சதீஷ்குமார் சீனிவாசன் கவிதைகள்

1.நிழல் புற்று

இந்த நிழல் ஒரு புற்று
இருள் கூடி இருள் கூடித் தணியும்
வெளிச்சப் பரல்கள்
அந்திகளின் வழக்கத்தில்
வழி தவறினேன்

இன்னாரில்லை சென்றுசேர
மனம் தவறி உடைகின்றன பொருட்கள்
உடனிருந்தாலும் அன்பில்லை
தூரத்தில் ததும்புகிறது
கானல் உலகு

நிழல் புற்று படிகிறது சொற்களில்
நேர்மையிழந்த சொற்கள்
யாருக்கு என்ன விலை
எதற்கு எந்த விலை
பாலங்கள் முடிந்தாக
வேண்டிய நிர்பந்தங்கள்

வீடுபோய் சேர வேண்டும்
மயங்கள் தீர வேண்டும்
காட்சிப் புலனில் நீந்துகிற புழுக்கள்
நனவிலியின் வண்ணத்துப்பூச்சிகள்

காட்சி மாறுகிறது
நிழல் மலைகள் சாய்கின்றன
இன்னொரு மலையின் ஸ்தூலத்தில்
பறவைகள் அஞ்சுகின்றன
விலங்குகள் மருள்கின்றன
யாரோ ஏற்றிய தீபம்
அணையவா என நடுங்குகிறது

நிழல் புற்றில் ஔிநாகம் எழுகிறது
அது செல்லும் வழியெங்கும்
துர்க்கனவு
அழிவு
புற்கள் எரிகிற வெம்மை
மந்திரங்கள் தோற்கின்றன
வழிமுறைகள் குழம்புகின்றன

ஔி நாகம் மெல்ல மறைகிறது
இன்னொரு இருளில்
000

2

ஞாபகம் ஓர் மறதி
.
யாரும் தேடாத ஞாபகம்
புரதானத்தின் மறதிபோல

அமர ஓர் இடமில்லை
பேச ஒரு மொழியில்லை

சிதைவுகள்
மீட்சிகள்
எல்லாவற்றிலும்
களைப்பு மேலிடுகிறது

புலர வேண்டுமா
மறைய வேண்டுமா
இந்தப் பொழுது

இனியெனும் துர்க்கனவுகள்

வானம் வானம் என அலறும்
அர்த்தப் பறவைகள்

யாரும் தேடாத ஞாபகம்
மறதிபோன்ற எல்லாமும்

000

3
இருந்தோம் என்பதற்கு
என்ன சாட்சியம்

ஒன்றுமில்லை

எந்தப் பிரிவும் புதியது
தீ மாதிரி
மழை மாதிரி
கண்ணீர் மாதிரி

000
4
மகிழ்ச்சி என எழுதுகிறேன்

பாடுகிற பறவை
நீந்துகிற மீன்கள்
வேலைக்குப் போகும் மனிதர்கள்
காற்றிலசைவன
எதிர்படுபவை
உருகும் பனிமலைகள்
வரளும் நதிகள்
ஒரு குழந்தையின் வருகை
எல்லாவற்றையும்
எல்லாவற்றையும்
நான் எழுதுகிறேன்
சீரற்ற காமம்

அடைந்த எல்லாமும்
இழந்த எல்லாமும்

நான் மகிழ்ச்சியாக இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கின்றன
மலர்கள்

000

சதீஷ்குமார் சீனிவாசன்

சதீஷ்குமார் சீனிவாசன் தமிழில் எழுதிவரும் கவிஞர். தொடர்ந்து இணைய இதழ்களில் கவிதைகள், கட்டுரைகள் எழுதிவருகிறார். உயிர்மை இணைய இதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்.

தமிழ் விக்கியில் 


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

உரையாடலுக்கு

Your email address will not be published.

திரட்டு

சேகரம்

Latest Posts

Go toTop

Don't Miss