
கவிஞர் இன்பாவின் புதிய நூல் “அவகாடோவாய் இருப்பது” எதிர் வெளியீடாக வந்துள்ளது. அந்நூல் பற்றி கவிஞர் யவனிகா ஸ்ரீராம் எழுதிய கட்டுரை.
எமிலி டிக்கின்ஸன்கள் நிறைய மாறிவிட்டார்கள்!
சிங்கையில் இருந்து கவிஞர் இன்பா அவர்கள் ‘அவகாடோவாய் இருப்பது’ என்கிற தலைப்பில் தனது புதிய கவிதைகளை அனுப்பித் தந்திருந்தார். கால் எட்டாவிட்டாலும் இரு நிலங்களில் பயணிக்கும் ஆற்றல் வாய்ந்தவை, அவரது கவிதைகள். எண்பது லட்சம் ஆண்டுகள் இந்த நிலப்பரப்பின் மீது நீலக் கண்களுடைய தேவதைகள் ஊடுருவிச் செல்கிறார்கள்.
வழக்கம்போலக் கவிதைகளை மளமளவென்று வேகமாகவும் பிறகு நிதானித்தும் வாசித்து முடித்தேன். முதல் பார்வையில் ஒவ்வொரு கவிதையும் தனித்தன்மையோடு, தனக்கே உரிய மொழித்திறன்களோடு வாசகர்களுடன் உரையாடும் நோக்கில் அல்லது பகிர்ந்துகொள்ளும் வளமையில் வெளிப்பட்டிருக்கின்றன.
இந்தத் தொகுப்பில் அப்பட்டமான ஒரு குரலும், ஒரு ரகசிய நேசிப்பின் இரங்கற்பாக்களும், அப்பால் அந்நியமாகி வேடிக்கைப் பார்த்து நிற்கும் சாட்சியுமாக, மூன்று பரிமாணங்கள் தொழிற்பட்டிருக்கின்றன.
உரைநடைக் கவிதைகள், சின்னஞ்சிறு சம்பவங்களாகக் காட்சிப்படுத்தப்படும்போதே வார்த்தைகளின் இடைவெளியிலிருக்கும் காலம் இடம் பொருள் யாவும் மயக்கம்தரும் விதமாக, நுண்கதைகளைப் போல அமைந்து வருவது சமகாலப் பண்பாக இருக்கிறது. இந்தத் தொகுப்பில் இன்பா அதை முழுமையாகச் சாதித்திருக்கிறார்.
தான் வாழ நேர்ந்த இரு நிலத்தின் எச்சங்களிலும் அவை தந்திருக்கக் கூடிய அன்றாடத்திலும், இந்த உடலை எங்கே வைப்பது என்பதுதான் இந்தத் தொகுப்பின் ஆதாரக் கேள்வியாக மாறுகிறது.
ஏறக்குறைய பதினைந்து கவிதைகளுக்கு மேலே மரணங்களும், விடை பெறும் மனிதர்களைப் பார்த்துக்கொண்டிருக்கும் எதேச்சையான கணங்களுமாய் இடம்பெறுகின்றன. தேவதைத்தன்மைக்கும் ஆதி மூதாய்களுக்கும் இடையேயுள்ள, அலுப்பின் பிரசன்னமாய் இக்கவிதைகளில் பல ஆண்டுகளை நாள்களை கவிஞர் கடத்திவிடுகிறார்.
அவகாடோ என்று நாங்கள் அழைக்கும் இந்தப் பழம் கொடைக்கானல் மலைப்பகுதியில் இருந்து ஊட்டி வரை விளைகிறது. முக்கோண வடிவில் ஒரு பெரிய கொய்யாக்காயைப் போலக் காட்சி அளிக்கும் இந்தப் பழம் பச்சை நிறத்திலேயே இறுதிவரை இருக்கிறது.
பழத்தின் உள்ளே நடுவில் ஒரு பெரிய விதை. அதை நீக்கிவிட்டு உள்பக்கத்தை வழித்தெடுத்தால் பசும் வெண்ணெய் போன்று திரண்டு வரும் சதைப்பற்று. அதை வாயில் வைத்தால் ஒரு கணம் நமது நாவில் ருசி உணர்வுகளே இல்லையோ என்ற சந்தேகம் வந்துவிடும். ஏராளமான சத்துக்கள் உள்ள அந்தப் பழம் ஒரு ருசியற்ற பண்டமாக இருப்பது அபரிமிதமாய் வாழ்க்கை இருந்தும், அவை ருசிநீக்கம் செய்யப்பட்டவை என்கிற இடத்தில் அவகாடோவாக இருப்பதைப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. மிக முக்கியமான ஒரு தத்துவார்த்த நிலையைக் கவிதைகளின் மூலம் வந்தடைந்த நிலையில் தன்னையும் அதில் பொறுத்தி நிற்கிறார் இன்பா.
பெருநகர வாழ்வு, அதன் அன்றாடக் காட்சிகள், வாகனங்கள், மனிதர்கள், உணவு விடுதிகள், வேலைச் சுமையென மறுபடியும் மறுபடியும் நிகழ்ந்துகொண்டிருக்கக் கூடிய ஒரு பெரிய ராட்சத இயந்திர வாழ்க்கையில் இருந்துதான் இந்தக் கவிதைகளை நாம் பின்தொடர முடியும்.
சிண்ட்ரெல்லாவின் கனவுகளும் எமிலி டிக்கின்ஸன்கள் கடந்த காலங்களும் புனிதத் தோட்டங்களும் மலர்களும் வண்ணத்திப் பூச்சிகளும் தலைகீழாக்கம் அடைகின்றன.
பொதுவாகவே உலக இலக்கியங்களில் துன்பவியல் நாடகங்கள், அதன் பிறகான லட்சிய வாழ்க்கை, இருத்தலியல் அவஸ்தைகள் யாவற்றிற்கும் அப்பால் அழகின் பேருணர்ச்சிகளும், அடிமனதில் எப்போதும் நம்மோடு உறவாடும் இன்பக் கனவுகளும், காதலைத் துரத்தும் ஆவேசங்களும், சிலசமயம் அவை முழுப் புனைவாக இருந்தாலும் அவற்றை ஒரு கிளிக்குஞ்சைப் போல மனக் கூட்டுக்குள் வைத்துக்கொண்டு பயணிப்பது, பல சமயங்களில் வாழப் போதுமானதாகித்தான் விடுகிறது.
“காலம்
செல்லச்
செல்ல
மனம் / உடல்
கதவுகள் / கதவுகள்
ஒவ்வொன்றாய்
ஒவ்வொன்றாய்
திறக்கின்றன / மூடுகின்றன.”
“நேற்றைய நீரோடையில் நாளைய மலர்களைச் சுமந்து
இன்றைய கூட்டுக்குள் முயங்குகிறது கிளி.”
ஒரு கட்டத்தில் வாழ்வின் மலர்ச்சியையும் ஒரு கட்டத்தில் இறப்பின் துயரக் காட்சிகளையும் பார்ப்பதற்காகத்தான் நாம் ஒரு சாட்சியாக இருக்கிறோமா? என்பது போன்ற கேள்விகளை இந்தக் கவிதைகள் எழுப்புகின்றன.

நுவா பிசைந்த களிமண், அபாங்கின் அரூப வண்டி போன்ற கவிதைகள் எனக்கு ஒரு வினோத மனநிலையைத் தந்தன. சிங்கப்பூர் சீனர்களுடைய வாழ்க்கையில் அவர்கள் எப்போதும் தங்களுடைய வேலைகளில் மிகக் கவனமாக மீண்டும் மீண்டும் அதைச் செய்வதில் சோர்வற்றவர்களாகச் சலிப்பற்றவர்களாக இருப்பதைப் பார்த்திருக்கிறேன். வணிகத்துக்காகச் சென்று வந்த காலங்களில் இப்படிப் பல காட்சிகள் எனக்குள் மீந்து இருந்ததை மிகச் சிறப்பாக இன்பா இந்தத் தொகுப்பு முழுக்க காட்சிப்படுத்தியிருக்கிறார். இன்னும் சொன்னால் சிங்கப்பூரின் ஆன்மா வழிந்தோடும் தெருக்களைத்தான், அவர் அழகாகப் பன்முகத்தன்மையோடு பார்க்கிறார்.
ஒரு பெருநகரத் தேச எல்லைக்குள் நிரந்தர வசிப்பிடத்தைப் பெற்ற அந்நியமான, கீழைத்தேய மனம்கொண்ட ஒரு பெண் சித்திரம், நம்மை ஒரு பயணியைப் போலக் கைப்பிடித்து, அந்தத் தெருக்களில் அழைத்துச் செல்கிறது.
வாழ்வை அதன் கதியில் ஏற்றுக்கொள்ளும் நமது மனம், குறிப்பிட்ட காலத்தைக் கடந்து நிற்கும்போது, அவை மீண்டும் மீண்டும் ஒரே மாதிரி நிகழ்ந்து வருவது சலிப்பை உணர்த்தி விடுகிறது. மனிதன் வரலாற்றில் முதலீடு செய்யப்பட்டுவிட்டான் என்கிற பேருண்மை முகத்தில் அறைகிறது. மகிழ்வூட்டும் விழாக்கள் இடையே வந்து வந்து போகின்றன. இல்லமும் நட்புமாய், இந்தச் சலிப்பான வாழ்க்கைக்கிடையே அகலப் புன்னகைப்பது என்பது ஏதோ ஓரிடத்தில் சங்கடமாகத்தான் இருக்கிறது.
வறண்ட காலங்களில் கூட, பெரும் புல்வெளிகள் கருகிச் சருகாகும் கோடைகளில் கூட, துளிமழைக்கு ஏங்கி, புற்கள் நிலத்தின் அடியில் சின்னஞ்சிறு வேர்களாகக் கைகளைக் கோர்த்துக்கொண்டுதான் காத்திருக்கின்றன.
அத்தனை சலிப்பிற்கிடையே கைகளை இணைத்துக் கொண்டிருக்கும் வேர்களைத்தான், அதாவது நாம் காணமுடியாத உறவுகளைத்தான், இன்பா பல்வேறு அன்றாடப் புனைவுகளில் வைத்து, இந்தக் கவிதைகளைச் சோர்வில்லாமல் வாசிக்கச் செய்துவிடுகிறார். சலிப்பைப் பற்றி எழுதும், சலிப்பற்ற உயிர்த்தன்மை கூடிய கவிதைகள் என்றும் சொல்லாம்.
‘கப்பலைக் கண்டு குரைத்த நாய்கள்’ ‘நாசிலமா நெல்லஞ்சோறு’ போன்ற கவிதைகள் சிங்கப்பூரின் வரலாறு, பண்பாட்டு, கலாச்சார வாழ்க்கையில் தமிழ் வாழ்வும் இரண்டறக் கலந்த நிலையை எடுத்துரைக்கின்றன. பிறந்த இடத்திலிருந்து பிரிந்துவந்த இழப்புணர்ச்சி ஏதுமில்லாமல், இருநிலவாழ்விற்கிடையே, ஒரு நியோ கிளாசிக் தன்மையை வாசிக்கும்போது உணரமுடிகிறது. அதுதான் இந்தக் கவிதைகளின் மிகச் சிறப்பான ஒருங்கிணைப்பு என்று சொல்லலாம்.
மல்லிகையைத் தவிர அங்கு வேறு ஒன்றும் இல்லைதான். ஆனால் யாருக்குத்தான் மல்லிகை வாழ்க்கை வாய்க்கிறது. மொக்கின் கணம் அவிழ்ந்தால் காலாதீதம் என்பார் பிரமிள். இன்பாவின் கவிதைகளும் காலாதீதத்தில்தான் நீந்துகின்றன. உண்மையைச் சொன்னால் சலிப்பும் ஒரு சுகம்தான். ஆனால் சலிப்பே பிறிதொன்றை மறுவரையறை செய்கிறது. அதற்கு அப்பால் செல்ல முயல்கிறது. சலிப்பின் அடியில் ஒரு குறுகுறுப்பும் கடந்து செல்லும் விளையாட்டும் இருக்கிறது. ஒரு தொட்டாசிணுங்கிச் செடியைச் சீண்டுவதோடு, பிள்ளைகளின் கலைந்துக் கிடக்கும் பள்ளிப் பையைப் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருப்பதும்தான். இதிலிருந்து விலகமுடியாதுதான். இதிலிருந்தே தனித்தும் உரையாடியும் பிரிந்தும் இணைவதும் சாத்தியம்தான்.
நன்றாக நிதானித்து இன்பா எழுதியிருக்கிறார். பல மேற்கோள்கள் கவிதைகளில் வந்துபோகின்றன. அவற்றை வாசகர்கள் பின்தொடர இயலுமாவென்று தெரியவில்லை. மற்றபடி வாழ்வின் மீதான பரிகாசத்தில் முதிர்ந்து இந்தச் சலிப்பை கவிஞர் முன்வைக்கவில்லை. உள்ளே ஒளிந்திருக்கும் சிறுமியின் புதிய திறப்புகளை இந்தத் தொகுப்பின் மூலம் பக்குவமாக வெளிப்படுத்தியிருக்கிறார். குறும்பும் சலிப்புமாக வாழ்வதின்றி இந்த வாழ்க்கையில் இருக்கும் சவால்கள்தான் வேறென்ன? எமிலி டிக்கின்ஸன்கள் நிறைய மாறிவிட்டார்கள். அவர்கள், எங்கிருந்தாலும் தங்கள் உலகைப் புதுப்பித்துக்கொள்கிறார்கள். இந்த உலகத்தைக் கூவி அழைப்பது உற்சாகமானதுதான். சிலர் திரும்பிப் பார்க்கிறார்கள்.

யவனிகா ஸ்ரீராம்
கவிஞர். விமர்சகர்."இரவு என்பது உறங்க அல்ல","திருடர்களின் சந்தை","காலத்தில் வராதவன்" முதலிய நூல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் ஒரு தனித்துவமான கவிதைக் குரலாக கருதப்படுகிறார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.



















