
பகுதி 1
பகுதி 2
000
அமெரிக்காவில், இந்தியா குறித்த ஆய்வுகளில் தமிழ் பண்பாட்டை தீவிரமான ஆய்வுப்பொருளாக ஆக்கியவர்களில் முதன்மையானவர் கவிஞர், மொழிபெயர்ப்பாளர், நாட்டுப்புறவியல் அறிஞர் என பலமுகங்களைக் கொண்ட ஏ. கே. ராமானுஜன். சங்கத் தமிழ் இலக்கியங்களை மொழிபெயர்த்ததன் மூலம் இதைச் சாத்தியப்படுத்தினார். கன்னட வசனகவிதைகளையும் உலகளவில் கொண்டு சேர்த்தவர். கல்லூரி ஆசிரியராக அவர் மதுரையிலும் தன் இளமைக் காலத்தில் பணியாற்றியவர். ராமானுஜனின் கவிதைகளிலும் நாட்குறிப்புகளிலும் மதுரை வாழ்க்கை சில காட்சித் துண்டுகளாக இடம்பெறுகிறது. தமிழ் பெற்றோருக்குப் பிறந்த ஏ. கே. ராமானுஜனின் குடும்பம் மைசூரில் குடியேறி நிலைகொண்டது. மைசூரில் தான் வாழ்ந்த வீட்டின் கீழ்தட்டில் தமிழ் புழங்கியதாகவும், அப்பா அதிக நேரத்தை செலவழித்த மாடியில் ஆங்கிலம் புழங்கியதாகவும், பொதுவெளியில் கன்னடம் இணைப்பு மொழியாக இருந்ததாகவும் குறிப்பிடுகிறார். வேதங்கள், காப்பியங்கள் மூலமாகவன்றி குழந்தைகள், பெண்களின் வாய்மொழிக் கதைகள் வாயிலாக இந்திய சிந்தனை முறையை ஆராய வழிவகுத்தவர் ஏ. கே. ராமானுஜன். மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் ஏ.எல்.பெக்கெர், கீத் டெய்லர் இருவரும் சேர்ந்து எடுத்த ஏ. கே. ராமானுஜனின் நேர்காணல் இது. 1989 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. அப்போது அங்கே அவர் பேராசிரியராகப் பணிபுரிந்தார். மிச்சிகனில் பெக்கெர், மொழியியல் பேராசிரியராக இருந்தார். கீத் டெய்லர் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகப் பணியாற்றுபவர். கல்வித்துறை சார்ந்த புத்தகக் கடை ஒன்றையும் நிர்வகித்துவந்தவர். ஏ. கே. ராமானுஜன் அளித்த நேர்காணலின் நிறைவுப் பகுதி இது…
ஏ.எல்.பெக்கெர்: நாட்டார் கதை ஒன்றையாவது எழுதுவதற்கு முயன்றிருக்கிறீர்களா?
ஏ.கே.ராமானுஜன்: ஏற்கெனவே தெரிந்த கதைகளைப் போலி செய்து கதைகள் எழுதியிருக்கிறேன். அவை பொதுவாக நகைச்சுவையானவை. ஆனால், எனக்கு அதில் திருப்தி வரவில்லை. மூலக்கதைகளே சிறந்தவை. நூற்றாண்டுகளாக பல்வேறு கதைசொல்லிகளால் மெருகேற்றப்பட்டவை அவை. எந்த தனிநபரும் அதைப் போன்ற ஒன்றைச் செய்ய இயலாது. ஒவ்வொரு விவரமும் இருக்கவேண்டிய இடத்தில் இருக்கும். நல்ல கதைசொல்லிக்கு ஒரு விவரத்தை எப்படி அகற்றுவதென்றும், அதில் இன்னொரு விவரத்தை எப்படி வைப்பதென்பதும் தெரியும். ‘மரபெனும் ஒரு வாக்கியம் தலைமுறைகளாக மெருகூட்டப்படுவது’ என்று சொல்லப்படுவதுண்டு. நாட்டார் கதைகளில் அந்த அளவிலேயே வாக்கியங்கள் மட்டுமே மெருகேற்றப்படுவதில்லை. கதையாடலில் – அதில் சொல்லப்பட்டுள்ள அன்னியோன்யமான உறவுகள் – முழுமையாக்கப்படுகின்றன; கதாபாத்திரம் தட்டையானதாக இருக்கும் நிலையிலும். ஒட்டுமொத்த கதையே நுணுக்கத்தைக் கொண்டுவிடுகிறது. நவீன நாவல்கள் உளவியல் தன்மை கொண்ட உளவியல் தன்மையில் அல்ல. இந்த நாட்டார் கதைகள் வேறுவகையான உளவியலை வைத்திருக்கின்றன. ஒரு கதாபாத்திரத்துக்குள் நடக்கும் தன்னுரையாடல்களை ஒரு நாட்டார் கதை காண்பிப்பதில்லை. ஆனால், கதையின் முழுச்சித்திரமும் நான் முன்பு சொன்ன கதையைப் போல ஒரு உளவியலை நமக்கு உணர்த்திவிடுகின்றன. அந்தக் கதையில் வரும் கணவனை வீட்டுக்கு வெளியே போகச் செய்து, திரிகள் பேசும் கிசுகிசுக்களைக் கேட்க வைக்கிறது. அப்படித்தான் அவன் தன் வீட்டில் என்ன நடக்கிறதென்பதை உணர்ந்துகொள்கிறான். இந்த நுணுக்கம் பிரமாதமானது.
ஏ.எல்.பெக்கெர்: நாம் பேசவேண்டிய முக்கியமான விவகாரம் ஒன்று உள்ளது. இரண்டு பாரம்பரியங்களோடும் நிகழ்காலத்தோடும் தொடர்புடைய விஷயம் அது. நாட்டார் வழக்காற்றியல் ஒரு காலத்தை எடுத்துக்கொண்டு ஒரு கட்டுமானமாக உயர்கிறது. செவ்வயில் தமிழ் கவிதையோ ஒரு காலகட்டத்துக்குள் இருக்கும் தொடர்ச்சியின் சித்திரத்தைக் காண்பிப்பதாக உள்ளது. சமூக சிந்தனை சார்ந்த கமிட்டியில் சிகாகோ பல்கலைக்கழகத்தில் இருக்கும் உங்கள் சகாக்கள் சிலர், இலக்கிய நியதியின் கண்ணோட்டத்துடன் அணுகுபவர்களாக உள்ளனர். இந்த நாட்டில் நம்மில் பெரும்பாலானவர்கள் வலதுசாரிகளாகத் தென்படுகிறார்கள். ஜனநாயக அடிப்படையில், தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கும் நாட்டில் அவர்கள் உயர்வர்க்க மனப்போக்கைத் திணிக்க முயல்கின்றனர். அது இனவாத அடிப்படையிலும் பாலினப் பாகுபாடுகளோடும் உள்ளனர். அவர்கள் ஐரோப்பிய ஆண்வய இலக்கியங்களைப் பாதுகாக்கின்றனர். ஆனால் நாட்டார் கதைகளுக்கு அளப்பரிய ஆற்றல் உள்ளது. அதில் சிறந்ததை சால் பெல்லோ மற்றும் ஆலன் ப்ளூம் ஆகியோர் கண்டறிய முயல்கின்றனர். இன்னொரு பண்பாட்டிலிருந்து வந்த ஒருவராக நீங்களும் இந்த அணுகுமுறைகளை நன்கு அறிந்தவராக இருக்கிறீர்கள். இந்த அமெரிக்க சர்ச்சை குறித்து உங்கள் எண்ணங்களைக் கேட்க எனக்கு விருப்பம்…
ஏ.கே.ராமானுஜன்: இதுகுறித்து இரண்டு விஷயங்கள் சொல்வதற்கு இருக்கிறது. நீங்கள் சொன்னவர்கள் கூர்மதி கொண்டவர்கள். அவர்கள் முன்முடிவுகளுடையவர்கள் அல்ல. சால் பெல்லோ மாதிரியானவர், நிறைய விஷயங்களுக்கு திறந்தமனதுடன் முகம் கொடுப்பவர். எங்கே இலக்கியம் இருந்தாலும் அவர் அதைக் கண்டறியும் திறந்த மனப்பான்மை கொண்டவர். வேறு மொழி இலக்கியங்கள் போதுமான அளவு நம்மிடம் இல்லை. ஹோமருக்கு நல்ல மொழிபெயர்ப்புகளும் மோசமான மொழிபெயர்ப்புகளும் இங்குள்ளன. ஹோமரை ஒவ்வொரு தலைமுறையிலும் உருவாக்கிக்கொண்டிருக்கின்றனர். இந்திய இலக்கியத்தை அப்படி யார் செய்கிறார்கள்? ஆப்பிரிக்க இலக்கியத்தை? அல்லது சீன இலக்கியத்தை? அடுத்தடுத்து மொழிபெயர்ப்பை சரிசெய்துகொள்ளும் மரபு இந்த மொழிகளிலிருந்து இல்லை. அதனால் அந்தப் படைப்புகளுக்குள் நுழைவதற்கு அன்னிய மொழி வாசகர்களுக்கு வழியும் இல்லை. இலக்கிய நியதியை விரிவாக வரையறுக்க நீங்கள் விரும்பினால் ஆப்பிரிக்க, இந்திய இலக்கியங்களைச் சேர்க்கவேண்டுமென்று சொல்வது மட்டும் போதாது. மோசமான மொழிபெயர்ப்புகளை நீங்கள் சேர்த்தீர்களெனில், அந்த இலக்கியங்களுக்கு நீங்கள் துரோகமே செய்கிறீர்கள். மேற்கில் எழுதப்பட்ட சிறந்த படைப்பை, எனது பண்பாட்டிலிருந்து வந்த சிறந்த படைப்பின் மோசமான மொழிபெயர்ப்போடு ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டிருக்கும் நிலை வரும். அதனால் சிறந்த இலக்கியங்களுக்கு சிறப்பான மொழிபெயர்ப்புகள் தேவை. கார்னெல் பல்கலைக்கழகத்திலிருந்து தற்போதுதான் ஒரு கடிதம் வந்துள்ளது. அவர்கள் உலகளாவிய எழுத்தறிவு குறித்த கலைக்களஞ்சியத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர். மேற்கத்திய இலக்கியங்கள் அல்லாத இலக்கியங்களையும் அதில் சேர்க்கவேண்டுமென்று நினைக்கின்றனர். அப்படியான முயற்சிகள் நமக்கு அவசியம். நமக்கு தகவலாக இருப்பது மட்டும் போதாது. ப்ளேட்டோவை வாசிக்க விரும்பினால் உங்களுக்கு மிகச்சிறந்த மொழிபெயர்ப்புகள் கிடைக்கின்றன. அந்த மொழிபெயர்ப்புகளுக்கு ஒவ்வொரு தலைமுறையும் விமர்சனங்களைச் செய்து திருத்தங்கள் நடக்கின்றன. பொழிப்புரைகளும் கிடைக்கின்றன. மற்ற மொழி இலக்கியப் பிரதிகளுக்கு இது நடக்கிறதா? நாம் சமத்துவமற்ற வாசிப்புச் சூழலுக்கு வழிவகுக்கிறோம்.
கீத்டெய்லர்: மேற்கில் இதுபோன்ற ஒரு பண்பாட்டை உருவாக்க பல நூறாண்டுகள் ஆகாதா?
ஏ.கே.ராமானுஜன்: அப்படியல்ல. புதிய மொழிபெயர்ப்பாளர்கள் வந்திருக்கின்றனர். ஆனால் நமது பல்கலைக்கழகங்களில், ஆசிய அல்லது தென் கிழக்காசியப் பல்கலைக்கழகத் துறைகளைப் போன்றே, மொழிபெயர்ப்பாளர்களை உருவாக்க வேண்டும் – கமிட்டிகளைக் கொண்டு மொழிபெயர்த்தல் கூடாது. தங்கமுட்டை வைத்திருப்பது மட்டுமே போதாது. நமக்கு வாத்தும் வேண்டும்.
ஏ.எல்.பெக்கெர்: அப்படியென்றால் அவர்கள் வாழ்க்கைக்கு உதவுவதற்கான வழியையும் நாம் நிச்சயம் கண்டறிய வேண்டும். மொழிபெயர்ப்பு செய்வதன் மூலமே அவர்கள் வாழமுடியக்கூடிய சூழல் உருவாக்கப்பட வேண்டுமில்லையா?
ஏ.கே.ராமானுஜன்: நல்ல மொழிபெயர்ப்பாளர்கள் அரிதினும் அரிதானவர்கள். படைப்பு மொழிபெயர்ப்பாளரைத் தேர்ந்தெடுக்கிறது. மொழிபெயர்ப்பாளரும் படைப்பைத் தேரந்தெடுக்கிறார். ஒருவர் ஒரு மொழியைத் தெரிந்திருப்பது மட்டுமே போதாது. இதற்கு நாம் மொழிபெயர்ப்புப் பட்டறைகளை நடத்தவேண்டிய தேவை உள்ளது. கவிதை அல்லது புனைவுக்கான பட்டறைகளை நடத்துவதற்கு ஒப்பாக. அங்கேதான் அவரவருக்குத் தெரிந்த மொழியை மற்றவரிடம் பகிர்ந்துகொள்ளும் சாத்தியம் உருவாகும். ஜாவா மொழியைத் தெரிந்த ஐந்தாறு பேர் அமெரிக்காவில் சேர்ந்தால் அவர்கள் சேர்ந்து ஒரு மொழிபெயர்ப்புப் பட்டறையை ஒருங்கிணைக்கலாம். ஜாவா மொழியைத் தெரிந்த நான்கு பேர் சேர்ந்து சக ஜாவா மொழிப் படைப்பாளியை வாசிக்க முடிந்தால் பொருத்தமான விமர்சனங்கள் கிடைக்கும். ஆலன் பூம் பயிற்றுவிக்கும் சமூக சிந்தனைக்கான கமிட்டியிலேயே எடுத்துக்கொண்டால் இரண்டு பேர் இந்தியவியலாளர்கள் உள்ளோம். ஒரு சீன மொழிபெயர்ப்பாளரும் இருக்கிறார், டோனி யூ. இந்திய செவ்வியல் இலக்கியங்களையும் மேற்கத்திய இலக்கியங்களையும் படிக்கும் மாணவர்களும் உண்டு. எனவே புதிய பாதைகள் திறக்கப்பட்டுள்ளன.
கீத்டெய்லர்: ஆனால் ப்ளூமின் பிரபலமான புத்தகமான தி க்ளோசிங் ஆஃப் அமெரிக்கன் மைண்ட் போன்ற நூல்களின் அணுகுமுறை மேற்கத்திய பண்பாட்டைக் கட்டியெழுப்புவதாக உள்ளதே?
ஏ.கே.ராமானுஜன்: அது உண்மையான பிரதிநிதித்துவம் அல்ல. தாராளவாத பண்பாடுகள் மேற்கிலேயே உள்ளன என்ற ப்ளூமின் கண்ணோட்டத்துடன் நான் முரண்படுகிறேன். இந்த அணுகுமுறை அவருடையது மட்டுமல்ல. நைபாலிடமும் அதைக் காண இயலும். ஜனநாயகத்தைப் பற்றி எழுதிய ஹெகல் போன்றவர்களிடமும் அந்தக் கண்ணோட்டம் உள்ளது. பகுத்தறிவு, தாராளவாதப் போக்கோடு, ஜனநாயக வழியில் அரசியல் அல்லது தத்துவங்கள் சீன, இந்திய, ஆப்பிரிக்க கலாசாரங்களில் இல்லை என்ற கண்ணோட்டம் அது. அவர்களது சிந்தனையின் பின்னணியில் அதுவே உள்ளது. மானுடவியல் பற்றிப் பேசும்போது, மேற்கத்தியருக்கு முன்னால் பிற பண்பாடுகள் பற்றி ஆர்வம் ஏதாவது இருந்ததா? என்று ப்ளூம் போன்றவர்கள் கேட்பார்கள். ப்ளேட்டோவில் காணப்படும் பகுத்தறிவு சிந்தனை வெளியில் இல்லை என்றே அவர் கூறுவார். ஆனால், அது முழுக்கத் தவறு. அவருக்கு இந்தியா அல்லது சீனாவைப் பற்றி அவ்வளவு தெரியாது. அது ஒருபகுதி அறியாமையினால் வருவது. ஒருபகுதி அங்கிருக்கும் நூல்களைத் தெரியாததால் வருவது. இன்னொரு புறம் தனது கருத்தை அவர் முழுமையாக நம்புகிறார். அவர்களது கருத்துகளை வெறுமனே அவர்கள் இனவாதிகள் என்று முத்திரை குத்தாமல் பரிசீலிக்க வேண்டும். தீவிரமான சவாலாக அவர்களது கருத்துகளை எடுத்துக்கொண்டு விவாதித்தல் அவசியம். அதுதான் பலனுள்ள உரையாடலை உண்டாக்கும்.
கீத்டெய்லர்: ஆலன் ப்ளூம் தனது கருத்துகளை மாற்றிக்கொள்வாரா?
ஏ.கே.ராமானுஜன்: அவர் ஒப்புக்கொள்வது என்பது விஷயம் அல்ல. பிரச்சனை நமக்கு முன்னால் உள்ளது. அது நம்மால் விவாதிக்கப்பட வேண்டியது. அந்த வகையில் ப்ளூம் சரியான உதவியையே நமக்குச் செய்திருக்கிறார்.
ஏ.எல்.பெக்கெர்: உங்களது கட்டுரையிலிருந்து ஒரு மேற்கோளை அடிப்படையாக வைத்துக் கேட்கிறேன். இந்தியவழி சிந்தனை என்பது உண்டா?
ஏ.கே.ராமானுஜன்: எனக்குத் தெரியாது. அதை ஒரு கேள்வியாகவே விட்டுவைப்போம். திட்டவட்டமான பதில் அதற்குக் கிடையாது. நான் ஆம் என்று பதில் சொன்னால், நீங்கள் அது என்ன? என்று கேட்பீர்கள். அது ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பு என்று நான் கருதுகிறேன். அதன் கூறுகள் எல்லா இடத்திலும் உள்ளவைதான். மற்றவர்களின் தர்க்கமும் இந்தியர்களின் தர்க்கமும் வேறுபட்டது என்று நான் சொல்லவே மாட்டேன். ஆனால், சிந்தனையின் சூழமைவு, சமூகத்தில் சிந்தனையின் செயல்பாடுகளில் குறிப்பிட்ட சாய்வுகளும், சார்புகளும் உள்ளன.
ஏ.எல்.பெக்கெர் : தமிழ் சிந்தனை என்று சொல்வதற்கு சாத்தியம் உள்ளதா?
ஏ.கே.ராமானுஜன்: அப்படியொன்று இருக்கிறது. அது மேலானது என்று தமிழர்கள் சொல்கிறார்கள். இந்திய அடிப்படையில் கேள்வி கேட்பதைவிட மொழிக்கு இப்படியான கேள்வி பொருத்தமானது என்று நினைக்கிறேன். ஒரு மொழிக்குள்ளேயே பல்வேறு வகைமைகள் உள்ளன. ஒரு பாங்கில் அது செயல்படுவது சாத்தியமேயற்றது. ஒரு மொழிக்குள் இருக்கும் சிந்தனை அமைப்புகளில் குறிப்பிட்ட சார்பு உள்ளது என்று நாம் சொல்லலாம். சூழலமைவுக்கு வெளியே அதற்கு அர்த்தமேயில்லை என்று அதனால்தான் நான் சொல்கிறேன்.
கீத் டெய்லர்: நீங்கள் கன்னடத்திலும் ஆங்கிலத்திலும் கவிதைகள் எழுதுபவர். வேறு வேறு சூழலமைவுகளை உங்கள் மனத்தில் இருத்திக்கொண்டுதான் எழுதுகிறீர்களா?
ஏ.கே.ராமானுஜன்: இல்லை. ஒரே ஆள்தான் கவிதைகளை எழுதுகிறான். ஆனால் வேறு வேறு மொழிகள் அதற்கேயுரிய வரம்புகளையும், மதிப்பீடுகளையும் கொண்டுள்ளன. மூன்று மொழிகள் எனக்கு நன்றாகத் தெரிந்திருப்பதால், ஒரு மொழியில் நான் இயங்கும்போது மற்ற இரண்டும் அதைப் பார்த்துக்கொண்டே இருக்கிறது. எதுவுமே பதியாத பலகையாக நான் இல்லை. எனது மொழிகளை நான் குறிப்பிட்ட வகையான இசைக்கருவிகளாகவே பார்க்கிறேன். நீங்கள் ஒரு நாணை இழுக்கும்போது மற்ற நாண்கள் அதிர்கின்றன. சிதார் கருவியைப் போல. மற்ற நாண்களைத் தொடவே வேண்டியில்லை. நம்மில் எல்லாரிடமும் அப்படித்தான் நிகழ்கிறது. நாம் பேசிக்கொண்டிருப்பதற்குப் பின்னாலும் அதிர்ந்துகொண்டிருக்கிறது. நான் கன்னடத்தில் ஒரு கவிதையை எழுதும்போது, நான் மரபையும் சமகால நடைமுறையையும் அறிந்தே எழுதுகிறேன். கன்னடக் கவிதைக்கென்று ஒரு உச்சஸ்தாயி தேவைப்படுகிறது. ரொம்ப சமத்காரமானது. என்னைப் போன்ற ஒரு நபருக்கு அது விருப்பமில்லாதது. நான் நேர்மாறாக, சாதாரணத் தன்மையுடன், பேச்சுத் தன்மையுடன், சாதாரண விஷயங்களைப் பற்றி எழுதவிரும்புகிறேன். வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் போன்றவர்களால் தாக்கமுற்று சாதாரண மொழி மற்றும் சாதாரண அனுபவத்திலிருந்து என் கவிதையை வார்த்தெடுக்கிறேன். ஆங்கிலத்தில் எழுதும்போது அங்கே மற்ற கவிஞர்களின் போக்குக்கு மாறாக எழுதலாம்.
கீத் டெய்லர்: நான் அதைப் பார்க்கிறேன். உங்களுடைய சமீபத்திய கவிதைகள் சம்பிரதாய ஆங்கிலக் கவிதையின் வடிவத்தில் உள்ளன. வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸை விட ஆடன் போன்றவர்களின் தாக்கம் தெரிகிறது…
ஏ.கே.ராமானுஜன்: ஆமாம். எல்லோரும் வசனத்தில் எழுதும்போது, அதிலிருந்து தப்பித்து வேறு ஒரு வடிவத்தில் எழுதிப்பார்ப்பது. எனது படைப்பெழுத்து முறையை விரிவாக்க விரும்புகிறேன்.
ஏ.எல்.பெக்கெர்: ஒரு அற்புதமான பல கலாசாரத் தன்மைகொண்ட உலகம் ஒன்றுக்கான உதாரணமாக இருக்கின்றன உங்கள் படைப்புகள். ஒருவகையில் அது கற்பனாவாத லட்சியம்தான். நீங்கள் கோரும் நுண்ணுணர்வு என்பது அரிதானது…
ஏ.கே.ராமானுஜன்: எல்லா மொழிகளையும் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இரண்டு அல்லது மூன்று மொழிகளை நாம் அறிந்து, அந்த அறிவை முழுமையாகச் செழுமைப்படுத்திக்கொள்ள முடிந்தால், நமது தாய்மொழியையும் ஆழமாகப் பயிலமுடிந்தால், நம்மால் ஒரு நேர்மறையான திசையை நோக்கி நகரமுடிவது சாத்தியமே. பொருளாதாரத்தில் சர்வதேசமயமாதல் இருப்பது போலவே பண்பாட்டிலும் இருக்கிறது. கன்னடத்தில் நவீனத்துவ கவிதையை எழுதுபவர் ஆப்பிரிக்காவிலும் இங்கிலாந்திலும் சீனாவிலும் எழுதுபவரைப் போன்றவர்தான். சமீபத்தில்தான் எருசலேமில் ஒரு கவிதைத் திருவிழாவுக்குச் சென்று வந்தேன். கவிஞர்களிடம் ஏற்பட்டிருக்கும் தாக்கத்தில் ஒரு பொதுத்தன்மையைக் காணமுடிந்தது.
ஏ.எல்.பெக்கெர்: உலகளாவிய தன்மை உருவாவதன் வாயிலாக உள்ளூர் பண்பாடுகள் காலியாகிவிடலாமல்லவா?
ஏ.கே.ராமானுஜன்: எப்போதும் பல கலாசாரத்தன்மையின் தாக்கம் இருந்திருக்கிறது. பயணங்கள் அதிகம் நடப்பதால் அது கூடுதலான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஜீன்ஸ் அணிவதையே எடுத்துக்கொள்ளுங்கள். பாப் இசை. ஆங்கிலம் என எங்கே சென்றாலும் ஒன்றாகத்தான் தெரிகிறது.
ஏ.எல்.பெக்கெர்: பிராந்திய மொழிப் பண்பாடுகளுக்கு இது சிக்கலான காலம் இல்லையா? அவற்றின் இருப்பே அபாயகரமான நிலையில் உள்ளதே…
ஏ.கே.ராமானுஜன்: அப்படிச் சொல்ல இயலாது. அவரவர் மொழியில் எழுதுவதற்கு ஆள்களே இல்லாமல் போய்விட மாட்டார்கள். எல்லாரும் ஆங்கில மொழியில் எழுதப்போவதில்லை. பெரும்பாலானவர்களால் இயலாது. குழந்தைப் பருவத்திலிருந்து எந்த மொழியுடன் இருக்கிறார்களோ அந்தத் தொடர்ச்சியில்தான் அவர்கள் எழுதவேண்டும்.
ஏ.எல்.பெக்கெர்: வட அமெரிக்க பூர்விக மொழிகளில் பலவும் இந்த தலைமுறையிலேயே அழிந்துவிடும் அபாயம் உள்ளதே?
ஏ.கே.ராமானுஜன்: ஆமாம். அதற்கு முக்கியமான காரணம் அந்த மொழியைப் பேசுபவர்களின் தொகை குறைவாக இருப்பதுதான். அத்துடன் அவர்கள் அதிகாரமற்றவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களுக்கென்று மாகாணங்களும் இல்லை. இந்தியாவிலோ ஆப்பிரிக்காவிலோ அதுபோன்ற நிலை வரவே போவதில்லை. அங்கே சக்திவாய்ந்த பிராந்தியவாதம் உள்ளது. இருப்பினும் அங்கேயும் சில பழங்குடி மொழிகள் நீங்கள் சொன்ன அதே விதியை சந்திக்கும். ஒரு மொழி நீடித்து நிற்பதற்கு மக்கள்தொகையும் அரசியல் அதிகாரமும் கண்டிப்பாக வேண்டும். அமெரிக்காவின் பூர்வகுடிகள் அதற்காகத்தான் போராடிக்கொண்டிருக்கின்றனர்.
ஏ.எல்.பெக்கெர்: மலேசியக் காப்பியமான ஹிகாயத் ஹாங் துவா படைப்பை நான் மொழிபெயர்த்ததற்கு கடுமையான எதிர்வினை வந்தது. மலாய் மொழியிலேயேதான் அதைப் படிக்கவேண்டும். ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் யாரும் மலாய் மொழியில் அந்தக் காப்பியத்தைப் படிக்கமாட்டார்கள் என்று கூறினார்கள். அவர்களுக்கு அது அச்சுறுத்தலாகத் தெரிந்தது.
ஏ.கே.ராமானுஜன்: அப்படியான அபாயம் உண்மையிலேயே இருக்கிறது. ஆனால் இந்தியாவில் அந்த அச்சம் தேவையற்றது. கன்னடத்தில் எழுதப்பட்ட காப்பியத்தை ஆங்கிலத்தில் படிப்பதை ஒருவர் சௌகரியமாகவே உணரமாட்டார்.
ஏ.எல்.பேக்கர்: கலாசாரப் பன்மைத்துவம் நீடிப்பது இப்போதைய காலத்தில் போராட்டமாகவே இருக்கிறது. அதற்கு எதிராக நிறைய சக்திகள் எழுந்துள்ளன…
ஏ.கே.ராமானுஜன்: ஆமாம். நிஜம்தான். ஆனால், ஒரே மொழி ஒரே கலாச்சாரம் என்று கூறும் தரப்பு வெற்றிபெறாது. இரண்டாம் மொழியாக பரவலாக ஆங்கிலம் இருப்பது அந்தவகையில் நல்லதாகவே தெரிகிறது. ஆங்கிலம் நம் சுய பண்பாடுகளைத் திரித்திருந்தாலும், நமது பண்பாடுகளை கூர்மையாகப் பார்க்கவும் வைத்துள்ளது. ஆங்கிலம் நம்மில் ஒரு பகுதியாக மாறிவிட்டது. ஆங்கிலத்தில்தான் காலனிய எதிர்ப்பு சொல்லாடல் நடக்கிறது. கன்னடத்தில் அதைப்பற்றி யாரும் எழுதுவதில்லை. இந்தியாவில் விளிம்புநிலை வரலாற்றை எழுதுவதற்காக புதியவர்கள் வந்துள்ளனர். காலனிய அறிவுஜீவி நடைமுறைகளில் ஏற்பட்ட திரிபுகளை அவர்கள் ஆராய்ந்து எழுதுகின்றனர். ஆனால் அவர்களது பணிகள் முழுக்க ஆங்கிலத்தில்தான் நடைபெறுகிறது. ஆங்கிலம் நம்மை சுயவிமர்சனம் செய்யவும், ஆங்கில வழிமுறைகளையே விமர்சிக்கவும் செய்திருக்கிறது.
ஏ.எல்.பெக்கெர்: அமெரிக்க ஆங்கிலத்தையும் அமெரிக்க ஆங்கில இலக்கியத்தையும் பாருங்கள். எமர்சனின் மீது இந்திய இலக்கியத்தின் தாக்கம் இருந்துள்ளது. இந்திய இலக்கியத்துக்குப் பாலமாக ஆங்கிலம் இருந்துள்ளதுதானே?
ஏ.கே.ராமானுஜன்: அந்தக் கப்பல்கள் பாஸ்டனிலிருந்து கல்கத்தாவுக்கு ஐஸ்கட்டிகளை சுமந்தன. வால்டன் குளத்தையும் கங்கையையும் சுமந்தன.
கீத் டெய்லர்: கவிஞர், மொழிபெயர்ப்பாளர், மொழியிலாளர், நாட்டார் வழக்காற்றியல் அறிஞர், மானுடவியலாளர் என உங்களுக்கு பல பொறுப்புகளைச் சூடியுள்ளவர். உங்களுக்குப் பிடித்தது எது?
ஏ.கே.ராமானுஜன்: நான் நீங்கள் சொல்லும் அனைத்து துறைகளிலும் ஒரே வேலையைத்தான் செய்கிறேன். வெவ்வேறு ஈடுபாடுகளுக்கு நடுவில் ஒரு கோடு கிழிக்கவேண்டிய அவசியம் இல்லை. நம்மிடம் இருப்பதும் நாம் அறிந்திருப்பதும் ஒரு கருவியின் அங்கமே.
ஷங்கர்ராமசுப்ரமணியன், தமிழில் எழுதிவரும் கவிஞர், விமர்சகர். ‘இகவடை பரவடை, நிழல் அம்மா, ஆயிரம் சந்தோஷ இலைகள், கல் முதலை ஆமைகள் முதலிய கவிதைத்தொகுதிகள் வெளிவந்துள்ளன. பிறக்கும்தோறும் கவிதை, நான் பிறந்த கவிதை, நினைவின் குற்றவாளி ஆகிய கட்டுரைத் தொகுப்புகளையும் எழுதியுள்ளார். விக்ரமாதித்யன் கவிதைகள் ,‘அருவம் உருவம்: நகுலன் 100’ உள்ளிட்ட தொகுப்பு நூல்களின் ஆசிரியர்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.

