ஜேன் ஹிர்ஷ்ஃபீல்ட் கவிதைகள்

தமிழில் : பா.ரேவதி

ஜேன் ஹிர்ஷ்ஃபீல்ட் (Jane Hirshfield) (1953-), சமகால அமெரிக்க இலக்கிய உலகின் மிக முக்கியமான கவிஞர்களில் ஒருவராக கருதப்படுகிறார். ஜென் தத்துவத்தின் அமைதியையும் இயற்கை உலகின் மீதுள்ள ஆழ்ந்த கவனத்தையும் தன் கவிதைகளில் இணைப்பவர். இவர் 1979ல் சோட்டோ ஜென் (Soto Zen) மரபில் இல்லறத் துறவிக்கான (Lay Ordination) தீட்சையைப் பெற்றவர். “புத்த மதத்தின் அறமான விழிப்புணர்வு நிலையை” ஹிர்ஷ்ஃபீல்ட் கவிதைகளின் சிறப்பியல்பாக நோபல் பரிசு வென்ற செஸ்லா மிலோஷ் குறிப்பிடுகிறார்

ஆதாரப்புள்ளி என ஏதுமற்ற பார்வையில் மறைந்து போவது

ஒவியமொன்றில் பச்சையோ நீலமோ மஞ்சளோ
வெறும் பச்சையாகவும் மஞ்சளாகவும் நீலமாகவும்
இருப்பதைப் போல,
அதனுள் , மரம் இருக்கிறது , படகு இருக்கிறது , வானம் இருக்கிறது

எதுவுமே அடைமொழிகளாக இல்லாமல்
எல்லாமே பெயர்ச்சொற்களாக இருக்கும்
உலகங்கள் சில உண்டு

இதுவும் அதில் ஒன்று.

இன்றைய நாளில் கூட—இந்த வீழ்ந்துப் போன நாளில் கூட—
அது அப்படியே இருக்கலாம்.

அதன் மீது அணுக்கத்துடன் பதியும்
பாதச்சுவடுகள் பாதச்சுவடுகள், பாதச்சுவடுகள்.

000

விளிம்பாக இருப்பதனைப் போற்றுதல்

தத்துவமின்றி,
துன்பமின்றி,
வரலாறின்றி,
சாம்பல் நிற அணிலொன்று
பரபரப்பாக காட்சியளிக்கிறது.

போஷின் ஓவியத்திலிருந்து விடுவிக்கப்பட்ட
ஓர் ஆன்மாவைப் போல
பச்சைகளும் குங்குமச் சிவப்புகளும் நீக்கப்பட்டு இலகுவாக,
அது ஒரு மரத்தில் ஏறுகிறது.
தன்னைப் போலவே வரலாறில்லாத மரத்தில்.

அதன் இதயம் இன்னும் அதிகமாக உழைக்கிறது.

000

பிப்ரவரி 29

ஒரு கூடுதல் நாள் –

ஓவியத்திலிருக்கும் ஐந்தாவது பசு
அவளுடைய கருப்பு வெள்ளைப் புள்ளிகளுக்குள்ளிருந்து
உங்களை நேருக்கு நேர்
உற்று நோக்குவதுப் போல

ஒரு கூடுதல் நாள்-

நிச்சயமாக இது தற்செயல் தான்.
கவனிக்கத் தவறும்விதமாக தாழ்வாக இருக்கும் நிலைப்படியில்,
குடிகாரனொருவன் இடறி விழுவதைப் போல,
நிஜத்தின் மீது மோதி விழுகிறது மனித நாட்காட்டி.

ஒரு கூடுதல் நாள்-

இரண்டாவது கோப்பை கடுங்காபி.
நட்பானதாயினும், முறைமை வழுவாத ஒரு தொலைபேசி உரையாடல்.
தபாலில் திருப்பி அனுப்பப்பட்ட ஒரு பொதி.
சற்று கூடுதல் வேலைதான் , ஆனால் ரொம்பவும் அதிகமில்லை
ஒற்றை நாளுக்குரிய மதிப்பில், துல்லியமாக

ஒரு கூடுதல் நாள் —

கதவுக்கும் அதன் சட்டத்துக்குமான இடைவெளியைப் போல,
ஒரு அறையில் வெளிச்சமும் இன்னொன்றில் இருட்டும் இருக்கையில்
ஒரு பெண் தனது ஸ்கார்பை மாற்றிக் கொள்ள
ஒன்று இன்னொன்றாக மாறுகிறது.

ஒரு கூடுதல் நாள்—

மற்ற எந்த நாளையும் போல மகத்தானது,
ஆயினும் சற்று பெருந்தன்மை வாய்ந்தது
எழுதியவர் இறந்த பிறகும்
மீண்டும் வாசிக்கக்கூடிய
ஒரு கடிதத்தைப் போல.

000

இரண்டு லினன் கைக்குட்டைகள்

நீ இறந்து பன்னிரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன
எப்படி இவை இன்னும்..

000

படைப்புகளும் நேசங்களும்

(1)

ஒரு கண்ணாடி உடைவதைப் போல
மழை பெய்தது
சட்டென்று ஒரே நேரத்தில்
எல்லா இடங்களிலும் இருக்கும் ஒன்றாய்

(2)

ஒரு ஓவியத்தைப் போல வாழ்வது என்பது
ஒரே நேரத்தில்
ஒன்றுக்கு மேற்பட்ட கோணங்களிலிருந்து பார்க்கப்படுவது;

நுழைவாயிலை நேருக்கு நேராகவும்
கூந்தலைக் கீழ்நோக்கியும்
உனது புழுதிபடிந்த பாதங்களை மேல்நோக்கியும்

(3)

“இது உனது இல்லம் “-

எனது பறவை இதயம்,
என் சில்வண்டு இதயத்திடம் சொன்னது.
நான் உள் நுழைந்தேன்.

(4)

மகிழ்ச்சியானவர்கள் மகிழ்ச்சியை மட்டுமே காண்கிறார்கள்,
வாழ்பவர்கள் வாழ்வை மட்டுமே காண்கிறார்கள்,
இளைஞர்கள் இளமையை மட்டுமே காண்கிறார்கள்;

அன்றாடம் கண்விழிக்கையில் அருகில் இருப்பவரும்  
அதே காதலுடனே  இருப்பதாக  நம்பும்  காதலர்களைப் போல. 

(5)

அந்தப் புத்தகத்தின் பக்கங்களை எத்தனை முறை திருப்பினாலும் ,
அதே இரண்டு வரிகளில்தான்

மீண்டும் மீண்டும் வந்து நின்றேன்:
சிலரின் இருப்பு; இருப்பது. மற்றவர்களின் இருப்பு; இல்லாமல் இருப்பது.

பிறகு நான் மீண்டும் உறக்கத்தில் ஆழ்ந்தேன், ஸ்வீடிஷ் மொழியில்.

(6)

மேய்ந்து கொண்டிருக்கும் ஆட்டை
மலை ஈர்ப்பதில்லை
ஆனால் ஈக்கள் அப்படியல்ல.

(7)

இன்னும் நிகழாத ஒன்றின் துயரம் —

உட்புறமாகத் தாழிடப்பட்ட கதவு.
புற்களினூடே அவற்றைப் பிரித்தபடி நடந்துச்செல்லும்
ஐந்து கால் எறும்பினுடைய மெளனத்தின் கனம்

(8)

துண்டு எது , தண்ணீர் எது
மாறிக்கொண்டேயிருக்கிறது,
ஆயினும், நம் மூவரில்
துண்டை மட்டுமே
வெயிலில் தலைக்கீழாகப் பிடிக்க முடிகிறது

(9)

“ஒருகாலத்தில் நான் .”

சுயபச்சாதாபத்திலோ கர்வத்திலோ சொல்லப்படவில்லை.
நாம் ஆந்தைக்கும்,
அகந்தைக்கும், சிப்பிக்கும் அனுமதிக்கும் கண்ணியத்துடன்.

000

பா.ரேவதி

சிங்கப்பூரில் வசித்துவரும் பா.ரேவதி, கல்வித்துறையில் பணியாற்றி வருகிறார். ஆனந்த விகடன், அவள் விகடன், மங்கையர் மலர் ஆகிய இதழ்களில் கவிதைகள் எழுதியுள்ளார். சிங்கப்பூரில் வெளிவரும் 'தி சிராங்கூன் டைம்ஸ்' மாதாந்திர  இதழிலும் , நுட்பம் , நீலி ஆகிய மின்னிதழ்களிலும்  இவரின் பல்வேறு கட்டுரைகள் வெளிவந்துள்ளன.  தற்சமயம் சிறுகதைகளும் எழுதிவருகிறார்.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

உரையாடலுக்கு

Your email address will not be published.

திரட்டு

சேகரம்

Latest Posts

Go toTop