
வெளிச்சத்தின் மிதவை
ஏக்கத்திற்கு அருகில் மகிழ்ச்சி
கணிணியின் நிரலுக்கு அருகே காதல்
விளம்பரத்துக்கு நடுவே பிரார்த்தனை
வானிலைக்கு அடுத்தாக
ஒரு அரசியல் அபத்தம்.
தேவையற்ற செய்திகளின் இடையே பிறப்பு.
சமையல் குறிப்புகளுக்கு பக்கத்தில் போர்.
தன் இருக்கையை தேடிக்கொண்டிருக்கும்
ஒவ்வொரு திரையும்
தானே உலகின் மையம்
என நம்மை நம்ப வைக்கிறது.
ஒவ்வொரு மையமும்
அடுத்த கணமே
இன்னொரு திரைக்குள்
கரைந்து மறைகிறது.
அன்றொரு காலத்தில்
சமரசமற்று நீண்ட வரிகள்
நாட்களை கடந்து நடந்தன
பாலைவனங்களைக் கடந்தன.
மடாலயங்களின் மெளனத்திற்குள் நுழைந்தன.
ராஜியங்களின் ஆயுளைவிட
நீண்டு ஓடிய நதிகளின் குரலை கேட்டன.
நரகத்தின் அடிவரை
இறங்கிச் சென்றன.
இன்று அடுத்த விரல் நகர்வுக்குள்
அதன் இதயம் பதறித் துடிக்கிறது.
இன்னொருவரின் உள்ளங்கைக்குள்
மறைந்திருக்கும் அவசரத்திற்கென
ஒதுங்கி வழிவிடுகிறது.
எல்லா தலைமுறைக்கும்
ஒரு மலையுச்சி கிடைப்பதில்லை.
சில காலங்கள்
புரட்சிகளை அளிக்கின்றன.
சில சிறைச்சாலையையோ
ஒரு தீர்க்கதரிசனத்தையோ
ஒரு வேதத்தையோ
அல்லது பஞ்சத்தையோ.
சில காலங்கள்
மூதாதைகளின் எடைகளை
விசிறி எறிந்த
வெற்றுக்கைகளை விரிக்கின்றன.
சிலர் கைகளில் அளிக்கப்பட்டதோ
ஒரு ஒளிரும் திரை.
விடியலுக்கு முன்பே
அது விழித்துக்கொள்கிறது.
அதன் வெளிச்சத்தில்
இன்னொரு மனிதனின் துயரம்
மூன்று வரிகளாகச் சுருங்குகிறது.
ஒரு வாழ்நாளின் வெற்றி
ஒரு எளிய இமோஜியாகி இளிக்கிறது.
தூர தேசத்தில் துயருற்ற முகம்
அந்நிய நினைவுச்சின்னத்தின்
செயற்கையின் முன்
ஒரு சுயபடமாக சுருங்கி உறைகிறது.
ஒரு மரணம்
யாரோ ஒருவர் வந்து
‘விருப்பம்’ என்று தொடும் வரை
அறிவிக்கப்படாமல்
அமைதியாக காத்திருக்கிறது.
சில நாழிகைகள் தோன்றுகின்றன.
சில மறைகின்றன.
களைத்துச் சோர்ந்த கண்களின் உள்ளே
அழிந்த ஒரு கனவைப் போல
எஞ்சி மங்கி மயங்கும்
ஒரு மெல்லிய பிம்பம்.
விமான பயணத்தில்
அடுத்த இருக்கையில்
அறிமுகமில்லாத அழகி ஒருத்தி
என் தோள் அருகில் உறங்க,
நான் நேசிப்பவள்
மூன்று கண்டங்களுக்கு அப்பால்
தனிமையில் விழித்திருக்கிறாள்.
தூரம் வரைபடங்களால் அளக்கப்படுவதில்லை.
தனிமை இப்போது
இணைய வேகத்தையும் கோருகிறது.
அந்த செய்தியை அன்று கேட்ட சமயம்
அந்த நொடியின் எடையை தாங்கக்கூடியது
அந்த நாடாகவும் இல்லை
எந்த மதமாகவும் இல்லை
ஒரு கொள்கையாகவும் இல்லை
ஒரு கவிதையாகவும் கூட இல்லை.
தூரத்து கிரகத்தின்
உயிரினம் ஒன்று
தனக்குள் தன் இதயத் துடிப்பை
கேட்டு விடும் அளவுக்கு
உரத்த ஒரு மெளனம்.
மூச்சை நிறுத்த மறுக்கும்
விழைவைப்போல
மனதின் எல்லாத் திசைகளிலும்
திறக்கும் சாளரங்களை
ஒரே கணத்தில்
ஒளியால் நிரப்பக்கூடிய
ஒரு வரியை நோக்கி
இடைவிடாமல்
கொப்பளித்து பெருகிக்கொண்டிருக்கும்
ஓயாத இரைச்சல்.
நான் நினைவுச் சின்னம் ஒன்றையும்
எழுப்ப விரும்பவில்லை.
பிரகடனம் ஒன்றையும்
எழுத விரும்பவில்லை.
என் மலையுச்சியில் அமர்ந்திருப்பது
நாம் அறியாத மொழியில் பிதற்றும்
வலசைக்கு வந்த ஒரு பறவை.
இந்த மனநிலையை
இத்தகைய சூழலை
அதற்கு காரணமான தற்செயல்களை
எந்த எந்த வடிவில்
எந்த மொழியில்
எழுதி உனக்கு அனுப்புவேன்?
இப்போது தேவைப்படுவது –
நம்மிடமிருந்து நம்மை நாமே விடுவித்து
ஓடிக்கொண்டிருக்கும் வழியில்
நாம் சிதறவிட்ட
அனைத்து அசைகளையும்,
அனைத்து பெயர்களையும்,
அனைத்து முகங்களையும்,
அனைத்து ஆசைகளையும்,
மீண்டும் அழைத்துவரும்
வலிமை கொண்ட ஒரு குரலோ?
காலம் என்பது
நம்மை விட்டு
எப்போதும் சற்றே பிசகி நிற்பதோ?
கெட்ட செய்தி எதுவும்
வந்து சேராத ஒரு மாலை.
இரயில் நிலையத்திற்குள்
ரயிலுக்கும் சற்று முன்னதாக நுழையும்
மழையின் மணம்.
கோயில் மதிலில்
தன் சோர்வை சாய்த்திருக்கும்
ஒரு மிதிவண்டி.
மஞ்சளில் தோய்ந்த
மூன்று அரிசியும் கூட இல்லாமல்
ஒரு அட்சதைப்போல
குழந்தையின் உச்சந்தலையைத் தொடும்
அறிமுகமில்லாத மூதாட்டியின் கை.
தவறுதலாக எழுந்து விட்ட
ஒரு எண்ணத்தைப்போல
பல்பொருள் அங்காடியின் வாசலில்
நேற்றின் வாசனையை
விட்டுச் சென்றிருக்கும்
ஒரு ஒற்றை சிறு மலர்.
ஒரு அந்நிய தேசத்து மங்கையின் புன்னகை.
நோயுற்ற ஒரு முதியவனின் கிலேசம்.
நினைவிலிருந்து நழுவிப்போன
ஒரு பழமொழி.
விரிசல் தாங்கிய
ஒரு பழைய வெண்கல பாத்திரம்.
இரவின் கைகளில்
தன்னை ஒப்படைக்கும் முன்
மெதுவாக தன் மூக்குக் கண்ணாடியை
கழற்றி வைக்கும்
முதிய ஆசிரியராகி வரும் மாலை.
நாள் முழுதும்
தன்மீது படிந்த தூசுகளை
மெதுவாக துடைத்துக்கொண்டிருக்கிறது காற்று.
செல்ல வேண்டிய ஒரு கூடுகையை
மறந்து விட்டதைப்போல
நகராமல் நிற்கின்றன மரங்கள்.
ஒன்றன்பின் ஒன்றாக
தங்கள் குரல்களை
கிளைகளில் மடித்துவைத்துவிட்டு
கூடுகளுக்கு திரும்புகின்றன பறவைகள்.
வீடு திரும்பும் காளையின்
கழுத்துமணியில்
அன்று காலை முதல்
சொல்லாமல் விட்ட செய்தி ஒன்று
ஓங்கி ஒலிக்கிறது.
தூரம் தன் அளவுகளை மறந்துவிட்டது
என் வாகனம் நிற்க மறுக்கிறது.
ஒரு சாக்லேட் துண்டு
பசியை ஒத்திப்போடுகிறது.
ஒரு சிட்டி திருநீறு
நெற்றியில் நிலையாமையின் குறியீடாகி
பிரபஞ்சத்தின் ஆசியை
தூசியாக்கி தடவுகிறது.
சிரிப்பின் ஒரு விள்ளல்
உடல் வலியுடன் நடத்திக்கொண்டிருக்கும்
விவாதத்தை
சற்று நிறுத்திவைக்கிறது.
தூக்கம் வருகிறது.
காலை வருகிறது.
பிறந்த வீட்டிற்கு செல்லும் வழியை
ஒருபோதும் மறக்காத இயலாத
வாரிசைப் போல,
துயரம் மீண்டும் வந்து
வாசல் நிற்கையில்,
நமது மொழி
மெல்ல தன் நறுமணத்தை
இழக்க ஆரம்பிக்கும்போது,
கோடரித் தைலத்தைப்போல
வரும் ஒரு வரி
நிவாரணத்திற்கு முன்பாகவே
மணத்தை நிரப்பி
நாசிகள் வழிவிட
வாதையை
தற்காலிகமாக ரத்து செய்கிறது.
புறக்கணிக்கப்பட்ட ஒரு ஆன்மா
காத்திருத்தலின் இறுதியில்
தொலைக்காட்சி தன்
அலைவரிசை இழந்தபின் எழும்
அந்த வெற்றொலியை போல
ஒலிக்கத் தொடங்கும் முன்,
பார்வையற்ற மனிதரைப்போல
மறதியின் விரலை
மென்மையாக பற்றி
நம்மை வெளியேற்றி
அழைத்துச் செல்கிறது.
மொழி தன் ஆழ்ந்த எதிரொலியை
இன்னும் நினைவு விலகாத
நரம்புகளில் கேட்கிறது.
ஒருவேளை
இந்த உலகம்
இவ்வளவு சிறிய கருணைகளால் மட்டுமே
இன்னும் சிதறாமல் தாங்கி நிலை பெறுகிறதோ?
வரிகள் ஒரு மயக்க மருந்தாக மாறக் கூடுமோ?
மருந்து நோயாளியை விட்டுப் போன பிறகும்
காயத்தின் அருகில் விழித்திருக்குமோ?
வரலாற்றின் உடைந்த எலும்புகளை
சிறு கருணைகள் ஒட்டிவைக்க கூடுமோ?
மீட்சிகளுடன்
சிறிய இனிமைகளையும் சேகரித்து
வரைபடங்கள் இன்றி
நீரைத் தேடிச் செல்லும்
வேர்களின் நகர்வு போல
மொழி தன் கால்களை
மீண்டும் நினைவுகூரும் வரை
நிறுத்தாமல் நடத்தி கூட்டிச்செல்வோம்.
மனித ஆன்மாவின்
திறந்துகிடக்கும்
எல்லாச் சாளரங்களையும்
தன்னுள் திறந்துவைக்கக்கூடிய
சில வரிகளை நோக்கி.
அவை
இந்த நூற்றாண்டைக் குணப்படுத்தாது.
அதன் சிக்கல்களுக்கு அர்த்தம் சொல்லாது.
சரிந்து விழும் ஒருவனை
தன் தோளில் சுமந்து மீட்டெடுக்காது.
அவனை காப்பாற்றாது.
அவனது இருளை
முழுவதுமாக அது விழுங்காது.
அவனுக்குப் பதிலாக
அவன் வாழ்க்கையை
வாழவும் முயலாது.
இருள் அடரும் வேளையில்,
திசைகள் அனைத்தும்
ஒன்றாய் முயங்கி
தாயக்கட்டை போல முன் நிற்கையில்,
பிரபஞ்சத்தின் தூசியை ஒத்த
ஒரு மின்மினிப் பூச்சியாக அது மாறும்.
இருளை வெல்ல போதாது
என்பதை அறிந்திருந்தும்
அந்த ஒரு துளி வெளிச்சத்தை
தயக்கமின்றி சிதறவிடும்.
வழி தெரியாமல்,
தன் சிந்தனைகளின் தீவுக்குள்
தவித்து திரிந்து
அடுத்த அடியில்
கவனிக்காமல் மிதிக்கப்போகும்
ஒரு கல்லின் கூரிய ஒரு நுனியையாவது
அவனுக்கு
காட்டிக்கொடுக்கும்.
அவனருகில் வந்து
பெரிய வார்த்தைகள் பேசாது.
தன்னை ஒரு மீட்பனாக அறிவிக்காது.
அடுத்த அடியை
பாதுகாக்கும்படி
அவன் வலது தோள்பட்டைக்கு அருகில்
மெளனமாக மிதந்து கொண்டிருக்கும்
அவ்வளவுதான்.
சில சமயங்களில்
சிலருக்கு தேவைப்படுவதும்
நம்மால்
கையளிக்க முடிவதும் கூட
அவ்வளவுதான்.
000

வேணு தயாநிதி
வேணு தயாநிதி இலக்கியத்திலும், இசையிலும் அதிகம் நாட்டம் கொண்டவர். தற்சமயம் அமெரிக்காவில் வசித்துவருகிறார். புற்றுநோய் மூலக்கூறு உயிரியலில் ஆராய்ச்சியில் நிபுணத்துவம் கொண்டவர்
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
