
“ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த தத்துவவாதி ஓர்டேகா இ காஸெட்(Ortega Y Gasset) 1925இல் எழுதிய The Dehumanization of Art என்ற கட்டுரையின் சுருக்கப்பட்ட தமிழ் மொழிபெயர்ப்பு இது. நவீனக் கலை தன்னை நிறுவிக்கொள்ளத் துவங்கிய காலகட்டத்திலேயே அதன் தோற்றுவாயையும் பொதுப்பண்புகளையும் கண்டடையும் முயற்சியாக இக்கட்டுரையை பார்க்கமுடிகிறது. அதனாலேயே சிந்தனையில் அசல்தன்மையையும்(உலக யுத்தம், இருத்தலியம் என்ற சொற்களின்றியே ஓர்டேகாவால் நவீனக் கலையை அணுகமுடிகிறது)மீட்சிக்கான எதிர்பார்ப்பையும் அடையாளங் காணலாம். அதேபோல கட்டுரையில் சில சிக்கல்களையும் சுட்டிவிடமுடியும். ஓர்டேகா வெளிப்படையாகவே நவீனக் கலை தனிச்சிறப்புவாய்ந்த சிறுபான்மையினருக்கு மட்டுமானது என்று அறிவிக்கிறார். கலைஞன் வாசகன் இருவருமே மேதை(Genius) என்கிற அந்தஸ்த்தை அடைகிறார்கள். பின்நவீனத்துவம் முதன்மையாக தாக்கிய விஷயங்களில் ஒன்று மேதைக்கலைஞன் என்கிற பிம்பம். அத்துடன் சேர்ந்து ஓர்டேகா வலியுறுத்தும் மேதைக் கலைஞனின் தனித்துவமான பாணியும் கேள்விக்குள்ளாகிறது. அதைக்கடந்து பாணிக்கு அளிக்கப்படும் அதீத கவனம் ஒருவிதத்தில் நவீனக் கலையை வடிவவாதமாக மட்டுமே வரையறுப்பதாக தொனிக்கிறது.
எழுதப்பட்டு ஒரு நூற்றாண்டு கடந்தும் போதாமைகளை சுட்டிக்காட்ட முடிந்தும் இதை மொழிபெயர்ப்பதற்கான ஒரு சில நல்ல காரணங்களையாவது சொல்லிவிடமுடியும் என்றே நினைக்கிறன். அழகியல் உணர்வையும் நேரடி உணர்ச்சிகளையும் கறாராக வேறுபடுத்துவதை நவீனக் கலையின் பிரதான பண்புக்கூறாக ஓர்டேகா முன்வைக்கிறார். அதில் நேரடியான உணர்ச்சிக்கு பதிலாக அறிவும், வாழ்தலுக்கு பதிலாக பார்த்தலும், துய்ப்புக்கு பதிலாக விலக்கமும் முன்மொழியப்படுகின்றன. ஒரு கலைப்படைப்பை அணுகும்போது இருக்கவேண்டிய விலக்கம் பற்றி ஓர்டேகா சொல்லும் கருத்து, பின்னாட்களில் விமர்சனாப்பூர்வ விலக்கமாக(Critical distancing) உருப்பெற்று பார்த் வரை தொடர்கிறது.
இன்றைய சூழலில் இலக்கியத்தை அணுகுவதற்கு பரவலாக ஒரு குறிப்பிட்ட வழிமுறையே பின்பற்றப்படுகிறது. அது, கலைக்கு சற்று அதிகமான கற்பனாவாத அழுத்தத்தை அளிப்பதாகவும் சில நேரங்களில் நேரடியான உணர்ச்சிகளை இலக்காககொள்வதாகவும் கோட்பாட்டு வாசிப்பை மொத்தமாக நிராகரிப்பதாகவும் விமர்சனாப்பூர்வ விலக்கத்திற்கு பதிலாக படைப்பின் வாழ்வனுபவத்தில் தோய்தலை முன்வைப்பதாகவும் இருக்கிறது. இது ஒருவிதத்தில் ஓர்டேகா சொல்வதற்கு நேர் எதிரானது. இதன் பிரதிபலிப்பை ஒருவர் நேரடியாக எழுத்தாளரின் படைப்பூக்கத்தில் இனங்காணலாம். இன்று பெரும்பாலான படைப்புகள் ஒற்றைக்குரலில் பேசுவதை உணரலாம். கலையில் படைப்பூக்கமும் அசல்தன்மையும் வலுவாக முடிச்சிடப்பட்டிருக்கின்றன என்பது புதிய கண்டுபிடிப்பு அல்ல. ஆக, இது அசல்தன்மை தொடர்புடைய விஷயமும்கூட.
ஓர்டேகா நவீனக் கலையின் மற்றொரு முக்கியப் பண்பாக அசல்தன்மையை சொல்கிறார். அது சமரசமற்ற அசல்தன்மை. அதுவே உண்மையான கலைத்தேடலாகவும் ஆகிறது. ஓர்டேகாவுடைய அசல்தன்மைக்கான காத்திரமான வலியுறுத்தலை இன்று ஒருவர் சுயபரிசீலனைக்கான அழைப்பாக எடுத்துக்கொள்ளலாம்”
சியாம்
பிரெஞ்சு தத்துவவாதி குயாவ் (J M Guyau) உடைய பல சிறந்த சிந்தனைகளுள் ஒன்று, கலை வடிவத்தை சமூக கண்ணோட்டத்துடன் அணுகுவது. இது பலனளிக்காத செயல் போல தெரியலாம். கலை ஏற்படுத்தும் சமூக விளைவுகளை கொண்டு கலையை அணுகுவது ஒரு மனிதனை அவனது நிழலைக் கொண்டு ஆராய்வதாக தோன்றலாம். சில ஆண்டுகளுக்கு முன்னர் புதிய காலகட்டத்தின் இசையைப் பற்றி சுருக்கமான ஆய்வை எழுதிக்கொண்டிருந்தேன். அப்போதுதான் எதிர்பாராதவிதமாக கலையை சமூகவியல் நோக்கில் அணுகுவதன் பலன்களை கண்டடைந்தேன். புதிய இசையும் மரபான இசையும் தத்தம் பாணியில் எப்படி வேறுபடுகின்றன என்பதை வரையறுப்பதே எனது நோக்கமாக இருந்தது. நான் பேச நினைத்த பிரச்சினை அழகியல் சார்ந்ததுதான். ஆனால் ஒரு சமூக உண்மையிலிருந்து தொடுங்குவதே அதை கையாள்வதற்கான எளிய வழியாக இருந்தது. அந்த உண்மை, புதிய இசைக்கு சமூகத்திடம் உள்ள விருப்பமின்மை(unpopular) பற்றியது.
நான் இப்போது இசை, ஓவியம், கவிதை, நாடகம் என்று மேற்கில் உள்ள எல்லா கலைவடிவங்களையும் கருத்தில்கொண்டு பொதுவாக பேசவிருக்கிறேன். ஒவ்வொரு காலகட்டமும் அதன் பல்வேறு வெளிப்பாடுகளுக்கு மத்தியில் ஒரு நெருக்கமான ஒற்றுமையை கொண்டிருப்பதைக் காண ஆச்சரியமாக இருக்கிறது. பல கலை வடிவங்களுக்கு தூண்டுதல் ஒன்றாக இருப்பதை அடையாளம் காணமுடிகிறது. கவிஞர்கள், ஓவியர்கள், நாடக ஆசிரியர்கள் அவர்களது கலை ஊடகத்தில் உணர முயலும் அதே அழகியல் மதிப்பீடுகளைத்தான் இசையில் உணர்வதற்கு ஓர் இளம் இசைக் கலைஞன் தன்னை அறியாமலேயே முயற்சிக்கிறான். அவனது இந்த கலைரீதியான நோக்கம் அதற்கு ஒப்பான சமூக விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. எல்லா நவீனக் கலைகளும் விருப்பமின்மையை எதிர்கொள்கின்றன. இது தற்செயலானது அல்ல. மாறாக அடிப்படையிலேயே அது அப்படித்தான் இருக்க முடியும். அது நவீனக் கலையின் தலைவிதியும் கூட.
ஒவ்வொரு புதிய கலை இயக்கமும் ஒரு தனிமைப்படுத்துதல்(quarantine) கட்டத்தைக் கடந்தே வருகிறது. இருப்பினும் இன்றைய கலை எதிர்கொள்ளும் விருப்பமின்மை வித்தியாசமானது. இந்த இடத்தில் பிரபலமின்மையையும்(not popular) விருப்பமின்மையையும்(unpopular) வேறுபடுத்திப் பார்ப்பது அவசியம். ஒரு புதிய கலை இயக்கம் பிரபலமாவதற்கு சிறிதுகாலம் எடுக்கிறது. அந்த கால இடைவெளியில் அது பிரபலமாக இருப்பதில்லை, அதே நேரத்தில் அது வெறுக்கப்படுவதுமில்லை. கற்பனாவாதத்தின் உள்நுழைவு என்பது ஒரு சமூக நிகழ்வு. அது இன்றைய சூழ்நிலைக்கு நேர் எதிரான ஒரு சமூக நிகழ்வு. பழைய செவ்வியல் கலையால் கவரமுடியாத மக்களை கற்பனாவாதம் மிக விரைவில் வென்றது. மீட்டெடுக்க முடியாதவாறு செவ்வியல் கலையுடன் பந்தப்பட்டிருந்த சிறுபான்மையுடன் மட்டும்தான் கற்பனாவாதம் மோத வேண்டியிருந்தது. அச்சுத் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டப் பிறகு முதலில் பெரிய பதிப்புகளை பெற்றவை கற்பனாவாதிகளுடைய படைப்புகள்தான். அதுவே ஜனநாயகத்தின் முதல் மகவு; மக்கள் திரளால் பாசத்துடன் பாதுகாக்கப்பட்ட ஒன்று.
நவீனக் கலை எப்போதும் திரளை தனக்கு எதிராக வைத்திருக்கக் கூடியது. நவீனக் கலை அடிப்படையிலேயே பொது விருப்பத்திற்கு எதிரானது. மேலும் அது பிரபலத்திற்கு எதிரானதும்கூட. ஒரு நவீனக் கலைப் படைப்பு தன்னிச்சையாகவே பொதுமக்களிடம் ஒரு விளைவை ஏற்படுத்துகிறது. அது மக்களை இரண்டாக பிரிக்கிறது; நவீனக் கலையில் ஆர்வமுள்ள ஒரு சிறுபான்மை, அதற்கு எதிரான ஒரு பெரும்பான்மை. ஆக ஒரு கலைப் படைப்பு ஒரு திரளை இரண்டு குழுக்களாக பிரிக்கும் சமூகக் காரணியாக வேலை செய்கிறது.
எது இந்த இரண்டு எதிர் குழுக்களை உருவாக்குகிறது? ஒவ்வொரு கலைப் படைப்பும் அபிப்ராய பேதத்தை உண்டாக்குகிறது. சிலருக்கு அது அதிகம் பிடித்திருக்கிறது, சிலருக்கு சிறிதளவு பிடித்திருக்கிறது. இந்த இரண்டில் ஒருவர் எந்தப் பக்கம் இருக்கிறார் என்பது அவரது இயற்பண்பை(disposition) பொருத்ததுதானே தவிர இந்த நிலைப்பாட்டிற்கு அடிப்படைக் கொள்கைகள் என்று ஏதுமில்லை. ஆனால் நவீனக் கலையை பொருத்தவரை அது உண்டாக்கும் இந்தப் பிரிவினை ஒருவருடைய தனிப்பட்ட ரசனையின் தளத்தில் நிகழ்வதில்லை. அதை விட ஆழமான தளத்தில் நிகழ்கிறது. நவீனக் கலையை பொருத்தவரை பெரும்பான்மை அதை விரும்புவதில்லை, சிறுபான்மை விரும்புகிறது என்று சொல்லமுடியாது. மாறாக பெரும்பான்மை அதை புரிந்துக்கொள்வதில்லை என்றே சொல்லவேண்டும்.
சமூக கண்ணோட்டத்தில் பார்த்தோமானால், பொதுமக்களை இரண்டாக-புரிந்துகொள்பவர், புரிந்துகொள்ளாதவர்- பிரிப்பது புதியக் கலையின் ஒரு பண்புக்கூறு என்று சொல்லலாம். ஆக, புரிதலுக்கான உறுப்பு ஒரு குழுவிடம் இருக்கிறது, மற்றொன்றிடம் அது இல்லை. அவர்கள் மனித இனத்தின் இரு வேறு வகைகள். கற்பனாவாதம் செய்ததை போல புதியக் கலை எல்லோரிடமும் பேசுவதில்லை. அது ஒரு தனித்திறன் கொண்ட சிறுபான்மையிடம் மட்டுமே பேசுகிறது. அதனாலேயே அது திரளிடம் சீற்றத்தை ஏற்படுத்துகிறது. ஒருவர் ஒரு கலைப்படைப்பை வெறுக்கிறார், ஆனால் அதை புரிந்துகொள்கிறார் எனும்போது அவர் அந்த கலைப்படைப்பைவிட தன்னை மேலான ஒருவராக கருதுகிறார். அங்கு அவர் சீற்றமடைவதற்கு அவசியமில்லை. ஆனால் அதுவே ஒரு கலைப்படைப்பு புரியாததால் அதை வெறுக்கும்போது அவர் அதை அவமதிப்பாக உணர்கிறார்.
இந்த தாழ்வுணர்ச்சியை சுய உறுதிப்பாட்டால்(self assertion) சமன் செய்வது அவசியமாகிறது. புதியக் கலை தனது இருப்பாலேயே ஒரு சராசரி நபரை அவர் ஒரு சராசரி நபர் என்று உணரும்படி கட்டாயப்படுத்துகிறது; கலையின் அழகை காணவும் கேட்கவும் முடியாத சராசரி நபராக. ஆனால் ஒரு நூற்றாண்டாக மக்கள் திரள் போற்றப்பட்டும் புனிதப்படுத்தப்பட்டும் இருக்கின்ற நிலையில் புதிய கலையால் அவ்வாறு ஏதும் செய்யமுடியாது. நுண்ணுணர்வு கொண்ட மேற்குடியின்(aristocracy) கலையாகிய நவீனக் கலை தங்களது உரிமைகளை ஆபத்துக்குள்ளாக்குவதாக மக்கள் திரள் உணர்கிறது. புதியக் கலைத் தூண்டுதல்கள்(Muses) முன்வைக்கப்படும்தோறும் மக்கள் திரள் மயிர் சிலிர்க்க கோபம் கொள்கிறது.
ஒன்றரை நூற்றாண்டாக, திரள் தன்னை மட்டுமே முழு சமூகம் என்று சொல்லிக்கொண்டது. ஸ்ட்ராவின்ஸ்கி(Stravinsky) உடைய இசையோ பிராண்டெல்லோ(Pirandello) உடைய நாடகமோ மக்களை அவர்கள் என்னவோ அதுவாகவே அவர்களை அடையாளப்படுத்திக்கொள்ள கட்டாயப்படுத்தியது. இதற்கு மாறாக புதியக் கலை ஒரு தனிச்சிறப்பு வாய்ந்தவர்(elite) தன்னை அடையாளம் கொண்டுகொள்ள உதவுகிறது. மேலும் திரளிலிருந்து தன்னை போன்ற சிலரை அடையாளங்காணவும் உதவுகிறது. சிறு குழுவாக இருப்பதும் திரளுக்கு எதிராக தங்களை இருத்திக்கொள்வதும்தான் தங்களது பணி என்பதை அவர்கள் புரிந்துகொள்ளச் செய்கிறது.
அரசியல் முதல் கலை வரை சமூகம் இரண்டு படிநிலைகளாக மறுசீரமைக்கப்படும் காலம் வரவேண்டும்; ஒன்று தனிச்சிறப்பு பெற்றவர்கள்(illustrious) மற்றொன்று பண்படாதவர்கள்(vulgar). ஒழுக்கமும் சமூக கட்டமைப்பும் இல்லாத ஒழுங்கற்ற வடிவமற்ற வேறுபாடற்ற நிலையில்தான் ஐரோப்பா கடந்த 150 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறது. இனிமேலும் அது இவ்வாறே தொடர முடியாது. எல்லா மனிதர்களும் சமம் என்ற ஆதாரமற்ற நம்பிக்கைதான் தற்கால வாழ்க்கைக்கு பின்னால் பதுங்கி இருக்கிறது. ஆனால் மனிதன் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் மோதலிலேயே முடிகிறது. அது அந்த நம்பிக்கையை பொய் என காட்டுகிறது.
நான் மேற்சொன்ன கருத்தை அரசியல் தளத்தில் பேசினால், அது விளைவிக்கும் உணர்ச்சிவேகத்தின் காரணமாக அது புரிந்துகொள்ளப்படாமலே போயிருக்கும். நான் கட்டுரையில் முன்பு சொன்னதுபோல ஒவ்வொரு காலகட்டத்திலும் உள்ள வெளிப்பாடுகளுக்கு இடையில் இருக்கும் ஒற்றுமையின் காரணமாக நவீனக் கலையில் இந்த கருத்தை அமைதியுடனும் தெளிவுடனும் சொல்ல முடிகிறது.
“வாரினாலும் கடிவாளத்தினாலும் வாய் கட்டப்பட்டாலொழிய, உன் கிட்டச் சேராத புத்தியில்லாக் குதிரையைப்போலவும் கோவேறு கழுதையைப்போலவும் இருக்கவேண்டாம்.” என்று விவிலியம் நமக்கு அறிவுறுத்துகிறது. மக்கள் திரள் உதைக்கிறது, எதையும் புரிந்துக்கொள்வதில்லை. நாம் அதை விட மேலானதை செய்ய முயல்வோம். நவீனக் கலையிலிருந்து அதன் அடிப்படை கொள்கைகளை எடுத்துக்கொள்ள முயல்வோம். அது, நவீனக் கலை விரும்பப்படாதது ஏன் என்பதை நாம் ஆழமான அர்த்தத்தில் புரிந்துகொள்ளும்படி செய்யும்.
புதியக் கலை எல்லா மனிதனுக்கும் புரிவதில்லை என்பது, அதன் உந்துதல்கள்(impulses) பொதுமனிதத்தன்மை கொண்டவை அல்ல என்பதையே குறிக்கிறது. அது குறிப்பிட்ட மனிதர்களுக்கானது. அவர்கள் மேலானவர்களாக இருக்கவேண்டும் என்றில்லை, ஆனால் அவர்கள் நிச்சயமாக வித்தியாசமானவர்கள்தான்.
நாம் தொடர்ந்து செல்வதற்கு முன்னால் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்திக்கொள்ளவேண்டும். பெரும்பாலான மக்கள் சொல்லும் அந்த அழகியல் இன்பம் என்பது என்ன? அவர்கள் ஒரு கலைப்படைப்பை-உதாரணமாக ஒரு நாடகத்தை-பார்க்கும்போது அவர்களது மனத்தில் என்ன நடக்கிறது? பதில் எளிமையானதுதான். ஒரு நாடகத்தில் உள்ள மனித வாழ்க்கை ஒருவரை ஈர்க்கும்போதே அவர் அந்நாடகத்தை விரும்புகிறார். அதில் உள்ள அன்பும் வெறுப்பும் சந்தோஷமும் துக்கமும் அவரை உணர்ச்சியில் ஆழ்த்தி, நாடகத்தை நிஜ வாழ்வு என்று கருதி அதில் பங்குகொள்ளும்போதே அவர் அதை விரும்புகிறார். அதில் உள்ள கற்பனை உருவங்களை வாழும் மனிதர்கள் என்ற மாயத்தை நாடகம் உருவாக்கும்போதே அவர் அதை நல்ல கலைப் படைப்பு என்கிறார். அவர் கவிஞனுக்கு பின்னால் உள்ள மனிதனின் உணர்வெழுச்சியையும் வலியையுமே கவிதையில் தேடுகிறார். இவர்களை சந்தித்தால் சுவாரஸ்யமாக இருக்கும் என்கிற மனிதர்கள் உள்ள ஓவியங்களே அவரை ஈர்க்கும். சௌந்தர்யமான அல்லது சுற்றுலா செல்லும் அளவுக்கு பிரம்மாண்டமான நிலம் ஒரு ஓவியத்தில் இடம்பெறும்போதே அவர் அதை ‘அழகானது’ என்பார்.
ஆக, பெரும்பாலான மக்களுக்கு அழகியல் இன்பம் என்பது, அவர்களது சராசரி நடத்தையிலிருந்து வேறுபாடற்ற மனநிலையாகத்தான் இருக்கிறது. அன்றாட வாழ்வில் அவர்களது கவனமும் உள்ளமும் எதை நோக்கிச் செல்கின்றனவோ அதை நோக்கியே கலையிலும் செல்கின்றன; மனிதர்களும் உணர்வுகளும்தான் அவர்களின் நோக்கம். கலை என்பது சுவாரஸ்யமான மனித விவகாரங்களை சந்திப்பதற்கான ஒரு வழி என்றே அவர்கள் புரிந்துக்கொள்கிறார்கள். மனித வடிவங்களையும் வாழ்வையும் பற்றிய அவர்களது நோக்குடன் அதிகம் தலையிடாதபோதே கலை வடிவங்கள் அவர்களால் சகித்துக்கொள்ளப்படுகிறது. அழகியல் கூறுகள் வலுப்பெற்று பேசுபொருள் அவர்களிடமிருந்து நழுவுகையில் அதை எப்படி புரிந்துக்கொள்வது என்று தெரியாமல் ஆகிறார்கள். அவர்களது மனநிலை ஒன்றே ஒன்றுதான், ஒருவரின் உணர்ச்சிகள் மேலெழுப்பப்பட்டு அவர் உணர்வுப்பூர்வமாக அதில் ஈடுபடவேண்டும். உணர்வுப்பூர்வமான பங்கெடுப்புக்கு அழைப்புவிடுக்காத கலைப் படைப்பு அவர்களை எந்த வழிகாட்டுதலுமின்றி விட்டுவிடுகிறது.
ஒரு கலைப் படைப்பில் உள்ள மனித வாழ்வை கண்டு துயரப்படுவதும் ஆனந்தப்படுவதும் உண்மையான கலை இன்பத்திலிருந்து வேறுபட்டவை. அது மட்டுமின்றி, படைப்பில் உள்ள மனிதப் பேசுபொருள் மீதான அதீத ஈடுபாடும் அழகியல் இன்பமும் ஒன்றுக்கொன்று அடிப்படையிலேயே ஒத்திசைவு அற்றவை.
இதை ஒரு எளிமையான கட்புலன்(optical) பிரச்சினையுடன் ஒப்பிடலாம். ஒரு பொருளை காண நாம் நமது காட்சி உபகரணத்தை ஒரு குறிப்பிட்ட விதத்தில் மாற்றவேண்டும். அந்த மாற்றம் சரியாக இல்லையெனில் அந்தப்பொருள் சரியாக தெரியாது. ஒரு ஜன்னல் வழியாக தோட்டத்தை பார்ப்பதை எடுத்துக்கொள்ளலாம். நாம் தோட்டத்தை காணும்போது, நமது பார்வை அதை நோக்கியதாக இருக்கிறது. ஜன்னல் கண்ணாடி தெரிவதில்லை. அந்தக் கண்ணாடி எவ்வளவு தெளிவாக இருக்கிறதோ அவ்வளவுக் குறைவாக நாம் அந்தக் கண்ணாடியைக் காண்போம். நமது பார்வையை ஜன்னலை நோக்கித் திருப்பினால், அத்தோட்டம் கண்ணாடியில் ஒட்டியிருக்கும் குழம்பிய வண்ணக் குவியலாக தெரியும். ஆக, தோட்டத்தை பார்ப்பதும் ஜன்னலைப் பார்ப்பதும் இரண்டு ஒத்திசைவற்ற செயல்கள்.
அதுபோலவே ஒருவர் ட்ரிஸ்டன் மற்றும் இசோல்டே(Tristan and Isolde) உடைய வாழ்க்கையை மட்டுமே தேடும்போது ஒரு கலைப் படைப்பு மறைந்துவிடுகிறது. ட்ரிஸ்டன் உடைய துயரம் உண்மையானதாக எடுத்துக்கொள்ளப்படும்போதே அது துயரமாகிறது, நம்மில் இரக்கத்தை தூண்டுகிறது. ஆனால் ஒரு கலைப் பொருள் உண்மையல்லாததாக இருக்கும்வரையில்தான் அது கலைத்தன்மை(artistic) உடையதாக இருக்கிறது. டிஸியன்(Titian) வரைந்த ஐந்தாம் சார்லஸ் உடைய உருவப்படத்தை நாம் ரசிப்பதற்கு அவர் சார்லஸ் என்பதை மறந்துவிட்டு அதை ஒரு புனைவாகவும் படிமமாகவும் பார்க்கவேண்டும். ஓவியத்தில் உள்ள நபரும் அந்த ஓவியமும் இரண்டு வெவ்வேறான விஷயங்கள். நபரை காணும்போது நாம் சார்லஸ் உடன் வாழ்கிறோம். அதுவே ஓவியத்தை காணும்போது கலைப் பொருளை காண்கிறோம்.

ஆனால் பலரால் அவர்களது பார்வையை ஜன்னலை-அதாவது கலைப் படைப்பை-நோக்கித் திருப்ப முடிவதில்லை. அவர்கள் ஜன்னலை கடந்துசென்று மனித யதார்த்தத்தை காண்கிறார்கள். அவர்களிடம் அதை தவிர்த்துவிட்டு கலைப் படைப்பை நோக்கி கவனத்தை திருப்பச் சொன்னால், ‘அப்படி எதையும் என்னால் பார்க்கமுடியவில்லை’ என்பார்கள். அவர்களால் அதை கண்டிப்பாக பார்க்கமுடியாது. ஏனெனில் அது ஒளிபுகுத்தன்மை(transparent) உடையது, எந்த உட்பொருளும்(Substance) இல்லாதது.
பத்தொன்பதாம் நூற்றாண்டு கலைஞர்கள் கலை படைப்பில் அழகியல் கூறுகளை குறைத்து, படைப்பை மனித யதார்த்தங்களின் புனைவை சார்ந்ததாக மாற்றினார்கள். இந்த அர்த்தத்தில் சென்ற நூற்றாண்டின் எல்லா சாதாரண படைப்புகளையும் யதார்த்தவாத படைப்புகள் என்றே சொல்லவேண்டும். பீத்தோவனும் வாக்னரும் யதார்த்தவாதிகள், அதே போலத்தான் சாட்டூப்ரியாண்ட்டும்(Chateaubriand) ஸோலாவும். இன்றைய காலக்கட்டத்திலிருந்து பார்த்தால் கற்பனாவாதமும் இயல்புவாதமும் அருகருகில் உள்ளதை பார்க்கலாம். அவை அவற்றின் பொதுவான யதார்த்தவாத வேரை வெளிப்படுத்துகின்றன.
இந்த வகையான படைப்புகள் முழுமையான கலைப் படைப்புகளோ கலைப் பொருட்களோ அல்ல. அவற்றை ரசிப்பது என்பது படைப்பின் ஒளிபுகுத்தன்மையிலும் படிமங்களிலும் கவனம் செலுத்தும் ஆற்றலை சார்ந்ததாக இருப்பதில்லை. (இந்த ஆற்றல் கலை நுண்ணுணர்வின் ஒரு பண்புக்கூறு.) மாறாக, மனித நுண்ணுணர்வையும் அடுத்திருப்பவர்களின் சந்தோசத்தோடும் துக்கத்தோடும் அனுதாபம் கொள்வதையுமே இந்தப் படைப்புகள் கோருகின்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் கலை பிரபலமாக இருந்ததில் வியப்பேதுமில்லை. அது திரளுக்காக செய்யப்பட்டது. அது கலை அல்ல. வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு அம்சம் மட்டுமே. நாம் ஒன்றை நினைவில்கொள்ள வேண்டும், எல்லா காலக்கட்டங்களிலும் சிறுபான்மைக்கான கலை பெரும்பான்மைக்கான கலை என்று இரு வகையான கலைகள் இருந்திருக்கின்றன. அதில் பெரும்பான்மைக்கான கலை எப்போதும் யதார்த்தவாதமாகவே இருந்திருக்கிறது.
தூயக் கலை(Pure art) என்ற ஒன்று சாத்தியமா என்கிற விவாதத்திற்குள் நான் செல்லப்போவதில்லை. அப்படி ஒரு கலை சாத்தியமல்ல. ஆனால் அதற்கான நீண்ட காரணங்களை விளக்குவது பேசுபொருளிலிருந்து விலகிச் செல்வதாக இருக்கும். நமது பேசுபொருளுக்கு அந்த காரணங்கள் முக்கியமானவையும் அல்ல. தூயக் கலை சாத்தியமல்ல என்றாலும்கூட கலையை தூய்மையாக்கும் மனப்பாங்கிற்கான சாத்தியம் இருக்கிறது. அது போன்ற மனப்பாங்கு கற்பனாவாதத்திலும் இயல்புவாதத்திலும் உள்ள அதீதமான மனிதக் கூறுகளை வெளியேற்ற உதவும். ஒரு கட்டத்தில் இந்த மனித உள்ளடக்கம் மெலிவுற்று, மீச்சிறு அளவாக மாறிவிடலாம். அப்போதிருக்கும் கலை, நுண்ணுணர்வு வாய்க்கப்பட்டவர்களால் மட்டுமே புரிந்துக்கொள்ளக்கூடிய ஒன்றாக இருக்கும். திரளுக்கானதாக இல்லாமல் கலைஞர்களுக்கானதாக இருக்கும்.
இதனாலேயே நவீனக் கலை பொதுமக்களை-அதை புரிந்துக்கொண்டவர், புரிந்துக்கொள்ளாதவர் என்று-இரண்டாக பிரிக்கிறது; அதாவது கலைஞர்கள், கலைஞர் அல்லாதவர்கள். புதியக் கலை என்பது ஒரு கலைத்தன்மையுடைய(artistic) கலை.
நான் புதியக் கலையை புகழ்ந்துரைக்கும்படியும் பழையதை கண்டனம் செய்யும்படியும் சொல்லவில்லை. ஒரு விலங்கியல் நிபுணர் இரண்டு மாறுபட்ட உயிரனங்களை விவரிப்பதுபோலவே விவரிப்பதுதான் எனது நோக்கம். புதியக் கலை என்பது உலகம் முழுக்க பரவிய ஒரு உண்மை. இன்று இருக்கும் இளம் தலைமுறையினர், மரபான கலையால் எந்த பயனும் இல்லை என்கிற உண்மையை எதிர்கொண்டு தங்களை தாங்களே கண்டடைந்து உள்ளனர். மேலாக அவர்கள் அதை மிகவும் வெறுக்கிறார்கள். இந்த இளைஞர்களை இரண்டு விதத்தில்தான் எதிர்கொள்ள முடியும். ஒன்று அவர்களை துப்பாக்கியினால் சுடுவது இன்னொன்று அவர்களை புரிந்துகொள்ள முயற்சி செய்வது. இரண்டாவது வழியை தேர்ந்து எடுப்பவருக்கு கலையை பற்றிய தெளிவான ஒத்திசைவான அறிவார்த்தமான புரிதல் வாய்க்கப்பெறுகிறது. புதியக் கலையை எதிர்ப்பதும் பழைய வடிவங்களுடன் தன்னை தானே மூடிக்கொள்வதும் தர்க்கரீதியான காரணங்களற்ற ஒரு செயல். அது எந்தப் பலனையும் அளிக்காதது. கலையை பொருத்தவரை, நாம் என்ன செய்யவேண்டும் என்பது நமது தனிப்பட்ட முடிவுகளை சார்ந்து இருப்பதில்லை. காலத்தின் கட்டாயத்தை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். காலத்திற்கு கீழ்ப்படிதலே ஒரு தனிமனிதனுக்கு முன்னுள்ள தேர்வுகளிலேயே அதிக நம்பிக்கைவாய்ந்தது. அப்படியும்கூட அவனால் எதையும் சாதிக்க முடியாமல் போகலாம். ஆனால் ஒரு வாக்னர்பாணி இசைநாடகத்தையோ இயல்புவாத நாவலையோ உருவாக்க முனைந்தால் அவன் தோல்வியடைவதற்கான சாத்தியமே அதிகம்.
ஒவ்வொரு பாணியும் ஒரு பொதுவான வகைப்பாட்டிற்குள் வித்தியாசமான வடிவங்களை உண்டாக்கும். ஆனால் ஏதோ ஒரு கட்டத்தில் அப்பெரும் சுரங்கம் தீர்ந்துவிடும். அது போன்ற ஒரு நிலையைத்தான் கற்பனாவாத-இயல்புவாத நாவலும் நாடகமும் அடைந்தன. இந்த இரண்டு வகைமைகளின் மலட்டுத்தன்மைக்கான காரணம் இன்றிருப்பவர்களின் திறமைக்குறைபாடுதான் என்று நினைப்பது அப்பாவித்தனமானது. உண்மையில், இந்த இலக்கிய வடிவங்களின் சாத்தியக்கூறுகள் தீர்ந்துவிட்டன. இதுவரை தொடப்படாத விஷயங்களை கண்டுணரும் ஆற்றல் கொண்ட புதியக் கலை நுண்ணுணர்வின் உள்நுழைவு இந்நேரத்தில் நிகழ்வது அதிர்ஷ்டவசமான ஒன்றாகவே கருதப்பட வேண்டும்.
இந்தப் புதிய பாணியை ஆராயும்போது அது நெருங்கிய தொடர்புகொண்ட மனப்பாங்குகளை கொண்டிருப்பதை நாம் காணலாம். அது 1) கலையை அ-மனிதப்படுத்த(dehumanise) எத்தனிக்கிறது 2) வாழ் வடிவங்களை(living forms) தவிர்க்கிறது 3) ஒரு கலைப் படைப்பை கலைப் படைப்பாக மட்டுமே பார்க்கிறது 4) கலையை விளையாட்டாக மட்டுமாக பார்க்கிறது 5) அடிப்படையிலேயே முரண்நகை கொண்டதாக இருக்கிறது 6) போலியை பற்றிய எச்சரிக்கையுடன் நேர்மையான உணர்தலை நாடுகிறது 7) கலையை எல்லை கடந்த விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக கருத மறுக்கிறது.

நவீனக் கலை வியக்கத்தக்க வேகத்தில் பல்வேறு திசைகளில் பிரிந்து சென்றுள்ளது. அவற்றுக்கு இடையேயான வித்தியாசங்களை அடிக்கோடிடுவதுப் போல எளிதான விஷயம் வேறொன்றுமில்லை. ஆனால் ஒரு பொது அம்சம் நவீனக் கலை முழுக்கவே வேறுபட்ட வழியிலும் முரண்படுகின்ற வழியிலும் தன்னை உறுதியுடன் முன்வைக்கிறது. அந்த அம்சத்தைப் பற்றிப் பேசாமல் நவீனக் கலையின் வேறுபாடுகளையும் தனித்தக் கூறுகளையும் வலியுறுத்துவதில் அர்த்தம் ஏதும் இல்லை. அரிஸ்டாட்டில் ஏற்கனவே அவதானித்து இருக்கிறார் அல்லவா, பொருட்கள் எதை பொதுவாக கொண்டிருக்கின்றவோ அதில்தான் வேறுபடுகின்றன என்று. எல்லா உடல்களிலும் வண்ணம் இருப்பதால்தான் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வண்ணத்தில் இருப்பதை நாம் கவனிக்கிறோம். இனம்(Species) என்பது பேரினத்தின்(Genus) வேறுபாடுகளின்றி வேறொன்றுமில்லை. அவை ஒரு பொதுவான மூதாதையிலிருந்து வெவ்வேறு வழிகளில் பிரிந்து வருகின்றன என்பதை உணராமல் நம்மால் அவற்றை புரிந்துகொள்ளமுடியாது.
ஒரு புதியக் கலை நுண்ணுணர்வின் கேள்விக்கிடமற்ற இருப்பே நாம் பேசவேண்டிய முக்கியமான விஷயம்.(இந்த நுண்ணுணர்வு என்பது கலைஞர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட ஒன்றல்ல. அது வாசகர்களுக்குமானதுதான். நான் முன்பு புதியக் கலை என்பது கலைஞர்களுக்கானது என்று சொன்னபோது கலைஞர்களை மட்டுமே சொல்லவில்லை. கலைத்தன்மையுள்ள மதிப்பீடுகளை உள்வாங்கிக்கொள்ளும் திராணி உள்ளவர்களையும் சேர்த்தே சொன்னேன்.) படைப்புகளின் பன்மைத்துவத்திற்கு மத்தியில் ஒரு பொதுவான உண்மையையும் தோற்றுவாயையும் புதியக் கலை நுண்ணுணர்வு பிரதிநிதித்துவம் செய்கிறது. அந்தப் பொதுத் தன்மையிலிருந்தே பன்மைத்துவம் ஊற்று எடுக்கிறது. இந்த நுண்ணுணர்வை வரையறுப்பது பலனளிக்கக்கூடியது. நவீனக் கலை உருவாக்கத்தின் தனித்துவமான பண்பு என்பது கலையை அ-மனிதப்படுத்தும் மனப்பாங்குதான்.
புதியக் கலை ஓவியத்தையும் 1860 இல் உள்ள ஒரு ஓவியத்தையும் ஒப்பிட்டு பார்க்கலாம். 1860 இல் உள்ள ஓர் ஓவியன் பொருட்களுக்கு அவற்றின் உண்மைத் தோற்றத்தை அளிக்கவே விரும்பியிருக்கிறான். இதைக் கடந்து அவன் சில சிக்கலான அழகியல் இலக்குககால் உயிரூட்டப்பட்டிருக்கலாம். ஆனால், அவனது முதல் கவலை என்பது தோற்ற ஒற்றுமையை பேணுவதாகவே இருந்திருக்கிறது. அவன் வரையும் மனிதனையும் வீட்டையும் மலையையும் நாம் உடனடியாக அடையாளம் காண்கிறோம். ஆனால் ஒரு நவீன ஓவியத்தில் நாம் ஒட்டுமொத்தமாக தொலைந்துவிடுகிறோம். மரபான ஓவியத்தில் நடப்பதற்கு நேர் எதிராக நவீன ஓவியத்தில் நடக்கிறது. ஒரு நவீன ஓவியன் இயற்கையை சித்தரிக்க முயன்று அதில் சொதப்புகிறான் என்றில்லை. அவன் யதார்த்தத்திலிருந்து விலகுவது யதார்த்தத்திற்கு எதிராக செல்வதற்கான ஒரு செயல்.
அவன் யதார்த்தத்தை சிதைக்கவும் அதில் உள்ள மனித அம்சத்தை சிதறடிக்கவும் அதை அ-மனிதப்படுத்தவும் முனைகிறான். மரபான ஓவியங்களில் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் விஷயங்களுடன் நாம் கற்பனையான உறவை ஏற்படுத்திக்கொள்ளலாம். பல ஆங்கிலேயே இளைஞர்கள் ஜியோகோண்டோவுடன்(Giocondo) காதலில் விழுந்து இருக்கிறார்கள். நவீன ஓவியத்தின் பொருட்களுடன் அது போன்ற உறவு சாத்தியமல்ல. அப்பொருட்களில் வாழ்வனுபவ யதார்த்தத்தை அகற்றுவதன் மூலம் யதார்த்தத்திற்கு நம்மை மீட்டுச் செல்லும் படகுகளையும் பாலத்தையும் ஓர் ஓவியன் எரித்துவிடுகிறான். அவன் எளிதில் புரிந்துக்கொள்ள முடியாத ஒரு உலகத்தில் நம்மை அடைத்துவிடுகிறான். அங்கிருக்கும் பொருட்களுடனான மனித பரிவர்த்தனைகள் புரிந்துகொள்ளவியலாததாக இருக்கின்றன. அதனால் தொடர்புக்கான புதிய வடிவங்களை நாம் உடனடியாக உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அந்த அபூர்வமான உருவங்களுக்கு நாம் இதுவரை கேள்விப்பட்டிராத குறிப்புணர்த்தல்களை கண்டுபிடிக்கவேண்டும். இந்த புதிய வாழ்க்கைமுறை தன்னியல்பான(Spontaneous) வாழ்க்கையை ரத்துசெய்வதை முன் நிபந்தனையாக கொண்டிருக்கிறது. இதைத்தான் நாம் கலையை புரிந்துகொள்வது என்றும் ரசிப்பது என்றும் சொல்கிறோம். இந்த வாழ்க்கை, உணர்ச்சிகளும்(sentiments) உணர்வுவேகங்களும்(passions) அற்றது என்றில்லை. இந்த அதீத-பொருட்கள்(ultra objects) நமக்குள் இருக்கும் கலைஞனில் இரண்டாம்கட்ட உணர்வுவேகங்களைத் தூண்டுகின்றன; குறிப்பாக அழகியல் உணர்ச்சிகளை.
இந்த விளைவை உண்டாக்குவதற்கு ஒட்டுமொத்தமாக மனித வடிவங்களை நிராகரித்துவிட்டு முழுதும் அசலான வடிவங்களை உருவாக்குவது எளிய வழிமுறை என்று சொல்லப்படுகிறது. முதலில் இது சாத்தியமே அல்ல.(இவ்வாறான முயற்சி செய்யப்பட்டு தோல்வியுற்றது.) இரண்டாவதாக, நவீனக் கலையில் மனிதன் இல்லாததால் மட்டுமே அது அ-மனிதத் தன்மை கொண்டதாவதில்லை. அது வெளிப்படையான மனித மைய நீக்கத்திற்கான செயல்பாடு என்பதனாலேயே அது அ-மனிதத் தன்மை கொண்டதாகிறது. மனித உலகிலிருந்து தப்பிச்செல்லும் இளம் கலைஞன் அவன் இறுதியில் அடையும் விசித்திர உருவங்களைக் காட்டிலும் அவன் தொடக்கத்தில் அழிக்கவேண்டிய மனித அம்சத்தின் மேலேயே அதிக கவனம் கொள்கிறான். மனிதனை விட்டுவிட்டு வேறொன்றை வரைவது அல்ல, மனிதனுடன் குறைந்தபட்ச ஒற்றுமை கொண்ட ஒரு மனிதனை வரைவதையே அவன் மேற்கொள்கிறான். நவீனக் கலைஞனுக்கு மனித அம்சத்தை வெல்வதிலிருந்தே அழகியல் இன்பம் கிடைக்கிறது. அதனால்தான் ஒவ்வொரு முறையும் கழுத்தை நெரித்து கொன்ற அந்தப் பலியை வெளிப்படுத்திவாறு அவன் வெற்றியுடன் வீடு திரும்ப வேண்டியிருக்கிறது.
யதார்த்தத்திலிருந்து விலகிச்செல்வது எளிதான காரியம் என்று ஒருவர் நினைக்கலாம். ஆனால் அது எளிதல்ல. அர்த்தமே இல்லாத விஷயங்களை சொல்வதிலோ வரைவதிலோ கஷ்டம் ஏதுமில்லை. அதற்கு ஒருவர் தொடர்பற்ற சொற்களை ஒன்றுசேர்க்கவோ சீரற்ற கோடுகளை வரையவோ செய்தால்மட்டும் போதும். ஆனால், சுயமான உட்பொருள் கொண்ட அதே நேரத்தில் இயற்கையின் நகலாக இல்லாத ஒன்றை கட்டமைப்பது என்பது அருஞ்செயல். அது மேதமையை கோரக்கூடியது.
யதார்த்தத்திலிருந்து தப்பிச்செல்லும் கலைஞனை தாக்குவதற்காக யதார்த்தம் பதுங்கிக் காத்திருக்கிறது. அவன் உன்னதமான தப்பித்தலை நிகழ்த்துவதற்கு அதிக புத்திசாலித்தனம் தேவை. இது ஒடிஸியஸ் உடைய தலைகீழாக்கம். அவன் தனது அன்றாட பெனிலோபேவிடமிருந்து(Penelope) விடுபட்டு பவளப்பாறைகள் ஊடாக சர்ஸ்ஸின்(Circe) கற்பனை உலகிற்கு பயணிக்கவேண்டும். ஒரு கணம் அவன் அந்த தொடர் தாக்குதலை வென்றுவிட்டால், அவனது தோரணை டிராகனை அடக்கிய புனித ஜார்ஜை ஒத்திருக்கிறது. அதற்காக நாம் அவனது தோரணையில் காழ்ப்புகொள்ள வேண்டாம்.
பத்தொன்பதாம் நூற்றாண்டு விரும்பிய படைப்புகள் அனைத்தும் வாழ்வனுபவ யதார்த்தத்தை(lived reality) கொண்டிருக்கின்றன. அந்த அனுபவமே அழகியலுக்கு மூலப்பொருளாக இருக்கிறது. இந்த மூலப்பொருளைக்கொண்டே அழகியல் செயல்பாடு நிகழ்கிறது. அது படைப்பில் உள்ள மனிதக் கருவுக்கு கவர்ச்சியையும் கண்ணியத்தையும் வழங்குகிறது. பெரும்பாலான மக்கள் இதையே ஒரு கலைப்படைப்பின் இயல்பான வழிமுறையாகவும் சாத்தியமான ஒரே வழிமுறையாகவும் பார்க்கிறார்கள். கலை என்பது வாழ்வின் பிரதிபலிப்பு, ஒரு மனோபாவத்தின்(temperament) ஊடாக இயற்கையை காண்பது, மனித வாழ்வை பிரதிநிதித்துவம் செய்வது, மேலும் பல. ஆனால் நமது இளம் கலைஞர்கள் இதற்கு எதிரான கருத்துக்களை கொண்டிருக்கிறார்கள். நமது உறுதியான நம்பிக்கைகள்தான் அதிக சந்தேகத்திற்கு உள்ளாக்கப்படவேண்டியவை. அவை நமது எல்லைகளையும் அவற்றுடனான நமது பந்தங்களையும் குறிக்கின்றன. எல்லைகளை விரிப்படுத்திக்கொள்வதற்கான உந்துதல் இல்லாதவரை வாழ்க்கை ஒரு அற்பமான விஷயம் மட்டுமே. மென்மேலும் வாழ வேண்டும் என்ற விழைவு நம்மிடம் எந்த அளவுக்கு இருக்கிறதோ, அந்த அளவுக்கே நாம் உண்மையாக வாழ்கிறோம். பழக்கப்பட்ட தொடுவானத்துக்குள்ளேயே தொடர்வது பலவீனத்தையும் உயிர்சக்தியின் நலிவையுமே வெளிக்காட்டுகிறது. வாழ்க்கை அதன் முழுமையான நிலையில் இருக்கும்போது விரிவடைகிறது. நமது சுவாசத்தோடு இணைந்து விரிகிறது. நமக்கு வயதாகும்போது தொடுவானம் கட்டித்தட்டிப் போகிறது.
கல்வியாளர்கள் ஒரு கலைப்படைப்பு மனித கருப்பொருள் கொண்டிருக்க வேண்டும் என்று உத்தேசிக்கிறார்கள். அதை ம்யூஸ்(Muse) தலைசீவி அலங்கரிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் கலையை ஒப்பனையாக(cosmetics) குறுக்கிவிடமுடியாது. வாழ்வனுபவ யதார்த்தத்தையும் கலைத்தன்மையும் ஒரே நேரத்தில் பார்ப்பது அடிப்படையிலேயே ஒத்திசைவற்றவை. முன்பு சொன்னது போல நாம் அவற்றை பார்க்க பார்வையை வேறுபட்ட விதத்தில் மாற்ற வேண்டி இருக்கிறது. இரண்டையும் ஒரே நேரத்தில் பார்க்க வேண்டிய கட்டாயம் கொண்ட கலை என்பது மாறுகண் கொண்ட கலை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் கலை அதுபோன்ற ஒரு கலைதான். அதனால்தான் அதன் படைப்புகள், அதுவரையிலான ரசனையில் நிகழ்ந்த உட்சபட்ச பிறழ்வை காட்டுகின்றன. கலையின் எல்லா மகத்தான காலக்கட்டங்களும் ஒரு படைப்பு மனித உள்ளடக்கத்தை மையமாக கொள்ளக் கூடாது என்ற கவனத்துடன் இருந்தன. கடந்த நூற்றாண்டில் ஆதிக்கம் செலுத்திய யதார்த்தவாதத்தை ரசனையின் வளர்ச்சியில் நிகழ்ந்த விசித்திரம் என்றே சொல்ல வேண்டும். இன்றைய புதிய தூண்டுதல் மீண்டும் கலையின் ராஜபாட்டைக்கு திரும்புவதாகவே தெரிகிறது. இந்த பாதையை ‘பாணிப்படுத்துதலுக்கான விழைவு’ எனலாம். பாணிப்படுத்துதல்(Stylize) என்பது யதார்த்தத்தை சிதைப்பது, அதை அ-யதார்த்தமாக்குவது(derealize), மனிதமைய நீக்கம் செய்வது. பாணிப்படுத்துவதற்கு மனிதமைய நீக்கம் செய்வதைத் தவிர வேறெந்த வழியும் இல்லை. யதார்த்தவாதம் கலைஞனை யதார்த்தத்தை நம்பிக்கையுடன் பின்தொடர அறிவுறுத்தும்போது, பாணியை கைவிடும்படியும் அறிவுறுத்துகிறது. பிரான்சிஸ்கோ ஸுர்பரானின்(Francisco de Zurbarán) ஓவியங்களில் ஈடுபாடு கொண்டவர் அவரது ஓவியங்களில் ‘தனித்த குணவியல்பு’(character) இருப்பதாக சொல்வார். இந்தத் தனித்த குணவியல்பே லூகாஸ், சொரோல்லா(Sorolla), டிக்கன்ஸ், கால்தோஸ்(Galdos) ஆகியவர்களின் படைப்புக்களை வேறுபடுத்துகிறதே தவிர பாணி அல்ல. இதற்கு மாறாக, பதினெட்டாம் நூற்றாண்டு மிகக் குறைந்த அளவில் தனித்த குணவியல்பு கொண்டிருந்தது. ஆனால் அது பாணியில் மேதைமை பொருந்திய காலக்கட்டமாக இருந்தது.
கலைக்குள் மனித உள்ளடக்கம் ஊடுருவுவதை இளைஞர்கள் தடை செய்யப்பட்ட ஒன்றாக அறிவித்துள்ளனர். மனித உள்ளடக்கம் மூன்று படிநிலைகளில் உள்ளது. முதலதாவது மனிதர்கள், இரண்டாவது உயிரினங்கள், மூன்றாவது உயிரற்ற பொருட்கள். படிநிலைகள் உயர உயர அவற்றுக்கான நவீனக் கலையின் மறுப்பும் வலுவாகிறது. ஆதலால் முதல் படிநிலையில் உள்ள மனிதர்கள் கவனத்துடன் தவிர்க்கப்படுகிறார்கள்.
இதை இசையில் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம். பீத்தோவனிலிருந்து வாக்னர் வரை இசை என்பது அடிப்படையில் தனிப்பட்ட உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்துவதாக இருந்தது. இசையமைப்பாளர்கள் தங்களது சுயசரிதையை பொருத்துவதற்கு மகத்தான சப்த கட்டுமானங்களை நிர்மாணித்தார்கள். கலை ஏறக்குறைய ஒப்புதல் வாக்குமூலமாக இருந்தது. தொற்றிக்கொள்ளவதை(Contagion) தவிர அழகியல் இன்பத்தை அடைய வேறெந்த வழியும் இருக்கவில்லை. “இசையில், உணர்வுவேகங்கள் தம்மைத் தாமே அனுபவித்துக் கொள்கின்றன.” என்று நீட்சே அறிவித்தார். மத்தில்டே வெசென்டொங்குடனான(Mathilde Wesendonck) மணம் மீறிய காதலை(adultery) வாக்னர் அவருடைய ட்ரிஸ்டன் இசோல்டே இசைநாடகத்தில் நிரைத்துளார். அந்த இசைநாடகத்தை அனுபவிக்க வேண்டும் என்றால் நாமும் சில மணிநேரத்திற்கு மணம் மீறிய காதலை அனுபவிக்க வேண்டும். அந்த இசை நம்மை அழச்செய்கிறது, நடுங்கவைக்கிறது, உருக்கிவிடுகிறது. பீத்தோவனிலிருந்து வாக்னர் வரை எல்லா இசையும் மென்துயர் நாடங்களே(melodrama).
இதை ஒரு இளங்கலைஞன் நியாயமற்ற செயல் என்பான். இந்தச் செயல், அடுத்திருப்பவர்களின் சந்தோசத்தாலும் துக்கத்தாலும் தொற்றுக்குள்ளாக்கப்படும் மனிதனின் உன்னதமான பலவீனத்தை தனக்குச் சாதகமாக எடுத்துக்கொள்கிறது. இந்த தொற்றுக்குள்ளாக்கப்படுவது உளவியல் நிகழ்வு அல்ல. இது ஒரு அனிச்சையான செயல்(reflex). கத்தியை கண்ணாடியில் தேய்த்தால் பற்கள் கூசுவது போன்ற செயல். இது ஒரு தானியங்கி விளைவுதானே தவிர வேறொன்றுமில்லை. நாம் இன்பத்தையும் கிளுகிளுப்பையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். கற்பனாவாதம் பொறியுடன் வேட்டையாடுகிறது. பொறியை கண்டு உற்சாகமடைந்த பறவையை துப்பாக்கி ரவைகளை கொண்டு சிதைக்கிறது. உளவியல் தொற்றுதலால் கலை முன் நகரக் கூடாது. ஏனெனில் உளவியல் தொற்றுதல் என்பது பிரக்ஞையற்ற நிகழ்வு. கலை முழுத்தெளிவுடனும் அறிவின் உச்சமாகவும் இருக்க வேண்டும். கண்ணீரும் சிரிப்பும் மோசடிகள். மாறாக, அழகின் குறிப்புணர்தல் எப்போதுமே ஒரு குறுநகையை தாண்டிச் செல்வதில்லை. அதுகூட இல்லையென்றால் இன்னும் சிறப்புதான். மலர்மே சொல்வது போல “Toute maîtrise jette le froid.”(எல்லா தேர்ச்சிகளும் குளிரையே தருகின்றன.)
இன்பம் பார்வையற்றதாகவும் இருக்கலாம்; பார்வையுள்ளதாகவும் இருக்கலாம். அழகியல் இன்பம் என்பது பார்வையுள்ள இன்பமாகத்தான் இருக்கவேண்டும். ஒரு குடிகாரனின் மகிழ்ச்சி என்பது பார்வையற்றது. அதற்கு மது என்கிற காரணம் இருக்கிறது. ஆனால் அதற்கு எந்த நோக்கமும் இல்லை. ஒரு குடிகாரனின் குதூகலம் தனக்குள்ளேயே மூடுண்டது. அவனுக்கு அவன் ஏன் மகிழ்ச்சியாக இருக்கிறான் என்றே தெரியாது. இயந்திரத்தனமாக அல்லாது உளம் சார்ந்த எந்த ஒரு விஷயமும் நோக்கமும் தெளிவும் கொண்டிருக்கவேண்டும். இசை ஒருவரில் உருகும் மனநிலையை உருவாக்குவதற்கும் அதன் அழகிற்கும் என்ன தொடர்பு? கலைப் பொருளை அனுபவிப்பதற்கு பதிலாக மக்கள் அவர்களது சொந்த உணர்ச்சிகளை அனுபவிக்கிறார்கள். ஒரு கலைப்படைப்பு மதுவை போல அவர்களது இன்பத்திற்கு காரணமாக மட்டுமே இருக்கிறது. கலை, அடிப்படையில் வாழ்வனுபவ யதார்த்தங்களை வெளிப்படுத்துவதாக கருதப்படும்போதெல்லாம் இதுபோன்ற விளைவு ஏற்படுகிறது. வாழ்வனுபவ யதார்த்தங்கள் மிகுந்த வலிமைகொண்டவை. நம்மால் அவற்றின் மேல் இரக்கம் கொள்ளாமல் இருக்கமுடியாது. நாம் அவற்றை அவற்றின் புறவயத் தூய்மையில் உள்வாங்கிக்கொள்ள முடியாதவாறு தடுப்பதும் இந்த இரக்கம்தான்.
காண்பதற்கு இடைவெளி அவசியமாகிறது. ஒவ்வொரு கலையும் தனது பொருட்களை உருமாற்றும் ஒரு மாய விளக்குபோல வேலை செய்கிறது. கலையின் திரையில் அப்பொருட்கள் நம்மிடமிருந்து தூரத்தில் தனித்து நிற்கின்றன. நம்மால் புழங்கமுடியாத உலகில் வசிக்கின்றன. இந்த அ-யதார்த்தப்படுத்துதல் நிகழாதபோது ஒரு திகைப்புதான் ஏற்படுகிறது. நாம் அப்பொருட்களாக வாழ்வதா அல்லது அவற்றை அவதானிப்பதா?
வாக்னரின் மூலம் மென்துயர் இசை நாடகம் அதன் உச்சத்தை அடைந்துவிட்டது. இப்போது அந்தக் கலைவடிவம் எதிர்திசையில் கவிழப்போவதாக தெரிகிறது. இசை தனிப்பட்ட உணர்ச்சிகளிலிருந்து மீட்டு எடுக்கப்பட வேண்டும். இதை தற்போது டெபூஸி(Debussy) செய்கிறார். அவர் இசையை மனிதமைய நீக்கம் செய்தார். அதனால்தான் அவர் இசையில் புதிய காலக்கட்டத்தை தொடங்கிவைத்தவராகத் திகழ்கிறார். இதேதான் கவிதையிலும் நடந்தது. கவிதையின் மேல் உள்ள சுமை நீக்கப்படவேண்டும். அது சுமந்துக்கொண்டிருந்த மனித உள்ளடக்கத்தால் காற்றுபோன பலூன் போல மரங்களிலிலும் கூரைகளிலும் மோதிக்கொண்டிருந்தது. மலர்மேதான் பாடல் கவிதையின்(lyrical poetry) இலகுத்தன்மையை அதற்கு மீட்டளித்தார்.

கற்பனாவாதக் காலகட்டத்தில் கவிதையின் பேசுபொருள் என்னவாக இருந்தது? கவிஞன், கவிதையில் அவனது உயர் நடுத்தர வர்க்க உணர்ச்சிகளையும் சோகங்களையும் ஏக்கங்களையும் மதம் அல்லது அரசியல் முன்முடிவுகளையும் நமக்கு அழகாக தெரியப்படுத்தினான். அவன் ஆங்கிலேயன் என்றால் அவனது புகைபுடிக்கும் பெருமைகளையும் இதில் சேர்த்துக்கொள்ளவேண்டும். அவனது அன்றாட இருத்தலை மேம்படுத்திக் கொள்வதே அவனது நோக்கமாக இருந்தது. கவிஞன் விரும்பியதெல்லாம் அவன் ஒரு மனிதனாக இருக்கவேண்டும் என்பதைத்தான். “ஒரு இளங்கலைஞனுக்கு இதில் என்ன மறுப்பு இருக்கிறது? அப்போது ஒரு கவிஞன் என்னவாகத்தான் இருக்கவேண்டும்? ஒரு பறவையாகவா? ஒரு டைனோசராகவா? ” என்று ஒருவர் சீற்றத்துடன் கேட்கலாம்.
என்னிடம் பதில் இல்லை. ஆனால், ஒரு இளம் கவிஞன் கவிதை எழுதும்போது கவிஞனாக இருக்கவே விரும்புகிறான் என்று நான் நம்புகிறேன். தெளிவான வேறுபாடுகளை வலியுறுத்துவது புதியக் கலையின் உளம்சார் நேர்மையை எடுத்துக்காட்டுகிறது. வாழ்க்கை என்பது வேறு, கலை என்பது வேறு. மனிதன் முடியும் இடத்தில்தான் கவிஞன் தொடங்குகிறான். மனித வாழ்வை வாழ்வது மனிதனின் பணி. இல்லாத ஒன்றை கண்டுபிடிப்பதே கவிஞனின் பணி.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் கவிஞனாக மட்டுமே இருக்க விரும்பிய முதல் கவிஞர் மலர்மேதான். அவர் சொல்வது போலவே இயற்கையால் அளிக்கப்பட்ட பொருட்களை அவர் தவிர்த்துவிட்டார். மனிதனிலிருந்து வேறுபட்ட சிறிய பொருட்களைக் கொண்டே கவிதை எழுதினார். இந்தக் கவிதை உணரப்பட வேண்டியதில்லை. மலர்மேயின் கவிதைகள் மிகச் சாதாரணமான உருவங்களை முன்வைக்கின்றன. அவற்றை பார்ப்பதே ஆனந்தம் அளிப்பதாக இருக்கிறது. இந்த உருவங்களுக்கு மத்தியில் தன்னை கவிஞன் என்று நியமித்துக்கொள்பவனின் முகத்திற்கு என்ன வேலை இருக்கிறது? அது காணாமல் போக வேண்டும், மறைந்துபோக வேண்டும். பெயரற்ற தூயக் குரலாக மாறிவிட வேண்டும். தன்னை சூழ்ந்துள்ள மனிதனிலிருந்து தன்னை விடுவிக்கக் கற்றுக்கொண்ட கவிஞனின் குரல்தான் இந்தப் பெயரற்ற தூயக் குரல்.
நவீனக் கலையில் ஒரு தலைகீழாக்கம் நிகழ்வதைக் காணலாம். நாம் பொருட்களை பற்றி சிந்திக்கிறோம். அதாவது அவற்றைப் பற்றி கருத்துக்களை உருவாக்கிக்கொள்கிறோம். நாம் யதார்த்தத்தைப் பற்றி உருவாக்கிய கருத்துக்களைத்தான் யதார்த்தம் என்று நினைக்கிறோம். இந்தக் கருத்துக்கள் நாம் உலகத்தை காண உருவாக்கப்பட்ட மாடங்களை போன்றவை. கதே சொல்வதுபோல ஒவ்வொரு புதிய கருத்தும் ஒரு புதிய உறுப்புதான். கருத்துக்களினூடாகத்தான் நாம் உலகைக் காண்கிறோம். கண் கண்ணைக் காணாததுபோல இயல்பாகவே நாம் அந்த கருத்துக்களை காண்பதில்லை.
ஆனால் கருத்துக்கும் அது குறிக்கும் பொருளுக்கும் இடையில் ஓர் இடைவெளி இருக்கிறது. எப்பொழுதுமே ஒரு உண்மையான பொருள் அதைப் பற்றிய கருத்தாக்கத்தை கடந்து செல்கிறது. கருத்தாக்கம் என்பது ஒரு வழிமுறை மட்டுமே. மனித இயல்பு, நாம் என்ன நினைக்கிறோமோ அதுவே யதார்த்தம் என்று நம்மை நம்பச் செய்கிறது. யதார்த்தத்திற்கான நமது ஏக்கம் யதார்த்தத்தை இலட்சியப்படுத்தச் செய்கிறது.
இப்போது இந்த செயலின் திசையை நாம் திருப்பினால், நாம் அந்த கருத்துக்களை கருத்துக்கள் என்றே பாவிக்கத் தொடங்குவோம். நாம் நமது கருத்துக்களை உணரும்போது அந்த கருத்துக்களை மனிதமைய நீக்கம் செய்கிறோம், அ-யதார்த்தப்படுத்துகிறோம். இப்போது நாம் மனதிலிருந்து உலகத்திற்கு செல்லவில்லை. மாறாக அகவயமானதை புறவயமாக்குகிறோம். உள்ளுறைபவற்றை உலகமாக்குகிறோம்(worldify).
எகிப்தியர்கள் தங்களது கடவுளை பத்தாயிரம் பெயர்கள்கொண்ட ஐசிஸ்(Isis myrionymos) என்பார்கள். அதுபோன்றதுதான் உண்மையும். அதன் முகங்கள் எண்ணற்றவை. நவீனக் கலையின் எண்ணற்ற பண்புக்கூறுகளில் நான் இங்கு சொன்னவை தீர்மானமானவையாக இருந்தால் அதிர்ஷ்டம்தான். பிறரும் இவற்றைப் பற்றி பேசுவார்கள் என்ற நம்பிக்கையுடன் நான் இதை நிறைவுசெய்கிறேன். பத்தாயிரம் பெயர்களை உச்சரிப்பதை பல நாவுகள் பங்கிட்டுக்கொள்ளட்டும். பல தனிப்பட்ட உண்மைகளை ஒன்றாக இணைத்த சூத்திரமே உண்மைக்கு மிக நெருக்கமானதாக இருக்கமுடியும். அது ஒரே வீச்சில் ஆயிரம் இழைகளை கோர்க்கும் தறியைப் போல.
புதியக் கலை இதுவரை பொருட்படுத்தும்படி எதையும் உருவாக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. நவீனக் கலை தனக்கு விதித்துக்கொண்ட பணி மிகப் பெரியது. அது சூன்யத்திலிருந்து உருவாக்க விரும்புகிறது. இதற்கு பிறகு அது அதிகம் சாதிக்கலாம். இளங்கலைஞர்களிடம் எவ்வளவு குறைபாடுகள் இருந்தாலும் நாம் ஒன்றை ஏற்றுக்கொள்ள வேண்டும்: இனி பின்னால் திரும்பிச் செல்ல முடியாது. ஒரு மரபின் எல்லைகளுக்குள் இருந்தபடியே கலையை உருவாக்குவது சாத்தியம்தான் என்று எதிர்வாதம் செய்வது எளிது. ஆனால் பேனாவையையோ உளியையோ கையில் வைத்துக்கொண்டு அகத்தூண்டுதலுக்காக காத்திருக்கும் கலைஞனுக்கு இந்த வாதத்தால் எந்தப் பயனும் இல்லை.

சியாம்
சியாம். சென்னையில் தனியார் நிறுவனத்தில் இயந்திர வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். இலக்கியத்துடன் கர்நாடக இசையிலும் ஆர்வம் உள்ளவர்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
