/

யவனிகா ஸ்ரீராம் கவிதைகள்

2024 ஜனவரியில் வேரல் பதிப்பகம் சார்பில் வெளியாகிற யவனிகா ஸ்ரீராமின் ‘கிடக்கட்டும் கழுதை கவிதை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள்.

உடைந்த கைபேசி

நகரத்தின் சங்கொலி கேட்கிறது
அன்றாடத்தின் முனைப்பில் சில செய்திகளைக் கேட்டுக் கொண்டிருந்தேன்
புழங்க இயலாத பாத்திரங்கள் சிலதை மூட்டை கட்டி வைத்தாயிற்று
நேற்றைய கனவில் சில யானைகளையும் எனது கைபேசி உடைந்து நொறுங்கியதையும்
ஒருங்கே பார்த்தேன்
சொல்லிக் கொண்டிருக்கிறேன் ஏதோ ஒன்றை
காதலின் வளவள பேச்சுக்கள் சூழ்ந்திருக்கின்றன
தொலைதூர மலை அருவி ஒரு வெண்ணிறக்கோடு
இன்று பார்க்கையில் இன்னும் மெலிதாக
காலடியில் எழுந்து கைநீட்டும்
அணிலுடன் கொஞ்சும் சிறுபெண்கள் இந்நகரத்தில் இருக்கிறார்கள்
நிறைய காபி நிறைய சிகரெட் பித்தம் கபம்
இந்த இடைவெளியில் வேறு ஒருவர் தன்போக்கில் கடந்து போகலாம்
எதையும் கடிந்து கொள்ள முடியாதபடிக்கு பெரும் மௌனம்
ஆனாலும் எதையோ சொல்லிக் கொண்டிருக்கிறேன்
நைச்சியமாக
இணைக்கென சீத்தா மரத்தில் வழக்கமாய் வந்து கீச்சிடும் இந்த அணிலுக்கு
வேறு வேலைகள் இல்லையா
போ போ அணிலே எத்தனை பழங்களைத் தான் குடைவாய்
வெட்கமாய் இருக்கிறது

000

சில காதல் கவிதைகள்

உன்முகம் பார்க்கவன்றி ஒருபோதும் இனிவரும் நாட்கள் மீதொரு
நம்பிக்கையென எனக்கு ஏதுமில்லை
முருகியலில் அது ஒரு நீண்ட தொலைவு
அல்லது அந்தரங்கப்பகுதியில் ரோமம் அடர்ந்த பருவங்கள்
பல்லாயிரம் காலங்களாய்
பாயிரங்கள் யாவும் பாடி முடிந்ததில் சோகையான இக்காலத்தை
குன்றுகளை மோதும் கடல் அலைகளின் சலிப்பிலா செய்கைக்கு
ஒப்படைக்கிறேன்
எவ்வாறேனும் உன்னை மனங்கொள்ள எனக்கு நத்தைகளின் குறுகியப் பயணவழி போதுமானது
ஒரு தாவர இலையில் நிகழ்ந்த பரிணாமத்தில்
உன்னைச் சந்தித்தது
ஒருபோதும் தீராத துருவப்பிரச்சனைதான் என்றாலும்
மெல்லுடலிகளின் கனவில்
ஒப்புக்கொள்கிறேன் அப்பூந்தசையின் உப்பையும் உன் சீழ்பிடித்த பற்களின்
துர்நாற்றத்தையும்
அதற்கான வாக்குறுதிகள் பெரும் வெட்கக்கேடு என்றாலும்
உன் தனிமைக்கு நான் ஒரு அவப்பெயர்
என் மீதோ ஏராளம் புண்ணியவான்கள் அன்றாடம் ஏறி இறங்குகிறார்கள்
இருந்தாலும் உன்னைக் காதலிக்கிறேன் அன்பே
ஒரு சிறந்த ஐஸ்கீரிம் அல்லது சுட்ட சோளக்கதிர் மீது சத்தியம்
அதிகம் காதலிக்கும் முயற்சியில்
அந்த துருவ நட்சத்திரத்தை உன் கருப்பைக்குள் கண்டேன்
உனக்கான வாய்ப்பின் காலத்தில்
கைமறதியாய் வைத்து விட்ட என் பழைய நாணயங்கள்
உண்மையில்
கனவில் மட்டுமே எப்போதும் அது
வழியெங்கும் மகிழ்ச்சிக்கென இறைக்கப்பட்டிருந்தது.

000

குப்பைமேடு

பறவைகளைச் சமைக்கும் போது உதட்டில் சிகரெட் தொங்குவது முக்கியம்
மலைமுகடுகளைப் பார்த்தவாறோ
ஆடைகளைத் தளர்த்திக் கொண்டோ
அடுப்பைப் பற்ற வைக்கலாம்
மழைக்காலம் தொட்டு முழு பருவ காலங்களிலும் நாம் இவ்வாறு
நீடித்து இருப்பது வீட்டின் அருகே ஒரு குப்பைமேட்டை உருவாக்கி விடுகிறது
ஒரு நதியோ கடலோ தொலைவில் ஞாபகத்தில் இருப்பதை ஏற்கிறோம்
ஒத்துக்கொள்வது முக்கியமானது
இளம் பருவக் காதலுக்கான அனைத்து பாடல்களும் ஏற்கனவே மிகச் செம்மையாக இசைக்கப்பட்டு
அசை போடுவதற்கெனக் காத்திருப்பதைத்தான் சொல்கிறேன்
அப்போது நாம் முழு மனிதனாகும் ஆவலில் இருந்தோம்
காலத்தை இவ்வாறுதான் பலவாகப்பங்கிட்டுக் கொண்டோம்
அனேகமும் சண்டைகள் அண்டை அயல்களோடு என்றார்கள் நீதிமான்கள்
ஒரு சருகுமான் பள்ளத்தாக்குகளில் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வருகிறது
நாம் செய்ய வேண்டியது என்ன
இப்படியான கேள்விகளை ஒரு அருமையான மாலையில் தள்ளி போடுவதுதான்
அழகின் ஆன்மாவை அல்லது காதலை உடல் உழைப்பையும் கூட நாம் எப்போதும் பேராவலுடன் முத்தமிட விரும்பினோம்.
அது ஒரு மறைபொருளைப் போல நம்மை ஏமாற்றியது
ஒரு திருப்தியான மரணம்
அது வாழ்நாளை இழுத்துச் சென்றபடி இருக்கிறது
கெடுபிடியான காலங்களில் புகையிலைக்கும் எரிபொருளுக்கும்
உண்மையில் அவஸ்தைப்பட்டோம்
இப்போது தனிமையில்
ஒளிந்து கொள்ள ஒரு வழியும் இல்லை
பறவை வெந்து கொண்டிருக்கிறது
மேலும் ஒரு சிகரெட்

000

இதம்

நூலின் இருபக்கங்களையும் பறவையின் இறகுபோல விரித்து நீங்கள் வாசிக்கும்போது அதன் தண்டுவடம் மெலிதாக நடுங்கத் துவங்கினால் சற்று நேரம் மார்பின் மீது கவிழ்த்து வாஞ்சையுடன் அதன் முதுகை வருடுவது இதமானது.

000

இளம்பருவக்கோளாறு

நீங்கள் அத்தகையகாலத்தில் சிறுவனாய் கால்கள் மரத்துப்போக
வேலைத்தளங்களில் உடல் போர்த்தி உறங்கிய பிராயங்களை சிறு கூலியில்
சேகரித்தததை நினைவுகூர்ந்துள்ளீர்கள்
பெரும் மழைக்காலங்களின் நம்பிக்கையும்
ஓ வானமே நீ சற்றே பொழிவதை நிறுத்தலாமே என்பதான
நமது வேண்டுதல்களும் பொதுவானதுதான்
இருப்பினும் இளமை தீரா காதல்கள் நமது நெடுங்கால அண்டை இருப்புகள்
ரத்த உறவுகளின் உயிரிருப்பு குறித்த உங்கள் புலம் பெயர் வலிகளின்
வழியே காலமும் இடமும் அற்று
நெருக்கமானோம்
இப்போதும் ரோஜாக்கள் மலர்கின்றன
பள்ளத்தாக்குகளில் மறிமான்களும் நீர்நிலைகளில் ஜீவராசிகளும் பெருகிக்கொண்டிருக்கின்றன
இளவயதின் ஞாபகக் கரைசல்கள் தீர்ந்த வண்ணம் இருக்கும் இக்காலங்களை
நமது செவ்வியல் குணங்களுக்கு
அல்லது நமது
இளம்பருவக்கோளாறுகளுக்கு பரிசளிக்க முடியுமா தெரியவில்லை
அந்நாளில் சிறு பொழுதுகளை அவ்வளவு இயல்பாகக்கடந்தோம்
பெரும் சுமைகளுடன் கூடிய இக்காலத்தின் முன்பு நாம்
அதைப் பலி இடவும் முடியாது யாருக்கும் பரிசளிக்கவும் இயலாது
சந்தேகங்களை பலமுறையும் தீர்த்துள்ளீர்கள்
வரும் கோடைகாலங்கள் யாவிலும் அதை மறவாதிருப்பேன்
வானம் நீலமாய்
தாவரங்கள் பசுமையாய்
சாலைகள் பண்டங்கள் குடியிருப்புகள் மீதான பனிப் பொழிவுகள் போக
அனைத்துத் தத்துவங்களுக்கும் விருப்ப உறுதிகளுக்கும் அப்பால்
இந்த வாழ்வு நமக்கு அளித்த அனைத்து இன்ப துன்பங்களுக்கும்
பிரியங்கள்

000

யவனிகா ஸ்ரீராம்

கவிஞர். விமர்சகர்."இரவு என்பது உறங்க அல்ல","திருடர்களின் சந்தை","காலத்தில் வராதவன்" முதலிய நூல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் ஒரு தனித்துவமான கவிதைக் குரலாக கருதப்படுகிறார்.

உரையாடலுக்கு

Your email address will not be published.