
பாஹர்கஞ்ச்
மொகலாயர் காலத்திய சமாதிகளும்
மலிவான நடனவிடுதிகளும்
பாலியல் தொழிலாளர்களும்
ஒரு காலகட்டத்தில் செழித்திருந்த
பாகர்கஞ்ச் பஜாரில்
நள்ளிரவு கழியும் நேரம்.
பஜாரின் நடுவே
குழல்விளக்கு
சதா எரித்துக்கொண்டிருக்கும்
விடுதி அறை ஒன்றில்
ஆணும் பெண்ணும்
உரக்கச் சண்டையிட்டு அழும் அரவம்
ஓங்கி எழுந்து அமர்கிறது.
வெகுநாட்களாக யாருமே வந்து தங்கியிராத
அந்த 112இலக்கமிட்ட அறையின்
ஜன்னலை வெறித்தபடி
கழுத்தில் முகத்தைப் புதைத்து
டிசம்பர் குளிரில் ஒடுங்கி
குறுக்கும்நெடுக்குமாகச் சிக்கிப் பின்னியிருக்கும்
மின்தடங்களில் கூடமைத்திருக்கும்
சாம்பல் நிறப் புறா
ஜன்னல் வழியாக
அந்த அறையையே
வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறது.
000
எருமைகள்
கழிமுகத்தின் பக்கவாட்டு மேட்டிலிருந்து
கருத்த நீருக்குள்
அரவமேயின்றி
இறங்குகின்றன
மூன்று எருமைகள்.
நீருக்கும் வலிக்காமல்
காற்றுக்கும் வலிக்காமல்
பாறைகளாய் நிலைத்து
நீரில் ஊறத்தொடங்குகின்றன
மெதுவாய் எருமைகள்
முதலைகளாகின்றன.
நீருக்கு மேல் முகம்மட்டும் காட்டி
கழிமுகத்தின் நடுவேயுள்ள
பசுந்தீவை நோக்கி மிதக்கின்றன
அந்த எருமைகளின் உடலிலிருந்து
நீரைத்தவிர வேறெதுவுமே
சொட்டுக்கூட கசியவில்லை.
000
ஷங்கர்ராமசுப்ரமணியன், தமிழில் எழுதிவரும் கவிஞர், விமர்சகர். ‘இகவடை பரவடை, நிழல் அம்மா, ஆயிரம் சந்தோஷ இலைகள், கல் முதலை ஆமைகள் முதலிய கவிதைத்தொகுதிகள் வெளிவந்துள்ளன. பிறக்கும்தோறும் கவிதை, நான் பிறந்த கவிதை, நினைவின் குற்றவாளி ஆகிய கட்டுரைத் தொகுப்புகளையும் எழுதியுள்ளார். விக்ரமாதித்யன் கவிதைகள் ,‘அருவம் உருவம்: நகுலன் 100’ உள்ளிட்ட தொகுப்பு நூல்களின் ஆசிரியர்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.

