சோ.விஜயகுமார் கவிதைகள்

பத்து கனவுகள்

என் கால்களிடம்
நான் பேசிக்கொண்டே நடந்தேன்.

அவை ஏதோ சொல்ல முயன்றன.
நான் கேட்கவில்லை.

கடல் வந்துவிட்டது.

இடுப்பளவு நீரில்
என் உடலை விட்டுவிட்டு
நான் மட்டும்
இன்னும் ஆழத்திற்குச் சென்றேன்.

அலைகள் சிவந்தபோது
திரும்பிப் பார்த்தேன்

என் கால்கள்
கரையிலேயே இருந்தன.

வளைந்து வளைந்து ஆடும்
பட்டத்தின் நூல்போல்
என் குருதியில் ஒரு நூல்
என்னை இன்னும் கரையோடு கட்டியிருந்தது.

000

ஒடுங்கலான சந்தின் இருட்டில்
ஒரு தண்ணீர்க் குழாய்

அந்தக் குழாயின் கீழமர்ந்து
அவசரமாகக் குளித்தேன்.

அங்கு ஆட்கள் வந்தபோதுதான்
நான் நிர்வாணமாக இருப்பதை
நானே அறிந்தேன்.

ஒரு கையால் என்னை மறைத்துக்கொண்டு
மற்றொரு கையால்
தண்ணீரைத் தலையில் ஊற்றிக்கொண்டேன்
எழுந்து ஓட நினைத்தேன்.

என் முதுகில்
ஒரு பை.

அதன் முழுவதும் சோப்பு.

எவ்வளவு தேய்த்தும்
சோப்புக் கறை போகவில்லை.

மாடிப்படிகளில்
கடகடவென்று ஏறினேன்.

அந்த ஒரு நிமிடம்
உலகம் திறந்திருந்தது.

பிறகு
என்ன நடந்தது
எனக்குத் தெரியவில்லை.

000

எனக்குள் எப்போதும்
ஒரு குரல் இருந்தது.

“செத்துடாத.”

எல்லா வீழ்ச்சிகளின் அடியிலும்
அது அதையே சொன்னது.

“செத்துடாத”

ஒருநாள்
சூரியன் என்னைப் பார்த்துச் சிரித்தது.

காரணமே இல்லாமல்
நான் அழுதேன்.

குரல் சொன்னது

“இந்த முறை
நான் உன்னைத் தடுக்கப் போவதில்லை.”

000

குறுவாள்கொண்டு
என் நாக்கை அறுத்தேன்
இடது மணிக்கட்டின் நரம்பை திறந்துவிட்டேன்
வலது கனுக்காலை கீறிவிட்டேன்

கடைசி சொட்டு ரத்தம் வெளியேறும்வரை
நான் அதைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

000

எங்கிருந்தோ மூச்சிறைக்க ஓடினேன்.

யார் துரத்துகிறார்கள்
என்று திரும்பிப் பார்க்கவில்லை.

அடுக்குமாடி கடைகளின்
துணிகளுக்குள்
புகுந்தேன்.

கரும்புச் சோகைக்குள்
புகுந்தேன்.

தூரத்துமரத்தின் கீழ்
ஒரு திண்ணை.
அதில்
ஒரு உருவம்.

ஓடி ஓடி
அதன் மடியில் விழுந்தேன்.
தேம்பித் தேம்பி அழுதேன்.
நிமிர்ந்து பார்த்தபோது
என்னை நான் தேற்றிக்கொண்டிருந்தேன்

000

இரண்டு பேர்
ஒரு ரம்பத்தால்
நிலாவை அறுத்துக்கொண்டிருந்தார்கள்.

அறுக்க அறுக்க நிலா .
நட்சத்திரங்களாய் விழுந்தது

அவர்களிடம் நான் என்
நான் என் கழுத்தைக் கொடுத்தேன்.

ஒவ்வொரு அறுப்பிலும்
ஒரு சொல் விழுந்தது.

000

கண்ணாடியில்
என் மூச்சால் ஒரு பனிப்படலம்.

அதில் உண்மை என எழுதினேன்

கண்ணாடிக்குள் இருந்த கண்கள்
என்னைப் பார்த்தன

முகத்தைக் கழுவினேன்.

முகமூடி கழன்று விழுந்தது

மறுபடியும் கழுவினேன்.
வேஷங்கள் கழன்று விழுகின்றன

மறுபடியும் கழுவினேன்
‘சுயம்’ என்கிற பிம்பம்
கழன்று விழுந்தது

நான்
இன்னும் அழுத்தமாகக் கழுவினேன்

குருதி வடிந்த
உள்ளங்கையில் இருந்தபடி
என் பொத்தலான முகத்தை
என் கண்களால்
நான் பார்த்தேன்

000

நாயொன்று
என்னை நோக்கிப் பாய்ந்தது.

அதை அடிக்கவில்லை.

என் வேட்டியைக் கிழித்து
அதன் வாயைக் கட்டினேன்.

அது துடித்தது.

புரண்டது.
பாய்ந்தது.

நான் என்னை ஒரு மரத்தில் கட்டிக்கொண்டேன்.

கடைசியில்
என் காலால்
அதன் வாய்க்கட்டையும் அவிழ்த்தேன்.

நாய்
என்னை குதறிக் கிழிக்கும்வரை

நான் அசையாமல் நின்றேன்.

000

ஒரு மலை.

மலையின் முடிவில்
கடல்.

கடலுக்குக் கரையில்லை.

மலைக்குப் பின்னால்
மற்றொரு நிலமில்லை.

நான் நின்றிருந்த இடமெல்லாம்
கூர்மையான கத்திகள்.

நான் விழுந்தேன்.

எட்டு துண்டுகளாக மிதந்த என்னை
எந்த மீனும் தொடவில்லை.

என் கண்களில் ஒன்று மட்டும்
ஒரு மீனின் கண்ணருகே
உருண்டு சென்று நின்றது.

அந்த மீன்
என்னைப் பார்த்தது.

நானும்
என்னைப் பார்த்தேன்.

000

ஆளற்ற அறையின் மூலையில்
நான் உட்கார்ந்திருந்தேன்.

என் நிழல்
என் மேல் விழுந்தது.

பிறகு
என்னை விட்டு
சற்றுத் தள்ளி விழுந்தது.

நீண்டது.
நீண்டுகொண்டே போய்
கதவைத் தாண்டியது.

வெளியே சென்றது.

திரும்பி வந்து
கதவைத் திறந்தது.

வெளிச்சம் என்றால்
அப்படி ஒரு வெளிச்சம்.

அதற்குப் பிறகு

நிழலும் இல்லை.
நானும் இல்லை.

சோ.விஜயகுமார்

சோ.விஜய குமார், தமிழில் எழுதிவரும் கவிஞர். உணர்வுத்தீவிரமான கவிதைகளை எழுதுபவர். உயிர்மை இதழின் இணையாசிரியராகப் பணியாற்றினார். "ஒரு ஸ்க்ரோல் தூரம் - (2023)", "சிற்றெறும்பின் நிழல் (2024)","அம்மாவிற்கு ஒரு கண்ணில் பூ(2025)", ஆகிய கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன.

தமிழ் விக்கியில்


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

உரையாடலுக்கு

Your email address will not be published.

திரட்டு

சேகரம்

Latest Posts

Go toTop

Don't Miss