
குளிக்கக் கிளம்பிக் கொண்டிருந்தான் ஆழ்வார். இரவில் நேடுநேரமும் காலையிலும் அந்த நாவலே அவன் நேரத்தைப் பெரிதும் எடுத்துக் கொண்டிருந்தது. இன்னும் ஒரு சில பக்கங்கள்தான் முடித்து விடலாம் என்று அமர்ந்தவனைக் கடைசிப் பத்துப் பக்கங்கள் உணர்ச்சிகரமாகக் கட்டிப் போட்டு விட்டது. நேரமானதே தெரியவில்லை. இன்னும் ஒரு காப்பி குடிக்கலாம் போலிருந்தது. ஆனால், காபி கேட்டு அவசர அடுப்புச் சோலிக்கிடையில் சலிப்புடன் மனைவி அதைத் தயாரித்துக் கொடுக்கும் அளவுக்கு நேரமில்லை, காபி தாகத்தை அடக்கிக் கொண்டு அரை மனதாகக் குளிக்கக் கிளம்பினான். பாத்ரூம் அருகே போய்விட்டான். அப்போதுதான் மனைவி வந்து, “ என்னங்க யாரோ, உங்க கூட வேலை பார்த்த சாரதியின் மனைவியாம், அவங்களும் உங்க வங்கியில் உங்களைப் போலத் தான், கிளார்க்காமே, அவசரமாகப் பார்க்கணுங்கிறாங்க அஞ்சு நிமிஷம் போதும்ங்கிறாங்க, உட்காருங்க ஒரு காஃபி சாப்பிடுங்க வந்திருவாருன்னேன், இல்லை நான் கிளைக்குப் போக வேண்டும், என்கிறார்கள்,” என்று அழைத்தாள். அவள் அழைத்த விதம், ஆழ்வாருக்கு நேரமாகி விட்டிருந்ததைப் புரிந்திருந்து, வந்தவளுக்கும் ஏதோ அவசியமான அவசரம் இருப்பது போலத் தோன்றவே, துண்டு போர்த்தியிருந்தவன், அதை அருகிருந்த கொடியில் எறிந்து விட்டு சட்டை ஒன்றைப் போட்டுக் கொண்டு ஹாலுக்கு வந்தான்.
சாரதி என்கிற பார்த்தசாரதி ஆழ்வாருடன் ஒரு கிளையில் பணி புரிந்தவர். நன்றாக வேலை பார்ப்பார். ஆழ்வாரும் வேலைகளை நன்றாகப் பார்ப்பான்; ஆனால் தொழிற்சங்கம் தொழிற்சங்கம் என்று சற்று தீவிரமாய் இருப்பவன். அதனால் அவன் பதவி உயர்வை விரும்பவில்லை. நிர்வாகம் தரத் தயாராகவும் இல்லை. சாரதி அப்படியல்ல, நிர்வாகத்துடனும் ஒத்துப் போய், தொழிற்சங்கத்துக்கும் நல்ல பிள்ளையாக நீக்குப் போக்காக நடந்து கொள்வார். சீக்கிரமே பதவி உயர்வு கிடைத்து விட்டது. தகுதியானவர்தான். இரண்டு பேருமே அவர் அதிகாரியாகவும், இவன் கிளார்க்காகவும் மீண்டும் ஒரே கிளையில் பணி புரியும் சூழல் வந்தது. ஆழ்வார் அதைச் சங்கடமாக உணரா விட்டாலும் சாரதிக்கு அது சங்கடமாக இருந்தது. பணியிலும் வயதிலும் ஆழ்வாரே மூத்தவன். அதனாலோ என்னவோ பணியில் கிளை நிர்வாகியாய்ச் சேர்ந்த அன்றே,“நான் சீக்கிரமே வேறு கிளைக்குப் போய் விடுவேன், இது ஒரு தற்காலிக ஏற்பாடுதான் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்” என்றார். “ஏன் நான் என் வேலையைப் பார்க்கிறேன் நீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள், இதிலென்ன சங்கடம், ” என்றான் ஆழ்வார்.
“இல்லை, உங்களுக்கோ மற்ற ஸ்டாஃபுக்கோ என்ன வேணும்ன்னாலும் என்னிடம் தனியாகக் கேளுங்கள், கூட்டம் சேர்த்து கோஷம் போட்ர வேண்டாம்” என்றார். “நீங்க என்ன உயர் நிர்வாகமா நாங்க கூட்டமா போராடறதுக்கு, யாரும் என்னமும் சொல்லி அனுப்பினார்களா,” என்று சற்று கோபமாகவே கேட்டான். அன்றிலிருந்தே கொஞ்சம் மனதுக்குள் என்னவோ ஒரு நெருடல் ஏற்பட்டு விட்டது ஆழ்வாருக்கு. அதனால் அவர் ஏதாவது, அரை வருடக்கணக்கு முழு வருடக் கணக்கு முடிவு என்று பார்ட்டி என்று தந்தால் அதில் கலந்து கொள்ள மாட்டான். மற்றவர்கள் கலந்து கொள்வார்கள். அதற்கெல்லாம் பணத்தைத் தண்ணீராய்ச் செலவு செய்வார் சாரதி. அதனால் மற்றவர்களுக்கு அவரைப் பெரிதும் பிடித்துப் போனது. அதனால் ஆழ்வாருக்கு ஒரு இழப்பும் இல்லை. அவன் உண்டு அவன் வேலை உண்டு என்று பத்து மனிக்குப் போனால் ஐந்து மணிக்குக் கிளம்பி விடுவான்.
அவர் ஆழ்வாருடன் பணி புரியும் போது, அதே நிறுவனத்தில் எழுத்தராகப் பணி புரிந்த அவர் மனைவிக்கு பக்கத்திலுள்ள கிளைக்கு மாறுதல் வாங்கிக் கொண்டு அதே ஊரில் வீடு பார்த்து தங்கியிருந்தார்கள். அவர் மனைவிக்கு இடமாறுதல் வாங்கும் போது அந்தக் கிளைக்கு வேறு சிலரும் இடமாறுதல் கேட்டிருந்தார்கள். அவர்களை ஒதுக்கி விட்டு எப்படியோ நிர்வாகத்திடம் பேசி இடமாறுதல் வாங்கி விட்டார் சாரதி. அவர் மனைவி யூனியனில் உறுப்பினர் இல்லை. ஆனாலும் ஆழ்வாரும் ஒரு அனுதாப அடிப்படையில் அதற்குத் தன் எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை. கணவன் மனைவி இருவரும் அதே வங்கியில் வேலை பார்த்தால், கூடிய மட்டும அவர்களை அருகாமைக் கிளைகளில் பணியமர்த்துவது, அவனுக்கு உடன்பாடான விஷயம்தான். ஆனால் ஆச்சரியமான விதத்தில் இதற்கு மற்ற கிளைத் தோழர்களும் சாரதிக்கு ஆதரவாக இருந்தார்கள். அதுதான் சாரதியின் ராசி. சாரதி சொன்னது போலவே ஒரிரு வருடங்கள் கழிந்ததும் அதை விடப் பெரிய கிளையாக மாற்றல் வாங்கிக் கொண்டு போய் விட்டார். அதுவும் பதவி உயர்வோடு.அவர் மனைவி அதே கிளையில் இருந்தார். அந்த ஊரும் கிளையும் பிடித்துப் போய் விட்டதாலும் குழந்தைகளுக்கு நல்ல பள்ளிக்கூடம் வீட்டுக்கு அருகிலேயே இருந்ததாலும் அவர் அங்கேயே இருந்து விடத் தீர்மானித்ததாக சாரதி சொன்னதாகப் பேசிக் கொண்டார்கள்.
சாரதி மாறுதலாகிப் போயிருந்தது பெரிய கிளை. அலுவலர்கள் நிறைய உண்டு. வரவுசெலவும் அதிகமுள்ள கிளை. அங்கேயும் சக ஊழியர்கள் மத்தியில் நல்ல பெயர் வாங்கி விட்டார் சாரதி. அங்கேயும் கிளை ஊழியர்களுக்கு நிறையச் செலவு செய்வதாகச் செய்திகள் வந்தன. கிளையில் தொழிற்சங்க நடவடிக்கைகள் அவ்வளவு பலமுடன் இல்லை என்றும் செய்திகள் வந்தன. அங்கே இருந்த பெரிய கோயில் ஒன்றின் வரவு செலவுகளும், அந்த ஊரில் பிரபலமான `வாலிப. வயோதிக அன்பர்களுக்கு’ மருத்துவம் செய்யும் பலதலைமுறை கண்ட வைத்திய திலகங்களின் கணக்குகளும் அந்தக் கிளையில்தான் இருந்தன. வைத்திய திலகத்தின் நண்பர் ஒருவர் சினிமா எடுக்கும் முயற்சியில் இருக்கிறார். அதற்கு வங்கி முதலீடு செய்யும் ஏற்பாடுகளைச் சாரதி கவனிக்கிறார் என்றெல்லாமும் செய்திகள் வந்தன. வைத்திய சாலை கணக்கிற்கே தினந்தோறும் பணம் வந்து குவியும் என்று கேள்விப்பட்டிருக்கிறான் ஆழ்வார். பிறகு ஏன் அவரே நண்பருக்குக் கடன் தரலாமே என்ற கேள்வியும் எழாமல் இல்லை. அதன் நிறுவனர் ஊரில் முக்கியப் பிரமுகர். `மெஸானிக் லாட்ஜில்’ எல்லாம் உறுப்பினர், அவருடன் சாரதி நல்ல உறவில் இருப்பதாகக் கேள்விப்பட்டான்.
அவனே அந்த ஊர் மெஸானிக் லாட்ஜில் உறுப்பினன் ஆகி விட்டான் என்றார்கள். அது பிரிட்டிஷ் காலத்து காஸ்மோபோலிட்டன் கலாச்சாரக் கிளப். அதில் உறுப்பினராக லட்சக் கணக்கில் சந்தா கட்ட வேண்டும். உறுப்பினர் ஆவதே எளிதல்ல. புதிதாகச் சேர விரும்புபவரை ஏற்கெனவே உறுப்பினராக இருப்பவர் ஒருவர் முன் மொழிய வேண்டும் அதை வழி மொழிய மற்ற எல்லா உறுப்பினர்களுக்கும் கறுப்பு பந்து ஒன்றும் வெள்ளைப்பந்து ஒன்றும் தருவார்கள். அதை வாக்களிப்பது போல ரகசியமான இடத்தில் வைத்திருக்கும் பெட்டியில் போட வேண்டும். எல்லாம் வெள்ளைப் பந்துகளாக இருந்தால் புதிதாக வருபவரைச் சேர்த்துக் கொள்வார்கள். ஒரு கறுப்புப் பந்து இருந்தாலும் அவர் தேர்வு செய்யப்பட மாட்டார். லாட்ஜ் கூட்டங்களில் கலந்து கொள்ள கோட் சூட் அணிய வேண்டும் ஒவ்வொரு கூட்டத்திற்கும் தனியே ட்ரெஸ் கோட் உண்டு. பெரிய பெரிய நீதிபதிகள், அரசு உயர் அதிகாரிகள் கூட பிரிட்டிஷ் காலத்திலிருந்தே அதில் உறுப்பினர்களாக இருப்பார்கள். ஆனால் சாரதி அதிலெல்லாம் கில்லாடி . பேசிப் பேசியே ஆளைக் கவிழ்த்தி விடுவார். அதனால் அவர் லாட்ஜிலும் உறுப்பினராகி விட்டார் என்றார்கள்.
வங்கியின் முழு வருடக் கணக்கு முடிந்த அன்று பெரிய விருந்துக்கு சாரதி எப்போதுமே ஏற்பாடு செய்வார். இப்போது நட்சத்திர ஓட்டலில் விருந்து நடக்கிறது என்றும், கிளையில் பலரையும் சினிமா படப்பிடிப்பிற்குச் சென்னைக்கு அழைத்துச் செல்கிறார், அதுக்கெல்லாம் யோகம் வேணும் என்று இங்கு கிளைத்தோழர்கள் பேசிச் சலித்துக் கொண்டார்கள். அந்தக் கிளையின் செயல்பாடுகளை தலைமை நிர்வாகத்தினர் பாராட்டி ஏனைய கிளை நிர்வாகிகளிடமெல்லாம் “பாருங்கள் சாரதி என்னமாய் நிர்ணயிக்கப் பட்ட இலக்குகளை யெல்லாம் தாண்டி ரிசல்ட் காண்பிக்கிறார், என்று சாரதியை உதாரணமாகச் சொல்லும் அளவுக்கு சாரதியின் செயல்பாடுகள் இருந்தன. எப்போதும் நல்ல செய்திகளாக வந்து கொண்டிருந்தால் அதற்குப் பெயர் வாழ்க்கையா? ஒரு நாள் மோசமான செய்தியும் வந்தது. சாரதியின் கிளையில் பெரிய அளவில் பணம் கையாடல் செய்யப்பட்டு இன்ஸ்பெக்ஷனில் கண்டுபிடித்து சாரதி போலீஸ் காவலில் இருக்கிறார் என்று செய்தி வந்தது.
அவரைப் போல் உண்டா என்று பேசியவர்கள் எல்லாம், `அவரா இப்படி? என்ன நடந்தது, என்ன செய்தார். அவருக்கு ஒரு கெட்ட பழக்கமும் கிடையாதே, உடன் வேலை பார்ப்பவர்களுக்கு நன்றாகச் செலவழிப்பார் அவ்வளவுதான்,’ என்றெல்லாம் பேச ஆரம்பித்தார்கள். பலரும் ஆழ்வாரிடம் வந்து துக்கம் கேட்கிற பாணியில் விசாரித்தார்கள். “உங்களைப் போலத்தான் நானும் எனக்கும் விஷயங்கள் நீங்கள் பேசித்தான் தெரியும்,” என்றான். சிலர் சினிமா நடிகையிடம் தொடர்பு உண்டு என்றார்கள். சிலர் அவர் கிளையின் கணக்கு வழக்குகளையே இரண்டு விதமாக வைத்திருக்கிறார், உண்மையில் கையாடப்பட்ட தொகையையே கண்டுபிடிக்க முடியவில்லை என்றார்கள். வேறு யாராவது உடந்தையா என்று ஆதாரங்களைத் தேடுகிறார்கள்.ஆனால் அவர் எல்லாவற்றிற்கும் நானே பொறுப்பு, வேறு யாரும் காரணமில்லை என்கிறார். அதைத் தவிர மூச்சு விட மறுக்கிறார் என்றார்கள். ஆயிற்று பல மாதங்கள் அது நடந்து. அந்தக் கிளையின் பலரையும் இடமாறுதல் செய்து முற்றிலும் அவருக்குத் தொடர்பில்லாதவர்களைக் கிளையில் அமர்த்தினார்கள். ஆழ்வாரைக் கூட அங்கே மாற்றலாம் என்றார்கள். அப்புறம் சாரதிக்கும் இவருக்கும் பல காலமாகப் பழக்கம் அதனால் வேண்டாம் என்று விட்டு விட்டார்கள் என்று தகவல் கசிந்தது. இன்று என்னடாவென்றால் அவர் மனைவி வீட்டுக்கு வந்து நிற்கிறார்.
ஆழ்வாரைப் பார்த்ததும் சாரதியின் மனைவிக்கு அழுகை பொத்துக் கொண்டு வந்தது. அதற்கே கன்னங்களும் மூக்கும் சிவந்து போயின. ஆள் நல்ல நிறம், கொஞ்சம் ஒல்லியான தேகம். ஒரு முறை, ஏதோ ஒரு விழாவில் அவரைப் பார்த்திருக்கிறான். இப்போது இன்னும் ஒல்லியாகத் தெரிந்தார். கலகலப்பாய் பேசிக் கொண்டிருந்தார். அழாதீங்க என்று சொல்லக் கூட வார்த்தை வரவில்லை. நல்ல வேளையாக காஃபி எடுத்துக் கொண்டுவந்த ஆழ்வாரின் மனைவி “மேடம் அழாதீங்க, இந்தாங்க காஃபி சாப்பிடுங்க, நான் சார் ஆபீஸுக்கு ஃபோன் பண்ணி அரை மணிநேரம் பெர்மிஷன் சொல்லி விட்டேன். கொஞ்சம் சமாதானப்படுத்திக் கொண்டு சொல்ல வந்ததைச் சொல்லுங்கள்” என்றாள். எப்போதுமே ஆழ்வாரின் மனைவி கொஞ்சம் கெட்டிக்காரி. இல்லையென்றால் இப்படி ஊருக்கு உழைப்பவனிடம் குப்பை கொட்ட முடியுமா. ஆழ்வார் அவளிடம் சாரதியின் கதையைச் சொல்லி இருக்கிறான்.
சற்று நேரம் யாரும் பேசாமல் இருந்தார்கள். திடீரென்று சாரதியின் மனைவி,“பெயிலே கொடுக்க மாட்டேன் என்கிறார்கள். அவருடைய அப்பா முயற்சி செய்கிறார். என்னிடமும் போலீஸில் இருந்து வந்து விசாரித்தார்கள். வீட்டைச் சோதனை போடுகிறேன் என்று தலை குப்புறக் கவிழ்த்தி விட்டார்கள். குழந்தைகளிடமெல்லாம் தனித்தனியாய் விசாரிக்கிறார்கள். பெரியவள் இப்போதுதான் சடங்கானாள் அவளைத் தனியாக விசாரிக்கிறார்கள். அவள் ரொம்ப பயந்து போயிருக்கிறாள். ஸ்கூலுக்கே போக மறுக்கிறாள். எனக்கும் அலுவலகத்தில் யாருடனும் பேசக் கஷ்டமாயிருக்கிறது. செய்தி வந்த போது நான் கேஷ் கவுண்டரில் இருந்தேன். சாயங்காலமே சாவியை ஒப்படைக்கச் சொல்லி விட்டார்கள், என் வங்கிக் கணக்கையெல்லாம் குடைந்து எடுத்த பின் அதை நிறுத்தி வைத்திருந்ததைச் சரி செய்தார்கள், நான்கைந்து நாள் பணமில்லாமல் கஷ்டப் பட்டேன். எப்போதுமே அவர் செலவுக்குத் தர மாட்டார், என்னிடம் வேண்டுமானால் வாங்குவார். “ நிறுத்தாமல் பேசினார்.
“கேஷ் பார்க்காதது நல்லதுதான், மனது கஷ்டமாக இருக்கும் போது அதைப் பார்க்காதது நல்லதுதான். ஆனால் நிர்வாகமே அப்படிச் செய்யக்கூடாது, நம்முடைய தார்மீக உரிமை என்னாவது,”என்ற ஆழ்வார், “சரி, நீங்கள் போய் அவரைப் பார்த்தீர்களா, பார்க்க அனுமதித்தார்களா.”என்றான். “இல்லை சார், நான் எந்த முகத்தை வைத்துக் கொண்டு அவரைப் போய்ப் பார்ப்பேன். எனக்குப் போலீஸ் என்றாலே பயமாயிருக்கிறது. சார் எனக்கு ஒரு உதவி செய்யுங்கள், எனக்கு இந்தக் கிளையிலிருந்து, பக்கத்து மாநிலக் கிளைக்கு மாறுதல் கிடைக்குமா என்று கேட்கத்தான் வந்தேன். என் மாமனாருக்கு நிர்வாகத்தில் சிலரைத் தெரியும் ஆனால் நான் போய் எப்படிக் கேட்பேன், நீ இங்கேயே இரு இல்லையென்றால் வேலையை விட்டு விடு என்கிறார். இரண்டு பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வேன். வெளி மாநிலமானால், மொழி தெரியாமல் யார் என்ன பேசினால் என்ன என்று கேளாதது போல இருக்கலாம். இங்கே என்னைக் கண்டால், காது கேளாமல் நிறையப் பேசுகிறார்கள். யாரோ நடிகையையும் அவரையும் இணைத்துப் பேசுவதாக ஒரு லேடி ஸ்டாஃப் சொன்னார். காது கேட்க ஜாடையாகப் பேசுகிறார்கள். ஒரு நல்ல சேலை கட்ட முடியவில்லை. என்னமாவது சொல்லி விடுவார்களோ என்று பயமாயிருக்கிறது. பழைய காட்டன் சேலைகளை உடுத்திக் கொண்டு போகிறேன்,” விசும்பலுக்கிடையே சொன்னார்.
அவர் பேசப் பேச, ஆணாகப்பட்டவன் ஒரு பெண்ணுக்கு எவ்வளவு துயரங்களைத் தருகிறோம் என்று நினைத்தான் ஆழ்வார். அவனது மனைவியும் அருகே நின்று கேட்டுக் கொண்டுதான் இருந்தார். அதுவே அவனுக்குப் பெரிய குற்ற உணர்ச்சியாக இருந்தது. சாரதியின் மனைவி சட்டென்று, “யூனியனில் வேண்டுமானாலும் சேர்கிறேன், எப்படியாவது ஒரு டிரான்ஸ்ஃபர் கேரளா பக்கமாக வாங்கித்தாருங்கள்,” என்றார். கடைசியாகச் சொன்னதைத் தலையைக் குனிந்து கொண்டு சொன்னார். ஆழ்வாரும், அவசர அவசரமாக, “அதெல்லாம் இப்போது பிரச்னையில்லை, மெம்பரோ இல்லையோ யாரானாலும் முடிந்தால் உதவுவதுதான் தொழிற்சங்கக் கடமை. ஆனால் பொதுவாக யூனியன், டிரான்ஸ்ஃபர் பாலிசியில் தலையிடுவதில்லை. நீங்கள் டிரான்ஸ்பருக்கு பதிந்து வைத்து அந்த சீனியாரிட்டி பாதித்தால் அது தவறென்று சுட்டிக் காட்டுவோம்” என்று நிறுத்திக் கொண்டான். அதை உடைத்துத்தான் நீங்கள் இங்கே வந்தீர்கள் என்று சொல்லிக் காட்டுவது போல அமைந்து விடும் என்று மேற்கொண்டு அதைப் பேசுவதைப் பற்றி யோசித்தான்.
“சரி நான் எனக்குத் தெரிந்தவர்களிடம் சொல்லுகிறேன். நீங்கள் ஒரு மனு ஒன்று எழுதி மேனேஜர் மூலம் அனுப்புங்கள், என்ன நடக்கிறதென்று பார்க்கலாம். எனக்கென்னவோ அதையும் உங்கள் கணவருக்கெதிரான மூவ் ஆக அதைப் பார்த்து விடக் கூடாதே என்றிருக்கிறது. ஆனால் வேறு மாநிலம் போனால் திரும்ப வர மிகவும் சிரமம் “ என்றான். “வரவே வேண்டாம், எங்காவது கண் காணாமல் போய் விடுகிறோம், “ என்று அழ ஆரம்பித்தார். ஆழ்வாருக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. அவன் மனைவிதான், “வருத்தப் படாதீங்க, அவர் கண்டிப்பாக உதவுவார், நான் பார்த்துக் கொள்கிறேன், ஏனுங்க, யாரோ உங்க ஃப்ரெண்டுதான், சமீபமா ஜி.எம் ஆகிட்டாருன்னு சொன்னீங்களே அவர் கிட்ட எல்லாம் சொல்லலாம்ல்லா,” என்றாள். ஆழ்வார் மௌனமாகத் தலையாட்டினான். “நீங்க கவலையைத் தள்ளி வச்சிட்டு புள்ளைகளைப் பாருங்க, நடக்கிறது நடக்கட்டும், எனக்கும் ரெண்டு பொட்டைப் பிள்ளைக இருக்கு, இவங்க கண்டிப்பா உதவுவாங்க” என்றாள். சாரதியின் மனைவி இரண்டு கைகளாலும் அவளை வணங்கி விட்டு எதுவும் சொல்லாமல் தலையை மட்டும் ஆட்டி விடை பெற்றார். அவர் போனதும், “ எடாத எடுப்பு எடுத்தா, படாத பாடு படணும்கிறது சரியாத்தானே இருக்கு. ஆனா என்ன, படறதெல்லாம் பொம்பளைங்களாகவே இருக்கு, யார் வாங்கி வந்த வரமோ, பெண்களுக்குன்னு இந்த சாபங்கள்,” என்றாள். “சரி நான் குளிக்கப் போகிறேன்,” என்று கிளம்பினான். “நீங்க குளிக்கப் போனாத்தான் அரை மணிநேரம் ஆகுமே, இருங்க ஒரு காப்பி குடிச்சிட்டுப் போங்க” என்று அடுக்களைக்குள் நுழைந்தாள்.

கலாப்ரியா
எழுபதுகளில் எழுதத் துவங்கிய நவீன தமிழ் கவிஞர். நேரடியாகச் சித்திரங்களை அடுக்கியபடியே போகும் பாணியை கொண்டது இவருடைய கவிதைகள். கவிதை, கட்டுரை, தன்வரலாறு, சிறுகதை, நாவல் என நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.

அதிக பணம் புழங்குமிடத்தில், வரக்கூடதுசபலமும், புகழ்போதையும்.இல்லையென்றால் சகலமும்
சர்வநாசம் தான்