
கொலைக் கல்
வீதி என்னுடையதல்ல.
இடைமறிப்பில் ஒருவனை
வழிமறித்து,
தீட்டிய கற்களைக் கொண்டு
சேதப்படுத்தினேன்.
இரத்தம்
தெருவில் தங்க மறுத்தது.
உடற்கூற்று ஆய்வில்
அவன்
தற்கொலை செய்திருந்தான்.
நிகழ்ச்சி நிரலை வரிசைப்படுத்தி
இன்னொரு கொலைக்குத்
தயார் செய்யும் போது,
தற்கொலையாளி மறுபடியும்
தெருவில் தோன்றினான்.
ஒரே கல்லால்
இன்னொரு கொலை.
யாருக்கும் இடமில்லை.
வீதி என்னுடையது.
000
முடிச்சவிழ்த்தல்
புகை மூட்டமா?
பனி மூட்டமா?
பிரித்தறிய முடியாத
காட்டுப் புழுதி.
பனிப்புகை.
கிளைகளில் தொங்கி
இன்னொரு கிளையை தொடும்
தூசி,
வீதியிலிருந்து-
தானே- தெறித்தது.
தூசிதானென்றிருக்க,
புகையின்
படுமுடிச்சை
அவிழ்த்து
வீணியிலிருந்து
நிலம் நோக்கி
ஒழுகியது ஒரு
மசுக்குட்டி.
மயிர் முளைத்ததல்ல
மசுக்குட்டியின் சிக்கல்.
புழுக்குட்டி
வெடிக்க,
வண்ணச் சிறகு
முளைத்தது எப்படி?
000
ஒருவழிப் பாதை
நேர்கோட்டு உரையாடலில்
நீ, ஒரு பொழுதிலும்
உள் நுழைய முடியாது.
தாண்டிக்குளத்தையும்
முகமாலையையும்
மட்டுமல்ல,
இலுப்பைக்கடவை
வழிமறிப்புத் தடையையும்
கவனத்தில் கொள்.
இல்லையெனில்
மீண்டும்
தொடங்கிய இடத்திலிருந்து
நீ
நகரவேண்டும்.
யூரியா போட்டு வளர்த்து,
குத்தியன்களையும்
குமரிகளையும்
யுத்தம் தத்தெடுத்தது.
கொலைக்களத்தில் இருந்து
தப்பிய
குமரிகளைக்
குத்தியன்களை வைத்தே
கொன்றது
யுத்தம்.
இன்னுமொரு யுத்தத்தை
நாம்
எங்கிருந்தாவது தொடங்க வேண்டும்?
குமரிகளைவைத்து
குத்தியன்களைக் கொல்ல.
000
யுத்ததின் பேராயம்
நெருப்பிலிருத்து
விலகித் தனித்தது சூரியன்.
அதீதத்தைத் தொலைத்து,
சிற்றாறில்
தலைமுழுகி
கரையொதுங்கும் தருணம்
சூடு,
தணிந்து தான் போனது.
வெப்பக் காற்றை
உள்ளிளுத்து
நீருக்குள் நுழைக்க
வயல்
கருகியது.
மாதா மட்டும் தப்பினாள்.
அடைக்கல மாதாவின்
கண்ணிலிருந்து
இரத்தம் கசிந்ததாய் சொன்ன நேரம்
மடுமாதா எப்படி
மல்லாவியில் இருந்தாள்?
மனுக்களைக் கைவிட்டு,
மாதாவை தன் மடிக்குள் வைத்துக் காவி வந்த
குருவானவருக்குத் தோத்திரம்.
இயேசு உங்களோடும்
இருப்பாராக.
000

கற்சுறா
கவிஞர், எழுத்தாளர் மற்றும் எக்ஸில் இதழின் ஆசிரியர்களுள் ஒருவர். சீற்றம் நிறைந்த கவிதைகளுக்காக ஈழத்து புகலிடச் சூழலில் நன்கு அறியப்பட்டவர். என்.கே.ரகுநாதனின் படைப்புகளைப் தொகுத்தவர். தற்சமயம் கனடாவில் வசித்து வருகிறார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
