
ஜெஃப்ரி மில்லர் (Geoffrey Miller) புகழ்பெற்ற அமெரிக்கப் பரிணாம உளவியலாளர், எழுத்தாளர். மெக்சிகோ பல்கலைக் கழகத்தில் இணை பேராசிரியராக பணியாற்றுகிறார். மனிதப் பரிணாமம், நுகர்வு கலாச்சாரம், பாலியல் தேர்வு, ஆகியவை அவருடைய பிரதானமான ஆய்வுக் களங்கள். அவரது புகழ்பெற்ற ‘ஸ்பென்ட்’ (Spent: Sex, Evolution, and Consumer Behavior) நூலிலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள இப்பகுதி, முதலாளித்துவ நுகர்வு கலாச்சாரத்தின் இருண்மையான உளவியலை வெளிக்காட்டுகிறது. மனிதர்கள் தங்களின் இயல்பான குணநலன்களைக் கொண்டு பிறரை ஈர்ப்பதை விட்டுவிட்டு, செயற்கையான வழியில் ஆடம்பரப் பொருட்களை வாங்குவதன் மூலமே சமூக அந்தஸ்தையும் பாலியல் ஈர்ப்பையும் பெற முடியும் என்ற அடிப்படையான நுகர்வு மாயைக்குள் எப்படிச் சிக்கிக் கொள்கிறார்கள் என்பதை இங்கு விவரிக்கிறார். மேலும் விளம்பர உலகம் எப்படி மனிதர்களின் ஆழ்மன ஆசைகளைச் சுரண்டுகிறது என்பதையும் பரிணாம அறிவியலின் துணையுடனும், அங்கதமான நடையில் விமர்சிக்கிறார்.
ஒரு உண்மையை மறப்பதிலும், ஒரு பொய்யை நம்புவதிலும் தான் மனிதர்களின் பொருட்குவிப்பு மோகம் வேரூன்றி நிற்கிறது. மறக்க வேண்டிய அந்த உண்மை இதுதான்: மொழி, கலை, இசை, படைப்பாற்றல், பெருந்தன்மை மற்றும் கொள்கை போன்ற இயற்கையான சமூக நடத்தைகள் மூலமாக மனம் மற்றும் அறம் சார்ந்த சிறப்பியல்புகளை ஒருவருக்கொருவர் திறன்பட வெளிப்படுத்துவதற்கான மிகச் சிறந்த வழிமுறைகளை நாம் பல மில்லியன் ஆண்டுகள் செலவிட்டு பரிணாமரீதியில் ஏற்கெனவே உருவாக்கி வைத்திருக்கிறோம்.
தகுதிச் சான்றிதழ்களோ, வேலைவாய்ப்புகளோ, கடன் மதிப்பீடுகளோ அல்லது வண்டி வண்டியாகக் குவித்து வைக்கப்பட்ட பொருட்களோ இல்லாமலேயே நம்மால் இதைச் செய்ய முடியும். நமது நற்பண்புகளை சுலபமாக வெளிப்படுத்தி, சக மனிதர்களை இயல்பாக ஈர்க்கக்கூடிய நம் உடலியல் மற்றும் உளவியல் தகவமைப்புகள்தான் நமது டி.என்.ஏ. நமக்கு வரமாக அளித்துள்ள மாபெரும் வியக்கத்தக்கப் பொருட்கள்.
நண்பர்களை வென்றெடுக்கவும், மற்றவர்கள் மீது செல்வாக்குச் செலுத்தவும், வாழ்க்கைத் துணையை ஈர்க்கவும் தேர்ந்தெடுக்கவும், குழந்தைகளை வளர்க்கவும், ஒருவருக்கொருவர் பெருந்தன்மையைக் காட்டவும் பல மில்லியன் ஆண்டுகளாக, பல பில்லியன் முயற்சிகளின் வழியாக, நமது முன்னோர்கள் தங்களை அறியாமலேயே மிகப்பெரிய உழைப்பை முதலீடு செய்து, குணநலன்களைத் துல்லியமாக வெளிப்படுத்தும் இந்த மரபணுப் பாரம்பரியத்தை நமக்காகக் கட்டமைத்துள்ளனர்.
பரிணாம உளவியலின் மையமான செய்தி இதுதான்: வாழ்வில் மிகவும் மதிப்புமிக்க, சிக்கலான, நுணுக்கமான மற்றும் அற்புதமான விஷயங்கள் என்பவை, ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கும் பொதுவாக அமைந்துள்ள அந்த உயிரியல் தகவமைப்புகள்தான். குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால், இந்த தகவமைப்புகள் நமது தனிநபர் வேறுபாடுகளை அத்தனை அப்பட்டமாகப் பறைசாற்றுகிறது.
சக மனிதர்களைக் கவர்ந்திழுக்கத் தேவையான அனைத்தும் ஏற்கெனவே நம்மிடமே முழுமையாக இருக்கின்றன. இருப்பினும், பெரும்பான்மையான எல்லா மனிதச் சித்தாந்தமும் இந்த உண்மையை நமக்கு மறக்கடிப்பதிலேயே குறியாக இருக்கின்றன. ஏனெனில், சமூகத்தின் ஏற்பைப் பெறவும், பாலியல்ரீதியான ஈர்ப்பைப் பெறவும், எவ்வித ஒப்பனையுமற்ற நமது வெறும் உடல்களுக்கும் மனங்களுக்கும் அப்பாற்பட்டு நமக்கு ஏதோ ஒன்று தேவை என நம்மை நம்பவைப்பதன் மூலமாகவே, ஒவ்வொரு சித்தாந்தமும் அதிகாரத்தைக் கைப்பற்றத் துடிக்கிறது. ‘பொருட்குவிப்பு மோகம்’ நமது ஆகப்பெரிய சக்திவாய்ந்த சித்தாந்தமாக மாறியிருப்பதற்குக் காரணம், மனிதர்கள் தங்களின் பண்புகளை வெளிப்படுத்தும் இயற்கையான வழிமுறைகளை அது அத்தனை அலட்சியமாகவும், இழிவாகவும் நிராகரிக்கிறது என்பதுதான். மேலும், எந்தப் பொருட்களும் இல்லாமலேயே நம்மால் என்னென்ன குணநலன்களை வெளிப்படுத்த முடியும் என்பதை நினைத்துப் பார்க்கக் கூட நேரம் கொடுக்காமல், வேலை செய்வது, பொருட்களை வாங்குவது, வாங்கியவற்றை ஊருக்குக் காட்டுவது என எப்போதும் நம்மைச் சுழலவிட்டபடியே அது பரபரப்பாக வைத்திருக்கிறது.
பொருட்குவிப்பு மோகம் உண்மையில் இரண்டு பெரும் பொய்களை ஊக்குவிக்கிறது. வாழ்க்கைத் துணை, நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் ஆழமான நீண்டகால உறவுகளைக் கட்டமைக்க முற்படும்போது, ஒருவரிடம் உள்ள சராசரிக்கும் கீழான குணாதிசயங்களை, சராசரிக்கும் மேலான பொருட்கள் ஈடுசெய்துவிடும் என்பது அதில் முதல் பொய். சில பொருட்கள் குறுகிய காலத்திற்கு ஒருவரது தனிப்பட்ட குறைபாடுகளை மறைக்க முடியும் என்பது உண்மைதான். துணையைத் தேடும் நாற்பத்தேழு வயதுடைய தனித்து வாழும் பெண்ணுக்கு, அவளது முகத் தசைகளைச் செயலிழக்கச் செய்து, சுருக்கங்களைக் குறைத்து, வயதாவதற்கான சில அறிகுறிகளை மறைக்க ‘போடாக்ஸ்’ (Botox) சிகிச்சை உதவலாம். மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் நடந்த அவர்களின் முதல் சந்திப்பின்போதே அவளது உண்மையான வயது அப்பட்டமாகத் தெரிந்திருந்தால், முப்பத்தொரு வயதான அந்த இளைஞன் அவளை இரண்டாவது சந்திப்புக்கு அழைத்திருக்க மாட்டான். ஆனால், இந்தச் சிகிச்சை அவனை அப்படி அழைக்கத் தூண்டலாம்.
இருப்பினும், என்றாவது ஒருநாள் மிகவும் நம்பகமான பிற தடயங்களின் வழியாக அந்த வயது அப்பட்டமாகத் தெரிந்துவிடும்: பகல் வெளிச்சத்தில் கைகள் மற்றும் கழுத்தின் தோற்றம், அவளது இருபத்தைந்து வயது மகள் அல்லது ஐம்பத்திரண்டு வயது சகோதரியின் அறிமுகம், அவளது பள்ளிப் படிப்பின் முப்பதாவது ஆண்டுச் சந்திப்பிற்கான அழைப்பிதழ் என அது வெளிப்பட்டுவிடும். ஒருவரது உடல் தோற்றம், வெளிப்படையாகத் தெரியும் புத்திசாலித்தனம், ஆளுமை அல்லது அறம் சார்ந்த நற்பண்புகளை மேம்படுத்திக் காட்ட முயற்சிக்கும் மற்ற ஒவ்வொரு பொருளுக்கும் இதே விதிதான் பொருந்தும். குணாதிசயங்களை மேம்படுத்திக் காட்டும் பொருட்கள் குறுகிய காலத்தில் சிலரை ஏமாற்ற முடியும். ஆனால், நீண்ட கால அடிப்படையில் அவற்றால் எவரையும் ஏமாற்ற முடியாது. மன அழுத்தத்தைத் தரும் வெளிநாட்டுத் தேனிலவுகளின்போது, தங்கள் வாழ்க்கைத் துணையின் உண்மையான குணநலன்களைக் கண்டறியும் புதுமணத் தம்பதிகள், மகிழ்ச்சியடைவதை விடப் பெரும்பாலும் ஏமாற்றமே அடைவதற்கு இதுதான் காரணம்.
பொருட்குவிப்பு மோகம் ஊக்குவிக்கும் இரண்டாவது பெரும் பொய் என்னவென்றால்: நமது விரும்பத்தக்கப் பண்புகளை வெளிப்படுத்த, எந்தவொரு இயற்கையான நடத்தையும் வழங்குவதைவிட, பொருட்கள் மிகவும் பகட்டான, வியக்கவைக்கும் வழிகளை வழங்குகின்றன என்பதுதான். குறிப்பாக, சிறந்த பொருட்கள் மிகவும் வலிமையான சமிக்ஞைகளாகச் (signal) செயல்படுகின்றன என்று பொருட்குவிப்பு மோகம் அனுமானிக்கிறது. பொருளின் வடிவமைப்பு அல்லது அதன் சிறப்பம்சங்களில் செய்யப்படும் எந்தவொரு தொழில்நுட்ப மேம்பாடும் சரி, பிராண்டிங்கில் புகுத்தப்படும் எந்தவொரு புதுவகை சந்தைப்படுத்தலும் சரி, அந்தப் பொருளின் சமிக்ஞை செய்யும் திறனின் மேம்பாடாகவே முன்னிறுத்தப்படுகிறது.
உண்மையில், நமது உள்ளார்ந்த உயிரியல் பண்புகளை வெளிப்படுத்தும் சமிக்ஞைகளுக்காகவே நாம் முதன்மையாகப் பொருட்களை வாங்குகிறோம். தர்க்கரீதியாக பார்த்தால் அவற்றின் சமிக்ஞை செய்யும் திறன்தான் – குறிப்பாக பிராண்ட் அங்கீகாரத்தின் மூலம் வெளிப்படும் திறன்தான் – மிக முக்கியமானதாக இருக்கிறது. அவற்றின் பெயரளவுக்கான பயன்பாட்டை (ஒரு ஆடையாகவோ, வீட்டு உபயோகப் பொருளாகவோ அல்லது வாகனமாகவோ) அவை எந்த அளவுக்குச் செவ்வனே நிறைவேற்றுகின்றன என்பது இரண்டாம் பட்சமே. இந்த உண்மை ஒவ்வொரு சந்தைப்படுத்தல் நிபுணருக்கும் அப்பட்டமாகத் தெரியும். ஆனால், பெரும்பாலான நுகர்வோருக்கு இது முற்றிலும் மறைக்கப்பட்டு மர்மமாகவே நீடிக்க வேண்டியுள்ளது.
இதனால், விளம்பரங்கள் நுகர்வோருடன் ஒரு பூடகமான விளையாட்டை நுட்பமாக விளையாட வேண்டியுள்ளது: அவை ஆடம்பர நுகர்வின் சமிக்ஞை செயல்பாடுகளைச் சூசகமாக உணர்த்த வேண்டுமே தவிர, வெவ்வேறு பொருட்களின் ஒப்பீட்டு ரீதியான சமிக்ஞை செயல்திறன் குறித்தோ, அல்லது இயற்கையான மனித நடத்தைகளுக்கு எதிராகச் செயற்கையான வகையில் பொருட்களின் திறன் குறித்தோ அவை ஒருபோதும் வெளிப்படையான தம்பட்டங்களை அடிக்கக் கூடாது.
ஒரு பொருளின் பண்புகளைச் சமிக்ஞை செய்யும் திறன் குறித்த இத்தகைய அப்பட்டமான தம்பட்டங்களை மிக எளிதாகவே பொய் என்று நிரூபித்துவிட முடியும். உதாரணமாக, தனித்து வாழும் இளைஞர்களைக் குறிவைத்து உருவாக்கப்படும் ஸ்போர்ட்ஸ் கார் விளம்பரங்கள், அந்தக் காரை ஓட்டுவதன் மூலம் அழகான இளம் பெண்களின் கவனத்தை அவர்கள் அதிகம் ஈர்க்க முடியும் என்பதைச் சூசகமாக உணர்த்த வேண்டும்.
அதே சமயம், அந்த விளம்பரங்கள் இந்தக் கருத்தை வெளிப்படையாகக் கூறிவிடக் கூடாது. ஏனெனில், அந்தக் காரின் அதிகப்படியான விலையை நியாயப்படுத்தும் அளவுக்கு அதன் ஓட்டுநர்கள் பெண்களின் கவனத்தைப் பெற்றுவிடுவதில்லை என்பதையும், வண்டிக்குத் தேவைக்கு அதிகமான குதிரைத்திறன் இருப்பதைவிட, அந்த இளைஞனிடம் சிறந்த நகைச்சுவை உணர்வு இருப்பதே பெண்களின் கவனத்தை மிகச் சிறப்பாக ஈர்க்கும் என்பதையும் விளம்பரக் கட்டுப்பாட்டாளர்களோ அல்லது போட்டி நிறுவனங்களோ அனுபவபூர்வமாக நிரூபிப்பது சுலபமாகிவிடும்.
எனவே, பொருட்குவிப்பு முதலாளித்துவம் பொருட்களின் சமிக்ஞை செய்யும் செயல்பாடுகளை மேடையின் மையத்திற்கு வராமல் அதன் விளிம்புகளிலேயே – அதாவது புகை, கண்ணாடிகள், திரைச்சீலைகள், முகத்திரைகள், கவர்ச்சியான விளம்பரப் பெண்கள், கனவு நாயகர்கள் ஆகியோரைக் கொண்ட நிழலான பாதாள உலகத்திலேயே – நிறுத்தி வைக்க வேண்டும். ஒரு பொருள் ஒருவரின் சமூக செல்வாக்கையோ அல்லது பாலியல் ஈர்ப்பையோ அதிகரிக்கும் என்ற நேரடியான தம்பட்டங்கள் மேடையின் மையத்தில் விழும் ஒளியை எதிர்கொள்ள முடியாது. ஏனெனில், அங்கு ஒருவரின் செயல்திறனின் தரம் கறாராக மதிப்படப்படுகிறது.
மாறாக, அந்தப் பொருளின் பெயரளவிலான பயன்பாடுகள், சிறப்பம்சங்கள், தொழில்நுட்ப விவரக்குறிப்புகள், புதுமைகள், பிரபலம் மற்றும் பிராண்டிங் ஆகியவைதான் நுகர்வோரின் நனவு மனத்தின் கவனத்தை ஆக்கிரமிக்க வேண்டும். அதேசமயம், அந்தஸ்து மற்றும் பாலியல் ஈர்ப்பைச் சமிக்ஞை செய்யும் என்ற வாக்குறுதியானது, ரேடாரில் சிக்காத ‘ஸ்டெல்த்’ குண்டை வீசும் விமானத்தைப் போல எந்தவொரு சத்தமும் கணக்கும் இன்றி அவர்களின் நனவிலி மனத்திற்குள் ஊடுருவ வேண்டும்.
அதேபோல விளம்பரத்தின் உட்கருத்திலிருந்து அந்தப் பொருளின் சமிக்ஞை செய்யும் திறனைத் தாங்கள் மட்டுமே தனித்துவமாகக் கண்டறிந்துவிட்டதாக நுகர்வோர் உணர வேண்டும். சமூக அந்தஸ்து, பாலியல் ஈர்ப்பு மீதான தங்களின் ஆசை தங்களுக்குள் நியாயமானதாக இருந்தாலும், பொதுவெளியில் வெளியே சொல்வதற்குத் தர்மசங்கடமானது என்பதால், அந்தப் பொருளின் தொழில்நுட்பச் சிறப்பைத் தங்களின் தனிப்பட்ட பகட்டாக மாற்றி, சமூக – பாலியல் ரீதியான பலன்களை தங்களால் மட்டுமே அறுவடை செய்ய முடியும் என்றும் அவர்கள் நம்ப வேண்டும். சுருக்கமாகச் சொன்னால், நுகர்வோர் தங்களுக்கும், அந்தப் பொருளுக்கும், கற்பனையாகத் தங்களை ரசிக்கும் ஒரு பார்வையாளர் கூட்டத்திற்கும் இடையே ஒரு ‘சமிக்ஞை சதிவலையில்’ தாங்கள் நுழைந்துவிட்டதாக உணர வேண்டும். மேலும், இந்தச் சதியானது விறுவிறுப்பானது, எல்லை மீறக்கூடியது, அதிபுத்திசாலித்தனமானது என்றுமட்டுமில்லாமல், இந்த முதலாளித்துவ அமைப்பையே கவிழ்க்கக்கூடிய ஒரு புரட்சிகரமான செயலென்றும் அவர்கள் தங்களுக்குள் நம்ப வேண்டும்.
நுகர்வோர் உரிமை, கல்வி மற்றும் பாதுகாப்பு இயக்கங்கள் கூட இந்த மாயையை ஊக்குவிக்கவே சதி செய்கின்றன. ‘கன்ஸ்யூமர் ரிப்போர்ட்ஸ்’ போன்ற இதழ்கள், பொருட்களின் புறவயமான சிறப்பம்சங்கள், செயல்பாடுகள், பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றை அனுபவபூர்வமாக மதிப்பிடுவதற்குப் பெரும் மெனக்கெடல்களைச் செய்தாலும், ஒரு நுகர்வோரின் சமூக நற்பெயரையோ அல்லது பாலியல் வெற்றியையோ மேம்படுத்துவதில் அந்தப் பொருட்களின் பங்களிப்பை அவை ஒருபோதும் மதிப்பிடுவதில்லை.
சமூக அறிவியல் மற்றும் நுகர்வோர்-ஆராய்ச்சி முறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டால், இதைச் செய்வது உண்மையில் மிக எளிதான காரியமே. நேர்காணல்கள், கேள்வித்தாள்கள் மற்றும் ஆராய்ச்சி குழுக்கள் ஆகியவற்றின் மூலம் இதை சாதிக்கலாம். அதாவது, குறிப்பிட்ட மனிதர்கள் பல்வேறு பொருட்களை வாங்குவது, பயன்படுத்துவது மற்றும் காட்சிப்படுத்துவது ஆகியவற்றைப் பார்க்கும்போது, சந்தையில் உள்ள மற்ற போட்டிப் பொருட்களோடு ஒப்பிட்டோ அல்லது சாத்தியமான வேறுசில மனித நடத்தைகளோடு ஒப்பிட்டோ தாங்கள் எவ்வாறு எதிர்வினையாற்றுவோம் என்பதை மனிதர்களை விட்டே தரப்படுத்தச் செய்வதன் மூலம் இதனை எளிதாக அளவிட்டுவிட முடியும்.
உதாரணமாக, நூகர்வோர் அறிக்கைகளுக்காக வாசகர்கள் நிரப்பும் வருடாந்திரக் கேள்வித்தாள்களில், தங்களின் ‘Corvette Z06’ காருக்கு எத்தனை முறை பிரேக் பழுதுபார்க்க வேண்டியிருந்தது என்று மட்டும் கேட்காமல், இந்தக் கார் நிஜமாகவே ஏதேனும் புதிய நட்புகளையோ, தொழில் கூட்டாண்மைகளையோ, அண்டை வீட்டாரிடமிருந்து இரவு விருந்துக்கான அழைப்புகளையோ உருவாக்கிக் கொடுத்ததா என்றும் கேட்கலாம். குறைந்தபட்சம் இந்தக் காரை வியந்து பார்க்கும் பெண் பாதசாரியுடன் ஏதேனும் எதிர்பாராத பாலியல் சந்திப்பை சாத்தியப்படுத்தியதா என்றாவது கேட்கலாம். அப்படி குறைந்தபட்ச சாத்தியத்தை ஏற்படுத்துகிறது என்றாலும் கூட, அதற்கான ஒருவர் அந்த காருக்கு கொடுக்கும் விலையானது, தொழில்முறை பாலியல் தொழிலாளியின் விலையைவிட எப்படியும் ஐம்பது மடங்கு அதிகமாக இருக்கிறது.
இதன்படி பார்த்தால், புதிதாக ஒரு கார்வெட் காரை வாங்கத் திட்டமிடும் ஓர் ஆண், பெண்களை ஈர்க்கும் அந்தக் காரின் திறன் குறித்து கற்பனையான அதீத நம்பிக்கையைக் கொண்டிருக்க வேண்டும். அல்லது அவனுக்கு கணிதம் சுத்தமாக வராமல் இருக்க வேண்டும். அதுவுமில்லையென்றால், அவன் தொழில்முறையான பாலியல் தொழிலாளிகளைவிட கட்டணமில்லாத சாதாரணப் பெண்களுடனான பாலியல் சந்திப்புகளை அதிதீவிரமாக விரும்பும் ஒருவனாக இருக்க வேண்டும்.
மாற்று கோணத்தில் பார்த்தால், கார்வெட் காரின் மீது பேரவா கொள்ளும் ஒருவன், திருமணத்தை மீறிய பாலியல் சாகசங்களில் அந்தக் கார் வகிப்பதாகத் தான் காணும் பகல்கனவுகளுக்கு, மனைவியிடம் வசமாகச் சிக்கிக்கொள்ளாமல் தப்பிப்பதற்கான ஒரு ‘நம்பத்தகுந்த மறுப்பை’ தேடும் கணவனாகவும் இருக்கலாம். இது அநேகமாக சமூகத்தில் மிகவும் சாதாரணமாக நடக்கும் ஒரு விஷயம்தான்.
பெரும்பாலான நுகர்வோர் தங்களின் வாழ்நாளின் பெரும்பகுதியைத் திருமண பந்தத்திலேயே கழிப்பதால், பாலியல் ஈர்ப்பை அதிகரிப்பதாக வாக்குறுதி அளிக்கும் பொருட்களை விற்க ஒரேயொரு வழிதான் உள்ளது: அந்த விளம்பரத் தூண்டில்களை வாழ்க்கைத் துணையின் பொறாமைக் கண்களுக்குப் புலப்படும் வளையத்திற்கு வெளியே வீசுவதுதான் அது.
எனவேதான், ‘Sports Illustrated’ இதழில் வரும் கார்வெட் விளம்பரம் ஒருபோதும் இது உங்கள் குறுகியகாலப் புணர்ச்சிக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என்றோ அல்லது இதன்மூலம் உங்களுக்குப் பெண்கள் கிடைப்பார்கள் என்றோ அப்பட்டமாகச் சொல்லாது. மாறாக, அது காரின் சில தொழில்நுட்ப விவரக்குறிப்புகளைப் பட்டியலிட்டு, 505-குதிரைத்திறன் கொண்ட அந்த இயந்திரத்துக்கும் அதன் எஜமானனுக்கும் பரவசத்தோடு சரணடைந்து, இரு கைகளையும் மேலே தூக்கிக் கொண்டாடும் ஒரு பெண் பயணியை அது காட்சிப்படுத்துகிறது.
இதன்மூலம் எளிதில் ஏமாறும் மனைவிகள் குறைவான கவலையடைவார்கள். அதேசமயம், எளிதில் ஏமாறும் கணவன்மார்கள் அதீதமான கற்பனையில் மிதப்பார்கள்.

பெண் நுகர்வோரை மையமாகக் கொண்ட விளம்பரங்களிலும் இதேபோன்ற உட்கருத்துகளே காணக்கிடைக்கிறது. சமீபத்தில் ‘Vogue’ இதழில் வெளியான ‘L’Oréal’ நிறுவனத்தின் உதட்டுச்சாய விளம்பரம் அதன் தனித்துவமான செய்முறை தொழில்நுட்பத்தை பறைசாற்றியது: ஈரப்பதம் நிறைந்த, ஒட்டாத தன்மையுடைய கலவையானது பிரகாசமான பரிமாணத்துடனும், நம்பமுடியாத பளபளப்புடனும் கூடிய முழுமையான, ஆரோக்கியமான உதடுகளை வழங்கும் என்றும் தம்பட்டம் அடித்தது. மூச்சுத்திணற வைக்கும் இதன் கவர்ச்சி-வாதத்தை கொஞ்சம் நேர்மையாக மொழிபெயர்த்தால் இப்படிச் சொல்லலாம்: இந்த உதட்டுச்சாயம் உங்களின் காமத் தவிப்பையும், உடனடியாக நிகழவிருக்கும் கருமுட்டை வெளிப்பாட்டையும், பாலியல் ரீதியாகச் சலிப்படைந்துபோன உங்கள் கணவனுக்கு மட்டுமல்லாமல், உங்கள் ஆண் அண்டை வீட்டாருக்கும், வீட்டு வேலையாட்களுக்கும் கூட சமிக்ஞை செய்யும்.
இப்படிப்பட்ட நேரடியான வார்த்தைகள், சாதாரணமாக வோக் இதழைப் புரட்டும் கணவனையோ அல்லது பதின்வயதுக் குழந்தையையோ அதிர்ச்சிக்குள்ளாக்கலாம் என்பதால் குடும்ப நல்லிணக்கத்தைக் கருத்தில் கொண்டு, பிரதான ஊடகங்களில் வரும் நேர்த்தியான விளம்பரங்கள் அதன் விற்பனை வாசகங்களுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் தயக்கமான அந்தஸ்து தேடலையும், இணைதேடும் பாலியல் ஊளைக்குரலையும் வலிந்து மூடிமறைக்கின்றன. இதன் மூலம் திருமணமான நுகர்வோர் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொள்ள முடியும். அதாவது, சாகசங்களை விரும்பும் அண்டை வீட்டாரையோ அல்லது எளிதில் வளைந்துகொடுக்கும் இளம் வேலையாட்களையோ ஈர்க்கும் ‘சமிக்ஞை’ திறனுக்காக தாங்கள் அந்தப் பொருட்களை வாங்கவில்லை என்றும், மாறாக அவற்றின் நடைமுறைப் பயன்பாட்டிற்காகவே அந்த ஆடம்பரப் பொருட்களை வாங்குவதாகவும் அவர்கள் கற்பிதம் செய்துகொள்ளலாம்.
முழுமுற்றாக நிரூபிக்கமுடியாத நிலையும், சூழலுக்கேற்பத் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளும் உளவியலும் சேர்ந்து தந்திரமான சுயநலத்தின் ஆழமான மேடு பள்ளங்களுக்கு மேலே காந்தப்புலத்தில் வழுக்கியோடும் அதிவேக ரயில் போல மனிதனின் சமூக வாழ்வை தடையின்றிச் சீறிப்பாய அனுமதிக்கின்றன. மிக முக்கியமான உண்மைகளைச் சொல்லப்படாமலேயே விட்டுவிடுவதன் மூலம் இதை அவை சாதிக்கின்றன. அதே சமயம் அவை கற்பனை செய்து பார்க்கப்படாமலும் இல்லை.
பரிணாம உளவியலாளரான எனது பார்வையில், பொருட்குவிப்பு முதலாளித்துவம் (consumerist capitalism) உண்மையில் இப்படித்தான் செயல்படுகிறது: விரும்பத்தக்க, மரபணுத் தகுதி சார்ந்த பண்புகளை வெளிப்படுத்துவதற்காக நாம் பெற்றுள்ள இயற்கையான தகவமைப்புகளை அது மறக்கச் செய்கிறது. இந்தப் பண்புகளை வெளிப்படுத்துவதில், செயற்கையான பொருட்கள் அவற்றின் உண்மையான திறனைவிட மிகச் சிறப்பாகச் செயல்படுவதாக சூழ்ச்சி செய்து நம்மை ஏமாற்றுகிறது. ‘செல்வம்’, ‘அந்தஸ்து’, ‘ரசனை’ என்பது போன்ற தெளிவற்ற சொற்களைத் தவறான தளங்களில் திரும்பத் திரும்ப உச்சரிப்பதன் மூலமும், தனிநபர் வேறுபாடுகள் குறித்த அறிவியல் ஆராய்ச்சிகள் கண்டறிந்த நிலையான, மரபுவழியாகக் கடத்தப்படக்கூடிய, துல்லியமாகக் கணிக்கக்கூடிய பண்புகளை இருட்டடிப்பு செய்வதன் மூலமும் நாம் எந்தப் பண்புகளை வெளிப்படுத்த முயல்கிறோம் என்பது குறித்தே அது நம்மைக் குழப்புகிறது.
விலையுயர்ந்த பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கக்கூடிய அந்தஸ்து மற்றும் பாலியல் ரீதியான பலன்களை அது கபடத்தோடு சூசகமாக உணர்த்துகிறது. ஆனால், அந்த உரிமைக்கோரல்களை நுகர்வோர் கண்காணிப்பு அமைப்புகள் அனுபவபூர்வமாகப் பொய் என்று நிரூபித்துவிடக் கூடாது என்பதற்காகவும், அதன்பின்னால் ஒளிந்திருக்கும் தனிப்பட்ட உள்நோக்கங்கள் வெளிப்பட்டு வாழ்க்கைத் துணைவர்கள் கோபமடைந்துவிடக் கூடாது என்பதற்காகவும் அவற்றை வெளிப்படையாகக் கூற மறுக்கிறது.

இதன் இறுதி விளைவையே நாம் ‘அடிப்படையான நுகர்வு மாயை’ என்று அழைக்கலாம். அதாவது, இயல்பான உரையாடல், பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் அன்பான அரவணைப்பு ஆகியவற்றின் மூலம் நீங்கள் வெளிப்படுத்தும் உங்களின் இயற்கையான பண்புகளைவிட, நுகர்வுச் செலவுகளின் மூலம் நீங்கள் காட்சிப்படுத்தும் செயற்கையான பொருட்களின் மீதே மற்றவர்கள் அதிக அக்கறை காட்டுகிறார்கள் என்று நம்புவது.
உறவினர்கள், நண்பர்கள், காதலர்கள், வாழ்க்கைத் துணைவர்கள், சக பணியாளர்கள், வழிகாட்டிகள் மற்றும் மாணவர்களுடன் நீண்டகால உறவுகளை அனுபவித்த எந்தவொரு வயதுவந்த நபருக்கும், நுகர்வு குறித்த இந்தப் பார்வை ஒரு மாயை என்பது வெளிப்படையாகவே தெரிந்திருக்க வேண்டும். எந்தவொரு நீண்டகால உறவும், ஒரு பகுதி முரண்பட்டும், மறுபகுதி இசைந்தும் உருவாகும் சிக்கலான, தொடர்ச்சியாக மாற்றமடையும் விருப்பு வெறுப்புகளின் ஊடாகவே வளர்ந்து நிலைக்கிறது. இதையே பொருளியலாளர்கள் ‘மீளமீள நிகழும் கலவையான-நோக்கங்களைக் கொண்ட விளையாட்டுகள்’ என்று அழைக்கிறார்கள். இவை பொதுவாக ஒத்துழைப்பு – மோதல், நம்பிக்கை – துரோகம், நெருக்கம் – அந்நியமாதல் ஆகிய சுழற்சிகளைக் கொண்டிருக்கும்.
இந்தச் சுழற்சிகளை நாம் வாங்கும் பொருட்கள் தீர்மானிப்பதில்லை. சில நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, மொழி தோன்றிய காலத்திலிருந்தே மனிதனின் சமூக வாழ்க்கையை இயக்கிவரும் விவாதங்கள், விளக்கங்கள், மன்னிப்புகள், சமரசங்கள், மற்றும் வெட்டிப்பேச்சுகள் போன்றவைதான் தீர்மானிக்கின்றன. ஒருவரைச் சந்திக்கும் முதல் சில நிமிடங்களுக்கு வேண்டுமானால் நுகர்வுப் பண்பாட்டின் அலங்கார மேடையும், நாடகீய உபகரணங்களும், ஒப்பனைகளும் மிக முக்கியமானவையாகத் தோன்றலாம். அந்த மேடையில் ‘செல்வம், அந்தஸ்து, ரசனை’ என்ற மூன்று குரல்கள் பாடும் வாழ்த்துப்பாக்களும், ஓலங்களும் பிரம்மாண்டமாகத் தெரியலாம். ஆனால், உறவுகள் ஆழமாக வேரூன்றிய பின், இவை நனவு மனத்தின் பின்னணிக்குச் சென்று மங்கிவிடுகின்றன. அதன்பின் நமது கவனம் உண்மையிலேயே முக்கியமான கதாபாத்திரங்கள், செயல்கள், வார்த்தைகள் மற்றும் உறவுகளின் மீது மட்டுமே சரியாகக் குவியத் தொடங்குகிறது.
ஒருவருக்கொருவர் முதன்மைக் கதாபாத்திரமாக உருவெடுத்து, மற்றவர்களின் வாழ்க்கைப் மேடைகளில் கம்பீரமாக உலா வருகிறோம் என்பதை நாம் அப்போதுதான் உணர்கிறோம். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன், நாம் மகிழ்ச்சியின் ஆகாயக் கப்பல்களிலும், கடமையின் மிதவைப் படகுகளிலும் பயணித்தபடி நாம் மனித இருப்பின் சமூகப் பரிமாணத்தை மிகத் தீவிரமாக உணரத் தொடங்குகிறோம். இயல்பாகவே சமூகத் தன்மை கொண்ட இந்த மனநிலையை நமது மூததையர்கள் அவர்கள் விழித்திருந்த ஒவ்வொரு கணத்திலும் அனுபவித்ததே. இந்த இயல்பான மனநிலையில் தான் பொருட்களும் பிராண்டுகளும் முக்கியமானவை என்றும், அவையே வாழ்வின் நியாயமான லட்சியங்கள் என்றும் நம்பும் ‘அடிப்படையான நுகர்வு மாயை’ எந்த அளவு வெகுளித்தனமான, மனிதத்தன்மையற்ற, இயல்பிலேயே நச்சுத்தன்மை கொண்ட ஒரு சீரழிவு என்பது நமக்கு தெரியத் துவங்குகிறது.
000

ஜனார்த்தனன் இளங்கோ
ஜனார்த்தனன் இளங்கோ, மென்பொருள் பொறியியலாளர். சொந்த ஊர் திருவாரூரைச் சேர்ந்த திருத்துறைப்பூண்டி. இலக்கியம் தவிர தத்துவம், கட்டிடக்கலை, பறவையியல் ஆகிய துறைகளில் ஆர்வமுண்டு.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
