
கூளியன் கண்களைத் திறந்து பார்த்தபோது கிணற்றுக்கு மேலே புகை மூட்டமாக இருந்தது. கிணற்று ஆழத்தில் இருள் சூழ்ந்திருந்தது. நீரில்லாத கிணற்றுக்கு ஆழம் கணக்குண்டா என்று தெரியவில்லை. எவ்வளவு நேரம் விழுந்து கிடந்தான் என்று அவனுக்கே தெரியவில்லை.
சமமற்ற கிணற்றுத் தரையில் கருங்கற்கள் ஆங்காங்கே குத்திக் கொண்டு எழுந்திருந்தன. கிணற்றடியில் தங்கிய குறைந்த ஈரப்பசையால், செங்கற்சுவர் தரையைத் தொடும் இடத்தில் மெல்லிய பச்சைத் தளிர்கள் முளைத்திருந்தன. குரல் கொடுக்கும் அளவுக்கு தெம்பு இருக்கவில்லை. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் பிறந்தவன், இப்போது மீண்டும் பிறந்தவனைப்போல் பேச்சின்றி அழுகை மட்டும் வருவதாக உணர்ந்தான். அழுகையை அடக்கிக்கொண்டு இந்த இருள் குகையிலிருந்து எவ்வாறு ஏறிச் செல்வது என்ற கவலை எழுந்தது.
ஏறி இறங்குவதற்காக, மூன்றடிக்கு ஒரு படிபோல் உறைகிணற்றின் வளையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இவ்வளவு வலுவிழந்த நிலையில் தன்னால் ஏற முடியுமா என்று யோசித்தான். தலையில் பலமாக அடிபட்டிருந்தது நினைவுக்கு வந்தது. முதல் படியில் உந்தி, அடுத்த வளையத்தைப் பற்றிக் காலைத் தூக்கியபோது, தன்னுடல் வியக்கத்தக்க அளவு கனம் குறைந்திருப்பதை உணர்ந்தான்.
வெளிச்சம் அதிகமாகிக்கொண்டே வந்தாலும் புகையும் அதிகமாகிக்கொண்டே வந்தது. மேல் தரைக்கு ஏறி குதித்தவுடன் ஆங்காங்கே தீ நடனங்களைக் கண்டான்.
“அடா கூளியா, வந்திட்டயா?”
சாந்தனின் குரல்தான்.
இன்னும் விளையாட்டு முடியவில்லையோ என கூளியனுக்குக் குழப்பமாக இருந்தது. எதுவாக இருந்தாலென்ன என்று அவனுக்கு உற்சாகம் வந்தது.
“நான் புதிசா விளையாடத் தொடங்கியிருக்கறன். நீயும் சேர்ந்துக்கோ,” என்று சாந்தன் சொன்னான். புகைமூட்டத்துக்குள் சாந்தனின் உருவம் கூளியனுக்குத் தெளிவாகத் தெரியவில்லை.
“குச்சி எங்கன்னு தெரியலயே,” என்றான் கூளியன். “மத்தவங்க எங்க?”
“நான்தான் வச்சுருக்கன்,” என்ற குரலோடு, புகைக்குள் சாந்தனின் மெல்லிய கை குச்சியுடன் நீண்டது.
000
ஊரிலுள்ள எல்லாவற்றையும் மிஞ்சி மிளிர வேண்டுமோ என்னவோ, சூரியன் தன் கதிர்களை மேலும் அழுத்தமாக வீசிக்கொண்டிருந்தது. கூளியன் தன் பலமான இடது புஜத்தை மூக்கின் மேல் குறுக்காக வைத்து, கையை யானைத் துதிக்கைபோல் ஆட்டினான். வலக்கையில் சிறு மரக்குச்சியை வாள்போல் வீசிக்கொண்டு, “ஆனை மீது வந்து உன் ஊர மிதிக்கப் போறன்,” என்று சொல்லி அதை தெளிந்த வெயில் வானில் உயரே போட்டான்.
மற்ற சிறுவர்கள் எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் ஓட்டம் எடுத்தனர். கீழே விழுந்த குச்சியை வேகமாக எடுத்து, “நில்க” என்றான். சொன்ன கணமே, அவரவர் கால் நின்ற இடத்தில் எல்லாரும் அசையாமல் உறைந்தனர்.
குள்ளமான கூளியன் குச்சியை மெலிந்த சாந்தனின் முதுகில் படுமாறு எறிந்தான். பட்டவுடன், “இப்பொ பார், உன் ஆயுதக் கெடங்கையும் நெற்களஞ்சியத்தையும் அபகரிக்கப்போறன்,” என்று சொன்னான். ஒரு காலை தன் நாட்டுக் கோட்டை விட்டு நகராமல் வைத்து, மறுகாலை சாந்தனின் நாட்டுக்குள் முடிந்தவரை அகட்டினான். கட்டைவிரல் நுனியைப் புழுபோல் எவ்வளவு நகர்த்த முடியுமோ அவ்வளவு நகர்த்தினான். அந்த நிலையில் குச்சியை நீட்டி அடையக்கூடிய தொலைவு வரை கோடு கிழித்தான். சாந்தனின் நாட்டின் பெரும்பகுதியைத் தன்னுடைய நாட்டுக்குள் இணைத்துக்கொண்டான்.
தன் நாடு பறிபோவதைப் பற்றி கவலைகொள்ளாமல், “களஞ்சம்ன்னா?” என்று சாந்தன் அப்பாவியாக கேட்டவுடன் எல்லாரும் சிரித்தனர். “களஞ்சம் இல்ல, அது கொளஞ்சம் கொளஞ்சம்,” என்று வஞ்சி கிண்டல் செய்து, “வத்திப் போன கொளம் இருக்குல்ல, அதுல நெல்லப் போட்டு நெரப்பி வெச்சுருப்பாங்க,” என்று சிரித்துக்கொண்டே சொன்னாள்.
“அடீ வாய் இருக்குப் பாரு,” என்று பூங்கண்ணன் சொல்லி, “நம்ம பாட்டா சொல்லியிருக்காருல்ல. நம்ம ஊரில மீனை உப்புப் போட்டு சாடியில எறக்கி வெச்சுருக்கோமில்ல. அதையே நெல்லா போட்டு பெரிய பெரிய அறையிலெ வெச்சுருப்பாங்க. அதுதான் களஞ்சியம். அதைக் கும்பிட்டப் பொறவுதான் ஊருல எல்லாரும் உண்பாங்க,” என்றான்.
“அவ்வளோ பெரிய சாடியா, அப்போ களஞ்சியத்துக்குக் கதவு இருக்குமா, பூட்டி வெச்சுருப்பாங்களோ,” என்று சாந்தன் கேட்டான்.
தன் நாடு பெரியதாக விரிந்ததால் கூளியனின் உள்ளம் மகிழ்ந்தது. ஆனால் அதை அவன் வெளிகாட்டிக்கொள்ளவில்லை.
சாந்தனின் ஆட்டமுறை வந்தபோது, அந்த மெலிந்த பயலால் தங்களைக் குறிபார்த்து அடிக்க முடியாது என்று எல்லாரும் நினைத்தார்கள். ஆனாலும் குச்சி தங்கள் மேல் பட்டுவிடக்கூடாது என்று வேட்டையை உணர்ந்த மிருகங்களைப்போல் விழிப்புடன் நின்றார்கள். யாரும் எதிர்பார்க்காதவாறு, சாந்தனோ வேறொரு திசையில் குச்சியை எடுத்துக்கொண்டு ஓடினான். அவனைப் பிடித்துக்கொண்டு வந்து ஆட்டத்தைத் தொடர்ந்தார்கள்.
அடுத்த முறை ஆட்டத்தில் கூளியன் வஞ்சியின் நாட்டுப் பகுதியை பிடித்தான். அவளிடம் மிச்சம் இருந்தது சிறிய பகுதியே. அவள் மீது அந்தக் குச்சிப் பட்டு, அவள் அதை எடுத்துக்கொண்டு வந்து கொடுக்கும்போது அவள் உள்ளங்கையில் இருந்த சிவந்த புண்ணைப் பார்த்தான்.
அரிதாக மழை தூறும் நாட்களில், மண்ணிலிருந்த விதைகள் அந்தத் தெளிப்பு நீரை மாயம்போல் உறிஞ்சிக்கொள்ளும். சில மணிநேரங்களில் ஊர் ஆங்காங்கே பச்சை காட்டும். சில நாட்களிலேயே அந்தப் பச்சை பழுப்பாகிக் காய்ந்துவிடும். தோலொட்டிய உடலும் வெண்நுரையைப் போன்ற தலைமுடியும் கொண்ட பாட்டாவின் நினைவுக்கெட்டிய காலத்தில்கூட ஆறு மிகுதியாக ஓடியதில்லை. ஊரிலுள்ள பெண்களும் சிறுவர் சிறுமியரும் இருநாட்களாக முட்காட்டுக் கிளைகளையும் செடிகளையும் சேகரித்துக்கொண்டிருந்தார்கள்.
விளையாட்டு தொடங்கியபோது பூரிப்போடு இருந்த வஞ்சியின் முகம் இப்போது சுருங்கிக்கொண்டிருப்பதை கூளியன் கவனித்தான்.
வஞ்சியைப் பார்த்து, “உன் நாட்டுல பாதிய மட்டும் புடிச்சுக்கிறன்,” என்றான். விளையாட்டின் கோடுகள் இப்போது ஆற்றுத்தடம் வரை நீண்டிருந்தன. ஐம்பது கூரைகள் கொண்ட சிறிய ஊரில் எந்தக் காலத்திலோ ஆற்று நீர் மிகுதியாக ஓடிக்கொண்டு இருந்திருக்கவேண்டும். இப்போது அதன் காய்ந்த தடத்தில் ஆங்காங்கே மெல்லிய நீர்க்கோடுகள் மட்டுமே நெளிந்துகொண்டிருந்தன.
கூளியன், “ஆனா வஞ்சி, உன் முறையிலெ நீ புடிக்கிற புது நாடுகளொட பாதிய எனக்குத் தந்துறணும். உன் நாட்டுக்கு நான் காவல்,” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே, பூங்கண்ணன் கூளியனைப் பார்த்துத் தெறித்துச் சொன்னான், “அதெப்படி, அது சரியொன்னுமில்ல. காளி பார்த்துக்கிட்டு இருக்கா.” பூங்கண்ணனின் மார்பில் கைவைத்து கூளியன் அவனை வேகமாகத் தள்ளியதால், அவன் உடலில் பழுப்பு மண் துகள்கள் ஒட்டிக்கொண்டன. தன் பக்கம் யாராவது நிற்கமாட்டார்களா என்ற ஏக்கத்தோடு, அவன் கோபமாக சாந்தனைப் பார்த்தான்.
சாந்தனோ அவனுக்கும் இந்த விளையாட்டுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்பதுபோல், ஓடிப்போய் இரு கைகளிலும் நிறைய வழுவழுப்பான சிறுகற்களை எடுத்து வந்தான். “இந்தக் கல் காடை முட்டை மாதிரி இருக்கு,” என்று சொல்லி, கால் மடக்கி குதிகாலை தரையில் அழுத்தி அமர்ந்துகொண்டு கற்களை அவனுக்குத் தோன்றிய வரிசைகளில் அணிவகுத்துக்கொண்டிருந்தான்.
“என் நாட்டைக் கல்லு தொடக்கூடாது,” என்று கூளியன் கோபமாகச் சொன்னான். சாந்தன் கற்களை அடுக்கிக்கொண்டே, “நீ வேணுமின்னா கோட்ட நகத்திப் போட்டுக்கோ. நான் கல்ல நகத்தமாட்டன்” என்றான்.
அடுத்த ஆட்டத்தில் கூளியன் குச்சியைத் தூக்கிப் போடும்போது, வஞ்சியும் பூங்கண்ணனும் ஓடினார்கள். சாந்தன் மட்டும் தன் இடத்தை விட்டு நகராமல் கற்களைக் கொண்டு அவனுடைய விளையாட்டையே தொடர்ந்துகொண்டிருந்தான். ஆவேசமடைந்த கூளியன் குச்சியைப் பலமாக வீசி சாந்தனின் முதுகில் அடித்தான். சாந்தன் குழம்பிய விழிகளோடு திரும்பிப் பார்த்தான். இன்னும் ஓராண்டு செல்லட்டும் என்ற தந்தையின் சொல் கூளியனுக்குள் மீண்டும் எழுந்தது. கூளியன் மேலும் ஒரு கல்லை எடுத்து சாந்தனின் கால்முட்டியில் ஓங்கி வீசினான்.
கூளியன் ஊரிலேயே இருந்து முள்ளரண் அமைக்க உதவி புரியட்டும் என்று மன்றத்தில் முடிவெடுத்திருந்தார்கள். ஐந்து சிற்றூர்களிலிருந்தும் வயதுவந்த ஆண்கள் அனைவரும் பேராற்றுக் கரையிலிருந்த முன்சேனையைத் தடுக்கச் சென்றிருந்தார்கள்.
சாந்தன் எந்த முக மாற்றமுமின்றி தன் காலில் வழியும் ரத்தத்தை விரலால் நீவிப் பார்த்தான். அவனிடமிருந்து பதிலுமில்லை சொல்லுமில்லை.
வஞ்சி சாந்தனின் அருகில் வந்து, கையைப் பிடித்துக்கொண்டாள். கூளியனின் கை மேலும் இறுகியது. சாந்தன், “கூளியா, ஏன்டா என்னை அடிச்ச?” என்று கேட்டான். கூளியன் பதில் சொல்லாமல் அவர்களிடமிருந்து விலகித் திரும்பிக்கொண்டான்.
பூங்கண்ணன் தன் முன்கையை ஒரு கூரிய கல்லால் கீறிக்கொண்டு, “கவலையெல்லாம் தூரப் போகெட்டும். இவனோட நாட்ட நான் புடிச்சிடுவென். திமிர அடக்கிடுவென். காளி என்னோடே இருப்பாள்,” என்றான். அவனுடைய கரிய தோலில் முதலில் வெண்ணிறக் கோடு திறந்தது. பின்னர் சிவந்த துளிகள் வெளிப்பட்டன.
பூங்கண்ணனின் திசையில் இப்போது தென்றல் வீசியது. அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற்றான். சாந்தனின் நாட்டை கூளியனிடமிருந்து மீட்டான். அந்நாட்டில் கோடு கிழித்து அதை தன் நாட்டோடு இணைத்துக்கொண்டான்.
வஞ்சி தன் ஆட்டத்தில் தன்னுடைய நாட்டின் சில பகுதிகளைக் கூளியனிடமிருந்து மீட்டாள். காலை அழுத்தி ஊன்றியபோது ஊசிபோல் வலி எழுந்தது. உள்ளங்காலில் ஒரு முள் இன்னும் பதிந்திருப்பதை உணர்ந்தாள். சாந்தனின் பகுதியை ஆக்கிரமிக்காமல், பூங்கண்ணன் நாட்டின் சிறு பகுதியை தன் நாட்டில் இணைத்துக்கொண்டாள். கூளியனிடம் முன்பு செய்துகொண்ட ஒப்புமொழியைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாகச் சொன்னாள்.
கூளியனின் மனம் மீண்டும் பொங்கியது. தான் விரைவில் பூங்கண்ணனின் நாட்டைத் திரும்பப் பிடிப்பதாகத் தனக்குத் தானே வாக்குறுதி கொடுத்துக்கொண்டான். அதே நேரத்தில் அவன் உள்ளத்தில், தான் ஏன் இங்கேயே இருக்கவேண்டும் என்று மீண்டும் கோபம் பொங்கியது.
பூங்கண்ணன், “இப்பொ காளிக்கி நன்றி சொல்லி கோயில் எழுப்பப் போறன்,” என்று கூறி, சுற்றும்முற்றும் கருங்கல் ஒன்றைத் தேடினான்.
வஞ்சி துடுக்காக ஓடிச்சென்று அவளுடைய உள்ளங்கை அளவுள்ள கருங்கல்லைக் கண்டுபிடித்துப் பூங்கண்ணனிடம் கொடுத்தாள்.
தன் நாடு பறிபோனதைப் பற்றிச் சாந்தனுக்குக் கவலை இருப்பதாகவே தெரியவில்லை. தன் நாட்டை மற்றவர்கள் கைப்பற்றுவதைக் கண்டு அவனே மகிழ்கிறானே என்று கூளியன் சிரித்துவிட்டான். வஞ்சி, “அடா நீ தோத்துவிட்டயே, உனக்குக் கோபம் கவலெயெல்லாம் இல்லெயா?” என்று சாந்தனிடம் கேட்டாள். அவனோ பதில் சொல்லாமல் கிணற்றுச் சுவரில் சாய்ந்துகொண்டு புன்னகைத்தான்.
பூங்கண்ணன் தன் நாட்டு நிலத்தில் கருங்கல்லைச் செங்குத்தாக நட்டான். “பேய் மாதிரி அலைஞ்சு திரியறன் காளி. எனக்கு இந்த விளையாட்டிலெ வெற்றியைத் தா.”
கூளியன் தன் தலைத்துணியை எடுத்து தரையில் கிடந்த மரக்கிளையில் சுற்றி கொடி போல மாட்டினான். அதை இரு கைகளாலும் பிடித்துக் கூர்வேல்போல் முன்னே நீட்டி, பூங்கண்ணனைவிட உயர்ந்த குரலில் கத்தினான். “நம்ம ரத்தத்தக் குடிக்க வந்திருக்காங்க பகையாளிங்க. அவங்கள அறுப்பொம்.”
பூங்கண்ணனின் குரல், “பகையாளிங்க வர்றாங்க காளி, எனக்கே வெற்றியைத் தா,” என்று பதிலுக்கு உயர்ந்தது.
கூளியன் “வாழிய! வெற்றி!” என்று கத்தியபோது, வஞ்சி, “அடே சாந்தா” என்று அலறினாள்.
காயம்பட்ட காலை ஒரு கையால் அழுத்திக்கொண்டு, சாந்தன் கிணற்று வட்டத்தில் ஏறி அமர்ந்திருந்ததை யாரும் கண்டிருக்கவில்லை. வஞ்சி ஓடிச்சென்று சாந்தனைப் பிடிக்க முயன்றபோது, அவன் வெற்றுவெளியை நோக்கிக் கையை ஆட்டிக்கொண்டு சிரித்தான். “பாட்டா” என்று கூப்பிட்டான்.
வளைந்த காலுடன் வெண்தாடிப் பாட்டா மெதுவாக வந்துகொண்டிருந்தார்.
பாட்டா இவர்களின் அருகில் வந்தபோது, “பாட்டா, என்ன எங்க நாட்டு மேல கால வெச்சு நடந்து போறீங்க? காலன் காவு வாங்கிட போறான்” என்றான் கூளியன்.
பாட்டா மேலயும் கீழேயும் கூளியனைப் பார்த்துவிட்டு, “உன்னோட சுருக்கு மீனைப் பாத்துக்கோடே. உன் அப்பனாட்டம் ஒண்ணு மட்டும் பெத்துப் பாட்டா போதாது கேட்டுக்கோ” என்றார்.
“நான் போயிருந்தா நெறைய பேரு கண்ணுறங்கிருப்பாங்க” என்று கூளியன் சாதாரணமாகச் சொன்னான்.
பாட்டா தன் நேரான காலை மண்ணில் அழுத்தமாக ஊன்றி, ஒரு கையைச் சாந்தனின் அக்குளுக்குள் கொடுத்து அவனைக் கீழே இறக்கினார். சாந்தன் கிணற்றின் விளிம்பைப் பிடித்துக்கொண்டு நின்றான். “முள்ளுல மட்டும் ரத்தம் கண்டிருக்கிறவன் சொல்றத கேட்டியளா,” என்று கூளியனைப் பார்க்காமல் தனக்குத் தானே பேசிக்கொள்வதுபோல் சொன்னார்.
பாட்டாவின் சொல்தான் தன்னை ஊரிலேயே கட்டிவைத்துவிட்டது என்று கூளியன் அறிந்திருந்தான்.
பாட்டாவின் கால்கள் நடந்துகொண்டே இருந்தன. ஒரு கால் வளைந்திருந்தாலும், அது தன் நடையைப் பாதிக்கக்கூடாது என்ற முனைப்பு அவரிடம் இருந்தது.
“பாட்டாக்குத் திண்ணைய நீங்கினா காளிக்கோயில்! ஒரு நாளைக்குத் திங்க ஒரு சேத்து மீனு போதுமா இன்னைக்கு?” என்று பூங்கண்ணன் கூறினான்.
அதைக் கேட்காதவர் போல பாட்டா இல்லாத ஆற்றை நோக்கி நடந்தார். ஆமையோட்டைப் போல நிலம் பிளவுபட்டிருந்தது.
“ஆமா யாராவது காவு வாங்க மாட்டாங்கனுதான் காத்துகிட்டு இருக்கறன். இப்போ என் உசுர விட்டா, அந்தக் காளி விட்டு வெப்பாளா நம்மள. அவளுக்கு உயிரோட்டம் உள்ள நீர் வேணுமாக்கும்,” என்று வறண்ட மணலைக் கடந்து கோயிலை நோக்கிச் சென்றார்.
பாட்டாவின் நடையை முந்தவிடாமல் சிறுவர்களின் கண்கள் தொடர்ந்துகொண்டிருந்தன. அவரது கால் எதிலோ இடறி கீழே பார்த்தபோது, காய்ந்து கிடந்த தவளையின் எலும்புகள் தெரிந்தன. எட்டுச் சிறுகோடுகளைப்போல் தோன்றிய அதன் நெஞ்சுக்கூட்டை மெல்லக் காலால் விலக்கிவிட்டு நடந்தார்.
“எடா சாந்தா, எந்தக் கோடுகளும் மாறாமல் பார்த்துக்கொள்,” என்று வஞ்சி சொல்லி, கூளியன் ஆமோதித்து, பூங்கண்ணனும் சேர்ந்து மூவரும் பாட்டாவைப் பின் தொடர்ந்து காளி கோயிலுக்குச் சென்றனர்.
ஊரில் செழிப்புடன் உயிர்த்திருந்தது அந்த வேப்பமரம் மட்டுமே. வேறு பல மரங்கள் ஊர் முழுவதும் கையில்லா ரேகை போல நின்றிருந்தன. சாய்ந்த பல தென்னைமரங்கள் முள்ளரண்களோடு சேர்ந்து தடுப்புகளாகக் கிடந்தன.
மரத்தின் கீழிருந்ததைச் சிலை என்று கூட கருத முடியாது. பெரிய கருங்கல்லைச் சதுரமாகச் செதுக்கி, அதன் முன்புறத்தில் மனித உருவொன்றைப் பொறிக்க முயன்ற தடயம் மட்டும் இருந்தது. எந்தப் பீடமுமின்றி மரத்தின் கீழ் அமர்ந்திருந்தது. வஞ்சிக்கு அதை ஏன் காளி என்று சொல்கிறார்கள் என்ற குழப்பம் உண்டு. கூளியன் அதைக் கேள்வி கேட்கக் கூடாது என்று நினைப்பவன். பூங்கண்ணன் அந்தக் குழப்பமே இல்லாதவன்.
பாட்டா ஒரு மீனைக் காளி முன்னாலுள்ள சிறு மண்வட்டில் வைத்து விட்டு, “வேறு பலி கொடுக்க ஊரில் உயிர்கள் இல்லையே,” என்று சொல்லி இரு கைகளையும் இணைத்து தலைமேல் தூக்கிக் கும்பிட்டார். சிறுவர்களும் தங்களையறியாமலேயே கைகளைக் கூப்பிக் கும்பிட்டனர்.
“பேராத்து நீர ஊருக்குத் திருப்பிவிட்டு நம்மய காப்பாத்துவானாம், காளீ. பதிலுக்கு நம்ம மண்ணுல கொடி விரிச்சு அவன் படை படுத்துக்குமாம். தண்ணியயே நம்ம கழுத்துல கயிறா மாட்டப் பாத்தான்.”
கூளியன் ஏதோவொரு உந்துதலில் திரும்பிப் பார்த்தபோது தூரத்தில் தூசி பறந்துகொண்டிருந்தது. சாந்தன் சரியாக கோடுகளைப் பாதுகாத்துக்கொண்டிருப்பானா என்று அவனுக்குத் தோன்றியது. ஆற்றைக் கடந்து கிணற்றை நோக்கி ஓடினான்.
கிணற்றை நெருங்கியபோது ஏதோ ஒன்று அவன் தலையின் பக்கவாட்டில் பாய்ந்து இறங்கியது. கண்கள் குழியிலிருந்து வெளித்தெறித்துவிட்டதுபோல் வலி பரவியது. முக்கோண உலோக நுனியுடைய அந்த ஆயுதத்தின் விசையில் அவன் நிலைதடுமாறிப் பின்னால் தள்ளப்பட்டான். விளையாட்டில் தோற்றுவிட்டோமோ என்று அவன் மனத்தில் அடித்தது. தன் பசியே வயிற்றுக்குள் வாய்கொண்ட பேயாக உருவெடுத்துவிட்டதோ என ஐயப்பட்டான். திசை தவறிக் கோணலாகப் பதிந்த காலின் கீழ் திடீரென ஈரம் பட்டது. அது நீரா என்று எண்ணுவதற்குள் அவன் பின்னோக்கிச் சரிந்து கிணற்றில் விழுந்தான்.
குருதித்துளி பட்டதும், அதன் செந்நிறத்தைக் கிணற்று மண் உள்ளிழுத்துக்கொண்டது. அந்தச் செம்மை சில நொடிகளில் கரிய நிறமாக மாறியது.
கண்ணிமை உட்பட எந்த உடல் பாகத்தையும் கூளியனால் அசைக்க முடியவில்லை. ஆனால், தன் அருகில் மெலிந்த உடல் ஒன்று இருப்பதை அவன் உடல் அறிந்திருந்தது. அசைவற்ற அந்தச் சிறிய உடலிலிருந்து வந்த வெம்மை தன்னை மெதுவாகச் சூழ்வதை உணர்ந்தான். கூச்சலும் அழுகையும் எக்காளமும் மேலிருந்து கிணற்றாழத்தில் நுழைந்து, பல்கிப் பெருகி அவனை அடைந்தன. ‘ஐயோ, தரையில் வரையப்பட்ட என் நாடு என்னவாகியிருக்கும்?’ என்று ஒரு கணம் எண்ணம் எழுந்ததற்காக வெட்கி அதை அடக்கினான்.
எவ்வளவு நேரம் அப்படிக் கிடந்தான் என்று அவனால் ஊகிக்க முடியவில்லை. கிணற்றின் வாயைச் சுற்றி சில தலைகளை அவன் கண்கள் பார்த்தன. கொஞ்சம் கொஞ்சமாக நினைவுகளும் மொழிகளும் புலன்களும் அவனை விட்டு நீங்கிக்கொண்டிருந்தன. தன்னை எட்டிப் பார்ப்பது தன் தந்தையா வேறொரு தந்தையா என்று நிச்சயிக்க முடியாமல் கடைசி உயிர்நிலை அவனைவிட்டு விலகியது. பாறையிடுக்கில் பதுங்கியிருந்த பாம்பு, வெம்மை விலகுவதை உணர்ந்தது.
000
சாந்தன் பேயின் மெல்லிய கையிடமிருந்து கூளியன் பேய் குச்சியை வாங்காமல், “இல்லை, நீயே வெச்சுக்கோ” என்றது. சிறிது நேரத்தில் பூங்கண்ணனும் வந்து கூளியனுடனும் சாந்தனுடனும் சேர்ந்துகொண்டபோது புகை பரவி மெலிய பார்வைத் தடை விலகத் தொடங்கியது. எதிரே தொலைவில் ஓடி வரும் உருவம் ஒரு சிறுமிப் பேய் என்றும், அது கண்டிப்பாக வஞ்சிதான் என்றும் அவர்களுக்கு எப்படியோ தெரிந்திருந்தன. வஞ்சி வந்ததும் சாந்தனைக் கட்டிக்கொண்டது. சாந்தன் சிரித்தபோது அதன் எலும்புகளுக்கும் பற்களுக்கும் வேறுபாடே தெரியவில்லை.
சாந்தன் “இதோ இந்த உலகத்தெப் பிடிக்கப்போறன்,” என்று குச்சியை வைத்து கோடு கிழிக்காமல் அதை உடைத்துப்போட்டுச் சிரித்தது. உடைத்த துண்டுகளைப் பூங்கண்ணனின் மீது தூக்கிப் போட்டுவிட்டு, ஒரு காலைச் சரியாகப் பதிக்க முடியாமல் நொண்டி ஓடியது. எல்லா பேய்களும் சிரித்துக்கொண்டே சாந்தனைத் தொடர்ந்து ஊரைச் சுற்றி ஓடின.
ஊரின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் புகை எழுந்தது, தீ கனன்றது. சூடான புழுதிக்காற்று வீச தடையேதும் இருக்கவில்லை. வீடுகள் இடிக்கப்பட்டிருந்தன. முள்வேலிகள் சிதறியிருந்தன, சிலவை எரியூட்டப்பட்டிருந்தன. உப்பிட்ட மீனும் முயல்கறியும் வைக்கப்பட்ட களஞ்சியங்கள் சூறையாடப்பட்டிருந்தன. முள்வேலியைக் கண்ட வஞ்சிப் பேய் ஒரு கணம் நின்று தன் உள்ளங்கையில் பழைய புண் இருந்த இடத்தைப் பார்த்தது.
சதையிருந்தும் உயிரற்றுக் கிடந்த மனிதர்களைக் கண்டு பேய்களுக்கு ஏதோவொரு விலகல் ஏற்பட்டது. வீடுகளின் வரிசையில் அவை ஓடிச் சென்றபோது முதிய மனிதர்கள் திண்ணையில் வீழ்ந்து கிடப்பதைக் கண்டன. பெண்களின் உடல்கள் வாளால் வெட்டப்பட்டும் அம்புகளால் துளைக்கப்பட்டும் கிடந்தன. தூசியையும் புகையையும் தவிர எந்த அசைவும் அவற்றுக்கு ஊரில் தென்படவில்லை.
வஞ்சிப் பேய் கிணற்றுக்குள் பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டு பூங்கண்ணன் பேயும் அருகில் சென்று எட்டிப் பார்த்தது. ஆழத்து இருளில், வளைந்து சிதைந்த ஒரு மெலிந்த உடலும் ஒரு குள்ள உடலும் கிடந்தன. இரு பேய்களும் திரும்பியபோது, தங்களுக்குப் பின்னால் மிக அருகே சாந்தன் பேய் நின்றுகொண்டிருப்பதைக் கண்டு திடுக்கிட்டன.
கூளியன் பேய் கிணற்றருகில் இருந்த குருதிக்கோடுகளைக் கண்டபோது அதன் எலும்புகளில் சில்லென்ற கீறல் ஓடியது. தரையில் கிழித்த கோடுகள் அனைத்தும் சிதைந்திருந்தன.
பேய்கள் சுற்றிச் சுற்றி களைத்துப் போய்விட்டிருந்தன. ஆனால், சாந்தன் பேய் மட்டும், தானாகவே சிரித்துக்கொண்டு சிதைந்த கோடுகளுக்கிடையே ஒற்றைக்கால் தூக்கி நொண்டி விளையாடத் தொடங்கியது. துள்ளித் துள்ளி விளையாடும் சாந்தன் பேயைப் பார்த்தபோது, கூளியன் பேயின் வலக்கை தானாய் இறுகியது. இன்னும் அந்தக் கல் அதன் உள்ளங்கையில் இருப்பதுபோல் ஒரு கனம். எந்தக் கால் என்று அதற்கு நினைவில்லை.
தூரத்தில் யாரோ வருவதைக் கண்டு தூக்கியிருந்த ஒற்றைக்காலை அந்தரத்திலேயே நிறுத்திக்கொண்டு சாந்தன் பேய் ஆவலுடன் பார்த்து நின்றது. “பாட்டா?” என்று ஓங்கிக் கத்தியது. மற்ற பேய்களும் திரும்பிப் பார்த்தன. வெண்தாடியும் தலைப்பாகையும் கொண்ட ஒருவர் வந்துகொண்டிருந்தார். வளமான நெஞ்சின் மேல் மேலறுவைத் துணியைக் குறுக்காகக் கட்டியிருந்தார்; சற்றே பருத்த வயிற்றுக்குக் கீழே பொன் சரிகை கொண்ட மிக வெண்மையான கீழறுவைத் துணி மிளிர்ந்தது. அங்குமிங்கும் நின்று நோட்டமிட்டபடி வந்தார். குட்டிப்பேய்கள் அருகே போய்ப் பார்த்தன. அவர் பேய்ப்பார்க்கும் கண்கள் அமையா மனிதர். ஆனால், அவரது கண்கள் களத்தை மிகுந்த பூரிப்புடன் நோக்கின.
ஊரைச் சுற்றிப் பார்த்துவிட்டு காளி கோயிலுக்குச் சென்றார். எல்லா குட்டிகளும் தொடர்ந்தன. கோயிலுக்கு அருகே செல்லச் செல்ல வேறுவிதமான புகை எழுந்துகொண்டிருந்தது. மரத்துண்டுகளிலும் காய்ந்த இலைகளிலும் தீ வளர்த்துக்கொண்டு பெருங்கலம் ஒன்றில் கூழ் கிண்டப்பட்டுக்கொண்டிருந்தது. அப்பகுதி வீரர்களின் பேச்சொலியால் நிரம்பியிருந்தது.
போர்வீரர்கள் எருது வண்டியில் கொண்டுவந்திருந்த ஓலைகளையும் கம்பங்களையும் கயிறுகளையும் கொண்டு பாசறைகள் அமைத்துக்கொண்டிருந்தனர். ஒருவர் கூட நில்லாமல் எறும்புக்கூட்டம்போல் அங்குமிங்கும் சென்று ஏதோவொரு பணியில் இயங்கிக்கொண்டிருந்தனர். தூரத்தில் குதிரைக் கனைப்புகளும் யானைப் பிளிறல்களும் கேட்டன. மணிகளின் மெல்லிய கிண்கிணி ஒலி கேட்டது.
காளிச் சிலைக்கு முன் வைக்கப்பட்டு பூசை செய்யப்பட்ட கூழ், இப்போது சிறிய மண்வட்டுகளில் வீரர்களுக்குப் பகிரப்பட்டுக்கொண்டிருந்தது.
“பேராற்றிலிருந்து இவ்வோடைக்கு நீரைத் திருப்ப என் முந்நூறு வீரர்கள் அரைக் காத தூரம் வாய்க்கால் வெட்டிக்கொண்டிருக்கிறார்கள். அதற்கும் மேலாக உங்களைப் பாதுகாக்கவே தனிப் படை தேவைப்படுகிறது, புலவரீர்,” என்று படைப் பிரிவின் தலைவன் கூழ்வட்டை அவரிடம் நீட்டினான்.
சாந்தன் பேய் தன் மெலிந்த எலும்புக் கையை மூக்கில் வைத்துக்கொண்டு கூளியன் பேயை முட்டியது. கூளியன் பேயும் அந்த விளையாட்டில் இணைந்துகொண்டது.
புலவர், “புழுதிக்காற்று இவ்வூர்களை மூடி மேடாக்கும். அவற்றின் பெயர்களையும் மண்ணோடு மூடிவிடும். அப்போது மிஞ்சப்போவது உங்கள் வாளல்ல, என் சொல். உப்பிட்ட பண்டம்போல் நூறுநூறு ஆண்டுகள் கெடாதது,” என்று படைத்தலைவனை நோக்கி ஏளனமாக நகைத்தார்.
படைத்தலைவனின் முகம் ஒரு கணம் சுருங்கியது. அதை உடனே மறைத்துக்கொண்டு, “சரி தான், அதை உணர்ந்து தானே தேவியின் அன்பைப் பெற்றவரான பல்முடி வேந்தர் தங்களை அவையின் தலைமைப் புலவராக அமர்த்தியிருக்கிறார்,” என்றான்.
புலவரின் மீசையிலும் தாடியிலும் கூழ் படர்ந்தது. புகழ்மொழிகளைக் கேட்டபடியே குடித்தார். கூளியன் பேய்க்கோ இப்போது பசி பிடுங்கியது. கூழின் மணம் திக்குமுக்காடச் செய்தது. உதடுகள் துடித்தன.
ஒரு வீரன் படைத்தலைவனின் அருகில் வந்து மெல்லிய குரலில் செய்தி ஒன்றைப் பகிர்ந்தான்.
படைத்தலைவன், “புலவரீர், நம் வீரர்களின் வாய்க்கால் வெட்டு நிறைவடைந்தது,” என்று தொண்டையைச் செருமிக்கொண்டு சொன்னான். நீர் அருந்திவிட்டு, “இந்த ஓடைக்கு ஒரு நாழிகையில் நீர்மகள் வருவாள். அன்றே ஒப்புக்கொண்டிருந்தால் இந்த நீர் அவர்களுக்கும் கிடைத்திருக்கும்; இத்தனை உயிர்கள் போயிருக்காது. இன்னும் ஒரு திங்கள் இங்கே தங்கினாலும் பாதகமில்லை. நடுச்சேனை வருவதற்குள் போதிய பொருட்களைச் சேமித்துவிடலாம்,” என்றான்.
புலவர், “நன்று! பேராற்றையே வளைத்து மருதமாகவோ பாலையாகவோ மாற்றும் ஆற்றல்கொண்ட வேந்தனைச் சொல்கோர்த்துப் புகழும் இந்நாவைக் காளியல்லவா கொடுத்திருக்கிறாள்,” என்று கூறி புன்னகைத்தார்.
ஒரு பழைய குரல் ‘உன் ஆயுதக் கிடங்கையும் நெற்களஞ்சியத்தையும் அபகரிக்கப்போகிறேன்’ என எங்கிருந்தோ கூளியன் பேயின் எலும்புகளுக்குள் ஒலித்தது.
படைத்தலைவன், “உண்மை, புலவரே. உடல்களை எண்ணி கணக்கெடுத்துக்கொண்டீர் அல்லவா! காளிக்கு பெருமகிழ்ச்சி ஏற்பட்டிருக்கும்,” என்றான்.
புலவர், “ஆம், நா சுழற்றி பேய்கள் தங்கள் பசியைப் பூர்த்தி செய்துகொண்டிருக்கும். காளி கொழுப்பில் குளித்து, குடல்களை மாலையாக அணிந்துகொண்டிருப்பாள்,” என்றார். மீசையில் படர்ந்த கூழைத் துடைத்துக்கொண்டே, “அதோ, வருகிறாள்,” என்று கருமைகொள்ளும் வானத்தைச் சுட்டிக் காட்டினார்.
குட்டிப் பேய்கள் வானை ஏறிட்டுப் பார்த்தன. பசி இப்போது அவற்றின் வயிற்றைக் கூர்மையாகக் குத்தியது. நம் பசியைப் போக்க காளி வருகிறாள்.
ரத்தம் உறைந்த நிலத்தின் கருமையை வானம் ஏற்று மேகமாகத் திரட்டியது. மின்னல் முதல் அசைவைக் கிழித்தது. தோலால் செய்த ஆயிரம் முரசுகளை ஒரே நேரத்தில் அடித்ததுபோல் வானம் முழங்கியது.
சாந்தன் பேய் மரத்தடியைச் சுட்டிக்காட்டியது. கல்லிலிருந்து கரும்புகை எழுந்தது. அப்பாலிருக்கும் கல்லிலும் புகை எழுந்தது. ஊரிலுள்ள எல்லா கற்களிலிருந்தும் புகை எழுந்தது.
புகையே நூலென நுணுகித் தைத்ததுபோல காளி எழுந்து வந்தாள்.
முன்பு தாங்கள் காணாத வளர்ந்த பேய்களும் இப்போது ஓடி வருவதை குட்டிப்பேய்கள் கண்டன; ஓவென்று சத்தமெழுப்பின. வஞ்சிப் பேயும் பூங்கண்ணன் பேயும் சிறிய கற்களை வீசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் விளையாடின. வஞ்சிப் பேய் நெருஞ்சி முட்களை மினுங்கும் மாலையாக அணிந்திருந்தது. தான் கோடு கிழித்து தன் நாட்டில் வைத்த கருங்கல்லிலிருந்தும் புகை எழுவதைப் பூங்கண்ணன் பேய் கண்டது.
காலெலும்பு சற்றே வளைந்த முதிய பேயொன்று சாந்தன் பேயைத் தன் தோளில் வைத்துக்கொண்டு சுற்றிச்சுற்றி வந்தது. கூளியன் பேய் முதிய பேயைப் பார்த்து, “என்ன பாட்டா, காளி சத்தான பலி எடுத்துக்கொண்டாளா? வேண்டுதல் நிறைவேறிவிட்டதா?” என்றது. பாட்டாவின் தோளில் சாந்தனின் ஒரு கால் தளர்ந்து தொங்கியது. அதைப் பார்த்த கூளியன் பேயின் கை மறுபடியும் இறுகியது.
காளியின் கண்கள் சிவந்து அகல விரிந்தன. அவள் வாயைப் பெரிதாகத் திறந்து நாக்கை வெளியே தொங்கவிட்டாள். ஊரைச் சுற்றி வந்தாள். நெருப்புக்கனிகளெனத் தோன்றிய அவள் கண்களில், பழுத்த தீங்கனிக்குரிய நெகிழ்வு மெல்லப் படர்ந்தது. அவை ஈரம்கொண்டு நிரம்பின. வழிந்தன. ஓடின.
காளியைப் பற்றி இதுவரை குழம்பியிருந்த வஞ்சிப் பேய் அசையாமல் நின்றது. முதல் துளிகள் மண்ணில் விழுந்ததும் கண்களை மூடி, எழுந்த புதிய மண் வாசனையை ஆழமாக நுகர்ந்தது.
பேய்கள் காளியின் கண்ணீர் மழையை உற்சாகத்தோடு தங்கள் உடல்களில் வாங்கிக்கொண்டன. நாக்கை நீட்டி அருந்தின. வெளிறி உலர்ந்த அவற்றின் எலும்புகள் ஈரம் கொண்டன. வளர்ந்த பேய்கள் தங்கள் உள்ளங்கைகளில் நீர் பிடித்துத் தங்கள் குழந்தைப் பேய்களுக்கு ஊட்டின.
மழையில் நனைந்துகொண்டே புலவர், காளியின் அருளை மெச்சி உருகினார். களத்தில் சிதறிக்கிடந்த உடல்கள் அவர் மனத்தில் சொற்களாக ஒழுங்குபெறத் தொடங்கின. தான் வடிக்கப்போகும் பரணியை மனத்தில் இருத்திக்கொண்டார்: பேய்கள் மனிதக் காதுகளை வறுவலாக கொறிக்கும். கொழுப்பைச் சோறாக உண்ணும். ரத்தத்தை மண்டையோட்டில் நிரப்பியெடுத்துத் தாகம் தீர்த்துக்கொள்ளும்.
சாந்தன் பேய், “பாட்டா, உப்புத் தண்ணி இனிப்பா இருக்கு,” என்று சொல்லி, “குனிங்க,” என்றது. மழைக்குள் சாந்தனின் மெல்லிய கை நீரேந்தி நீண்டது. உள்ளங்கையில் கல் ஒன்று இருப்பதுபோல் இறுகியிருந்த கூளியனின் விரல்கள் தாமாய் விரிந்தன.
000

விஜய் ரெங்கராஜன்
விஜய் ரெங்கராஜன், இணைய இதழ்களில் சிறுகதைகள் எழுதி வரும் எழுத்தாளர். அமெரிக்கா கலிபோர்னியா வளைகுடா பகுதியில், கணினி பார்வை - செயற்கை நுண்ணறிவு துறையில் ஆராய்ச்சியாளராக பணிபுரிகிறார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
