
தன்னுளநிலை வரைவு
கவிஞன் என்பவன் பாசாங்குகாரன்
அவன் எந்தளவு முழுமையாகப் பாசாங்கு செய்கிறானென்றால்
தான் உண்மையில் உணரும் வலியைக்கூட
ஒரு பாவனை வலியாக்கிவிடுகிறான்.
அவன் எழுதுவதை வாசிப்பவர்கள்,
வலியைப்பற்றிப் படிக்கும்போது,
உண்மையில் உணர்வது
அவன் உணர்ந்த இவ்விரண்டு வலிகளையும் அல்ல,
அவர்கள் இது வரை உணர்ந்திராத மற்றொரு வலியை.
இப்படியாக, நம் தர்க்கங்களை விழிப்புடன் வைத்திருக்க
தன் தடத்தில்
சுற்றிச் சுற்றி ஓடிக்கொண்டிருக்கிறது
மனிதர்கள் ‘இதயம்’ என்று அழைக்கும்
இந்தத் தொடர்வண்டி.
000
எண்ணிலடங்காதவைகள்
நமக்குள் எண்ணற்றவர்கள் வாழ்கிறார்கள்;
நான் சிந்திக்கும்போதும் உணரும்போதும்
சிந்திப்பதும் உணர்வதும் யாரென
எனக்குத் தெரியாது.
நான் வெறும் உணர்வுகளும் சிந்தனைகளும்
நிகழும் ஓர் இடம்.
எனக்குள் ஒன்றுக்கு மேற்பட்ட ஆன்மாக்கள் இருக்கின்றன.
என்னைவிட அதிகமான ‘நான்’கள் இருக்கின்றன.
இருப்பினும் நான் இருக்கிறேன் —
அவை அனைத்திற்கும் அப்பாற்பட்டவனாய்
நான் அவற்றை மௌனமாக்குகிறேன்;
நான் பேசுகிறேன்.
நான் உணர்பவைகளுக்கும் உணராதவைகளுக்குமான
முரண்பட்ட தூண்டுதல்கள்
நானெப்படுபவன் யார் என
தங்களுக்குள் சண்டையிடுகின்றன.
நான் அவற்றைப் பொருட்படுத்துவதில்லை.
நான் அறிந்த அந்த நானுக்கு
அவை எந்த ஆணையையும் இடுவதில்லை.
நான் எழுதுகிறேன்.
000
பனிமூட்டத்தைப் போல
மூடுபனியைப் போன்ற
ஒன்று எனக்குள் இருக்கிறது
வெறுமனே இருப்பதுவும்
தனக்குள் ஒன்றுமற்ற ஒன்றை
வைத்திருப்பதுவுமான ஒன்று.
ஒன்றுமற்ற ஒன்றின் மீதான ஓர் ஏக்கம்,
அழகான ஏதோ ஒன்றிற்கான விருப்பம்.
அடர்ந்த பனிமூட்டத்தைப் போன்ற
அதனால் நான் சூழப்பட்டு இருக்கிறேன்.
என் சாம்பற்கிண்ணத்தில்
எஞ்சியிருக்கும் சிகரெட்டுத்துண்டின் நுனியில்
கடைசி நட்சத்திரம் ஒளிர்வதைக் காண்கிறேன்.
நான் வாழ்க்கையைப் புகைத்தே தீர்த்து விட்டேன்.
நான் பார்த்ததும் படித்ததும்
எத்தனை நிச்சயமற்றவை!
இந்த உலகம் முழுவதும்
விரித்து வைக்கப்பட்ட ஒரு பெரும் புத்தகமாய்
நான் அறிந்திராத ஒரு மொழியில்
என்னைப் பார்த்துப் புன்னகைக்கிறது.
000
வலிக்கச்செய்யும் ஒன்று
எனக்கு வலியைத் தருவது
இதயத்தில் இருக்கும் ஒன்று அல்ல,
ஒருபோதும் இருந்திருக்கவே முடியாத
அந்த அழகான விஷயங்களே.
அவை வடிவமற்ற வடிவங்கள்,
அவற்றை அறியும் ஆற்றலோ அல்லது
கனவு காணும் விருப்பமோ இல்லாத எனக்கு
எந்த வலியும் தராமல் கடந்து செல்பவை.
துயரம் என்பது ஒரு மரமாக இருந்தால்,
அதன் மிச்சங்களுக்கும் பனிமூட்டத்திற்கும் இடையே
அதன் இலைகள் ஒவ்வொன்றாக உதிர்வது போலவும்
அவை இருக்கின்றன.
000
நான் ஒரு மேய்ப்பன்
நான் ஒரு மேய்ப்பன்.
என் எண்ணங்களே எனது ஆடுகள்,
என் எண்ணங்கள் அனைத்தும் புலனுணர்வுகள்.
என் கண்களாலும் காதுகளாலும்,
என் கால்களாலும் கைகளாலும்,
என் மூக்கினாலும் வாயினாலும்
நான் சிந்திக்கிறேன்.
ஒரு பூவைச் சிந்திப்பது என்பது
அதனைப் பார்ப்பதும் நுகர்வதும்;
ஒரு பழத்தை உண்பது என்பது
அதன் பொருளை அறிவது.
ஆகவே ஒரு கடுமையான வெயில் நாளில்,
அதை இவ்வளவு ரசிப்பதைப் பற்றிய
இலேசான வருத்தத்துடன்
நான் புல்லின் மீது உடலைச் சாய்த்து
படுத்துக்கொள்கிறேன்;
வெப்பமேறிய என் இமைகளை மூடுகிறேன்
யதார்த்தத்தின் மீது சாய்ந்திருக்கும்
என் முழு உடலையும் உணர்கிறேன்.
நான் உண்மையை அடையாளம் காண்கிறேன்.
நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
000
துறவு
முடிவற்ற இரவே, என்னை உன்
கரங்களில் ஏந்திக்கொள்,
என்னை உன் மகனென்று அழை.
சலிப்புகளாலும் கனவுகளாலுமான என் அரியணையை
விருப்பத்துடன் துறந்த மன்னன் நான்.
களைத்த என் கரங்களைக் கனக்கச் செய்த என் வாளை,
அமைதியும் ஆற்றலும் கொண்ட
கரங்களிடம் ஒப்படைத்துவிட்டேன்.
என் மணிமுடியையும் செங்கோலையும் துண்டுத்துண்டாக உடைத்து
முன்னறையிலேயே விட்டு விட்டேன்.
பயனற்றுப் போன என் கவசத்தையும்
வீணாக ஒலியெழுப்பும் என் காலணியின் குதிமுட்களையும்
குளிர்ந்த படிக்கட்டுகளிலேயே விட்டுவிட்டேன்.
உடலாலும் உள்ளத்தாலும் அரசபோகத்தைத் துறந்து,
மங்கிய ஒளியில் தெரியும் ஒரு நிலக்காட்சியைப் போல
தொன்மையான, அமைதியான இரவிடம் திரும்பிவிட்டேன்.
யாரும் இன்னொருவரை நேசிப்பதில்லை
யாரும் இன்னொருவரை நேசிப்பதில்லை; மாறாக,
இன்னொருவரிடம் இருக்கும்
அல்லது இருப்பதாகக் தாங்கள் கற்பனை செய்யும்
தங்களுடைய பிம்பத்தையே அவர்கள் நேசிக்கிறார்கள்.
உன்னை யாரும் நேசிக்கவில்லை என்று வருந்தாதே.
நீ யார் என்பதை அவர்கள் உணர்கிறார்கள்
நீ ஒர் அந்நியன்
நேசிக்கபட்டாலும் படாவிட்டாலும், நீ நீயாகவே இரு.
நீயாகவே இருப்பதில் உறுதியாக இருந்தால்
துயரங்களைக் குறைவாகவே உணர்வாய் .
000

பா.ரேவதி
சிங்கப்பூரில் வசித்துவரும் பா.ரேவதி, கல்வித்துறையில் பணியாற்றி வருகிறார். ஆனந்த விகடன், அவள் விகடன், மங்கையர் மலர் ஆகிய இதழ்களில் கவிதைகள் எழுதியுள்ளார். சிங்கப்பூரில் வெளிவரும் 'தி சிராங்கூன் டைம்ஸ்' மாதாந்திர இதழிலும் , நுட்பம் , நீலி ஆகிய மின்னிதழ்களிலும் இவரின் பல்வேறு கட்டுரைகள் வெளிவந்துள்ளன. தற்சமயம் சிறுகதைகளும் எழுதிவருகிறார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
