
அன்று ஒரு வெயில் நாள்.
இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் சம்மர் டே என்று சிலர் சொல்லக்கூடும். சென்னையில் மழைக்காலத்திலோ பனிக்காலத்திலோ வெயில் அடிக்காதா என்ன? அத்தனைத் தெளிவாகப் பிரிக்க முடியுமா? பாருங்கள், என் உடலெங்கும் வேர்வைப்பொட்டுகள். எல்லாத் திசைகளிலும் பார்க்கக்கூடிய கண்கள் போல. அந்தப் புத்தகக்கடையின் நுழைவாயிலருகே இருந்த புத்தக அடுக்குகளைச் சுற்றி நான் அரைமணி நேரம் செலவிட்டதற்கு ஒரு காரணம் உண்டு. சொல்கிறேன்.
பத்துக்குப் பத்து அளவுள்ள கல்லூரி விடுதி அறையின் புழுக்கத்தை வெல்ல ஏசி வேண்டுமே என்று அந்தப் புத்தகக்கடையில் நுழைந்தவன் நான் அல்லன். நம்புங்கள். உண்மையாகவே ஒவ்வொரு பக்கத்தையும் கவனமாக வாசித்துப் புரிந்துகொள்பவன். ஒரு பக்கம் முடிய இன்னும் சில சொற்கள் இருக்கும்போதே என் கண்கள் வேகமாக அந்தச் சொற்களை எடுத்துக்கொண்டு விடும். அப்போதே என் விரல்கள் அடுத்தப் பக்கத்தைத் திருப்பும். புது பக்கத்துச் சொற்களை என் கண்கள் வாசித்து பழையச் சொற்களோடு இணைத்து விடும். அந்த இணைப்பு என் நனவு மனத்திற்குத் தெரியாமலேயே நிகழும். இப்படித் தடையின்றி வாசிக்கக் கூடிய ஒருசில தமிழ் ஜீவன்களில் ஒருவன் நான்.
புது புத்தகக்கடையென்றால் எது எங்கே இருக்கிறது என்று சிறிது தடுமாற வேண்டியிருக்கும். தடுமாற்றத்தைக் காட்டாமல் இருப்பது உங்களின் பாடு. இப்பொழுதெல்லாம் புதிய கடைகளில் நுழைந்தவுடனேயே அபுனைவுப் புத்தகங்களை அடுக்கி நம் முகத்தில் திணித்துவிடுகிறார்கள். “யார் இதற்குப் பொறுப்பு?”, “சிரிப்பும் அதனுள் பொதிந்திருக்கும் மனிதமும்” என பெயரிட்ட புத்தகங்கள், “நான் நீர்கொண்டுவரும் வாட்டர்பாயாக இருந்த காலங்களில்” என விசித்திரமான தலைப்பிட்டு வேறொருவரால் எழுதப்பட்ட ஒரு கிரிக்கெட் வீரரின் தன்வரலாற்று நூல் என பல புத்தகங்கள் கடைக்கு வெளியிலிருந்து கூட தெரியும். பழகிய புத்தகக்கடையென்றால் நம் கால்கள் நம் சிந்தனையைக் கிண்டாமலேயே நாம் வேண்டுகின்ற இடத்திற்கு அழைத்துச் செல்லும். சனி என்றால் யார் எங்கு இருப்பார்கள் ஞாயிறென்றால் யார் குறட்டை விடுவார்கள் என்று அறிந்துகொள்ள நவீன கேமரா கண்காணிப்போ, அதிலுள்ள மனித முகத்தைக் கண்டறியும் தொழில்நுட்பமோ தேவையில்லை.
புதியதோ பழையதோ, புத்தகக்கடைகள் அப்போது ஒரு புதிய பழக்கத்தைத் தொடங்கியிருந்தன. இதோ பாருங்கள், நான் நுழைந்த அந்தக் கடையையே எடுத்துக்கொள்ளுங்கள். பழக்கப்பட்ட கடைதான். ஆனால், அப்போதுதான் ஒரு டிரெண்ட் தோன்றியிருந்தது. புத்தக அடுக்குகளை விதவிதமான வடிவங்களில் அமைப்பது. அன்றைக்குச் சில மாதங்களுக்கு முன், ஏதோவொரு புனிதச் சனியில் அவற்றை முதலில் கண்டேன். சுழன்று சுழன்று ஒரு டவர் போன்று இருந்தது ஒன்று. குறுக்கும் மறுக்குமாக அடுக்கப்பட்ட வரிசை மற்றொன்று; அதில் ஒரு புறம் நோக்கி ஒரு புத்தகம், எதிர்த்திசை நோக்கி மற்றொரு புத்தகம். அவற்றை முதலில் பார்த்து, தலையை இடதும் வலதும் சாய்த்துச் சாய்த்து நூல்களின் தலைப்புகளைப் படித்ததால், மாலையில் விடுதியறைக்குத் திரும்பும்போது ஐயோடக்ஸ் குப்பி ஒன்றை வாங்க வேண்டியிருந்தது என்பதை இங்குச் சொல்ல வேண்டியது என் கடமையாயிருக்கிறது.
ஆனாலும், அன்று அந்தக் கடையின் உள்ளே வாசலுக்கு அருகிலேயே அந்தச் சுழலும் அடுக்குகளுக்கு மத்தியிலேயே நின்றுகொண்டு வியந்து அரை மணிநேரம் செலவிட்டேன் என்பதை மறுக்க முடியாது. அன்று கேட்டிருந்தால் ஒப்புக்கொண்டிருக்க மாட்டேன். ஆனால் இன்று அப்படியில்லை. ஒப்புக்கொள்வேன். நான் ஏன் மறைத்துக்கொள்ளவேண்டும்? எனக்கு அழகியலில் விருப்பம் உண்டு என்றும் அதனால் எதையும் கலைநயத்தோடு ரசிக்கத் தெரிந்தவன் என்றும் என் கணவனைக் கேட்டால் சொல்லுவான். இதனை உறுதிப்படுத்திக்கொள்ள உடனே அவனை அழைக்க முயலவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இதற்கெல்லாமா ஒருவனைத் தொந்தரவு செய்வார்கள்?
புத்தக டவர்களைப் பார்த்தால் எனக்கு உயரமான கட்டிடக் குடியிருப்புகள்தாம் நினைவுக்கு வரும். ஒவ்வொரு பக்கமும் சிறுசிறு ஜன்னல்கள். அவற்றில் வாழும் மனிதர்கள் எட்டிப்பார்க்க மாட்டார்கள். நாம் அவர்களைத் தாராளமாகப் பார்த்து அவர்களின் வாழ்க்கையைத் தெரிந்து கொள்ளலாம். கட்டிடங்களை வெளியிலேயே நின்று வேடிக்கைப் பார்த்து, அவற்றைக் கடந்து போகிறவர்களே மிகுதி. நான் அதிலொருவன் கிடையாது என்று உங்களுக்கு இந்நேரம் தெரிந்திருக்கும். தமிழ்க் கட்டிடங்களில் என்னைப் போன்ற கதாபாத்திரங்கள் இல்லையே என்று அவ்வபோது யோசிப்பதுண்டு. ஆனாலும் ஒவ்வொரு ஜன்னலிலும் புகுந்து அந்தக் கதாபாத்திரங்களாகவே வாழக்கூடியவன் நான். அந்தக் கதாபாத்திரங்களின் தன்மைகளை என் நிஜ வாழ்க்கையிலும் ஏற்று மல்லுக்கட்டி வாழ்கிறேனோ என்ற சந்தேகம் கூட சில சமயம் வரும். ஆனால் அந்த அறைகூவலிலும் ஒரு விறுவிறுப்பு இருக்கிறது என்று நினைத்துக்கொள்வேன். தமிழ்ச்சினிமா காதல் பாடல்களில் வரும் “அவள்” என்ற பொருள்படும் சொற்களையெல்லாம் மனத்துக்குள் “அவன்” என்று மாற்றிப்பாடினால் மனம் சமநிலை அடைந்துவிடும். இசையும் தாளமும் அப்படியே; மாறுவது சொல் மட்டும்தான்.
அரைமணி நேரம் அந்தப் புத்தக அடுக்குகளைச் சுற்றி நான் செலவிட்ட காரணத்திற்கு இப்போது வருகிறேன். அந்தச் சுழல்களுக்கு மத்தியில் ஒரு புத்தகம் இருந்தது. கனமான பொருள் இந்த வெளியையே வளைத்துவிடும் என்று பள்ளிக்காலத்தில் இயற்பியலில் படித்த நினைவு. அந்த வளைவு பொருட்களை இழுத்துக்கொள்ளுமாம். நூற்றுக்கு அறுபத்தியேழு மார்க்குக்கு இந்த நினைவே அதிகம். என் பார்வை தானாகவே அந்தப் புத்தக அடுக்கைச் சுற்றிய வெளியில் வளைந்து, அந்தப் புத்தகத்தை நோக்கி இழுக்கப்பட்டது. பாதி அட்டைதான் தெரிந்தது, தலைப்பு ஏதோ ‘இனிமை’ என்று முடிந்தது. அட்டைப்படத்தில் இருவர் இருந்ததுபோலத் தெரிந்தது. டக்கென்று பிடுங்கி எடுப்பதற்கு வழியில்லாமல் அது பல வெவ்வேறு புத்தகங்களின் கீழ் இருந்தது. ஆம், அந்தச் சுழல் புத்தகங்கள் தாம். அதுவும் அந்தப் புத்தகத்தின் ஒரே ஒரு பிரதிதான் அந்த மேஜையில் இருந்தது என்பதைக் கண்டுகொண்டேன். மேலும் பிரதிகள் அலமாரிகளில் இருக்கலாம். அந்த வட்ட மேஜையையேச் சுற்றி வந்தேன். எந்தக் கோணத்தில் பார்த்தால் புத்தக முதுகெலும்பு தெரியும் என்று கணக்கெடுத்தேன். எந்தப் பதிப்பாளரோ தெரியவில்லை, அடே புண்ணியவான்களா, புத்தகத்தின் முதுகில் தலைப்பை எழுதித் தொலையுங்களேன். வெறும் எழுத்தாளர் பெயர் மட்டுமே எழுதப்பட்டிருந்தது. அந்தப் பெயரை நான் சொல்வதாயில்லை. சரியென்று, அந்தப் புத்தகத்தின் மேலுள்ள புத்தகத்தை மெதுவாக விலக்க முயன்றேன். தலைப்பைக் கண்டுபிடித்தால் போதும். கொஞ்சமே நகர்த்த முடிந்தது. இல்லை, தெரியவில்லை. தலைப்பின் கீழ் நாவல் என்று எழுதியிருந்தது தெரிந்தது. அப்பாடா, அபுனைவு புத்தகம் அல்ல இது. தலை நிமிர்ந்து, இயல்பாகப் பார்ப்பது போல் சுற்றி ஒரு முறை பார்த்துக்கொண்டேன். பின்னர், செல்பேசியை எடுத்து, மெசெஜ் பார்ப்பதுபோல் திரையை ஒருமுறை கட்டைவிரலால் தள்ளிவிட்டு, மீண்டும் பாக்கெட்டில் வைத்துக்கொண்டேன். மூச்சைப்பிடித்துக்கொண்டு மேலுள்ள புத்தகத்தை இன்னும் சில சென்ட்டிமீட்டர்கள் நகர்த்தினேன். இரண்டு ஆண்கள் நிற்பது போல அட்டைப்படம் தெரிந்தது. முழு அட்டையின் நிறம் ஒரு தைரியமான மஞ்சளில் இருந்தது. சரிதான், இனிமையான இரண்டு ஆண்களைப் பற்றிய நாவல் போலும். கண்டுபிடித்துவிடலாம் என்று நினைத்தேன்.
பலமுறை வந்துபோகும் இடமாதலால் புத்தகக்கடை உரிமையாளர் எனக்கு ஓரளவுக்குத் தெரிந்தவர் தான். கட்டணக் கவுன்ட்டர் அருகிலோ அல்லது ஏதோவொரு வாசிப்பு மேஜையின் நாற்காலியிலோ அமர்ந்திருப்பார். பில் போட மற்ற வேலையாளர்கள் இருப்பார்கள். அப்போது அவர் கடையில் இல்லை. அவர் உணவுக்காக வீட்டுக்குச் சென்றிருக்கும் நேரம் அது; திரும்பி வர இன்னும் ஒரு மணிநேரமாவது ஆகும். என்ன கணக்கோ? கவுன்ட்டரிலும் புதிய ஆட்கள் இருப்பது போல தோன்றியது. சரி, இப்போது அப்புத்தகத்தைத் தேட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உறுதிகொண்டேன். பழகிய புத்தகக்கடை என்று ஏற்கனவே சொல்லிவிட்டேனே; சோழரின் வளநாடுகள் போல இருக்கும் அலமாரிகளின் பகுப்புகள் எனக்கு அத்துபடி. எந்தெந்த அலமாரிகள் எந்தெந்த புத்தகங்களுக்கானவை என மேலே எழுதப்பட்டிருக்கும் பகுப்புத் தலைப்புகளைத் தலைநிமிர்ந்து பார்த்து வாசிக்கத் தேவையில்லை. யாரையும் கேட்கக்கூட வேண்டாம். இந்தச் சமயத்தில் யாரையும் கேட்கத் தேவையில்லை என்பதுதான் உத்தமம்.
பால்புதுமை என்று பெயரிடப்பட்டிருந்த அந்த வளநாட்டுப் பிரிவுக்கு வந்தபோது அது காலியாக இருந்தது; திருப்தி. யாருமில்லாமலிருக்கையில் பயமேன். பெங்களூர் புத்தகக் கடைகளில் இந்தப் பிரிவுகளில் நிறையபேர் இருப்பார்களாம். அங்கு நிற்பது ஓர் அடையாள அட்டை போன்றதாம். டேட்டிங் ஆப்ஸ் வந்துவிட்டன தாம். அவற்றைப் பயன்படுத்தாத என்னைப் போன்ற நபர்களுக்கு இவை பயனளிக்குமோ? அதை விடுங்கள். இப்போது மீனின் கண்கள் தாம் என் ஒரே குறிக்கோள்; அவற்றை நோக்கியே செல்லவேண்டும். என் தேரோட்டத்தைத் தடுக்கச் சக்கரத்தை மட்டும் நிலத்துக்குள் புதைத்துவிடாதீர்கள், ப்ளீஸ்.
தேடவே வேண்டியிருக்கவில்லை. அதுதான் தைரியமான மஞ்சள் நிறம் என்று சொன்னேனே. அந்தப் புத்தகத்தின் பல பிரதிகள் வரிசையாக அலமாரியில் இருந்தன. மெய்கண்டேன் மெய்யே கண்டேன் என்று கையில் எடுத்துப் பார்த்தபோது அப்புத்தகம் என்னுள் ஒரு கிளர்ச்சியை உண்டாக்கியது என்பதை மறுப்பதற்கில்லை. மிகச்சரியாக நானூறு பக்கங்கள் கொண்ட நாவல். ஒருவேளை எழுதியவர் சமணராக இருப்பாரோ என்று தோன்றியது. அவர்களுக்குத்தான் எல்லாம் நான்கு நான்காக இருக்க வேண்டுமே. சே சே இருக்காது. நாலாயிர திவ்யபிரபந்தம் கூட இருக்கிறதே. இலக்கியத் தரம் மிகுந்த நாவல் என்று போட்டிருந்தது. கிரிட்டிக்கலி அக்கிளெய்ம்டாம்; ஏதோ சில பரிசுகளைக்கூட வென்றிருக்கிறதாம். அதானே, இலக்கியத் தரம் இருந்தால், காதலும் காமமும் வழிய வழிய இருக்கக்கூடாதா, சீவகசிந்தாமணி இருக்கிறதே.
புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு தலைப்பைப் பார்த்தேன். லட்சணத்தைப் பாருங்கள்: ‘புல்லாங்குழலின் இனிமை.’ வழவழப்பாக மின்னும் எகிப்திய கருங்கல் சிலைகளைப் போன்ற உடல்கள் கண்களின் முன்னால் உரசிக்கொள்வதுபோல் இருந்தால், எழுத்துக்கெல்லாம் என்ன பயன். ஒன்றுமில்லை, இரண்டு இளைஞர்களின் படம்தான். அந்த அட்டைப்படத்திலிருந்து கண்களை விலக்கி, உள்ளே இருக்கும் எழுத்துகளுக்குச் செல்வதே ஏதோ கரிய பெருங்கடலை நீந்திக் கடப்பதுபோல ஆகிவிடுமோ என்று தோன்றியது. அப்படியெல்லாம் இல்லை, நான் ஒரு தீவிர இலக்கிய வாசகன்; நாவலின் வீச்சும் ஆழமும் தரிசனமுமே எனக்கு முக்கியம், அட்டைப்படம் அன்று.
புலித்தோல் போர்த்திய பசு என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறாரே. இந்தப் புத்தகத்திற்கு ஒரு லெதர் அட்டை இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று யோசித்தேன். நான் என்ன, புலியின் தோலையேவா கேட்கிறேன். புலித்தோல் அட்டையாக இருந்தால், அதை வாங்க அவ்வளவு காசிற்கு நான் எங்கு போவேன்? அப்போ பசுத்தோல்? சரி, அதுவும் கூட வேண்டாம். ஆட்டுத்தோல்? இப்போதுதான் ஃபா-லெதர் என்று ஏதோ ஆங்கிலத்தில் சொல்கிறார்களே, அது இருக்கிறதாமே. லெதர் மாதிரியே தோற்றமளிக்கும், தொடுவதற்கும் லெதர் மாதிரியே இருக்கும், லெதர் மாதிரியே வாசனை வரும் என்று கூட சொல்கிறார்கள். ஆனால், அது தோல் இல்லையாம். வேஷத்தோல் என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன். அதில் ஒன்றை எடுத்து இந்தப் புத்தகத்துக்குப் போட்டுவிடக்கூடாது? அப்படி இருந்தால், நான் மாட்டுக்கும் வந்தேனா எடுத்தேனா சென்றேனா என்று இருந்திருப்பேன்.
ஒருவேளை இந்தப் பிரிவுக்குள் நுழையும்போது வேண்டுமானால் சிறுதயக்கம் ஒன்று இருந்திருக்கலாம். ஆனால் நான்தான் விரைவாகக் கிளம்பிப்போபவன் ஆயிற்றே. ஹ்ம்ம், இப்போது அதற்குப் பயன் இல்லை. எந்த வெயிலிலும் பளிச்சென்று தெரியும் நிறத்தில் அட்டை போட்டிருக்கிறார்கள். இந்த அட்டையை வடிவமைத்தவனை ஒன்றும் சொல்வதற்கில்லை. அழகை ஆராதிப்பவனாகவே இருக்கவேண்டும். மைக்கலாஞ்சலோவின் வழிவந்தவனாக இருக்கவேண்டும் என்று நினைத்தேன். வரிசையாக அழகான காதலர்களைக் கடந்து ஒரு கணவன் வரை வந்த பின், இப்போது யோசித்துப் பார்க்கிறேன், மைக்கலாஞ்சலோவிற்கு வெண்பளிங்கென்றால், எனக்குப் பழுப்பும் கருப்பும். அன்று அந்தச் சுழல் அடுக்குகளுக்கு நடுவே சிக்கிக்கொண்ட பையனுக்கு இதெல்லாம் எங்கே தெரிந்திருக்கும்.
அந்தச் சமயத்தில் இன்னொரு எண்ணமும் கூடவே எழுந்தது. ஒருவேளை அட்டையை வடிவமைத்தது பெண்ணாக இருந்தால்? இருந்தால் எனக்கென்ன ஆகவேண்டியிருக்கிறது? யார் என் கண்களைக் குளிர்வித்தால் என்ன? ஆயிரம் நன்றிகள் என் மனத்திலிருந்து எழாமல் இருக்குமா என்ன? பெண்களுக்குக் கூரிய நுண்ரசனை உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். கூர்மையானவற்றில் அவர்களுக்கு ஈடுபாடு உண்டு. நான் இரண்டாம் வகுப்பு படிக்கும்போது வகுப்பில் என் அருகில் அமர்ந்திருந்த சிறுமி எப்போதும் பென்சிலைக் கூர்மையாகவே வைத்திருப்பாள். ஷார்ப்பனர் கையுமாகத்தான் எப்போதும் இருப்பாள். மிக்கி மவுஸ் போட்ட இரண்டடுக்கு பாக்ஸில் மூன்று பென்சில்கள் வைத்திருப்பாள். நான் பெஞ்சிலேயே என் பென்சிலை கீறி கூர்மையாக்கினால் கோபப்படுவாள். ஏன் என்று கேட்டால், பெஞ்சில் பட்டால் தன் கை கருமையாகிவிடும் என்பாள். நான் அந்தக் கரிய இடத்தில் என் ஆள்காட்டி விரலைத் தேய்த்து, ஒன்றும் ஆகாது என்று காட்டுவேன். உவ்வே என்பாள். எட்டாம் வகுப்பு படிக்கும்போது மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் தனித்தனி வரிசை பெஞ்சுகள்; அருகருகே அமர முடியாது. அந்த ஆண்டில் ஒருநாள், இரண்டாம் வகுப்பில் நடந்த அந்தப் பெஞ்சுச் சம்பவம் நினைவுக்கு வந்து தொலைத்தது. அதனால், ஏதோ விளையாட்டாகச் சாப்பாட்டுச் சமயத்தில் அவள் அருகே சென்று, பென்சில் கரியை என் விரலில் தேய்த்துக்கொண்டு அவள் கன்னத்தில் அதை மிருதுவாக தேய்த்து இழுத்துவிட்டேன். உடனடி எதிர்வினையாக என்னைத் திட்டிவிட்டாள். ஆனால், பின்னர் அதை அவள் ஒரு புதுநெருக்கமாக எடுத்துக்கொண்டாளோ என்று எனக்குத் தோன்றியது. முன்பெஞ்சுப் பையனின் கழுத்தோரக் குழல்முடிகளில் அல்லவா என் மனம் அப்போது இருந்தது; ஏதோ ஒரு சாக்குச் சொல்லி அவளிடமிருந்து தப்ப வேண்டியிருந்தது. இப்போது அந்தச் சம்பவங்களை அவள் நினைத்துப் பார்த்தால் ஜாலியாக எடுத்துக்கொண்டு புன்னகைப்பாள் என்றே நம்புகிறேன். என் நினைவுகளில் நான்தான் ஆபத்தற்றவன் ஆயிற்றே.
புத்தகத்தைக் கையில் எடுத்த சில நொடிகளிலேயே ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். இந்தப் புத்தகத்தை மட்டும் தனியாகக் கையில் வைத்துக்கொண்டு நடக்க முடியாது. இந்தப் புத்தக அலமாரி, பணம் கட்டும் இடத்திலிருந்து சரியாக எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்று எனக்கு நன்றாகவே தெரியும். கண்ணைக் கட்டிக்கொண்டால் கூட என்னால் இங்கிருந்து அங்கு நடந்து செல்ல முடியும். ஆனால், இப்புத்தகத்தைக் கையில் எடுத்தவுடன் அந்தத் தூரம் சரிதானா என்ற சந்தேகம் எழுந்துவிட்டது. ஒருமுறை கேள்வி எழுந்தால் எழுந்ததுதான். மூளை பின்வாங்காது; பதிலை நாம் கண்டுபிடித்தேயாகவேண்டும். இங்கிருந்து எட்டிப் பார்த்தேன். கட்டணக் கவுன்ட்டர் சற்று தூரத்தில் தெரிந்தது. எப்படியும் முப்பது நொடிகள் ஆகும். இவர்கள் வேறு, நடுவில் அங்குமிங்கும் அமர்ந்து படிக்க மேஜைகளும் நாற்காலிகளும் போட்டு வைத்திருக்கிறார்கள். நேர்ப்பாதையில் செல்லமுடியாது; வளைந்து வளைந்து யாழைப் போலத்தான் நடக்கவேண்டும். ஒரு நிமிடம் என்று வைத்துக்கொள்ளலாம் என்று தீர்மானித்தேன்.
இல்லை, வேண்டாம், ஒரு நிமிடம் கூட தாக்குப்பிடிக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தேன். நடக்கும்போது யார் வேண்டுமானாலும் குறுக்கே வரலாம். நான் வேறு பல்வேறு வாசிப்புக் குழுமங்களில் சேர்ந்து தொலைத்திருக்கிறேன். அவையெல்லாம் ஒருவேளை என் தவறான முடிவுகளோ, யார் கண்டது. இணைய வாசிப்புக் குழு இரண்டு, வாரயிறுதி பூங்காவில் சந்தித்து உரையாடும் குழு ஒன்று, கல்லூரியின் வாசிப்புக்குழு ஒன்று. அப்போது நான் நினைக்கும்போதே ஏதோ டீக்கடை அண்ணாவிடம் ரெண்டு மசால்வட மூனு டீ என்று நம்பர் போடுவது போல் இருந்தது. இந்தக் குழுக்களிலிருந்து ஏதாவதொரு ஜந்து எப்போது வேண்டுமானாலும் ஆஜர் ஆகலாம் என்று நினைத்தேன். புத்தகக்கடைகளுக்கு வரும் ஜந்துக்களிடம் யார் நேரம் செலவிடுவார்கள் சொல்லுங்கள்.
ஆகவேதான், இந்த முடிவுக்கு வருவது கட்டாயமாகிறது. புத்தகக்கடையிலுள்ள எல்லாரையும் குழப்பியடிக்கவேண்டும். ஆம் அதுதான் சரி. இப்போது என் கையில் பல புத்தகங்கள் தேவை. வரலாற்றில் ஒன்று, அறிவியலில் ஒன்று, தீவிர இலக்கியத்தில் ஒன்று என ஒரு கலவையான பொதி. இவற்றுக்கு நட்டநடுவில் இந்த கே நாவலையும் வைத்துக்கொள்வோம். ஏதாவது குறுந்தொகை போன்று மரபிலக்கிய நூலையும் சேர்த்துக்கொள்ளலாம்; அதில் தப்பொன்றும் இல்லை. இவ்வாறு செய்தால், யாருக்கும் தெரியாது. யானைக்குப் பயந்து எருக்கஞ்செடியின் பின்னால் ஒளிந்துகொண்டவனும் இப்படித்தான் நினைத்திருப்பான். வானம் ஒன்றும் இடிந்து விழாது என்பதால் அச்சமில்லை. கச்சு அணியாத இளங்காளைகளைக் கண்டால்தான் அச்சமாக இருக்கிறது.
ஒரு வழியாக எல்லா புத்தகங்களையும் எடுத்தாகிவிட்டது. என்னதான் நகரம் என்றாலும் எல்லாரும் திறந்த மனத்தோடு இருக்கவேண்டுமா என்ன. கவுன்ட்டரில் நிற்கும் போது நம் பார்வையில் கவனம் கொள்ளுதல் அவசியமான ஒன்று. அந்தக் கடையின் கவுன்ட்டரில் வாரயிறுதிகளில் இருவர் இருப்பார்கள். கூட்டம் அதிகம் வருமாம். இருவருமே அன்று புதியவர்களாக இருந்தார்கள். புத்தகக்கடைகளின் கவுன்ட்டர்களில் அதிகநாள் யாரும் தங்குவதில்லை போலும். அன்று கவுன்ட்டரில் ஓர் இளைஞனும் ஓர் இளைஞியும் வேலை பார்த்தார்கள். இரண்டு வரிசைகள் இருந்தன. ஒவ்வொரு வரிசையிலும் இரண்டு வாடிக்கையாளர்கள் நின்றுகொண்டிருந்தனர். ஆம், என் கணக்குச் சரியாக இருந்தால் மொத்தம் நான்கு பேர் தான். எந்த வரிசையைத் தேர்ந்தெடுப்பது என்பது என் வாழ்க்கைப் பயணத்தில் நான் கடந்து வந்த மிகப் பெரிய சிக்கல்களில் ஒன்றென ஆகிவிட்டதாகத் தோன்றியது. அதென்ன ‘ஒன்று’; ஆகப் பெரிய சிக்கல். ஆம், அதுதான் சரியான சொல்.
இளைஞனின் வரிசையில் நிற்கலாம்தான். பொதுவாக எந்தக் கேள்விகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்காது. ப்ரோ கோடில் ஒன்று, ஸைலன்ஸ் கோட். நீ என்ன வாங்கினால் எனக்கென்ன ப்ரோ. நான் பார்கோடை ஸ்கேன் செஞ்சேனா பில்ல போட்டேனா காச வாங்குனேனானு போயிட்டே இருப்பேன். நீ வரலாறு புக்கு வாங்குனா என்ன இல்ல சிலப்பதிகார உரை புக் வாங்குனா என்ன, இல்ல அடல்டரியில் முக்கிய ஐந்து விஷயங்கள் வாங்குனா எனக்கு என்ன. பீ கூல் ப்ரோ. ஆனாலும் நான் வைத்திருப்பதில் ஒன்று, கே நாவல் ஆயிற்றே. புல்லாங்குழலின் இனிமை என்ற தலைப்பு கலைநயமுள்ள தலைப்பு என்பதை மறுப்பதற்கில்லை. அவன் கேட்டால் இது ஏதாவது செவ்வியல் இசைப் பற்றிய நாவல் என்று சொல்லிவிடலாமா. முடியாதே. அங்கை நெல்லிக்கனியென புத்தக அட்டையிலேயே இரு ஆண்களை வரைந்திருக்கிறார்கள் என்று ஏற்கனவே உங்களிடம் சொல்லியிருந்தேனே. பில் போடுகிறவன் ஹோமோஃபோபிக்காக இருந்தால்? முகத்தில் ஓங்கி ஒன்று விட்டான் என்றால் என்ன செய்வது? என் வாயின் வெளியே சற்று எத்திக்கொண்டு தெரியும் தெத்துப்பல் உள்ளே போய் அமுங்கிவிட்டால் மகிழ்ச்சிதான், இல்லை என்று யார் சொன்னது.
அந்தப் பெண்ணின் வரிசையில் சென்று நிற்போம் என்று முடிவெடுத்தேன். பார்வையைத் திருப்பிக்கொள்ளலாம் என்று நினைத்தேன். எப்போதும் செய்யும் செயல்தான். மிடில் டிஸ்டன்ஸ் என்று பேச்சுப்பயிற்சியில் செய்யக்கூடாது என்று சொல்வார்கள்; பார்வையாளர்கள் யாரையும் நேராகப் பார்க்காமல், அவர்களுக்குப் பின்னால் ஒரு வெறுமையை நோக்கிப் பேசுவது. நானோ அந்தத் தவற்றிலேயே தேர்ந்தவன். அந்தப் பெண்ணின் கண்களை நேரில் சந்திக்கத் தேவையில்லை. ஒருவேளை சந்திக்க நேர்ந்தாலும் என்ன ஆகிவிடப்போகிறது. தப்பாக நினைத்துக்கொண்டால் நினைத்துக்கொள்ளட்டும். தப்பு என்னிடம் இல்லையே. ஆண் இல்லை என்று நினைத்துவிட்டால்? ஓ ஆம், அப்படி ஒன்று இருக்கிறதே. இந்தப் புத்தகத்தைப் பார்த்ததும் இவனெல்லாம் ஒரு இவனா என்று மனத்துக்குள் பெருமூச்சு விட்டுக்கொள்வாள்; அவள் பார்வையில் நான் துச்சமாகிவிடுவேன். மற்ற புத்தகங்களை ஸ்கேன் செய்யும்போதே தெரிந்துவிடும் அந்த அலட்சியம். அதனால் என்ன, இந்தப் புத்தகத்தை நான் கடைசியாக வைத்துவிடுகிறேன். எல்லாவற்றையும் ஸ்கேன் செய்துவிட்டு, கடைசியாக இதைச் செய்யட்டும். அதற்கப்புறம் சில நொடிகள் தானே, உடனே பில் வந்ததும் ஜிபேயில் கட்டிவிட்டு, புத்தகத்தை அள்ளி வரவேண்டியது தான். இல்லை இந்தப் புத்தகத்தைக் கடைசியாக வைக்க முடியாது, அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. மற்றப் புத்தகங்களைப் பில் போட்டுக்கொண்டு வரும்போது, என் அழகையும் வீரத்தையும் ஆண்மையையும் கண்டு அவள் தன் மனத்தை என்னிடம் முழுவதுமாகப் பறிகொடுத்துவிட்டாளென்றால் என்ன ஆகும். அதென்ன விட்டாளென்றால் என்ற கேள்வி. விடுவாள். மனத்தைப் பறிகொடுத்துவிடுவாள். என்னுடைய தாடையின் கூர்மையைக் கண்டு யார்தான் மயங்காமல் இருப்பார் சொல்லுங்கள். அவ்வளவு ரிஸ்ஸ் எனக்குண்டு. என்னவொன்று, முன் பல் தான் கொஞ்சம் தெத்துப்பல். உள்ளே தள்ளவேண்டும். அதற்குத்தான் அந்தப் பையன் இருக்கிறானே. ஆம், அதுதான் சரி, நான் அந்தப் பையனுடைய வரிசையிலேயே நின்றுகொள்கிறேன். திறந்திருக்கும் அவன் சட்டைப் பட்டன்களின் இடைவெளியிலிருந்து வரும் உடல்நறுமணம் இங்குவரை கமழ்கிறதே. நான் யோசிக்கத் தொடங்கி இரண்டு நொடிகள் கழிந்துவிட்டன. இருங்கள், வரிசையில் நின்று, அவனிடம் புத்தகங்களைக் கொடுத்து, பணம் கட்டி, அவற்றை வாங்கி வந்துவிடுகிறேன்.
அந்த இளைஞனின் முன்னே நிற்கும்போது எனக்குச் சோதனைதான். இந்த வயதில் உடல் பாகங்களை விருப்பம்போல் கட்டுப்படுத்துவது யாராலும் முடியாதாம். பரவாயில்லை, நான் போட்டிருந்த டீஷர்ட் கொஞ்சம் நீளமானது தான்; டக்-இன் செய்யாமல் லூசாக வெளியே விட்டிருந்தேன். அடடா, முடி கலைந்திருக்கிறதோ என்னவோ. செல்பேசியின் முன்கேமராவில் என் முகத்தைப் பார்த்த பிறகல்லவா இந்த வரிசையில் இணைந்திருக்கவேண்டும். இப்போது முடியாது. அவன், தானுண்டு தன் வேலையுண்டு என்பதுபோல ஒவ்வொரு புத்தகமாக ஸ்கேன் செய்யத் தொடங்கியிருந்தான். என்ன அழகான கைகள்! இசையை மீட்டும் நரம்புகள் போல நீண்ட கரிய விரல்கள்; விரல்முட்டுகளின் கீழ் இன்னும் வளராத முடிகள். இப்பொழுதெல்லாம் டிராக் பான்ட் போட்டுக்கொண்டே வேலை செய்யலாம் போலும்; இயல்பான புடைப்பைப் பார்க்காதவன்போல் இருக்கத்தான் எனக்குத் தெரியவில்லை. அவன் சட்டையின் போடப்படாத இரண்டு பட்டன்கள் இன்னும் என்னைக் கிறங்கடித்துக்கொண்டிருந்தன. வாடிக்கையாளர்களிடம் ஒரு ஹாய் ஹலோ சொல்லக் கூடாதா. இயந்திரம் மாதிரி வேலை செய்யவேண்டுமா என்ன.
அந்த தைரியமான மஞ்சள் நிற நாவலை அவன் கையில் எடுத்ததும், அவன் கண்கள் ஒரு கணம் எழுந்து என் கண்களை நோக்கி வர, என்னுள் எழுந்த லகுவான தாள ஒலி துரிதமாகி விரைய, என் பார்வை விலகிப் பின்னாலிருந்த சுவரில் விழுந்தது.
வாங்கிய புத்தகங்களைக் கவனமாகக் கையில் எடுத்துக்கொண்டேன். டோக்கனைத் திரும்பக் கொடுத்து என் பையை வாங்கிக்கொண்டேன். மாட்டிக்கொள்வதெல்லாம் கடைசி நிமிடத்தில்தான் நிகழும் என்று எத்தனை கதைகளில் வாசித்திருக்கிறேன். புத்தகங்களைப் பையின் உள்ளே திணிக்கும்போது கே நாவல் ஒரு கணம் வெளியே பல்லிளித்தது; உள்ளே தள்ளி ஜிப்பை மூடினேன். சுற்றுமுற்றும் மீண்டும் ஒரு பார்வை.
இப்போது கிளம்ப வேண்டியதுதான். ஒன்றுமே நடக்காததுபோல் மனத்தை இயல்புபடுத்திக்கொண்டேன். உடலை இயல்புபடுத்திக்கொண்டேன். ஏசியிலிருந்து வெளியே வெயிலுக்கு வந்தேன். அப்பாடா, ஒரு பெருமூச்சு விட்டேன். யாரும் நம்மைப் பார்க்கவில்லை.
அன்று யாரேனும் என்னைப் பார்த்திருக்கக்கூடாதா என்று இன்று விருப்பப்படுகிறேன்.
000

விஜய் ரெங்கராஜன்
விஜய் ரெங்கராஜன், இணைய இதழ்களில் சிறுகதைகள் எழுதி வரும் எழுத்தாளர். அமெரிக்கா கலிபோர்னியா வளைகுடா பகுதியில், கணினி பார்வை - செயற்கை நுண்ணறிவு துறையில் ஆராய்ச்சியாளராக பணிபுரிகிறார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
