
மே 20 ஆம் தேதி இரவு எட்டு மணிக்கு ஆறு படை குழுக்கள் அடங்கிய வட பீரங்கி பிரிகேட் மியஸ்டெட்ச்கி கிராமத்திற்கு ஓர் இரவு முகாமிடுவதற்காக வந்தது.
உள்ளூர்க்காரனொருவன் ஒரு அழகான குதிரையின் மீது சர்ச்சின் பின்புறம் வந்தபோது, பீரங்கிப்படை அதிகாரிகள், சர்ச் சதுக்கத்தில் மேற்பார்வைப் பணியாளர் தலைவன் என அனைவரிடமும் குழப்பம் தோன்றியது.
அந்த அழகிய கழுத்தை கொண்ட சிறிய குதிரை, யாரோ அதன் கால்களில் தட்டியது போன்று நடனமாடிக் கொண்டே வந்தது. அதிகாரிகளுக்கு அருகே வந்த அவன் மரியாதையுடன் தொப்பியை கையில் எடுத்துச் சொன்னான். ” மேதகு ஜெனரல் வான் ராபெக், மரியாதைக்குரிய எல்லா அதிகாரிகளையும் தேநீர் விருந்துக்கு அருகில் உள்ள அவர் வீட்டிற்கு அழைக்கிறார்”.
அந்தக் குதிரை தலையை அசைத்து நடனம் ஆடியபடி சற்றே பின்னுக்கு நகர்ந்தது. அதன் மீது இருந்தவன் மறுபடியும் தொப்பியை கையில் எடுத்து மரியாதை செலுத்தி, குதிரையைத் திருப்பி சர்ச்சுக்கு பின்புறம் மறைந்தான்.
மற்ற அதிகாரிகள் கலைந்து அவரவர் குடில்களுக்கு திரும்பும்போது, “ பிசாசு”, என்று ஜெனரல் வியந்தார். ”நன்கு உறங்குவதற்கு செல்லும்போதுதான் இந்த வான் ராபெக்கும் அவருடைய தேநீர் விருந்தும். அந்தத் தேநீர் விருந்து. எனக்கு நன்றாக நினைவில் உள்ளது”.
அந்த ஆறு பீரங்கி படையின் தலைமை அதிகாரிகளுக்கும் அவர்களது முந்தைய விருந்து அழைப்பு நன்கு நினைவில் இருந்தது. கசாக்கியப் படையினருடன் நடந்த சமீபத்திய படை நகர்வின்போது ஒரு கிராமப்புறக் கனவான், ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற ஒரு பிரபு, தேநீர் விருந்திற்கு அவர்களை அழைத்து நன்கு கவனித்தும், உணவு மற்றும் ஓட்காவில் மூழ்கடித்தும் அவர்களை இரவெல்லாம் உறங்காமல் விழித்திருக்கச் செய்திருந்தார். அதெல்லாம் கூடப் பரவாயில்லை. அந்த முதிய வீரர் அவருடைய விருந்தாளிகளை அளவுக்கு அதிகமாகவே கவனித்ததுதான் தொல்லையே. விடியும் வரையில் அவருடைய பழைய கதைகள், அவர் வீட்டில் இருந்த விலை உயர்ந்த ஓவியங்கள், செதுக்கிய சித்திரங்கள், ஆயுதங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களிடமிருந்து வந்த கடிதங்கள் ஆகியவற்றை விடாமல் அவர்கள் மீது கொட்டினார். வலுக்கட்டாயமாக, வேறுவழியின்றி அவர் சொல்வதைத் கேட்டுக் களைத்த அதிகாரிகள், அவர் பேசி முடித்த பிறகே விடிந்துவிட்டதை உணர்ந்தனர்.
வான் ராபெக்கும் அதுபோன்ற மற்றொரு பழைய பிரபுவாக இருக்கக்கூடும். ஆனாலும் அவர் அழைப்பைத் தட்ட முடியாது. அந்த அதிகாரிகள் குளித்து, உடுத்தி வான் ராபெக் வீட்டிற்குப் புறப்படத் தயாராகினர். சர்ச் சதுக்கத்தில் அவர்கள் குன்றிலிருந்து ஆற்றுக்கு இறங்கி, கரை வழியே நடந்து ஜெனரலின் தோட்டத்தில் நுழைந்த பின்னரே அவர் வீட்டிற்கு செல்லும் பாதையைக் காணவியலுமென அறிந்தனர்.. மாறாக குன்றின் மீதேறி ஜெனரலின் தானியக்கலன்களின் வழி சென்றிருந்தால், மியஸ்டெட்ச்கியில் இருந்து ஒரு அரை கிலோ மீட்டரில் அவர் வீட்டை அடந்திருக்கலாம்.. ஆனாலும் ஏனோ இவ்வழியைத் தேர்ந்தெடுத்தனர்.
”ஆனால் யார் இந்த வான் ரேபெக்” ஒருவன் கேட்டான். ”ப்ளெவ்னாவில் வடக்குக் காலாட் படையை வழி நடத்தியவரா?”
”இல்லை அவர் வான் ரேபெக் அல்ல. அவர் வான் இல்லாத வெறும் ராபி”. “என்ன ஒரு அற்புதமான வானிலை!” மறுமொழி வந்தது.
அவர்கள் முதல் தானியக் களனிற்கு வந்து சேர்ந்தபோது பாதை இரண்டாகப் பிரிந்தது. ஒன்று நேராகச் சென்று தொலைவில் மறைந்தது. மற்றொன்று வலது புறம் பிரிந்து ஜெனரலின் வீட்டிற்குச் சென்றது. வீட்டை நெருங்கும் போது அதிகாரிகள் தமக்குள் தாழ்ந்த குரலில் பேசிக்கொண்டனர். பாதையின் இருமருங்கிலும் மாகாணத் தலைநகரங்களில் உள்ள படை வீடுகளைப் போல கனத்தும், முரட்டுத்தனமாகவும் தோன்றிய செங்கல் கலன்கள் வானில் நீண்டிருந்தன. அவர்களுக்கு முன் விளக்கில் பிரகாசித்த ஜன்னல்களுடன் வான் ரேபக்கின் வீடு தோன்றியது.
”நல்ல சகுனம் கனவான்களே”, ஒரு இளம் அதிகாரி கூவினான். நமக்கு எல்லாம் நன்கு அமைந்துள்ளது. விளையாட்டு ஆரம்பம் ஆகிறது!.”
மெலிந்த உயரமான லெஃப்டினண்ட் லோபுவிட்கோவிற்கு 25 வயதாகி இருந்தபோதிலும் முகத்தில் ஒரு முடி கூட வளர்ந்திருக்கவில்லை. ஆனால், பெண்கள் அருகில் எங்கு இருந்தாலும் அவர்களை உணரக்கூடிய சக்தியினால் அவனுடைய நண்பர்களுக்கிடையே மிகப்பிரபலமானவன். தலையை திருப்பி “ ஆம் பெண்கள் அங்கு உள்ளனர். என் உள்ளுணர்வு சொல்கிறது” என்றான்..
ஒரு 60 வயது மதிக்கத்தக்க, கட்டுக்கோப்பான ஒருவர் சாதாரண உடையில் கதவுக்கு வந்து விருந்தினர்களை வரவேற்றார். அவர்தான் வான் ராபெக். அவர்களின் கைகளைக் குலுக்கிக் கொண்டே அவர்களை வீட்டில் இரவு தங்க வைக்க முடியாமைக்கு வருந்துவதாகக் கூறினார். அவர் வீட்டில் ஏற்கனவே அவருடைய இரு சகோதரிகள், அவர்களின் குழந்தைகள், அவருடைய சகோதரர் மற்றும் பல அண்டை வீட்டுக்காரர்கள் தங்கி இருந்தனர். ஒரு அறை கூட ஒழிந்திருக்கவில்லை. அவர்களின் கைகளைக் குலுக்கியபடி அவர் மன்னிப்பு கோரிய போதிலும் சென்ற வருடம் விருந்துக்கு அழைத்திருந்த பிரபுவிடம் இருந்த மகிழ்வில் பாதி கூட இவருக்கு இல்லை என்பது தெரிந்தது.
இந்த அழைப்பு வெறும் மரியாதை நிமித்தமாகவே என்பது புரிந்தது. மிருதுவான தரை விரிக்கப்பட்ட படிகளில் ஏறிக்கொண்டிருந்த அந்த அதிகாரிகளுக்கு ஒன்று மட்டும் புரிந்திருந்தது. தாம் அத்துமீறியும் எல்லோரின் கவனமும் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைகிறோம் என்பதுதான் அது. யாராவது தம் இரு சகோதரிகள்,, அவர்களின் குழந்தைகள் தம் சகோதரன், அண்டை அயலாருடன் ஒரு கொண்டாட்டத்திற்காக அல்லது ஒரு குடும்ப விழாவிற்காகக் கூடியுள்ள போது ஒரு 19 அதிகாரிகளை, அதுவும் முன் பின் கண்டிராதவர்களை வீட்டிற்கு அழைப்பார்களா?
அழகான தோற்றமும், நீண்ட முகத்தில் கருத்த கன்னிமைகளும் முந்தைய மகாராணி யூஜீன் போல் தோற்றமளிக்கும் ஒரு வயதான பெண்மணி அவர்களை சந்திப்பறையின் கதவுக்கு வந்து வரவேற்றார். மரியாதையும் கண்ணியமும் உள்ள சிரிப்பினூடே அவர் அந்த அதிகாரிகளை சந்திப்பதில் மிகவும் மகிழ்வுறுவதாகவும் தம் வீட்டில் அன்றிரவு அவர்களை தங்க வைக்க முடியாமல் போனதில் வருத்தப்படுவதாகவும் கூறினார். அவருடைய நாட்களில் இதுபோன்ற பல அதிகாரிகளைப் பார்த்திருப்பார். இவ்வதிகாரிகள் அவருக்கு ஒரு பொருட்டே அல்ல. இவர்களை விருந்துக்கு அழைத்தது கூட தம் மேன்மையான வளர்ப்பாலும், உயர்குடியினாலுமே என்பதை அவர் திரும்பிச் செல்லும்போது அந்த மரியாதையும் கண்ணியமும் மறைந்ததிலிருந்து அறிந்தனர்.
ஒரு பெரிய உணவு அறையில் ஒரு பத்து ஆண்களும் பெண்களும் தேநீர் அருந்திக் கொண்டிருந்தனர். அவர்களுக்குப் பின் சுருட்டு பிடித்துக் கொண்டு நின்றிருந்த பல இளைஞர்களில் சிவந்த பூனை மீசை உள்ள மிகவும் ஒல்லியான ஒருவன் மழலையில் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தான். அவ்வறை வாயிலில் இருந்து நீல நிற சுவர்த்தாள் ஒட்டப்பட்ட அந்த வெளிச்சமான அறையைக் கண்டனர்.
” நீங்கள் நிறையப் பேர் உள்ளதால் தனித்தனியே அறிமுகப்படுத்த இயலவில்லை கனவான்களே” என ஜெனரல் உரத்தும் சகஜத்தொனியிலும் கூறினார். ” எந்த ஒரு முறைமையும் இன்றி நீங்களே உங்களை ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்”.
விருந்தினர் இறுக்கமாகவும், தீவிர முகத்துடனும், இறுக்கமான சிரிப்புடனும் அசௌகரியமாகத் தலையை வணங்கியும் மேசையில் தத்தமது இருக்கைக்குச் சென்றனர். அவர்களில் மிகவும் அசௌகரியமாக இருந்தவன் குட்டையாக, வளைந்த தோள்களுடன், காட்டுப்பூனை மீசையுடன் கண்ணாடி அணிந்திருந்த அணிக் கேப்டன் ரியபோவிட்ச்தான் . அவனுடைய சக அதிகாரிகள் லேசான புன்முறுவலுடன் இருந்தபோது, காட்டு பூனை மீசையுடன் கண்ணாடி அணிந்திருந்த இவன் முகம் மட்டும் சொன்னது, “ நான் இந்த பிரிகேடிலேயே யாரையும் அறிந்திராத, பயந்த சுபாவம் உள்ள அடக்கமான அதிகாரி”. அமர்ந்து சற்று நேரம் கழிந்தும், எதிலும் அவன் கண் நிலை கொள்ளாமல் அலைபாய்ந்துகொண்டு இருந்தது. முகங்கள், உடைகள் வைரப்பட்டைகள் செதுக்கிய கோன்யாக்* பாட்டில்கள், ஆவி பறக்கும் டம்ளர்கள், அலங்கார வேலைபாடுள்ள சுவர் விளிம்புகள் என அனைத்தும் அவனுள் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி அவனுக்குத் தலையை எதிலாவது புதைத்துக் கொள்ள வேண்டும் போல ஆக்கின. தன் முன் எல்லாவற்றையும் கண்டாலும் எதையும் பிரித்தறிய இயலாத ஒரு கல்லூரிப் புது விரிவுரையாளனைப் போலவும் , அறிவியல், ஒருவனைக் ”குருடன்” என்று பகுத்திருந்தவனைப் போலவும் ஆனான்.
ஆனால், விரைவிலேயே தன் கூச்சத்தில் இருந்து மெல்ல வெளிப்பட்டு வியப்போடு தன்னைச் சுற்றி நடப்பவற்றை அறியவும் புரிந்துகொள்ளவும் முயன்றான். கூச்சமுடனும் யாருடனும் பழக்கமிராமிலும் வளர்ந்த அவனுக்கு, அவனுடைய புதிய நண்பர்களின் கூச்சமற்ற சுபாவம் வியப்பை ஏற்படுத்தியது. வான் ராபெக், அவர் மனைவி, இரு மூத்த பெண்கள், ஊதா நிற உடையணிந்த ஒரு பெண் மற்றும் ராபெக்கின் மகன் போல் தோன்றிய அந்த சிவந்த பூனை மீசைக்காரப்பயல் என எல்லோரும் ஏதோ ஒத்திகை பார்த்ததுபோல் எவ்வித தயக்கமுமின்றி அவர்களுடன் அமர்ந்து தீவிர உரையாடல்களில் ஈடுபடலாயினர். பீரங்கிப் படையினருக்கு, குதிரை, காலாட் படையினரை விடவும் நன்கு பொழுது கழிந்தது என்பதை அந்த ஊதா உடையணிந்த பெண்ணுடனான அவர்களின் உரையாடலை வான் ராபெக்கும் அங்கிருந்த மூத்த பெண்களும் ஆமோதித்ததிலிருந்தே அறியலாம். விரைவிலேயே அவ்வுரையாடல் பொருளற்றதாக ஆனது. ரியபோவிட்ச் அந்த ஊதா உடையணிந்த பெண் அவள் அறிந்திராத, விருப்பமில்லாத விஷயங்களையும் உக்கிரமாக விவாதித்ததைக் கவனித்ததோடன்றி ஒரு பொய்யான புன்முறுவல் அவள் முகத்தில் தோன்றி மறைவதையும் கண்டான்.
இவ்வித விவாதத்தில் விருந்தினர் எல்லோரையும் உட்படுத்தியபோதும், வான் ராபெக் குடும்பம் அவர்களது கோப்பைகளையும் வாயையும் கண்ணுற்றே இருந்தது. தேநீரில் இனிப்பு சரியா,ஏன் பிஸ்கட்டுகளை ஒருவர் உண்ணவில்லை, கோன்யாக்* இன்னும் வேண்டுமா என உபசரித்துக்கொண்டே இருந்தது. இதைக் கூர்ந்து கண்டும், கேட்டுக்கொண்டுமிருந்த ரியபோவிட்ச், அக்குடும்பத்தின் நாடகத்தையும், அதன் ஒழுங்கையும் ரசித்தான்.
தேநீருக்குப்பின் விருந்தினர் குடும்ப அறையில் குழுமலாயினர். லோபுவிட்கோவின் உள்ளுணர்வு அவனை ஏமாற்றவில்லை.அவ்வறை இளம்பெண்கள், சிறுமிகளால் நிறைந்திருந்தது. கண்ணிமைப்பதற்குள்,ஒரு இளம் லெப்டினெண்ட், கருத்த உடையணிந்த ஒரு கூந்தழகியின் முன், ஏதோ அவன் கழுத்தின் பின் ஒரு வாளின் முனை அழுத்துவதுபோலத் தலையை குனிந்து தன் தோள்களைஅவளை நோக்கிக் குவித்து ஏதோ பசப்பினான் . சந்தேகத்திற்கிடமேயற்ற அவனது முட்டாள்தனமாக உளறலுக்கு, அவ்வழகியபெண்,ஆவல் கொண்ட அவன் முகத்தை நோக்கிச் சம்பந்தமின்றி “உண்மையிலேயே” என்று ஆமோதித்தாள். அந்த மிகச் சாதாரணமான “உண்மையிலேயே” அந்த இளம் லெப்டினென்ட்டுக்கு அப்பெண் அவனுக்கானவளல்ல என்பதை உறுதிப்படுத்தியது.
இசை ஆரம்பித்தது. சோகமான ஜன்னல்களிலிருந்து வழிந்தோடிய அந்த நடன இசை, மே மாதத்தின் வசந்த காலத்தை நினைவூட்டியது. காற்று, இளம் பாப்ளார் இலைகள், ரோஜா, லைலாக் வாசனைகளுடன் அந்த சோக நடன இசையையும் குழைத்து வசந்தத்தைப் பரப்பியது. ரியபோவிட்ச், அந்த இசை மற்றும் அருந்திய *கோன்யாக்’கின் லேசான தலைசுழற்றலில், ஜன்னலை புன்முறுவலுடன் பார்த்தான். பின் அங்குள்ள பெண்களின் அசைவுகளைத் தொடர்ந்தான். அவன் உணர்ந்த இளம் பாப்ளார் இலைகள், ரோஜா, லைலாக் மலர்களின் வாசம் தோட்டத்திலிந்து அல்ல, அப்பெண்களின் முகம், உடைகளிலிலிருந்தே வந்தது என அவனுக்கு தோன்றியது.
அவர்கள் நடனமாட ஆரம்பித்தனர். இளம் வான் ராபெக் ஒரு மெலிந்த பெண்ணுடன் அறையை இரு முறை சுழன்று வந்தான். லோபுவிட்கோ சச்சதுரமான வேலைப்பாடுள்ள மரத்தரையில் வழுக்கியபடி அந்த ஊதா உடையணிந்த பெண்ணிடம் சென்றான். அவளும் அவனுடன் நடனமாட சம்மதித்தாள். ஆனால் ரியபோவிட்ச் பூவேலைப்பாடுள்ள அறையின் கதவினருகே நின்று அமைதியாக எல்லாவற்றையும் நோக்கலானான். கூட்டத்தின் முன் தைரியமாக, முன்பின் அறிந்திராத பெண்களின் இடையை அணைத்துச் சென்றவர்களைக் காணும்போது தன்னை அந்நிலையில் அவனால் நினைத்தும் கூட பார்க்கமுடியவில்லை. ஒரு கணம் அவனுடைய தோழர்களின் கட்டற்ற தைரியத்தை மிகுந்த மனவருத்தத்துடன் கண்ணுற்றவனுக்கு,தன் கூச்சமும், தளர்ந்த தோள்களுடன் யாரும் கவனித்திராத, காட்டுப்பூனை மீசையுள்ள, மிக நீண்ட இடுப்பு கொண்ட தன் தோற்றம், வருந்தத்தை மேலும் அதிகரித்தது. பலகாலமாகவே தன் சராசரி தோற்றத்தோடு பழகிப்போனவனுக்கு, இப்போது நடனமாடுபவர்களையும், உரத்து பேசுபவர்களையும் காணும்போது அவனுக்குப் பொறாமையேதும் ஏற்படவில்லை, மாறாக ஒர் அவனுள் ஒரு சோக உணர்வே எழுந்தது.
முதல் குழு நடனத்தின்போது இளைய வான் ராபெக், அதில் பங்கேற்காத இரு அதிகாரிகளை பில்லியர்ட்ஸ் விளையாட அழைத்தான். அவர்கள் மூவரும் அறையை விட்டு வெளியேறினர். அசைவற்று நின்றிருந்த ரியபோவிட்ச், தன்னிச்சையாக அவர்களைப் பின் தொடர்ந்தான். உணவுக்கூடத்தைத் தாண்டி ஒரு குறுகிய இடைநாழியைக் கடந்து, மூன்று தூங்குமூஞ்சி காலாட்படையினர் விசுக்கென்று சோபாவிலிருந்து எழுந்த ஒரு அறையையும் தாண்டி, சிறிய பில்லியர்ட்ஸ் அறையை அடைந்தவனுக்கு வீடு முழுக்க அறைகளாலேயே நிரம்பியதாகத் தோன்றியது.
இளைய வான் ராபெக்கும் இரு அதிகாரிகளும் ஆட்டத்தை துவங்கினர். சீட்டாட்டம் மட்டுமே அறிந்த ரியபோவிட்ச்,பில்லியர்ட்ஸ் மேசையை கவனமின்றி நோக்கிக்கொண்டிருக்கும்போது, அவ்வதிகாரிகள், தளர்த்திய கோட்டுகளுடனும் பந்தைத் தள்ளும் குச்சியுடனும் முன் நகர்ந்தவாறே கிண்டலடித்துக்கொண்டு, உரக்க அவன் அறியாத சங்கேத வார்த்தைகளில் கூவிக்கொண்டிருந்தனர். அவர்கள் ரியபோவிட்சைப் பொருட்படுத்தவேயில்லை., அவன் குறுக்கிட்டபோதும்கூட, “மன்னிக்கவும்” என்று அவனை ஒருவன் ஒதுக்கியபோது முற்றிலும் சலிப்புற்றான். தான், எதிலும் கலக்காமலிருப்பதை உணர்ந்து, விருந்தினர் கூடும் அறைக்கே திரும்பிச் செல்லத் தீர்மானித்தான்.
திரும்பிச்செல்லும்போதுதான் அவன் அந்த சாகச நிகழ்வை நேரிட நேர்ந்தது. சிறிது தொலைவைக் கடந்ததும்தான் தான் வழிமாறியதை அறிந்தான். மூன்று தூங்குமூஞ்சிகளிருந்த அறை அவனுக்கு நன்கு நினைவிலிருந்தது. ஒரு ஐந்தாறு அறைகளைக் கடந்த பின்பே அவன் வழி தவறியதை உணர்ந்தான். வந்த வழியை பின்தொடருவதற்காக இடது பக்கமாகத் திரும்பியவன், முன் கடக்காத, ஒரு அரையிருட்டு அறையை அடைந்தான். பின் தைரியத்துடன் ஒரு கதவைத் திறந்த அவன், முற்றிலும் இருண்ட மற்றொரு அறையை அடைந்தான். சற்றே திறந்திருந்த ஒரு கதவினூடே வெளிச்சம் ஊடுருவியிருந்தது. அதனூடே மஸுர்க்காவின்** மெல்லிய இசை மிதந்து வந்தது. இவ்வறையிலும் இளம் பாப்ளார் இலைகள், ரோஜா, லைலாக் மலர்களின் வாசம் நிறைந்திருந்தது.
ரியபோவிட்ச் சற்றே குழம்பினான். சுற்றிலும் எல்லாம் சலனமற்றிருந்தது. பின், தயங்கி வரும் காலடியோசைகள் கேட்டன. அது என்னவென்றறிவதற்குள், உடைகள் சரசரக்க, மூச்சொலியின்றி ஒரு குரல் அவன் காதருகில் “கடைசியில்” என்று கிகிசுத்தது. உடன் இரு மென்மையான,சந்தேகமேயின்றி, ஒரு பெண்ணின் வாசம் நிறைந்த கைகள் அவன் கழுத்தைத் தழுவின. ஒரு வெதுவெதுப்பான கன்னம் அவன் முகத்தை அழுத்தியது. அவன் ஒரு நீண்ட முத்தத்தைப் பெற்றான். ஆனால் அந்த முத்தத்தின் ஒலியைக் கேட்பதற்குள் அவள் கிறீச்சிட்ட குரலுடன் ஓடி மறைந்தது அவள் வெறுத்து ஓடியதுபோல அவனுக்குப்பட்டது. ரியபோவிட்சும் கிட்டத்தட்டக் கத்தவிருந்தான். பின் வேகமாக ஒளி ஊடுருவிய கதவை நோக்கி விரைந்தான்.
விருந்தினர் அறையை அடைந்தபோது அவன் இதயம் மிகப் படபடத்தது. வெளிப்படையாகவே நடுங்கிய கைகளை பின்னுக்குக் கட்டி மறைத்தான். முதலில் அவனுக்கு வெட்கமாக இருந்தது. ஏதோ அவ்வறையில் இருந்த அனைவரும் அவன் கட்டியணைக்கப்பட்டு முத்தம் பெற்றதை அறிந்தததைப் போல. தன்னை உள்ளிழுத்துக்கொண்டு அச்சத்துடன் சுற்றுமுற்றும் பார்த்தான். ஆனால் வீட்டாரும் விருந்தினரும் அமைதியாக நடனமாடிக்கொண்டும், பேசிக்கொண்டுமிருப்பதைக் கண்டவன், தைரியத்துடன் வாழ்விலேயே முதல்முறையாக, தான் சற்றுமுன் அனுபவித்த உணர்வுகளில் அமிழ்ந்தான். விவரிக்கவியலாத ஒன்று சற்றுமுன் நிகழ்ந்திருந்தது. வாசமுள்ள கைகள் வளைத்திருந்த அவன் கழுத்தில் வாசனை எண்ணெய் இன்னமும் ஒட்டியிருந்தது. முத்தம் பதிந்திருந்த இடது மீசை, குளிர்ந்த பெப்பர்மிண்ட் எண்ணெய் பட்டதுபோலக் குளிர்ச்சியாயிருந்தது. தலை முதல் கால் வரை அவனை முற்றிலும் நனைத்திருந்த அப்புதிய இனம் புரியாத உணர்வுகள், மேன்மேலும் அவனுள் வளரலாயின.
அவனுக்கு கட்டற்று ஆடவும், பேசவும், தோட்டத்திற்குள் ஓடவும், சிரிக்கவும் வேண்டும்போலிருந்தது. சற்று முன் கேட்ட அப்பெண் குரல் அவனுக்குத், தான் வளைந்த தோள்களுடன் யாருமறிந்திரா காட்டுப்பூனை மீசைக்காரன் என்பது மறந்து, தான் “கட்டற்றவன்” என அவனை நினைக்கவைத்தது. அவனைக் கடந்து சென்ற திருமதி வான் ராபெக்கை நோக்கி முகமலர்ச்சியுடனும், பெருமிதமாயும் அவன் சிரித்தது, அவர் திரும்பிவந்து அவனை சந்தேகத்துடன் உற்று நோக்கும்படியாக்கியது.
தன் மூக்குக்கண்ணாடியை சீர்படுத்தியவாறே, “ உங்கள் வீடு மிகவும் அழகானது” என்றான்.
பதில் முறுவலித்த திருமதி வான் ரேபக், அவ்வீடு இன்னமும் அவருடைய தந்தைக்குச் சொந்தமானதென்று கூறினார். கூடவே, அவனுடைய பெறோர் இன்னமும் உயிரோடுள்ளனரா, எவ்வளவு காலமாய் அவன் ராணுவத்திலுள்ளான், ஏன் அவ்வளவு ஒல்லியாக உள்ளான் எனவும் விசாரித்தார். அவன் பதில்களைக் கேட்டபின் அவர் அவ்விடத்திலிருந்து அகன்றார். அவ்வுரையாடல் முடிவுற்றபோதும், அவன் கருணையுடன் முறுவலித்தவாறே தனக்குப் புதிதாக அறிமுகமானவர்கள்தான் எவ்வளவு வசீகரமானவர்கள் என எண்ணினான்.
இரவுணவின்போது தனக்கு முன் வைக்கப்பட்ட உணவு வகைகளை, அங்கு நடந்த எந்த உரையாடலையும் கவனியாமல், தன் முழுக்கவனத்தையும் அவனுக்கு நேர்ந்த அந்தப் புதிரான காதல் உணர்வில் செலுத்தி இயந்திரம் போல உண்டான். ”அதன் பொருள்தான் என்ன? ”. அங்கிருந்த பெண்களில் யாரோ ஒருத்தி அந்த இருண்ட அறையில் யாருக்காகவோ காத்திருந்தவள், பொறுமையிழந்து, ரியபோவிட்ச்தான் அவள் காதலன் எனத் தவறாக நினைத்திருக்கக்கூடும் என தனக்குத்தானே சமாதானப்படுத்திக்கொண்டான். தானும் அவ்விருண்ட அறையில் தயங்கி நின்றது அவளுக்காகக் காத்திருந்தவன் வந்ததுபோல் தவறாகத்தான் அவளுக்குத் தோன்றியிருக்கவேண்டும். ஒருவாறாக அப் புதிர் விளங்கியதுபோலிருந்தது.
“ஆனால் இவர்களில் அவள் யார்?” என அங்கிருந்த பெண்களின் முகங்களில் தேடினான்.அவள் நிச்சயமாக இளம் பெண்ணாகத்தான் இருக்கவேண்டும், ஏனென்னில், முதிய பெண்கள் இவ்வாறு காதல் கொள்பவர்களல்ல. இரண்டாவதாக அவள் ஒரு பணிப்பெண்ணாக இருக்க வாய்ப்பில்லை. சரசரக்கும் உடை, அந்த மணம், குரல்….. சந்தேகமேயில்லை.
முதலில் கண்ட அந்த ஊதா நிற உடையணிந்த பெண்ணை அவனுக்குப் பிடித்திருந்தது. அழகான தோள்கள், கைகள், புத்திசாலியான முகம், மற்றும் வசீகரக்குரலுடனிருந்தாள். ரியபோவிட்ச் அவளாக இருக்கவேண்டுமென மனதார வேண்டினான். ஆனால், செயற்கைச் சிரிப்புடன் அவளது நீண்ட மூக்கைச் சுழித்தது அவளுடைய வயதைக் கூட்டியது. அடுத்து ரியபோவிச்சின் கண்கள் கருப்பு உடையணிந்த, பொன்னிறக் கூந்தல்காரியிடம் திரும்பியது. அப்பொன்னிறக் கூந்தல்காரி, எளிமையானவளாகவும் பாசாங்கற்றவளாகவுமிருந்தாள்.. அழகான சுருள்முடி கொண்டிருந்தவள், விவரிக்க இயலாத ஒரு மேன்மையுடன் அவளது குவளையிலிருந்து பானத்தைப் பருகினாள். ரியபோவிட்ச் இவளாக இருக்கவேண்டுமே என்று எண்ணும்போதே அவளின் தட்டையான முகத்தைக் கண்டு, தன் பார்வையை அவளுக்கு அடுத்து இருந்தவளிடம் திருப்பினான்.
“இது ஒரு உபயோகமற்ற புதிர் விளையாட்டு”, எனத் அவனுக்குத் தோன்றியது. “அவ் வூதாப்பெண்ணின் கைகளுடன், பொன்னிறக் கூந்தழகியின் சுருள்முடியையும் லோபுவிட்கோவின் இடப்புறம் அமர்ந்துள்ள பெண்ணின் கண்களையும் சேர்த்தால்………”
அப்படியான ஒரு அழகியை வரித்து தன்னை முத்தமிட்ட பெண்ணை மனதில் கண்டான். ஆனால் மனதில் கண்ட அப்பெண்ணைத்தான் எங்கும் காண இயலவில்லை.
வயிறார உணவு, போதையுடன் இரவுணவை முடித்த விருந்தினர்கள், விருந்துக்கு அழைத்தவர்களிடமிருந்து விடை பெற்றனர். விருந்தோம்பிய தம்பதியர் அவர்களை இரவு தங்க வைக்கமுடியாமைக்கு மற்றொரு முறை வருந்தினர்.
“நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், கனவான்களே” என்றவர் இம்முறை நேர்மையாகப் பேச ஆரம்பித்தார். ஏனெனில் வேண்டாத விருந்தை வரவேற்பதைக்காட்டிலும் விடைபெரும் விருந்தை மரியாதையுடன் சீக்கிரமே வழியனுப்புவதே நல்ல முறைமை என்பதினால்தான். “நான் உண்மையிலேயே மகிழ்வுறுகிறேன். திரும்பும் வழியில் என்னை மறுபடி சந்திப்பீர்கள் என நம்புகிறேன். தயவுசெய்து கொண்டாட்டங்களைத் தவிர்க்கவும்! எவ்வழியாகச் செல்லப்போகிறீர்கள்? குன்றின் மீதேறியா? வேண்டாம், குன்றின் கீழிறங்கி தோட்டத்தின் வழியே செல்லுங்கள். அதுவே குறுக்குவழி” என்றார்.
அந்த அதிகாரிகள் அவரது வழிகாட்டலை ஏற்றனர். முன் கதவிலிருந்து வந்த ஓசைகளும், ஒளியும் அடங்கியபின் தோட்டம் இருண்டும் அசைவற்றுமிருந்தது. தோட்டத்து முன்வாயிலை எட்டும்வரை அனைவரும் அமைதியாயிருந்தனர். மகிழ்ந்தும், அரைப்போதையிலும், திருப்தியுற்றிருந்த அவர்களுக்கு, இருண்ட அவ்விரவும் அசைவின்மையும் ஆழ்ந்த சிந்தனையைக் கிளறியது. எல்லோர் மனதிலும், ரியபோவிட்சைப் போலவே ஒரே கேள்வி எழுந்தது. ”என்றாவது ஒரு நாள் நமக்கும் வான் ராபெக்கைப் போல பெரிய வீடு, குடும்பம், தோட்டம், மற்றவரிடத்தில் மேன்மை – போலியாகவேனும், விருந்தினருக்கு வயிறார உணவு, போதை, திருப்தி என்பதெல்லாம் அமையுமா?”
ஆனால் தோட்டத்தைக் கடந்தவுடன் ஒரே நேரத்தில் அனைவரும் பேசவும், பொருளற்றுச் சிரிக்கவும் முற்பட்டனர்.அவர்கள் சென்ற பாதை நேரே ஆற்றுக்குச் சென்று பின் கரையையொட்டி புதர்களையும்,செங்குத்தாக இறங்கிய பாறைகளையும் கவிந்த வில்லோ மரங்களையும் சுற்றிச் சென்றது. பாதை அவ்விருளிலும் சற்றே கண்ணுக்குப் புலப்பட்டது. மறுகரையை முற்றிலும் காண முடியவில்லை. சில இடங்களில் ஆற்றின் கருத்த நீரோட்டம், நட்சத்திரங்களைப் பிரதிபலித்ததுடன் ஆற்றின் ஒழுக்கையும் காட்டியது. சிறிது தள்ளி , பறவைகள்,பாதி உறக்கத்தில் மெல்லிய ஒலி எழுப்பின. அவற்றுள் ஒரு நைட்டிங்கேல் பறவை உரத்து பாடவும் செய்தது. அதிகாரிகள் புதர்களை விலக்கிச் சென்றபோதும் அந்த நைட்டிங்கேல் பறவை பாட்டை நிறுத்தவில்லை.
“எனக்கு அவன் கன்னம் பிடித்திருந்தது” என்று மதிப்புடன் ஆமோதித்தனர். ” அந்த கிழக்கயவாளி யாரையும் ஒரு கோபெக்குக்கூட மதிக்கவில்லை”.
அவர்களது பயணத்தின் இறுதியில் அப்பாதை குன்றுப் பக்கம் திரும்பி சர்ச்சுக்கு செல்லும் சாலையில் சேர்ந்தது. குன்றின் மீதேறி களைத்திருந்த அதிகாரிகள், புல்தரையில் அமர்ந்து புகைபிடிக்கத் தொடங்கினர். ஆற்றின் அக்கரையில் தொலைவில் தோன்றிய மெல்லிய சிவப்பு ஒளியை, ஏதாவது பேசவேண்டுமே என்பதற்காக, சூட்டுக்காக கொளுத்தப்பட்ட தீயென்றும், எதோ ஒரு வீட்டின் ஜன்னலிலிருந்து வரும் ஒளியென்றும் அல்லது வேறேதோ ஒன்றெனவும் பொருளற்று வாதிட்டனர். ரியபோவிட்சும் அவ்வொளியைக் கண்டாண். ஏதோ அம்முத்ததை அறிந்து அந்த ஓளி அவனை நோக்கி கண் சிமிட்டிச் சிரிப்பது போல அவனுக்குத் தோன்றியது.
தங்குமிடத்தை அடைந்தவுடன், சற்றும் தாமதியாமல் உடைகளைக் களைந்து தன்னைப் படுக்கையில் கிடத்தினான். அவன் லோபுவிட்கோவுடனும், அந்த ஆழ்ந்த, அமைதியான குள்ளத் தோற்றத்தில், மிகவும் பண்பட்டவனாகவும், செல்லுமிடமெங்கும் “ஐரோப்பாவின் தூதுவன்” நூலை முடிவுறாது படிப்பவனுமாக இருந்த லெஃப்டினண்ட் மெர்ஸ்லியகோஃபுடனும் அந்த அறையை பகிர்ந்துகொண்டிருந்தான். உடைகளைக் களைந்திருந்த லோபுவிட்கோ, பலத்த காலடிகளுடன் பொறுமையின்றி அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தவாறே தன் பணியாளை பீர் கொண்டுவர அனுப்பினான்.மெர்ஸ்லியகோஃப் மெழுகுவர்த்தி ஒளியை தன் தலையணை பக்கம் திருப்பி அந்த “ஐரோப்பாவின் தூதுவன்” நூலுக்குப்பின்னால் தன் தலையை மறைத்தான்.
கரிபடிந்த மேல்கூரையை நோக்கிய ரியபோவிட்ச், “ தற்போது அவள் எங்கிருப்பாள்”: என முணுமுணுத்தான்.
அந்த வாசனை எண்ணெய் இன்னமும் அவன் கழுத்தில் பரவியிருந்தது. உடன், வாயினருகே பெப்பர்மிண்ட் என்ணெய்த்துளியின் குளிர்ச்சியும். அவனது மனதில், ஊதா உடையழகியின் கை, தோள்கள், கருப்பு உடையணிந்தவளின் சுருள் முடி, நேரான பார்வை மற்றும் அவர்களது இடைகள், உடைகள், அலங்கார உடைப் பின்கள் ஆகியவை மின்னி மின்னி மறைந்தன. அவனால் இயன்ற அளவு அலைபாயும் காட்சிகளைக் குவிக்க முயன்றபோதிலும் அவை அவன் மனதில் சுடர்விட்டு, கண்சிமிட்டி மறைந்தன. கடைசியில் அவை ஒரு பெரிய கருத்த திரையின்பின் எல்லோருடைய பார்வையிலிருந்தும் மறைந்தபோது, அவனுக்கு அவசரமான காலடியோசைகள், சரசரத்த நீள் உடை, முத்தத்தின் ஒலிகள் மீண்டும் அவனுக்கு கேட்கத் துவங்கின. ஒரு பெருத்த, காரணமற்றக் களிப்பு அவனை ஆட்கொண்டது. இக்களிப்பில் அவன் ஆழ்ந்திருக்கும்போதுதான் லோபுவிட்கோவின் பணியாள் எங்கும் பீர் கிடைக்கவில்லையென்ற செய்தியுடன் வந்தான்.அந்த லெஃப்டினெண்ட் அவ்வறையில் குறுக்கும் நெடுக்குமாக தன் பொறுமையற்ற நடையைத் தொடரலானான்.
”இந்தாள் ஒரு முட்டாள்”,என்று முதலில் ரியபோவிட்சினருகிலும் பின் மெர்ஸ்லியகோஃபிருகிலும் நின்று கூவினான்.”மோசமாய் மண்டை மரத்துப் போனவனுக்கும், மரத்தலையனுக்கும் மட்டுமே பீர் கிடைக்காமலிருக்கும். கீழ்த்தரமானவன்”.
“எல்லோருக்கும் இங்கு பீர் இல்லையென்பது தெரியும்” அந்த “ஐரோப்பாவின் தூதுவன்” புத்தகத்திலிருந்து கண்ணை எடுக்காமல் சொன்னான் மெர்ஸ்லியகோஃப்.
“அதை நீ நம்புகிறாயா?” கத்தினான் லோபுவிட்கோ. “பரமபிதாவே, என்னை நிலவில்கூடத் தூக்கிப்போடு. நான் பீர், பெண்கள் இரண்டையும் கண்டுபிடிப்பேன். இல்லையேல் என்னை ராஸ்கல் என்று விளிக்கலாம்!”.
மெதுவாக உடையணிந்தவன், அமைதியாக சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டு வெளியே சென்றான்.
“ராபெக், க்ரேபெக், லப்பக்” என கூடத்தின் நடுவில் நின்று குமுறினான். “எந்தப் பிசாசு என்னைப்பிடித்தாலும் நான் தனியாகப் போகமாட்டேன். ரியபோவிட்ச், என்னுடன் நடக்க வருகிறாய், என்ன?”.
மறுமொழி வராததால், திரும்பிவந்து, மெல்ல உடைகளைக் கழற்றிப் படுத்தான். பெருமூச்சுவிட்ட மெர்ஸ்லியகோஃப், அந்த “ஐரோப்பாவின் தூதுவனை” கீழேவைத்து விளக்கை அணைத்தான்.லோபுவிட்கோ இருளில் சிகரெட்டைப் புகைத்தவாறே “நல்லது?” என்றான். ரியபோவிட்ச் போர்வையை முகவாய் வரை இழுத்து, சுருண்டு படுத்து மனதில் மின்னி மறையும் தோற்றங்களை ஒற்றை உருவமாகக் காணப் பெருமுயற்சி செய்துகொண்டிருந்தான். ஆனால் அவ்வுருவம் அவனிடமிருந்து விலகியே சென்றது. விரைவில் உறங்கியவனுக்கு, தான் அணைத்து மகிழ்விக்கப்பட்டதும், மெல்ல தன் வாழ்வு, ஒரு அசாதாரணமான ஒளிமயமிக்க நன்மையில்,எவ்வளவு பைத்தியக்காரத்தனமாயிருப்பினும், நுழைந்தது என்பதே உறங்குமுன் இறுதியான நினைவானது. இந்நினைவு அவனது கனவிலும் தொடர்ந்தது.
அவன் கண்விழித்தபோது கழுத்திலிருந்த வாசனை எண்ணெய்ப் பிசுபிசுப்பு, பெப்பர்மிண்ட் குளிர்ச்சி, எல்லாம் போய்விட்டது. ஆனால், குதூகலம் ஒவ்வொரு நரம்பிலும் முந்தைய இரவிலிருந்ததைப்போன்றே நிரம்பியிருந்தது. ஜன்னல் சட்டங்களை பொன்னிறமாக்கிய கதிரவனைக் கண்டுகொண்டிருந்தவனுக்கு அறையின் வெளியே பேச்சுக்குரல்கள் கேட்டது. அப்போது புதிதாய் அவனது பீரங்கிப் படையின் கமாண்டராகப் பொறுப்பேற்றிருந்த லெபெடியேஸ்கியின் குரல்தான் அது. அமைதியாகப் பேசியே பழக்கமிராதவர், உரத்த குரலில் சார்ஜண்ட் மேஜருடன் பேசிக்கொண்டிருந்தார்.
“ பின், அடுத்தது என்ன?”, கர்ஜித்தார்.
“நேற்று குதிரைக்கு லாடமடிக்கும்போது யுவர் ஆனர், கோலுப்ச்சிக்கிற்கு ஆணி குத்திவிட்டது. மருத்துவர் அவனுக்குப் பூச்சும் வினிகரும் அளிக்கச்சொன்னார். மேலும், நேற்றிரவு யுவர் ஆனர், மெக்கானிக் அர்டெமியெஃப் குடித்திருந்ததினால் மாற்று காலி பீரங்கி வண்டியில் அவனை படுக்கவைக்கச் சொன்னார்”
கூடவே அந்த சார்ஜண்ட் மேஜர், கர்பாஃப், கூடாரத் தளைகளையும் பீரங்கி வெடிமருந்து அறை இழுவைக் கயிறையும் மறந்துவிட்டதையும் கூறியவன் கூடவே, படை அதிகாரிகள் ஜெனரல் வான் ராபெக்கின் வீட்டில் மாலையை கழித்ததையும் சேர்த்தான். சட்டென அவ்வறையின் ஜன்னலில், செந்நிறத் தாடியுடன் கமாண்டர் லெபெடியேஸ்கியின் முகம் தோன்றியது. கண்களைக் குவித்து தூக்கக் கலக்கத்தில் படுத்திருந்தவர்களை நோக்கிக் கேட்டார்.
“எல்லாம் சரியாக உள்ளதா?”
“குதிரை வண்டி இருக்கை, புதிதாக செய்த குச்சியிலிருந்து பிய்த்துக் கொண்டு வந்துவிட்டது” லோபுவிட்கோ பதிலுரைத்தான்.
சலிப்புடன் பெருமூச்சு விட்டு சற்றே யோசித்தபின், உரத்து, “ நான் அலெக்ஸாண்ட்ரா யெகோர்னவாவைச் சந்திக்க எண்ணுகிறேன். அவளைப் பார்க்கவேண்டும். குட் பை! இன்றிரவுக்கு முன் மறுபடி சந்திப்போம்.”
பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு படை தன் அணி நடையைத் தொடர்ந்தது. வான் ராபெக்கின் தொகுப்புகளைக் கடக்கும்போது ரியபோவிட்ச் தலையத் திருப்பி அவ்வீட்டைப் பார்த்தான். வெனீஷியன் திரைச்சீலைகள் முழுவதுமாக ஜன்னல்களை மூடியிருந்தன. எல்லோரும் தூங்கியிருக்கவேண்டும். அவர்களுள் அவள், சில மணி நேரங்களுக்குமுன் அவனை முத்தமிட்டவளும். அவள் தூங்குவதை மனதில் உருவகித்தான். அவள் படுக்கையறையின் திறந்த ஜன்னல்களினூடே பசுங்கிளைகளை ஊடுருவிய அவ்விடிகாலைக் காற்று, இளம் பாப்ளார் இலைகள், ரோஜா, லைலாக் மலர்களின் வாசம், படுக்கை, சேர், நேற்றிரவு சரசரத்த அவ்வுடை, ஒரு ஜோடி சிறிய காலணிகள், மேஜை மேல் நொடிகளை உரத்துக் கூறிய கடிகாரம் என எல்லாவற்றையும் அவனால் தெளிவாகக் காண முடிந்தது. ஆனால், உறக்கத்தில் அவள் முறுவல் போன்ற முக்கியமான விஷயங்கள், மொத்தத்தில் மிகத் தேவையான, சம்பத்தப்பட்ட எல்லாம் வெள்ளிக் காசு கையிலிருந்து நழுவுவது போலத் தோற்றத்திலிருந்து மறைந்தன. ஒரு அரை கிலோமீட்டர் கடந்தபின் மறுபடியும் திரும்பி நோக்கினான். மஞ்சள் நிற சர்ச், வீடு, தோட்டங்கள், ஆறு என எல்லாம் ஒளியில் நிறைந்திருப்பதாகப்பட்டது. வானம் தூய நீலமாகவும், ஆறு, பசும் கரைகளுடன் வெள்ளி மினுக்குடன் மிக அழகாகவும் தோன்றியது. மியடெட்ச்கி கிராமத்தை கடைசி முறையாகக் கண்ட ரியபோவிட்ச், தனக்கு மிகவும் நெருக்கமானதையும், அறிந்ததையும் எப்போதைக்குமாகப் பிரிவதை சோகமாக உணர்ந்தான்.
தனக்கு முன்னுள்ள சாலையைக் கண்ணுற்றவனுக்கு யாவும் சுவாரசியமற்றுத் தோன்றின.இட வலப் பக்கங்களில் ரை தானியக் குருத்துக் கதிர்கள், முன்னால் தூசி படிந்த மனித பின் கழுத்துப்பட்டிகள், பின்னால், அதே தூசி படிந்த முகங்கள். வரிசையின் முகப்பில் வாளேந்தி நடக்கும் நான்கு முன்ணனிக் காவலர். அவர்பின் வாத்திய கோஷ்டி. முன்ணனி வீரர்களுக்கும் வாத்தியகோஷ்டிக்குமான நீண்ட இடைவெளி, நிசப்தமாக, ஏதோ சவ ஊர்வலம் செல்வது போலிருந்தது. ஐந்தாவது பீரங்கிக் குழுவின் ரியபோவிட்ச், அவனுக்கு முன்னுள்ள நான்கு குழுக்களையும் நன்கு காண முடிந்தது.
ஒரு சாதாரண மனிதனுக்கு, இந்த நீண்ட, இயந்திரத்தனமான பீரங்கிப்படை அணிவகுப்பென்பது, புதுமையாகவும், ஆவலாகவும், விவரிக்கவியலாததாகவுமிருந்திருக்கும். ஒரு பீரங்கிக்கு ஏன் இத்தனை பேர், அதை இழுக்க ஏன் விசித்திரமாகப் பூட்டப்பட்டிருக்கும் இத்தனை குதிரைகள் தேவையென விளங்காதிருக்கும். ஆனால், இதில் விற்பன்னனாகிய ரியபோவிட்சிற்கு இவையாவும் சோர்வையே அளித்தன. இவையனைத்தையும் பல வருடங்களுக்கு முன்பே, ஏன் ஒரு சார்ஜெண்ட் மேஜர் ஒவ்வொரு பீரங்கிப் படைக் குழுத்தலைவனை ஒட்டிச் செல்லவேண்டும்,ஏன் ஒரு சார்ஜெண்ட்-மேஜர் “யூனோஸ்னி”** என அழைக்கப்படவேண்டும், மேலும் ஏன் பொதிவண்டிகளின் ஓட்டிகளும் தலைவர்களும் தன் பின்னே வரவேண்டும் என்பதையெல்லாம் நன்கறிந்திருந்தான். ரியபோவிட்சிற்கு, இருக்கையின் முன் பூட்டப்பட்டிருக்கும் குதிரைகளுக்கு இருக்கை குதிரைகளெனவும், அவற்றின் முன்னால் பூட்டப்பட்டுள்ள குதிரைகள், நடத்தும் குதிரைகளெனவும் அறிந்திருந்திருந்தாலும், இவையாவிலும் அவன் விவரிக்கவியலா ஆர்வமற்றிருந்தான். அருகிலிருக்கும் ஒரு சரக்கு வண்டியின் மேல் தூசிபடிந்த ஒருவனும் அவனுடன் நடக்கச் சிரமப்படும் மற்றொருவனும் நடந்து வருவதைக் கண்டான். ஆனால் ரியபோவிட்சிற்கு அவனுடைய அவசியம் அறிந்ததனால் அதுவொன்றும் பைத்தியக்காரத்தனமாகத் தெரியவில்லை. வண்டியோட்டிகள் அவ்வப்போது இயந்திரத்தனமாக ஒலியெழுப்பியபடி சாட்டையை சுழற்றினர். இருசக்கர பீரங்கிவண்டிகள் ஓட்ஸ் மூட்டைகளால் நிரப்பப்பட்டு தார்ப்பாய்களால் மூடப்பட்டிருந்தன. பீரங்கிகளும் கூட அப்படியொன்றும் முக்கியமானவையாகத் தோன்றவில்லை. பீரங்கிகளின் மீது டீ கொதிப்பான்கள், மற்றும் பிற பாத்திரங்கள் தொங்கவிடப்பட்டு, ஏதோ சில அபாயமில்லாத விசித்திரப் பிராணிகள், ஏதோவொரு விசித்திர காரணங்களுக்காக மனிதர்களலும் குதிரைகளாலும் பாதுகாக்கப்பட்டவைகள் போலத் தோன்றின. ஒவ்வொரு பீரங்கியின் பக்கவாட்டிலும் ஆறு வீரர்கள் கை வீசி ஒருவர் மற்றொருவர் மீது இடித்துக்கொண்டு நடந்தனர். ஒவ்வொரு பீரங்கியின் பின்புறமும் யூனோஸ்னியெ எனும் சார்ஜண்ட் மேஜர், படைத்தலைவர்கள் மற்றும் படைக்கு அத்தியாவசியமான பொருள்கள் சுமந்த வண்டிகள், முன்னேசெல்லும் அசிங்கமான பீரங்கி போன்றே தோற்றமளித்த மேலும் பீரங்கிகளென எல்லாம் அணிவகுத்திருந்தன. ஒவ்வொரு ஆறு பீரங்கிக் குழுவுக்கும் முன்னால் நான்கு சிறு அதிவேக பீரங்கிகள் சென்ற அவ்வணிவகுப்பின் நீளம் அரை கிலோமீட்டரையும் தாண்டியது.மிகக் கடைசியில் துருக்கியிலிருந்து கமாண்டர் கொண்டு வந்திருந்த கழுதை, தலைசாய்த்து எதையோ யோசித்தபடி பொதி வண்டியை இழுத்துச் சென்றது.
சுற்றிலிருப்பவை பற்றி முற்றிலும் பிரக்ஞையற்ற ரியபோவிட்ச் முன்னால் தெரியும் கழுத்துப்பட்டிகளையோ அல்லது பின்தொடரும் முகங்களையோ பார்த்தவாறு விறைப்பாக நடந்தான். முன்னிரவில் அந்த சங்கதி மட்டும் நடக்காமலிருந்திருந்தால், இந்நேரம் அரைத்துயிலில் இருந்திருப்பான். ஆனால் தற்போதோ ஒரு புதுமையான, அழகான ஓர் உணர்வால் பீடிக்கப்பட்டிருந்தான். அன்று காலை படை கிளம்பியபோது, அந்த விசித்திர, ஆச்சரிய முத்தத்துக்கு எந்தவொரு முக்கியத்துவமும் இல்லையெனவும் ஏதோ தன்னிச்சையாக நடந்த செயலே எனவும் தனக்குள் வாதிட்டுக்கொண்டிருந்தான். அதை முக்கியமானதாக நினைக்கும்தோறும் தான் அசட்டுத்தனமாக நடந்துகொள்வதாகவும் நினைத்துக்கொண்டான்.ஆனால் அதிவிரைவிலேயே அத் தர்க்கபுத்தி பறந்து அவனது தெளிவான கற்பனைகளுக்குள் சரணடைந்தான். சில நேரம் அவன் வான் ராபெக்கின் உணவறையில் தனித்து லைலாக் உடையில் பின்புறம் வெண்ணிற முடியுடன் பெண் போல் தோற்றமளித்தவளின் எதிரில் தான் அமர்ந்திருப்பதைக் கண்டான். சில நேரம், கண்களை மூடியபோது, தெளிவற்றுத் தோற்றமளித்த மற்றொருத்தியுடன். அவளுடன் அவன் பேசினான்….அணைத்து அவள் தோள் மீது சாய்ந்தான்…உடன் போரும், பிரிவும்…..போருக்குப்பின் சந்திப்பில் முதல் இரவுணவில்…..குழந்தைகள்……
“நிறுத்துங்கள்!” ஒவ்வொரு குன்றின் உச்சியை அடைந்தபோதும் உரத்த ஆணை முன்னாலிருந்த கமாண்டரிடமிருந்து வந்தது.
ரியபோவிட்சும் “ நிறுத்துங்கள்!” எனக்கூவினான். ஒவ்வொரு கூவலின்போதும் அந்த மாயக்கற்பனைகள் மறைந்து, நிஜத்தில் கொண்டு சென்று விட்டுவிடுமோ என அஞ்சினான்.
அவர்கள் ஒரு பெரிய கிராமத்து வீட்டைக்கடந்தனர். ரியபோவிட்ச் வேலியைத்தாண்டி தோட்டத்தினுள் நோக்கினான். ஒரு நீண்ட நேர்கோடான பாதை மஞ்சள் நிற மண் பாவப்பட்டு, இள பிர்ச் மரங்களின் நிழலுக்குள் சென்றது. ஒர் உணர்ச்சிபூர்வமானத் தோன்றலில், அம்மஞ்சள் மண்ணில் சிறிய பெண்ணின் காலடிகளைக் கண்டான். உடனே அவன் கற்பனையில் அந்த முத்தமிட்ட பெண் தோன்றினாள். இரவுணவுக்குப் பின் தான் உருவகித்திருந்த அப்பெண்ணைத்தான். அத்தோற்றம் அவன் மனதில் குடியேறி பின் அவனைவிட்டு அகலவேயில்லை.
அம்மாயத் தோற்றம் மதியம் வரை, மீண்டுமொரு உரத்த ஆணை பின்னாலிலிருந்து வரும்வரை நீடித்தது.
“எச்சரிக்கை! வலதுபுறம் பார்க்கவும் அதிகாரிகளே!”
இரு வெண்குதிரைகள் பூட்டப்பட்ட கூரையற்ற ஒரு நான்கு சக்கர வண்டியில் அப்படையின் ஜெனரல் தோன்றினார். இரண்டாம் பீரங்கிக்குழுவினருகில் நின்று ஏதோ கேட்டார். யாருக்கும் கேட்கவில்லை. அவரை நோக்கி தத்தம் குதிரைகளை விரட்டி சென்ற அதிகாரிகளில் ரியபோவிட்சுமிருந்தான்.
“ அப்புறம், விஷயங்கள் என்ன?”, கண்சிமிட்டியவாறே, “யாரேனும் நோயுற்றுள்ளனரா?” எனக் கேட்டார்.
பதிலைக்கேட்ட அந்த மெல்லிய ஜெனரல் ஒரு கணம் யோசித்த பின், அருகிலிருந்த ஒரு அதிகாரியிடம் சொன்னார் – “ உன் மூன்றாவது பீரங்கியை ஒட்டி வருபவன் தன் கால் கவசத்தைக் கழற்றி பிரங்கி மேல் தொங்கவிட்டுள்ளான். கீழ்ப்பயல்! அவனைத் தண்டி!”.
பின் ரியபோவிட்சை நோக்கி கணகளை உயர்த்தி “ உன் பிரிவில், பீரங்கியை இழுக்கும் குதிரை வார்கள் தளர்ந்துள்ளன”.
இவ்வாறு சலிப்புறும் பல கட்டளைகளை பிறப்பித்தவாறே லோபுவிட்கோவை நோக்கியவர், சிரித்தார்.
“ஏன் தளர்வாய் உள்ளாய் லோபுவிட்கோ? அம்மணி லோபுகோஃபுக்காஃபுக்காக பெருமூச்செறிகிறாய், இல்லை? கனவான்களே, இவர் அம்மணி லோபுகோஃபுக்காஃபுக்காக உருகுகிறார்!”.
அம்மணி லோபுகோஃபுக்காஃபுக் உயரமான, சற்றே தாட்டியான நாற்பது வயதைக் கடந்த பெண். வயதானாலும் உருவத்தில் பெருத்த பெண்களில் ஆவல் கொண்ட அந்த ஜெனரல் அதைத் தன் அதிகாரிகளுக்கு எப்போதும் அறியப்படுத்தினார். அதிகாரிகளும் மரியாதையாகப் புன்முறுவலித்தது, ஜெனரலுக்குத் தான் நக்கலாக, அனைவரையும் சிரிக்கவைக்கும் நகைச்சுவையைக் கூறியதாகத் திருப்தியுற்று அருகிலிருந்த வண்டியோட்டியின் பின்னால் தட்டிகொடுத்தவுடன் அவருடைய வண்டி பறந்து சென்றது.
“இவையாவும் நடக்கமுடியாததாகவும், இயல்பற்றதாகவும் எனக்குத் தோன்றினாலும், இது ஒரு சாதாரண நிகழ்வுதான்” என ஜெனரலின் வண்டி கிளப்பிய புழுதி மேகத்தைக் கண்டவாறே எண்ணினான் ரியபோவிட்ச். “இது எல்லோர் வாழ்விலும் தினசரி நடக்கும் சாதாரண நிகழ்வே….. இதோ, இந்த வயதான ஜெனரல், அவருடைய வயதில் யாரையேனும் காதலித்திருக்கக்கூடும். அவர் இப்போது மணமானவர். குழந்தைகளும் உண்டு. கேப்டன் வாக்டரும் மணமானவனே. அசிங்கமான செங்கழுத்தும் இடையற்ற, குண்டான் இடுப்புடனிருப்பினும் அவனுடைய மனைவி அவனை விரும்புகிறாள். அந்த சால்மனாஃப், சரியான தார்த்தாரியன். அவனுடைய காதலோ கல்யாணத்தில் போய் முடிந்தது……நானும் கூடிய விரைவிலேயே அவர்கள் வழியேதான் சென்றாகவேண்டும்”.
தானொரு சாமானியன், தன் வாழ்வும் சாதாரணமானதே என்ற எண்ணம் அவனுள் ஒர் சிறு மகிழ்வைக் கொடுத்ததுடன் அவனை ஆற்றுப்படுத்தவும் செய்தது. அவன் அவளை தீவிரமாக மனதில் எண்ணி, கட்டற்ற கற்பனையிலாழ்ந்தான்.
மாலையை நெருங்கும்போது அந்த பிரிகேட் தன் அணிவகுப்பை முடித்துக்கொண்டது. மற்ற அதிகாரிகள் தத்தம் குடில்களில் சேர்ந்தபோது, ரியபோவிட்ச், மெர்ஸ்லியகோஃப், லோபுவிட்கோ ஒரு சரக்குப் பெட்டியின் மேல் அமர்ந்து இரவுணவு உண்டனர். மெர்ஸ்லியகோஃப் அந்த “ஐரோப்பாவின் தூதுவன்” நூலை தன் மடி மீது வைத்து படித்தவாறே மெல்ல உண்டாண்.நிறுத்தாது பேசிக்கொண்டேயிருந்த லோபுவிட்கோ, தன் கோப்பையில் பீரை நிரப்பினான்.ஆனால் ரியபோவிட்ச், அன்று நடந்த சம்பவங்களை நினைத்து மிகவும் குழம்பிய தலையுடன் மெதுவாக உண்டான்.ஒரு மூன்று கோப்பைகள் உள்ளே சென்றதும் போதையாகவும், தளர்வாகவும் உணர்ந்தான். சட்டென எழுந்த ஓர் உந்துதலில், அவனுக்கு நேர்ந்த சாகசத்தை அவனது நண்பர்களுக்கு விவரிக்கத் தலைப்பட்டான்.
“ஒரு அசாதாரண நிகழ்வு வான் ராபெக்கின் வீட்டில் எனக்கு நேர்ந்தது” என சாதாரணமான, யாருக்கோ நடந்தது போன்ற குரலில் சொல்ல ஆரம்பித்தான். “நான் திரும்பிச் செல்லும்போது, உனக்கு நினைவிள்ளதா?… அந்த பில்லியர்ட்ஸ் அறையிலிருந்து….”
அந்த முத்தத்தைப் பற்றி மிக விலாவாரியாக விவரிக்க முற்சித்தான் ஆனால் ஒரு நிமிடத்திற்குள் அனைத்தையும் சொல்லி முடித்திருந்தான். ஒரு நிமிடமே அவனுடய கதையைச் சொல்வதற்குத் தேவைப்பட்டிருந்தது அவனுள் ஒரு மோசமான உணர்வை ஏற்படுத்தியது. அவ்விரவு முழுவதும் அது நீண்டிருக்கவேண்டுமென அவன் நினைத்தான். அவன் சொல்லி முடித்திருந்தபோது, பொய்யனனான லோபுவிட்கோ எதையுமே நம்பாமல் உரத்துச் சிரித்தான். மெர்ஸ்லியகோஃப் சலித்த முகத்துடன், தன் கண்களை அந்த “ஐரோப்பாவின் தூதுவன்” – லிருந்து அகற்றாமலேயே சம்பந்தமில்லாமல் சொன்னான், “அது யாரென்று கடவுளுக்குத்தான் வெளிச்சம். அவளாகவே வந்து உன் கழுத்தைக் கட்டிக்கொண்டாள். அப்போதும் அவள் எந்த கூச்சலும் எழுப்பவில்லையென்றுதானே சொன்னாய்? ஏதோ ஒரு பைத்தியமாகவிருக்குமென நினைக்கிறேன்”.
“ஆம், ஏதோ ஒர் பைத்தியக்காரியாகத்தான் இருக்கவேண்டும்,” ரியபோவிட்சும் ஒத்துக்கொண்டான்.
“எனக்கும் கூட இம்மாதிரியான அனுபவங்கள் ஏற்பட்டுள்ளன” என அச்சமேற்றிய முகத்துடன் லோபுவிட்கோ ஆரம்பித்தான். “அப்போது நான் கோவ்னோவிலிருந்து திரும்பி வந்துகொண்டிருந்தேன். இரண்டாம் வகுப்புப் பெட்டியில். அப்பெட்டி முழுவதும் நிறைந்திருந்தது. என்னால் உறங்கவே முடியவில்லை. ஆகையால் அப்பெட்டிக் காவலாளியிடம் ஒரு ரூபிள் கொடுத்தேன். அவன் என் பையை எடுத்துக்கொண்டு சென்று என்னை ஒரு கூபேவில் போட்டான். நான் கம்பளியை இழுத்துப்போர்த்திக்கொண்டு படுத்தேன். அப்போது கும்மிருட்டாயிருந்தது என்பதை நீங்கள் கவனிக்கவேண்டும். திடீரென என் முகத்தில் மூச்சுக்காற்றுபட யாரோ என் தோளைத் தட்டினார்கள். யாரென அறிய கையை வெளியே நீட்ட, அது ஒரு முழங்கையைத் தொட்டது. பின் கண் திறந்து பார்த்தேன். யார் தெரியுமா? ஒரு பெண்! கருத்த விழிகள், பவழம் போன்ற உதடுகள், தாபத்தில் சூடான மூச்சுக்காற்று, மார்கள்…. பருத்து!”
“கொஞ்சம் அடக்கி வாசி”, மெர்ஸ்லியகோஃப்மெல்லிய குரலில் குறுக்கிட்டான், “நீ மார்களைப் பற்றிச் சொன்னதை என்னால் நம்பமுடியும். ஆனால், அவ்விருளில் அவள் உதடுகளை எப்படி கண்டாய்?”
மெர்ஸ்லியகோஃபின் அறியாமையைக் குறித்து உரக்கச் சிரித்தவாறு, லோபுவிட்கோ அவனுடைய சந்தேகத்தைக் களைய முற்பட்டான். அவனுடைய இக்கதை ரியபொவிட்சை எரிச்சலூட்டியது.அமர்ந்து உண்ட அப்பெட்டியிலிருந்து எழுந்து தன் படுக்கையில் படுத்தவன், இனியெப்போதும் யாரையும் நம்பப்போவதில்லை என முடிவெடுத்தான்.
அப்பாசறையில் நாட்கள் எவ்வித நிகழ்வுகளுமின்றிக் கடந்தன. ஒவ்வொரு நாளும் அதற்கு முந்தையதைப் போலவே கடந்தது. ஆனால் ஒவ்வொரு நாளும், ரியபோவிட்ச், ஏதோ காதலை அறிந்து, உணர்ந்து, அதில் வயப்பட்டவன் போல நடந்துகொண்டான். ஒவ்வொரு காலையிலும் அவன் பணியாள் குளிர்ந்த நீரை அவன் தலையில் கொட்டியபோது, அரை விழிப்பிலிருந்த அவன் மூளையில் நல்லதும், மயக்கமானதும், அரவணைப்பானதுமான ஏதோ ஒன்று அவன் வாழ்வில் நுழைந்துவிட்டதாக மின்னியது.
இரவில் அவன் தோழர்கள் காதல், பெண்களைப்ப் பற்றி பேசும்போது, பல களங்களை கண்ட அனுபவமிக்க போர்வீரனின் முகத்தோற்றத்துடன் அதில் கலந்துகொண்டான். அதிலும் லோபுவிட்கோ போன்ற ரௌடி அதிகாரிகள் டான் உவானின்*** காதல் வீரசாகசங்களை “புறநகர்ப்” பகுதிகளில் காட்டியபோது, அவர்களுடனிருந்தாலும்,சற்றே சோகத்துடனும், சுயப் பிரக்ஞையுடனும் மனதில் ”அவளிடம்” மன்னிப்புக்கேட்டுக்கொண்டான். ஒய்வு நேரங்களிலும், உறக்கமற்ற இரவுகளிலும் அவன் மனம், அவனது இளம்பிராயம், அவனது தந்தை, தாய் மற்றும் அவனுக்கு நெருக்கமான யாவற்றையும் எண்ணும்போது உடன் மியஸ்டெட்ஸ்கி, நடனமிடும் குதிரை, வான் ராபெக், முந்தைய மகாராணி யூஜீனைப் போன்ற வான் ராபெக்கின் மனைவி, அவ்விருண்ட அறை, அதன் கதவினூடே ஒழுகிய வெளிச்சம் போன்றவற்றையும் சேர்ந்தே நினைவில் வந்தது.
ஆகஸ்ட் 31ந் தேதி அவன் பாசறையிலுந்து கிளம்பினான். இம்முறை முழு பிரிகேடோடல்லாமல், இரு பீரங்கிக் குழுக்கழுடன் மட்டும் கிளம்பினான். ஒரு அகதி தன் சொந்த நாட்டிற்குத் திரும்புவதைப் போன்ற ஆவலுடனும், உற்சாகத்துடனும் பகலிலேயே கனவு கண்டான்.மகிழ்வுற்ற அக்குதிரை, சர்ச், பொறுப்பற்ற வான் ராபெக்குகள், அவ்விருட்டறை மற்றும் அவனுள் அவளை மறுபடியும் காணப்போகிறோம் என எப்போதும் காதலுடன் கிசுகிசுத்து உறுதியளித்துக் கொண்டிருக்கும் அக்குரல் போன்றவற்றை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்திருந்தான். ஆனால் சந்தேகம் அவனைக் கொன்றது. அவளை எப்படி சந்திப்பது? அவளுடன் என்ன பேசுவது? அந்த முத்ததை அவள் மறந்திருந்தால்? அப்படியேதும் மோசமாக ஆனால்? அவளை சந்திக்கவியலாமலேயே போனால்? ஆனால் என்ன? மற்றொரு முறை அவ்விருண்ட அறையில் நடந்து…அவற்றை நினைவூட்டி… என தனக்குத் தானே தேற்றிக்கொண்டான்.
மாலையின்போது அந்த வெண் களஞ்சியங்களும், நன்கு அறிமுகமான அந்த சர்ச்சும் தொலைவிலிருந்து மெதுவாக எழும்பின. ரியபோவிட்சின் இதயம் வேகமாகத் துடிக்கத் துவங்கியது. அவனைக் கடந்து சென்ற அதிகாரியின் முகமனையும் கவனியாமல், முழு உலகையும் மறந்து, தூரத்தில் மின்னும் ஆற்றையும், பச்சை நிறக்கூரைகளையும், புறா மாடத்திலிருந்து சிறகடிக்கும் பறவைகளையும்,, அந்தி நேரப் பொன்னொளியையும் கண்ணுற்றான்.
சர்சை நோக்கிச் சென்றவனுக்கு சரக்குப் பொதிகளின் அதிகாரி கூச்சலிட்டு ஆணையிடும் ஒலி கேட்டபோது, எக்கணத்திலும் வேலியின் பின்புறமிருந்து ஒரு குதிரை வீரன் தோன்றி தேநீர் விருந்துக்கு அதிகாரிகளை அழைப்பான் என எதிபார்த்தான். ஆனால், சரக்குப் பொதி அதிகாரி தன் கூச்சல் ஆணைகளை முடித்துவிட்டான். அதிகாரிகளும் கிராமத்திற்குத் திரும்பினர். எந்தக் குதிரை வீரனும் வரவில்லை.
”நாம் திரும்பி வந்துவிட்டோம் என குடியானவர்களிடமிருந்து அறியும் ராபெக், நம்மை விருந்துக்கு அழைப்பார்.” என ரியபோவிட்ச் மிக நம்பினான். தன் குடிலுக்குத் திரும்பியவனுக்கு, ஏன் தன் தோழர்கள் மெழுகுவர்த்தியைக் கொளுத்தவில்லையென்பதும், பணியாட்கள் ஏன் சுடுநீர் சமோவாரைத் தயாராக்கவில்லையென்பதும் புரியவில்லை.
வலி மிகுந்த வேதனை அவனை ஆட்கொண்டது. படுக்கையில் படுத்தான். உடனே எழுந்து குதிரை வீரனை எதிர்பார்த்து நோக்கினான். ஆனால் ஒருவனும் தென்படவில்லை. மறுபடியும் படுத்தான். பின் மீண்டும் எழுந்தான். இம்முறை சற்றும் அமைதியின்றி தெருவிலிறங்கியவன், சர்ச்சை நோக்கி நடக்க ஆரம்பித்தான். சர்ச் சதுக்கம் இருண்டும் ஆளரவமற்றுமிருந்தது. குன்றின் மீது மூன்று வீரர்கள் காவலிருந்தனர். அவனைக் கண்டவுடன் அவர்கள் விறைத்து அவனுக்கு சல்யூட் அடித்தனர். மறு சல்யூட் அடித்தவன், தான் நன்கறிந்த பாதையில் இறங்க ஆரம்பித்தான்.
ஆற்றைத் தாண்டிய ஊதா வானத்தில் நிலவு மெல்ல எழ ஆரம்பித்திருந்தது. இரு குடியானவப் பெண்கள் சளசளத்தபடியே முட்டைக்கோசு இலைகளை வீட்டுப் பாத்தியிலிருந்து பறித்துக்கொண்டிருந்தனர். அவர்களின் பின் அவர்களது குடிசைகள் வானத்தை நோக்கிக் கருத்து எழுந்தன. ஆற்றங்கரைகளும் மே மாதத்தைப் போன்றே தோன்றின. இவற்றிலிருந்து விடுபட்டதாகத் தோன்றியது, முன் கேட்ட நைட்டிங்கேல் பறவையின் ஒலியும், பாப்ளார் மற்றும் இளம்புல்லின் மணமுமே.
வான் ரேபக்கின் தோட்டத்தை அடைந்தவுடன் கதவின் வழியே உற்று நோக்கினான்.நிசப்தமும்,இருளும் நிறைந்திருந்தது. வெள்ளை பிர்ச் மரங்களையும், ஆங்காங்கு தோன்றி மறைந்த பாதையையும் தவிர முழுத்தோட்டமும் கருத்த இருளில் அமிழ்ந்திருந்தது. ரியபோவிட்ச், காதுகளையும், கண்களையும் குவித்து கூர்ந்து கவனித்தான். ஒரு கால் மணி நேரம் அங்குமிங்கும் சுற்றியவன், எவ்வித ஒலியையோ, ஒளியையோ அறியாததால் தயக்கத்துடன் அவ்வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
கீழிறங்கி ஆற்றுக்குச் சென்றான். ஜெனரலின் குளியலறை அவன் முன் தோண்றியது. பாலத்தின் கைப்பிடியில் வெள்ளை நிறத்துண்டுகள் காய்ந்துகொண்டிருந்தன. பாலத்தின் மீதேறி அசைவற்று நின்றான். தொங்கும் ஒரு துண்டை எக்காரணமுமின்றித் தொட்டுப் பார்த்தான். அது சற்றே ஈரத்துடனும், குளிர்ந்துமிருந்தது.அக் குளியலறையின் சாரங்களைப் பொருளற்ற முணுமுணுப்புடன் தொட்டு மிக வேகமாக ஓடும் ஆற்றைக் குனிந்து நோக்கினான். அதன் இடது கரையருகில் செந்நிற நிலவு பிரதிபலித்தது. நீரலைகள் அதை நீட்டவும் இரு துண்டுகளாக வெட்டவும் செய்தன. மரப்பட்டைகளும் ஒடிந்த குச்சிகளும் அதை அடித்துச் சென்றுவிடப்போவது போலவும் தோன்றியது.
“என்னவொரு முட்டாள்த்தனம்! என்னவொரு முட்டாள்த்தனம்!” என நீரலைகளைக் கண்ட ரியபோவிட்ச் எண்ணினான். “இவை எல்லாமே எவ்வளவு முட்டாள்த்தனமானவை?”
தற்போது நம்பிக்கை சிதைந்தவனுக்கு, அந்த முத்ததின் வரலாறு, அவனது பொறுமையின்மை, இலக்கற்ற ஆர்வம், ஏமாற்றம் என அனைத்தும் நன்கு தெளிவாகியது. ஜெனரலின் குதிரைக்காரன் வராததோ, வேறு யாரையோ நினைத்து தன்னை முத்தமிட்ட அப்பெண்ணோ அவனுக்கு வித்தியாசமாகப்படவில்லை. மாறாக, அவளை அவன் மறுபடி கண்டால்தான் அவனுக்கு வித்தியாசமாகத் தோன்றும்.
ஏன், எதற்காக என்ற ஒரு காரணமுமின்றி ஆற்றுநீர் அவனை வேகமாகக் கடந்து சென்றது. கடந்த மே மாதத்திலும் அது வேகமாகவே பாய்ந்தது. பாய்ந்த ஆறு, மற்றொரு பெரும் ஆற்றுடன் கலந்தது, பின், கடலில். பின் நீராவியாக மேலெழுந்து மழைத்துளிகளாய் மறுபடி மண்ணில் வீழ்ந்தது. அந்த மே மாதத்தின் நீரே தற்போது ரியபோவிட்சின் கண்கள் முன் பாய்ந்துகொண்டிருப்பதாகவும் இருக்கலாம். ஆனால் எதற்காக, ஏன்?
ரியபோவிட்சுக்கு இவ்வுலகமும், வாழ்வும் ஒரு விவரிக்கவியலாத, இலக்கற்ற மாயையாகத் தோன்றியது. நீரொழுக்கிலிருந்து தலையைத் தூக்கி வானத்தைப் நோக்கியவன், விதி எப்படி ஒரு பெண்ணெனும் உருவில் வந்து தன்னை அணைத்தது என்பதை நினைத்துப் பார்த்தான். தன் கோடைக் கற்பனைகளும், அதன் காட்சிகளும், மொத்ததில் அவனது வாழ்வும் எவ்வளவு எளிமையானதும் நிறமற்று வறண்டதுமென யோசித்தான்.
அவன் தன் குடிலுக்குத் திரும்பியபோது அவனது தோழர்கள் ஒருவரையும் காணவில்லை. அவனது பணியாள், அவர்கள் எல்லோரும் “ஜெனரல் ஃபோன்ராப்கின்” -னின் குதிரை வீரன் வந்து அவர்களை விருந்துக்கு அழைத்ததின் பேரில் சென்றுவிட்டதாகக் கூறினான். ஒர் கணம் ரியபோவிட்சின் மனம் மகிழ்ச்சியில் துள்ளியது. உடனே அம்மகிழ்ச்சி அணைந்தது. படுக்கையில் படுத்தவன், கோபத்தில் தன் கொடிய விதியைத் தானே சபிப்பதுபோல் அந்த விருந்தழைப்பை நிராகரித்தான்.
000
*கோன்யாக் – ஃப்ரெஞ்ச் பிராந்தி
**யூனோஸ்னி – காயம் பட்டோ, மாற்றலாலோ விரைவில் முண்ணனிப்படையிலிருந்து பாசறைக்கு அகற்றப்படவிருப்பவரைக் குறிப்பிடும் நையாண்டிச்சொல்.
*** டான் உவான் – ஸ்பானியப் பெண்பித்தன் கதாபாத்திரம்.

கே.வி. கோவர்தனன்
அமெரிக்காவின் கனெக்டிகட் மாநிலத்தில் தற்சமயம் வசித்து வருகிறார். இந்திய, உலக இலக்கியம், மற்றும் சினிமா ஆகியவற்றில் ஆர்வம் கொண்டவர். இவரது கட்டுரைகள் மற்றும் மொழியாக்கங்கள் பல்வேறு இதழ்களில் வெளியாகியுள்ளன.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
