முந்தைய பகுதிகள்: 1 முதல் 16 வரை

விஜயகுமார்: இவ்வாண்டு அரசுக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கையில் கிட்டத்தட்ட 65 சதவீத இடங்கள் நிரம்பியிருக்கின்றன என்று செய்தி வந்திருக்கிறது. சொற்ப இடங்களுக்கு பல்லாயிரக்கணக்கான விண்ணப்பங்கள் வருகின்றன என்பதைப் பார்க்கிறோம், இருந்தும் வகுப்புகள் துவங்கியுள்ள நேரத்தில் ஏன் இவ்வளவு காலியிடங்கள்? நீஙகள் தொடர்ந்து வலியுறுத்தும் ஒற்றைச் சாளர முறைதான் தீர்வு என்கிற எண்ணம் வலுப்படும்போது, அதைச் செயலாக்கும் முயற்சிகள் இதுவரை உயர்கல்வித்துறையில் நடக்கவே இல்லையா?
பெருமாள்முருகன்: சில செய்திகள் 65 விழுக்காட்டு இடங்கள் நிரம்பியுள்ளன என்று சில செய்திகள் 55 விழுக்காடுதான் என்றும் சொல்கின்றன. கிட்டத்தட்ட 1,25,000 இடங்கள் உள்ளன. அவற்றில் 75,000 இடங்கள் நிரம்பின என்று ஒருசெய்தி பார்த்தேன். முதல்கட்டச் சேர்க்கைதான் முடிந்திருக்கிறது. அதிலேயே பாதியிடங்களுக்கு மேல் நிரம்பியிருப்பது மகிழ்ச்சி தருகிறது. மாணவர் சேர்க்கை இன்னும் முடியவில்லை. அரசு கலைக்கல்லூரிகளைப் பொருத்தவரை ஜூன் நடுவில் சேர்க்கைப் பணிகள் நடந்து ஜூலை முதல் வாரத்தில் வகுப்புகள் தொடங்கினாலும் மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் மாதம் வரைக்கும் போகும். அதற்குக் காரணம் இடஒதுக்கீட்டுப் பிரச்சினைகளும் பிற படிப்புகளுக்குச் சேர்க்கை தாமதம் ஆவதும்தான்.
மாநகரங்கள் உட்பட அனைத்து அரசு கல்லூரிகளிலுமே பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்கள் சேர்வதில்லை. இசுலாமியர் ஒதுக்கீடு உட்படப் பிற்படுத்தப்பட்ட பிரிவுக்கு முப்பது விழுக்காடு இடம் உள்ளது. அவற்றில் ஐந்து விழுக்காடுகூட நிரம்புவதில்லை. எல்லா ஊர்களிலும் சுயநிதிக் கல்லூரிகள் இருப்பதாலும் அவற்றில் பணம் செலுத்திப் படிக்கும் அளவு பொருளாதார வசதியைப் பிற்படுத்தப்பட்டோர் பெற்றிருப்பதாலும் அங்கே சென்றுவிடுகின்றனர். பெருங்கட்டிடங்கள், பேருந்து வசதி, கடுமையான ஒழுங்குமுறை, ஒழுக்க விதிகள் எனச் சுயநிதிக் கல்லூரிகள் இயங்குவதால் அவற்றிற்கு அனுப்பிப் படிக்க வைப்பதைப் பெற்றோர் விரும்புகின்றனர். மேலும் பொருளாதார வசதி பெற்றோர் தம் பிள்ளைகளைத் தொழிற்கல்விக்கு அனுப்புகின்றனர். மருத்துவம், பொறியியல் ஆகியவற்றுக்கே முன்னுரிமை தருகின்றனர். மருத்துவத்தில் ஆங்கில மருத்துவம், பல் மருத்துவம், கால்நடை மருத்துவம், இந்திய மருத்துவம், மருத்துவம் சார்ந்த தொழில்நுட்பப் படிப்புகள் எனப் பல்வேறு வகைகள் இருக்கின்றன. பொறியியல் கல்லூரிகளும் 500க்கு மேல் உள்ளன. அவற்றில் பல்வேறு படிப்புகளும் உள்ளன. அரசு நிறுவனங்களில் இடம் கிடைக்கவில்லை என்றால் பல நூறாயிரம் கட்டணம் செலுத்தித் தனியார் கல்லூரிகளில் படிக்க வைக்கும் அளவுக்குப் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் முன்னேறி இருக்கின்றனர். பிற பிரிவுகளில் அதன் விழுக்காட்டுத் தொகை குறைவு. அதனால் பொதுவாகவே கலை அறிவியல் படிப்புகளை அவர்கள் கடைசி இடத்தில் வைத்திருக்கின்றனர்.
அரசு கல்லூரிகளில் இருக்கும் சுதந்திரம் மாணவர்களுக்குப் பிடித்திருந்தாலும் பெற்றோருக்குப் பிடிப்பதில்லை. குறிப்பாக ஆண்களும் பெண்களும் இயல்பாகப் பேசிச் சிரிப்பதும் சேர்ந்து நடப்பதும் பேருந்து நிறுத்தங்களில் நின்று கொண்டிருப்பதும் பெற்றோருக்குக் கோபத்தைத் தருகின்றன. இங்கே சேர்த்தால் தன் பிள்ளையும் இப்படி ஆகிவிடுமோ என்று அஞ்சுகிறார்கள். இங்கே ஒழுக்கத்தின் ஆதாரமே ஆண் – பெண் உறவில்தான் இருக்கின்றதாக நம்புகிறார்கள். நூறு வருசத்திற்கு முன் போலப் பெண் வெளியில் வராமலே இருந்தால், வந்தாலும் ஆண் முகத்தை ஏறெடுத்தும் பாராமல் இருந்தால் எல்லோருக்கும் மகிழ்ச்சி. சுயநிதிக் கல்லூரிகளில் அப்படித்தான் வைத்திருக்கிறார்கள். ஒரே பேருந்தில் சென்றாலும் ஆணும் பெண்ணும் பேசிக்கொள்ள வாய்ப்பில்லை. கண்காணிக்கும் கண்கள் தொடரும். கல்லூரி வளாகத்திலும் வகுப்பறையிலும் அப்படித்தான். சுயநிதிக் கல்லூரிகள் இப்படியான கட்டுப்பாடுகளால் சாதிக் கலப்பைத் தடுத்து வைத்திருக்கின்றன என்று நினைக்கிறார்கள். அரசு கல்லூரிகள் சாதிக் கலப்பை ஊக்கப்படுத்தும் சூழலைக் கொண்டிருக்கின்றன எனக் கருதுகிறார்கள். இதில் சிறிதளவுதான் உண்மை உண்டு. எனினும் பொதுக்கருத்து அப்படி இருக்கிறது. ஆசிரியராகவும் முதல்வராகவும் பணியாற்றிய காலத்தில் எங்கள் கல்லூரியில் ஆண்களும் பெண்களும் பேசிக் கொள்வதைப் பற்றிப் பலர் விசாரித்திருக்கிறார்கள். அதைக் குற்றமாகச் சுமத்திப் பேசியிருக்கிறார்கள்.
பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் அரசு கல்லூரிக்கு வராமல் இருப்பதற்கு இப்படிப்பட்ட மனோபாவமும் காரணம். இதன் காரணமாக அப்பிரிவு மாணவர்களுக்கான இடம் பெருமளவு காலியாக இருக்கிறது. நீங்கள் சொல்லியிருக்கும் முப்பத்தைந்து விழுக்காடு காலியிடத்தில் இருபத்தைந்து விழுக்காடு நிச்சயமாகப் பிற்படுத்தப்பட்ட பிரிவு ஒதுக்கீட்டு இடங்கள் என்று தாராளமாகச் சொல்லலாம். சில கல்லூரிகளில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர் இடங்களும் காலியாக இருப்பதுண்டு. கொங்குப் பகுதியில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் எண்ணிக்கை குறைவு. அதனால் அப்பிரிவிலும் காலியிடங்கள் இருக்கும். மொத்தமாக அதை ஐந்து விழுக்காடு என்று கொண்டாலும் இரண்டும் சேர்ந்தே முப்பது விழுக்காடு காலியிடம் வந்துவிடுகிறது. பெண்களுக்கான இடங்களும் முழுதும் நிரம்பியிருக்காது. மகளிர் மட்டும் பயிலும் கல்லூரிகளுக்கே பெற்றோர் முன்னுரிமை தருவார்கள். இருபாலர் பயிலும் கல்லூரிகளில் பெண்களுக்கான ஒதுக்கீட்டு இடங்கள் காலியாக இருக்கும்.
இத்தகைய காரணங்களால் இத்தனை விழுக்காடு காலியிடம் இருப்பதாகச் செய்தி வருகிறது. இப்போது இருகட்டச் சேர்க்கைதான் முடிந்திருக்கிறது. இன்னும் சேர்க்கை பல கட்டங்களாக நடக்கும். பொறியியல் படிப்பில் சேரலாம் என்று எதிர்பார்த்துக் கலைக்கல்லூரியில் சேராமல் இருப்போர் உண்டு. அதில் எதிர்பார்த்த கல்லூரி அல்லது பாடப்பிரிவு கிடைக்காத மாணவர்கள் இங்கே வருவார்கள். இங்கே சேர்ந்த பிறகு பொறியியல் படிப்போ மருத்துவம் சார்ந்த தொழில்நுட்பப் படிப்போ கிடைத்தால் விலகிச் செல்வோரும் இருப்பர். அதனால் காலியிடம் கூடவும் வாய்ப்புண்டு. பொறியியல் உள்ளிட்ட பிற படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை தாமதம் ஆவதால் இந்நிலை. ஆகவே அரசு கலைக் கல்லூரிகளில் முப்பத்தைந்து விழுக்காடு காலியிடம் இருக்கிறது என்று செய்தி வந்தால் மாணவர்கள் சேர விரும்பவில்லை என்று அர்த்தம் அல்ல. இத்தகைய செய்திகள் மறைமுகமாக அரசு கல்வி நிறுவனங்களுக்கு எதிராகச் செயல்படுகின்றன. செய்தி எழுதுவோர் காரணத்தைச் சேர்த்து எழுதுவதில்லை. அதைப் பற்றி விவரிக்கும் கட்டுரைகளும் இல்லை. கல்வியைத் தனியார் மயமாக்குவதில் எல்லாத் தரப்பும் வரிந்து கட்டிக்கொண்டு ஒத்துழைக்கின்றன. அதில் ஊடகங்களுக்கும் பங்குண்டு.
ஜூலை மாதத்திலேயே கலைக்கல்லூரி மாணவர் சேர்க்கையைத் தொண்ணூறு விழுக்காட்டுக்கு மேல் கொண்டு வரலாம். அதற்குச் சில விஷயங்களைப் புரிந்துகொண்டு உயர்கல்வித்துறை வழிகாட்டுதல் தர வேண்டும். பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களின் விண்ணப்பம் முடிந்தாலும் அதைப் பிற பிரிவு மாணவர்களைச் சேர்க்கும்படி மாற்றுவதில்லை. சேர்க்கைக் கால இறுதி வரை காத்திருக்கிறார்கள். அது தேவையில்லை. விண்ணப்பங்கள் முடிந்த பிறகு பதினைந்து நாள் இடைவெளியில் அவ்விடங்களைப் பிற பிரிவு மாணவர்களை அதாவது பட்டியலினம், பழங்குடியின மாணவர்களைச் சேர்க்கும் வகையில் மாற்றிவிடலாம். அது மிக எளிதானது. கல்லூரியில் மாணவர் சேர்க்கைக் குழுக் கூட்டம் கூட்டித் தீர்மானம் நிறைவேற்றினால் போதும். பட்டியலின, பழங்குடியின மாணவர்களில் எத்தனையோ பேர் இடம் கிடைக்காமல் காத்திருக்கும் போது இந்த ’ஒதுக்கீடு மாற்ற’ நடவடிக்கையைத் தள்ளிப் போட வேண்டியதில்லை. பிற்படுத்தப்பட்ட பிரிவிலிருந்து அரிதாகச் சேர வரும் ஒன்றிரண்டு மாணவர்களுக்கும் இடம் கொடுக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு பாடத்திலும் ஐந்து விழுக்காடு இடங்களை நிரப்பாமல் வைத்துக்கொள்ளலாம். அதனால் யாருக்கும் பாதிப்பு இல்லை. அப்படிச் செய்தால் ஜூலை 15க்குள் தொண்ணூறு விழுக்காடு இடங்களை நிரப்பிவிடலாம்.
ஒற்றைச் சாளர முறைக் கலந்தாய்வினாலும் காலியிடம் குறையும் என்பதில் சந்தேகமில்லை. அதில் மாணவர் விரும்பும் பாடம், விரும்பும் கல்லூரி ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு அதிகம். பரிந்துரைகளுக்கும் லஞ்சத்திற்கும் இடமில்லாமல் போகும். ஒற்றைச் சாளர முறைக் கலந்தாய்வினால் நான் ஏற்கனவே சொன்னபடி ஒரு பகுதியில் நிறைந்து வாழும் பழங்குடியினப் பிரிவு மாணவர்கள் பரவலான வாய்ப்பை அறியவும் பெறவும் முடியும். பிற பிரிவினருக்கும் அத்தகைய வாய்ப்பு உருவாகும். கொங்குப் பகுதியில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் குறைவு என்று சொன்னேன். கலந்தாய்வு முறையால் வட தமிழகம் அல்லது தென் தமிழகத்திலிருந்து அப்பிரிவு மாணவர்கள் இங்கே வர முடியும். இங்கே நிறைந்து வாழும் அருந்ததியர் பிற பகுதிகளுக்குச் செல்ல முடியும். ஒருவகையில் ஒப்புரவு நிகழும். ஒற்றைச் சாளர முறை வந்தாலும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் காலியிடங்கள் இருக்கும். அவற்றைப் பிற பிரிவு மாணவர்களுக்கு மாற்றும் நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டியிருக்கும்.
வி: நீங்கள் முதல்வராக இருந்த போது மாணவர் சேர்க்கைக்கு எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொண்டீர்கள்?
பெமு: காலியிடம் இருப்பதற்கு முதல்வரும் ஆசிரியர்களும் கூடக் காரணம். சேர்க்கைக்கு வரும் மாணவர்களை விரட்டும் வேலையைச் செய்யும் ஆசிரியர்களே அதிகம். பெரும்பாலான ஆசிரியர்கள் கீழ்நிலையில் இருந்து கல்வி கற்று வந்தவர்கள். ஆனால் தம்மைப் போன்ற மாணவர்களை விரட்டுகிறார்கள். மாணவர் சேர்க்கை நடக்கும் போது ஒருகல்லூரிக்குச் சென்று பாருங்கள். மாணவர்களையும் பெற்றோர்களையும் அதிகாரத்தோடு நடத்தும் கொடுமையைக் காணலாம். அவர்களுக்கு உரிய தகவல்களைத் தர மாட்டார்கள். வழிகாட்டுவதில்லை. முதல் முதலாகக் கல்லூரிக்கு வருவோர் தடுமாறிப் போவர். மேலும் மாணவர் சேர்க்கைக் காலம் கூடக்கூட ஆசிரியர்களுக்கு நல்லது. ஆம், வகுப்புக்குச் செல்லாமல் சேர்க்கைப் பணியைக் காரணம் காட்டித் தேநீரும் போண்டாவும் சாப்பிட்டுவிட்டு அரட்டை அடித்துக் கொண்டு இருக்கலாமே.
நம் ஆசிரியர்களில் இருபத்தைந்து விழுக்காட்டினரே கற்பிக்கும் ஆர்வம் கொண்டவர்கள். ஐம்பது விழுக்காடு ஆசிரியர்கள் சந்தர்ப்பவாதிகள். நிர்ப்பந்தம் என்றால் தான் வகுப்புக்குப் போவார்கள். இன்னும் இருபத்தைந்து விழுக்காட்டினர் என்ன செய்தாலும் வகுப்புப் பக்கம் எட்டிப் பார்க்க மாட்டார்கள். அரசு பல தகவல்களைக் கேட்கிறது, அலுவலகம் செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் எங்களுக்குத் தருகிறது, அதனால் வகுப்பு பாதிக்கப்படுகிறது என்றெல்லாம் குற்றம் சொல்வார்கள். ஆனால் அத்தகைய நிலை இருப்பதையே விரும்புவார்கள். எதையாவது ஒன்றைக் காரணம் காட்டி வகுப்புக்குச் செல்லாமல் தவிர்க்க நினைப்போர் எண்ணிக்கை கணிசம். ஒரே ஒரு மாணவரின் விண்ணப்பத்தைக் கையில் வைத்துக்கொண்டு அரைநாளை ஓட்டும் ஆசிரியர் உண்டு. அந்த மாணவரிடம் பெரிய விவரங்களை விசாரித்து அறியும் துப்பறியும் நிபுணர் போலப் பாவித்துக் கொண்டு ஆசிரியர் செய்யும் அழிம்பைப் பார்த்தால் எனக்குக் கோபமும் வரும்; சிரிப்பாகவும் இருக்கும்.
பணியில் சேர்ந்த அடுத்த கல்வியாண்டு முதல் இருபது ஆண்டுகளுக்கும் மேலாகச் சேர்க்கைப் பணியைப் பார்த்து வந்தேன். ஒரு மாணவருக்குப் பத்து நிமிடத்திற்கு மேல் வேலையில்லை. பள்ளி முடித்துக் கல்லூரிக்குச் சென்று சேரும் வரை ஒருகல்லூரி எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியாது. யாரை அணுகுவது, எப்படிக் கேட்பது, என்னென்ன நடைமுறைகள் என எதுவும் தெரியாது. அந்த என் நிலையைக் கருத்தில் வைத்தே ஒவ்வொரு பெற்றோரையும் மாணவரையும் அணுகுவது வழக்கம். ஆத்தூர் கல்லூரியில் பணியாற்றிய காலத்தில் சக ஆசிரியர்களும் நண்பர்களுமான வ.கிருஷ்ணன், க.காசிமாரியப்பன், மா.வெங்கடேசன் ஆகியோரும் என் பார்வையோடு இயைந்து செல்பவர்களாக இருந்தார்கள். ஆகவே அருமையான சூழலை உருவாக்கிச் செயல்பட்டோம். அதற்குப் பின் அத்தகைய சூழலை அமைத்துக்கொள்ள முடியவில்லை. எனினும் என்னளவில் பல நியதிகளை வகுத்துக்கொண்டு கடைப்பிடித்து வந்தேன். பெற்றோரை எதிரில் அமர வைத்துத்தான் பேசுவேன். எழுத்தறிவு இல்லாத, கிராமத்துப் பெற்றோரை எஜமானப் பார்வையில் நடத்துபவரே அதிகம். அரசு அலுவலகங்களைக் கண்டு ஏற்படும் அச்சத்தை முதலில் போக்க வேண்டும். இப்படியெல்லாம் சிறுசிறு நடைமுறை விஷயங்கள். மாணவர் சேர்க்கையில் முடிந்தவரை வரும் மாணவர்களை எல்லாம் சேர்த்துக்கொள்ள வேண்டும், விரைவில் செய்ய வேண்டும் என்பதே என் பார்வை.
ஆத்தூர் கல்லூரியில் சேர மாணவரிடையே நல்ல போட்டி இருக்கும். அது கிராமத்துக் கல்லூரி. சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் பெரும்பான்மையான மக்கள் விவசாயக் கூலிகள் அல்லது சிறுவிவசாயிகள். ஆகவே அரசுக் கல்லூரியை நாடித்தான் வருவார்கள். ஆண்டுதோறும் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களை இடமில்லை என்று அனுப்ப நேரும். அது பெருவருத்தம் தரும். நாமக்கல் அப்படியல்ல. இந்தக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை குறைவாகவே இருக்கும். தொழில் நகரம், பணப்புழக்கம் அதிகம். ஆகவே பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்கள் ஓரிருவரே வருவர். அவ்விடங்கள் அப்படியே காலியாகக் கிடக்கும். சில படிப்புகளைப் பற்றி மாணவர்கள் அறியவே மாட்டார்கள். முதல்வராக இருந்தபோது எளிமையான சில நடவடிக்கைகளை மேற்கொண்டேன். அவை நல்ல பலன் தந்தன.
கல்லூரிக்குள் சேர்க்கைக்கென வரும் மாணவர் எவரையும் வெளியே அனுப்பக் கூடாது. எந்தெந்தப் படிப்புகளில் இடம் இருக்கிறதோ அவ்விவரத்தைச் சொல்லி ஏதோ ஒருவகையில் சேர்த்துவிட வேண்டும். ஒருதுறையில் இடமில்லை என்றால் இன்னொரு துறைக்கு அம்மாணவருக்கு வழிகாட்டி அனுப்ப வேண்டும் அல்லது முதல்வரைச் சந்திக்கச் சொல்லி அனுப்ப வேண்டும். ’ஒதுக்கீடு மாற்றம்’ என்பதை விரைவில் நடைமுறைப்படுத்திப் பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர் இடங்களில் பிற மாணவர்களையும் சேர்க்க ஏற்பாடு செய்தேன். முந்தைய கல்வியாண்டில் 1800 என்னும் எண்ணிக்கையில் இருந்த மாணவர் சேர்க்கை 2300 ஆனது. ஐம்பதாண்டைக் கடந்த நாமக்கல் கல்லூரி இரண்டாம் நிலை என்னும் தரத்திலேயே இருந்தது. 2000 மாணவர்கள், இருமுதுநிலைப் படிப்புகள் இருந்தால் அது முதல்நிலையாகத் தரம் உயரும். 2000 என்னும் எண்ணிக்கையை எட்ட முடியாமல் பல்லாண்டுகளாகத் தரம் உயரவில்லை. ஒரே ஆண்டில் எண்ணிக்கையை உயர்த்தி முதல்நிலைத் தரத்திற்கு விண்ணப்பித்தேன்.
முதல்நிலையாகத் தரம் உயர்ந்துவிட்டால் அரசு ஒதுக்கும் நிதியளவு கூடும். கல்லூரிக்கு வசதிகள் பெருகும். உடனே தரம் உயர்த்திவிட்டால் என்னை வேறு கல்லூரிக்கு மாற்றிவிடுவார்கள் என்று சக ஆசிரியர்கள் சொன்னார்கள். எனக்கு முதல்நிலைக் கல்லூரி முதல்வராகப் பதவி உயர்வு கிடைக்கக் காலதாமதம் ஆகும். அதனால் அப்படிச் சொன்னார்கள். இடம் மாற்றினால் செல்கிறேன், என் சுயநலத்திற்காகக் கல்லூரி நலனை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று சொன்னேன். அரசு பெரும்பாலான விஷயங்களில் மந்தமாகத்தானே செயல்படும்? நான் விண்ணப்பித்து ஐந்தாண்டுக்கு மேலாகிவிட்டது. இன்னும் முதல்நிலைக் கல்லூரி அந்தஸ்து கிடைக்கவில்லை. ஆனால் மாணவர் எண்ணிக்கை நிலையாக இருக்கிறது.
புள்ளியியல் படிப்பில் ஒற்றை இலக்கத்திலேயே மாணவர் சேர்க்கை இருந்தது. அத்துறைத்தலைவர், ஆசிரியர்களின் ஒத்துழைப்பைப் பெற்று இரட்டை இலக்கத்தில் மாணவர்களைச் சேர்க்க முடிந்தது. வரலாற்றுப் பாடத்திற்கு ஆசிரியர் இல்லை என்பதால் மாணவர் சேர விரும்பவில்லை. பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் ஆசிரியர்களை நியமித்ததும் மாணவர் சேர்க்கை அதிகரித்தது. சிறு நடைமுறை மாற்றம்கூட மாணவர் சேர்க்கை கூடுவதற்குக் காரணமாக அமைந்ததுண்டு. பொதுப்போட்டியில் ஒருமாணவருக்கு இடம் கிடைக்கிறது. அம்மாணவர் பட்டியலினப் பிரிவைச் சேர்ந்தவர். அவரிடம் சாதிச் சான்றிதழ் இல்லை. ’சாதிச் சான்றிதழ் இல்லை’ என்று சொல்லி அவருக்கு இடம் கொடுக்காமல் அனுப்பிவிடுவார்கள். அம்மாணவருக்குச் சாதிப்பிரிவு அடிப்படையில் இடம் வழங்கவில்லை, பொதுப்போட்டியில்தான் கிடைத்திருக்கிறது. அதற்குச் சாதிச் சான்றிதழ் வழங்கத் தேவையில்லை என்பது என் பார்வை.
முற்படுத்தப்பட்ட பிரிவு மாணவருக்குச் சாதிச் சான்றிதழே கிடையாது. அவரைப் பொதுப்பிரிவில் சேர்க்கிறோம். அவரிடம் சாதிச் சான்றிதழ் கேட்பதில்லை. ஆனால் பொதுப்பிரிவில் ஒரு பிற்படுத்தப்பட்ட மாணவரோ பட்டியலின மாணவரோ சேர்ந்தால் எதற்குச் சாதிச் சான்றிதழைக் கேட்க வேண்டும்? உதவித்தொகைக்கு அவர் விண்ணப்பிக்கும் போதுதான் சாதிச் சான்றிதழ் தேவை. பொதுப்பிரிவில் அது அவசியமில்லை. இந்த விளக்கத்தைச் சொல்லி அம்மாணவரைச் சேர்க்கச் செய்திருக்கிறேன். ’விரைவில் சாதிச் சான்றிதழ் வாங்கிவிடுங்கள். அப்போதுதான் உதவித்தொகை கிடைக்கும்’ என்னும் விவரத்தையும் அவருக்குச் சொல்லி அனுப்புவேன். என் தர்க்கம் புரியாத ஒருதுறைத்தலைவர் ’சாதிச் சான்றிதழ் இல்லையென்றாலும் சேர்க்கலாம் என நீங்கள் எழுதிக் கையொப்பம் போட்டுக் கொடுங்கள். சேர்க்கிறேன்’ என்று கேட்டார். ஏதாவது பிரச்சினை வந்தால் என்னைக் கைகாட்டிவிடலாம் என்னும் தந்திரம் அல்லது தனக்கு அந்தத் தர்க்கம் புரியவில்லை என்பதை வெளிக்காட்டிக் கொள்ள விரும்பாத அகங்காரம் அல்லது புரிந்தும் சக ஆசிரியர்களிடம் தன் அறியாமையை ஒத்துக்கொள்ள இயலாத பாவனை.
சக மனிதர்களின் இத்தகைய இயல்புகள் புரியாமல் ஆசிரியராக இருக்கலாம், முதல்வராக இருக்கலாம், எழுத்தாளராக இருக்க முடியாது. ஆகவே எந்த எதிர்வினையும் செய்யாமல் அவ்விண்ணப்பத்தில் ’பொதுப்பிரிவில் சேரும் மாணவர் தம் சாதிச் சான்றிதழைச் சமர்ப்பிப்பது கட்டாயத் தேவையல்ல. ஆகவே இவரைச் சேர்க்கவும்’ என்று எழுதிக் கொடுத்திருக்கிறேன். பின்னர் இதையே ஒருநடைமுறை போலக் கொண்டு வந்தனர். எந்தத் துறையில் என்றாலும் மாணவர் எவரேனும் சாதிச் சான்றிதழோ பிற சான்றிதழோ இல்லாமல் வந்தால் என்னிடம் அனுப்புவதை வழக்கமாக்கினர். இருக்கட்டும் என்று ஒருகல்வியாண்டு முழுவதும் அப்படி வரும் மாணவர்களுக்கு அனுமதி கொடுத்து எழுதி அனுப்பினேன். சிலர் மதிப்பெண் சான்றிதழையே மறந்து வந்துவிடுவர். அவர்களுக்குத் தூரத்தைப் பொருத்து ஒருசில நாள் அவகாசம் கொடுத்து அனுப்புவேன். அடுத்த கல்வியாண்டில் சேர்க்கைக் குழுவிலேயே ’சாதிச் சான்றிதழ் இல்லாமல் பொதுப்பிரிவில் சேர்க்கலாம்’ என்பதைத் தீர்மானமாக்கி என்னிடம் வராமலே அதைச் செயல்படுத்தச் செய்தேன். பிற சான்றிதழ்கள் இல்லாத மாணவருக்கும் நியாயமான காரணம் என்றால் துறைத்தலைவரே ஓரிரு நாள் அனுமதி கொடுக்கலாம் என்பதையும் பொதுவாக்கினேன்.
இப்படிப் பல சடங்குத்தனமான நடைமுறைகளைக் களைந்து மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தினேன். முதல்வரும் ஆசிரியரும் முனைந்தால் முதலிரு கட்டச் சேர்க்கையிலேயே பெரும்பாலான மாணவர்களைச் சேர்த்துவிடலாம். இவ்வாண்டு சென்னை, மாநிலக் கல்லூரியில் அப்படி நடந்திருக்கிறது. அக்கல்லூரியில் மொத்தமுள்ளவை கிட்டத்தட்ட 2300 இடங்கள். முதலிரு கட்டச் சேர்க்கையிலேயே 2000 இடங்கள் நிரம்பிவிட்டன. மாநகரக் கல்லூரி என்பது மட்டும் காரணமல்ல. கல்லூரி முதல்வரின் பார்வையும் செயல்திறமும் முக்கியம். அதனால் இது சாத்தியமாகி இருக்கிறது.

இப்படித் தமிழ்நாடு முழுவதும் நடந்தால் அரசு கலைக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கூடும். காலியிடமே இல்லாத நிலையை உருவாக்கலாம். பன்னிரண்டாம் வகுப்பு முடிக்கும் மாணவர்களில் ஐம்பத்தைந்து விழுக்காட்டினரே உயர்கல்வியில் சேர்கின்றனர் என்றால் மீதமுள்ள நாற்பத்தைந்து விழுக்காட்டினர் வெளியில் உள்ளனர். ஆனால் ஏன் காலியிடம் இருக்கிறதே, ஏன்? அம்மாணவர்களையும் உயர்கல்விக்குக் கொண்டுவர நம் பார்வையும் செயல்முறையும் மாற வேண்டும். அதற்கு ஒற்றைச் சாளரமுறைக் கலந்தாய்வு பெரிதும் பயன்படும் என்பது என் எண்ணம்.
வி: சென்னை மதுரை உள்ளிட்ட நகரங்களிலுள்ள கிட்டத்தட்ட 29 அரசுக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள இயற்பியல், கணிதம், வரலாறு உள்ளிட்ட பாடங்களை நீக்கிவிட்டு வேலைவாய்ப்பை நல்கும் என நம்பப்படும் கணிப்பொறி சார்ந்த படிப்புகளை வழங்க முடிவெடுத்திருப்பதாக செய்தியொன்றைப் பார்த்தேன். காலத்துக்கேற்பப் புதிய படிப்புகள் வரட்டும். ஆனால், அடிப்படை அறிவியல், வரலாற்றுப்பாடங்களை நீக்குவது சரியா? இதனால் கௌரவ விரிவுரையாளர்களும் வேலையிழப்பு வருமே என அஞ்சுகிறார்கள்.

பெமு: ஆசிரியர்களுக்கு வேலை வேண்டும் என்பதற்காக ஒருபடிப்பு இருக்க வேண்டும் என்று சொல்வது சரியானதாகத் தோன்றவில்லை. தம் உறுப்பினர்களின் நலன்களைப் பாதுகாக்கத் தொழிற்சங்கம் அக்கோரிக்கையை வைக்கலாம். அதுகூட அத்தனை ஏற்புடையதல்ல. ஒருகல்லூரிக்கு நிரந்தர ஆசிரியர் ஒருவர் வந்து காலிப்பணியிடம் இல்லாத நிலை ஏற்பட்டால் அங்கே ஏற்கனவே பணியிலிருக்கும் கௌரவ விரிவுரையாளரை பணிநீக்கம் செய்யும் நடைமுறை இல்லை. தேவையிருக்கும் வேறு கல்லூரிக்கு அவரை மாற்றிவிடுவதையே அரசு கையாள்கிறது. தற்காலிகப் பணி என்றாலும் அவருக்குப் பணிப்பாதுகாப்பை அரசு வழங்குகிறது. கடந்த பதினைந்து ஆண்டுகளாக நானறிய கௌரவ விரிவுரையாளர் எவரும் பணியிழக்கவில்லை. வேறு காரணத்தால் தாமாக விலகிக் கொண்டாலொழிய அரசே பணிநீக்கம் செய்வதில்லை. இத்தகைய படிப்புகளை நீக்குவதை வேறு காரணம் கொண்டே பார்க்க வேண்டும்.
ஒருபடிப்பின் முக்கியத்துவத்தை மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை வைத்து மட்டும் முடிவு செய்யக் கூடாது. அப்படிப்பு சமூகத்திற்கு எத்தகைய பங்களிக்கும் என்பதைக் கவனத்தில் இருத்தித்தான் பார்க்க வேண்டும். மாணவர் சேர்க்கை எண்ணிக்கை கூடுவதும் குறைவதும் சமூகச் சூழலைப் பொருத்தது. அது அவ்வப்போது மாறும். எல்லாப் படிப்புகளிலும் அப்படித்தானே. பொறியியலில் கொஞ்சகாலம் கணினி அறிவியல் படிப்புக்குப் பெரும்போட்டி இருந்தது. சிலகாலம் இயந்திரவியல் படிப்புக்கு மாணவர் அலைமோதினர். பின்னர் அம்மோகம் தீர்ந்து இன்னொரு படிப்பில் கூட்டம் சேரும். மாணவர் சேராமல் காற்றாடும் படிப்புக்குச் சில ஆண்டுகளில் மவுசு கூடி விடும். சகடக்கால் (சக்கரம்) போல வருவது படிப்புகளுக்கும் உண்டு. மேலிருப்பது கீழும் கீழிருப்பது மேலும் மாறுவது இயல்பு. இதை வைத்துப் படிப்பை நீக்குதல் தவறு.
1980களில் தமிழ் இலக்கியம் படிக்க நான் சேர்ந்தபோது அதற்கு மவுசில்லை. நாற்பது இடங்கள் கொண்ட அப்படிப்பில் ஒன்பது பேர் மட்டுமே இருந்தோம். எல்லோரும் இழிவாகக் கருதும் படிப்பாகத் தமிழிலக்கியம் இருந்தது. 1980களில் நாமக்கல் கல்லூரியில் இளங்கலைத் தமிழ் படிக்க ஒருமாணவர் கூடச் சேரவில்லை. ஒருபடிப்பில் ஒருமாணவர் கூடச் சேராத நிலை சில ஆண்டுகள் நீடித்தால் அப்படிப்பை நீக்கும் நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும். ஆசிரியப் பணியிடம் குறைந்து போகும். ஆத்தூர் கல்லூரியில் சேர்ந்திருந்த மாணவர் ஒருவரை அங்கிருந்து அழைத்து வந்து நாமக்கல் கல்லூரியில் சேர்த்தனர். ஆசிரியர்களே அம்மாணவருக்கான செலவை ஏற்றுக்கொண்டனர். அப்படிச் செய்து அப்படிப்பைக் காத்தனர். அந்நிலை 2000க்குப் பிறகு மாறிவிட்டது. இப்போது பாருங்கள். ஒருகல்லூரியில் தமிழிலக்கியப் படிப்புக்கே அதிக விண்ணப்பங்கள் வருகின்றன. பன்னிரண்டாம் வகுப்பில் எந்தக் குழுவில் படித்தவராக இருப்பினும் தமிழிலக்கியத்திற்கு விண்ணப்பம் போடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் தமிழிலக்கியப் பாடத்திற்கு அதிக முக்கியத்துவம் இருப்பது ஒருகாரணம் என்கிறார்கள். இருக்கலாம். ஏதோ ஒருகாரணம்.
இப்போது சில கல்லூரிகளில் சில படிப்புகளை நீக்குவதாக அறிவிப்பு வருவதைப் பார்த்தால் ஒருமாணவர் கூடச் சேராத நிலை இருப்பதாகத் தெரியவில்லை. மாணவர் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. அவ்வளவுதான். கணிதப் பாடத்தைப் படிக்க வருவோர் எண்ணிக்கை குறைகிறது என்று அப்பாடத்தை நீக்கிவிட்டால் எதிர்காலத்தில் கணித ஆசிரியர் கிடைக்காமல் போவாரே, அதற்கு என்ன செய்வது? தொடக்கப்பள்ளியில் இருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரைக்கும் கணித ஆசிரியரின் பங்கு பெரிதல்லவா? கணக்கு இல்லாமல் சமூகம் செயல்பட முடியுமா? சமூக இயக்கத்திற்குக் கணிதம் மிக முக்கியமாயிற்றே. இப்படி அடிப்படைப் படிப்புகள், மொழி இலக்கியப் படிப்புகளுக்குச் சமூகத் தேவை இருக்கிறது. அவற்றை நீக்கும் எண்ணமே தவறு. மாணவர் சேர்க்கையை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும் என்றுதான் யோசிக்க வேண்டும்.
இப்போது பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புகளில் உள்ள கணிதப் பாடத்திட்டம் மிகக் கடினமானதாகவும் அளவுக்கு அதிகமாகவும் இருப்பதாக ஆசிரியர்களும் மாணவர்களும் கருதுகின்றனர். அதனால் கணக்கைப் பார்த்துப் பயப்படுகிறார்கள். அச்சுமையைக் குறைக்க வேண்டும். பாடத்திட்டம் யுபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களைக் கருத்தில் வைத்துத் தயாரிக்கப்பட்டுள்ளது. எல்லா மாணவர்களும் அத்தேர்வுக்குச் செல்வதில்லை. சமூகத்தின் சகல தரப்பையும் கருத்தில் கொண்டுதான் பாடத்திட்டம் வகுக்க வேண்டும். இதுபோல என்ன காரணம் என்று பார்த்து அதைச் சரிசெய்ய முயல வேண்டுமே தவிரப் படிப்பையே நீக்கும் நடவடிக்கையில் அரசு இறங்கக் கூடாது.
கலைப்பாடங்களுக்கும் அப்படித்தான். வரலாறு இல்லாமல் சமூகம் இயங்க முடியுமா? ’வரலாறு முக்கியம்’ அல்லவா? எந்தத் துறையை எடுத்தாலும் முதலில் அதன் வரலாற்றைத்தான் படிப்போம். இந்திய வரலாற்றில் தமிழ்நாட்டுக்கு இடம் கொடுப்பதில்லை அல்லது மிகக் குறைவாகவே கொடுக்கின்றனர் என்று குறை சொல்கிறோம். வரலாறு படிப்பவர்களை ஊக்கப்படுத்தினால் தானே அக்குறை எல்லாம் நிவர்த்தியாகும்? வரலாறு குறித்து எழுதுவோர், ஆய்வு செய்வோர் மிகக் குறைவு. அதாவது துறைசார் புலமையுடன் அறிவுத்தளத்தில் இயங்குவோர் மிகக் குறைவு. காரணம் என்ன? அத்துறை சார்ந்த கல்விக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பதுதான்.
அடிப்படைக் கலை அறிவியல் பாடங்களைப் பற்றி விரிந்த தளத்தில் பார்க்கும் பார்வை வேண்டும். வேலைவாய்ப்பு சார்ந்து மட்டும் பார்க்கக் கூடாது. மேலும் இத்தகைய படிப்புகளைப் படிப்போருக்கு உரிய வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்து அவற்றை மேம்படுத்த வேண்டுமே தவிர நீக்கக் கூடாது. எத்தனை படிப்புகள் புதிது புதிதாகத் தோன்றினாலும் கலை அறிவியலில் அடிப்படைப் பாடங்கள் என்று உள்ளவற்றின் முக்கியத்துவம் ஒருபோதும் குறைவதில்லை. அதன் அவசியத்தை உணர்ந்து மாணவர்கள் நாடுவதற்கு உரிய வழிவகைகளை அரசு செய்ய வேண்டும். புறப்பயன் ஒன்றை மட்டுமே காணும் நொள்ளைக் கண்களுக்கு அகப்பயன் தரும் படிப்புகளின் அருமை புரியாது. அத்தகைய சந்தர்ப்பத்தில் அத்துறை வல்லுநர்களின் கருத்தை அரசு கோரிப் பெற்ற பிறகே முடிவெடுக்க வேண்டும்.
தொடரும்…

விஜயகுமார்
வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். தற்போது டோக்கியோ அறிவியல் நிறுவனத்தில் (Institute of Science, Tokyo) ஆய்வாளராக உள்ளார். நவீனத் தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் உள்ளவர். தமிழிலிருந்து மலையாளத்துக்கு கவிதைகள் மொழிபெயர்த்துள்ளார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.

பேராசிரியர்களுக்கான உழைப்பு பங்களிப்பு அர்ப்பணிப்பு மேம்படுமேயானால் மட்டுமே சமூக மாற்றம் வரும். சில ரகசிய உண்மைகளை எழுதியுள்ளீர்கள் மேலும் கட்டுடையுங்கள்.