துப்பாக்கியின் உடல் : ஷங்கர்ராமசுப்ரமணியன்

எனக்கு ஒரு பொம்மை துப்பாக்கி கிடைத்தது. பெசண்ட் நகரில் காலை நடை போகும் போது, விச்ராந்தி உணவு விடுதிக்கு வெளியே தட்டுப்பட்டது.ஏதேனும் ஒரு குழந்தை வாசலில் விட்டுச் சென்றிருக்கலாம். ஜாங்கோ திரைப்படத்தில் கிறிஸ்டோபர் வால்ட்ஸ் பயன்படுத்தும் derringer மாதிரியான கைப்பிடிக்குள் வைத்துக்கொள்ளக்கூடிய உலோக பொம்மைத் துப்பாக்கி. பிஸ்டல் வகை. மேல்பகுதியை இழுத்துவிட்டு குதிரையைக்கூட அழுத்தமுடிந்தது.

நான் முதல்முறை நிஜத் துப்பாக்கியை பார்த்தது என் பதின் வயதில். ஒரு பரிந்துரைக் கடிதம் கோரி திருநெல்வேலி டவுணில் வசித்த ஜமீன்தாரான குட்டி என்ற சண்முக சுந்தரம் அவர்களின் வீட்டுக்குச் சென்றபோது, ஹால் சுவரில் மாட்டப்பட்டிருந்த ரைபிளைக் கண்டேன். அவர் வருவதற்கு முன்னால் எழுந்துபோய் தொட்டுப் பார்த்துக் கொண்டேன். துப்பாக்கிக் கட்டையும் அதிலிருந்து நீளும் பளபளப்பான உலோகக் குழலும் கொடுத்த சில்லிப்பு மறக்கவியலாதது. அப்போது மூளை சூடானதையும் மறக்க முடியாது.

பின்னர், 2010 வாக்கில் சென்னையில் ஒரு துப்பாக்கியை தொட்டு பார்த்தேன். அண்ணா திரையரங்குக்கு பக்கவாட்டில் மௌண்ட் ரோட்டையும் வாலாஜா சாலையையும் இணைக்கும் இருட்டான காம்ப்ளக்ஸ் கட்டிடத்தில் ஒரு துப்பாக்கிக் கடை இருந்தது. சிறிய எளிமையான கடை. கைத்துப்பாக்கிகள், வேட்டைத் துப்பாக்கிகள், ரைஃபிள்கள், ஏர் கன்கள் முதலியவற்றை கண்ணாடி பெட்டியில் பார்வைக்கு வைத்திருந்தார்கள். விதம்விதமாகத் துப்பாக்கிகளை ஒரு சலவைக் கடைக்கருகே மிக எளிமையான முறையில் பார்த்தது ஓர் ஆச்சரியம். விற்பனையாளரும் முதலாளியும் ஒருவரே. எளிமையான பெட்டிக்குள் கம்பீரமாக வேறு வேறு வடிவில் அவை வீற்றிருந்தன. உரிமம் வைத்திருப்பவர்களுக்கு தோட்டாக்களையும் விற்பனை செய்யும் இடம் அது.

ஆசையுடன் அந்தக் கடைக்குள் சென்றுவிட்டேன். கடைக்காரர் என் ஆர்வத்தைப் பார்த்து முதலில் தயங்கி பின்னர், ஒரே ஒரு துப்பாக்கியை கையில் வைத்துப் பார்ப்பதற்குத் தந்தார். 3 ஆயிரம் ரூபாய் அப்போது. சிறுவயதிலிருந்து துப்பாக்கியின் மீதிருக்கும் ஆசை. கையில் பிடித்ததும் மூளை சூடேறியது.

இன்று இந்த உலோக பொம்மைத் துப்பாக்கியைப் பிடித்ததும் மூளை சூடாகிறது.

OOO

சிறுவயது தொடங்கி இப்போது வரை, ஜேம்ஸ்பாண்ட் திரைப்படங்கள், செர்ஜியோ லியோனின் வன்மேற்கு திரைப்படங்கள் இவற்றை எல்லாம் பார்த்து ரசிக்கும்போது, சினிமா என்ற ஊடகத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பவை துப்பாக்கிகளும் குதிரைகளும் வன்முறை மற்றும் பாலுறவுக் காட்சிகளும் தான் என்ற எண்ணம் எழுவதுண்டு. குவெண்டின் டாரண்டினோ படங்களிலும் ரத்தக்களங்களே சுவாரசியமான ஓவியக் காட்சிகளாக மாறுகின்றன. அதே வன்முறைதான் தமிழில் லோகேஷ் கனகராஜ் திரைப்படங்களில் காட்சிகளை கதையேயின்றி நகர்த்துவதற்கு மலினமாகவும் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் துப்பாக்கிகள் துருப்பிடித்த கருவிகளாக தோன்றுகின்றன.

துப்பாக்கி ஒரு கொலை உபகரணம்தான். ஆனால் துப்பாக்கி ஒரு கருத்தாக, ஒரு வடிவமாக மனிதப் பண்பாட்டில் உருப்பெற்று பல மாற்றங்களுக்கு உள்ளாகிவிட்டது. நவீனப்படுத்தப்பட்டுவிட்டது. கத்திகள், வாட்கள், குத்தீட்டிகள் போன்றவை கொலை உபகரணங்களாக இருந்து தற்போது புராதன கலாசாரத்தின் அடையாளங்களாக மாறிவிட்டன. கத்திகளுக்கு கொலை தவிர வேறு உபயோகங்கள் உள்ளன. ஆனால், துப்பாக்கி உடலைத் துன்புறுத்தவும் உயிரை இல்லாமலாக்கவும் மட்டுமே பயன்படுத்தப்படுபவை. சிலுவை போன்ற கொலைக்கருவிகள் தமது அர்த்தத்தை இழந்து வரலாற்றின் போக்கில் ஆன்மிக அடையாளமாக கருமாற்றத்தை சந்தித்துவிட்டன. கிறிஸ்து என்ற மகத்தானவரின் ரத்தமும் தியாகமும் கொலைக் கருவியான சிலுவையை, ஆன்மிகப் படிமமாக்கிவிட்டது.

Once Upon a Time in the West

2012 ஆம் ஆண்டு இந்தியாவில் அன்னா ஹசாரே போராட்டம் தொடங்கி, காந்தியம் மீண்டும் பொது உரையாடலுக்குள் நுழைந்தபோது, நான் ஒரு கவிதை எழுதினேன். ஒரு நவீன சமூகத்தில், சிந்தனை என்பது குற்ற நடவடிக்கையாக மாறக்கூடாது என்று பூக்கோ சொல்லும் கருத்துடன் எனக்கு உடன்பாடு உண்டு. அன்பு எத்தனை இயற்கையோ, பரிவு எத்தனை இயற்கையோ வன்முறையும் காமமும் பொறாமையும் கொலை மூர்க்கமும் அகத்தில் இயற்கையானவை என்றே கருதுகிறேன். அந்த நிலையில் மாயமும், லீலையும், குரோதமும் ததும்பும் மனவெளியை கலைஞன் எந்த மனத்தடையும் இல்லாமல் கண்ணாடித் தொட்டியின் மீன்களைப் போல அணுகவேண்டுமென்ற இயல்பிலிருந்து தோன்றிய எதிர்வினைதான் இந்தக் கவிதை.

“சமையலறைக் கத்திதான்
அதை எடுத்துப் பிடித்தால்
மத்தியகால
சண்டை சாகசங்களுக்கு
அழைப்பு விடுக்கிறது.
கை
வேட்டைக்குப்
பரபரக்கிறது
போதும்

காந்தி பிறந்தார்
போனார்
மீண்டும் வந்துவிட்டார் என்றும்
சொல்கிறார்கள்

இனி
எலுமிச்சம் பழத்தை
நறுக்கினால் போதும்.”

OOO

துப்பாக்கியை கொலை எந்திரமாக சமூகம் எப்படி வடிவமைத்தது? ஒரு உடலும் இன்னொரு உடலும் குறைந்தபட்சம் தொடவோ, மோதவோ தேவை இல்லாது சக்தி விரயமின்றி தொலைவில் இருந்தவாறு காயப்படுத்தவும் கொலை செய்யவும் ஒரு கருவியைக் கண்டுபிடித்திருக்கிறோம். அதை நவீனப்படுத்தியபடியும் வந்திருக்கிறோம்.

ஆதிகாலத்திலிருந்து மனிதனுடன் தொடர்புடைய விலங்கின் உடலியல் துப்பாக்கிக்குள் சேகரமாகியிருக்கிறதென்று நினைக்கிறேன். துப்பாக்கியின் வடிவத்தில் குதிரையின் உடலமைப்பு பொதிந்துள்ளது. ஒரு வேட்டை விலங்கின் பாய்ச்சலை கண்ணால் கற்பனை செய்து அதிலிருந்து படிப்படியாக துப்பாக்கியின் வடிவத்துக்கு மாற்றிவிடவும் இயலும். அதனால்தான் ஆரம்பத்திலிருந்தே குதிரைகளும் துப்பாக்கிகளும், காதலும் களியாட்டமும் சினிமா என்னும் வடிவத்தை ஆக்கிரமித்து வந்துள்ளன. அதை வீரியமாக்கியுள்ளன. வணிகக் கலையில் வெளிப்படும் வன்முறைக்கும், காமத்துக்கும் எதார்த்தத்துக்கு நடுவே உள்ள உறவு விசித்திரமானது. அது எதார்த்தத்தை பிரதிபலிக்கிறதா அல்லது அதுவே வன்முறை உணர்வையும் கட்டற்ற நுகர்வு வேட்கையையும் நேரடியாக உருவாக்குகிறதா?

The Knotted GunCarl Fredrik Reuterswärd

துலாபாரம், பாசமலர் போன்ற மனித துயரங்களை நெருங்கிச் செல்லும் படங்கள் பார்வையாளர்களுக்கு என்ன வழங்குகின்றன? 1969 ஆம் ஆண்டு வெளியான துலாபாரத்தை என் சிறுவயதிலேயே பலமுறை திரும்பத் திரும்ப வெளியிட்டார்கள். எனது அம்மாவும் ஆச்சிகளும் அழுவதற்காகவே தயாராகி, திரையரங்குகளுக்குப் போனார்கள். நாட்டார் கதையாக இருந்து பெரிய எழுத்துக் கதையாகி சினிமாவாகவும் ஆன நல்லதங்காள் ஏன் திரும்பத் திரும்ப கிராமங்களில் தோல்பாவைக் கூத்தாகவும் கதைப்பாடலாகவும் நிகழ்த்திக் கேட்கப்பட்டுக்கொண்டே இருந்தது? மக்கள் தங்களது அன்றாடச் சுமைகள் மற்றும் துயரங்களை, கலைவடிவங்கள் காட்டும் துயரத்தோடு அடையாளம் கண்டு, நெகிழ்ந்து, உணர்ச்சிகளை மடைமாற்றி கண்ணீர்விட்டு உளசுத்தி செய்யும் நடைமுறையாக மாற்றிக்கொள்ளும் அனுபவம் திரும்பத் திரும்பத் தேவையாக இருக்கிறது. பாசமலரை நான் எனது ஏழு வயதிலிருந்து குறைந்தபட்சம் ஐந்து முறை பார்த்திருக்கிறேன்.

அதுபோலவே, பெரிய திருப்பங்களோ, அதிரடியான சம்பவங்களோ, தலைகீழ் மாற்றங்களோ இல்லாத சாதாரணனின் அன்றாட வாழ்க்கையில் கலை வடிவங்கள் மூலமாகப் பார்க்கும் வன்முறையும் பழிவாங்கலும் காமக்களியாட்டங்களும் அவனது அன்றாட சலிப்பைப் போக்கி ஒரு உத்வேகத்தைத் தருவதற்கு உதவக்கூடிய சாத்தியம் இல்லாமல் இல்லை. ஒட்டுமொத்த இயல்பிலும் சாதுவாக அறியப்படும் அசோகமித்திரன் ஐந்து வயதில் பாட்டியுடன் மிஸ். கமலா திரைப்படத்துக்குச் சென்று, அதில் வரும் சண்டைக்காட்சிகளால் உற்சாகமாகி படம் முழுக்க நின்றபடியே அட்டகாசம் செய்திருக்கிறார். அவரை அந்தப் படம் அந்தளவு உற்சாகமூட்டியதாக குறிப்பிடுகிறார்.

நம்மில் நல்லுணவர்வு எத்தனை இயற்கையானதோ, தீமையும் குற்றத்துக்கான இயல்பும் இயற்கையம்சம் என்றே கருதுகிறேன். காந்தி ரயிலில் இருந்து ஆங்கிலேய பிரபுவால் தென்னாப்பிரிக்காவில் இறக்கிவிடும் சம்பவத்தில் கூடுதலான சாத்வீகத்தையே தனது போராட்ட வடிவத்துக்குத் தேர்ந்தெடுக்கிறார். அது காந்தியின் இயற்கை அம்சம். அதே சம்பவம் இன்னொரு நபரை ஒரு பெரிய வன்முறை இயல்புடைய குற்றவாளியாகவும் ஆக்கிவிடும் சாத்தியமுண்டு.

OOO

லக்ஷ்மி மணிவண்ணனின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றான “பூனை” சிறுகதையில், ஒரு உயிருள்ள பூனையை நண்பர்கள் சேர்த்துப் பிடித்து, மண்ணில் சில மணிநேரங்கள் புதைத்து, அது இறந்தபின்னர் மீண்டும் எடுத்து வெளியே சாப்பிடும் காட்சி துல்லியமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கும். கதையைப் படித்து முடிக்கும் வாசகனுக்கு அந்தக் கதையின் பயங்கரம் வாழ்க்கையின் வேறு ஒரு அனுபவ சாரத்தை என்றைக்குமாகக் கொடுத்துவிடக்கூடியது. கதையில் வரும் பூனை, பூனை மட்டும்தானா? ஒட்டுமொத்த கதையிலும் சமூகம் விலக்கும் ஒன்றைச் செய்யும் சாகசம் அறுவை சிகிச்சையின் துல்லியத்துடன் விளக்கப்படுகிறது. மனிதாபிமானம், நாகரிகம் என நாம் போர்த்தியிருக்கும் மதிப்பீடுகளுக்குக் கீழே, ’வெறுக்கத்தக்கதும்’ ஆனால் ‘அழகானதுமான’ நம் கொடூரத்தைப் பரிசீலிக்கிறது இக்கதை.

அதேநேரத்தில், “நோ கண்ட்ரி ஃபார் ஓல்ட்மென்” ஹாலிவுட் திரைப்படத்தில் ஒரு கொலையாளி, எந்தக் காரணமும், பின்னணியும் இன்றி, தனியாக இருப்பவர்களை ஒரு கலைஞனின் நுட்பத்துடன் கொன்றுவிட்டு நகர்ந்துகொண்டே இருப்பான். அந்தப் படத்தின் மூலக்கதையை எழுதிய நாவலசாரியரான கார்மேக் மெக்கார்த்தி, வரலாறு என்பது ரத்தகோர சம்பவங்களின் தொகுப்பே என்ற கருத்தை நேரடியாகவே சொல்கிறார். ஒருவனோ, ஒரு குழுவோ, சமூகத்தின் மேல் தீமையையோ, குற்றங்களையோ கட்டவிழ்த்துவிட வேண்டுமென்று நினைத்தால், அதற்கு உரிய காரணமோ நியாயங்களோ குறைந்தபட்ச தர்க்கமோ கூட வேண்டியதில்லை என்ற பயங்கரமான உண்மையை இந்த திரைப்படம் சொல்லிவிடுகிறது.

கலை துப்பாக்கியையும் வன்முறையையும் இப்படியாக இரண்டு விதங்களிலும் கையாள்கிறது.

ஓவியம் : நடேஷ் முத்துசாமி

நேசிக்க முடியாதவர்களாக மாறிவிட்டோம் என்று மனிதாபிமானத்தைத் தூக்கிப் பிடித்த காம்யூ வாழ்ந்த காலத்தில்தான் படைப்பாளியும், தனது காலத்தில் பல குற்றவழக்குகளைச் சந்தித்த எழுத்தாளர் ழான் ஜெனே, குற்றம் புரிவதற்கான தாபத்துடனேயே இருக்கிறேன் என்று கூறுகிறார்.

“குற்றவாளிகளுக்கும் மலர்களுக்கும் இடையே நெருக்கமான உறவுள்ளது. மலரின் மென்பண்பும், வதங்கும் தன்மையும் குற்றவாளியின் கொடூரமான தடித்தனமும் ஒத்த இயல்புடையவை. என்னுடைய கிளர்ச்சி ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு ஊடாடிச் செல்வது. ஒரு குற்றவாளியைப் பற்றிய சித்திரத்தை நான் தரவேண்டுமா? நான் மலர்களால் அவனை ஆராதிக்கிறேன், அவனே மூழ்கும் அளவுக்கு. அப்போது அவன் புத்தம் புதிய பெரிய மலராக மாறிவிடுகிறான்”

தான் திருடனானதற்கான காரணங்களாக பெரிதாக அவர் எதையும் வலியுறுத்துவதற்கு விரும்பவில்லை.
ஆனால், துப்பாக்கியை நாம் எதிர்கொண்டுதானே ஆகவேண்டும். துப்பாக்கியின் ஒற்றை உபயோகத்திலிருந்து அந்தக் கருவியை ஒரு பொம்மையாக விடுவிப்பதும் கலையின் வேலைதானே.

தமிழின் சிறந்த ஓவியர்களில் ஒருவரான நடேஷ் முத்துசாமி, தனது நிர்மாணக் கலைப்படைப்பொன்றில், சாப்பாட்டுத் தட்டில் பனிக்கட்டியை முழுக்க உறையவைத்து துப்பாக்கி பொம்மையின் முன்குழல், பனியில் மறைந்திருக்கும்படி செய்திருப்பார். அலியான்ஸ் பிரான்சேஸ் கண்காட்சியில் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் அதை பார்த்தேன். “உணவுத் தட்டில் துப்பாக்கி” (A GUN IN THE FOOD PLATE) என்று அதற்குத் தலைப்பு.

பெசண்ட் நகரிலிருந்து நான் கொண்டுவந்த அந்தச் சிறிய ஒரு உலோக பொம்மைத் துப்பாக்கி எனது மற்ற பொம்மைகளோடு வீட்டுக்கு வந்திருக்கிறது.என் துப்பாக்கியின் முனையில் ஒரு வரிசை எண்ணும் உள்ளது கூடுதலாக அதன் நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது.

யுவன் சந்திரசேகரின் குறுங்கதை ஒன்றில் நாற்காலியில் அமர்ந்திருக்கும் அழகிக்கும், அவளைச் சுற்றி கத்தி எறியும் விளையாட்டு சாகசக்காரனுக்கும் இடையிலான உறவை எழுதியிருப்பார். உயிர்த்தன்மை, மரணம் என்ற இரண்டு நிச்சயமின்மைகளுக்குள் தான் அந்த சாகசக்காரன் கத்தியை எறிந்துகொண்டே இருக்கிறான். துப்பாக்கியையும் தன் கலையையும் ஒரு கலைஞன் அப்படித்தான் போட்டு விளையாடிக்கொண்டே இருக்கிறான். காமம், வன்முறை இரண்டுமே நமது உயிர்த்தன்மையின் உச்சமான நிகழத்துகளங்கள் என்று நான் கருதுகிறேன். முழுமையாக நாம் அம்மணம் பூண்டு, விலங்குகளாகும் இடம் அது.

கொலைக்கும், தற்சாவுக்குமான மூர்க்கம் அது. கபாடபுரத்தில், கதைசொல்லி, எலும்புக்கூடுகள் கட்டிய புணையில்தான் பாதாளத்தில் ஓடும் நூபுர கங்கையினூடாக சித்தலோகத்துக்குப் பயணப்பட வேண்டியுள்ளது. நனவுக்கும் நனவிலிக்குமான பயணமென்றும் அதைக் கொள்ளலாம்தானே. சாவை விசாரிக்கத் தொடங்கும் புதுமைப்பித்தன் இக்கதையில் மெதுமெதுவாக மரணம் என்பது மரணமல்ல என்ற புள்ளியை நோக்கி நகர்கிறாரோ என்ற சந்தேகம் ஏற்பட்டு விடுகிறது.

ஒரு யோகியின் சுயசரிதை நூலில் பரமஹம்ச யோகானந்தா வடமாநிலத்தில் வாழ்ந்த புலிச்சாமியார் என்ற யோகியைப் பற்றி எழுதியிருப்பார். ஊர் ஊராகச் சென்று, ஒரு ஜமீன்தார் அல்லது அந்த ஊரின் பணக்காரரைப் பிடித்து, ஒரு புலியை வாடகைக்கு எடுத்து சண்டைபோடுவதை ஒரு கண்காட்சியாக நிகழ்த்தச் சொல்வதுதான் அவரது விளையாட்டும் வாழ்வாதாரமாக இருந்துள்ளது. ஜமீன்தார், இந்தக் கண்காட்சிக்கான திடலை ஏற்பாடு செய்து சாகச விளையாட்டை விளம்பரம் செய்து டிக்கெட்கள் விற்று பணம் திரட்டி புலியிடம் வென்றவருக்குப் பணமும் அளிப்பார்.

ஒருகட்டத்தில் இந்த சாகச விளையாட்டில் ஈடுபடும்போது, ஒரு புலி, அந்த வீரனுக்கு பெரும் மரணபயத்தைக் காட்டி பெரும் காயத்தை ஏற்படுத்திவிடும். அதற்குப் பிறகு குணமடைந்தபின்னர், புலிகளுடன் சண்டையிடுவதை நிறுத்திவிடுவார். தனது அகந்தை முழுவதையும் விட்டு துறவியாகி இமயமலைக்கு வந்தமர்ந்துவிடுவார். புலிச்சாமியார் எடுத்த முடிவு உயிர்த்தன்மையோடு அவர் கொண்டிருந்த சமநிலையை சரியான நேரத்தில் உணர்ந்ததுதான்.

விபரீத விளையாட்டுத்தான். சாகசம்தான். ஆனால், கலைக்கு குதிரைகள் வேண்டும். துப்பாக்கிகள் வேண்டும். புலிகள் வேண்டும். உபயோக மதிப்பைத் தாண்டியும் புலிகள், குதிரைகள், ஓநாய்களின் உயிர்ப்பும், நாகரிகத்தின் போர்வையற்ற மூர்க்கமும் கலைக்குள் அறம், பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டப்படாமல் உலவிக்கொண்டே இருக்கவேண்டும். ராணி காமிக்ஸில் துப்பாக்கி சரியாக வேலை செய்யாதபோது சனியன் என்று ஜேம்ஸ்பாண்ட் தமிழில் திட்டுவார். சனியன்தான். ஆனாலும், அருமையான வடிவம் துப்பாக்கி.

“புலியே புலியே
இரவின் வனாந்திரங்களில்

பிரகாசமாய் சுடர்ந்தெரியும் புலியே
எந்தவொரு அழியாத கையால் அல்லது கண்களால்
உனது அச்சமூட்டக்கூடிய சீர்மையை
துணிந்து பிடித்து வடிக்க இயலும்?”


-வில்லியம் பிளேக்

ஷங்கர்ராமசுப்ரமணியன், தமிழில் எழுதிவரும் கவிஞர், விமர்சகர். ‘இகவடை பரவடை, நிழல் அம்மா, ஆயிரம் சந்தோ‌ஷ இலைகள், கல் முதலை ஆமைகள் முதலிய கவிதைத்தொகுதிகள் வெளிவந்துள்ளன. பிறக்கும்தோறும் கவிதை, நான் பிறந்த கவிதை, நினைவின் குற்றவாளி  ஆகிய கட்டுரைத் தொகுப்புகளையும்  எழுதியுள்ளார். விக்ரமாதித்யன் கவிதைகள் ,‘அருவம் உருவம்: நகுலன் 100’ உள்ளிட்ட தொகுப்பு நூல்களின் ஆசிரியர்.

தமிழ் விக்கியில் 


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

2 Comments உரையாடலுக்கு

  1. ஆண்களின் உலகிலிருந்தே காமமும் வன்முறையும் பெண்ணை சுற்றித்தான் உருவாயின, பெண்களின் உலகில் காமமும் வன்முறையும் யாரை (ஆண்களின் எதிர்ச்செயலா? )சார்ந்து உள்ளது.

    எனது சந்தேகம் “துப்பாக்கியின் உடல்” பெண்களின் கருத்துக்களை பிரதிபலிக்குமா, பெண்களின் காமம், வன்முறை இரண்டும் ஆணை சார்ந்துதான் உள்ளதா (ஆண் பெண்ணை சார்ந்து உள்ளது போல் ) ஒருவேளை பெண்களின் கட்டுக்குள் இவ்வளவு கடந்த நூற்ராண்டுகள் இருந்திருந்தால் துப்பாக்கிகள் வந்திருக்குமா (காந்தி தென் ஆப்ரிகவில் கொடுத்த எதிர் வினை போன்று இருந்திருக்குமோ )??????

  2. நீங்கள் கேட்டிருக்கும் கேள்வி பெரிதானது. எனக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. மூர்த்தி சார்…

உரையாடலுக்கு

Your email address will not be published.

திரட்டு

சேகரம்

Latest Posts

Go toTop

Don't Miss