கருணாகரன் கவிதைகள்


எல்லாவற்றையும் எது எடுத்துக் கொண்டது?
எல்லாவற்றையும் எதனிடம் இழந்தோம்?

தீரா வெக்கையில் தணியாத தாகத்தோடிருக்கும்
நிர்ப்பத்தத்துள் திணிக்கப்பட்டனவா நம்முடைய நாட்கள்?

அருகில் உள்ள ஒற்றை மலரும் கண்முன்னே உதிர்வதேன்?
வெறுமையான வானத்தை
இன்னும் எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டேயிருப்பது?

காற்றேயில்லாத இந்தக் கோடையில்
எக்கணமும் தீ மூளலாம்.
இந்த நேரத்தில்தானா
அம்புலன்ஸின் ஒலி கேட்க வேண்டும்?

எல்லாக் கோடையையயும் விட இந்தக் கோடை மட்டும்
அதிகமாகக் கொதிப்பதேன்?
அதிகமாக கனப்பதேன்?

00

தாமதமாகத்தான் வர முடிந்தது
அதற்குள் நீ சென்று விட்டாய் அல்லது தூங்கி விட்டாய்.

காத்திருப்பின் கடைசிப் புள்ளியில் இருப்பவளிடம்
தாமதங்களுக்கான காரணத்தைச்
சொல்வதற்கான வார்த்தைகளில்லை.
வார்த்தைகளிருந்தாலும் அவற்றுக்கு மதிப்பில்லை

எடுத்து வந்த மலர்களையும் கனிகளையும்
உன்னிடம் தராமல்
எங்கே வைப்பதென்று புரியவில்லை

அதனால்தானா இவ்வளவு கெதியாக வாடுகின்றன?

00
தனித்திருக்கவில்லை நான்
இந்தக் கோடையுடனிருக்கிறேன்
இந்தக் கோடை
என்னோடுள்ளது

தகிக்கும் வெக்கையில் அனலாகிறேன்
அனலில் சுடராகிறேன்
சுடரில் ஒளியாகிறேன் அன்பே!

இந்தக் கோடையை ருசிக்கிறேன்
இதன் கோதையுடைக்க உடைக்க
உள்ளே பேரன்பின் ஊற்றுச் சுரக்கக் கண்டேன்
அதில் திளைக்கிறேன்

இந்தக் கோடையும் நானும்
ஒன்றாயிருக்கிறோம்

நான் கோடையின் மலராகப் பூத்திருக்கிறேன்

00

படியிறங்கினால் தெரு
ஏறினால் வீடு

வீட்டினுள் கொந்தளிக்கும் குரல்கள்
வீதியில் அலையும் மனிதர்கள்

கொந்தளிக்கும் குரல்களிலும்
அலையும் மனிதர்களிலும் ஒன்றானேன்

ஒன்றாயிருத்தல் என்பது
நன்றாகத்தானிருக்கும் என்று
இதைத்தான் சொன்னாயா நண்பா?

00

விட்டு விடு நினைவின் நதியை
காய்ந்துலர்ந்து போகட்டும்

எந்த முகமும் பெயரும் வேண்டியதில்லை
சுமைகளை நீங்கி விடலாம்

காற்றில் வெயிலின் ஒளி சுடர்கிறது
ஆயிரமாயிரம் மலர்களின் வாசனை பரவி
இந்த நாள் நிரம்புகிறது

ஒரு சின்னஞ்சிறு மலரென
குழந்தையொன்று
நம்மைக் கடந்து செல்கிறது

சிறு பறவையொன்றின் நினைவு ஏனோ எழுகிறது

மண்ணில் என்னவோ என்று தெரியாத ஒன்றைக் கண்டெடுக்கிறாய்
என்ன அது?

யாருடைய நினைவது?

00

அவசரமாக ஒன்றுக்கடித்துத் திரும்புகையில்
இந்த வாழ்க்கை ஒரு கணம் இலகுவாயிற்று
ஆ..ஹா.. என்னவொரு சுகம்
என்னவொரு சுமையிறக்கம்

கண்கணை மூடி
வான்னோக்கி ஒரு கணம் அற்புதம் என்றார் ஞானம்

அந்த அற்புதக் கணம்
மெல்ல மெல்லக் கரைந்து அடிமடியில் பாரமாகியது

மீளவும் ஒன்றுக்கடிக்கும் வரையில்

00

திடீரென என் முன்னே
சில தெய்வங்களும் பிசாசுகளும் தோன்றின
வண்ணவண்ணமான தெய்வங்கள்
வண்ணமிழந்த பிசாசுகள்
தெய்வங்களைத் தொழுது விடலாம்
பிசாசுகளை?

தொழுகையும் விசுவாசமும் இல்லாத
பிசாசுகளையிட்டு இரக்கமானேன்

இரக்கமானவன் பிசாசுகளோடு நெருக்கமானேன்
பிசாசுகளின் அன்பு தெய்வத்துக்குச் சமன்
தெய்வங்களோ பிசாசுகளுக்கு நிகர்

என்பதால்தானா
ஒளியும் நிழலுமாக
தெய்வங்களும் பிசாசுகளும்
எப்போதும் ஒன்றாகவேயிருக்கின்றன?

00

வேறொன்றுமில்லை
நீ ஒளியோடிருக்கிறாய்
நான் நிழலோடு

நீ பகலோடு
நான் இரவோடு

நீ வானோடு
நான் மண்ணோடு

நீ அலையோடு
நான் கடலோடு

நீ மலரோடு
நான் காற்றோடு

நீ உன்னோடு
நான் உலகோடு

000

கருணாகரன்

கருணாகரன் ஈழத்தில் நன்கு அறியப்பட்ட தமிழ்க்கவிஞர். எழுத்தாளர், சுயாதீன ஊடகவியலாளர், இதழாளர், பதிப்பாளர், விமர்சகர், ஈழப்போராட்டத்தில் பங்கேற்ற போராளி எனப் பல தளங்களில் தொடர்ச்சியாகவும் தீவிரமாகவும் இயங்கி வரும் இவருடைய கட்டுரைகளும் கவிதைகளும் மிகப் பரவலான அறிமுகத்தையும், விமர்சனத்தையும் கண்டவை


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

உரையாடலுக்கு

Your email address will not be published.

திரட்டு

சேகரம்

Latest Posts

Go toTop

Don't Miss