
காமம் வதைக்காத உயிர் எது? எவ்வளவு லட்சியங்களை, எவ்வளவு உன்னதங்களை காவு கொள்ளும் காளி அது? எத்தனை மகத்துவங்கள் அதன் முன் வாலைச்சுருட்டி கொண்டு மூலையில் அமர்ந்திருப்பதை நாம் பார்த்துவிட்டோம். சங்கக்கவித் திரட்டு முழுக்கவும் தலைவியரைப் பசலை படாத பாடு படுத்தியுள்ளது. பரணர் பசலைக்கு கிணற்றுப் பாசியை உவமை சொல்கிறார். ஊரார் உண்ணத் தொடும் போது அது விலகி நிற்கிறது. மறுகணமே திரண்டுவிடுகிறது. அது போல் தலைவன் தொடுந்தோறும் தொடுந்தோறும் விலகி , விடுந்தோறும் விடுந்தோறும் பாய்கிறதாம் பசலை. ஒரு புலி போலவா? ஆம்..
ஊருண் கேணி உண்துறைத் தொக்க
பாசி அற்றே பசலை காதலர்
தொடுவுழித் தொடுவுழி நீங்கி
விடுவுழி விடுவுழிப்பரத்தலானே
( குறுந்தொகை)
அறையில் விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. அதை ஒன்று உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது. எது அது? இருள்தான் அது. ஒளி அறுந்த மறுகணமே இருள்தானே எங்கெங்கும்! அது போன்றே, பசலையும் காத்திருக்கிறதாம். காதலர் முயக்கம் சற்றே பிரிந்தால் போதும், அது பாய்ந்து பரவிவிடும்.
விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு (காமத்துப்பால்)
கபிலரின் பாடலொன்றில் தலைவன் மணம் முடிக்க வருகிறான். அவன் வர வர தலைவியின் பசலையும், புணர்ச்சியேக்கமும், ஊரார் அலரும் நீங்கிச் செல்கின்றன.
வேய்புரை மென்தோட் பசலையும் , அம்பலும்
மாயப்புணர்ச்சியும் எல்லாம் உடன் நீங்கச்
சேய்உயர் வெற்பனும் வந்தனன்
பூஎழில் உண்கணும் பொலிகமா இனியே!
( கலி; 3)
( அம்பல்- அலர்)
தலைவியும் தோழியும் தலைவனின் மலையை வாழ்த்தி வள்ளைப் பாட்டு பாடுகிறார்கள்.வள்ளைப் பாடல் என்பது நெல்குத்திக் கொண்டே, அப்போது எழும் வளையல் ஓசைக்கு ஏற்ப இசைந்து பாடும் பாடலாகும். தோழி அவனை வாழ்த்துகிறாள். தலைவியோ அவனைப் பழிக்கிறாள். பழிச்சொற்களை வேலியோரம் மறைந்திருந்து கேட்கும் தலைவன் இனி காலம் தாழ்த்தாது தலைவியை மணம் முடிக்க வேண்டும் என்கிற முடிவுக்கு வருகிறான். ( கலி; 40)
தலைவி:
அகவினம் பாடுவாம் தோழி…….
பகைஇல்நோய் செய்தான் பயமலை ஏத்தி
அகவினம் பாடுவாம் நாம்!
காதலை ‘பகை இல்நோய் ‘ என்கிறாள். அந்த நோய்க்கு மருந்தே இல்லை. பிற நோய்களில் எல்லாம் நோய் வேறு, மருந்து வேறு. காதலிலோ நோயும் மருந்தும் ஒன்றேதான் என்கிறான் வள்ளுவன். அவளே நோய், அவளே மருந்து.
பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து
( காமத்துப்பால்)
தோழி:
……………………..
தொல்எழில் தோய்ந்தார் தொலையின் அவரினும்
அல்லற்படுவான் மலை
தன்னுடன் தோயும் தலைவியின் பழைய அழகு சற்று குறையினும் அவளை விட அல்லற்படும் தலைவனது மலையை போற்றிப் பாடுவோம்
தலைவி:
………………………
பெண்டிர் நலம்வெளவித், தண்சாரல் தாது உண்ணும்
வண்டின் துறப்பான் மலை
மலர் துய்த்து நீங்கும் வண்டு போன்றே பெண்டிர் நலம் பறித்துப் பறப்பான் மலை
தலைவி இப்படிப் பழிக்க அவன் ஒரு போதும் “உற்றவரைப் பிரிய மாட்டான்” என்று பாடுகிறாள் தோழி.
“……. உற்றாரின் நீங்கலம் என்பான் மலை”
அடுத்த கவிதையிலும் பாடல் தொடர்கிறது. தலைவன் தலைவியின் வீட்டில் மணம் செய்விக்க வேண்டுகிறான். அவள் தந்தையும் உடன்படுகிறார்.
பாடுகம் வாவாழி தோழி வயக்களிற்றுக்
கோடு உலக்கையாக நல் சேம்பின் இலை சுளகா
ஆடுகழை நெல்லை அறை உரலுள் பெய்து இருவாம்
பாடுகம் வாவாழி, தோழி நற்றோழி பாடுற்று”
(கலி; 41)
( சுளகு- முறம், சேப்பங்கிழங்கிங்கின் இலைகள் முறம் ஆகிறது)
பாறைக்கல் உலக்கையில், மூங்கில் நெல்லை இட்டு, யானைத் தந்தத்து உலக்கையால் குத்திக் கொண்டே பாடல் எழுகிறது.
சொன்ன சொல் காக்காத பொய்யனின் மலையே ஆயினும் அதில் மழைவளம் அருகாது அருவிகள் ஆர்ப்பரித்துக் கொட்டுவதைப் பார்
இலங்கும் அருவித்தே, இலங்கும் அருவித்தே
வானின் இலங்கும் அருவித்தே, தான் உற்ற
சூள் பேணான் பொய்த்தான் மலை
(இலங்குதல்- ஒளிர்தல், பிரகாசித்தல்)
வான் உச்சியில் இருந்து விழுகிற அருவி என்பதால் எங்கிருந்தும் அவற்றை காணமுடியும் .
தலைவன் நீ இப்படிப் பாடுமளவு பொய்யனா என்ன? இல்லை, அப்படியில்லையடி, அப்படியாயின் அது தீங்களுள் தீத்தோன்றியது போலஆயிழையோ? என்று மறுக்கிறாள் தோழி.
பொய்த்தற்கு உரியனோ? பொய்த்தற்கு உரியனோ?
‘அஞ்சல் ஓம்பு’ என்றாரைப் பொய்த்தற்கு உரியனோ
குன்று அகல் நன்னாடன் வாய்மையில் பொய்தோன்றின்
திங்களுள் தீத் தோன்றியற்று
என் வளைகளை நெகிழ விட்டு இன்னும் வாராத கொடியனின் மலையாக இருப்பினும் அதில் எப்போதும் இளமேகங்கள் சூழ்ந்திருப்பதைப் பார்
இளமழை ஆடும், இளமழை ஆடும்
இளமழை வைகலும் ஆடும் என் முன்கை
வளை நெகிழ வாராதோன் குன்று
அவன் செய்த கொடுமைக்கு அந்த மலையில் மேகமே திரளக் கூடாது. ஆனால் ஒவ்வொரு நாளும் தவறாமல் திரண்டு நிற்பதைப் பார். தலைவனின் கொடுமையை அழுத்திப் பாடுவதற்குப் பதில் அவன் மலையின் வளத்தை அழுத்திப் பாடுகிறது கவிதை. ஒன்றை அழுத்த இன்னொன்று பீறிடுகிறது. மழைக்கும் மனதிற்கும் தொர்புண்டு என்று மூவாயிரம் ஆண்டுகளாக தமிழன் நம்பிக் கொண்டேயிருக்கிறான். ஆயினும் ‘ மழைக்கு இதெல்லாம் தெரியவா போகிறது?’ என்றும் நம்பிக் கொள்கிறான்.
தலைவன் அவ்வளவு கொடியனோ? அவன் வாராதிருப்பனோ? அப்படி நடந்தால் அது நிழற்குளத்தில் நிற்கும் குவளை வாடிக் காய்ந்தது போன்றதன்றோ?
வாராது அமைவனோ? வாராது அமைவனோ?
வாராது அமைகுவான் அல்லன் மலைநாடன்
ஈரத்துள் இன்னவை தோன்றின், நிழற் கயத்துள்
நீருள் குவளை வெந்தற்று
( ஈரம்- கருணை)
மென்தோட் கிழவனும் வந்தனன்; நுந்தையும்
மன்றல் வேங்கைக் கீழ் இருந்து
மணம் நயந்தனன் நம் மலை கிழவோற்கே
குறிஞ்சி நிலத்தவரின் திருமணமும் அது சார்ந்த பேச்சுக்களும் வேங்கை மரத்தடியில் நிகழ்ததாக சொல்லப்படுகிறது.
இன்னொரு கவிதையில் தலைவனை தோழி பழித்துப் பாடுகிறாள். தலைவி புகழ்ந்து ஏத்துகிறாள்( கலி; 42)
“ அருளா நாணிலி நாட்டு மலை” என்று தூற்றுகிறாள் தோழி. தலைவி மறுக்கிறாள்..
ஆர்வுற்றார் நெஞ்சம் அழிய விடுவானோ?
ஓர்வுற்று ஒருதிறம் ஒல்காத நேர்கோல்
அறம்புரி நெஞ்சத்தவன்
துலாக்கோல் போல் நடுநிலை நிற்கும் அற நெஞ்சத்தவன், தன்னைக் காதலித்தவளை அழிய விடுவானா என்ன?
கூருநோய் ஏய்ப்ப விடுவானோ? தன் மலை
நீரினுஞ் சாயல் உடையன், நயந்தோர்க்குத்
தேர் ஈயும் வண் கையவன்
தன் மலைச்சுனையினும் நீர்மை கொண்டவன் தலைவன், அவனா நம்மைத் துன்பத்தில் தவிக்க விடுவான்?
அஞ்ச வேண்டிய இழிவுகளுக்கு அஞ்சாத அறனிலி அல்லன் என் காதலன்.
அஞ்சுவது அஞ்சா அறினிலி அல்லன்,என்
நெஞ்சம் பிணி கொண்டவன்
……………
“அஞ்சுவது அஞ்சாமை மேதைமை” என்கிற குறளடி நமக்கு உடனடியாக நினைவில் எழுந்துவிடுகிறது.
இவை யாவற்றையும் மறைந்திருந்து கேட்டுக் கொண்டிருக்கிறான் தலைவன். “ அறனிலி அல்லன் என் நெஞ்சம் பிணி கொண்டவன்” என்று புகழ்ந்த பிறகும் ஒளிந்திருக்கக் கூடுமோ காதலால்? அவன் தலைவி அறியா வண்ணம் வெளிப்படுகிறான். கண்டுவிட்ட தோழியை சைகையால் அடக்கிவிட்டு, தலைவியின் பின்னால் வந்து திடீரெனக் கட்டிக் கொள்கிறான்.
என்று யாம் பாட மறைநின்று கேட்டனன்
தாழ் இருங் கூந்தல் என் தோழியைக் கைகவியாச்
சாயல் இன் மார்பன் சிறுபுறம் சார்தர
ஞாயிற்று முன்னர் இருள் போல மாய்ந்தது, என்
ஆயிழை மேனிப் பசப்பு
முருகனை போற்றுவது போன்று தலைவனைப் போற்றி அவனது மலையை வாழ்த்திப் பாடுகிறார்கள் இருவரும்
ஐயனை ஏத்துவாம் போல அணிபெற்ற
மைபடு சென்னிப் பயமலை நாடனைத்
தையலாய்! பாடுவாம் நாம்
( கலி; 43)
காந்தளை பெண்டிர் விரல்களுக்கு உவமை சொல்வது வழக்கம்தான். காந்தள் மீது அமர்ந்திருக்கும் தும்பியை மோதிரம் என்கிறார் கபிலர்
தகையவர் கைச்செறித்த தாள் போலக் காந்தள்
முகையின் மேல் தும்பி இருக்கும்
( தாள்- மோதிரம் )
தம் அன்பரிடம் தோற்பது குறித்து ஒரு நாளும் நாணாதவன். பகையெனின் கூற்றத்திற்கும் அஞ்சாதவன்.
………………..பகை எனின்
கூற்றம் வரினும் தொலையான், தன் நட்டார்க்குத்
தோற்றலை நாணாதோன் குன்று
அந்தக் காதலர் மணம் முடிப்பதில் உண்மையில் சிக்கல் ஒன்றுமில்லை. பெண் வீட்டில் பேசினால் காரியம் முடிந்துவிடும். ஆயினும் தேவையற்ற அச்சத்தால் மணம் பேசாமல் காலத்தை நீட்டிக்கிறான் தலைவன். இதனை உள்ளுறையாக, தலைவனின் மலையில் நிகழும் ஒரு காட்சியாக்கிக் காட்டுகிறது கவிதை. அஞ்சுவதற்கு அவசியமில்லாத கருங்குரங்கு ஒன்று பாறை மேல் அமர்ந்திருக்கிறது, அதைக் கடக்க அஞ்சிக் கொண்டு வருடைமான் ஒன்று மலை மீது ஏறியும் இறங்கியும் தயங்கிக் கொண்டிருக்கிறது.
இதைத் தலைவியின் அச்சத்தொடு பொருத்தியும் உரை சொல்கிறார்கள். தலைவனின் மலையில் நிகழும் காட்சி என்பதால் தலைவனுக்கே அதிகம் பொருந்துகிறது.
வெருள்புடன் நோக்கி, வியல் அறை ஊகம்
இருள் தூங்கு இறுவரை ஊர்பு இழிபு ஆடும்
வருடை மான் …………..
( அறை- பாறை, ஊகம்- கருங்குரங்கு, ஊர்பு இழிபு- ஏறி இறங்குதல்)
பிறர்குற்றம் கூறாதவன் தலைவன். வறுமையைக் கூறி இரந்தார்க்கு உதவ இயலவில்லையெனின் தன் உயிரையும் துறந்துவிடுபவன்.
மாறுகொண்டு ஆற்றார் எனினும், பிறர்குற்றம்
கூறுதல் தேற்றாதோன் குன்று
…………….
…………………………………………………………………………..இடும்பையால்
இன்மை உரைத்தார்க்கு அது நிறைக்கல் ஆற்றாக்கால்
தன் மெய் துறப்பான் மலை
அம்மலையில் உள்ள வாழையின் வளைந்த காய்கள் புலியின் பாதம் போல் உள்ளதாம். தலைவன் மணம் முடித்து இன்பம் துய்க்காமல் காலம் தாழ்த்துவதன் உள்ளுறையாக இது சொல்லப்படுகிறது. அப்படி உள்ளுறை கொள்ளாமல் வெறும் சித்தரிப்பாகக் கொண்டாலுமே சிறந்த உவமை இது.
கடுங்கண் உழுவை அடிபோல வாழைக்
கொடுங்காய் குலைதொறூஉம் தூங்கும்…
இப்படித் தலைவனைக் குறித்துப் பாடப் பாட தலைவியின் மெலிந்த தோள்கள் பூரித்துச் செழிக்கின்றன. அதாவது அவன் வேண்டாம், அவனைப் பற்றிய எதுவொன்றும் போதும் அவளை நிறைக்க. அவன் வந்து அணைத்தது போன்றதே அது என்கிறது கவிதை
அவர் திறம் பாட, என் தோழிக்கு
வாடிய மென் தோளும் வீங்கின
ஆடு அமை வெற்பன் அளித்தக்கால் போன்றே
( ஆடு அமை வெற்பன்- மூங்கில்கள் அசையும் மலைநாட்டன், அமை – மூங்கில்)
அவன் பாட்டின் வழியே வந்துவிட்டான். முத்தமும், புணர்ச்சியும் கூட நிகழ்ந்துவிட்டது.
‘அலர்’ எழுந்தால் காதல் ஒழியும் என்பது ஒரு பொதுவான எண்ணம். ஆயினும் அலர் கொஞ்சம் சிக்கலான விசயமாகத்தான் உள்ளது. அதற்கு விசித்திரமான வேறு பரிமாணங்களும் உண்டு. காதலர் உள்ளம் ஒரு வகையில் அதை விரும்பவும் செய்கிறது. அலரில் உள்ளதென்ன? அவனும் அவளும் தானே? அவர்களது காதல் தானே? தன்னை ஒழிக்கத் தூற்றப்படும் அலரைப் பற்றிக் கொண்டே வாழவும் தெரிகிறது காதலுக்கு. “ அலர் எழ ஆருயிர் நிற்கும்” என்கிறான் ‘ஈரடியால் உலகளந்த மெருமான்’ . அவன் அறியாதொன்றுண்டோ!
ஊரார் அலர் தூற்றுவது இருக்கட்டும். முதலில் காதலால் தன்னைப் பாடாமல் இருக்கக் கூடுமா? அவ்வளவு பூரிப்பையும் நெஞ்சிற்குள் அடக்கி வைத்தல் ஆகுமோ? காதலரை வேறு யாரும் மாட்டி விட வேண்டிய அவசியமில்லை. அதற்குக் காதலே போதும்.
காதலைப் பாடாதிருப்பது கடினம். அது பாடிப் பாடி இன்புறத்தக்கதன்றோ! பாடிப் பாடி துன்புறத்தக்கதன்றோ!

இசை
கவிஞர் இசை தமிழில் நவீனக்கவிதைகளை எழுதி வரும் கவிஞர். மென்மையான நகையுணர்வு கொண்டவை இவருடைய கவிதைகள். உறவுகளின் சிக்கல்களையும் சமகாலத்தின் அரசியலையும் கேலி இல்லாமல் புன்னகையுடன் கூறுபவை.
நன்றி : தமிழ் விக்கி
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
