
நிறம்
நின்று கவனித்து
மெல்லப் பின்வாங்கினேன்
இனி
கவனமாக இருக்க வேண்டும்
வானிற்கு இப்போது
புலியின் நிறம்
என்னுடைய தவறுதான்
கொஞ்சம் முன்னர்தான்
ஒரு வெள்ளை முயலென
இவ்வழியே சென்றது
அப்போதே இதை
காதைப் பிடித்து
தூக்கியிருக்க வேண்டும்
000
வழி
நிலவொளியை
வெட்டி வீழ்த்தி
சாலையை வரைகின்றன
இலைகள்
ஒரு பாதைக்குள் இப்போது
ஓராயிரம் பாதைகள்
அசையும் அத்தனை
சாத்தியங்களின் முன்
அசையாமல் நிற்கிறான்
ஒருவன்
நிலவில்
இலையின்
நிழலில் செல்பவன்
ஒளியில் செல்கிறானா
இருளில் செல்கிறானா
000
அருவிக்கு முன்னால் நான்கு பெண்கள்
அருவிக்குள் நுழைய வேண்டி
காத்து நின்றனர்
நான்கு பெண்கள்
இன்னும்
அருவியைத் தொடாத
நான்கு துளிகள்
இல்லை இல்லையென
தலையசைத்தபடி ஒருத்தி
தன்னைத் தானே
இறுக்கி அணைத்துச்
சிலிர்த்தபடி ஒருத்தி
ஏற்கனவே தனக்கு
அருவியைத் தெரியும்
என்பதுபோல் ஒருத்தி
அருவியில் நனைவதுபோல்
கைகள்விரித்து அண்ணாந்த பாவனையில்
ஒருத்தி
ஒருவரை ஒருவர்
தள்ளியடி
விழுந்துவிடாமல்
பிடித்தபடி
அசைந்து மட்டும்
கொண்டிருக்க
மழை
பெய்யத் துவங்கியது
000
பள்ளத்திலிருந்து
மேட்டிற்கு ஏறும்போதெல்லாம்
நான் நினைத்துக் கொள்வேன்
என் கண்களில்
மெல்லப் புலரும்
காட்சிகள் யாவைக்கும்
நான்தான் இப்போது
சூரியன்
அக்கணமே நான்
பார்க்க விரும்புவேன்
ஒவ்வொன்றையும்
தனித்தனியாக
தனித்தனியாக்
000

ஆனந்த் குமார்
கோவையில் வசித்துவரும் ஆனந்த் குமார், தொடர்ச்சியாக கவிதைகள் எழுதிவருகிறார். ஆவணப்படங்கள், குறும்படங்கள், புகைப்படங்கள் எடுப்பதிலும் முனைப்போடு இயங்கிவருகிறார். ‘டிப் டிப் டிப்’ என்ற கவிதைத்தொகுப்பின் ஆசிரியர்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.

அபாரமான கவிதைகள், குறிப்பாக இரண்டாம் மூன்றாம் கவிதைகள். கவிஞரது மொழியில்தான் எத்தனை ஈரம், எத்தனை வாஞ்சை. அழகும் நேசமும் ததும்பும் கவிதைகள். இந்த நாளை அழகாக்கியதற்கு நன்றி.