“ராமாயணம் போன்ற காப்பியம் வழியாக மட்டும் இந்தியா காணப்படக்கூடாது” – ஏ. கே. ராமானுஜன் நேர்காணல் – பகுதி 1

மொழிபெயர்ப்பு : ஷங்கர்ராமசுப்ரமணியன்
ஏ கே ராமானுஜன்

அமெரிக்காவில், இந்தியா குறித்த ஆய்வுகளில் தமிழ் பண்பாட்டை தீவிரமான ஆய்வுப்பொருளாக ஆக்கியவர்களில் முதன்மையானவர் கவிஞர், மொழிபெயர்ப்பாளர், நாட்டுப்புறவியல் அறிஞர் என பலமுகங்களைக் கொண்ட ஏ. கே. ராமானுஜன். சங்கத் தமிழ் இலக்கியங்களை மொழிபெயர்த்ததன் மூலம் இதைச் சாத்தியப்படுத்தினார். கன்னட வசனகவிதைகளையும் உலகளவில் கொண்டு சேர்த்தவர். கல்லூரி ஆசிரியராக அவர் மதுரையிலும் தன் இளமைக் காலத்தில் பணியாற்றிய ராமானுஜனின் கவிதைகளிலும் நாட்குறிப்புகளிலும் மதுரை வாழ்க்கை சில காட்சித் துண்டுகளாக இடம்பெறுகிறது. தமிழ் பெற்றோருக்குப் பிறந்த ஏ. கே. ராமானுஜனின் குடும்பம் மைசூரில் குடியேறி நிலைகொண்டது. மைசூரில் தான் வாழ்ந்த வீட்டின் கீழ்தட்டில் தமிழ் புழங்கியதாகவும், அப்பா அதிக நேரத்தை செலவழித்த மாடியில் ஆங்கிலம் புழங்கியதாகவும், பொதுவெளியில் கன்னடம் இணைப்பு மொழியாக இருந்ததாகவும் குறிப்பிடுகிறார். வேதங்கள், காப்பியங்கள் மூலமாகவன்றி குழந்தைகள், பெண்களின் வாய்மொழிக் கதைகள் வாயிலாக இந்திய சிந்தனை முறையை ஆராய வழிவகுத்தவர் ஏ. கே. ராமானுஜன். மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் ஏ.எல்.பெக்கெர், கீத் டெய்லர் இருவரும் சேர்ந்து எடுத்த ஏ. கே. ராமானுஜனின் நேர்காணல் இது. 1989 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. அப்போது அங்கே அவர் பேராசிரியராகப் பணிபுரிந்தார். மிச்சிகனில் பெக்கெர், மொழியியல் பேராசிரியராக இருந்தார். கீத் டெய்லர் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகப் பணியாற்றுபவர். கல்வித்துறை சார்ந்த புத்தகக் கடை ஒன்றையும் நிர்வகித்துவந்தவர்.

ஷங்கர்ராமசுப்ரமணியன்

கீத் டெயல்ர்: நவீன எழுத்தாளரோ சிந்தனையாளரோ நாடற்றவராக( இருக்கும் நிலையைப் பற்றி சமீபத்தில் நிறைய விவாதிக்கப்படுகிறது. உங்களது பெரும்பாலான படைப்புகள் இந்த நிலையைக் குறிப்பவை. உங்களை நாடற்றவர்(EXILE) என்று எண்ணுகிறீர்களா?

ஏ கே ராமானுஜன்: அல்ல. நீங்கள் சொல்லும் எக்சைல் என்னும் பதம் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டவருக்குப் பொருந்தும். நான் அதற்குள் பொருந்தமாட்டேன். நான் தன்னிச்சையாகவே இந்த நாட்டுக்கு வந்தேன். இன்னொரு நாட்டில் வாழ்பவன் அல்லது இன்னொரு கலாசாரத்தில் வாழ்பவனுக்கு, அதன் காரணமாக அனுபவிக்கும் அசௌகரியங்கள், இன்னொரு சூழலில் வாழ்வதால் உணரும் பற்றாக்குறைகள் என நிறைய பொருந்தாமைகள் இருப்பது இயல்புதான். ஆனால், அவன் நாடு கடத்தப்பட்டவன் என்று அழைக்கப்படக்கூடாதென்று நான் கருதுகிறேன். தன்னிச்சையாக வேலைக்காகவோ, கல்விக்காகவோ, கூடுதல் சௌகரியத்துக்காகவோ இன்னொரு நாட்டுக்கு நகர்பவர்களை எக்சைல் என்று அழைப்பது உணர்ச்சிவயப்பட்டது. நான் என்னை புலம்பெயர்ந்தவன் என்றுகூட சொல்லமாட்டேன். ஏனெனில் அமெரிக்கா வருவதற்கு முன்னால் நான் இந்தியாவில் நிறைய வேலைகளைச் செய்திருக்கிறேன். இந்தியாவில் நான் செய்ததைவிடவும் சௌகரியத்தோடு இங்கே நிறைய செய்திருக்கிறேன். உதாரணத்துக்கு, சிகாகோவின் ரெகன்ஸ்டீன் நூலகத்தில் உள்ள கன்னட, தமிழ் புத்தகங்களை நான் மட்டுமே வாசித்திருப்பேன். என்னைப் போன்ற ஒன்றிரண்டு பேருக்கு மட்டுமே பயனுள்ள மகத்தான நூலகம் அது. நான் டெல்லிக்குப் போனபோது – சங்கத் தமிழ் கவிதைகள் ஆராய்ச்சிக்காக – ஒரு தமிழ் புத்தகத்துக்காக பல மைல்கள் அலையவேண்டியிருந்திருக்கிறது. இன்னொரு சுவாரசியம் என்னவெனில் இந்தியாவுக்குள்ளேயே ஒருவர், ஒரு மாகாணத்திலிருந்து இன்னொரு மாகாணத்துக்குச் செல்லும்போது, அகத்தில் வேற்றுகிரகவாசியாக இருக்க முடியும். எனது 20 வயதிலிருந்து எனது சொந்த மொழிப் பிராந்தியத்தில் நான் வாழவே இல்லை. இந்தியாவில் உங்கள் இடத்திலிருந்து 100 மைல்கள் கடந்துவிட்டால், உங்களுக்கு படிக்கவோ வாசிக்கவோ தெரியாத மொழிப் பிராந்தியத்துக்குள் நுழைந்துவிடுவீர்கள்.

கீத் டெய்லர்: நீங்கள் கல்வி கற்பதற்காக அமெரிக்காவுக்கு வந்தீர்களா?

ஏ கே ராமானுஜன்: இல்லை. நான் 20 வயதில் எனது கல்வியை நிறைவுசெய்துவிட்டு வேலைக்குச் சென்றேன். ஏழு ஆண்டுகள் ஒரு இடத்திலிருந்து, ஆங்கிலக் கல்வியைப் பயிற்றுவிக்கும் பணியில், இன்னொரு இடத்துக்கு அலைந்துகொண்டே இருந்தேன். கல்விபெற்ற இந்தியராக இன்று இருப்பவர், இருகலாசாரங்களுக்குள் இருப்பவராக இயல்பாகவே இருப்பார். ஆங்கிலத்தில் நீங்கள் பயிற்றுவிக்கப்படுகிறீர்கள். தாய்மொழி இன்னொன்று. என்னைப் போன்றவர்களுக்கு குழந்தைப்பருவத்திலேயே இரண்டு தாய்மொழிகள். ஆங்கிலம் பள்ளியில். அதனால் பல்வேறு வழிகளில், குழந்தைப் பருவத்திலிருந்தே, ஒரு கலாசாரத்துக்கு மேற்பட்டதற்கு அவர் பழக்கப்பட்டுவிடுகிறார். நான் மூன்று வெவ்வேறு கலாசாரங்களில் வாழ்ந்தேன் – ஒன்றுக்கொன்று அவை தொடர்புபட்டதென்றாலும். இந்த மூன்று கலாசாரங்களின் உரையாடலிலும் – அதை நான் சில சமயங்களில் கீழ்க்கட்டு, மேல்கட்டு மற்றும் வீட்டின் மேல்புறம் என்று குறிப்பிடுவேன் – முரண்பாட்டிலும்தான் நான் உருவானேன். அது எனக்கான சிறப்பம்சம் மட்டுமே அல்ல. இந்தியாவில் 10 சதவீதம் பேர் இரண்டு மொழிப் பின்னணி உடையவர்கள்தான். அவர்கள் பள்ளிக்குச் சென்று கல்வி கற்றால் மூன்று மொழி தெரிந்தவர்களாக ஆகிறார்கள்.

கீத் டெய்லர்: இப்படியொரு படிமம் எனக்குத் தோன்றுகிறது. சரியாவென்று பாருங்கள். கீழ்தட்டில் புழங்கும் மொழி தமிழாக இருந்தது எனலாமா?

ஏ கே ராமானுஜன்: ஆமாம். தமிழ்தான் எனது குடும்பத்தினர் மொழி. கன்னடம் மைசூர் நகரத்துக்கான மொழி, புறத்தில். ஆங்கிலம் மாடித்தட்டில்.

ஏ.எல்.பெக்கெர்: மேல்தட்டு அப்பாவினுடையது….?

ஏ கே ராமானுஜன்: ஆம். நான் சிலவேளைகளில் தந்தை மொழிகள் என்றும் தாய்மொழிகள் என்றும் அவற்றை அழைக்கிறேன். எனது அப்பா கணிதவியலாளர். அவர் தனது பெரும்பாலான வேலைகளை ஆங்கிலத்தில் செய்தார். அத்துடன் மாடியிலேயேதான் ஒட்டுமொத்தமாக பொழுதைக் கழித்தார். அவரது நூலகம் அங்கே இருந்தது.

கீத் டெய்லர்: சமஸ்கிருதத்தில் நீங்கள் சமயக்கல்வியைப் பெற்றீர்களா?

ஏ கே ராமானுஜன்: இல்லை. எனது அப்பா முயற்சித்தார். ஆனால் அவரும்கூட, ரொம்பவெல்லாம் ஆச்சாரமானவர் என்று சொல்லமுடியாது. அவருக்கு நன்றாக சமஸ்கிருதம் தெரியும். கீதை சுலோகங்களைச் சொல்வார். காலையில், அவரது மூதாதையர்கள் செய்ததைப் போன்றே ராமாயணத்தை வாசித்தார். ஆனால், அவரது பிரார்த்தனைகளில் ஒழுங்குமுறை இருந்ததில்லை. அதைப் பொறுத்தவரை இரண்டும் கெட்டான் தன்மையிலேயே இருந்தார். இந்தியாவிலிருக்கும் போது அவரைப் பற்றிய விவரணை தொடங்க ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறேன். அவர் அணிந்த உடைகளிலும், அவர் வாழ்ந்த அறிவார்த்த வாழ்க்கையிலும் இந்தியத்தன்மையும் ஐரோப்பியத் தன்மையும் சேர்ந்தே இருந்தது. அவர் கணிதம் குறித்துப் பேசும்போது லீப்னிஸ் அல்லது ஈயூக்ளிட் அல்லது ஈயூக்ளிடியன் அல்லாத ஜியோமிதியைப் பற்றிப் பேசுவது போன்றே சரளமாக பழைய சமஸ்கிருத நூல்களை எடுத்தாள்வார். ஒருவகையில் அவர் வானவியலாளரும் கூட. அதேவேளையில் அவர் ஜோதிடராகவும் இருந்தார். இந்த தன்மை என்னை மிகவும் தொந்தரவு செய்தது. ‘இதை எப்படி உங்களால் செய்ய முடிகிறது?’ என்று அவரிடம் கேட்டுக்கொண்டே இருப்பேன். எனக்கு 16 அல்லது 17 வயதாக இருக்கும்போது இதுதொடர்பில் நிறைய விவாதங்களும் நடந்திருக்கின்றன.

கீத் டெய்லர்: உங்கள் அப்பா மேற்கத்திய கல்வி பெற்றவர் அல்லவா?

ஏ கே ராமானுஜன்: ஆமாம். ஆனால், அவர் இங்கிலாந்துக்குச் சென்றதே இல்லை. ஆனால் அவரது ஆய்வுகள் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் பிரசுரமாகியிருக்கின்றன.

ஏ.எல்.பெக்கெர்: இப்படியான வாழ்க்கையில் எந்தப் பகுதியை நீங்கள் பகிர்ந்தீர்கள்? சமய வாழ்க்கையையா? பிரார்த்தனை மந்திரங்களையா? ஜோதிடத்தையா?

ஏ கே ராமானுஜன்: நான் முழுமையாக ஜோதிடத்துக்கு எதிரானவன். வானவியல்தான் சரி என்று சொல்வேன்.

ஏ.எல்.பெக்கெர்: உங்கள் தந்தையாருடன் உடன்பட்ட இடங்கள் உண்டா?

ஏ கே ராமானுஜன்: வானவியலில் அதிகமாக. அவையனைத்தும் எனக்கு உடன்பாடாக இருந்தன. மற்ற விஷயங்களை நான் அவரிடமிருந்து பகிரவேயில்லை. அவர் ஜாதக கட்டங்களை வரையும்போதும் அதுபோன்ற வேலைகளில் இருக்கும்போதும் கடுமையாக நிராகரிப்பேன். அவர் புண்படுமாறு நிறைய விஷயங்களைச் சொல்லியுள்ளேன்.

ஏ.எல்.பெக்கெர்: அது அவரைச் சங்கடப்படுத்தியதா?

ஏ கே ராமானுஜன்: ஆமாம். அவர் என்னிடம் விவாதிப்பார். ப்ளூட்டோவும் நெப்ட்யூனும் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. உங்களது ஏழு கிரக ஜோதிடத்துக்கு என்ன வேலை? என்று கேட்பேன். கணிதவியலாளர்கள் பற்றி உனக்குத் தெரியாது என்று பதிலளிப்பார். தேவையான நேரத்தில் சரிசெய்வோம் என்பார். பகவத் கீதையை எப்படி அனாயசமாகப் பேசுவாரோ அதேபோல நாத்திகம் குறித்தும் பெட்ரண்ட் ரஸல் குறித்தும் அவரால் பேசமுடியும். ரொம்ப முன்பாகவே அவர் என்னிடம் சொல்லியிருக்கிறார். ‘மூளையில் இரண்டு மடல்கள் இருப்பது உனக்குத் தெரியும்தானே?’

உணர்வுப்பூர்வமாக அவருக்கு இரண்டு உலகங்கள் தேவைப்பட்டிருப்பதை, எனக்கு வயதாகும்போது புரிந்துகொண்டேன். கற்பனையான காரணங்களுக்காக அவருக்கு இரண்டு உலகங்களும் தேவைப்பட்டிருக்கின்றனர். அவர் பகுத்தறிவுவாதியாகவே இருந்திருக்க வேண்டும். ஆனால், கணிதமும் பித்தகோரசும் ஜோதிடரீதியான ஆய்வுகளின் வாயிலாகவே வந்ததென்பதையும் அவர் அறிந்திருந்தார்.

அவர் என்னிடம் திரும்பி வாதிடும் அளவிற்கு புத்திசாலித்தனமானவராக இருந்தார். இந்தியாவிலும் கிரேக்கத்திலும் உள்ள பித்தாகரஸ் கோட்பாடுகள் இரண்டுமே பல்வேறு வகையான சடங்குகளுக்கு கொடுக்கப்பட்ட பதில்களாகும். டெல்பிக் குருக்கள் கோயில் பீடத்தை இரட்டிப்பாக்கும்படி சொன்னபோது, அவர்கள் முதலில் அதை இரண்டால் பெருக்கினார்கள் — அது பலன் தரவில்லை. பிறகு “இரட்டிப்பாக்குதல்” என்ற கருத்தை “வர்க்கப்படுத்துதல்” என்று மறுவிளக்கம் கொடுத்தார்கள். என் தந்தை இந்தியர்கள் ஏன் வர்க்கமூலத்தை கண்டுபிடித்தார்கள் என்பதற்கு இதேபோன்ற காரணத்தை என்னிடம் சொன்னார். பீட கட்டுமானம் பற்றிய சுல்ப சூத்திரங்களிலும் இதேபோன்ற கருத்துகள் காணப்படுகின்றன. சடங்கும் மதமும் அறிவியல்களோடு எவ்வாறு இணைந்திருக்கின்றன என்பதற்கான காரணங்களை என் தந்தை என்னிடம் விளக்கிக்கொண்டிருந்தார். நவீன அறிவியல் மட்டுமே அந்த தொடர்பை முழுவதுமாக இழந்துவிட்டது. அங்கும் கூட முற்றிலும் உறுதியாக சொல்ல முடியாது.

கீத் டெய்லர்: 16 வயதில் இந்திய சிந்தனைக்கு எதிர்வினை ஆற்றக்கூடியவராக இருந்தீர்களா?

ஏ கே ராமானுஜன்: இந்து சமயத்துக்கு எதிராக இருந்தேன். பிறப்பிலேயே கற்பிக்கப்பட்ட ஏற்றத்தாழ்வு, சாதி முறை எல்லாவற்றுக்கும் தீர்வு நவீன பகுத்தறிவுவாதம் தான் என்னும் கருத்தோட்டம் இருந்தது. இப்போதும் எனக்கு அந்தப் படிநிலைகள் நியாயமற்றதாகவே தெரிகிறது. நவீனமான பல இந்தியர்களும் அதையே உணர்கிறார்கள். அரசியல்ரீதியான நபர்கள் இன்னும் வலுவான தரப்பை முன்வைப்பார்கள்.

கீத் டெய்லர்: உங்களது பணிவாழ்க்கையிலும், மொழிபெயர்ப்பாளராகவும், நாட்டார் வழக்காற்றியலாளராகவும் சமய வாழ்க்கை தொடர்பில் உங்களுக்கு நேர்மறையான பார்வையே இருந்துள்ளது.

ஏ கே ராமானுஜன்: ஆமாம். ஆனாலும், எனது உள்ளார்ந்த செயல்திட்டத்தையும் விருப்பத்தையும் பார்த்தீர்களெனில், இந்திய கலாசாரம் குறித்து நமக்கிருக்கும் ஒற்றை கருத்தோட்டத்தை சிதறடிப்பதே. இந்தியக் கலாசாரம் குறித்த ஒட்டுமொத்த பிராமணிய நோக்கிலிருந்து, விடுவித்துச் செல்வதே எனது பணியாக இருந்தது. பிராமணிய நோக்கு என்பது ஏற்றத்தாழ்வை அடிப்படையாகக்கொண்டது. ஸ்பீக்கிங் ஆப் சிவா போன்ற நூல்களில் பார்க்கும்போது, அதில் கூடுதலான ஜனநாயகத் தன்மை இருப்பதைப் பார்க்க இயலும். சடங்கு மற்றும் குருமார்கள், இந்து நிலைப்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனங்கள் உள்ளன. அத்துடன் ஆலயங்களை ஆதரிக்கும் பணக்காரர்கள் குறித்தும் ஒட்டுமொத்த சாதிய அமைப்பு குறித்தும் கடுமையான பார்வைகளைச் சொல்கின்றன. நான் வேதங்களை மொழிபெயர்த்ததே இல்லை. எனது விருப்பம் தாய்மொழிகளிலேயே இருந்துள்ளன – சமஸ்கிருத்தில் அல்ல. பிராந்திய மொழிகளே ஜனநாயகத்தன்மையுடன், ஏற்றத்தாழ்வுக்கு எதிரான மனநிலை கொண்டதாக, கீழிருந்து இந்தியாவைப் பார்ப்பதற்கான வாய்ப்புகளைக் கொடுப்பதாக உணர்கிறேன். இந்த எதிர் அமைப்புகளில்தான், அதிகாரப்பூர்வமான அமைப்புகளுக்கு எதிரான கலகம் இருப்பதைக் காண்கிறேன்.

நாட்டார் வழக்காற்றியலில் எனது பணி, பெண்கள் மற்றும் குழந்தைகளின் உலகத்தை பிரதிநிதித்துவம் செய்கிறது. தெரிந்தோ தெரியாமலோ, இந்தியாவைப் பற்றி சமஸ்கிருதப் பிரதிகளின் நோக்கிலிருந்து பேசக்கூடாது என்று முடிவெடுத்துவிட்டேன். எழுத்துப்பூர்வமாகவும், வாய்மொழி மரபிலிருந்தும் வந்த பிராந்திய மொழிப் பிரதிகள் வழியாகவே ஆய்வுசெய்யவேண்டுமென்ற முடிவு. ராமாயணம் போன்ற காவியம் வாயிலாக இந்தியா காணப்படக்கூடாது. அது ஆண்களுக்கு அனுகூலம் செய்கிறது. அதற்குப் பதிலாக பெண்களால் சொல்லப்பட்ட, எழுத்தறிவற்ற மக்கள்தொகையிலிருந்து உருவான நாட்டார் காப்பியங்கள், நாட்டார் கதைகள் வழியாக அணுகவேண்டுமென்று நினைத்தேன்.

கீத் டெய்லர்: இந்த நாட்டார் கதைகளைக் கண்டறிவதில் நீங்கள் அடைந்த நடைமுறைரீதியான சிரமங்கள் என்ன? நீங்களே அவற்றைத் தேடித் திரட்டினீர்களா?

ஏ கே ராமானுஜன்: இந்தக் கதைகளை எங்கள் வீட்டிலுள்ள பாட்டிகள், சமையல் செய்யும் பெண்கள் வழியாக முதலில் கேள்விப்பட்டேன். உதாரணத்துக்கு நாங்கள் சிறியவர்களாக இருந்தபோது, சமையலறையில் எல்லா குழந்தைகளையும் கூப்பிட்டு வட்டமாக உட்கார வைக்கப்படுவார்கள். வீட்டிலிருக்கும் பாட்டியோ வயதில் மூத்தவரோ, சோற்றைப் பிசைந்து, சிறிய கவளங்களாக்கி, ஒவ்வொரு குழந்தைக்கும் தருவார்கள். குழந்தையில் கையில் அந்த உருண்டைகள் போடப்படும்.இப்படி நாங்கள் உண்ணும்போது எங்களுக்கு சாப்பாட்டை மறப்பதற்காக கதை ஒன்று சொல்லப்படும். தென்னிந்தியாவைச் சேர்ந்த கதைகள். அப்படிப்பட்ட குடும்பத்தில்தான் நான் வளர்ந்தேன். அவை படுக்கை நேரத்தில் சொல்லப்பட்ட கதைகள் அல்ல. உணவுநேரத்தில் சொல்லப்பட்டவை. இந்தக் கதைகள் பாட்டிகளின் நேசத்தைக் காண்பித்தவை. அரிதாக அம்மாவும் கதை சொல்வாள். அதனால் அங்கே அதிகார உறவு இல்லை. பாட்டியோ, சமையல்காரியோ அத்தையோ கதை சொல்வார்கள். குடும்பத்திலிருக்கும் அதிகார உறவு கதைசொல்வதில் ரத்தாகிவிடுகிறது.

ஏ கே ராமானுஜன்

கீத் டெய்லர்: பொதுவான கதைகளின் தொகுப்பு ஒன்று அவர்களிடம் இருந்திருக்க வேண்டுமல்லவா?

ஏ கே ராமானுஜன்: ஆமாம். ஆயிரக்கணக்கில் இருந்திருக்கலாம். குழந்தைகள் சாயங்காலப் பொழுதில் களைப்பாக இருப்பார்கள். உணவும், தூக்கமும் அன்பும் சேரும்போது அதைவிட மயக்குவதற்கு வேறென்ன இருக்கவியலும். அதனால்தான் அக்கதைகள் நமது உருவாக்கத்தில் மிகப்பெரிய பங்குவகிப்பவை என்று கருதுகிறேன். குழந்தைகளுக்கு எவ்வளவு சீக்கிரம் அந்தக் கதைகள் சொல்லப்படவேண்டுமோ அவ்வளவு நல்லதென்று நான் அதனாலேயே கருதுகிறேன்.

இந்தக் கதைகளில் மூன்று அம்சங்களில் எனக்கு தொடர்ந்து ஈடுபாடு. அவற்றின் அழகியல், அது சொல்லும் இறந்தகாலம் மற்றும் அவற்றின் உலகப்பார்வை. இவை மூன்றும் இந்தக் கதைகளில் முக்கியமானவை. புராணக் கதைகளைவிட சொல்கதைகளில் இந்தத் தன்மைகள் முக்கியமென்று நான் கருதுகிறேன். புராணக்கதைகளில் அதிகாரப்பூர்வமான பார்வைகளை ஒருவர் செவியுறலாம்.

கீத் டெய்லர்: பாட்டி சொன்ன கதைகளில் சட்டென்று உதாரணம் சொல்லத்தக்களவு ஏதாவது கதை உள்ளதா?

ஏ கே ராமானுஜன்: இருக்கிறது. இது கதைகளைப் பற்றிய கதை. ஒரு கதை மற்றும் பாடல் தெரிந்த ஒரு பெண்ணைப் பற்றிய கதை. ஆனால் அதை அவள் சொல்லவே மாட்டாள். ஒருகட்டத்தில் அந்தக் கதையும் அந்தப் பாடலும் அடைபட்டுத் திணறி அவள் உறங்கும்போது வெளியே வந்துவிடலாமென்று முடிவெடுத்தது. பாடல் ஒரு ஆணின் மேலங்கியாக உருவெடுத்தது. கதை ஒரு மனிதனுக்கு ஒரு ஜோடி செருப்பானது. அவை வீட்டுக்கு வெளியே தொங்கிக்கொண்டிருந்தன. அந்தப் பெண்ணின் கணவர் வீட்டுக்கு வந்தபோது வெளிச்சுவரில் மேலங்கியும் செருப்பும் கிடப்பதைப் பார்த்தான். என்ன நடக்கிறது? யார் வந்திருக்கிறார்கள்? என்று கேட்டான். அதைப்பற்றி உள்ளே இருந்தவளுக்கோ ஒன்றுமே சொல்லத் தெரியவில்லை. ஏன் இப்படிப் பேசுகிறீர்கள்? என்று கேட்டாள். பேச்சு தடித்து இரண்டு பேருக்கும் சண்டை மூண்டது. நான் இங்கே இனிமேல் இருக்க மாட்டேன் என்றான் கணவன் அவன் வீட்டிலிருந்து ஒரு போர்வையை எடுத்துக்கொண்டு, கிராமத்துக்கு வெளியேயிருந்த அனுமார் கோயிலில் போய் உறங்கப் போய்விட்டான். அந்த ஊரில் ஒரு நம்பிக்கை இருந்தது. வீட்டில் விளக்குகள் அணைக்கப்படும்போது சுடர் உடனே அவிவதில்லை. அந்தச் சுடர் நேரடியாக அனுமன் கோயிலுக்குப் போய்விடும். அடுத்தநாள் தீபம் ஏற்றப்படும்போது அந்த வீட்டுக்கு சுடர் திரும்பிவரும் என்பதே அந்த நம்பிக்கை. அன்றும் எல்லார் வீட்டிலிருந்தும் அணைக்கப்பட்ட தீபச்சுடர்கள் அனைத்தும் அனுமர் கோயிலுக்கு இரவில் வந்து சேர்ந்தன. அந்தச் சுடர்கள் எல்லாவற்றுக்கும் அவரவர் வீட்டின் ரகசியங்கள் தெரியும். கோயிலுக்கு வந்த சுடர்கள் எல்லாம் ரகசியங்களை கிசுகிசுக்கத் தொடங்கின. சண்டை போட்டுவந்த கணவனின் வீட்டிலிருந்து தாமதமாக வந்த சுடர் தனது கதையைச் சொல்லத் தொடங்கியது. இன்றைக்கு அவள் கவலையில் இருந்ததால் தீபத்தை அணைக்கவேயில்லை. “ஏன் எனக்கு இப்படியெல்லாம் நடக்கிறது. இவன் ஏன் இத்தனை கோபப்படுகிறான். நான் என்ன தவறு செய்தேன்.” என்றெல்லாம் வருந்தினாள். அவள் உறங்கச் செல்லும்போது விளக்கை அணைத்ததால் தீபம் ஆலயத்துக்கு மிகத் தாமதமாக வரவேண்டியதாகிவிட்டது.

பிற தீபங்கள் அனைத்தும் தாமதத்துக்குக் காரணம் கேட்டன. தீபம் பதில் சொன்னது. ‘வீட்டில் பெரிய சண்டையாகிவிட்டது’. ‘அந்த வீட்டிலுள்ள பெண்ணுக்கு ஒரு கதையும் ஒரு பாடலும் தெரியும். ஆனால் அதை அவள் வெளியே சொல்லவில்லை. அதனால் அவை அவளை பழிவாங்கிவிட்டன. கதையும் பாடலும் ஒரு ஆணின் அங்கியாகவும் செருப்புகளாகவும் வந்துவிட்டதால், கணவன் கோபம் அடைந்துவிட்டான். இதை அவள் அறியவே இல்லை.’ என்றது தீபம்.

கணவன் இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு, வீட்டுக்குத் திரும்பினான். அதிகாலையாகிவிட்ட நிலையில், மனைவியிடம் அந்தக் கதை குறித்தும் பாடல் குறித்தும் கேட்டான்.

அந்த மனைவியோ, என்ன பாடல்? என்ன கதை? என்று கேட்டாள். அவளுக்கு தன்னிடமிருந்த கதையையும் பாடலையும் தெரியக்கூடச் செய்யவில்லை. அவள் அவற்றைத் தொலைத்துவிட்டாள். சொல்லும் கதைகள், சொல்லாத கதைகள் பற்றிய கதை அது. கதைகள் சொல்லப்பட வேண்டிய அவசியத்தையும் கூறும் கதை இது.

ஏ.எல்.பெக்கெர்: காலை உணவுக் கதை, மதிய உணவுக் கதை அல்லது இரவுணவுக் கதை என்று உண்டா?

ஏ கே ராமானுஜன்: பெரும்பாலும் இரவுதான். உறுதியாக அவை இரவுணவுடன் சேர்ந்து சொல்லப்படும் கதைகளே.

கீத் டெய்லர்: காலனித்துவ மொழிகளாக இருந்தவற்றின் இலக்கியங்களில் காலனியாதிக்கத்திற்கு உட்பட்ட சமூகங்களிலிருந்து வந்த கதைகளை நாம் காண்கிறோம். இந்நாளில் எல்லோரும் அறிந்திருக்கும் சிறந்த உதாரணம் சல்மான் ருஷ்டி.

ஏ கே ராமானுஜன்: இந்தப் புதிய நூலான, The Empire Writes Back நூலை மக்கள் படிக்கவேண்டும்.

கீத் டெய்லர்: நமது இலக்கியங்கள் குறித்த சம்பிரதாயமான புரிதலை மாற்றப்போகும் புதிய உத்வேகமாகப் பார்க்கமுடிகிறது.

ஏ கே ராமானுஜன்: நமது மரபான நூல்கள் குறித்த புரிதலையும் அவை மாற்றும். இதுவரை இந்தியர்களோ, சீனர்களோ, ஆப்பிரிக்கர்களோ சரியாக ஷேக்ஸ்பியரை உண்மையில் விளக்கப்படுத்திக் கொள்ளவேயில்லை. அவர்கள் இங்கிலாந்துக்குச் சென்று, அங்கேயுள்ள விமர்சன முறைமைகளைப் படித்துவிட்டு தாயகத்துக்குத் திரும்பிவிடுகின்றனர். ஷேக்ஸ்பியர் குறித்து இந்தியாவில் எழுதப்பட்டதை நீங்கள் படித்தால், உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்ததிலிருந்து எந்த வித்தியாசத்தையும் காணவியலாது.

கீத் டெய்லர்: சரியாக விளக்கப்படுத்தல் என்று எதைச் சொல்கிறீர்கள்?

ஏ கே ராமானுஜன்: ஷேக்ஸ்பியரின் தி டெம்பெஸ்ட் படைப்பு காலனியவாதம் குறித்துப் பேசுவதாக பலரும் அர்த்தப்படுத்துகின்றனர். அதில் காலனியம் குறித்த தெளிவான சித்திரம் இருக்கிறது.

கீத் டெய்லர்: கலிபானை நடத்தும் விதம். கலிபானின் உருவம் கூட.

ஏ.எல்.பெக்கெர்: ஏரியல் கூட.

ஏ கே ராமானுஜன்: அந்த தீவையே பாருங்கள். ப்ராஸ்பெரோ எல்லார் மீதும் கட்டுப்பாட்டை செலுத்துபவனாக உள்ளான். கலிபான்களிடம் கேட்டுத்தான் கனிகள், நீர் இருக்கும் இடம் அவனுக்குத் தெரிந்தது. அவன்தான் கலிபானுக்கு மொழியைக் கற்றுத்தருகிறான். ஒரு ஆங்கிலேயேன் கலிபானுக்கு ஆங்கிலத்தைக் கற்றுக்கொடுக்கிறான். இதன் லாபமென்னவெனில் காலனியப்படுத்தப்பட்டவன் ஆங்கிலேயனைத் திட்டுவதற்குத் தெரிந்துகொள்கிறான். அங்கே அபரிமதிம் இருக்கிறது. மொழியோடு விஸ்கியும் அறிமுகமாகிறது. சாதாரண கீழ்மட்ட ஊழியர்கள் ஆதிவாசிகளுக்குப் பெரிய கடவுளர்களாக ஆகிவிடுகின்றனர். காலனிய அதிகாரம் இப்படித்தான் அந்த ராஜ்ஜியத்தில் செலுத்தப்படுகிறது. ஷேக்ஸ்பியரின் நாடகத்தில் இந்த நாடுகள் கன்னி நாடுகளாக கருதப்படுகின்றன. இந்தியா போன்ற ஒரு நாடு அப்படியானது அல்ல. நம்மிடம் ஏற்கெனவே நீண்ட பண்பாடு இருந்தது. ஆனால், நம்மை அப்படி காலனி ஆட்சியாளர்கள் கருதவில்லை. 1835 இல் மெக்காலேயின் குறிப்பொன்று சொல்கிறது. அனைத்து சமஸ்கிருத நூல்களையும் ஷேக்ஸ்பியரின் ஒரு நாடகத்துக்கு ஈடாகாது. அவர் இந்திய மருத்துவத்தை ஏமாற்று வித்தை என்று நினைத்தார். நமது அண்டவியல் குறித்த அறிவை,புதைசேறு என்றல்லவா அழைத்தார்.

ஏ.எல்.பெக்கெர்: சால் பெல்லோவின் பூட்டன் சொல்வதுபோலத் தொனிக்கிறது…

ஏ கே ராமானுஜன்: ஆம். நமது ஒட்டுமொத்த பண்பாடு தொடர்பிலேயே அவருக்குக் கண்டனம்தான் இருந்திருக்கிறது. பிராந்திய மொழி மற்றும் அதுசார்ந்த பண்பாடுகளை நாகரிகப்படுத்தும் சக்தியாக இருக்குமென்று ஆங்கிலத்தை நினைத்தார். வெள்ளையர்களின் சுமை அது. ஆனால் நேர்மாறாக, அது பழுப்புநிற மனிதனின் சுமையாக மாறிவிட்டது. அமெரிக்காவுக்கு வரும் இந்தியர்கள் எல்லோரும் இங்கிருக்கும் லோகாதாய மனிதனை ஆன்மிகப்படுத்தி நாகரிகப்படுத்தவேண்டுமென்று நினைக்கத் தொடங்கிவிட்டனர்.

ஏ.எல்.பெக்கெர்: பழிவாங்கல் போல.

கீத் டெய்லர்: பின்காலனிய இலக்கியங்களின் உருவாக்கம் அவற்றிலிருந்து மாறுபட்டதாகத்தானே இருந்திருக்கும்?

ஏ கே ராமானுஜன்: இல்லை. எதிர்வினையாற்றும் அம்சத்தை முழுக்க எடுத்துக்கொண்டது. அதனால்தான், ஒடுக்கப்பட்ட நாடுகளை விட்டு ஆங்கிலேயர்கள் அகலும்போது, பௌதீகரீதியாக மட்டுமல்லாமல் அறிவார்த்தரீதியாகவும் அவை காலனியப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த நாடுகளில் மேற்கிலிருந்து கொண்டுவரப்படாத தனி விமர்ச மரபு இல்லை. இந்தியாவில் உள்ள வஸ்துகளை விவரிக்கும் சொற்கள் எல்லாவற்றின் பட்டியலையும் எடுத்தேன். அவற்றில் எத்தனை சொற்கள் தங்களது பூர்வீக வேர்களைக் கொண்டவை என்று பார்ப்பதற்காகவே அவற்றைத் தொகுத்தேன். இலக்கியம், வரலாறு, சமூகம், தேசம், அரசு என்று சொல்லும் வார்த்தைகளையே பாருங்கள். சாதி என்ற சொல்கூட இந்திய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட சொல்லாகவே உள்ளது. பிராந்திய சிந்தனைகள், நம்மீது அவர்களது கருத்தை ஏற்றும் ஆங்கிலேயர்களுடன் உரையாடி உரையாடித்தான் இந்த சொற்கள் நம்மிடம் வந்திருக்கின்றன.

ஏ.எல்.பெக்கெர்: தெற்காசிய மொழிகள் எல்லாமும் இந்திய பண்பாட்டுடன் உறவுகொண்டிருக்கும் அம்சம் சுவாரசியமானது. சமஸ்கிருதம் மீ-மொழியாக இருந்து அனைத்து சொற்களும் தோன்றும் இடமாக இருந்திருக்கின்றன.அதனால் அது தொடர்வினையாக இருந்திருக்கிறது.

ஏ கே ராமானுஜன்: ஆமாம். அப்படித்தான். ஆனால், இந்தியர்கள் சமஸ்கிருதத்தையோ மற்ற மொழிகளையோ மறந்துவிட்டார்கள் என்று சொல்லமுடியாது. இன்று சமஸ்கிருதம் படிப்பவர்கள் சொற்பம். எவ்வளவு பேருக்கு சமஸ்கிருதம் தெரியும். ஆங்கிலம் அறிந்தவர்களின் எண்ணிக்கையை விட மிக மிக குறைவுதான்.

கீத் டெய்லர்: சமய நூல்கள் எல்லாம் சமஸ்கிருதத்தில் இருந்தும் இதுதான் நிலைமை…

ஏ கே ராமானுஜன்: அந்த நூல்களை நன்கு தெரிந்தவர்கள் உள்ளனர். பின்காலனிய உலகத்தில் இரண்டு விஷயங்கள் நடக்கும். படிப்பதும், மகத்தான நூல்களை மொழிபெயர்க்கும் வேலையும் நடக்கும். அது புது இலக்கியங்களோடு நின்றுவிடாது. உதாரணத்துக்கு தமிழ் மொழியின் இலக்கிய மரபு ஈராயிரம் ஆண்டுகள் தொன்மை கொண்டது. கன்னடம் போன்ற மொழிக்கு ஆயிரமாண்டுகள் மரபு இருக்கும். ஆங்கிலத்தில் பார்ப்பதைவிட இது அதிகம். இந்தப் பின்னணியில் வங்காளிகளுக்கு கன்னடமே தெரியாது என்பதை நீங்கள் நினைவில் கொள்ளவேண்டும். கன்னடத்தை தாய்மொழியாக கொண்டவர்களுக்கு பஞ்சாபி தெரியாது. அதனால், உள்ளே இந்தியர்கள் இன்னொருவரின் மொழியையும் பண்பாடுகளையும் கண்டறியவே வேண்டியிருக்கிறது. அது தற்போதுதான் நிகழத்தொடங்கியுள்ளது. நிறைய கவிதைத் திருவிழாக்கள் நடக்கின்றன. உதாரணத்துக்கு பஞ்சாபிய கவிஞர்களும் இந்தி கவிஞர்களும் வங்காளக் கவிஞர்களும் சேர்ந்து கூடி, மற்றவர்களின் கவிதை மொழிபெயர்ப்புகளை வாசிக்கின்றனர். இதற்கு ஊடகமாக பிரதானமாக ஆங்கிலம் உள்ளது. இந்தோனேசியர்களை இந்தியர்கள் அறிந்திராதது போன்றதே அது. இவர்கள் எல்லாம் ஆசியர்கள் என்று சொல்வது மட்டும் போதாது. நமக்கு பரஸ்பரம் தெரியாது. எத்தனை இந்தியர்கள் சீன மொழியை அறிந்தவர்கள். எத்தனை சீனர்களுக்கு இந்திய மொழி தெரியும். மிக சொற்பமானவர்களே இருப்பார்கள்.

நான் கன்னடத்தில் பேசும்போது, எனது மொழியில் சமஸ்கிருதம் நிறைய கலந்திருக்கிறது. அதனால் ஆங்கிலத்தைப் போன்றே, சமஸ்கிருதமும் எங்கள் பிராந்திய மொழிகளில் பிரதிபலிக்கிறது. எங்களது நவீன கவிஞர்கள் அனைவருக்கும் ஆங்கிலம் தெரியும். அவர்கள் எலியட் அல்லது ஏட்ஸ் போன்ற கவிஞர்களால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்கள் புதிய வகை கவிதைகளை எழுதலாம்.

ஏ.எல்.பெக்கெர்: சமஸ்கிருதம் ஒரு அசல் மொழியாக கன்னடம் பேசுபவரால் இந்தி பேசப்படுபவரால் கருதப்படுகிறது.

ஏ கே ராமானுஜன்: அப்படி அல்ல. மிக சொற்பமான பேர்தான் அந்த நம்பிக்கை கொண்டவர்கள். மீட்புவாதிகள் அதற்கு முயல்கிறார்கள்தான். இந்து மீட்புவாதிகள். சமஸ்கிருதம் கோயில்களிலும், வழிபாடுகளிலும் திருமணச் சடங்குகளிலும் இன்னும் காணப்படுகிறது. சமஸ்கிரும் சடங்குத்தன்மை கொண்ட மாந்திரீக அம்சத்தை கொஞ்சம் தக்கவைத்துள்ளது. அதை அப்படியே தூக்கியெறிந்துவிடமுடியாது. ஆனால் சமஸ்கிருதம் எல்லா இடத்திலும் நீக்கமற இல்லை. இன்னொன்றையும் நான் முக்கியமாகச் சொல்லியே ஆகவேண்டும். இந்தியாவில் சமயத்துவம் கொண்ட ஒரே மொழியாக சமஸ்கிருதம் இல்லை. 5 ஆம் நூற்றாண்டிலேயே தாய்மொழிகளில் சமயக்கவிதைகள் எழுதப்பட்டுவிட்டன. தமிழ் அதில் முதன்மையானது. தமிழ் கோயில் சேவைகளிலும் புழங்கத்தொடங்கிவிட்டது. நான் மொழிபெயர்த்த வசன கவிதைகள் அதற்கு உதாரணம். தென்னிந்தியாவில் ஒவ்வொரு சைவக்கோயிலிலும் இந்தக் கவிதைகள் பாடப்படுகின்றன. அதனால் இந்தியாவுக்குள்ளேயே சமஸ்கிருதம் தெரியாதவர்களிடமும் புழங்குவதற்கென்று சமயமொழிகள் உள்ளன. சமஸ்கிருதம் மட்டுமே போதாதாது என்ற தரப்பைச் சேர்ந்தவன் நான் என்று ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். சமஸ்கிருதமும் முக்கியமான மொழியே. ஆனால் அதுவே எல்லாம் கிடையாது. இந்தியா குறித்த ஒற்றைப்பார்வையையே அது அளிக்கிறது. சமஸ்கிருதமே இந்தோனேசியாவுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது.

ஏ.எல்.பெக்கெர்: இந்தியாவிலிருந்து பன்முகத்தன்மையுடன் பல விஷயங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக நான் கருதினேன். சமயங்கள், கடவுள்கள், சாத்தியங்கள், மொழிகள் பர்மாவுக்கும் மலேசியாவுக்கும் ஒட்டுமொத்த தென்கிழக்கு ஆசியாவுக்கும்….

ஏ கே ராமானுஜன்: தாய்லாந்துக்கு தமிழ் கவிதைகளும் தமிழ் சடங்குகளும் சென்று சேர்ந்துள்ளன. 7 ஆம் நூற்றாண்டிலிருந்தே சில கவிதைகள் அங்கே புழங்கியிருப்பதைப் பார்க்கமுடிகிறது.

ஏ.எல்.பெக்கெர்: மற்ற மொழிகளின் நிலையை விட தென்கிழக்கு ஆசியாவின் மற்ற பகுதிகளில் சமஸ்கிருதத்தின் அந்தஸ்து வேறானது. ஒரு மொழிபெயர்ப்பாளனாக, ஒரு கவிஞனாக, யாருக்கும் இந்த சிறப்பு அந்தஸ்து மிக மிக முக்கியமானது. சமஸ்கிருத வார்த்தைகள், சமஸ்கிருத வேர்கள் மற்றும் சமஸ்கிருதப் படிமங்கள், மூலாதாரத்துக்கு அருகிலிருப்பதாய் தெரிகின்றன – அசலுக்கு அருகிலும்.

ஏ.எல்.பெக்கெர்: நீங்கள் சமஸ்கிருத தரப்புக்கு எதிர் நிலைப்பாட்டில் இருப்பவர். அது எப்படி நேர்ந்தது?

ஏ கே ராமானுஜன்: நான் ஏற்கெனவே கூறியதுபோல, இந்து சாதி அடுக்கு முறையும், பிராமணியத்தோடு எனக்கு இருக்கும் உறவுகளும் காரணம். நான் பிராமணக் குடும்பத்திலிருந்து வந்தவன். நான் இரண்டுவகையாக இருந்திருக்க இயலும். பிராமணருக்குக் கிடைக்கும் எல்லா அனுகூலங்களையும் பெற்றவனாகவும் அந்த அனுகூலங்களைப் பெற்றுக்கொண்டே அதற்கு எதிர்வினையாற்றுபவனாகவும். பிராந்திய மொழிகளில் அபரிமிதமான வளம் இருப்பதை காலப்போக்கில் நான் அறிந்துகொண்டேன். அத்துடன் அவை இன்றும் உயிர்த்தன்மையோடு, சமூகத்தின் அனைத்து அடுக்குகளுக்குள்ளும் ஊடுருவக்கூடியது. குழந்தைகள், பெரியவர்கள், ஆண், பெண், படித்தவர்கள், படிக்காதவர்கள் என எல்லாருக்குள்ளும். அவர்களை எது சேர்த்துவைத்திருக்கிறது. நிச்சயமாக சமஸ்கிருதம் அல்ல. இந்த தாய்மொழிகள்தான் சேர்த்துவைத்திருக்கிறது. அதனால்தான் நான் மொழியியல் பிரிவைத் தேர்ந்தெடுத்தேன். மக்களால் இன்றும் பேசப்படும் மொழிகள்தான் அதனால் மிக மிக முக்கியமானவை. எனது இளமையிலேயே நான் அதைக் கண்டறிந்ததுதான் முக்கியமானது.

ஏ.எல்.பெக்கெர்: நமக்கு சில மொழிகள் போதும் என்ற வாதத்துக்கு எதிராக உள்ளது உங்கள் தரப்பு. உங்கள் நிலைப்பாடோ பிராந்திய மொழிகளின் பன்மைத்தன்மையை முன்னிறுத்துவதாக உள்ளது…

ஏ கே ராமானுஜன்: அதுமட்டுமேயல்ல. அந்தப் பன்மைத்தன்மை இல்லாமல் அவர்கள் வாழும் வாழ்க்கையின் எதார்த்தத்தை அந்தரங்கத் தன்மையோடு வெளிப்படுத்த இயலாது. நூற்றுக்கணக்கில் விதவிதமாக மக்கள் உள்ளனர். ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கேயான மொழி வேண்டும். அதுதான் இந்தியாவில் உள்ளது. அத்துடன் எனக்கு பேச்சு வழக்காற்றில் ஏற்பட்ட ஈடுபாட்டையும் சொல்லவேண்டும். 1971 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, இந்தியாவில் 3 ஆயிரம் பிராந்திய மொழிகளின் பெயர்களைத் தருகிறது. மக்களிடம் என்ன மொழியில் பேசுகிறீர்கள்? என்று கேட்டபோது அவர்கள் மூன்றாயிரம் பெயர்களைத் தந்திருக்கின்றனர். அதனால் 3 ஆயிரம் மொழிகள் இருப்பதாக அர்த்தம்கொள்ள இயலாது. மூன்றாயிரம் பேச்சு வகைகள் உள்ளதையும் அவரவருக்கேயுரிய பிரத்யேகத் தன்மையையும் வெளிப்படுத்தும் அம்சம் அது. மொழியியலாளர்கள் அதைப் பின்னர் தொகுத்து வகைப்படுத்தி இந்தியாவில் 100 அல்லது 105 மொழிகள் இருக்கலாம் என்று கூறுகிறார்கள். நான்கு மொழிக் குடும்பங்கள் இருப்பதாகவும். நாட்டார் வழக்காற்றியல் என்று நாம் எதைக் கூறுகிறோமெனில், எதை நாம் சுயவெளிப்பாடாக கருதுகிறோமெனில் அவை எல்லாம் இந்த மூன்றாயிரம் பேச்சு வழக்குகளில்தான் காணப்படுகின்றன. அதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

000

(தொடரும்)

ஷங்கர்ராமசுப்ரமணியன், தமிழில் எழுதிவரும் கவிஞர், விமர்சகர். ‘இகவடை பரவடை, நிழல் அம்மா, ஆயிரம் சந்தோ‌ஷ இலைகள், கல் முதலை ஆமைகள் முதலிய கவிதைத்தொகுதிகள் வெளிவந்துள்ளன. பிறக்கும்தோறும் கவிதை, நான் பிறந்த கவிதை, நினைவின் குற்றவாளி  ஆகிய கட்டுரைத் தொகுப்புகளையும்  எழுதியுள்ளார். விக்ரமாதித்யன் கவிதைகள் ,‘அருவம் உருவம்: நகுலன் 100’ உள்ளிட்ட தொகுப்பு நூல்களின் ஆசிரியர்.

தமிழ் விக்கியில் 


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

உரையாடலுக்கு

Your email address will not be published.

திரட்டு

சேகரம்

Latest Posts

Go toTop

Don't Miss