
ஜான் ஆம்ஸ்ட்ராங் எழுதிய ‘நாகரிகத்தைத் தேடி: பொலிவிழந்த ஒரு கருத்தாக்கத்தின் மீளுருவாக்கம்’ (In Search of Civilization) நூலின் இரண்டாம் அத்தியாயம் இங்கு தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.
அந்தக் கற்பனையான விவாத நிகழ்ச்சியில் விவரிக்கப்பட்ட உரையாடல் உண்மையில் நடந்தேற பெரிய சாத்தியக்கூறுகள் இல்லை. அவர்கள் ஒருவரையொருவர் குறுக்கிட்டுப் பேசவில்லை என்பது அதற்குக் காரணமல்ல; மாறாக, இன்றைய அறிவுசார் விவாதச் சூழலில் ‘நாகரீகம்’ என்பது ஒரு கவர்ச்சிகரமான பேசுபொருளாகக் கருதப்படுவதில்லை என்பதுதான் உண்மை.
சில ஆண்டுகளுக்கு முன்பு, லண்டனில் ஒரு மாநாட்டில் கலந்துகொண்டேன். கலை மற்றும் கலை வரலாற்றுக் கல்வியை ஆதரிக்கும், அளப்பரிய நிதிப் பலம் கொண்ட கலாச்சார அறக்கட்டளையான ‘கெட்டி நிறுவனம்’ (Getty Institute) அதை ஏற்பாடு செய்திருந்தது. அங்கே ‘நாகரீகம்’ என்ற தலைப்பிற்காகவே பிரத்யேகமாக ஒரு அமர்வு ஒதுக்கப்பட்டிருந்தது. உலகிலேயே மிகச்சிறந்த நவ செவ்வியல் (neoclassical) கட்டிடங்களில் ஒன்றான ‘சாமர்செட் ஹவுஸ்’-ல் (Somerset House) அந்த மாநாடு நடைபெற்றது. (அங்கு உள்ள படிக்கட்டுகள் அதிஅற்புதமானவை!)
அன்று காலை, மூன்று முன்னணி கல்வித்துறை வல்லுநர்கள் தங்களின் ஆய்வுக் கட்டுரைகளை முன்வைத்தனர். ‘நாகரிகம்’ என்பதை இனியும் ஒரு குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்ததொரு கருத்தாக்கமாகக் கருத முடியாது என்பதுதான் அவற்றின் முதன்மைக் கருப்பொருளாக இருந்தது. இச்சொல்லிற்கு வழக்கிலுள்ள அர்த்தங்களை அவர்கள் முழுமையாக அறிந்தே இருந்தனர். ஆனால் அந்தப் பேச்சாளர்களின் பார்வையில், அவற்றுள் எதுவுமே பெரிய அளவில் அறிவுசார் சாத்தியக்கூறுகளைக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் ஒன்றும் தீவிரமான அல்லது புத்தம் புதியதொரு வாதத்தை முன்வைக்கவில்லை; மாறாக, நீண்டகாலமாக கல்விப்புல நடப்பிலுள்ள ஒரு மரபுவழிச் சிந்தனையையே மீண்டும் வழிமொழிந்தனர்.
தத்துவம் மற்றும் கலை வரலாற்றில் எனது பத்து ஆண்டுகால -1986 முதல் 1996 வரையிலான- அறிவுசார் பயிற்சிக் காலத்தில், ‘நாகரிகம்’ என்ற சொல் எந்தவொரு தருணத்திலும் குறிப்பிடப்பட்டதாக நினைவுகூர முடியவில்லை. 2001-ல் நடந்த செப்டம்பர் 11 நிகழ்வுகள், ‘நாகரிகங்களின் மோதல்’ என்ற கருத்தாக்கத்தின் வழியாக இச்சொல்லுக்கு ஒரு புதிய உயிர் கொடுத்திருந்தது என்பது உண்மையே. ஆனால், அது சர்வதேச அரசியலுக்குள் நடக்கும் ஒரு விவாதமாகவே பார்க்கப்பட்டதே ஒழிய, கலை அல்லது தத்துவ ஆய்விற்கோ அல்லது அன்றாட வாழ்வை வழிநடத்துவதற்கோ உண்மையாகவே எவ்வித தொடர்பும் இல்லாத ஒன்றாகவே கருதப்பட்டது.
இந்தப் பிரச்சினையின் வேர், ‘நாகரிகம்’ என்கிற கருத்தாக்கம் கொண்டிருந்த மோசமான சகவாசம்தான் என்பதாகவே தெரிகிறது. காலனித்துவ விரிவாக்கத்தை நியாயப்படுத்துவதற்காக இக்கருத்தாக்கம் அதி ஆர்வத்தோடு துணைக்கு அழைக்கப்பட்டது. இந்த அணுகுமுறையின் உணர்ச்சியூட்டும் ஒரு உதாரணத்தை எல்கரின் (Elgar) மிகவும் புகழ்பெற்ற இசைத்தொகுப்பான ‘Pomp and Circumstance Marches’ (ஆடம்பரமான அரசாங்க அணிவகுப்பிற்கான இசை) -இல் வரும் பாடலாக்கப்பட்ட இசையான ‘Land of Hope and Glory’ (நம்பிக்கையும் பெருமிதமும் கொண்ட நிலம்) -இல் கச்சிதமாக ஒன்றிப்போன வீரியமிக்க வரிகளில் காணலாம். இப்பாடல், 1902-ஆம் ஆண்டில் ஏழாம் எட்வர்ட் (Edward VII) மன்னரின் முடிசூட்டு விழாக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக முதன்முதலில் நிகழ்த்தப்பட்டது:
உனது எல்லைகள் இன்னும் இன்னும் பரந்து விரிந்து கொண்டே செல்லட்டும்,
உன்னை வல்லமைமிக்கவளாய் மாற்றிய இறைவன், [இங்கே இசைக்குழுவின் நாதம் பேரெழுச்சி கொள்கிறது], இன்னும் உன்னை பேராற்றல் மிக்கவளாய் ஆக்கட்டும்!
பாடலின் வரிகளையும் இசையையும் ஒன்றிணைத்துப் பார்க்கும்போது, அது பேரரசின் பெருமிதத்திலும் ஆதிக்கத்திலும் முழுமையாக ஊறிப்போனதொரு இசைக்கோர்வையாகவே காட்சியளிக்கிறது; ஆனால், அது முழுக்க முழுக்க ஆதிக்க ஆட்சியாளர்களின் கோணத்தையே பிரதிபலிக்கிறது.
தொழிற்துறையில் முன்னேறிய நாடுகள், வளர்ச்சி குன்றிய சமூகங்களை தங்களது ஆட்சிக்குள் அரவணைத்துக்கொண்டு அறப்பணி புரிகிறார்கள் என்னும் பார்வையை, அதீத படை வல்லமையின் மூலம் தங்களின் செல்வம் மற்றும் அதிகாரத்தைப் பெருக்குவதற்கான பேராசையை வெளிப்படையாக்காமல் மறைத்து உருவாக்குவதற்கு, ‘நாகரிகம்’ என்ற சொல்லாடல் பயன்பட்டது. நாகரிகம் தன்னுள் ஒரு தார்மீகக் குறியீட்டை சுமந்தபடி உள்ளது: நாகரிகமடைந்த ஒரு சமூகம், நாகரிகமடையாத சமூகத்தை விடச் சிறந்தது; நாகரிக வாழ்க்கை என்பது முழுமையான மனிதத்தன்மை கொண்டது: உன்னதமானது மற்றும் அறிவார்ந்தது. ஆனால் அதே நேரத்தில், அது மேம்பட்ட ஒரு பொருள்சார் வளர்ச்சியின் உட்குறிப்பையும் தன்னுள் கொண்டுள்ளது: அதிக தொழிற்சாலைகள், அதிக துப்பாக்கிகள். ஒட்டுமொத்த நாடுகளும் மற்ற நிலங்களின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு தங்களுக்கு ஒரு தார்மீக உரிமை இருப்பதாகத் தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக்கொள்ள இது உதவியது; பொருள்சார் மேலாதிக்கம் தார்மீக நியாயமாக திரிக்கப்பட்டது.
இன்னும் உன்னை பேராற்றல் மிக்கவளாய் ஆக்கட்டும்’ என்ற அச்சித்தரிப்பு, நாகரிகத்தை ஒரு வரலாற்று சிக்கலாகவும் உளவியல் ரீதியான பிரச்சினையாகவும் முன்மொழிகிறது. இது ஆணவமும் சுயபெருமிதமும் நிறைந்த ஒரு மனநிலை. மாநாட்டின் முடிவு மிகவும் தட்டையானதாகத் தோன்றியது: நாகரிகம் என்ற கருத்தாக்கத்தைக் கைவிட வேண்டும். இந்த மாநாடு, போற்றுதலுக்கு உரியதாய் அமையாத நாகரிகம் என்ற பொற்காலம் கடந்த கருத்தாக்கத்திற்கு நிகழ்ந்த ஒரு வகையான இறுதிச்சடங்கு போலவே தென்பட்டது.
அமர்வுக்குப் பிறகு, அருகில் உள்ள தேம்ஸ் நதிக்கரையில் நடை சென்றேன். நான் சற்று மனச்சோர்வடைந்திருந்தேன். நாகரிகம் என்ற கருத்து எத்தகைய துரதிர்ஷ்டவசமான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டது என்பது குறித்த அந்தப் பகுப்பாய்வை என்னால் மறுக்க முடியவில்லை. ஆனால், அந்த வார்த்தைக்குள் இன்றைக்கும் பொருத்தமான, இன்னும் நுட்பமான, குறிப்பிடத்தக்க அம்சம் தனிப்பொலிவோடிருப்பதை என்னால் உணரமுடிந்தது. எந்தவொரு சொற்பதமும், அதன் தோற்றத்தில் எவ்வளவு நல்நோக்கம் கொண்டதாக இருந்தாலும், அவதூறாக திசைதிருப்பப்படலாம். ஆனால், அதுவே இப்பணியை இன்னும் அவசரமானதாக ஆக்குகிறது: நாகரிகம் என்ற கருத்தாக்கத்தில் பொதிந்திருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த உன்னதமான அர்த்தச்செறிவை, அச்சொல்லின்மீது படிந்திருக்கும் உண்மையற்ற, தவறாக வழிநடத்தும் பயன்பாடுகளிலிருந்து பிரித்தெடுக்கும் பணி.
ஒரு இலக்கின்றி உலாவிக்கொண்டிருந்தபோது, ரோமானியக் கவிஞர் ஓவட்டின் (Ovid) ‘Metamorphoses’ கவிதைப்புத்தகத்தில் (உரு-மாற்றங்களின் புத்தகம்’ என்றே நாம் இதைக்குறிப்பிடலாம்) வரும் ஒரு உட்கதை என் நினைவிற்கு வந்தது. அது என் அகக் கவலைக்கு ஒரு பொருத்தமான உவமையாக அமையும் என்று உணர்ந்தேன்.
அண்மையில் திருமணமான ஓர் இளம் தம்பதியர், ஒருவரையொருவர் ஆழமாகக் காதலித்தனர். அந்த கணவன் இப்படி கூறுகிறான்: ‘நாங்கள் இருவருமே காதலில் மூழ்கியிருந்தோம், ஒருவர் மீது ஒருவர் சமமாக அக்கறை காட்டினோம்.’ அந்த அன்பான மனைவி தன் கணவனுக்கு ஒரு புதிய ஈட்டியைப் பரிசாகத் தருகிறாள். ‘ஆதவனின் முதல் கதிர் மலைமுகடுகளை உரசிய’ விடியற்பொழுதில், கணவன் வேட்டைக்குப் புறப்பட்டான். அவனது மனைவி அவனுக்குத் தெரியாமல் பின்தொடர்ந்து சென்று புதர்களுக்கு இடையே மறைந்து கொள்கிறாள். அந்த இடத்திற்கு அருகாமையிலேயே இருக்கும் கணவன், எதர்ச்சியாக சருகு ஒன்று நொறுங்கும் ஓசை கேட்டு, அங்கே ஒரு காட்டுவிலங்கு இருப்பதாகக் கற்பனை செய்துகொள்கிறான். அவன் தன் புதிய ஈட்டியை வீசுகிறான். அது நேராக அவனது மனைவியைத் தாக்குகிறது. இப்படியாக, தவறுதலாகப் புரிந்துகொண்டதால், அவளது மரணத்திற்குக் காரணமாய் அமைகிறான்.
முழு கதையாக விவரிக்கும் போது இது ஒரு சிக்கலான, விசித்திரமான கதைதான். ஆனால் என் மனதில் தங்கிய படிமம் மிகவும் எளிமையானது: தான் நேசிக்கும் ஒன்றையே, அதைச் சரியாக அடையாளம் காணத் தவறியதன் விளைவாக, ஒருவர் மனதறியாமல் சிதைத்துவிடும் ஒரு துயரச் சித்திரம்தான் அது. அந்தப் பிரம்மாண்டமான விரிவுரை அறையில், நான் எண்ணற்ற ஈட்டிகள் எறியப்படுவதை நேரில் கண்டேன். ஆனால், உண்மையில் அங்கே வீழ்த்தப்பட்டது எது? ‘நாகரிகம்’ என்ற கருத்தாக்கமே ஒரு அச்சுறுத்தல் என எண்ணி, அந்தப் பேச்சாளர்கள் தங்களின் குத்தீட்டிகளை ஏவினார்களோ என்பதுதான் என் அச்சமாக இருந்தது. ஆனால், என்னுடைய ஐயமெல்லாம் அந்தப் புதர்களுக்குள் விலைமதிப்பற்ற ஏதோ ஒன்று மறைந்திருக்கிறது என்பதே. அதை இன்னும் தெளிவாக உற்றுநோக்கினால், நாகரிகம் என்ற அந்த கருத்தாக்கம் நமக்கு மிகவும் தேவையான, நாம் ஆழமாக நேசிக்கக்கூடிய ஒன்றாகக்கூட மாறக்கூடும்.

அந்த மாநாடு அதி முக்கியத்துவம் வாய்ந்த ஒரு உண்மையை வெளிக்கொணர்ந்தது. நாகரிகத்தின் சுடரைக் காப்பவர்கள் என்றும் அதை வளர்த்தெடுப்பதற்கு மிக உகந்த நிலையில் இருப்பவர்கள் என்றும் நாம் இயல்பாகவே எவர்களைக் கருதியிருப்போமோ, அவர்களில் சிலரே இப்பணியைப் புறக்கணித்தனர். எதற்கும் எச்சரிக்கை உணர்வோடு இருக்கவும், எதிர்மறைத் தொனியுடன் அணுகவுமே அவர்கள் தங்களைத் தாங்களே பழக்கப்படுத்தியிருந்தனர். நாகரிகம் என்பது ஒரு சமூக மற்றும் அரசியல் சார்ந்த கருத்தாக்கம் என்றபோதிலும், அதன் மைய வாழ்விடம் கலைகளிலும் மானுடவியலிலும்தான் குடிகொண்டிருக்கிறது. இவைதான் நான் நம்புகிற நாகரிகத்தின் மிக ஆழமான அஸ்திவாரங்கள். இந்த அஸ்திவாரங்களின் மேல் எழுப்பப்படும் கட்டமைப்பு சாத்தியமுள்ள அனைத்து திசைகளிலும் பரந்து விரிகின்றபோதிலும். அந்த மாநாட்டில் நான் கண்டுணர்ந்தது, வழக்கம்போல மைய நோக்கத்திலிருந்து சற்றே விலகிப்போன மற்றுமொரு கல்வித்துறை சார்ந்த விவாதம் மட்டுமல்ல. அது நாகரிகத்தின் அஸ்திவாரங்கள் இருக்கும் நிலை குறித்த ஒரு துளிப் பார்வை; மேலும் அத்தோற்றம் இன்னும் கவலையளிப்பதாகவே இருந்தது.
நாகரிகத்தின் ஆற்றலைத் தாழ்திறக்க -அது என்னவாக இருக்கிறதோ அவ்வாறே அதைக் கண்டுணர- நாம் ஒரு தத்துவார்த்த விவாதத்தைத் தொடங்க வேண்டும். நம்முடைய சமூகத்தைப் பற்றியும் முந்தைய சமூகங்களைப் பற்றியுமான தகவல்களோ அல்லது தரவுகளோ நம்மிடம் இருக்கின்றனவா இல்லையா என்பது பிரச்சினையல்ல. நாகரிகங்கள் என்று இன்றும் அன்றும் அழைக்கப்படும் சமூகங்களைப் பற்றி நாம் போதுமான அளவு அறிந்துகொள்ளவில்லை என்பதும் சிக்கலல்ல. சொல்லப்போனால், மைய விவாதம் வேறொரு புள்ளியிலிருந்துதான் தொடங்க வேண்டும்: நாகரிகம் என்பதன் மூலம் நாம் என்ன பொருள்கொள்கிறோம்? நாகரிகம் குறித்த நமது தற்போதைய சிந்தனைப்போக்கு என்ன? போன்ற கேள்விகளைச் சுற்றியே அது இருக்க வேண்டும். இன்னும் லட்சியத்துடிப்போடு சொல்வதானால், ‘நாகரிகம் குறித்த நமது சிந்தனைப்போக்கு எப்படி இருக்க வேண்டும்?’ என்ற கேள்வியின் மீதே கவனம் செலுத்த வேண்டும். நாம் ஏற்கனவே இருக்கும் சிந்தனை முறைகளை ஏற்கும் வெறும் செயலற்ற நுகர்வோரல்ல. தத்துவம் நமக்கு இன்றியமையா சிந்தனைகளைக் கண்டறிந்து உருப்பெறச்செய்யும் ஒரு மீப்பெரும் செயல்திட்டம்.
என்னைப்பொறுத்தவரை, தத்துவம் என்பது அடிமனதில் ஒரு அந்தரங்கமான செயல்திட்டம். கட்டுப்படுத்தப்பட்டதாகவும் ஒடுக்கப்பட்டதாகவும் உணரும்போதுதான் என்னுள் சுதந்திரத்தை இன்னும் புரிந்துகொள்வதற்கான விழைவும் துடிப்பும் எழுகிறது. மற்றவர்கள் நான் வெறுக்கும் ஒரு விஷயத்தைப் புகழும்போது, நான் கலையின் மதிப்பை அர்த்தப்படுத்திக்கொள்ள விரும்புகிறேன் அல்லது ஒரு படைப்பை நான் ஆழ்ந்து நேசிக்கும்போதும் அதற்கான காரணத்தைக் கூற முடியாமல் தவிக்கும்போதும். மற்றும் அதன் விளைவாக, என்னுள் ஒரு தீரா ஆர்வம் துளிர்த்தெழுகிறது. உண்மையில் விருப்பு வெறுப்புகளின் இயல்புத்தன்மை என்னவாக இருக்கக்கூடும்!
‘நாகரிகம் என்றால் என்ன?’ என்ற பிரிட்ஜெட்டின் எளிய கேள்வி என்னை வலிமையாகத் தாக்கியதன் காரணம் யாதெனில், அது என்னுள் ஆழமாகப் பதிந்திருந்த நினைவுகள், அச்சங்கள் மற்றும் நம்பிக்கைகளுடன் பின்னிப்பிணைந்திருந்தது. என்னைப் பொறுத்தவரை, எல்லா சூழலிலும் ‘நாகரிகம்’ என்பது நாம் பெரிதும் ஏங்கிய ஒன்றின் மறுபெயராகவே இருந்துவருகிறது: நாம் தஞ்சம் கொள்ளத்துடிக்கும் மகிழ்ச்சி நிறைந்த ஒரு இடம். என் அனுபவத்தில் ஒருபோதும் அது ஒடுக்குமுறையுடனோ அல்லது சலிப்புடனோ தொடர்புடையதாக இருந்ததில்லை. அந்த மாநாட்டின் பேச்சாளர்களின் வாழ்க்கையில் அவ்வாறு இருந்திருக்கலாம் என்று அனுமானிக்கிறேன். நாகரிகத்தின் பெயரால் எவரும் என்னை ஒருபோதும் அலைக்கழித்ததோ அல்லது தொந்தரவு செய்ததோ இல்லை.
நம் சிந்தனைப்போக்கைப் பொறுத்தவரை ஒருவேளை நாம் தப்பிக்க முடியாதபடி சிறைப்பட்டிருக்கிறோம் என்று தோன்றுகிறது. அதாவது சிந்தனைகள் புத்தம் புதியதாகவும் அனுபவங்கள் அப்பட்டமாகவும் இருக்கும் நம் பால்ய கால வாழ்க்கையின் எல்லைவரம்பில் பிடிபட்டிருக்கிறோம். என்னைத் திகிலடையச்செய்வது முரட்டுத்தனமான அச்சுறுத்தல்கள்தான் (Bullying); அதற்கு மிக நெருக்கமான மற்றொரு அச்சம், யாரிடமாவது உதவி கோரி நிற்கும் போது, ‘பிரச்சினை உன்னிடம்தான் இருக்கிறது’ என்ற பதிலை எதிர்கொள்வது. ‘சமத்துவம்’ மற்றும் ‘மாறுபாடு’ போன்ற கருத்துருக்களின் மீது நுட்பமான விமர்சனப் பார்வை இன்றி வைக்கப்படும் அதீத அழுத்தம் என்னை அச்சுறுத்துகிறது. ‘அந்த வணிக வளாகத்தின் வாகன நிறுத்துமிடம் அசிங்கமானது அல்ல, அது சற்றே மாறுபட்டது, அதனால் ஓலமிடுவதை நிறுத்து.’ ‘உன்னைப் பழித்துப் பேசும் இந்த மூர்க்கனை விட நீ ஒன்றும் உயர்ந்தவன் அல்ல, அதனால் உன் வெண்ணிறப் புரவியிலிருந்து கீழிறங்கு’. இந்த கையறு நிலையின் கொந்தளிப்பில் என் கையை நானே கடித்துத் துப்ப வேண்டும் போல் தோன்றுகிறது.
‘நாகரிகம்’ என்ற சொல் கருணை, கண்ணியம், நல்லொழுங்கு, பாதுகாப்பு போன்றவற்றை மேன்மையோடு சூழ்ந்துள்ளது: சொல்லப்போனால் இவைதான் என்னை ஏங்கவைக்கும் உயர்பண்புகள், ஆனால் நான் வளர்ந்த உலகில் இவை வெளிப்படையாகவோ அல்லது வலுவாகவோ காணப்படவில்லை. இப்போது யோசிக்கும்போது அந்த மாநாட்டில் எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கான காரணத்தை இந்த ஏக்கம் தெளிவாக விளக்குகிறது என்றே படுகிறது: நான் ஆழமாக நேசிப்பதை என்னிடம் பேரறிஞர்களுக்கே உரிய மிக நாகரிகமான தொனியில் முக்கியமற்றது என்று கூறப்பட்டது போல இருந்தது.
000

தென்னவன் சந்துரு
வங்கித் துறை ஊழியரான தென்னவன் சந்துரு கலை இலக்கியம் சார்ந்த கட்டுரைகளில் ஈடுபாடுடையவர். மொழிபெயர்ப்பாளர். நவீன தமிழ் இலக்கிய வாசிப்பில் ஆர்வம் கொண்டவர்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
