புத்தர் ஒருபோதும் யாரையும் முழுமையைப் பற்றிப் பேச அனுமதித்ததில்லை, ஏனென்றால் அது ஒரு கற்பிதம் —லாஸ்லோ கிராஸ்னஹோர்காய் நேர்காணல்( பகுதி 2)

தமிழில்: எம். ரவிச்சந்திரன்

பேட்டியின் முதல் பகுதி

திர்ல்வெல்: உங்கள் சட்டக்கல்லூரி எந்த நகரத்திலிருந்தது?

கிராஸ்னஹோர்காய்: செகெட் என்ற நகரத்தில். இராணுவச் சேவை முறையினால் அந்த இடத்தை விட்டு வெளியேறுவது எளிதல்ல. நான் கல்லூரியிலிருந்து வெளியேறினால், மீண்டும் இராணுவப் பணிக்கே செல்ல வேண்டியிருக்கும். பொதுவாக, இராணுவச் சேவை இரண்டு ஆண்டுகள்; ஆனால் நீங்கள் பட்டம் பெற்றிருந்தால், ஒரு ஆண்டு மட்டும் பணியாற்றினால் போதும். ஆனால் நீங்கள் பல்கலைக்கழக பட்டப்படிப்பை பாதியில் விட்டுவிட்டால், இரண்டாம் ஆண்டு ராணுவச்சேவை செய்ய மீண்டும்  அந்த நகரத்திற்கு கட்டாயமாக போக வேண்டும். அதனால் நான் படிப்பை நிறுத்தவில்லை, ஒத்திவைத்தேன். புடாபெஸ்டில் சிறிது காலம் தங்கி மதம் மற்றும் மொழியியலைப் படித்தேன். எனது பழைய கிரேக்க மற்றும் லத்தீன் மொழிக்கல்வியை தொடர்ந்தேன், ஆனால் நான் உண்மையில் பல்கலைக்கழகத்திற்கு செல்லவில்லை என்பதால், தேர்வுகள் மிக கடினமாக இருந்தன. இறுதியாக நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, எனக்கு குழந்தைகள் பிறந்தனர். என் குழந்தைகளால் நான் செய்ய வேண்டிய அச்சுறுத்தக்கூடிய இராணுவ சேவையிலிருந்து தப்பித்தேன். இரண்டு குழந்தைகள் இருந்தால் கட்டாய ராணுவச்சேவை செய்யவேண்டிய அவசியமில்லை என்ற சலுகை  இருந்தது. 

இராணுவச் சேவை என்பது எனக்கு கிட்டத்தட்ட மரணத்திற்கு சமமானது. அந்த ஒரு வருடம் முழுவதும், முகாமிலிருந்து வெளியேற எனக்கு ஒருமுறை கூட அனுமதி கிடைக்கவில்லை. நான் ஒரு வீரனோ, பேஸிஃபிஸ்டோ(pacifist) அல்ல, ஆனால் நீங்கள் ஒரு காவல் நிலையில் துப்பாக்கியுடன் எதையும் செய்யாமல் நின்றிருக்க வேண்டும். அவ்வப்போது ஒரு அதிகாரி என்னைக் கண்காணிக்க வருவார், அப்போது நான் காஃப்காவைப் படித்துக் கொண்டிருந்தால் என்னால் அதை நிறுத்த முடியாது; ஏனென்றால் அந்த முட்டாள் அதிகாரியை விட காஃப்கா எனக்கு மிகவும் சுவாரஸ்யமானவர், அதனால் நான் எப்போதும் முகாமில் தண்டனைகளைப் பெற்றேன். தண்டனை அவ்வளவு மோசமானது அல்ல, ஆனால் முகாமிலிருந்து வெளியேற அனுமதி கிடைக்காது என்பதுதான் கொடுமை. எப்போதும் அங்கேயே இருப்பது மிகவும் பயங்கரமாக இருந்தது.

என் ராணுவ சேவையின் தொடக்கம் மிகக் கடினமாக இருந்தது. என்னுடன் பணிக்கு சேர்ந்த புதிய வீரர்களுடன் இரவு ரயிலில் சென்றபோது நான் முற்றிலும் உடைந்து போனேன். என்னால் யாருடனும் பேச முடியவில்லை. அனைவரும் நகைச்சுவைகள் சொல்லி  சிரிக்க விரும்பினர், ஆனால் எனக்கு அதில் விருப்பமில்லை. என்னைப் போலவே உள்ள மற்றொரு இளைஞனைக் கண்டேன், நாங்கள் சிறிது பேசினோம். வாய்ப்பு கிடைத்தால் நாம் மீண்டும் சந்திப்போம் என்று இருவருமே சொன்னோம். சுமார் ஒரு வாரத்திற்குப் பிறகு, எனக்குச் சிறிது ஓய்வு நேரம் கிடைத்தபோது, அவன் வேலை செய்யும் கட்டிடத்திற்குச் சென்று, “இந்த நபரை எங்கே பார்க்கலாம்?” என்று கேட்டேன். யாரோ “மூன்றாவது மாடி” என்றார்கள். மூன்றாவது மாடியில் மீண்டும் கேட்டபோது, தண்டனை காரணமாக அவன் ஆயுதக் கிடங்கில் இருப்பதாகச் சொன்னார்கள். அவன் துப்பாக்கிகளைச் சுத்தம் செய்து கொண்டிருந்தான், நான் கதவைத் திறந்த அதே கணத்தில் அவன் வாயில் சுட்டுக்கொண்டான். சரியாக அதே தருணத்தில். நான் கதவைத் திறந்தேன், என் நண்பன் தன்னைத்தானே சுட்டுக்கொண்டான். நான் ஒரு சிறுவன். நாங்கள் குழந்தைகள். எங்களுக்கு அப்போது பதினெட்டு வயது கூட முழுமையாக ஆகவில்லை.

உங்கள் கேள்வி என்ன?

திர்ல்வெல்:  நான் ஒரு தோராயமான காலவரிசை உருவாக்க முயற்சிக்கிறேன். நீங்கள் கியுலாவில் பிறந்தீர்கள், பின்னர் இராணுவச் சேவை, செகெட்டில் உங்கள் படிப்பு, நீங்கள் அலைந்து திரிந்த ஆண்டுகள், பின்னர்  Satantango நாவல் வெளியீடு. நீங்கள் 1987-ல் பெர்லின் வந்தீர்கள், 1989-ல் மீண்டும் ஹங்கேரிக்குத் திரும்பினீர்கள்.

கிராஸ்னஹோர்காய்: நான் மீண்டும் மீண்டும் ஜெர்மனிக்கு வந்து கொண்டே இருக்கிறேன்.

தொண்ணூறுகளின் தொடக்கத்தில், நான் War and War எழுதத் தொடங்கினேன். முதலில், ரோமானியப் பேரரசுக்கு ‘எல்லை’ என்பது எப்படி பொருள்படுகிறது என்பதை அறிய விரும்பினேன். அதற்காக டென்மார்க், கிரேட் பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், கிரீட் என சிதிலமடைந்த இடங்களையும் இராணுவப் பாதுகாப்புத் தடயங்களையும் தேடிச் சென்றேன். நான் எப்போதும் பயணத்திலேயே இருந்தேன். 1996-ல் நியூயார்க்கில் ஆலன் கின்ஸ்பெர்க்கின் குடியிருப்பில் இருந்தபோதுதான் நான் War and War நாவலை முறையாக எழுதத் தொடங்கினேன் என்று நினைக்கிறேன்.

திர்ல்வெல்: நீங்கள் கின்ஸ்பெர்க்கை எப்படிச் சந்தித்தீர்கள்?

கிராஸ்னஹோர்காய்: எங்களுக்கு ஒரு பொதுவான நண்பர் இருந்தார். ஆலன் மிகவும் நட்பானவர். அவரது குடியிருப்பில் கதவும் பூட்டும் தேவையற்ற ஒன்றாக இருந்தது. ஆட்கள் வந்தார்கள், போனார்கள். அங்கு இருப்பது நன்றாக இருந்தது. ஆனால் கின்ஸ்பெர்க்கின் வட்டத்தில்  ஒரு பகுதியாக இருப்பது மிகவும் தொந்தரவாகவும் இருந்தது. பகலில் என்னால் வேலை செய்ய முடிந்தது, இரவில் ஆலன் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும்போது விருந்துகள், உரையாடல்கள் மற்றும் இசை உருவாக்கத்தில் என்னால் பங்கேற்க முடிந்தது. நான் கியுலாவிலிருந்து வந்தவன் என்று அவர்களிடம் சொல்லவில்லை, ஆனால் என்னால் அதை மறக்க முடியவில்லை. நான் அதே மாகாணத்துச் சிறுவன்தான், தலைமுடி இல்லாமல், சில பற்கள் விழுந்த நிலையில், ஆலனுடன் சமையலறையில் அமர்ந்திருந்தபோது அங்கு வந்த இசைக்கலைஞர்கள், கவிஞர்கள், ஓவியர்களைப் பார்த்து திகைத்து அமர்ந்திருந்தேன். அவர்கள் அழிவற்றவர்கள்.

திர்ல்வெல்: முன்பு ஒரு உரையாடலில் என்னிடம் நீங்கள் உள்ளுர எப்போதுமே உணரும் காலவுணர்வின்மை (Sense of timelessness) பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். அந்த உணர்வை வரலாற்றின் சுவடுகளை முழுமையாக அழித்த சோவியத் பேரரசின் கீழே நீங்கள் வளர்ந்ததை தொடர்புபடுத்தி பேசியது எனக்கு நினைவிருக்கிறது.

கிராஸ்னஹோர்காய்: அது ஒரு காலமற்ற சமூகம், ஏனென்றால் எதுவுமே ஒருபோதும் மாறாது என்று நீங்கள் நினைக்க வேண்டுமென அவர்கள் விரும்பினர். எப்போதும் அதே சாம்பல் நிற வானம், நிறமற்ற மரங்கள், பூங்காக்கள், வீதிகள், கட்டிடங்கள் மற்றும் நகரங்கள்; மதுக்கடைகளில் மட்டரக பானங்கள், வறுமை மற்றும் உரக்கச் சொல்லத் தடைசெய்யப்பட்ட விஷயங்கள். நீங்கள் ஒரு நித்தியத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். அது மிகவும் மனச்சோர்வை அளித்தது. கம்யூனிசக் கோட்பாட்டையோ அல்லது மார்க்சியத்தையோ நம்பாதது மட்டுமல்லாமல், அதை அபத்தமானதாக, எரிச்சலூட்டக்கூடியதாக கருதிய முதல் தலைமுறை என்னுடையது. இந்த அரசியல் அமைப்பின் முடிவை நான் பார்த்தபோது அது ஒரு அதிசயமாக இருந்தது. அரசியல் சுதந்திரத்தின் சுவையை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். அதனால்தான் இப்போது எனக்கு ஜெர்மன் குடியுரிமை உள்ளது; ஏனென்றால் என்னைப் பொறுத்தவரை ஐரோப்பிய ஒன்றியம் என்பது இப்போது கிழக்கு ஐரோப்பாவின் கடவுளாக உருவெடுத்திருக்கும் மூர்க்கமான அறிவீனத்திற்கு எதிரான அரசியல் சுதந்திரத்தைக் குறிக்கிறது.

நான் கொஞ்சம் வசதியான நடுத்தர உலகத்திலிருந்து(bourgeois) வந்தவன், அங்கு கம்யூனிசக் கோட்பாடு எந்தப் பங்கையும் வகிக்கவில்லை. எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களை ஒருவகையான social democrats என்று சொல்லலாம். என் தந்தை ஒரு வழக்கறிஞர், அவர் ஏழை மக்களுக்கு உதவினார். ஒவ்வொரு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் மாலைநேரம் ஏழைகள் எங்களிடம் வருவார்கள், என் தந்தை அவர்களுக்குக் கட்டணமின்றி உதவுவார்—அதுதான் என் வாழ்க்கையின் யதார்த்தம். அடுத்த நாள் அதிகாலை, அவர்கள் வந்து எங்கள் வாசலுக்கு வெளியே இரண்டு கோழிகளையோ அல்லது எதையோ வைத்துவிட்டுச் செல்வார்கள்.

திர்ல்வெல்: உங்கள் பெற்றோர் யூதர்கள், இல்லையா?

கிராஸ்னஹோர்காய்: என் தந்தைக்கு யூத வேர்கள் இருந்தன. ஆனால் எனக்கு சுமார் பதினொரு வயது இருக்கும் போதுதான் அவர் இந்த ரகசியத்தை எங்களிடம் சொன்னார். அதற்கு முன் எனக்குத் தெரியாது. சோசலிச காலத்தில் அதைக் குறிப்பிடுவது தடைசெய்யப்பட்டிருந்தது. நான் பாதி யூதன்தான், ஆனால் ஹங்கேரியில் நடப்பவை, இப்போது நடப்பது போலவே தொடர்ந்தால், நான் விரைவில் முழு யூதனாகிவிடுவேன்.

திர்ல்வெல்: உங்கள் தந்தை போரில் எப்படி உயிர் பிழைத்தார்?

கிராஸ்னஹோர்காய்: எங்கள் குடும்பப்பெயர் கோரின், அது ஒரு யூதப் பெயர். இந்தப் பெயருடன் அவர் ஒருபோதும் உயிர் பிழைத்திருக்க முடியாது. என் தாத்தா மிகவும் புத்திசாலி, அவர் எங்கள் பெயரை கிராஸ்னஹோர்காய் என்று மாற்றினார். கிராஸ்னஹோர்காய் என்பது தேசியவாதப் பெயர். முதலாம் உலகப் போருக்குப் பிறகு, ஹங்கேரி தனது நிலப்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கை இழந்தது, போருக்குப் பிந்தைய பழமைவாத, தேசியவாத அரசின்  முக்கிய கொள்கை அந்த இழந்த பகுதிகளை மீட்டெடுப்பதாகும். கிராஸ்னஹோர்கா கோட்டை பற்றி ஒரு பிரபலமான, மிகுந்த உணர்ச்சிகரமான பாடல் இருந்தது. போருக்குப் பிறகு அது செக்கோஸ்லோவாக்கியாவின் ஒரு பகுதியானது. அந்தக் கோட்டை மிகவும் சோகமாகவும் இருட்டாகவும் இருக்கிறது, எல்லாம் நம்பிக்கையற்றதாக இருக்கிறது என்பதே அந்தப் பாடலின் சாரம். ஒருவேளை அதனால்தான் என் தாத்தா அதைத் தேர்ந்தெடுத்திருக்கலாம். எனக்குத் தெரியாது. யாருக்கும் தெரியாது, ஏனென்றால் அவர் மிகவும் அமைதியான மனிதர். இது 1931-ல், முதல் ஹங்கேரிய யூதச் சட்டங்களுக்கு முன்பே நடந்தது.

திர்ல்வெல்: உங்கள் எழுத்தைப் பற்றி இன்னும் அதிகமாகப் பேசுவோம். நீங்கள் நான்கு நாவல்களை மட்டுமே எழுதியுள்ளீர்கள் என்பதும், அதை நீங்கள் மிக இயல்பானதாக  உணர்வதும்  எனக்கு வியப்பை அளிக்கிறது.

கிராஸ்னஹோர்காய்: ஆம் Satantango, The Melancholy of Resistance, War and War, Baron Wenckheim’s Homecoming ஆகிய நான்கு நாவல்கள்

திர்ல்வெல்: உதாரணமாக, Animalinside போன்ற ஒரு பிரதியை எங்கே வைப்பீர்கள்?

கிராஸ்னஹோர்காய்: Animalinside ஒரு நாவல்தான், ஆனால் நேரடியான பொருளில் அல்ல. ஒரு படைப்பு நாவலா அல்லது சிறுகதையா என்பது பக்கங்களின் எண்ணிக்கையைப் பொறுத்தது அல்ல. எனது வாழ்க்கையின் தொடக்கத்தில்  சில கதைகளை எழுதினேன். அதுதான் Relations of Grace (1986) என்ற சிறுகதைத்தொகுப்பு.  அந்தக் கதைகள் மிகச் சிறிய இடத்தில், மிகக் குறுகிய காலப்பகுதியில், ஒரு கதாபாத்திரத்தைச் மையமாகக்கொண்டு எழுதப்பட்டவை. ஒரு நாவல் என்பது ஆரம்பம் முதல் முடிவு வரை ஒரு பாலம் அல்லது ஒரு வளைவு போல பிரம்மாண்டமான கட்டுமானத்தைக் கொண்டது. சிறுகதையைப் பொறுத்தவரை வளைவு தேவையில்லை. சிறுகதை என்பது ஒரு Black-box போன்றது, அதில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது.

திர்ல்வெல்: அப்படியென்றால் புதிய நாவலான  Baron Wenckheim’s Homecoming எதைப் பற்றியது? அது ஒரு வகையான ஒடிஸியா (odyssey)?

கிராஸ்னஹோர்காய்: ஆம். நாவலின் மைய கதாபாத்திரத்திற்கு, அது ஒருவகையான வீடுதிரும்புதல் (homecoming). அவரது வாழ்க்கையின் இறுதியில் அது நிகழ்கிறது. அவர் ப்யூனஸ் அயர்ஸில் வசிக்கும் ஒரு வயதான மனிதர். அவர் கியுலா க்ரூடி போல நுண்ணுணர்வுகொண்ட, மிக உயரமான மனிதர். ஆனால் அவர் துரதிர்ஷ்டசாலி— எப்போதுமே  பிழைகள்  செய்கிறார்.

திர்ல்வெல்: அப்படியென்றால் அவர்தான் உங்கள் மிஷ்கின், உங்கள் தற்காப்பற்ற கதாபாத்திரம்?

கிராஸ்னஹோர்காய்: ஆம், Estike போன்றவர். ஏனென்றால் இந்த நாவல் உண்மையில் எனது அனைத்து நாவல்களின் சுருக்கமான summary போன்றது—இதில்  பிற புனைவாக்கங்களின் கதாபாத்திரங்கள் மற்றும் கதைகளுடன் பல ஒற்றுமைகளைக் காணலாம். Satantango என்ற வார்த்தையை ஒட்டியும் பிற விஷயங்களையும் நான் பகடி செய்கிறேன். இதுவே எனது மிகச் சிறந்த நாவல் என்று நான் நினைக்கிறேன்.

திர்ல்வெல்: உங்கள் சிறந்த படைப்பா?

கிராஸ்னஹோர்காய்: மிகவும் வேடிக்கையானது. மிகவும் நகைச்சுவையான புத்தகம். இது உலகம் அழியும் செய்திகளால்(dystopian messages)  நிரம்பியது அல்ல. மாறாக, இதுவே அந்த அழிவு.  அது எப்போதோ  வந்துவிட்டது.

திர்ல்வெல்: ஆனால், உங்கள் எல்லா புத்தகங்களிலும், அந்த அழிவு ஏற்கனவே ரகசியமாக நிகழ்ந்துவிட்டது என்று நான் உணர்கிறேன். இரண்டு வகையான நாவலாசிரியர்கள் இருக்கிறார்களோ என்று நான் வியப்புடன் எண்ணிக்கொள்கிறேன்— தங்கள் ஒவ்வொரு நாவலையும் தனித்தனி இருப்புகளாக நினைப்பவர்கள்  ஒருவகை;  இன்னொருவகை- தங்களின் அனைத்து நாவல்களும் ஏதோ ஒருவிதத்தில் இணைகின்றன என்பதால் தாங்கள் ஒரே ஒரு நாவலைத்தான் எழுதியுள்ளோம் என்று நினைப்பவர்கள்.

கிராஸ்னஹோர்காய்: நான் எப்போதும் ஒரே ஒரு புத்தகத்தைத்தான் எழுத விரும்பினேன் என்று ஆயிரம் முறை சொல்லியிருக்கிறேன். முதல் புத்தகத்தில் நான் திருப்தி அடையவில்லை, அதனால்தான் இரண்டாவது எழுதினேன். இரண்டாவதில் திருப்தி இல்லை, அதனால் மூன்றாவது எழுதினேன், இப்படியே தொடர்ந்தது. இப்போது, பரோன் நாவலுடன் என்னால் இந்தக் கதையை முடிக்க முடியும். எனது வாழ்க்கையில் நான் உண்மையில் ஒரே ஒரு புத்தகத்தைத்தான் எழுதினேன் என்பதை இந்த நாவல் மூலம் என்னால் நிரூபிக்க முடியும். Satantango, The Melancholy of Resistance, War and War, Baron Wenckheim’s Homecoming- இவையெல்லாம் என் ஒரே புத்தகம்தான்.  

திர்ல்வெல்: இந்தப் புனைகதைகளுக்கு முற்றிலும் அப்பாற்பட்டு எதையாவது எழுத வேண்டும் என்று நீங்கள் எப்போதாவது விருப்பியதுண்டா?

கிராஸ்னஹோர்காய்: இல்லை. ஜோஹன் செபாஸ்டியன் பாக் தனது வாழ்நாள் முழுவதும் மாறாமல் அப்படியே இருப்பதில் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.

திர்ல்வெல்: நீங்கள் அடிக்கடி பாக்(Bach) மற்றும் ரேம்யூ (Jean-Philippe Rameau) போன்ற பிற பரோக்  இசையமைப்பாளர்களை குறிப்பிடுகிறீர்கள். பரோக் இசை உங்களுக்கு எந்த வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது?

கிராஸ்னஹோர்காய்: பரோக் இசை அதன் ஒத்திசைவு காரணமாக வடிவரீதியாகச் சிக்கலானது, அதனால்தான் என்னால் கற்பனாவாத காலகட்ட இசையை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. பரோக்கின் கடைசிகட்டத்தின்(late-baroque) பிறகு, இசை மேலும் தரம் குறைந்ததாக மாறியது, தரம்தாழ்ந்த நிலையின் உச்சம் கற்பனாவாத காலகட்டம். ஸ்ட்ராவின்ஸ்கி, ஷோஸ்டகோவிச், பார்டோக், குர்தாக் போன்ற சில விதிவிலக்கான இசையமைப்பாளர்கள் எனக்கு மிகவும் பிடிக்கும், ஆனால் நான் அவர்களை எப்போதும் விதிவிலக்குகளாகவே கருதுகிறேன். என்னைப் பொறுத்தவரை மேற்கத்திய இசை வரலாறு என்பது மாபெரும் வீழ்ச்சி. இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, இது இலக்கியத்திலும் நடக்கிறது. ஆனால் இந்தத் தரம் குறையும் செயல்முறையை பகுப்பாய்வு செய்வது மிகவும் கடினம். நவீன சமூகங்களில் எப்போதும் நடக்க சாத்தியமாக இருந்த பயங்கரமான புரட்சி உண்மையில் நடந்துவிட்டது. வெகுஜன கலாச்சாரம் வெற்றி பெறவில்லை, மாறாகப் பணம்தான் வென்றுள்ளது. எப்போதாவது மிக உயர்ந்த இலக்கியப் படைப்பு, நடுத்தர ரசனை மட்டத்தில்  எதையாவது சொல்லவேண்டிய நிலை வருகிறது, அப்படியாக அதிகமான வாசகர்களைச் சென்றடைகிறது—பல சமகால எழுத்தாளர்களின்  தலையெழுத்து  இதுதான்.

பாக்

திர்ல்வெல்: உங்கள் நாவல்கள்?

கிராஸ்னஹோர்காய்: இல்லை, எனது நாவல்கள் நிச்சயமாக நடுத்தர வட்டத்தில், பொதுவாசகர்களின் உலகில் செயல்படுவதில்லை, ஏனென்றால் நான் ஒருபோதும் சமரசம் செய்துகொள்வதில்லை. என்னைப் பொறுத்தவரை எழுதுவது என்பது முற்றிலும் தனிப்பட்ட அந்தரங்கமான செயல்பாடு. எனது படைப்பாக்கத்தைப் பற்றி பேச நான் வெட்கப்படுகிறேன்—அது எனது மிக அந்தரங்கமான ரகசியங்களை நீங்கள் என்னிடம் கேட்பதைப் போன்றது. இந்த  சமூகம் ’எழுத்தாளன்’ என்றால் வரையறுக்கும் பிம்பத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாததால் நான் ஒருபோதும் இலக்கிய இயக்கங்களின் பகுதியாக இருந்ததில்லை. உங்களையும் வேறு சிலரையும் தவிர யாருமே என்னுடன் இலக்கியம் பற்றிப் பேச முடியாது. இலக்கியத்தைப் பற்றி, குறிப்பாக எனது இலக்கியத்தைப் பற்றிப் பேசுவதில் எனக்கு மகிழ்ச்சி இல்லை. இலக்கியம் என்பது மிகவும் தனிப்பட்டது.

நான் ஒரு புத்தகத்தை எழுதும்போது, அந்தப் புத்தகம் என் மூளையில் தயாராக இருக்கும். நான் சிறுவயதிலிருந்தே அப்படித்தான் உழைத்தேன். சிறுவயதில், எனக்கு அசாதாரணமான நினைவாற்றல் இருந்தது. ஒருவகையில் புகைப்படம் போல துல்லியமான காட்சி சார்ந்த நினைவாற்றல்(photographic memory). அதனால் ஒரு வாக்கியம் அல்லது சில வாக்கியங்களின் சரியான வடிவத்தை என் மூளைக்குள் கண்டறிவேன், நான் தயாரானதும் அதை அப்படியே எழுதிவிடுவேன்.

திர்ல்வெல்: நீங்கள் திருத்தம் செய்வதில்லையா?

கிராஸ்னஹோர்காய்: ஒரு சுழலும் இயந்திரத்தைப் போல நான் ஒவ்வொரு நிமிடமும் உழைக்கிறேன். எனக்கு உடல்நிலை சரியில்லை என்றால் என்னால் முடியாது. குடித்திருந்தாலும் என்னால் முடியாது. ஆனால் இந்த விதிவிலக்குகளைத் தவிர, நான் உழைத்துக்கொண்டே இருக்கிறேன்; ஏனென்றால் ஒரு வாக்கியம் தொடங்கும்போது அதற்கு அடுத்ததாக ஒரு சிலந்தியின் மெல்லிய இழைகளைப் போல ஒரு லட்சம் வாக்கியங்கள் தோன்றுகின்றன. அவற்றில் ஒன்று மற்றவற்றை விடச் சற்றே முக்கியமானதாக இருக்கும், நான் அதை வெளியே எடுத்து, அந்த வாக்கியத்தைச் சரிசெய்து உழைப்பேன். அதனால்தான், எனது புத்தகங்களுக்கு அற்புதமான மொழிபெயர்ப்புகள் இருந்தாலும், அவற்றை நீங்கள் மூல மொழியில் படிக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்; ஏனென்றால் நான் ஒரு வாக்கியத்தில் உழைக்கும்போது முதலில் அதன் தாளம் சரியாக இருப்பதை உறுதி செய்வேன். இசைத் தொகுப்பிற்கும் இலக்கியத் தொகுப்பிற்கும் பொதுவான அதே வழிமுறையைத்தான் நான் பயன்படுத்துகிறேன். இசை, இலக்கியம் மற்றும் ஓவியக் கலை ஆகியவற்றிற்குத் தாளம் மற்றும் வேகத்தின் கட்டமைப்புகள் என்ற ஒரு பொதுவான வேர் உள்ளது—அந்த வேரிலிருந்துதான் நான் உழைக்கிறேன். இசை மற்றும் நாவலின் உள்ளடக்கம் முற்றிலும் வேறானது. ஆனால்  அதன் சாராம்சம்  மிகவும் ஒத்திருக்கிறது.

திர்ல்வெல்: நீங்கள் ஒரு வகையான ஜாஸ் மேதை, இல்லையா? சிறுவயதில் ஜாஸ் இசைக்குழுக்களில் வாசித்திருக்கிறீர்களா?

கிராஸ்னஹோர்காய்: நான் பதினான்கு வயது முதல் பதினெட்டு வயது வரை ஒரு தொழில்முறை இசைக்கலைஞராக இருந்தேன்.

திர்ல்வெல்: திலோனியஸ் மான்க் ஒரு பியானோ கலைஞராக உங்கள் பெரிய நாயகனாக இருந்தார். ஏன் மான்க்?

கிராஸ்னஹோர்காய்: நானும் அடிக்கடி அதே கேள்வியையே கேட்டுக்கொள்கிறேன். பின்னோக்கிப் பார்த்தால், சோவியத் ஆட்சியின் கீழ் இருந்தபோது இசையில் எங்களது ரசனை எப்படி அவ்வளவு கச்சிதமாக இருந்தது என்பதை விளக்குவது கடினம். நான் பெருமையாக சொல்லவில்லை. நான் ஜாஸ் குழுவில் மட்டுமல்லாமல், ஒரு ராக் குழுவிலும் தொடர்ந்து வாசித்தேன். எங்களது இசை நிகழ்ச்சிகள் தொழிலாளர் வர்க்க மக்களுக்கான விருந்துகளாக இருந்தன. நாங்கள் வாசித்த பாடல்களின் பெயர்கள் அடங்கிய ஒரு காகிதத்தை நான் சமீபத்தில் கண்டேன், எங்களுக்கு மிகச் சிறந்த ரசனை இருந்தது. அது என் ரசனை மட்டுமல்ல, எங்கள் தலைமுறையின் ரசனை. அக்காலத்தில் ஜாஸ் அல்லது ராக் இசையின் ஆதாரங்கள் மிகக் குறைவாகவே இருந்தன. மியூனிக் நகரிலிருந்து ‘ரேடியோ ஃப்ரீ ஐரோப்பா’ மற்றும் ‘ரேடியோ லக்சம்பர்க்’ ஆகிய இரண்டு வானொலி நிலையங்கள் மட்டுமே இருந்தன. வானொலியிலிருந்து நேரடியாகப் பதிவு செய்ததால் எங்களது பதிவுகள் மிகவும் தரம் குறைந்தவை—நிச்சயமாக ரகசியமாகத்தான் செய்தோம், ஏனென்றால் அது தடைசெய்யப்பட்டிருந்தது. கியுலாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஒரு மருத்துவர் எனக்குத் தெரிந்திருந்தார், அவரிடம் ஏராளமான எல்பி இசைத்தட்டுகள் இருந்தன, அவரது சேகரிப்பிலிருந்து என்னைப் பதிவு செய்ய அவர் அனுமதித்தார். ஆனால் நான் எப்படிச் சிறந்த இசையைத் தேர்ந்தெடுத்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. நாங்கள் க்ரீம், தெம், பிளைண்ட் ஃபெய்த், ஜிமி ஹென்ட்ரிக்ஸ், அரேதா பிராங்க்ளின், டஸ்டி ஸ்பிரிங்ஃபீல்ட் ஆகியோரின் பாடல்களை வாசித்தோம். மிகவும் சாதாரணக் குழு என்றால் அது தி கிங்க்ஸ் தான். வேறு என்ன? ட்ராக்ஸ், அனிமல்ஸ், எரிக் பர்டன். நிச்சயமாக ரோலிங் ஸ்டோன்ஸ். பீட்டில்ஸ் இல்லை. ஏன் என்று தெரியவில்லை, ஆனால் பீட்டில்ஸ் இல்லை. மற்றும் நிறைய ப்ளூஸ் இசை.

அந்த ஜாஸ் மூவர் குழுவில் (jazz trio), ஐம்பது வயதுடைய ஒரு டிரம்ஸ் கலைஞர் மற்றும் ஐம்பது வயதுடைய ஒரு பேஸ் (bass) கலைஞருடன் நான் வாசித்தேன். எனக்கு அப்போது பதினான்கு வயது. நாங்கள் எரோல் கார்னர் முதல் திலோனியஸ் மான்க் வரை அனைவரையும் வாசித்தோம். மான்க் ஏன் எனக்கு மிகவும் பிடித்தவர் என்பதற்கு என்னிடம் விளக்கங்கள் இல்லை. இப்போது நான் ஒரு முதியவன். எனக்கு இன்னும் வயதானபின் நீங்கள் கேட்டால்கூட இதே விஷயத்தையே திரும்ப சொல்லுவேன்.

திர்ல்வெல்: நீங்கள் பாடவும் செய்தீர்களா?

கிராஸ்னஹோர்காய்: ராக் குழுவில் பாடினேன். எனக்குக் கவுண்டர் டெனர் (counter tenor) போன்ற மிக உயர்ந்த குரல் இருந்தது. அதனால் நான் டஸ்டி ஸ்பிரிங்ஃபீல்ட் மற்றும் அரேதா பிராங்க்ளின் போன்ற பெண்களின் பாடல்களை மட்டுமே பாடினேன்.

திர்ல்வெல்: கலை உலகம் பற்றி? போவி, வெல்வெட் அண்டர்கிரவுண்ட் போன்றவற்றை நீங்கள் கேட்டீர்களா?

கிராஸ்னஹோர்காய்: நான் பெலா தார் உடன் நண்பரான பிறகு தாமதமாகவே போவி ரசிகர் மன்றத்தில் சேர்ந்தேன். பெலா புடாபெஸ்டின் நடுவில் ஒரு அற்புதமான சிறிய குடியிருப்பில் வசித்தார். அவர் நாள் முழுவதும் ஒரு அறையில் எப்போதும் இசையுடன் நடந்து கொண்டிருப்பார். டேவிட் போவி, லூ ரீட், நிகோ. . .

திர்ல்வெல்: 1985-ல் Satantango நாவலை வெளியிட்ட சிறிது காலத்திலேயே Damnation திரைப்படத்தில் பெலா தாருடன்(Bela Tarr) நீங்கள் பணியாற்றத் தொடங்கினீர்கள்—அது சரியா? பின்னர் 1994-ல் Satantango மற்றும் 2000-ல் வெர்க்மெய்ஸ்டர் ஹார்மனிஸ் (Werckmeister Harmonies)—இது தி மெலன்கொலி ஆஃப் ரெசிஸ்டன்ஸ் நாவலின் ஒரு வடிவம்—ஆகிய உங்கள் நாவல்களின் இரண்டு தழுவல்களை உருவாக்கினீர்கள்.

கிராஸ்னஹோர்காய்: ஆரம்பத்தில், கம்யூனிஸ்டுகளின் ஆட்சியில் Satantango நாவலை திரைப்படமாக எடுக்கத் தடை விதிக்கப்பட்டதால் நாங்கள் டேம்னேஷன் படத்தை உருவாக்கினோம். இந்த முழு கதையும் 1985-ல் அந்த நாவல் வெளியான பிறகு தொடங்கியது. பெலா, அவரது மனைவி ஆக்னஸ் மற்றும் நான்—நாங்கள் Satantango நாவலின் திரைப்பட வடிவத்தை உருவாக்க விரும்பினோம், ஆனால் ஹங்கேரியத் திரைப்பட உலகில் ’பெலா தார்’  வெறுக்கப்பட்ட மனிதராக இருந்தார். அவர் ஒரு திரைப்பட நிறுவனத்திலிருந்து மற்றொன்றிற்குச் சென்றார். இறுதியாக யாரோ எங்களிடம் Satantango எடுக்கத் தடை என்று சொன்னார்கள். நான் பெலா தாரிடம், “சரி, நீ வீட்டிற்குப் போ, நான் வீட்டிற்குப் போகிறேன், எல்லாம் முடிந்தது” என்று சொன்னேன். சுமார் இரண்டு வாரங்களுக்குப் பிறகு, ஆக்னஸ் என்னிடம் வந்து ஒரு புதிய திரைக்கதையை எழுதுமாறு கெஞ்சினார், இல்லையென்றால் ’பெலா தார்’ தற்கொலை செய்து கொள்வார் என்று சொன்னார். “அவரை எனக்குத் தெரியும், உன்னுடன் ஒரு படம் எடுக்க முடியாவிட்டால் அவர் தற்கொலை செய்து கொள்வார்” என்று சொன்னார். நிச்சயமாக, அது என்னை அவருடன் வேலை செய்ய வைப்பதற்கான ஒரு பொறிதான்.

திர்ல்வெல்: நீங்கள் பணியாற்றிய ஒரே இயக்குநர் பெலா தார்(Bela Tarr) தானா?

கிராஸ்னஹோர்காய்: நான் பெலா தாருடன் மட்டுமே பணியாற்றினேன். அவருடன் அது ஒருவகையான ஒத்துழைப்பை என்று சொல்வதைவிட மேலானது. நான் அவருக்கு எல்லாவற்றையும் கொடுத்தேன், அவர் முழுவதையும் எடுத்துக்கொண்டார். திரைக்கதைகளை நான் எழுதிய பிறகு நாங்கள் எப்போதும் ஒன்றாக உழைத்தோம், ஆனால் அவை அவருடைய படங்கள். சினிமா என்பது நீதியுணர்ச்சி இல்லாத கலைவடிவம். நீங்கள் ஒரு எழுத்தாளராக இருந்து, ஒரு திரைப்பட இயக்குநர் உங்கள் படைப்பைத் தழுவி எடுக்க விரும்பினால், அவர்தான் இயக்குநர் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்தப் படம் அவருடையதாகத்தான் இருக்கும். இல்லையென்றால் நீங்கள் தவறு செய்கிறீர்கள்.

எனது திரைக்கதைகள் எப்போதும் இலக்கியப் படைப்புகளாகவே இருந்தன. நான் திரைக்கதையின் வடிவத்தைப் பயன்படுத்தினேன், உரையாடல்களை பயன்படுத்தினேன்; ஆனால் ஒரு முக்கிய கதாபாத்திரத்தைப் விவரிக்கும்போது “அவன் கடவுள் இல்லாத உலகத்தைப் பற்றிச் சிந்திக்கிறான்” என்று நான் எழுதினேன். பெலா தார், “இது திரைக்கதை அல்ல, இதை நான் எப்படிக் காட்ட முடியும்?” என்றார். அதனால்தான் திரைக்கதை என்ற திட்டத்தை நான் சிறிது பயந்தேன். உதாரணமாக, எஸ்டிக் சொர்க்கத்திற்குச் செல்லும் காட்சி. “அதை நான் எப்படிப் படமாக்குவது?” என்று பெலா கேட்டார். இறுதியில், ஐரிமியாஸின் முகத்திற்கு முன்னால் சுமார் எண்பது சென்டிமீட்டர் தொலைவில் கேமராவை வைப்பது மட்டுமே ஒரே வாய்ப்பாக இருந்தது. படத்தில் எஸ்டிக்கிற்கு என்ன நடந்தது என்பதை பார்வையாளர்கள் அவனது முகத்தில் பார்க்க முடிந்தால் நாங்கள் வெற்றி பெற்றோம். இல்லையென்றால் அது தோல்வி. அதே சமயம், என்னால் அதை ஒரு புத்தகத்தில் எழுத முடியும், அது சுவாரஸ்யமாகவும் தத்துவப் பின்னணி கொண்டதாகவும் இருக்கும். யதார்த்தம் என்றால் என்ன? எஸ்டிக்கின் ஆவி உண்மையானதா? ஆனால் கேமரா இந்த கேள்விகளுக்கு ‘இல்லை’ என்றே பதில் சொல்லும். 

திர்ல்வெல்: ஆனால் மொழி  ‘ஆம்’ என்று சொல்லும் அல்லவா.

கிராஸ்னஹோர்காய்: சரியாகச் சொன்னீர்கள். பிரபஞ்சத்தைப் பற்றி உங்களுக்கு ஒரு கேள்வி இருந்தால், உங்களிடம் எப்போதும் சில வாய்ப்புகள் இருக்கும்—குறிப்பாக மொழியின் மூலம். வார்த்தையின் வலிமைதான், என்னைப் பொறுத்தவரை, இந்த மறைந்திருக்கும் யதார்த்தத்தை நெருங்குவதற்கான ஒரே வழி. ஒவ்வொருவரும் ஒரு கற்பனையான நபர், அதே சமயம் ஒரு உண்மையான நபர். நான் கற்பனை உலகிற்கும் நிஜ உலகிற்கும் சொந்தமானவன்—நான் இரண்டு பேரரசுகளிலும் இருக்கிறேன். நீங்களும் அப்படித்தான். இந்த உணவகத்தில் உள்ள ஒவ்வொருவரும் அப்படித்தான். மேலும் இந்தப் பொருள் மற்றும் நம்மால் உணரக்கூடிய அனைத்தும், அதே போல் நம்மால் உணர முடியாத விஷயங்களும் அப்படித்தான்; ஏனென்றால் நமது ஐந்து புலன்களால் யதார்த்தத்தின் சில பகுதிகள் புலப்படுவதில்லை என்று நமக்குத் தெரியும். நான் ஏதோ மாயாவாதம்(mysticism) பேசவில்லை. யதார்த்தம் எனக்கு மிகவும் முக்கியமானது, அதனால் நான் எப்போதும் எல்லா வாய்ப்புகளையும் அறிந்திருக்க விரும்புகிறேன்.

திர்ல்வெல்: இதனால்தான் மொழிபெயர்ப்பு மிகவும் விசித்திரமாகத் தோன்றுகிறதோ என்று நான் வியக்கிறேன். Satantango அல்லது பரோன் வென்க்ஹெய்ம் ஆகியவற்றின் ஹங்கேரியப் பதிப்பால் உருவாக்கப்பட்ட யதார்த்தம் எப்படி ஆங்கிலம் அல்லது பிரெஞ்சு வார்த்தைகளால் உருவாக்கப்பட்ட யதார்த்தத்திற்குச் சமானமானதாக இருக்க முடியும்? பிற கலை வடிவங்களுக்கு இத்தகைய சிக்கல் இல்லை. பாக் ஒரு காண்டாடாவை (cantata) உருவாக்குகிறார், அது ஒரு வகையான உன்னதமான இலட்சியத்தை வெளிப்படுத்தும் முயற்சியாக அவருக்கு இருக்கிறது—

கிராஸ்னஹோர்காய்: இல்லை, இல்லை. பாக் வெறும் ஒரு இசைக்கலைஞர்தான். அவர் தனது வாழ்க்கையைத் தொடங்கி காண்டாடாக்களை (cantata)  உருவாக்கத் தொடங்கியபோது, அவர் இசை ரீதியான கேள்விகளை மட்டுமே கையாண்டார்— அதன் அமைப்பு, பியூக் வடிவம், முன்னுரை, ஃபால்சோபோர்டோன்(falsobordone). நாம் அவரது இசையைக் கேட்கிறோம், பாக் எப்போதும் விண்ணையே பார்த்துக் கொண்டிருக்கும் புனிதமான மனிதர் என்ற மனப்பிம்பம் நம்மிடம் இருக்கிறது. ஆனால் உண்மையில், அனைத்து மேதைகளும் பௌதிகமான விஷயங்களில், நுட்பங்களில் மட்டுமே ஆர்வம் கொண்டவர்கள். பாக் பிறந்த துரிஞ்சியாவைப் பார்த்தால், துரிஞ்சியா முழுவதும் பாக்குகளால்—தலைமுறை தலைமுறையாக இசைக்கலைஞர்களால்—நிரம்பியிருந்தது. உண்மையில் பாக் என்ற சொல், சிறந்த இசைக்கலைஞன் என்பதை சுட்டும் அடையாளம்  மட்டும்தான். 

நான் ஜப்பானில் இருந்தபோது, நிபுணர்களால் புத்தர் சிலைகள் மீட்டெடுக்கப்படும் ஒரு பட்டறைக்குச் சென்றேன். அவர்கள் அற்புதமான உழைப்பாளிகள், மேதைகள், உண்மையான கலைஞர்கள்; ஆனால் அவர்கள் “இந்த உடைந்த சிலையை நான் எப்படிச் சரிசெய்வது?” என்ற தொழில்நுட்ப கேள்வியில்தான் முழுமையாக மூழ்கியிருந்தனர். பின்னர், மீட்டெடுக்கப்பட்ட புத்தர் தனது இடத்திற்குத் திரும்பியதும், அவர் இப்போது புனிதமானவர், யாராவது அவருக்குப் பிரார்த்தனை செய்யலாம். இது ஒரு முரண்பாடு என்று நீங்கள் சொல்லலாம், ஆனால் அவர்களுக்கு எந்த முரண்பாடும் இல்லை. சிற்பியும் மீட்டெடுப்பவரும் ஒன்றுதான். ஒருவர் உண்மையான கவிஞன் என்றால், அவனால் சொல்லுக்கு  வலிமை உண்டு என்பதை  கண்டுகொள்ள முடியும், உண்மையின் அவனால்தான் சொற்களை பயன்படுத்தவே முடியும். உங்களுக்கு சொல்லின் வலிமையை உணரும் ஆற்றால் இருந்தால், நீங்கள் கலையின் தொழில்நுட்ப கேள்விகளை மட்டும் கையாண்டால் போதும்.

திர்ல்வெல்: அப்படியென்றால், கலையின் தொழில்நுட்பம் சார்ந்த கேள்விகள் மட்டும்தான் உண்மையான கலை சார்ந்த கேள்விகள் என்று சொல்கிறீர்களா?

கிராஸ்னஹோர்காய்: ஒரு கலைஞருக்கு ஒரே ஒரு பணிதான் உள்ளது—ஒரு சடங்கை பின்தொடர்வது. சடங்கு என்பது ஒரு தூய தொழில்நுட்பம்.

திர்ல்வெல்: ஒரு குறிப்பிட்ட படைப்பை மட்டும் எடுத்து நுட்பமான பகுப்பாய்வு செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன். . .

கிராஸ்னஹோர்காய்: இது இன்னொரு கேள்வியுடன் தொடர்புடையது என்று நினைக்கிறேன். நாம் ஹோமர், ஷேக்ஸ்பியர், தஸ்தயெவ்ஸ்கி, ஸ்டெந்தால் அல்லது காஃப்காவைப் பற்றிப் பேசினால், அவர்கள் அனைவரும் ஒருவகையான சொர்க்கப் பேரரசில் உள்ளனர். ஒருவர் அந்த சொர்க்கத்தின் எல்லையைத் தாண்டி, ” தஸ்தாயெவ்ஸ்கியின் அசடன் (The idiot)  நாவல் அற்புதமானது, ஆனால் வெண்ணிற இரவுகள்(The white nights) அவ்வளவு நன்றாக இல்லை” என்று சொல்வது தடுக்கப்பட்டுள்ளது. அல்லது திலோனியஸ் மான்க்—ஜாஸ் இசைக்கலைஞரின் வாசிப்பு ஒரு இடத்தில் நன்றாக இருக்கிறது அல்லது மற்றொரு இடத்தில் அதிக அபசுரமாக இருக்கிறது என்று சொல்ல நமக்கு அனுமதி இல்லை. இவர்கள் புனிதமானவர்கள்! தனித்தனி விஷயங்களை, உள்ளடக்கத்தை பற்றிப் பேசக்கூடாது, படைப்பின் அல்லது அந்த கலைஞனின் முழுமையைப் பற்றித்தான் பேச வேண்டும். ஒரு படைப்பு வழியாக  நீங்கள் ஒரு மேதை என்று ஒருமுறை, ஒரே ஒருமுறை நிரூபித்துவிட்டால், அதற்குப் பிறகு என் பார்வையில் நீங்கள் சுதந்திரமானவர். நீங்கள் அதற்குபிறகு குப்பைகளுக்கு நிகரான அற்பமான படைப்புகளை உருவாக்கலாம். ஆனால் அப்போதும் அதே புனிதமான மனிதராகத்தான் இருப்பீர்கள், அந்த குப்பையான படைப்பும் புனிதமான குப்பைதான்; ஏனென்றால் அந்த எல்லையைக் கடந்த பிறகு, அந்த கலைஞர் எந்த வகையான விமர்சனத்திற்கும் அப்பாற்பட்டவராக ஆகிவிடுகிறார். 

பிரான்ஸ் காஃப்கா என்பவர் ஒரு சாம்ராஜ்ஜியம். அதை நான் தூரத்திலிருந்து பார்த்து வியக்க மட்டுமே முடியும். அந்த சாம்ராஜ்ஜியம் என்றென்றும் இருக்கிறது. அதேபோல தாந்தே, கதே, பெக்கெட் மற்றும் ஹோமர் போன்ற மகத்தான கலைஞர்கள் இருந்தார்கள், நமக்காக இப்போதும் இருக்கிறார்கள் என்பதிலும் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் புனிதர்களைப் பற்றிய அனைத்து சிந்தனைகளும் பொதுவான ஒன்றைக் கொண்டிருக்கும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். காஃப்காவை  பற்றி நான் உருவாக்கி வைத்திருக்கும் பிம்பம் உங்களது பிம்பத்திலிருந்து பெரிதாக வேறுபடாது.

நீங்கள் கேட்ட கேள்விக்கு பதிலாக இதை எடுத்துக்கொள்வீர்களா?

திர்ல்வெல்:  நீங்கள் சொன்னவை, எனது கேள்விக்கு பதிலளிக்க முடியாது என்பதுபோல ஒருவகையான மறுப்பதாகத்தான் இருக்கிறது! நான் இதை வேறு விதமாகக் கேட்கலாமா? பாக் பற்றி நீங்கள் சொல்வதை வைத்து நான் இப்படி புரிந்துகொள்கிறேன்: ஒரு படைப்பின் சாரம் என்னவாக இருந்தாலும் கலைத்தொழில்நுட்பத்தின்(technique)  மீதான முழுகவனம் வழியாகவே அந்த சாரம் பிறருக்கு தொடர்புறுத்தப்படுகிறது. நீங்கள் “உலகம் என்று ஒன்று இருந்தால், அது நுண்விவரணைகளால்(Details) ஆனதாகவே இருக்க முடியும்”. அதேபோல ஒரு கலைப்படைப்பு என்று ஒன்று இருந்தால், அதுவும் நுண்விவரணைகளால் மட்டுமே இருக்க முடியும் என்று சொல்லலாமா? இந்த உலகமும், கலைப்படைப்பாக்கமும்; இவை இரண்டும் ஒரே விஷயத்தின் இரண்டு வெவ்வேறு சாத்தியங்கள் என்று சொல்லாமா?

கிராஸ்னஹோர்காய்: என்னைப் பொறுத்தவரை நுண்விவரணைகள் மிக முக்கியமானவை, ஆம். மிகச்சிறிய விஷயம்கூட, அது வாழ்வா சாவா என்னும் அளவுக்கு முக்கியமானது. ஒரு சொற்றொடரில் உள்ள மிகச்சிறிய பிழை கூட என்னைக் கொன்றுவிடும். அதனால்தான் நான் எழுதிய படைப்புகளை, அந்த நூல்வடிவத்தை என்னால் வாசிக்க முடிவதில்லை; ஏனென்றால் முந்நூறு பக்கங்களில் ஒரு சின்ன சந்தப்பிழை கூட இல்லாமல் எழுதுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. இது ஒழுங்கு அல்லது கச்சிதத்தன்மை (perfection) அல்ல, மாறாக மிகச்சின்ன விவரணைகூட  சரியாக அமையவேண்டும் என்ற விருப்பம், அதற்கான கவனம், அக்கறை. ஏனென்றால் ஒரு படைப்பின் மிகச்சின்ன விவரணைக்கும் அதன் ஒட்டுமொத்த முழுமைக்கும் இடையே பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. கடலின் ஒரு துளிக்கும் முழு கடலுக்கும் இடையே என்ன வித்தியாசம்? ஒன்றுமில்லை. ஒன்றுமில்லை.

திர்ல்வெல்: இது நீங்கள் முன்பு சொன்னதுடன் தொடர்புடையதா—அதாவது நீங்கள் எழுதும் செயல்முறையைத் தொடங்குவதற்கு முன்பே முழுப் புத்தகமும் உங்கள் மனதில் இருக்கிறது என்பதா?

கிராஸ்னஹோர்காய்: ஆம், ஆனால் இன்னொன்றும் இருக்கிறது. புத்தகங்களை எழுதுவது யார்? எழுதும் செயல்முறைக்கு  நடுவே உங்களால் எதையாவது தீர்மானிக்க முடியும் என்ற உணர்வு இருந்தால், நீங்கள் உண்மையில் எழுதும் செயல்முறையிலேயே இல்லை—நீங்கள் அதற்கு வெளியே இருக்கிறீர்கள்.நீங்கள் ஒரு படைப்பை எழுதும்போது நான் எழுதுகிறேன் என்ற உணர்வு இருந்தால், நீங்கள் அந்த படைப்பிற்கு வெளியே இருக்கிறீர்கள்.

திர்ல்வெல்: அப்படியென்றால் ஒரு படைப்பின் கலைத்தன்மையை, அதன் தனிஇயல்புகளை வகுத்துகொள்வது, அதை விளக்குவது, ஆராய்வது இப்படியான செயல்கள்…….  அதாவது இலக்கிய விமர்சனத்தால் ஏதேனும் விளைவுகளை ஏற்படுத்தமுடியுமா? உதாரணமாக, உங்கள் படைப்பு தி மெலன்கொலி ஆஃப் ரெசிஸ்டன்ஸ்  இந்த படைப்பு உத்தேசிப்பது என்ன என்று  நான் கேட்டால், அது ஒரு முட்டாள்தனமான கேள்வியா?

கிராஸ்னஹோர்காய்: முட்டாள்தனமா? இல்லை. அது யார் கேட்கிறார்கள் என்பதைப் பொறுத்தது. உங்களுடன் பேசுவது ஒரு வித்தியாசமான உரையாடல். நீங்கள் செய்வதை நான் மதிக்கிறேன். நாம் இங்கே அமர்ந்திருப்பது தற்செயலானது அல்ல; ஏனென்றால் சாதாரணமாக நான் ஒருவருடன் ஒருநாளில் இரண்டு முறைக்கு மேல், இரண்டு அல்லது மூன்று நாட்கள் இப்படி அமர்ந்து பேசுவதில்லை. நிச்சயமாக, உங்கள் கேள்வியில், அந்த கேள்விக்கான பதில் மீது  உங்களுக்கும் அசலான ஆர்வம் இருக்கிறது என்பது எனது ஊகம். இந்த கேள்வி எப்போதுமே முழுமைக்கும், நுண் விவரணைக்குமான தொடர்பு, சின்ன சின்ன நுண்விவரணைகள் எப்படி முழுமையாகின்றன என்ற பிரச்சனைக்கே திரும்புகிறது.

திர்ல்வெல்: ஒரு படைப்பின் விவரணைகளும், அதன் முழுமையும் ஒன்றையொன்று சார்ந்து இருப்பதால், ஒன்றைப் பற்றிச் சிந்திக்காமல் மற்றொன்றைப் பற்றிச் சிந்திக்க முடியாது என்று சொல்கிறீர்களா? அதாவது ஒரு படைப்பை விவரணை என்றோ,  முழுமை என்றோ சொல்லமுடியாதபடி  மூன்றாவது விஷயமா?

கிராஸ்னஹோர்காய்: புத்தர் ஒருபோதும் யாரையும் முழுமையைப் பற்றிப் பேச அனுமதித்ததில்லை, ஏனென்றால் அது ஒரு கற்பிதம் (abstraction)—ஏனென்றால் முழுமைக்கு யதார்த்தம் இல்லை. ‘முழுமை’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தும்போது நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உதாரணமாக, உலகம் அல்லது பிரபஞ்சம் எல்லையற்றது என்று நாம் நம்புகிறோம். இது ஒரு தோல்வி; ஏனென்றால் உலகம் உண்மையில் எல்லையற்றதாக இருந்தால், இந்தப் பொருள் [ஒரு கோப்பை தேநீரைக் காட்டி] இருக்க முடியாது.

திர்ல்வெல்: ஏன் முடியாது?

கிராஸ்னஹோர்காய்: ஏனென்றால் இருத்தலில் நீங்கள் அனுபவிக்கக்கூடிய அனைத்தும் வரையறுக்கப்பட்டவை (finite). இந்தக் கோப்பையின் அமைப்பில் வரையறுக்கப்பட்ட சின்ன சின்ன பகுதிகள், அணுக்கள், அணுவினும் நுண்மையான கூறுகள்(sub-atomic) இப்படி பல உள்ளன. அவை நமக்குப் புலப்படாதவை ஆனால் அவை எல்லையற்றவை அல்ல.

திர்ல்வெல்: Satantango நாவலின் இறுதியில் ஒரு கணம்  வாசகன் முடிவில்லாத சுழற்சியில்(loop) இருப்பதாக உணர்கிறான்— கடைசி வரிகள் முதல் வரிகள் என்பதுபோல,  நாவலிலுள்ள ஒரு கதாபாத்திரத்தால் முழுநாவலும் எழுதப்பட்டதுபோல. உங்கள் நாவல்களில் இது மட்டுமே ஒரு மீபுனைவு(metafictional) தருணம், பரிபூரணமான பின்னோக்கிய நகர்வு (absolute regression) என்று நான் நினைக்கிறேன். நாவல் அத்தகைய வட்டக் கட்டமைப்பைக் கொண்டிருக்கும் என்பது தொடக்கத்திலேயே உங்களுக்குத் தெரிந்திருந்ததா?

கிராஸ்னஹோர்காய்: இல்லவே இல்லை. நான் எழுதும்போது ஆரம்பத்திலிருந்தே தொடங்குகிறேன், என் கதாபாத்திரங்களை விட அதிகமாக எனக்கு எதுவும் தெரியாது. Satantango நாவலின் முடிவில் இதன் முழு கட்டமைப்பும்- ஒரு இசை வடிவத்தைப்போல- திரும்ப மீண்டும் ஆரம்பத்திலிருந்தே தொடங்கும் என்று என்பது எழுதத்தொடங்கும்போது எனக்கு தெரியாது. இன்னொரு தளத்தில்-  நீங்கள் நாவலை மீண்டும் முதலிலிருந்து வாசிக்கும்போது, அதிலுள்ள ஒரு கதாபாத்திரத்தால் இது எழுதப்பட்டது என்ற பிரக்ஞையுடன் வாசிக்கிறீர்கள். இல்லை, எழுதும்போது நான் அப்படி  ஒருபோதும் திட்டமிடவில்லை.

திர்ல்வெல்: ஏனென்றால் அது நாவலை எல்லையற்றதாக மாற்றுகிறது.

கிராஸ்னஹோர்காய்:  இல்லை. நான் அப்படி நினைக்கவில்லை. எல்லைக்குட்பட்டது, ஆனால் அளப்பரியது (uncountable finite). இந்த நிலை  மட்டுமே சாத்தியம்.

திர்ல்வெல்: நான் சொல்லவருவதை தெளிவுபடுத்துகிறேன்: தத்துவார்த்தமாக பார்த்தால், உங்கள் நாவலை முடிவின்மை வரை வாசிக்க  முடியும். ஒருவகையில் வட்டமாக  சுழல்வதுபோல.

கிராஸ்னஹோர்காய்: வட்டம் பற்றி புத்தர் சொன்னது உங்களுக்கு நினைவிருக்கிறதா?

திர்ல்வெல்: இல்லை.

கிராஸ்னஹோர்காய்: நீங்கள் ஒரு வட்டத்தைப் பின்தொடர்ந்தால், சிறிது நேரத்திற்குப் பிறகு வட்டம் என்று ஒன்று இல்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். அது வெறும் ஒரு புள்ளி, அதுவும் இல்லை. முடிவின்மைக்கும் (infinite), அளவிடமுடியாத எல்லைக்குட்பட்டதன்மைக்கும்(uncountable finite) இடையே பெரிய வித்தியாசம் உள்ளது. எல்லாவற்றிற்கும் மேலும், ஒரு சூஃபி நடனக் கலைஞர் இன்மையில் மறையும்போது என்ன நிகழும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

திர்ல்வெல்: சரி, முடிவுகள் குறித்த இந்தக் கேள்வியுடன் முடிப்போம். பரோன் வென்க்ஹெய்ம் உங்களது கடைசி நாவலாக இருக்கும் என்று சொன்னீர்கள். ஆனால் நீங்கள் இன்னும் எழுதிக்கொண்டிருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். அப்படியென்றால் நீங்கள் இப்போது எழுதுவது நாவல் இல்லையா?

கிராஸ்னஹோர்காய்: சிறிய விஷயங்கள், பெரிய கட்டமைப்பு கொண்டதல்ல. கடைசி நாவலுக்குப் பிறகு மூன்று சிறிய புத்தகங்களை எழுதிவிட்டேன். முதலாவது, The Manhattan Project, (2017), இது என் இரண்டாவது படைப்பிற்கான முன்னுரை. அதற்கு “Spadework for a Palace” என்று தற்காலிகமாக பெயரிடலாம். மேலும் ஆரம்பத்திலிருந்தே நான் எழுத விரும்பிய ஒரு புத்தகத்தையும் முடித்துவிட்டேன்; எனது இளமைக்காலத்திலிருந்தே நான் ஹோமரை ஆராதிப்பவன். கடந்த இலையுதிர்காலத்தில் நான் அட்ரியாடிக் கடற்கரையில் உள்ள டால்மேஷியாவுக்கு ஒரு பயணம் மேற்கொண்டேன். இந்தப் பயணம் என்னை அட்ரியாடிக் கடலில் உள்ள ஒரு தீவிற்கு இட்டுச் சென்றது, அங்கு ஒடிஸி பற்றிய ஒரு தொன்மம் திடீரென்று நினைவுக்கு வந்தது, ஒரு நூலை எழுதினேன். ஒரு  குறுநாவல் (novella) போல அளவில் சிறியது. 

திர்ல்வெல்: பரோன் வென்க்ஹெய்ம்  நாவலுக்குப் பிறகு நீங்கள் வேறொரு நாவல் எழுத மாட்டீர்கள் என்று உண்மையில் நினைக்கிறீர்களா?

கிராஸ்னஹோர்காய்: நாவலா? இல்லை. நீங்கள்  Baron Wenckheim’s Homecoming  நாவலை  படிக்கும்போது உங்களுக்கே புரியும். அதுதான்  என்னுடைய  கடைசி நாவலாக இருக்க முடியும்.

(முற்றும்)

லாஸ்லோ கிராஸ்னாஹோர்காய் (László Krasznahorkai)

லாஸ்லோ கிராஸ்னஹோர்கை (László Krasznahorkai) ஹங்கேரிய நவீன இலக்கியத்தின்  பிரதானமான எழுத்தாளர்.  மனித வாழ்வின் ஏமாற்றம், தனிமை மற்றும் ஆன்மீக வீழ்ச்சி போன்றவை இவரது படைப்புலகின் முக்கிய பேசுபொருள். 2024ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசுபெற்றவர்.

முக்கியப் படைப்புகள்:

  • சாத்தான்தாங்கோ (Satantango - 1985): சிதைந்துபோகும் கிராமத்தையும், மனிதர்களின் கூட்டான ஏமாற்றத்தையும் பேசும் புகழ்பெற்ற நாவல்.
  • தி ரெசிஸ்டன்ஸ் ஆஃப் மெலன்கோலி (The Resistance of Melancholy - 1989): ஒரு விசித்திரமான சர்க்கஸ் குழுவின் வருகையால் ஒரு நகரத்தில் ஏற்படும் ஒழுங்கின்மையை விவரிக்கும் கதை.
ரவிச்சந்திரன் எம்

கவிஞர். கவிதைகள், கவிதைகள் பற்றிய கட்டுரைகளையும் மொழிபெயர்த்திருக்கிறார். சிறுபத்திரிக்கை ஆசிரியர். கோவை மாவட்டம், போத்தனூரில் வசிக்கிறார். கணக்கு தணிக்கையாளராக பணியாற்றுகிறார்.

நூல்கள்:

1.மெய்நிகர்(கவிதைகள்)-லயம் வெளியீடு

2.கவிதையின் மெய்மை (கவிதைபற்றிய மொழிபெயர்ப்பு கட்டுரைகள்)- தமிழினி வெளியீடு


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

உரையாடலுக்கு

Your email address will not be published.

திரட்டு

சேகரம்

Latest Posts

Go toTop