ஏன் மார்க்ஸ் சொன்னது சரி? : டெர்ரி ஈகிள்டன்

தமிழில் : விஷால் ராஜா

மார்க்ஸிய கலாச்சாரக் கோட்பாட்டாளரும் இலக்கியத் திறனாய்வாளருமான டெர்ரி ஈகிள்டன், 2011ம் ஆண்டு “ஏன் மார்க்ஸ் சொன்னது சரி?” (Why Marx was right?) எனும் நூலை எழுதி வெளியிட்டார். மார்க்ஸியம் மீது சுமத்தப்படுகிற பொதுவான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இது பத்து அத்தியாயங்கள் கொண்டது. “மார்க்ஸ் மீதான 10 பொது விமர்சனங்களை எடுத்துக் கொண்டு அவற்றை ஒவ்வொன்றாக மறுக்க முயற்சித்துள்ளேன்” என ஆசிரியரே தன் நூலின் வடிவத்தை விளக்குகிறார். அவ்வகையில் மார்க்ஸியத்தின் அடிப்படை கருதுகோள்களை அறிமுகம் செய்துக் கொள்ள இது ஒரு நல்லத் துணை எனலாம். மேலும் எந்தவொரு கருத்தியல் சார்ந்தும் பொதுப் புத்தியாக நிலைப் பெற்றிருக்கும் அபிப்ராயங்கள் எவ்வளவு தூரம் பரிசீலிக்கப்படாமல் இருக்கின்றன என்பதை இந்நூல் தர்க்கப்பூர்வமாக விளக்குகிறது. சோவியத் ருஷ்யாவின் தோல்வி, ஸ்டாலினிய வன்முறை முதலியவையும் இந்த நூலில் தீவிரமாக விவாதிக்கப்பட்டுள்ளன.

இன்று அதீத தனிமனிதவாதம், முதலாளித்துவத்தின் நுகர்வுக் கலாச்சாரத்தை எதிர்கொள்ள முடியாமல் தவிப்பதோடு, அதுவே தனிமனித விடுதலைக்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறது. இத்தகைய முரண்பாடுகளை அர்த்தப்படுத்திக் கொள்ள மார்க்ஸியம் நிச்சயம் உதவக்கூடும். அவ்விதம் இந்நூல் மிகுந்த பொருத்தபாடுக் கொண்டது. இவற்றை எல்லாம் தாண்டி, சீண்டலும் பகடியும் அறிவார்ந்த வேகமும் மிக்க உரைநடைக்காக மட்டுமே ஒருவர் டெர்ரி ஈகிள்டனின் நூல்களை வாசித்தாலும் அதில் குறை சொல்ல ஏதுமில்லை. “ஏன் மார்க்ஸ் சொன்னது சரி?” நூலின் முதல் அத்தியாயம் இங்கே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

விஷால் ராஜா

“மார்க்ஸியம் முடிந்துவிட்டது. உற்பத்திச்சாலைகளும் உணவுக்கான போராட்டங்களும், நிலக்கரிக் சுரங்கத் தொழிலாளர்களும் சிம்னிகளை கூட்டுபவர்களும், பெருந்திரளான உழைக்கும் வர்க்கங்களும், பல்கி பெருகிய துயரமும் நிரம்பியிருந்த உலகத்தில் அதற்கு கருத்தளவிலேனும் ஒரு பொருத்தப்பாடு இருந்திருக்கலாம். ஆனால் படிப்படியாக வர்க்கமற்றதாக மாறிவருகிற, சமூகரீதியாக இடம்பெயர்வுகள் நடக்கிற, தற்காலத்தின் பின்-தொழிற்சாலை வகைப்பட்ட மேற்கத்திய சமூகங்களில் அதற்கு நிச்சயமாக எந்த முக்கியத்துவமும் இல்லை. இவ்வுலகம் நன்மை பயக்கும்விதமாக நிரந்தரமாக மாற்றம் அடைந்துவிட்டதை ஏற்றுக் கொள்ள முடியாத அளவுக்கு, பிடிவாதமும் அச்சமும் கொண்டவர்களின் அல்லது தம்மையே ஏமாற்றிக் கொள்பவர்களின் நம்பிக்கையே மார்க்ஸியம்.”

மார்க்ஸியம் முடிந்துவிட்டது என்ற செய்தி உலகெங்கும் உள்ள மார்க்ஸியர்களின் செவிகளுக்கு இன்னிசையாகவே ஒலிக்கும். அவர்கள் இனி தங்களுடைய ஊர்வலங்களையும் மறியல்களையும் மூட்டைக் கட்டிவிட்டு, துயருடன் காத்திருக்கும் தங்கள் குடும்பங்களின் அரவணைப்புக்கு திரும்பலாம். இன்னொரு சலிப்பூட்டும் கமிட்டிக் கூட்டத்தில் பங்குபெறுவதற்கு பதிலாக வீட்டில் மாலை பொழுதை இனிமையாக கழிக்கலாம். வேறெதைக் காட்டிலும் மார்க்ஸியர்களாக இருப்பதை கைவிடுவதையே மார்க்ஸியர்கள் அதிகம் விரும்புவார்கள். இவ்வகையில், மார்க்ஸியராக இருப்பது என்பது ஒரு பௌத்தராகவோ அல்லது ஒரு கோடீஸ்வரராகவோ இருப்பதை போன்றதன்று. அது ஒரு மருத்துவராக இருப்பதை போன்றது. மருத்துவர்கள் தம்மைத் தாமே தோற்கடிக்க வேண்டிய வினோதமான உயிரினங்கள். சிகிச்சையளித்து குணப்படுத்துவதன் மூலம் நோயாளிகளிடையே தங்கள் தேவையை இல்லாமலாக்கி தங்களை தாங்களே வேலையைவிட்டு தூக்க வேண்டிய கட்டாயம் கொண்டவர்கள்.

அதுபோல, தீவிரமான மாற்று அரசியல்வாதிகளின் (politcal radicals) பணியும், தங்கள் தேவை தீர்ந்து போகிற இடத்தை அடைவதே. ஏனென்றால் அங்கே அவர்களுடைய லட்சியங்கள் யாவும் நிறைவேறி இருக்கும். அதன் பின்னர் அவர்கள் தலைவணங்கி நிம்மதியுடன் விடை பெறலாம். தங்கள் சே குவேரா சுவரொட்டிகளை எல்லாம் எரித்துவிடலாம். நீண்ட காலமாக புறக்கணித்து வந்த செல்லோ வாத்தியத்தை எடுத்து கற்கலாம். ஆசியக் கண்டத்தின் உற்பத்தி முறை போன்ற சலிப்பான விஷயங்களைவிடுத்து சுவாரஸ்யமான எதை பற்றியாவது பேசலாம். இருபது வருடம் கடந்த பின்னரும், மார்க்ஸியர்களோ அல்லது பெண்ணியவாதிகளோ இன்னும் இருப்பார்களேயானால் அது ஒரு வருத்தத்திற்குரிய நிகழ்வு. மார்க்ஸியம் என்பது அடிப்படையில் ஓர் இடைக்கால ஏற்பாடாக இருக்க வேண்டியது. எனவே, யாராவது தங்கள் மொத்த அடையாளத்தையும் மார்க்ஸியம் சார்ந்து வகுத்துக் கொண்டால் அவர்கள் ஆதார கருத்தையே தவறவிடுகிறார்கள். மார்க்ஸியத்தின் மொத்த குறிக்கோளே, மார்க்ஸியத்துக்கு பின்னரும் வாழ்க்கை இருக்கிறது என்பதுதான்.

மற்றபடி வசீகரமாக தோன்றும் இந்த பார்வையில் ஒரேயொரு பிரச்சனை மட்டும் இருக்கிறது. மார்க்ஸியம், முதலாளித்துவத்தின் மீதான விமர்சனம். அவ்வகையில் இதுவரை நிறுவப்பட்டத்திலேயே அதிகம் ஆழமானதும், கடுமையானதும், விரிவானதுமான விமர்சனம். உலகின் பல பெரும் பிரிவுகளை ஒட்டுமொத்தமாக உருமாற்றிய ஒரே விமர்சனம். அப்படி பார்த்தால், முதலாளித்துவம் செயல்படும் காலம்வரை மாக்ஸியமும் செயல்பட்டாக வேண்டும். தன் எதிரியை காலாவதியாக்கினால் மட்டுமே அதுவும் காலாவதியாகமுடியும். முதலாளித்துவமோ, கடைசியாக பார்த்தபோதுக்கூட, அதிக உற்சாகத்துடன் தீரமாகவே காட்சியளித்துக் கொண்டிருந்தது.

மார்க்ஸியத்தை விமர்சிக்கும் பெரும்பாலானோர் இந்த கருத்தை மறுப்பதில்லை. அவர்களுடைய வாதம் என்னவென்றால் மார்க்ஸின் காலத்தில் இருந்ததைவிட இப்போது மொத்த அமைப்பும் ஒட்டுமொத்தமாக அடையாளமே தெரியாதபடி உருமாறிவிட்டது. அதனால் அவருடைய கருத்துக்களுக்கு இனியும் பொருத்தபாடில்லை. இந்த தரப்பை ஆராய்வதற்கு முன்னால், மார்க்ஸ் அவர் சவால்விட்டு எதிர்த்த அமைப்பினுடைய, இடையறாது உருமாறும் இயல்பை தெளிவாக அறிந்துவைத்திருந்தார் என்பதை சுட்டிக்காட்டுவது முக்கியமானது. மூலதனத்தின் பல்வேறு வகைப்பட்ட வரலாற்று வடிவங்கள் – வணிகம், வேளாண்மை, தொழிற்சாலை, தனியாதிக்கம் , நிதி, ஏகாதிபத்தியம் மற்றும் இதரவைக் குறித்த கருத்தாக்கத்திற்காக மார்க்ஸியத்துக்கே நாம் கடன்பட்டுள்ளோம்.

அப்படியிருக்கும்போது, சமீபத்திய தசாப்தங்களில் முதலாளித்துவத்தின் வடிவம் மாறியிருக்கிறது எனும் செய்தியை வைத்து, மாற்றம் என்பதையே முதலாளித்துவத்தின் அடிப்படை சாரம்சமாக கருதும் ஓர் கோட்பாட்டை எப்படி தட்டிக் கழிக்க முடியும்? மேலும், உழைக்கும் வர்க்கத்தின் சரிவையும் வெள்ளை-காலர் பணிகளின் அதிகப்படியான வளர்ச்சியையும் மார்க்ஸே அனுமாணித்திருந்தார். இதைப் பற்றி பின்னர் பார்க்கலாம். உலகமயமாதல் என்று நாம் அழைக்கும் நிலையின் வருகையையும் அவர் யூகித்திருந்தார். புராதான சிந்தனைக் கொண்ட ஆளாக கருதப்பட வேண்டிய மனிதர் இப்படி எல்லாம் யோசித்திருப்பது விசித்திரம்தான். ஒருவேளை மார்க்ஸின் புராதான குணம்தான் இன்றும் அவரை பொருத்தமுடையவராக ஆக்குகிறது போல. வேகவேகமாக விக்டோரியா காலத்தின் சமத்துவமின்மைக்கு திரும்ப அழைத்துச் செல்கிற, முதலாளித்துவத்தின் காவலர்கள், மார்க்ஸ் காலாவதியாகிவிட்டதாக குற்றம் சாட்டுகிறார்கள்.

மேற்கில், 1976ல், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானோர் மார்க்ஸியத்தின் வாதத்தில் நியாயமான காரணங்கள் இருப்பதாக எண்ணினார்கள். ஆனால் 1986 வாக்கில், அவர்களில் பலரும் அந்த எண்ணத்தை கைவிட்டுவிட்டனர். இடைப்பட்ட காலத்தில் உண்மையில் என்னதான் நடந்தது? இந்த மனிதர்கள் எல்லோரும் வெறுமனே குழந்தைகளை பெற்று வளர்ப்பதில் மூழ்கித் தொலைந்து போய்விட்டார்களா? உலகை உலுக்கும்படியாக ஏதாவது புதிய ஆராய்ச்சி நிகழ்ந்து மார்க்ஸியத்தின் முகமூடியை கழற்றி அது ஒரு ஏமாற்றுவேலை என நிறுவிவிட்டதா? மார்க்ஸின் தொலைந்துபோன எழுத்துப் பிரதி ஏதேனும் நமக்கு தட்டுப்பட்டு அதில் அவர் தான் சொன்னதெல்லாம் வெறும் நகைச்சுவை என்று எழுதியிருப்பது தெரிந்துவிட்டதா? மார்க்ஸ் முதலாளித்துவத்தின் உதவியை பெற்றுக் கொண்டிருந்தார் என்ற தகவலைக்கூட அப்படியொன்றும் ஏமாற்றுத்துடன் நாம் அறிந்துக் கொள்ளவில்லை. ஏனென்றால் அதுவும் ஆரம்பத்திலிருந்தே நமக்கு தெரியும். ஜவுளி உற்பத்தியாளரான பிரெடரிக் ஏங்கல்ஸின் தந்தைக்கு சொந்தமான சால்ஃபோர்ட்டின் “எர்மன் மற்றும் ஏங்கல்ஸ்” தொழிற்சாலை மட்டும் இல்லையென்றால், நீண்ட கொடும் வறுமையில் வாழ்ந்து வந்த மார்க்ஸால் ஜவுளி தொழிற்சாலைகளுக்கு எதிரான சர்ச்சைமிகு கருத்துக்களை எழுத, உயிர் பிழைத்திருக்கவே முடியாது.

விவாதத்திக்கப்படுகிற இந்த காலகட்டத்தில் உண்மையிலேயே சில விஷயங்கள் நடந்தன. 1970களின் மத்தியக் காலத்தில், மேற்கத்திய அமைப்பானது சில அடிப்படை மாற்றங்களுக்கு உள்ளாகிற்று. பாரம்பரிய தொழிற்சாலை உற்பத்தி முறை மாறியது. “பின்-தொழிற்சாலை” காலத்தின் நுகர்வுவாதம், தகவல் பரிமாற்றங்கள், தொழில்நுட்பம் மற்றும் சேவைத் துறை முதலியவற்றால் ஒரு கலாச்சார மாற்றம் நிகழ்ந்தது. சிறிய அளவிலாக அமைந்ததும், மையமில்லாததும், பன்முகப்பட்டதும், அதிகார அடுக்கில்லாததுமான நிறுவனங்களே அந்த காலத்தின் போக்காக இருந்தன. சந்தை தளர்த்தப்பட்டது. உழைக்கும் வர்க்கத்தின் இயக்கம் சட்டரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் மூர்க்கமான தாக்குதலுக்கு உள்ளானது. பாரம்பரியமான வர்க்க கூட்டிணைவுகள் பலவீனப்படுத்தப்பட்டன. அதே சமயம் வட்டாரம், பாலினம் மற்றும் இனவியல் அடையாளங்கள் உறுதியாக வளர்ந்தன. அரசியல் மேலும் மேலும் கட்டுப்படுத்தப்பட்டதாக தந்திரமாக கையாளப்படுவதாக மாறியது.

அமைப்புகள் தோறும்,உலகமயமாதல், அதிகரித்த வண்ணம் இருந்ததில் புதிய தகவல் தொழிநுட்பங்களுக்கு முக்கிய பங்கு இருந்தது. கையடக்க பன்னாட்டு நிறுவனங்கள், உடனடியாக ஆயத்த லாபங்களை ஈட்ட, பூமி முழுக்க உற்பத்தியினையும் முதலீட்டையும் பரப்பின. “வளர்ச்சியடையாத” நாடுகளில் மலிவான ஊதியத்தில் வேலையாட்கள் கிடைக்கிற இடங்களுக்கு பெரும்பாலான உற்பத்தித் தொழில், அயலக பணியாக ஒப்படைக்கப்பட்டது. விளைவாக, குறுகிய கண்ணோட்டம் கொண்ட மேற்கத்தியர்கள் நம் பூமியிலிருந்து கனரக தொழிற்சாலைகளே மொத்தமாக மறைந்துவிட்டதாக முடிவு செய்யத் தலைப்பட்டனர்.

இந்த உலகளாவிய நகர்வினையும் வளர்ச்சியினையும் தொடர்ந்து, சர்வதேச அளவில் பிரம்மாண்டமான எண்ணிக்கையில் உழைப்பாளிகளின் புலம் பெயர்வு நிகழ்ந்தது. வறுமையில் வாடிய குடியேறிகள், பொருளாதாரரீதியாக மேம்பட்ட தேசங்கள் நோக்கி படையெடுத்தனர். அவர்களுக்கு எதிரான இனவாதமும் பாசிசமும் மீண்டும் எழுச்சிக் கண்டன. “விளிம்பு” நிலை தேசங்களிலோ பொதுச் சேவைகள் தனியார்மயமாகி நலத்திட்டங்கள் யாவும் ரத்தாகி, அவை உடலை வருத்தும் கடும் உழைப்புக்கும் நம்பமுடியாத நியாயமற்ற வர்க்க நிபந்தனைகளுக்கும் உள்ளாகின. அதே நேரம் பெருநகரங்களின் தேசங்களை சேர்ந்த நிர்வாக இயக்குநர்களோ கழுத்து டையை எல்லாம் கடாசிவிட்டு, சட்டைக் காலரை திறந்துவிட்டவாறு தங்கள் ஊழியர்களின் ஆன்மீக நலன் பற்றி கிலேசமுற்றனர்.

இது எதுவுமே, முதலாளித்துவ அமைப்பு, கவலையின்றி நம்பிக்கை பொங்க உற்சாகமான மனநிலையில் செயல்பட்டதால் நிகழவில்லை. மாறாக, அனைத்து ஆக்கிரமிப்பு வடிவங்களையும் போல முதலாளித்துவத்தின் புதிய ஆவேசமான தோற்றமும் அதனுடைய ஆழமான பதட்டத்திலிருந்தே பிறந்து வந்தது. எந்தவொரு அமைப்பும் தன்னுள் ஆழமாக சோர்வை மறைத்து வைத்திருக்கும்போது பித்துபிடித்தது போல நடந்துக் கொள்கிறது.

உலகப் போருக்கு பிந்தைய அதீத வளர்ச்சி திடீரென்று மந்தமடையத் தொடங்கியதே இந்த மறு சீரமைப்பின் உந்துவிசையாக இருந்தது. சர்வதேச அளவில் போட்டி அதிகமானதால், முதலீட்டுக்கான வழிகளை வற்றச் செய்யும்படியும், வளர்ச்சியின் வேகத்தை மட்டுப்படுத்தும்படியும், லாபங்களின் அளவை குறைக்கும்படியும் ஓர் அழுத்தம் உருவானது. சமூக அளவில் மக்களாட்சி முறைக்கூட புரட்சிகரமான யோசனையாகவும், செலவீனமான அரசியல் தேர்வாகவும் தோன்றத் தொடங்கியது. அப்படியாக ரீகனுக்கும் தேட்சருக்குமான மேடை அமைக்கப்பட்டது – பாரம்பரியமான தொழில் உற்பத்தி முறையை அவர்கள் கலைத்துப் பிரிக்கும்விதமாக. உழைப்பாளர் இயக்கத்தை நொறுக்கும்விதமாக. சந்தையை குலைக்கும்விதமாக. அரசின் ஒடுக்குமுறைக் கரத்தை வலுப்படுத்தும்விதமாக. அப்பட்டமான பேராசை எனும் புதிய சமூகத் தத்துவத்தை முன்னெடுக்கும்விதமாக. உற்பத்தியிலிருந்து சேவை, நிதி மற்றும் தகவல் தொடர்புத் தொழில்களுக்கு முதலீடு இடம் மாறியது, ஒரு நீடித்த பொருளாதார நெருக்கடிக்கான எதிர்வினையேத் தவிர, அதுவொன்றும் பழைய மோசமான உலகிலிருந்து புதிய துணிச்சலான உலகை நோக்கியத் தாவல் அல்ல.

அப்படியே இருந்தாலும் 70களுக்கும் 80களுக்கும் நடுவே, சுற்றிலும் பஞ்சாலைகள் குறைந்து வந்ததைக் கண்டு, பெரும்பாலான புரட்சியாளர்கள், அமைப்பு பற்றிய தங்கள் கருத்துக்களை மாற்றிக் கொண்டுவிட்டதாக சொன்னால் அது நம்பும்படி இல்லை. அவர்கள் தங்கள் கிருதாக்கள், தலைக் கச்சுகள் இவற்றுடன் சேர்த்து மார்க்ஸியத்தையும் கைக்கழுவ இது காரணம் அல்ல. மாறாக, அவர்கள் எதிர்கொண்ட ஆட்சியதிகாரமானது புரிந்துக் கொள்ள மிக கடினமானதாக மாறியது. இங்கே முடிவை நிர்ணயித்தது, புதிய முதலாளித்துவம் பற்றிய போலிக் கற்பனை அல்ல. மாறாக, அதை மாற்றும் சாத்தியம் பற்றிய கற்பனை கலைந்து போனதே. அமைப்பை மாற்ற முடியாவிடில், அது மாற்றம் தேவைப்படாத ஒன்றாக இருக்கலாம் என தங்கள் அந்தகாரத்தினை தர்க்கப்படுத்திக் கொண்ட பல சோஷியலிசவாதிகளும் நிச்சயம் இருந்தார்கள். ஆனால் மாற்று அமைப்பின் மீதான அவநம்பிக்கையே இங்கே இறுதி காரணியாக அமைந்தது. உழைக்கும் வர்க்கத்தின் இயக்கம் ரத்தம் தோய அடித்து தாக்கப்பட்டிருந்ததாலும், இடதுசாரி அரசியல் தரப்பு வலுவாக பின்னிழுக்கப்பட்டதாலும், வருங்காலம் தடயமே இல்லாமல் அழிக்கப்பட்டுவிட்டதாக தோன்றியது. 1980களின் பிற்பகுதியில் நிகழ்ந்த சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி, இடதுசாரி தரப்பை சேர்ந்த ஒரு சாரரின் ஏமாற்றத்தை ஆழப்படுத்துவிதமாக மாறியது. நவீன காலத்தின் மிகவும் வெற்றிகரமான தீவிர அரசியல் கிளையான, புரட்சிகர தேசியவாதமும், இச்சமயத்தில் கிட்டத்தட்ட முடிவை எட்டியதும் உதவிகரமாக இல்லை.

பின்-நவீனத்துவ கலாச்சாரம் பிறப்பெடுக்க காரணமாக இருந்ததும் இதுவே. அந்த நம்பிக்கையே, வரலாற்றின் முடிவை (End of History) வெற்றிக் களிப்புடன் அறிவித்தது. பெருங்கதையாடல்கள் என்று அழைக்கப்பட்டவற்றை நிராகரித்தது. அதாவது, யாவற்றுக்கும் அப்பால், வருங்காலம் என்பது இனி வெறுமனே நிகழ்காலத்தின் நீட்சியாகவே இருக்க முடியும். அல்லது ஓர் உற்சாகமான பின்-நவீனத்துவவாதி சொல்வது போல “நிகழ்காலம்; அத்துடன் இன்னும் கூடுதலான தேர்வுகள்”

எல்லாவற்றுக்குக்கும் அப்பால், அரசியல் வீரியமின்மை சார்ந்து பரவிய உணர்வே, மார்க்ஸியத்தின் மதிப்பை குறைக்க உதவியது. மாற்றம் என்பதே செயல்திட்டத்திலிருந்து விலகிய எண்ணமாக தோன்றும்போது,மாற்றத்தின் மீது நம்பிக்கையை தக்கவைப்பது கடினமே. மாற்றத்தை தக்கவைப்பதே அனைத்திலும் அவசியமானதாக இருக்கும் காலமாக இருந்தாலும். எது வெளிப்பார்வைக்கு தவிர்க்க முடியாததாக தோன்றுகிறதோ, அதை தடுக்க முற்படாமல் இருந்தால், தவிர்க்க முடியாததாக காட்சியளிப்பது உண்மையிலேயே எவ்வளவு தூரம் தவிர்க்க முடியாததாக உள்ளது என்பது உங்களுக்கு கடைசியில் தெரியாமலேயே போய்விடும். அந்த இளகிய மனங்கொண்டோர் இன்னும் இரண்டு தசாப்தங்களுக்கு தங்கள் பழைய பார்வைகளை கெட்டியாக பிடித்துக் கொண்டிருந்திருப்பார்களேயானால், அவர்கள் மேலும் உற்சாகமான வெல்ல முடியாத முதலாளித்துவத்தை சந்தித்திருப்பார்கள். அதுதான் 2008ல் கடை வீதிகளில் வெறுமனே ஏ.டி.எம் இயந்திரங்களை இயங்க வைக்கவே பாடுபட்டது. பனாமா கால்வாய்க்கு தெற்கே ஒரு முழு கண்டமே இடதுசாரி அரசியலை நோக்கி தீர்மாணமாக நகர்ந்ததைக்கூட அவர்கள் கண்டிருக்கலாம். வரலாற்றின் முடிவே இப்போது ஒரு முடிவுக்கு வந்துவிட்டது.

எந்த சூழலிலும், மார்க்ஸியர்கள் தோல்வியை எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும். இதைவிட மாபெரும் அழிவுகளை எல்லாம் அவர்கள் கண்டிருக்கிறார்கள். அரசியலில் வெற்றி வாய்ப்புகள் எப்போதுமே அதிகாரத்தில் உள்ள அமைப்புக்கு சாதகமாகவே இருக்கும். ஒரே காரணம், உங்களிடம் இருப்பதைவிட கூடுதலாக பீரங்கி டாங்குகள் அதனிடம் உண்டு. ஆனால் 1960களில் தலைக்கேறிய வேகமும், ஆர்வம் பொங்கும் நம்பிக்கைகளும் இருந்தன. எனவே அந்த காலகட்டத்து மனிதர்களுக்கு இந்த சரிவு ஏற்றுக் கொள்ள முடியாத கசப்பு மருந்தாக மாறிவிட்டது.

முதலாளித்துவம் தன் உருவத்தை மாற்றிக் கொண்டதனால் மார்க்ஸியம் சாத்தியமற்றதாக தோன்றவில்லை. நிலைமை நேரெதிரானதாக இருந்தது. அமைப்புகள் எல்லாம், வழக்கம் போல அல்லது வழக்கத்தைவிடவும் கூடுதலான வேகத்தில் செயல்பட்டு வந்ததே இங்கே காரணமாகிற்று. எது மார்க்ஸியத்தை தோற்கடிப்பதற்கான காரணியாக இருந்ததோ அதுவே மார்க்ஸியத்தின் கூற்றுகளுக்கு வலு சேர்ப்பதாகவும் இருப்பது இங்கே ஒரு முரண். மார்க்ஸியம் விளிம்புகளுக்கு தள்ளப்பட்டது. ஏனென்றால் அது எதிர்கொண்ட சமூக ஒழுங்கானது, தீங்கற்றதாகவும் மிதமானதாகவும் மாறுவதற்கு பதிலாக மேலும் மேலும் கடுமையானதாகவும் கொடூரம் நிரம்பியதாகவும் மாறியது. இதுவே மார்க்ஸியத்தின் விமர்சனத்தை மேலும் பொருத்தமானதாக மாற்றியது.உலக அளவில் மூலதனம் முன்னை விட அதிகம் பெருகியது. முன்னெப்போதைக் காட்டிலும் அதிகம் சூறையாடியது. தொழிலாளர் வர்க்கத்தின் எண்ணிக்கையோ உண்மையில் அதிகரித்த வண்ணம் இருந்தது. மாபெரும் செல்வந்தர்கள் ஆயுதப் பாதுகாப்புகளுடன் மூடிய சமூகங்களில் வசிக்க, கோடிக்கணக்கான குடிசைவாசிகள் கண்காணிப்பு கோபுரங்களும் முள்வேலிகளும் சூழ்ந்த நாற்றம்வீசும் கொட்டகைகளில் வாழ நேரும் ஒரு வருங்காலத்தை கற்பனை செய்வது சாத்தியமாகிக் கொண்டே வந்தது. இது போன்ற சூழ்நிலைகளில், மார்க்ஸியம் முடிந்துவிட்டதாக வாதிடுவது, தீ வைப்பவர்கள் எல்லாம் முன்னைக் காட்டிலும் அதிகம் புத்திசாலிகளாகவும் வளமானவர்களாகவும் வளர்ந்து வருவதனால், தீயணைப்புத் துறை காலாவதியாகிவிட்டது என்று சொல்வதைப் போன்றது.

மார்க்ஸ் கணித்ததுப் போல, நம்முடைய காலத்திலேயே சொத்து அடிப்படையிலான ஏற்றத் தாழ்வுகள் வியப்பூட்டும்வகையில் ஆழமாகியுள்ளன. இன்று, ஒரு மெக்ஸிகன் பில்லியனரின் வருமானம் அதே நாட்டை சேர்ந்த 17 மில்லியன் ஏழைகள் ஈட்டும் செல்வத்துக்கு நிகராக உள்ளது. இதுவரை வரலாற்றில் கண்டிராத அளவுக்கு செல்வ வளத்தினை முதலாளித்துவம் உருவாக்கியுள்ளது. ஆனால் அதற்கான விலை பெரிது – பல லட்சம் பேரை வறுமையில் தள்ளியதில் தொடங்கி. உலக வங்கியின் கணக்குப்படி, 2001ல் 2.4 பில்லியன் மக்கள் ஒரு நாளைக்கு வெறும் இரண்டு டாலர் பணத்தில் வாழ்ந்திருக்கிறார்கள். வருங்காலத்தில் அணு ஆயுதம் தாங்கிய தேசங்கள், இயற்கை வளங்களின் பற்றாக்குறையால் , போரிடும் சாத்தியம் உள்ளது. இந்த பற்றாக்குறை என்பது பெரும்பாலும் முதலாளித்துவத்தின் விளைவே. வரலாற்றில் முதல் முறையாக நம்முடைய வாழ்க்கையின் நடப்பு வடிவம் இனவாதத்தையும் கலாச்சாரச் சிதைவையும் வளர்க்கும் ஆற்றலையும், போருக்கோ அல்லது உழைப்பு முகாம்களுக்கோ மந்தையாக நம்மை கொண்டுச் செல்லும் ஆற்றலையும் கொண்டிருப்பதோடல்லாமல், ஒட்டுமொத்தமாக இந்த கிரகத்திலிருந்தே நம்மை துடைத்து அழிக்கும் ஆற்றலையும் கொண்டுள்ளது. தனக்கு லாபம் என்றால் முதலாளித்துவம் சமூக விரோதப் போக்கையும் கைக்கொள்ளும். தற்போதைய சூழலில், அது கற்பனை செய்ய முடியாத அளவிலான பெரும் மானுட அழிவையே குறிக்கும். ஊழிக் கால கற்பனைகளாக தோன்றியவை எல்லாம் இன்று சாதாரண யதார்த்தமாகிவிட்டன. “சமூகவுடைமையா அல்லது காட்டுமிராண்டித்தனமா” எனும் இடதுசாரிகள் முழக்கம் வேறெப்போதும் இந்தளவு தீவிரமாக பொருந்தியதில்லை. இனியும் அது வெறுமனே ஓர் அலங்கார சொல் அல்ல. இந்த மோசமான சூழ்நிலையில்தான் பிரெடரிக் ஜேம்சன் எழுதுகிறார் – “மீண்டும் மார்க்ஸியம் கட்டாயம் நிஜமாக வேண்டும்”

டெர்ரி ஈகிள்டன்

செல்வத்திலும் அதிகாரத்திலும் காணக் கிடைக்கும் பாரதூரமான ஏற்றத்தாழ்வுகள், ஏகாதிபத்திய போர்முறை, அழுத்தமான சுரண்டல், வளர்ந்துக் கொண்டேவரும் அரசாங்க ஒடுக்குமுறை : இவை எல்லாம் இன்றைய உலகின் குணாதிசயங்கள் என்றால், ஏறத்தாழ இரண்டு நூற்றாண்டுகளாக மார்க்ஸியம் பிரதிபலித்து சிந்தித்து செயலாற்றிய சிக்கல்களும் இவையே. எனில், நிகழ்காலத்துக்கு அது கற்றுக் கொடுக்க சில பாடங்களாகவது இருக்கும் என ஒருவர் எதிர்பார்க்கலாம். மார்க்ஸே அவருடைய இரண்டாவது வீடான இங்கிலாந்தில், வேளான் குடிகளிலிருந்து வேரறுக்கப்பட்டு நகரத்து பாட்டாளி வர்க்கம் உருவான அதிவன்முறைமிக்க செயல்முறைக் கண்டு மிகவும் வியப்படைந்தார். அதே போன்ற செயல்முறைதான் இன்று பிரேசில், சீனா, ருஷ்யா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் நடக்கிறது.

இன்றைக்கு லாகோஸிலோ அல்லது தாகாவிலோ காணக்கிடைக்கும் சேரிகளை “நாற்றம் எடுக்கும் மலக் குன்றுகள்” என மைக் டேவிஸ் தன் சேரிகளின் கிரகம் (Planet of Slums) நூலில் பதிவு செய்கிறார். அதை ஏங்கல்ஸின் “பாட்டாளி வர்க்கத்தின் நிலை” (The condition of the working class) நூலின் நவீன பதிப்பாக காணலாம் என்கிறார் டிரிஸ்ட்ரம் ஹண்ட். உலகின் உற்பத்தி பட்டறையாக சீனா மாறி வரும் நிலையில், ஹண்ட் இப்படி குறிப்பிடுகிறார். “குவாங்டாங்கிலும் ஷாங்காயிலும் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலங்கள், அச்சமூட்டும்வகையில் 1840களை சேர்ந்த மான்செஸ்டர் மற்றும் கிளாஸ்கோ நகரங்களை நினைவூட்டுகின்றன”

ஒருவேளை காலாவதியானது மார்க்ஸியமாக இல்லாமல் முதலாளித்துவமாக இருந்தால் என்ன? கடந்தகால விக்டோரிய இங்கிலாந்தில், அமைப்பானது தன் ஆற்றலை ஏற்கனவே இழந்துவிட்டதாக மார்க்ஸ் கருதினார். தன் பொற்காலத்தில் சமூக வளர்ச்சியை ஊக்குவித்த அமைப்பு இப்போது அதையே முடக்கும் காரணியாக செயல்பட்டது. முதலாளித்துவ சமூகம் தன்னுடைய நவீனத்தன்மைக் குறித்து எவ்வளவுதான் பெருமைப்பட்டுக் கொண்டாலும், அது மிகைக் கற்பனையாலும், தொன்மத்தினாலும், பிம்ப மற்றும் புனித வழிபாட்டினாலும் நிரம்பியதாகவே இருந்தது. அதனுடைய அடிப்படையான அறிவொளித்தன்மையே -தன் சொந்த பகுத்தறிவின் மேன்மை மீதான தற்பெருமையே- ஒருவகையான மூடநம்பிக்கைதான். வியப்பூட்டும் முன்னேற்றத்தை சாதிக்கும் திறன் முதலாளித்துவத்துக்கு இருந்தாலும், இன்னொரு கோணத்தில், ஒரே இடத்தில் நிற்பதற்காக அது கடுமையாக ஓட வேண்டியிருந்தது.

மூலதனமே முதலாளித்துவத்தின் இறுதி எல்லை என்று ஒருமுறை மார்க்ஸ் குறிப்பிட்டார். தன்னை தொடர்ந்து பெருக்கிக் கொண்டேயிருப்பதை அதனால் நிறுத்த முடியாது. முதலாளித்துவம் கடக்கமுடியாத எல்லை அது. ஆர்வமுட்டும்படியாக, வரலாற்றில் உள்ள நிர்வாக முறைகளிலேயே அதிகப்படியான இயங்கு சக்தியுடையதாக கருதப்படும் முதலாளித்துவத்திடம்தான் தேக்கநிலையும் மாற்றமின்மையும் கொண்ட இப்பண்புள்ளது. அதனுடைய அடிப்படையான தர்க்கம் ஒரே மாதிரிதான் இருக்கிறது. இந்த காரணத்தினாலேயே மார்க்ஸியத்தின் விமர்சனமும் பெரும்பாலும் செல்லுபடியாகும் விதத்தில் உள்ளது. இந்த அமைப்பானது மெய்யாகவே தன் சொந்த எல்லைகளை உடைத்துக் கொண்டு கற்பனைக்கெட்டாத விதத்தில் புதிய வடிவத்தை எடுத்தால் மட்டுமே இந்நிலை மாறும். ஆனால் முதலாளித்துவத்தால் வேறொரு வருங்காலத்தை உருவாக்க முடியாது. இயந்திரகதியில் தன் நிகழ்கால வடிவத்தை பெருக்கிக் கொண்டே செல்வதை மட்டுமே செய்ய முடியும். “நிகழ்காலம் அத்துடன் கூடுதல் தேர்வுகள்” என்பதை தனியே சொல்ல வேண்டியதில்லை.

முதலாளித்துவம் பெருமளவில் உலகியல் முன்னேற்றங்களை கொண்டுவந்துள்ளது. ஆனால் அதனுடைய வழியிலேயே உலகக் காரியங்களை ஒழுங்கு செய்ய நெடுங்காலம் அவகாசம் கிடைத்துள்ளபோதும், ஒட்டுமொத்தமாக மனிதத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான திறன் தனக்குண்டு என்பதை அது நிரூபிக்கவில்லை. இதுவரையிலும் அப்படி நடப்பதற்கான சாத்தியமும் நெருங்கவில்லை. அது சிறப்பாக செயல்பட நாம் இன்னும் எத்தனைக் காலம் காத்திருக்க தயாராக உள்ளோம்? இந்த உற்பத்தி முறை உண்டு செய்த மகத்தான செல்வம் காலப் போக்கில் எல்லோருக்கும் சமமாக கிடைக்கும் என்ற கட்டுக்கதையை நாம் ஏன் தொடர்ந்து நம்புகிறோம்? தீவிர இடதுசாரிகள் இத்தகைய கோரிக்கைகளை முன்வைத்தால், உலகம் இதே அளவிலான பெருந்தன்மையோடு, காத்திருந்து விடைக் காணும் மனப் போக்கினை கைக் கொள்ளுமா?

இந்த அமைப்பில் எப்போதுமே மாபெரும் அநீதிகள் இருக்கவே செய்யும்; அது தவிர்க்க முடியாத கடின விதி; ஆனால் மாற்று வழிகளோ இன்னும் மோசமானவை என்று அவர்களுக்கே உரிய இரக்கமில்லாத வகையில் ஒப்புதல் அளிக்கும் வலதுசாரிகளிடம், ஒரு குறைந்தபட்ச நேர்மை இருக்கிறது. எல்லாமே கடைசியில் சரியாகிவிடும் என்று போதிப்பவர்களோடு ஒப்பிட்டால் அது தேவலாம்.

பூமியில் கருப்பினத்தோர் வெள்ளையர்கள் என இனங்கள் இருப்பது போல செல்வந்தர்களும் ஏழைகளும் இருப்பதாகக் கொண்டால், வசதி படைத்தவர்களுக்கு கிடைத்துள்ள அணுகூலங்கள் காலவோட்டத்தில் சிரமப்படுகிறவர்களும் கிடைக்கக்கூடும் எனலாம். ஆனால் துப்பறிவாளர்களும் குற்றவாளிகளும் இருப்பதைப் போல உலகில் சிலர் ஏழைகளாகவும் சிலர் வளமானவர்களும் இருக்கிறார்கள் என்றால், அதுவும் உள்ளதுதான்! ஆனால், குற்றவாளிகள் இருப்பதனாலேயே துப்பறிவாளர்கள் இருக்கிறார்கள் எனும் உண்மை இதனால் மறைந்துவிடுகிறது….

விஷால் ராஜா

சென்னையைச் சேர்ந்த ‘விஷால் ராஜா’ புனைகதைகள், விமர்சன திறனாய்வு தளங்களில் தொடர்ச்சியாக இயங்கிவருகிறார். "திருவருட்செல்வி" சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர்.

தமிழ் விக்கியில்


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

உரையாடலுக்கு

Your email address will not be published.

திரட்டு

சேகரம்

Latest Posts

Go toTop

Don't Miss