
ஒவ்வொரு சிறந்த கவிதையும் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு படைப்புச் செயல்; ஒரு படைப்பூக்கமான சதித்திட்டம் (creative conspiracy). கவிஞன் என்பவன் ஒரு சதிகாரன் (conspirator). தன்னுடைய காலம், மனநிலை, சொற்களின் வலிமை, வாழ்க்கையின் காட்சிகள், அவலங்கள், மகிழ்ச்சிகள்—இவற்றை எந்த அளவில், எவ்வாறு ஒன்றோடொன்று இணைக்கிறான் என்பதில்தான் கவிதையின் வலிமை இருக்கிறது.
கவிதையை வெறும் உணர்ச்சி வெளிப்பாடு என்று நினைத்தால், சிறந்த கவிதைகளை எழுத முடியாது. அதைப் வெறும் கருத்துக்களை எடுத்துச் செல்லும் வாகனம் என்று நினைத்தாலும் முடியாது. அதனால்தான் கவிதையின் கட்டமைப்பு மிகவும் முக்கியமானது. எதை வேண்டுமானாலும் தொடர்ந்து எழுதிக்கொண்டே போக முடியாது. ஒரு கவிதையை எங்கே தொடங்க வேண்டும் என்பதுபோலவே, எங்கே நிறுத்த வேண்டும், எங்கே கைவிட வேண்டும் என்பதையும் ஒரு கவிஞன் தெரிந்திருக்க வேண்டும்.
“கைவிட வேண்டும்” எனும் சொற்றொடரை மிகவும் விழிப்புணர்வுடன் பயன்படுத்துகிறேன். ஒரு கட்டத்தில் கவிதையே நமக்குச் சொல்வது போல இருக்கும்: “இதற்கு மேல் எழுதாதே.” அந்த இடத்தில் அதை நிறுத்தத் தெரிந்திருக்க வேண்டும். ஆற்றூர் ரவிவர்மாவிடம் ஒருமுறை இதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தபோது சொன்னார்: “ஒரு செடியில் ஏழு பூக்கள் இருக்க வேண்டும் என்றால், ஏழு பூக்கள்தான் இருக்க வேண்டும். எட்டாவது பூ எவ்வளவு அழகாக இருந்தாலும், அதை இரக்கமின்றி கிள்ளிவிட வேண்டும்.” கவிதை என்பது சொற்கள், படிமங்கள், குறியீடுகள், கருத்துக்கள் ஆகியவற்றால் மட்டுமல்ல; மௌனங்களாலும், இடைவெளிகளாலும் கட்டமைக்கப்படுவது.ஒரு கவிஞன் என்பவன் வெறும் சொற்பொழிவாளர் அல்ல. மாறாக, மனித மனத்தின் கண்களைத் திறக்கக்கூடியவன். கவிதை என்பது மனதின் கண்களைத் திறக்கக்கூடிய ஒரு கலை.
ஒரு நாவலாசிரியர், “நாவல் எழுதுவது என்ற அனுபவம்” பற்றியே ஒரு நாவல் எழுதுவதில்லை. அபூர்வமாக யாராவது எழுதியிருக்கலாம். ஆனால் பொதுவாக, ஒரு நாவல் எழுதும் அனுபவம், அந்தப் படைப்புப் பயணம், அது எழுத்தாளருக்குள் உருவாக்கும் மாற்றங்கள்—இவற்றைப் பற்றியே ஒரு நாவல் எழுதப்பட்டிருக்கிறதா? அதேபோல், ஒரு சிறுகதை ஆசிரியர், “சிறுகதை எழுதுவது” என்ற அனுபவத்தை மையமாக வைத்து ஒரு சிறுகதை எழுதுவதில்லை. ஒரு சிறுகதைக்குள் பயணிக்கும் போது அவருக்கு ஏற்படும் அனுபவங்களைப் பற்றிய சிறுகதையை வாசிப்பது அரிது. ஆனால் கவிதையில் மட்டும் ஒரு விசித்திரமான நிகழ்வு நடக்கிறது. கவிதை எழுதுவதைப் பற்றியே ஏராளமான கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. கவிதை எழுதுவதைப் பற்றி கவிதை எழுதாத கவிஞர்கள் மிக அரிது. ஒரு நாவலாசிரியர், “நாவல் எழுதும்போது என்ன நடக்கிறது?” அல்லது “ஒரு நாவல் எப்படிப் பிறக்கிறது?” என்பதை கற்பனாவாதம் கலந்த இன்னொரு நாவலாக எழுதுவதில்லை. ஆனால் ஒரு கவிஞன் தொடர்ந்து கவிதை எழுதுவது பற்றி எழுதுகிறான்.
ஏன் எல்லாக் கவிஞர்களும் “கவிதை என்றால் என்ன?” என்ற கேள்வியைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்? ஏன் கவிதைக்குள் என்ன நடக்கிறது என்பதைப் பற்றியே அவர்கள் மீண்டும் மீண்டும் பேசுகிறார்கள்? ஏன் கவிதையைப் பற்றிய அறிக்கைகளையும் (statements), கவிதைகளையும் தொடர்ந்து எழுதுகிறார்கள்? எனக்குத் தோன்றுவது, மற்ற கலைவடிவங்களைவிட கவிதை முழுமையாக அறிந்து கொள்ள முடியாத ஒரு மர்மத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்கிறது. அது திடீரென்று ஒரு விபரீதம் போல நிகழ்கிறது. யாரும் இதுவரை தொடாத ஒரு இடத்தில் திடீரென தன்னுடைய கைகளை நீட்டுகிறது. அதனால்தான் கவிதை எப்போதும் தனக்குள் ஒரு விசித்திரமான புதுமையை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. அதை எழுதுகிறவர்களுக்கும், படிக்கிறவர்களுக்கும், அது எப்போதும் ஒரு கண்ணை மூடிக்கொண்டே இருக்கும். தன்னுடைய ஒரு பகுதியை மறைத்துக்கொண்டே இருக்கும். அந்த மறைந்திருக்கும் பகுதியைத் தேடித்தான் கவிஞர்கள் மீண்டும் மீண்டும் கவிதையைப் பற்றி சிந்திக்கிறார்கள்; கவிதையைப் பற்றிய கவிதைகளை எழுதுகிறார்கள்.
தமிழில் மட்டுமல்ல, உலக மொழிகளிலும் இப்படிப்பட்ட ஏராளமான கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, “நவீனக் கவிதை நமக்கு என்ன தருகிறது?” என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்படுகிறது. ஏன் நவீன கவிதையைப் படிக்க வேண்டும்? அதிலிருந்து நமக்கு என்ன கிடைக்கிறது? இதைப் பற்றிப் பல அறிக்கைகளும் கருத்துக்களும் உள்ளன. அவற்றில் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று, ஆங்கிலக் கவிஞர் சார்லஸ் ரைட் (Charles Wright) எழுதிய “புதிய கவிதை” என்ற கவிதை. அதை பிரமிள் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். பல பயிலரங்குகளில் இந்தக் கவிதையை மையமாக வைத்து உரையாடியிருக்கிறேன். புதுக்கவிதையைப் பற்றி அவர் இவ்வாறு எழுதுகிறார்:
அது சமுத்திரத்தின் பிரதிபிம்பமாய்ப் பிறக்காது
அவர் தொடர்ந்து சொல்கிறார்:
அதன் மரத்த கைகளில் மண் இருக்காது
பொதுவாக சில கவிஞர்கள், “நான் வேர்களைத் தேடிப் போகிறேன்” என்று சொல்வார்கள். ஆனால் சார்லஸ் ரைட் அதற்கு நேர்மாறாக, “அதன் மரத்த கைகளில் மண் இருக்காது” என்கிறார். அடுத்த வரி:
அது சீதோஷ்ண நிலைகளின் பகுதியாயிராது
அதாவது, காலநிலைகளின் இயல்பான சுழற்சிக்குள்ளும் அது அடங்காது. பிறகு:
அது தன் பெயரை வெளியிடாது
அதற்குப் பிறகு:
அதிலிருந்து உறுதி தரும் கனவுகள் பிறக்காது
அவர் சொல்வது நவீனக் கவிதையைப் பற்றித்தான். அதாவது, அதிலிருந்து உறுதியளிக்கும் கனவுகள் பிறக்காது. அப்படியானால், இதற்கு முந்தைய கவிதைகளில் அவை இருந்திருக்க வேண்டும் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். பிறகு அவர் எழுதுகிறார்:
அது புகைப்படத்தில் அழகாக வராது
அது நமது துக்கத்தை விசாரிக்காது
அது நம் சந்ததிக்கு ஆறுதல் அளிக்காது
நமக்கு உதவ அதற்கு திராணியிராது

இந்தக் கவிதையை எப்படி வாசிப்பது? இதுதான் நவீனக் கவிதையின் இலக்கணமா? “அது உதவாது”, “ஆறுதல் அளிக்காது”, “கையில் மண் இருக்காது”, “உறுதியளிக்காது”—எல்லாமே எதிர்மறைகளின் வழியாகச் சொல்லப்படுகிறது. அப்படியானால், இந்த நவீனக் கவிதை எந்த மனநிலையிலிருந்து உருவாகிறது? ஏன் சார்ல்ஸ் ரைட் இப்படிப்பட்ட ஒரு இலக்கணத்தை முன்வைக்கிறார்? இது மேற்கத்திய மனநிலையிலிருந்து உருவான பார்வையா? அல்லது பொதுவாக நவீனக் கவிதைக்கான ஒரு வரையறையாக இதைப் புரிந்துகொள்ளலாமா?
21ம் நூற்றாண்டில் இரண்டு உலகப் போர்கள் உருவாக்கிய நம்பிக்கை வறட்சி, பற்றின்மை, உடைந்து போன மனோரதங்கள், அதிலிருந்து உருவான வெறுமை அவற்றின் பின்னணியில்தான் சர்ரியலிசம் போன்ற பல இலக்கியக் கோட்பாடுகளும் தோன்றின. நவீன வளர்ச்சி உருவாக்கிய நம்பிக்கைவாதத்தையே அந்த அனுபவங்கள் உடைத்துவிட்டன என்று கூட சொல்லலாம். ஆனால் நான் வேறொரு கோணத்தில் அணுகுகிறேன். இந்தக் கவிதை, ஒரு இந்திய மனதிற்கும், ஒரு தமிழனின் மனதிற்கும் பொருந்துமா என சிந்திக்கலாம். “நம் சந்ததிக்கு நவீனக் கவிதை ஆறுதல் அளிக்காது” என்று நாமும் சொல்ல முடியுமா? இதற்கு எதிராக ஆத்மாநாம் எழுதிய ஒரு கவிதையைப் பாருங்கள்.
“சிகரெட்டிலிருந்து
வெளியே
தப்பிச் செல்லும்
புகையைப் போல்
என் உடன்பிறப்புகள்.”
அவர் அடுத்ததாக எழுதுகிறார்:
“நான்
சிகரெட்டிலேயே
புகை தங்க வேண்டுமெனக்
கூறவில்லை
வெளிச் செல்கையில்
என்னை நோக்கி
ஒரு புன்னகை
ஒரு கை அசைப்பு
ஒரு மகிழ்ச்சி
இவைகளையே
எதிர்பார்க்கிறேன்
அவ்வளவுதானே”
இதை இந்திய மனநிலை என்றோ மேற்கத்திய மனநிலை என்றோ வகைப்படுத்திட முடியாது. கவிதைக்குள் செயல்படும் இந்த மனநிலையை நாம் ஆராய வேண்டும். நீங்கள் அன்பு, உறவு, பாசம் என்று பேசுகிறீர்கள். ஆனால் இதே சமூகத்தில்தான் இன்னொருவன் (ஆத்மாநாம்) எழுதுகிறான்:
“என் அண்ணன், தம்பிகள் எல்லாம் சிகரெட்டிலிருந்து தப்பிச் செல்லும் புகையைப் போலச் சிதறிச் செல்கிறார்கள்.”
“இருபத்தொன்று ஆண்டுகள் படிப்பும் வேலையும் பார்த்தேன்;
அண்டை வீட்டாருடன் ஒருமுறைகூட பேசவில்லை.”
அப்படியானால், கவிதைக்குள் இயங்கும் அந்த தன்னிலை (Self) என்ன என்பது இன்னொரு முக்கியமான கேள்வி. நான் தமிழனா? மேற்கத்திய சமூகத்தைச் சேர்ந்தவனா? அல்லது ஜென் போன்ற சிந்தனை மரபுகளின் தொடர்ச்சியா? என்னுடைய அடையாளம் என்ன? கவிதைத் தன்னிலை (poetic subjectivity) என்றால் என்ன? அதை உருவாக்குவது எது? இதெல்லாம் வெறும் கோட்பாட்டுப் பிரச்சினைகள் அல்ல.நான் ஏன் ஆத்மாநாமின் கவிதையையும் சார்லஸ் ரைட்டின் கவிதையையும் ஒப்பிட்டுச் சொல்கிறேன் என்றால், இன்று கவிதை எழுதுகிற ஒருவருக்குள் ஒரு உலகளாவிய தன்னிலை (global subjectivity) உருவாகிவிட்டது. அதே நேரத்தில், அந்தத் தன்னிலைக்குள் மண்ணோடு பிணைந்த கவிதைகளும் இருக்கின்றன. நம்முடைய பண்பாட்டு வேர்களும் இருக்கின்றன.
உதாரணமாக, வெய்யில் போன்ற கவிஞர்களின் கவிதைகளைப் பாருங்கள். அரிவாளில் ரத்தம் சொட்டுவது போல ஒரு மூர்க்கமான மண்ணின் நினைவு அதற்குள் இருக்கும். தன்னுடைய ஆதித் தெய்வத்தைத் தேடும் உக்கிரம் இருக்கும். மறுபுறம், இசை போன்ற கவிஞர்களின் கவிதைகளில் நவீன வாழ்க்கையின் அன்றாட உதிரி மனநிலைகள், சினிமா உருவாக்கும் கற்பனைகள், நகர வாழ்க்கையின் சிதறல்கள்—இவை எல்லாம் இடம் பெறுகின்றன. அதுவும் தமிழ் வாழ்க்கையின் ஒரு பகுதிதான். ஒரு பக்கம் அந்நியமாதல்; இன்னொரு பக்கம் வேர்களைத் தேடும் வெறி. பலர் திடீரென்று தங்களைச் சங்கக் கவிஞர்களின் தொடர்ச்சியாக அறிவித்துக் கொள்கிறார்கள். பெண் கவிஞர்களின் தொகுப்புகளுக்கு முன்னுரை எழுதும் ஆண் கவிஞர்கள், அவர்களை ஏதோ ஒரு சங்கக் கவிஞரின் மரபில் இணைத்துப் பேசுகிறார்கள். ஆனால் இன்றைய வாழ்க்கையில் சங்ககால வாழ்வின் எந்தச் சுவடும் இல்லாதபோது, சில படிமங்களை மட்டும் பயன்படுத்தி அந்தத் தொடர்ச்சியை உருவாக்குவது என்னை ஆச்சரியப்படுத்துகிறது.

அடிப்படையில் நாம் புரிந்துகொள்ள வேண்டியது ஒன்று இருக்கிறது. நான் ஆரம்பத்தில் “கவிதை மனம்” பற்றிப் பேசினேன். உங்களுடைய கவிதை மனம் என்பது, நீங்கள் வாழ்கிற வாழ்க்கையிலிருந்து உருவாகிறதா அல்லது மொழிக்குள் இருந்து உருவாகிறதா என்பதை எளிதில் பகுக்க முடியாது. இரண்டும் என்று நீங்கள் சொல்லலாம். அது சரியான பதில்தான். இன்னும் துல்லியமாகக் கேட்கிறேன். கவிதை எழுதும்போது செயல்படும் அந்த ‘கவிதை மனம்’, அந்த ‘தன்னிலை’, உங்கள் அன்றாட வாழ்க்கையிலிருந்து உருவாகிறதா? அல்லது உங்கள் மொழிக் கட்டமைப்பிலிருந்து உருவாகிறதா?
ஏன் இந்த உலகக் கவிதைகள், சங்கக் கவிதைகள், நவீனக் கவிதைகள் எல்லாவற்றையும் நான் பேசுகிறேன் என்றால், அவை அனைத்தும் சேர்ந்து உங்களுக்குள் ஒரு மொழிப்பரப்பை உருவாக்குகின்றன. நீங்கள் இந்த ஊரைச் சேர்ந்தவராக இல்லாமலும் இருக்கலாம். இந்த நிலத்தையோ காலநிலையையோ நேரடியாக அனுபவிக்காதவராகவும் இருக்கலாம். இருந்தாலும், உங்கள் கவிதையில் எங்கோ இருக்கும் ஒரு இசைக்கருவி வரும்; இந்த ஊரில் இல்லாத ஒரு பறவை வரும். மொழியின் வழியாக நீங்கள் சேகரிக்கும் படிமங்கள், சொற்கள், வாசிப்புகள், அவை உருவாக்கும் கற்பனைகள்—இவையே உங்கள் கவிமனத்தை உருவாக்குகின்றன. நீங்கள் வாழும் இடம், உங்கள் அன்றாட வாழ்க்கை—இவை முக்கியமானவைதான். ஆனால் அவை கவிதையின் மூலப் பொருள் அல்ல; அதன் துணைப் பொருட்கள்.
கவித்துவ மொழியை ஆதார ஊற்றை அது ஒருவரை வந்து சேரும் வழியை நாம் விவாதித்து பார்க்கலாம். என்னிடமும் மொழி இருக்கிறது, எல்லோரிடமும் இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் வாழ்க்கை அனுபவங்களும் இருக்கின்றன. ஆனால் அந்த அனுபவங்கள் மட்டும் ஒரு வலிமையான கவிதையை உருவாக்க போதுமானதாக இல்லை. கவிதை என்பது எல்லோருக்கும் ஏதோ ஒரு இடத்திலிருந்து உருவாகும். ஒரு மேலான, வலிமையான கவிதை, அந்தக் கவிதையை உருவாக்கும் மனம் இவை வெறும் வாழ்க்கை அனுபவங்களால் மட்டுமே உருவாவதில்லை. வலிமையான ஒரு கவித்துவ மொழிக் கட்டமைப்பை ஒருவர் கொண்டிருந்தால் அது மட்டுமேக்கூட கவிதையை உருவாக்கிவிடுவதில்லை.
வாழ்வியலை நீங்கள் எதன் வழியாகப் புரிந்துகொள்கிறீர்கள்? அதைப் பற்றிய கருத்தாக்கத்தை எப்படிச் செய்கிறீர்கள்? என்பதுதான் முக்கியம்.
இரண்டு கவிஞர்களுக்கு இடையே இருக்கும் வேறுபாடு, அவர்களுடைய மொழிசார் வலிமையிலிருந்தே உருவாகிறது என்று நான் நம்புகிறேன். ஒருவருடைய மொழிக் கட்டமைப்பு தொடர்ந்து வலிமை பெற வேண்டும். அந்த வலிமையைப் பெறுவதில் கற்றல் மிக முக்கியமானது. உதாரணமாக, எனக்கு ஐரோப்பிய, அமெரிக்க, ஆப்பிரிக்க ஆசிய இந்தியக் கவிதைகளில் சங்கக் கவிதைகளில் பரந்த பரிச்சயம் ஏற்பட்டால், என்னுடைய மொழிக் கிடங்கு (language reservoir) மிகவும் பெரிதாகிவிடுகிறது. அப்போது நான் ஒரு உணர்ச்சியையோ அல்லது ஒரு கருத்தையோ வெளிப்படுத்தும்போது, அதற்கேற்ற வலிமையான படிமங்களை உருவாக்க முடியும். அதன் தொடர்ச்சியாக புதிய கற்பனைகளையும் உருவாக்க முடியும். மாறாக என்னுடைய மொழிக் கட்டமைப்பு பலவீனமாக இருந்தால், என்னுடைய மொழி அனுபவம் (language exposure) குறைவாக இருந்தால் என் கவிதையில் வரும் படிமங்களும் பலவீனமாக இருக்கும்; அதன் தொனியும் (tone) பலவீனமாக இருக்கும். எனக்கு எவ்வளவு தெரிகிறதோ, அவ்வளவுதான் என் கவிதையில் வெளிப்படும்.
போராட்டக் களத்தில் செயல்படும் பலரும் கவிதைகள் எழுதலாம். ஆனால் இன்றைக்கும் மாயகோவ்ஸ்கி (Vladimir Mayakovsky) போன்ற சிலர்தான் உலக மகாகவிகளாக கொண்டாடப்படுகிறது. போராட்டக் கவிதைகள் எழுதிய மற்ற எல்லோராலும் அதே உயரத்தை எட்ட முடியவில்லை. எல்லோரும் வரலாற்றையே பிரதிபலிக்கிறார்கள். வரலாற்றைத் தவிர்த்து யாராலும் எழுத முடியாது. ஆனால் அந்த ஆயிரம் பேரில் ஒருவர் மட்டுமே தனியே தெரிகிறார். பாப்லோ நெருடா போல.
நம்முடைய நோக்கம், ஒரு மேலான கவிதையை உருவாக்க வேண்டும் என்பதாக இருந்தால், அதற்குத் தேவையான அடிப்படையான திறன்களும் அடித்தளமும் என்ன என்பதைப் பற்றித்தான் நான் பேசுகிறேன். நமக்குக் கருத்துகளுக்குப் பஞ்சமில்லை. எண்ணங்களுக்குப் பஞ்சமில்லை. உணர்ச்சிகளுக்கும், வாழ்க்கை அனுபவங்களுக்கும் பஞ்சமில்லை. ஆனால் எழுதத் தொடங்கினால் எதுவும் வரவில்லை என்று பலர் சொல்கிறார்கள். “எனக்கு கவிதை எழுத வேண்டும் என்ற ஆசை இருக்கிறது; ஆனால் நான் அதிகமாகப் படிக்கவில்லை. அதுதான் பிரச்சனை” என்று சொல்கிறார்கள்.
நான் பேசிக்கொண்டிருப்பதெல்லாம் அதற்காகத்தான். நீங்கள் எழுதக்கூடாது என்று நான் சொல்லவில்லை. ஆனால் சிறந்த கவிதையை எழுத வேண்டும் என்றால் பயிற்சி அவசியம் என்று சொல்கிறேன். சிறுகதையோ, கவிதையோ—பயிற்சி இல்லாமல் எழுத முடியாது என்பதே என் கருத்து.
ஒரு பயிற்சி அரங்கில், தான் எழுதிய ஒரு கவிதையை பங்கேற்பாளர் பகிர்ந்துக் கொண்டார். துப்புரவு தொழிலாளர் பற்றி அவர் எழுதியது.
“கைகளுக்கு உறையும் இல்லை,
கால்களுக்கு செருப்பும் இல்லை;
கைகளால் அள்ளும்போது
நாற்றம் பொறுக்கவில்லை…”
இந்த கவிதையில் உள்ள சிக்கல் பயிற்சியின்மைதான். துப்புரவு தொழிலாளருக்கு கையுறை இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அவர் குப்பையை அள்ளுகிறார் என்பதும் தெரிந்த விஷயம். நாற்றம் தாங்க முடியவில்லை என்பதும் தெரிந்த விஷயம். ஆனால், அதற்கு மேலாக புதிதாக எதுவும் இல்லை. அதற்காகத்தான் நான் இந்தப் பயிற்சி பற்றிப் பேசுகிறேன்.
ஒருமுறை கவிதை தொடர்பான ஒரு விவாதத்திற்குப் போயிருந்தேன். இன்றைக்கு எழுதிக்கொண்டிருப்பவர்களிடம் பல சிக்கல்கள் இருப்பதால் இதைச் சொல்கிறேன். அந்த நிகழ்ச்சியின் நெறியாளர் ஒவ்வொருவரிடமும், “உங்களுக்கு மிகவும் பிடித்த கவிஞர் யார்?” என்று கேட்டார். ஒரு கவிஞர் உடனே, “பாரதியார்” என்றார். அது பதிலே கிடையாது.”அவருக்கு கையுறை இல்லை” என்று சொல்வது எவ்வளவு வெளிப்படையான உண்மையோ, “எனக்கு பாரதியார் பிடிக்கும்” என்று சொல்வதும் அதே அளவு வெளிப்படையான பதில்.
நாம் பாதுகாப்பான பதிலைச் சொல்கிறோம். ஏனென்றால் நம் மனதில் வேறு யாரும் இல்லை. ஆயிரம் பேர் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். சிலரிடம் நான் கவனித்திருக்கிறேன். “உங்களுக்குப் பிடித்த கவிஞர் யார்?” என்று கேட்டால் நீண்ட நேரம் யோசித்து, ஏற்கனவே அனைவரும் ஏற்றுக்கொண்ட ஒரு பெயரைத்தான் சொல்வார்கள். அதில் தவறில்லை. பிடித்த கதாசிரியர்கள் பெயரைக் கேட்டால் தி. ஜானகிராமன், கு. அழகிரிசாமி, ஜெயகாந்தன்—இவர்களைச் சொல்கிறார்கள். நாம் பொதுவாக ஏற்கனவே நிலைபெற்ற (established) பெயர்களின் பின்னால்தான் ஓடிக்கொண்டிருக்கிறோம்.
இன்னொரு விஷயமும் இருக்கிறது. சிலர் என்னிடம் வந்து, “சார், ‘நீராலானது’ மாதிரி ஒரு தொகுப்பு இனி வராது.” என்று சொல்வார்கள்.
நான் இருபத்தைந்து வருடங்களாக எழுதி இருக்கிறேன். ஏராளமான கவிதைகள் எழுதியிருக்கிறேன். ஆனால் அவர்கள் மனதில் ஒரு புத்தகம் மட்டும்தான் இருக்கிறது. படிக்கவில்லை. படிக்க வேண்டும் என்று யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. சரி, ஒரு புத்தகம் தெரிந்திருக்கட்டும். இல்லையென்றால் தி. ஜானகிராமனின் மோகமுள் என்றாவது தெரிந்திருக்கட்டும். ஒருவருக்கு ஒரு புத்தகமாவது நினைவில் இருக்கட்டும். சிலருக்கு அதுவும் இருக்காது. இரண்டு வரிகள் மட்டுமே நினைவில் இருக்கும். அதையே மீண்டும் மீண்டும் சொல்வார்கள். ஏன் என்று கேட்டால், தெரியாது என்பதைத்தவிர வேறு பதில் இல்லை.
வாசிப்பது என்பது இன்னொரு எழுத்தாளருக்குச் செய்யும் உதவி அல்ல. முதலில் அதை புரிந்துகொள்ள வேண்டும். சிலர், “பாவம், அவன் புத்தகம் வாங்கிப் படித்தேன்” என்று நினைக்கிறார்கள். இரண்டு வரிகள் எழுதிவிட்டால், அவனுக்கு ஏதோ பெரிய விருது கொடுத்த மாதிரி நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு வாசிப்பும் ஒரு கற்றல். ஒவ்வொரு வாசிப்பிலும் என்னுடைய மொழி விரிவடைகிறது. படைப்பின் நுட்பங்கள் விரிவடைகின்றன. நான் செய்த தவறை இன்னொருவர் செய்திருப்பதைப் பார்க்கிறேன். ஒரு மோசமான கவிதையைப் படித்தால், “இதே மாதிரி ஒரு கவிதையை நாமும் எழுதியிருக்கிறோமே” என்று தோன்றும். ஒரு மிகச் சிறந்த கவிதையைப் படித்தால், “இப்படி எழுத முடியவில்லையே!” என்று தோன்றும். அதுதான் ஒரு ஆரோக்கியமான போட்டி. ஒரு சச்சரவு. அதுவே நம்மை வளர்க்கிறது.
எனக்கு இதுபோன்ற மோசமான அனுபவங்கள் நிறைய இருக்கின்றன. ஒருமுறை சென்னை பன்னாட்டு புத்தகக் கண்காட்சியில் ஒரு அமர்வில் அமைதியாக உட்கார்ந்து பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். எனக்கு அமைதியாக இருக்க முடியாத குணம். திடீரென்று ஒரு கேள்வியைக் கேட்டேன். “இலக்கியத்தில் உங்களுடைய ஆசிரியர் யார்?” என்று ஒரு கவிஞரிடம் கேட்டேன். பிறகுதான் அது சிலரிடம் கேட்கக் கூடாத கேள்வி என்று புரிந்தது. அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா?
“மூன்றாம் வகுப்பில் எனக்குத் தமிழ் கற்றுக்கொடுத்த ஆசிரியர்தான் என் இலக்கிய ஆசிரியர்.”
நான் அப்படியே அதிர்ச்சியடைந்தேன். எனக்கும் இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பில் அற்புதமாகத் தமிழ் கற்றுக்கொடுத்த ஆசிரியர்கள் இருந்தார்கள். ஆனால் நான் கேட்டது அது அல்ல. ஒரு கவிஞரிடம், அவருடைய இலக்கிய ஆசிரியர்கள் யார் என்பதைத்தான் கேட்டேன். ஆனால் அவரால் ஒரே ஒரு எழுத்தாளரின் பெயரைக்கூட சொல்ல முடியவில்லை. அது எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. உண்மையிலேயே அவர்கள் தங்களுடைய சமகால எழுத்தாளர்களைப் படிப்பதில்லையா? அல்லது அவர்களுக்குள் எப்போதும் ஒரு எரிச்சல் இருக்கிறதா? இவர்களையெல்லாம் போய் நாம் படிக்க வேண்டுமா என்ற மனநிலையா? என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், இந்த கற்றல் இல்லாமல் நாம் அனைவரும் ஒரு பந்தயத்தில் ஓடிக்கொண்டிருக்கிறோம்.
இலக்கியம் என்பது ஒரு பரஸ்பரக் கற்றல். இன்று புதிதாக எழுத வந்த ஒரு இளைஞன்கூட நான்கு வரிகளை அற்புதமாக எழுதியிருப்பான். அந்த நான்கு வரிகளுக்காகவே அவனை அணைத்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றும். இன்றைக்கு எழுதுவதற்கான வெளி மிகவும் பெரிதாகிவிட்டது. முன்பெல்லாம் பெரும்பாலும் மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கைச் சூழலையே எழுதினார்கள். இன்று அது மட்டுமல்ல. நாம் பார்க்கும் காணொளிகள், திரைப்படங்கள், சமூக வலைத்தளங்கள், செய்திகள்—எல்லாமே கவிதைக்கான பொருள்களாக மாறக்கூடியவை. குறிப்பாக, அபத்தமான சூழ்நிலைகள் (Absurdities) கவிதை உருவாகுவதில் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன. இன்று ஒட்டுமொத்த உலகமே ஒரு மிகப்பெரிய அபத்தமான சூழ்நிலையை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. தினமும் நம் கண்முன்னே பல நிகழ்வுகளைப் பார்க்கிறோம். முன்னர் இவ்வளவு நேரடியாகப் பார்க்கும் வாய்ப்பு கிடையாது. அபத்தங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துவிட்டது. அதனால் எழுதுவதற்கான உள்ளடக்கம் (Content) கடலைப் போல நமக்கு திறந்துவிட்டது. ஆனால், அந்தக் கடலிலிருந்து எடுத்துவருவதற்கான மொழி நமக்குத் தேவை. அந்த மொழியைச் சார்ந்த வலிமையான கருத்தியல் தேவை. அதற்கான நுட்பங்கள் தேவை. அந்த நுட்பங்கள்தான் நம்மை கவிதையை நோக்கி அழைத்துச் செல்கின்றன.
நுட்பம் என்று சொன்னவுடன் அது ஒரு அரிய வித்தை எனத் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம். ஒவ்வொரு கலைக்கும் சில வலிமையான விதிமுறைகள் இருக்கின்றன. அவை மாற்ற முடியாத சட்டங்கள் அல்ல; ஆனால் அறிந்திருக்க வேண்டிய வலிமையான கலை ஒழுங்குகள். பாரதியார், “மந்திரம் போல் வேண்டுமடா சொல்லின்பம்” என்று சொல்கிறார். அதன் பொருள், உணர்வுகளை இதயத்தின் அடியாழம் வரை கொண்டு சென்று தொடக்கூடிய சொற்களும், அவற்றைச் சுமக்கக்கூடிய கட்டமைப்புகளும் இருக்கின்றனவனா என்பதுதான். அதற்காக இலக்கியம் சார்ந்த பரந்த வாசிப்பு அவசியம்.
கவிதை எழுதுகிறவன் கவிதையை மட்டும் படித்தால் போதாது. தத்துவம் படிக்க வேண்டும், நாவல்கள் படிக்க வேண்டும், புனைகதைகள், சிறுகதைகள் படிக்க வேண்டும். ஊடகங்களில் வரும் செய்திகள், அரசியல், வரலாறு—இவை அனைத்தும் கவிதைக்கான கருப்பொருள்கள். பல கவிஞர்களின் கவிதைகள் பலவீனமாக இருப்பதற்குக் காரணம் மொழி மட்டுமல்ல; கருப்பொருள் மட்டுமல்ல,அவர்கள் அறிந்திருக்கும் உலகமே மிகவும் சுருங்கியதாக இருக்கிறது. நான் மலையாளக் கவிஞர் சச்சிதானந்தன் கவிதைகளை பலமுறை வியந்து வாசித்திருக்கிறேன். அவருடைய கவிதைகளில் வரலாற்றிலிருந்து சில கூறுகள் வரும். தத்துவத்திலிருந்து சில சிந்தனைகள் வரும். ஆங்கில இலக்கியத்திலிருந்து ஒரு உருவகத்தை எடுத்துவருவார். இவை அனைத்தும் ஒன்றாகக் கலக்கும்போது, அந்தக் கவிதை வாசிக்கும் போதே பல நிறங்களைக் கொண்ட ஒன்றாக மாறிக்கொண்டே இருக்கும்.
ஒரே ஒரு நிறத்தில் ஒரு கவிதையை முடிப்பது, அல்லது ஒரே ஒரு மனநிலையில் ஒரு கவிதையை எழுதுவது, போதுமானதல்ல.”இந்தக் கவிதையால் ஒரு சமுதாயத்திற்கு நன்மை செய்துவிடலாம்” என்ற எண்ணத்தோடு கவிதை எழுதுவதாலும் மட்டும் எதுவும் நிகழாது. சமுதாயம் நமக்காகக் காத்திருக்கவில்லை. ஆனால், கவிதை மனிதனின் சிந்திக்கும் முறையில் மாற்றங்களை உருவாக்குகிறது. முதலில் வாழ்க்கையை வேறு விதமாக அணுகுவது கவிஞனிடமே நிகழ வேண்டும். அதன் பிறகுதான் அவனுடைய கவிதையின் வழியாக இன்னொருவனும் வாழ்க்கையை வேறு விதமாக அணுக முடியும். நம்முடைய தேடல்கள் மிகவும் குறைவாக இருக்கின்றன.
அதேபோல தொடர்ச்சி (Consistency) என்பதும் மிகவும் முக்கியம். பலர் இலக்கியம் படிக்கிறார்கள். கவிதை படிக்கிறார்கள். ஆனால் தொடர்ந்து படிப்பதும், வாசிப்புக்குள்ளேயே ஒரு தொடர்ச்சி அமைவதும் முக்கியம். பலருக்கு ஒரு எழுத்தாளர் பிடிக்கும்; ஒரு கவிஞர் பிடிக்கும். ஆனால் அந்த விருப்பங்களுக்குள் எந்தத் தொடர்ச்சியும் இருக்காது. எல்லாமே தனித்தனித் தீவுகள் போல இருக்கும். இன்னும் விசித்திரமாக, சம்பந்தமே இல்லாத மனிதர்களைத் தங்களுடைய ஆதர்சங்களாகச் சொல்வார்கள். ஒருபுறம் சமூக வலைத்தளங்களில் கவிதைகளை எழுதுபவரை ஆதர்சமாகச் சொல்வார்கள். அதே நேரத்தில் தமிழின் மிகப்பெரிய ஒரு கவிஞரையும் தங்களுடைய ஆதர்சமாகச் சொல்வார்கள். இரண்டுக்கும் எந்தத் தொடர்பும் இருக்காது. இந்த மனநிலையை நான் முன்பு பார்த்ததே இல்லை. சம்பந்தமில்லாத ஆதர்சங்கள், சம்பந்தமில்லாத ஆசிரியர்கள். ஒரு பெரிய குழப்பம். இதற்கெல்லாம் காரணம் என்ன? நம்முடைய வாசிப்பில் தேர்வு முறை இல்லை.
நாம் எழுத்தைக் கவனிப்பதில்லை. ஒரு படைப்பைப் படித்துவிட்டு “நல்லா இருக்கு”, “நல்லா இல்லை” என்று மட்டும் சொல்கிறோம். ஆனால் அது எப்படி நிகழ்கிறது என்பதை கவனிக்க வேண்டும். ஒரு கவிதையை எடுத்துக்கொண்டு, அது எப்படி ஆரம்பிக்கிறது, எப்படி வளர்கிறது, எப்படி முடிகிறது, எப்படி தன்னைத்தானே தகவமைத்துக் கொள்கிறது, என்பதைப் பற்றி உட்கார்ந்து பேசுவதற்கான வெளிகள் நமக்குக் குறைவாக இருக்கின்றன.
ஒரு திரைப்படத்தை ஒரு சாதாரண ரசிகன் பார்த்தால், பாட்டு நல்லா இருந்தது அல்லது, நடிப்பு நல்லா இருந்தது என்று சொல்லிவிட்டு போய்விடுவான். ஆனால் ஒரு திரைப்படத்தை உருவாக்க நினைப்பவன் அதை சட்டகம் சட்டகமாக பார்த்து ஆராய்வான். அதேபோல், ஒரு கவிதைக்குள்ளும் எண்ணற்ற அடுக்குகள் இருக்கின்றன. பல காட்சிகள் இருக்கின்றன. பல அடியோட்டங்கள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி தொடர்ந்து பேசிப் பேசித்தான் நாம் அறிந்து கொள்ள முடியும். தனியாக உட்கார்ந்து வாசிப்பதால் மட்டும் அந்த நுட்பங்கள் முழுமையாகப் புரியாது.
இப்படிப்பட்ட உரையாடல்களை நாம் தொடர்ந்து நிகழ்த்திக்கொண்டே இருந்தால், நம்முடைய குறைந்த வாசிப்பாலும் குறைந்த அனுபவத்தாலும் கவிதைகளுக்குள் உருவாகும் பலவீனங்களைக் கடந்து, மகத்தான கவிதைகளை எழுதக்கூடியவர்களாக நாம் மாறுவோம். அல்லது, மகத்தான கவிதைகளை உணர்ந்து வாசிக்கக்கூடியவர்களாக மாறுவோம்.
000
(திருவண்ணாமலையில் ஜூலை 18, 2026 அன்று தென்பெண்ணை இலக்கியச் சமவெளி ஒருங்கிணைத்த இலக்கியப் பயிற்சி முகாமில் ஆற்றிய உரையின் இறுதிப் பகுதி. எழுத்தாக்கம் : சா.விஜயகுமார்)

மனுஷ்ய புத்திரன்
நவீன தமிழ்க் கவிஞர்களில் முதன்மையானவராக அறியப்படுபவர் மனுஷ்ய புத்திரன். உயிர்மை இதழின் நிறுவனர். இலக்கியம், பதிப்பகம், இதழியல், அரசியல், திரைத்துறை எனப் பல தளங்களில் தொடர்ந்து இயங்குபவர்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.

Nice