட்டும் என விட்டிருக்கும்
    சாதிவெறியர்கள்,கட்சிக்காரர்கள்,காலிகள்
    பொறுக்கிகள்,ரவுடிகள்,அன்பர்கள்,
    நண்பர்கள்,குடும்பஸ்திரீகள்,சம்சாரிகள்
    உள்ளிட்டோருக்கு இந்த வாழ்வில்
    என்ற தலைப்பில் என் நன்றிகள் பற்பல.

    000

    கண்டராதித்தன்

    நவீன தமிழ் கவிஞர்களில் மரபோடு சார்ந்த கவிதைளை எழுதும் கவிஞர். இவருடைய கவிதைகள் பெரும்பாலும் பக்தி மரபுகளையும் தொன்மங்களையும் சார்ந்து எழுதப்பட்டுள்ளன. தமிழ் மரபின் பண்பாட்டுச் சித்திரங்கள் ஊடுருவும் கவிதை வெளி இவருடையது என்று கவிதைச்சூழலில் கருதப்படுகிறது.

    தமிழ் விக்கியில் 


    Discover more from

    Subscribe to get the latest posts sent to your email.

    உரையாடலுக்கு

    Your email address will not be published.

    திரட்டு

    சேகரம்

    Latest Posts

    Go toTop

    Don't Miss