1997ஆம் ஆண்டு. 11ஆம் வகுப்பு மாணவி நான். அதி தீவிரங்களின் காலம் அது. எனக்குப் பிடித்த ஜேர்மன் நாளிதழ் கொண்டு உறைபோடப்பட்ட ‘Strictly Personal’ என்று முகப்பிலேயே என் கைப்பட எழுதிய நாட்குறிப்பு. இன்று, 23 வருடங்கள் கழித்து, அதனைத் தொட்டுக் கையில் எடுக்கும் இந்த நொடி, எனது விரல்கள் விரல்களாகவே இல்லை. மேலெங்கும் சிறகுகள். விழி தொடும் நிலமெல்லாம் விரிந்த வானம். மழையென்றால் ஒதுங்க, இலைகள் போர்த்திக் கிளைகள் நிறைந்த மரங்கள். விதைகள் பொதிந்த காடு. நீர் தளும்பும் குளங்கள். பறப்பதன்றி வேறேதும் அறியாப் பொழுதுகள்.
புரட்டுகிறேன். இலைச்சருகுகளும், தனியிறகுகளும் செருகப்பட்ட பக்கங்கள். வாரத்தின் இரண்டு நாட்கள் மட்டும் எப்போதும் எழுதி நிறைந்து, எழுதப் போதாமல் போயின. இன்னும் நன்றாக நினைவிருக்கின்றது அந்த நாள், அதன் கால நிலை, என் மனதின் நிலை. எல்லாமே நேற்றின் நொடிபோல. இன்றின் இமைப்பொழுது போல. புதன்கிழமைகளுக்கும், வெள்ளிக்கிழமைகளுக்கும் நடுவே உயிர் அசைந்தது. வாரத்தின் அனைத்து நாட்களும் புதனாக, வெள்ளியாக மாறாதா? பாடங்கள் எல்லாம் ‘அந்த ஒரு’ மொழியிலேயே இருக்கக் கூடாதா?
இது பிதற்றல் அல்ல. இவையெல்லாம் ஒரு மொழி செய்த மாயம். மொழிகளில் எனக்குப் பாகுபாடு கிடையாது. ஒவ்வொரு மொழியும் ஒவ்வொரு வாழ்வுக்குள் எமைக் கொண்டுசென்று வாழ்ந்திட வைக்கின்றன. ஆனால், ஸ்பானிஷ் மொழி ஒரு விதிவிலக்கு. எனக்கது என் மனதின் வீடு. வேறு மொழிகளில் தீராக் காதல் கொண்டோர் என்னை சற்று மன்னிக்க. வெறும் வார்த்தைகள் பின்னிக்கொண்ட மொழியல்ல அது. விறுக்கென்று தெறிக்கும் வீரம், தேன் தடவிப் பின் காயும் காதல், சர்க்கரைத் துணுக்கையெனத் தித்திக்கும் தவிப்பு, நள்ளிரவில் நெருக்கும் பெருந்துயர், நூற்றாண்டுத் தனிமை, கசக்காத காத்திருப்பு எல்லாம் அந்த மொழிக்குச் சொந்தம். மந்திரித்து விட்டது போல அலைந்து திரிந்தேன். மனமெல்லாம் அட்லாண்டிக் மாகடல் தாண்டி மெக்சிகோவிலும், கொலம்பியாவிலும், சிலேயிலும் மயங்கிக் கிடந்தது.
ஸ்பானிஷ் மொழி மாயம் செய்தது என்று நான் சொன்னால், Don Quixote, La Casa de Bernada Alba, El habitante y su esperanza, Cien años de soledad, El amor en los tiempos de colera, Las cuidad y los perros, La casa verde, De amor y de sombra போன்ற செவ்விலக்கியங்களுக்குள் வாழ்ந்தவர்களுக்கு இது பேரதிர்ச்சி இல்லை. Cervantes, Manuel José Quintana, Federico García Llorca, Simón Bolívar, Jorge Luis Borges, Pablo Neruda, Octavio Paz, Frida Kahlo, Gabriel Garcia Marquez, Mario Vargas Llosa, Isabel Allende, போன்ற மகத்தான ஆளுமைகளில் மையல் கொண்டவர்களும் என்னைப் பார்த்து புருவம் உயர்த்த அவசியம் இல்லை. சரி, அவற்றையெல்லாம் விடுவோமே. Bolero இசையில் கசியும் துயரை உணர்ந்திருந்தால், Tango நடனத்தில் மிக உள்ளே தீயாய் எரிந்திருந்தால் நான் சொல்வது புரியும். அல்லது, ஹலபேனோஸ் (Jalapeños) என்ற பெயர் கொண்ட ஒரு மிளகாய், அதனை மட்டும் ருசித்திருந்தால் போதும். இன்னும் இன்னும் இந்த மொழியின் தீவிரம் தெரியும். எதுவுமே இல்லையா? ஒரு புதன் அல்லது வெள்ளியை என்னோடு வாழ்ந்து பார்த்திருக்கவேண்டும். எனது ஸ்பானிஷ் ஆசிரியையிடம், அவர் கற்பிக்கும் ஒரு நொடி போதும். அல்லது, வெறுமனே அவர் பேசுவதை, பார்ப்பதை, அசைவதைப் பார்த்திருக்க வேண்டும்! அட, அழகல்ல அது, பேராளுமை, எங்கும் காணா தனித்துவம், கறுத்த கண்ணாடிக்குள் கம்பீரமான காந்தம் போன்ற பார்வையில் அடுத்த வார்த்தை வராது நின்றிருக்கிறேன். பிறகு இறுக்கமான, பிடிவாதமான உதடுகள் மெல்ல விரிந்த போது, நிலம் நழுவி, உலகமே மறந்து போகக் கண்டேன். பொழுதுகளை Instituto Ibero-Americano எனும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான நூலகத்தில் வாசித்துத் தீர்த்தேன்.
இவ்வாறான ஒரு ஆசிரியை, ஸ்பானிஷ் மொழியில், Jorge Luis Borges பற்றி முதல் முதலில் அறிமுகம் செய்த அந்த நாள் – வெள்ளிக்கிழமை. அது ஒரு மழை நாள். இலையுதிர்காலம். செந்தவிட்டு நிறப் பூக்கள் சொரிந்த படி இருந்தன. சற்று இருண்டிருந்த வகுப்பறைக்குள் போர்ஹெஸின் வாழ்வும் கவிதைகளும் நிறைந்தன.
“மரணம் என்பது வாழ்ந்த வாழ்வு. வாழ்வு என்பது வரவிருக்கும் மரணம்”. இந்த வரிகளில் இருந்து இன்னும் நான் மீண்டு வரவில்லை. ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு உலகின் கதவுகளைத் திறந்து விட்டன. இல்லை, அவ்வாறு சொல்லி நிறுத்திடலாகாது. ஒவ்வொரு வார்த்தையும் பிரபஞ்சத்தையே தனக்குள் அடக்கிய ஒரு மாயக்குளிசை போல. இனி என்ன வேண்டும், கன்னமிரண்டையும் கைகளால் அணைத்தபடி, குழந்தையொன்று கதை கேட்பது போல, போர்ஹெஸ் எனும் பெரும் உலகினுள் நான் விரும்பித் தொலைந்தேன்.
24 ஆகஸ்ட் 1899 ஆம் ஆண்டு, ஆர்ஜென்டினாவின் புஏனோஸ் ஐரஸ் (Buenos Aires) நகரில், கல்வியறிவு மிகுந்த, மத்திய வர்க்க குடும்பத்தினுள் பிறந்தவர் போர்ஹெஸ். ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள் கொண்ட வீட்டில், ஆங்கிலமும் ஸ்பானிஷ் மொழியுமென இரண்டு மொழிகளிலும் வளர்க்கப்பட்டார். ஒன்பதாவது வயதில் Oscar Wilde இன் The Happy Prince ஐ ஆங்கிலத்தில் இருந்து ஸ்பானிஷ் மொழிக்கு மொழிபெயர்த்தது, பன்னிரண்டாவது வயதில் ஷேக்ஸ்பியரின் நூல்களை வாசித்தது, ஐரோப்பாவிற்கு புலம் பெயர்ந்து, Grecia எனும் இதழில் முதல் கவிதை “Hymn to the Sea” Walt Whitman இன் சாயல் கொண்டு வெளியானது, மீண்டும் ஆர்ஜென்டினாவுக்கு திரும்பி, 1930களில் Sur எனும் இலக்கிய இதழை நண்பர்களுடன் இணைந்து உருவாக்கிய அனைத்துமே போர்ஹெஸின் வார்த்தைகளில் சொன்னால்: “என்னைச் சுற்றி உள்ளவர்கள் எல்லாம் படைவீரராகச் செயல்படும் போது, நானோ எழுத்துக்களின் மனிதனானேன்“.
அந்த எழுத்துக்களின் மனிதனின், எனக்குப் பிடித்த வரிகளென சிலவற்றை அன்று எனது நாட்குறிப்பில் குறித்துக்கொண்டேன்:
“சில வீழ்ச்சிகள் உண்டு. அவை வெற்றியை விட அதி மேன்மையானவை ”
“உனது எதிரிகளை நீ மிகக் கவனமாகத் தேர்ந்தெடுக்கவேண்டும். இல்லையெனில், இறுதியில் நீ அவர்களின் தோற்றம் பெற்றிடுவாய். ”
“உலகத்தில் உள்ள அனைத்துக் கண்ணாடிகளிலும் என்னைப் பார்த்தேன். எதுவும் என்னைக் காட்டவில்லை”
“நான் என்பது – நான் வாசித்த அனைத்து எழுத்தாளர்களும், சந்தித்த மனிதர்களும், நேசித்த பெண்களும், நடந்த நகரங்களும் ஆகும் ”
“நேசம் கொள்வதென்பது, நேசம்கொண்டவரைத் தனித்துவமென உணர்த்துவது”
“உன்னோடிருப்பதும், உன்னோடில்லாமல் இருப்பதும் தான் எனக்கு ஒரே வழி, காலத்தை அளந்துகொள்ள”
“‘வாசித்தல்’, ‘அன்பு செய்தல்’, ‘கனவு காணுதல்’ போன்ற வினைச்சொற்கள் என்றுமே ஏவல்வினையாகி விடக்கூடாது”
“கவிஞர்களும் கண்பார்வையற்றவர்கள் போலத் தான். இருளில் பார்க்கும் வரம் பெற்றவர்கள் ”
“சொர்க்கம் என்பது எனது கற்பனையில் ஒரு நூலகம் ”
“இலக்கியம் என்பது கைபட்டு இயக்கிய ஒரு கனவு ”
ஒவ்வொரு வரியிலும் அது சொல்லாத நெடுங்கதையுண்டு. போர்ஹெஸ் எளிதில் கடந்துவிடக் கூடிய கதை சொல்லி அல்ல. அவரின் கதைகள் தொலைவின் பழமையான கோவில்களிலும், அயலின் சாராயக் கொட்டில்களிலும் அமைந்திருந்த போதும், காணும் கனவுகளில் இருந்து எழுகின்றன. புலியும் வாளும் நிலவொளியில் தகதகத்தாலும், புராண நூலொன்றில் புலவரின் விரல்கள் பதிந்தாலும், வாழ்வின் விசித்திரங்கள் மீதும், அனுபவங்களின் நெகிழ்ச்சி மீதும், மனித மனதின் மெல்லிழைகள் மீதும் படிந்துகொள்கின்றது அந்த எழுத்து. படிந்ததை மெல்ல ஊதிவிட, நிஜத்துக்குள் நிஜமல்லாத மாயம் நிகழ்ந்துவிடும் அந்த நொடி மிக அற்புதமானது. ‘magical realism’ – போர்ஹெஸ் அறியாமலேயே அதனைத் தொடக்கிவைத்தார். “மனித வாழ்வென்பது வலிமை மிக்கது. மடிந்து, புதையுண்டு போகமுன், ஒரு கணநேரத்தோற்றத்தில் ஏதுமற்றதாகி விடுகின்றது. அவ்வளவும் தான்”
மொழியியல், புராண இலக்கியம், மற்றும் சமூகவியல் வரம்புகள் அனைத்தையும் மீறி உருவாகிய படைப்புகள் தான் போர்ஹெஸினுடையவை. இன்று, போர்ஹெஸ் இல்லாமல் ஆர்ஜென்டீன் (Argentine) இலக்கியம் என்பது இல்லை. இன்னும் ஒரு படி மேலாக, Mario Vargas Llosa கூறியது போல “Cervantes க்கு பின்னர் ஸ்பானிஷ் எழுத்தாளர்களில் மிக முக்கியமான எழுத்தாளராக போர்ஹெஸ் கருதப்படுகின்றார். நோபல் பரிசை அவருக்கு வழங்காது போனது Joyce, Proust மற்றும் Kafka போன்றோருக்கு இழைத்த பெரும் தவறைப் போன்றது.”
அவரின் மிக முக்கிய சிறுகதைத் தொகுப்பான Ficciones, 1944 ஆம் ஆண்டில் வெளிவந்த போதும், Labyrinths எனும் கவிதை மற்றும் கட்டுரைத்தொகுப்பு 1961 ஆம் ஆண்டு வெளியான பின்னரே ஆங்கில இலக்கிய உலகம் அவரைக் கண்டு கொள்ளத் தொடங்கியது. அதே ஆண்டில், Samuel Beckett உடன் இணைந்து The Formentor Prize வரை அவரைக் கொண்டு சென்றது. பின்னர் தொடர் மொழிபெயர்ப்புகள் நிகழ, Norman Thomas di Giovanni இன் மொழிபெயர்ப்பில் A Personal Anthology (1967), The Aleph and Other Stories (1972) மற்றும் In Praise of Darkness (1974) உருவாகின. இவையெல்லாம் நிகழ்ந்த போது, “நான் தனித்திருந்தேன். கண்ணாடி ஏனோ எவரையும் காட்டவில்லை” என போர்ஹெஸ் பதிகின்றார்.
“யாரும் கழிவிரக்கம் அல்லது வசைகள் கொண்டு
இறைவன் எழுதிய உயரிய வாக்குமூலம் தனை வாசித்தல்
வேண்டாம்; அவர் அதி சிறந்த முரணுடன்
புத்தகங்களையும் இரவையும் எனக்குத் தந்துள்ளார்
ஒரே கணப்பொழுதில்.”
55 வயதில், ஆர்ஜென்டினாவின் தேசிய நூலகத்தின் தலைமைப் பொறுப்பினை போர்ஹெஸ் ஏற்றபோது, கண்பார்வையை முற்றிலும் இழந்திருந்தார். கனவுகளை வண்ணங்களில் கண்டவர், பின்னர் வண்ணங்களும் மெல்ல மறைய, ஒளியும் அசைவும் மட்டுமே எஞ்ச, 87 வயதில், அந்த அசைவும் ஒரு நாள் நின்றுபோனது. அவ்வளவும் தான் அந்த வாழ்வு. இல்லை, போர்ஹெஸின் எழுத்தில், இந்த நேர்காணலில் அது தொடர்கின்றது. வாழ்கின்றது.
இது, போர்ஹெஸ் இறப்பதற்கு ஒரு வருடம் முன்பு 1985 ஆம் ஆண்டில், அவருக்கு மிக நெருங்கிய தோழமையான Gloria López Lecube என்பவருக்கு வழங்கிய கடைசி வானொலி நேர்காணல். அதன் தலைப்பு ‘கடைசி நேர்காணல்’ (‘The Last Interview’). அதன் ‘கடைசி’ எனும் காவியத் தன்மையாலும், கேள்வி பதில்களின் நீரோட்டத்தாலும் முக்கியம் பெற்று, இன்று, இங்கு என்னைப் பகிரச்சொல்கின்றது. அவரின் படைப்புகள் சார்ந்த கேள்விகள் இல்லாத ஒரு நேர்காணல் இது. இருந்தும், வியக்கத்தக்க ஒரு மனிதனை, அத்தனை நேர்மையுடன் வெளிப்படும் ஓர் கலைஞனை இறுகக் கட்டியணைத்துக் கொள்ளச் செய்கின்றது இந்த நேர்காணல்.
கடலலைகளுடன் அதனைக் கேட்கக் கிடைக்கும் இந்தப் மாயப் பொழுது, செந்தவிட்டு நிறப் பூக்கள் சொரியும் இலையுதிர்காலம் அல்ல, கோடையின் அனல் காற்றின் கடைசி நாள் இது. என் மென்சிரிப்பை நீ உணர்கிறாயா? இந்த வரியை எழுதும் நொடி – இது ஒரு வெள்ளி என்றால் நீ நம்பித்தான் ஆகவேண்டும்!
எனது பிறப்பிடமான புஏனோஸ் ஐரஸ் இல் நான் கண்டுகொள்ளப் படாதவராகவே இருந்தேன். புஏனோஸ் ஐரஸ் மக்கள் பெரும் பகட்டு இறுமாப்புடையவர்கள். ஐரோப்பிய பதிப்பாசிரியர்களால் Formentor Prize எனக்கு வழங்கப்பட்ட போது தான் என் பக்கம் திரும்பினார்கள். திடீரென நான் இருப்பதைக் கண்டுகொண்டார்கள்
The Last Interview | La Isla FM Radio, Argentina | 1985
Gloria López Lecube: எழுத்து, வாசிப்பு. இவை தாண்டி வேறென்ன செய்வதில் உங்களுக்கு அதிக ஆர்வம்?
Borges: பயணம் செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும், ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு உணர்வுண்டு. அதனை உணர்ந்து, கற்பனை செய்து பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், அநேகமான நேரங்களில் அவை தெளிவற்று அமைந்துவிடுகின்றன. ஏனென்றால்..
Gloria López Lecube: உங்கள் பயணங்களில் உடனிருப்பவர் உங்களுக்கு அவற்றை விபரித்துக் காட்டுவாரா?
Borges: ஓம், María Kodama எனது பயணங்களில் என்னோடு உடனிருப்பவர். அவர் அனைத்தையும் எனக்கு விபரித்துக் காட்டுவார், நான் அவற்றை எனது கற்பனையில் விரிப்பேன். அது எப்போதும் ஒரு வித முழுமையற்ற தன்மையுடன் தான் இருக்கும்.
Gloria López Lecube: உங்கள் கற்பனை – அது வண்ணங்கள் கொண்டதா?
Borges: ஓம், எனது கனவுகளும் வழக்கமாக வண்ணங்களில்தான் அமைந்துவிடுகின்றன. ஆனால், வண்ணங்களில் கனவு காணும் போது, அந்த வண்ணங்கள் மலைப்பூட்டும் மினுமினுப்புடன் இருக்கின்றன. விழிக்கும் போது, ஏனோ, இந்த நொடியில் போல, ஒரு பனிப்புகார் சூழ உள்ளேன். சமயங்களில் அது பிரகாசமாகவும், நீலமாகவும், சாம்பலாகவும், வடிவங்கள் கரைந்தும் உள்ளன. இறுதியாக என்னுள் எஞ்சியது மஞ்சள் வண்ணம். The Gold of the Tigers எனும் ஒரு கவிதைத் தொகுப்பு. அதில் ஒரு கவிதையில், ‘நான் கண்ட முதல் வண்ணம் புலியின் மென்மயிரின் மஞ்சள்’ என அத்தனை தெளிவுடன் கூறி இருக்கிறேன். பல மணி நேரங்கள், மிருகக் காட்சிசாலையில் புலிகளை நோக்கியபடி இருந்திருக்கிறேன். அப்போது, பார்வை மெல்ல மங்கத்தொடங்க, என்னுள் எஞ்சிய ஒரேயொரு வண்ணம் மஞ்சள் தான். ஆனால், அதனையும் இழந்து நிற்கின்றேன் இப்போது. நான் இழந்த முதல் வண்ணங்கள் கருப்பும் சிகப்பும் தான். அதனால் என்றுமே நான் இருளில் வாழ நேரவில்லை. ஆரம்பத்தில் சற்றுக் கடினமாகத் தான் இருந்தது. பிறகு பச்சை, நீலம், மஞ்சள் வண்ணங்கள் எஞ்சின. பச்சையும், நீலமும் ஏனோ செந்தவிட்டு நிறத்தில் தேய்ந்து போயின. மஞ்சள் காணாமல் போனது. இப்போது எந்த வண்ணமும் இல்லை. ஒளியும் அசைவும் மட்டும் தான்.
Gloria López Lecube: கண்பார்வை இழந்தமை உங்களுக்கு வழங்கப்பெற்ற ஒரு கொடையெனவும், மனிதர்கள் உங்கள் மேல் அன்பு செலுத்த அது ஒரு காரணம் என்றும் ஒரு முறை கூறினீர்கள்.
Borges: ம்ம்ம். அவ்வாறு தான் நான் நினைக்கின்றேன், ஆனால்…
Gloria López Lecube: கண்பார்வையற்றது உங்களை எவ்வைகையிலும் கோபப்படுத்தவில்லையா போர்ஹெஸ்?
Borges: என்னை நம்புங்கள், கண்பார்வையற்றதன் நன்மைகள் மிகைப்படுத்தப்பட்டுள்ளன. என்னால் பார்க்க முடியுமெனில், வீட்டை விட்டு நான் என்றுமே போகாது, என்னைச் சூழ உள்ள நூல்கள் பலவற்றை வாசித்துத் தீர்ப்பேன். இப்போது அவை வெகு தூரத்தில் உள்ளன. ஐஸ்லாந்து போல. ஐஸ்லாந்துக்கு இரண்டு தடவைகள் சென்றிருக்கிறேன், ஆனால் என் புத்தகங்களை என்றுமே என்னால் அடைந்துவிட முடியாது. இருந்தும், அதே நேரம் வாசிக்க இயலவில்லை எனும் விடயம் என்னை மிகவும் கடமையுணர்வில் ஆழ்த்துகின்றது…
Gloria López Lecube: உலகத்துடன் இணைந்துகொள்வதற்கா?
Borges: இல்லை, உலகத்துடன் இணைந்து கொள்வதற்கல்ல. கனவு காண்பதற்கும், கற்பனை செய்வதற்கும். உலகத்தை நான் அறிந்துகொள்வது பெரும்பாலும் மனிதர்களூடாகத் தான்.
Gloria López Lecube: உங்களின் முகத்தோற்றம், உடல் அல்லது கைகள் எவ்வாறு இருக்கும் என்று நினைவிருக்கின்றதா?
Borges: இல்லை.
Gloria López Lecube: உங்களின் முகத்தை தொட்டுணர்ந்திருக்கிறீர்களா? உங்களின் விரல்களினூடாக?
Borges: நிச்சயமாக, சவரம் செய்ய முன்னரும் பின்னரும், ஆனால் அதிகமாகத் தொட்டதில்லை. யார் கண்டார், கண்ணாடிக்குள் இருந்து எவ்வகையான ஒரு வயதான மனிதன் என்னை உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறாரோ? நிச்சயமாக அவரை என்னால் பார்க்க இயலாது. அவரை என்னால் கண்ணாடியில் கண்டுகொள்ளவும் முடியாது. என்னிடம் கண்ணாடி இல்லையென்பது வேறு விடயம். கடைசியாக நான் என்னைப் பார்த்தது ஏறத்தாழ 1957 ஆம் ஆண்டு இருக்கும். நிறைய மாறி இருக்கிறேன் என அஞ்சுகிறேன். சுருக்கங்கள் நிறைந்த வெளி அது. அதில் எனக்கு எந்த வித சந்தேகமும் இல்லை.
Gloria López Lecube: ஆனால் சுருக்கங்கள், முதிர்ச்சியின் அறிகுறி, இல்லையா?
Borges: ஆம். உதாரணத்திற்கு, தவிட்டு நிற முடி கொண்டிருந்தேன் ஒரு காலம். இப்போது வழுக்கைத் தன்மை என்பதற்கு அப்பால் சென்றிருப்பேன் என்று நம்புகிறேன் [சிரித்தபடி].
Gloria López Lecube: இந்த சாலை வழியே நடந்து செல்கையில் எவ்வாறு உணர்கிறீர்கள்? நீங்கள் வெப்பத்தை அளக்கும் ஒரு கருவி போல. ஒரு வகையில் செவி வழி வெப்பத்தை அளப்பது போல இது, இல்லையா?
Borges: தோழமையால் சூழ்ந்திருக்கிறேன் நான், பரந்தமனம் கொண்ட, வார்த்தைகளுக்குள் அடங்காத தோழமைகள். மனிதர்களுக்கு என்னைப் பிடித்திருக்கின்றது. அது ஏன் என்று தெரியவில்லை. அதனை விளக்கிக் கூறவும் முடியாது. எனது நூல்களைப் பலர் வாசிக்கவில்லை. நான் ஒரு நினைவுச்சின்னமாக இருந்தபோதும், இந்தத் தோழமைகள் வியக்கத்தக்கவகையில் விசித்திரமானவை. 1961 ஆம் ஆண்டு அம்மாவுடன் Texas சென்றேன். அங்கு நான் சந்தித்த அனைவரும் என்மேல் உள்ளார்ந்த அக்கறை காட்டினார்கள். நான் மிகத் தடுமாறி அது ஏன் அவ்வாறு இருக்கின்றது என என்னையே கேட்டுக்கொண்டேன். அதற்கான பதில் எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை. அப்போது எனக்கு 62 வயது, நான் மிகவும் வயதாகி விட்டேன் என்று சொன்னார்கள். ஆனால் நான் என்னை அவ்வாறு உணரவில்லை. சரி அவ்வாறே வைத்துக்கொள்வோம், நான் ஒரு வயதானவர், 61 வயது கவிஞர், கண்பார்வையற்றவர் – இவையெல்லாம் என்னை ஒரு Milton போல அல்லது ஒரு Homer போல காட்டியது. ஆனால் நான் ஒரு தென் அமெரிக்கன், Texas போன்ற நகரங்களில் தென் அமெரிக்கனாக இருப்பது ஒரு வித கவர்ச்சியான விடயம். அவர்களுக்கு நான் ஒரு மெக்ஸிகன் போலவும்… இவையெல்லாம் என் கையில் எனக்கு சாதகமாக இருந்த பலமான நுழைவுச்சீட்டுகள். என் எழுத்து அதனுள் அடங்காது. ஏன் என்றால் எனது நூல்கள் இன்னும் மொழிபெயர்க்கப் படவில்லையே! எனவே, ஒரு வயதானவராக, கண்பார்வையற்றவராக, தென் அமெரிக்க கவிஞராக நான் மிகுந்த தன்னம்பிக்கையுடன் வெளிப்பட்டேன். ஆனால் எனது பிறப்பிடமான புஏனோஸ் ஐரஸ் இல் நான் கண்டுகொள்ளப் படாதவராகவே இருந்தேன். புஏனோஸ் ஐரஸ் மக்கள் பெரும் பகட்டிறுமாப்புடையவர்கள். ஐரோப்பிய பதிப்பாசிரியர்களால் Formentor Prize எனக்கு வழங்கப்பட்ட போது தான் என் பக்கம் திரும்பினார்கள். திடீரென நான் இருப்பதைக் கண்டுகொண்டார்கள். அதுவரை H. G. Wells இன் ‘கண்ணுக்குத் தெரியாத மனிதனாக’ (The Invisible Man) இருந்தேன். அது மிக வசதியாகவும் இருந்தது. ஆனால் ஒரு மின்வெட்டில் என்னைக் கண்டுகொள்ளத் தொடங்கினர்.
Gloria López Lecube: சரி, கண்டுகொள்ளத் தொடங்கிய போது எவ்வாறு இருந்தது? நீங்கள் கூச்ச சுபாவம் கொண்டவர் என்பதை இங்கு நான் கூறித்தான் ஆகவேண்டும், போர்ஹெஸ்!
Borges: காலப்போக்கில் எனது கூச்ச சுபாவம் இன்னும் முனைப்புடன் அதிகரித்தது. பொதுவில் பலர் முன் பேசும் போது எனக்குள் ஏற்படும் நடுக்கத்தைப் போல. முதல் முறை பேசிய போது இத்தனை நடுக்கம் இருக்கவில்லை. இப்போது நான் அனுபவசாலியே, நான் சொல்வது நடுக்கத்தில்.
Gloria López Lecube: உங்களுக்கு நடுக்கமா? ஒரு பெரும் கூட்டத்தின் முன் பேசும் போது எவ்வாறு உணர்கிறீர்கள்?
Borges: பதட்டமடைகின்றேன். ஆனால், எனது கண்பார்வையற்ற தன்மை ஒரு வகையில் எனக்குத் தற்பாதுகாப்புப் போலத் தான்: “யாருமே வரவில்லை, மண்டபம் வெறுமையாக உள்ளது” என்று எனது நண்பர்கள் கூறுவதுண்டு. இருந்தும், எனது நரம்பின் நடுக்கத்தைத் தணிக்கவே அதனைக் கூறுகின்றார்கள் என்பது எனக்குத் தெரியும். பின்னர் எழுந்து மண்டபத்தினுள் நுழையும் போது எழும் கைதட்டல் இருக்கின்றதே! எனது நண்பர்கள் மிகவும் தாராள மனசுக்காரர்கள், பொய் சொல்வதில். ஆனால், அந்தக் கைத்தட்டலில் மீண்டும் எனக்குள் அந்த நடுக்கம் தொடங்கும்.
Gloria López Lecube: ஆனால் நீங்கள் அத்தனை எளிதாக பேசுகிறீர்களே, போர்ஹெஸ்?
Borges: இல்லவே இல்லை. நம்புங்கள், அது அத்தனை கடினம். எழுதுவதே எனக்கு மிகக் கடினமான விடயமே!
Gloria López Lecube: சரி, மரணத்தை நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள்?
Borges: அட, மரணத்திற்காக நான் பொறுமையற்றுக் காத்திருக்கிறேன். அது நிகழும் என்றெனக்குச் சொல்லப்பட்டிருக்கின்றது. இருந்தும், மரணம் வராது போனாலும், நான் இறக்க மாட்டேன். Spinoza சொல்கின்றார் நாம் அனைவரும் இறவாத்தன்மை கொண்டுள்ளோம் என்று. சரிதான், ஆனால் தனி மனிதர்களாக அல்ல. அது தெய்வீகமான ஓர் இறவாத்தன்மை என்று தான் நான் நினைக்கின்றேன். எதனாலும் சற்று அச்சம் கொண்டாலும், நினைப்பது நிகழாவிடிலும், எனக்குள் நான் எண்ணுவதுண்டு: ஆர்ஜென்டின குடியரசு போன்ற ஒரு தொலைந்த நாட்டினைச் சேர்ந்த, ஒரு தென் அமெரிக்க எழுத்தாளனுக்கு 20 ஆம் நூற்றாண்டின் இறுதியில் என்னதான் நடந்துவிடப்போகின்றது என்று நான் ஏன் கவலைகொள்ளவேண்டும்? மரணம் எவ்வாறு இருக்கும் எனும் திகைப்பில் உள்ள ஒருவருக்கு, இது போன்ற கவலைகளுக்கு இடமே கிடையாது. மரணம் என்பது உடலோடு ஆன்மாவும் அழிவுறுதல். அதுவே சிறந்தது. அல்லது முற்றிலுமாக மறக்கப்படுவது.
Gloria López Lecube: Jorge Luis Borges அல்லாது வேறொருவராக இருந்திருக்கலாம் என்று ஒரு முறை நீங்கள் சொன்னீர்கள்….
Borges: ஓம், சிறு வயதில் நான் வாசித்த, Papini எழுதிய நூலில் இருந்து எடுத்தாளப்பட்ட வரி அது. El piloto ciego (கண்பார்வையிழந்த விமானி) எனும் நூலில் தனக்கு வேறெவருவராக ஆக வேண்டுமெனவும் ஆனால் தான் மட்டுமே அவ்வாறு நினைத்ததாகவும் அவர் கூறுகின்றார். எம் எல்லோருக்கும் அந்த ஆசை உண்டல்லவா?
Gloria López Lecube: சரி உங்களுக்கு? உங்களுக்கு யாராக ஆகவேண்டும் போர்ஹெஸ்?
Borges: [சற்றுத் தாமதமாக] இல்லை. ‘போர்ஹெஸ்’ ஆக இருப்பதில் இருந்து நான் இராஜினாமா பெறவேண்டும். வேறெந்த விதியையும் என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. எனக்கான ஒரே விதி, இலக்கியம் தான். Milton மற்றும் Coleridge இன் தன்வரலாற்றுக் குறிப்புகளைப் படிக்க நேர்ந்த போது, தாம் எழுத்தாளர்களாக வரப்போவதை முன்கூட்டியே அவர்கள் அறிந்திருந்திருந்தார்கள் என இருவரும் குறிப்பிடுகின்றனர்.
Gloria López Lecube: நீங்கள் எப்போது அவ்வாறு உணர்ந்தீர்கள்?
Borges: எப்போதும் நான் அதனை உணர்ந்ததுண்டு. ஒரு வேளை அது அப்பாவின் தாக்கமாக இருந்திருக்கலாம். அப்பாவின் நூலகத்தில் தான் நான் வளர்ந்தேன். என்றோ எனக்குத் தெரிந்திருந்தது, அது தான் எனது விதியென. புத்தகங்கள் சூழ, வாசித்தபடி. ஆனால் எனது எழுத்துக்கும் கூட அந்த சூழலே காரணம்.
Gloria López Lecube: உங்களின் கவிதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்த கவிதை எது? நீங்கள் நீங்களாகவே வெளிப்பட்ட கவிதை எது?
Borges: நான் நானாக வெளிப்பட்ட கவிதைகள் என் விருப்பத்திற்குரியவை அல்ல. எனக்குப் பிடித்த, Spinoza1 பற்றி நான் எழுதிய ஈரேழ்வரிப்பா (Sonnet) ஒன்று உண்டு. “யாரோ …“என்று ஆரம்பிக்கும் ஒரு வரி. இல்லை அது அல்ல. இன்னொரு வரி “மனிதன் தெய்வத்தை இருளில் உருவாக்குகிறான்” எனும் வரி. அந்த மனிதன் தான் Spinoza, அவன் தெய்வத்தை தோற்றுவிக்கிறான். அள்ள அள்ளக் குறையாத கருப்பொருட்கள் கொண்டு தனக்கேயான தெய்வத்தை. அதன் செயல்களும் முடிவற்று இருக்கின்றன. என்னைப் பற்றிய இரண்டு கவிதைகள் நினைவில் இருக்கின்றன. ஒன்று, Bartolomé Mitre எனும் படைப்பெருந்தலைவர் 1874 ஆம் ஆண்டு சரணடைந்த போது நிகழ்ந்த தாத்தாவின் மரணம் பற்றியது. தாத்தா தன்னைத் தானே சுட்டுக்கொன்றார். எனது அப்பா பிறந்தது 1874 ஆம் ஆண்டில். அதே ஆண்டில் தான் மிகப் பெரும் கவிஞர் Leopoldo Lugones என்பவரும் பிறந்தார்.
Gloria López Lecube: தனது இலக்கியத் தகைமையை ஏற்றுக்கொள்ளாத ஒரு புனிதர் அல்லது தொண்டர் போலத்தான் உங்களைப் பார்க்கிறேன். அற்பமான படைப்புகளுக்கு உங்களுக்கு விருதுகள் கிடைத்ததாகக் கூறினீர்கள்.
Borges: அது உண்மை தான்…
Gloria López Lecube: ஆனால் நீங்கள் அதனை விட மேல், போர்ஹெஸ். ஆர்ஜென்டின் இலக்கியத்திற்கு நீங்கள் செய்த அனைத்துமே…
Borges: அது மிகச் சிறிய பங்களிப்பு. நான் யாரிலும் பெரும் பாதிப்பு செலுத்தவில்லை. மாறாக, நான்தான் பல கடந்தகால படைப்பாளிகளுக்கு கடன் பட்டிருக்கிறேன்.
Gloria López Lecube: ஆனால், பெரும் பாதிப்பு செலுத்தவில்லை என்று உங்களால் எவ்வாறு கூறமுடியும்?
Borges: பாதிப்பு செலுத்தவில்லை தான். Groussac, Lugones, Capdevila, Fernández Moreno அனைவருக்கும் எந்த வித சந்தேகமும் இல்லாமல் பெரும் கடன்பட்டிருக்கிறேன். இவை எல்லாவற்றிற்கும் அப்பால், Almafuerte. ஆர்ஜென்டினா உருவாக்கிய மிகப் பெரும் மேதை அவர். “El misionero” எனும் படைப்பினை எழுதியவர். பத்திரிகை ஆசிரியரான Evaristo Carriego அதனை மனதில் இருந்து ஒப்புவிப்பார். கலப்படமற்ற, தூய இலக்கியத்துடனான எனது முதல் சந்திப்பு Carriego மூலம் ஒரு ஞாயிறு இரவு நிகழ்ந்தது. Carriego தனது வீட்டில் நின்றுகொண்டிருந்தபடி “El misionero” கவிதையை தனது குரலில் ஆரவாரமாக ஒப்புவித்தார். ஒரு வார்த்தை கூட புரியாது நின்றேன் நான். ஆனால் ஏதோ ஒரு புதுமையான விடயத்தை அறிந்துகொண்டதாக உணர்ந்தேன். அந்த புதுமை தான் கவிதை.
Gloria López Lecube: இப்போது நான் உங்களின் வீட்டில் அமைந்த நூலகத்தில் இருக்கிறேன் என்றால், எந்தக் கவிதையை என்னை வாசிக்கச் சொல்லி நீங்கள் கேட்பீர்கள்?
Borges: Robert Frost இன் “Acquainted with the Night” எனும் கவிதையை. அல்லது Arturo Capdevila வின் “La fiesta del mundo”. என்னை வியப்பில் ஆழ்த்த வேண்டும் என்றால், அந்தப் புத்தகத்தின் ஏதும் ஒரு பக்கத்தை விரித்து வாசிக்கத் தொடங்குங்கள். பிரத்தியேகமாக “Aulo Gelio” எனும் கவிதை. வியந்துபோகும் படியான சில வரிகள் அதனில் உண்டு. இன்று, அவை யாராலும் நினைவுகூறப் படுவதில்லை. அதனை எழுதிய Capdevila வையும் மறந்திருப்பார்கள். உங்களுக்குத் தெரியுமா, மக்கள் எளிதில் மறந்துவிடுவதுண்டு. அல்லது அவர்கள் அர்த்தமற்ற விடயங்களைத் தான் நினைவுகொள்வார்கள். ஒரு காற்பந்தாட்டப் போட்டி அல்லது ஏதேனும் ஒன்றை நிறுவியவர்களை. நிறுவியவர்கள் வழித்தோன்றலில் வந்தவன் நான், இருந்தாலும் அவர்களுக்கு அத்தனை முக்கியத்துவம் கொடுப்பது சரியா என்று எனக்குத் தெரியவில்லை. எமக்கு ஒரு வரலாறு உண்டு, ஆனால் அது திடீர் எண்ணங்கள் கொண்ட மனிதர்களாலும், குதிரைப்பந்தயத்தின் சமூக அடுக்குகள் தொடர்பாகவும் நிரம்பியுள்ளது.
Gloria López Lecube: போர்ஹெஸ், கடந்த காலங்களில் நீங்கள் அடைந்த நிலை, மக்களின் மதிப்பு எல்லாம்….
Borges: அது விசித்திரம், இல்லையா? ஆனால் அதுவும் கடந்துபோகும்.
Gloria López Lecube: வளர்ந்துகொண்டு போகின்ற ஒன்று ஏன் கடந்து போகவேண்டும்? உங்களுடன் இந்த சாலையில் நடந்துபோனால் அது Miguel Angél Solá வுடன் நடந்து போவதை விட மிகப் பெரிய பரபரப்பை உருவாக்கும்.
Borges: யார் அந்த Miguel Angél Solá? Emile Zola என்ற பெயர் தான் நான் அறிந்தது.
Gloria López Lecube: Miguel Angél Solá ஒரு நடிகர். ஆனால், நான் உங்களுடன் நடந்து போனால், எல்லோரும் சற்றுப் பின்நகர்வார்கள், வியந்துபோவார்கள், அது ஒரு வித வெளிப்பாடு…
Borges: அப்படி நான் Émile Zolaவுடன் நடந்தேனென்றால், அது அற்புதமானதொரு காட்சி தான். Zola இறந்து விட்டாரே!
Gloria López Lecube: நீங்கள் இன்னும் இன்னும் விரும்பப்படுகிறீர்கள் போர்ஹெஸ், உங்களின் நகைச்சுவை, தனிச் சிறப்புத்தன்மை, யாவும்…
Borges: நான் என்ன செய்ய? பதிப்பகங்கள் இன்னும் என் எழுத்துகளை பதிப்பித்தபடி தான் இருக்கின்றன. அதனை சற்று நிறுத்தலாம், இல்லையா? இந்த வருடம், 100 நூல்களுக்குத் தலைமை தாங்குகிறேன். அதற்கு ‘Marco Polo Library’ என்று பெயர்சூட்டத் தான் எனக்கு விருப்பம். ஆனால் பதிப்பாளர் வேறொரு துல்லியமான தலைப்பை தேர்ந்தெடுத்துள்ளார். இப்போது அது ‘Personal Library‘ என்றழைக்கப்படுகின்றது. María Kodama வுடன் இணைந்து அந்த நூறு நூல்களைத் தேர்ந்தெடுத்து அவற்றிற்கு முகவுரை எழுதுகின்றேன்.
Gloria López Lecube: போர்ஹெஸ், பத்திரிகை படிப்பதில்லை என்று நீங்கள் கூறி இருக்கிறீர்கள். ஆனால், உங்களுக்கு அரசியலில் நிகழும் அனைத்தும் தெரியும். அது சார்ந்த உங்கள் கருத்தையும் வெளிப்படுத்துகிறீர்கள்.
Borges: எனது நண்பர்கள் தான் செய்திகளை எனக்கு அறியத்தருவதுண்டு. ஆனால் என் வாழ்வில், நான் பத்திரிகை படித்ததே இல்லை. ஒரு நாள் பொழுதில் மட்டும் நீடிக்கும் ஒன்று எவ்வாறு முக்கியத்துவம் பெறும்? ‘நாளிதழ்கள்’ என்று வேறு அழைக்கப்படுகின்றன. அது நம்பிக்கை தரும்படியாக எனக்கு இல்லை.
Gloria López Lecube: சரி, இன்னும் நீங்கள் ஒரு தீர்க்கமான ‘பெரோன்2 எதிர்ப்பு வாதியா’? வேறு சில இடங்களில் நீங்கள் வெளிப்படுத்திய கருத்துக்களின் அடிப்படையில், சற்று மன்னிக்கப் பழகி இருக்கிறீர்கள் என்று நினைக்கின்றேன். அப்படியா?
Borges: மறந்திருக்கிறேன், ஆனால் மன்னிக்கவில்லை. மறப்பது மட்டுமே மன்னிப்பின் ஒரே வழி. மறப்பதே பழி தீர்ப்பதும், தண்டனையும் ஆகும். எனது எதிராளி நான் அவர்களைப் பற்றி சிந்தித்தபடி இருக்கிறேன் என்று ஏதேனும் ஒரு வகையில் அறியநேர்ந்தால், நான் அவர்களின் அடிமையாகுகிறேன். அவர்களை மறந்தேன் என்றால், அந்த அடிமைத்தனத்தில் இருந்து வெளியேறிவிடுவேன். நான் நினைக்கிறேன் மன்னிப்பும் பழி தீர்ப்பதும் ஒரே பொருளின் இரண்டு சொற்பதங்கள் என்று. இன்னொரு வகையில் சொன்னால், அது புறக்கணிப்பது. ஆனால், தீய ஒன்றினை மறப்பது எளிதேயல்ல.
Gloria López Lecube: போர்ஹெஸ், உங்களுக்கு தெரியுமா? சில எழுத்தாளர்கள் உண்டு. அவர்கள் நேர்காணல்களுக்கு ஒரு கட்டணம் பெறுகின்றார்கள்! நீங்களோ….
Borges: எனக்கு தெரியவில்லை, நீங்கள் எனக்கு எவ்வளவு கட்டணம் செலுத்தப் போகிறீர்கள்?
Gloria López Lecube: [சிரித்தபடி] அது பற்றி பிறகு பேசலாமே.
Borges: நான் நினைக்கிறேன் எதுவுமில்லையென்று, இல்லையா? சரி, அப்போ அதை சீரோவில் வைத்துக்கொள்வோமா? சீரோ என்பது உங்களுக்கு சரிப்பட்டு வருமா?
Gloria López Lecube: நிச்சயமாக, சீரோ தான். Silvia Bullrich எனும் ஆர்ஜென்டின் எழுத்தாளர் டாலர்ஸ் இல் (Dollars) கட்டணம் பெற்றுக்கொள்கின்றார்.
Borges: Silvia Bullrich பெருஞ் செல்வந்தர். நான் ஓர் ஏழை மனிதன். செல்வந்தர்தான் கஞ்சனையும், பேராசையும் கொண்டுள்ளனர். அது எத்தனை விசித்திரம், இல்லையா? ஏழை மக்கள் அவ்வாறல்ல. அவர்களின் மனம் பெரிது, எனவே தாராளமாக வழங்குவார்கள். அப்பா எனக்கு சொல்வதுண்டு, ஒருவர் பெருஞ் சொத்தைப் பெறும்போது, அந்த சொத்தை அடைவதற்கான அனைத்துப் பண்புகளையும் சேர்த்துப் பெற்றுக்கொள்கின்றார். எனவே, செல்வந்தரின் பண்புகளான கஞ்சனையும், பேராசையும் சேர்ந்துகொள்கின்றது ஒரு சொத்தை அடைய.
Gloria López Lecube: அது அற்புதம், அப்படியென்றால், நீங்கள் சொல்வது போல, ஒருவரிடமிருந்து திருடாமல் இன்னொருவர் செல்வந்தர் ஆகிவிட முடியாது, இல்லையா?
Borges: நான் அப்படித் தான் நினைக்கின்றேன். சொத்து என்பது நடைமுறையில் ஒரு திருட்டு.
Gloria López Lecube: சொத்து ஒரு திருட்டா?
Borges: இங்கு பிரச்னை என்னவென்றால், நீங்களும் நானும் Guaraní3 அல்லது Charrua3 செவ்விந்தியர்கள் அல்லவே! எமக்கு எந்த உரிமையும் கிடையாது இங்கு வாழ்வதற்கு.
Gloria López Lecube: அயராமல் உழைப்போம்…
Borges: அயராமல் உழைப்போம்…
Gloria López Lecube: சீரோவில் இருந்து, நீங்கள் சொன்னது போல.
Borges: மிக்க நன்றி.
0
நான்
இந்தக் கபாலம், இரகசியம் பொதிந்த இதயம்,
என் பார்வைக்குப் புலப்படாத குருதியின் பாதைகள்,
நில-நீர் உயிரினம் போன்ற கனவின் சுரங்கம்,
இந்தக் குடற்கொடி, கழுத்து, எலும்புக்கூடு,
எல்லாம் நான். வியக்கத்தக்கவகையில்,
வாள் ஒன்றினதும்,
தனித்து அஸ்தமிக்கும் சூரியினனினதும் நினைவும் நானே,
அது தங்கத்தில், நிழலில், ஏதுமற்றதில் சிதறிக்கிடக்கின்றது.
துறைமுகத்தில் இருந்து கப்பல்களைக் காண்பதும் நானே,
கணக்கிடப்பட்ட நூல்களும் நான், காலத்தினால் களைத்த,
கணக்கிடப்பட்ட செதுக்குருவங்களும் நான்,
என்றோ இறந்தவர்களை நினைத்துப் பொறாமைப்படுவதும் நானே.
இன்னும் விசித்திரம் என்னவென்றால், வீட்டின் ஓர் அறையில்,
வார்த்தைகளை நெய்யும் மனிதனாகவும் நான் இருப்பது.
0
1 17 ஆம் நூற்றாண்டு ஒல்லாந்துத் தத்துவஞானி
2 Juan Perón (1895-1974) – இரண்டு தடவை ஆர்ஜென்டினாவின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
3 Guaraní மற்றும் Charrua தென் அமெரிக்காவின் ஆதிக் குடியினர்.
பிரசாந்தி சேகரம்
இலங்கையிலிருந்து சிறுவயதில் ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்தவர். மொழியியல், இலக்கியம், மானுடவியல், சமூகவியல் போன்றவற்றில் முதுமாணி. ஆங்கிலம், ஜெர்மன், ஸ்பானிஷ் மொழி இலக்கியங்களை தமிழிற்கு மொழிபெயர்ப்பதில் ஆர்வமுடையவர்.
மிகவும் அருமையான உரையாடல் கவிதை மற்றும் மொழிபெயர்ப்பு