மஞ்சள் பட்சி : ஷம்புநாத் சட்டோபாத்யாய் கவிதைகள்

தமிழில் : சபரிநாதன்

ஷம்புநாத் சட்டோபாத்யாய் (1930 – 2018) அதிகம் அறியப்படாத ஒரு வங்கக்கவிஞர். கொல்கத்தாவிற்குப் புறத்தே உள்ள மணிதாம்பூர் என்ற சிறுநகரத்தில் வாழ்ந்து முடித்தவர். தனது வாழ்நாளில் தொழிற்சாலை ஊழியராக, தெருவோர வியாபாரியாக, மருத்துவப் பிரதிநிதியாக, பத்திர எழுத்தராக, கிடார் ஆசிரியராக, மேடைக்கலைஞராக, நாளிதழில் பிழை திருத்துநராக எனப் பல்வேறு பணிகளைச் செய்துள்ளார். வங்காளத்தின் கவிதை இயக்கங்கள் மற்றும் அமைப்புகளுக்கு அப்பாற்பட்டு இருந்தமையால், ஒப்பீட்டளவில் வெளிச்சத்திற்கு வராமல் அமைதியான வாழ்க்கையையே வாழ்ந்தார். இவரது கவிதைகள் எளிமையானவை, அமைதியானவை, ஆன்மீக/மறையறிவு பண்பு நிறைந்தவை மற்றும் இயற்கையோடு நெருக்கமான தொடர்பு கொண்டவை எனச் சொல்லப்படுகிறது. கடைசிகாலத்தில் பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் கூறியது இது:

“நான் ஒரு தனிமையான குழந்தையைப் போல அலைந்து திரிகிறேன். இயற்கைக்காட்சிகள் என்னை மெய்மறக்கச் செய்கின்றன. பறவைகளிலிருந்து உதிர்ந்த வண்ணமயமான இறகுகள், காட்டுச் சிவப்புப்பழங்கள், பழுத்த புளியம்பழங்கள், காட்டுப் புறாவின் கைவிடப்பட்ட முட்டை (அல்லது அது பாம்பின் முட்டையாகக் கூட இருக்கலாம்) என கண்ணில் படுவதையெல்லாம் நான் சேகரித்துக் கொள்கிறேன். இவைதான் என் வாழ்க்கையின் சேமிப்புகள். நான் பிரியும்போது, இவற்றை இந்தச் சாலையிலேயே விட்டுவிட்டுச் செல்வேன். அவை சூரிய ஒளியில் எப்போதாவது மின்னியதா என்று கூட திரும்பிப் பார்க்க மாட்டேன். இந்த நாடோடி வாழ்க்கை நான் கேட்டதை விட எனக்கு அதிகமாகவே கொடுத்துள்ளது.”


இக்கவிதைகள் கிங்ஷுக் சர்கார் என்ற மேற்குவங்கத்தைச் சேர்ந்த ஆங்கிலக்கவிஞர் மற்றும் மொழிபெயர்ப்பாளரால் செய்யப்பட்ட ஆங்கிலப் பெயர்ப்புகளில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
நன்றி: https://www.ethosliterary.org/

-சபரிநாதன்

மஞ்சள் பட்சி

நீர் நோக்கி வளைந்த மரக்கிளையில் மஞ்சள் பட்சி ஒன்று.
கீழே மினுங்குகிறது, அதன் மஞ்சள் பிம்பம்.

பூரணத்தைக் காண நான்
திரும்ப வேண்டும்
சலனிக்கும் மஞ்சளில் இருந்து
அசைவற்ற ஒன்றை நோக்கி.

ஆம். நான் போவேன்
கீழுள்ள மஞ்சளை விட்டு விட்டு
எது மஞ்சளோ அதை நோக்கி

000

சாயும் காலம்

நாள் முடிவிற்கு வருகிறது –
அதன் உடல்
பூனை வாயில் சிக்கிய புறாவைப் போல
முறிந்தவொரு சிறகோடு தொங்குகிறது.

அப்படியே அது, இருள் சூழும் வயல்வெளிக்குள் நுழைய,குருதி சொட்டச் சொட்ட..
சிவக்கும் மேகங்கள்
நாணல்கள் நடுவே திகைத்து நிற்கும் காற்று அலறுகிறது “ஊழி”.

000

எத்தனையோ பொருட்கள்

எல்லாப் பொருட்களும் பெரும் சத்தத்துடன் விழுவதில்லை.
டிராம்களிலும் பேருந்துகளிலும், புறநகர் ரயில்களிலும்,
எதையாவது பற்றிக் கொண்டு தொங்கியபடியே – வெறும் பிழைப்பிற்கான முயற்சியில்
எத்தனையோ உயிர்கள் பள்ளத்தாக்குகளில் வீழ்வதை நான் பார்த்திருக்கிறேன்.

நகரங்களில்
மலரும் தளங்களைக் கொண்ட வளரும் வானளாவிய கட்டடங்கள்,
டைல்ஸ் சுவர்களில், பறக்கும் பெருநாரை ஓவியங்கள்,
மார்பிள் மேஜை மீது அடுக்கப்பட்ட புத்தம்புதிய சீமைக்கனிகள்,
கண்ணாடிகளை உடைக்கும் சிரிப்பலைகள்,
விளக்கேற்றப்பட்ட தொட்டிகளில் வண்ண மீன்கள்,
எதுவுமே எதையும் காட்டிக் கொடுப்பதில்லை
மலர்ந்த ரோஜாவும் தன் உதிர்வை மறைத்துக் கொள்ளவே செய்கிறது.

எல்லாப் பொருளும் சத்தமிட்டு உடைவதில்லை.
கிராமத்துச் சந்தைகளில், ஆலமரங்களின் அடியில்
மழைக்கும் வெயிலுக்கும் ஒண்டியிருக்க வேண்டி,
தலைக்கு மேல் ஒரு கூரை எழுப்ப முற்பட்டபடியே – எத்தனையோ முகங்கள் உடைந்து
அடியிலிருக்கும் மண்ணோடு மண்ணாகக் கரைவதை நான் பார்த்திருக்கிறேன்.

000

Painting by Sudeshna Majumdar. Courtesy : Ethos Literary Journal

நீர் நிலை

காலம் வெளி,மர்மமானது.. ஆழ் நீல ஏரி.
ஒரு நீச்சல் போட்டு அதை நீங்கள் கலைத்துவிட முடியும்,
இச்சைகளால் அலைக்கு மேல் அலைகளை எழுப்பக்கூடும்
ஆனால் உங்கள் செயல்களெல்லாம் விளையாட்டுகள்– நீர்ச்சிலேட்டில் கிறுக்கல்கள்.
ஜொலிக்கும் சோப்பு நுரை மரிக்கும்
பிரகாசமான இந்த மாலையும் கூட.
ஆனால் பாழடைந்த தோட்டம் மின்மினிகளால் நிறைகிறது.
நீங்கள் கரையேறியதும் மேற்பரப்பு மீண்டும் சலனமிழக்கிறது.காலம்… வெளி…

தாமரை இலை குனிந்து தன்னையே பார்க்கிறது
மௌனத்தில்
புல்லிதழின் பின்னிருந்து மீண்டும் ஊர்ந்து வருகிறது சிலந்தி.
மெல்லிய நட்சத்திர ஒளியில் விகசிக்கும் வானம் சதா விழித்திருக்கிறது.

000

லாந்தர்

சில பொருட்கள் வெளிச்சத்திற்கு வருகின்றன: சிறு புல்வெளி, கொஞ்சம் மண்,
மண்ணைத் தொட வளையும் சில மூங்கில்கள், கள்ளிச்செடி வேலி,
பிறகு திடீரென, இருண்ட குடிசை, அருகே ஓர் இருண்ட குளம்.கடக்கும் கைவிளக்கின் நிழல், முற்றத்து வாழைமரத்தின் குறுக்கே வீழ,
வெளிச்சம் நகர்கிறது
கைவிடப்பட்ட கோவிலுக்குப் பின்னிருக்கும் நரியை எச்சரித்தபடி,
காய்ந்த இலைகள் மீது பனித்துளிகளைப் பொழியுமாறு
பழந்தின்னி வவ்வவாலை திடுக்கிட்டு பறக்கச் செய்தபடி
வெளிச்சம் நகர்கிறது

லாந்தர் வெளிச்சத்தில் பறந்து மறைகிறது, படங்களின் உலகம்.

பரந்த அத்துவான வெளியிலோ, வேறுவகையான இன்னொரு கைவிளக்கு நகர்கிறது.
ஒளி, நூற்றாண்டுகளைக் கடந்து செல்கையில்
வெளிச்சமான இடத்தை மீண்டும் தன்வயப்படுத்த
காலடி ஓசையின்றி பின் தொடர்கிறது
ஒளி வேகத்தில் இருள்.

இப்படித்தான் பண்டைய நாகரிகங்கள் மறைந்து போயின பையப் பைய– லாந்தருக்குப் பின்னால்
எங்கோ ஓர் இடத்தில்!

000

பூஜ்ஜியத்தின் வில்

பூஜ்ஜியம் என்றால் ‘எதுவுமில்லை’ என்று பொருளல்ல.
பூஜ்ஜியம் என்றால் ‘ஏதோ ஒன்று’ என்று பொருள்.
பூஜ்ஜியத்தை எழுதித்தான் பாருங்களேன், அதன் வளைவு
தன் மையத்திற்குள் ஒரு குறிப்பிட்ட பரப்பைச் சேகரிப்பதைப் பாருங்கள்!
அப்படியென்றால், வாழ்க்கை என்பது பூஜ்ஜியத்தின் வியப்பூட்டும் விளையாட்டா,
அவ்வட்டத்தை திறம்பட வரைந்து கொண்டிருக்கிறதா காலம்?
மரணத்தின் விரல்கள் வந்து அதன் வட்டவிளிம்பை அழிக்கும் போது,உடலும் ஆவியும் வெளியின் பிரம்மாண்ட முழுமையோடு கலந்துவிடுமா?
பசும்வயலில் மரங்களை அசைத்துச் செல்லும் மெல்லிய தென்றல்,
இந்த மினுமினுக்கும் ஆறு, மணக்கும் பூங்கிளையில்
அமர முயலும் இக்காதல் பறவை ஜோடி –
இவை அனைத்தையும் பூமியின் வட்டம் தன் மந்திரத்தால் பிடித்து வைத்திருக்கிறது.

பூஜ்ஜியம் என்றால் ‘ஒன்றுமில்லை’ என்று பொருளல்ல.
பூஜ்ஜியம் என்றால், அங்கே ஓர் ‘அழிவிலா மந்திர வட்டம்’ இருக்கிறது என்று பொருள்.

000

என் ஒட்டகத்தின் நிழலில்

நான் தும்பை பிடித்துக்கொண்டு நடக்கிறேன்.
என் பின்னால் நடந்து வருகிறது ஒட்டகம்,
தன் பல்வகைச் சுமைகளைப் பற்றி எந்தக் கவலையுமின்றி –
என் வாழ்க்கையின் எச்ச சொச்சங்கள் கொண்ட சுமை.

நாலாபுறமும் சூழ்ந்திருக்கும்
அந்தக் கோட்டை நோக்கி நடக்கிறேன்,
பூமியின் வெறுமையை
வானின் வெறுமையிலிருந்து பிரிக்கும் கோடு அது.
சில நேரங்களில், தகிக்கும் மூட்டத்தில்
மணல் அலைகளிலிருந்து ஒரு பேரீச்ச மரம் எழுகிறது.
சில நேரங்களில், வானத்தின் வித்தைக்காரன் நிழலை விழுத்துகிறான்:

அடிவானத்து மின்னும் நதிக்கரை அருகே ஒரு சோலை.

நான் தொலைந்துவிட்டேனா?
அல்லது இதுதான் நான் நடக்க வேண்டிய பாதையா?
வெயில் வெளுத்த எலும்புகள் வரிசை கட்டிய இப்பாதை –
பழைய பயணிகளின் இறுதி முகவரிகளா?
இங்கே, மணல் மேல் மணல் பரவிப் பரவி
நீள்கிறது அப்பாலை அமைதிக்குள்.

இருந்தும்,
என் ஒட்டகம் பின்வர நான் நடந்துகொண்டிருக்கிறேன்.
அதை,எனது வாழ்வெனும் எண்ணத்தை, அழைத்துச் செல்கிறேன்
தொடுவானத்தை நோக்கி
தொடுவானத்திற்கும் அப்பால்.

000

சபரிநாதன்

சபரிநாதன். கவிதைகள், விமர்சனத் திறனாய்வு ஆகிய துறைகளில் தீவிரமாக ஈடுபடுகிறவர். "களம் காலம் ஆட்டம்", "வால்" என்று இரண்டு கவிதைத் தொகுதிகள் வெளியிட்டுள்ளார். விகடன் விருது, விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது, யுவபுரஸ்கார் விருது ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

உரையாடலுக்கு

Your email address will not be published.

திரட்டு

சேகரம்

Latest Posts

Go toTop

Don't Miss