“பற நாயி….”
மாலையானதும் குடிபோதையில் வீடு திரும்பும் யானை வில்சன், வீட்டுத் திண்ணையில் குந்தியபடி கத்தினான். அந்த கர்ஜனை தன்னை நோக்கித்தான் என்பதை ரங்சினா அறிவாள். அதை அறிந்தும் குசினியில் வேலை செய்வதாக பாசாங்கு செய்து கொண்டிருந்தாள்.
“அடியேய் நீ இன்னக்கி குளிச்சியாடி”
கழுத்தை திருப்பி தன் ஒற்றைக் கண்ணை உருட்டி வீட்டுக்குள் ஊடுருவினான். யானை தாக்கியதில் ஒரு கண்ணை பறிகொடுத்து உயிர்தப்பியவன் அவன்.
“கடப்புலி திருட்டு நாயி… நாலாம் சாதி வேச… இன்னக்கி ஒன்னய யானைக்கி பிடிச்சி போடுறே”
தென்னம் மரத்தில் கட்டியிருக்கும் யானை போன்ற அவனது பிளிறல், ரங்சினாவை பயத்தில் உலுக்கியது. இந்த பயம் அவளுக்குள் நீண்ட நாட்களாகவே இருந்து வருகின்றது. தட்டுத் தடுமாறி, தயங்கியபடி அவன் முன் நிற்பாள். இதையெல்லாம் பார்த்தும் பார்க்காதது போல், வில்சனின் சட்டரீதியான மனைவி, ரங்சினாவின் தங்கையான ஹீன்நோனா தன் வேலைகளில் மும்முரமாக கிடப்பாள்.
ஓவ்வொரு மாலை பொழுதுகளிலும் குடிபோதையில் வரும் வில்சனின் அடுத்ததாய் அரங்கேறப்போகும் காட்சியை அவர்கள் இருவருமே அறிவார்கள்.
வில்சனின் பனியனுக்குள் கிடக்கும் ரஸ்க் பக்கட்டிற்காக, அக்கா, தங்கை இருவரினது பிள்ளைகள் ஏக்கத்தோடும் ஆவலோடும் தன் தகப்பனை நெருங்குவார்கள்.
கசிப்பிற்காக, கடித்துக் கொள்வதற்கு வாங்கும் ரஸ்க் பக்கட்டில் ஒன்றை மட்டுமே அவன் உண்பான். மிகுதியை தன் பனியனுக்குள் திணித்துக்கொள்வான்.
“ஓடுங்கடா… திருட்டு பயலுகளா”
தன்னை நெருங்கும் பிள்ளைகளை விரட்டியடிப்பான். பின் ஏதோ நினைவு வந்தவனாய் தலையை சொறிந்தபடி, ஒற்றை கண்ணை முழித்து பிள்ளைகளை பார்த்து, வாயோரம் எச்சில் வழிய சிரிப்பான். அவனது விகாரமான சிரிப்புக்கு பயந்து பின்வாங்கும் பிள்ளைகள், பொறுமையிழந்து காத்துக் கிடப்பார்கள்.
பின் பனியனுக்குள் கைவிட்டு ரஸ்க் பக்கெட்டை வெளியிலெடுத்து, அவர்களுக்கு தெரியும் வண்ணம் விளையாட்டுக் காட்டுவான்.
தன் கணவனின் அடுத்த செயல்பாட்டை ரங்சினா அறிவாள். அதை கண்டும் காணாததை போல், துக்கத்துடனும், குரோதத்துடனும் பார்த்தப்படி நிற்பாள்.
உக்குங், மஹாதுங், சூடிங், புஷ்பேயும் தங்கையின் பிள்ளைகளான ஜஸ்டின், ஹன்னி, பிரமோதி, கிரிநோனா அனைவரும் வில்சனை சுற்றி விடுவார்கள். தவழும் பிள்ளைகள் தவிர ஏனைய அனைவரும் அந்த விளையாட்டிற்கு தயாராவார்கள்.
“இந்தா பிடி”
வில்சன் பிஸ்கட் ஒன்றை உயர வீசுவான். கீழே விழும் பிஸ்கட்டை பொறுக்குவதற்காக சாணி மெழுகிய நிலத்தில் பிள்ளைகள் கட்டிப் புரள்வார்கள். அந்த காட்சி கொடுக்கும் பரவசம், வாய்க்கோணி, எச்சில் தெறிக்க, திண்ணையில் சரிந்து, வயிற்றைப் பிடித்தபடி சிரிப்பான். ரஸ்குக்கான போராட்டத்தில், உடல் சீரலும், அதன் வலியும் முனங்கலாய் வெளிப்படும் போது
“நாசமா போனவனே… யானை அடிச்சி சாக… கல்யாண கட்டுன நாள்ல இருந்து இதே கதி தான்…”
ரங்சினா மனதுக்குள் பொறுமுவாள்.
பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்,… கட்டைகள் இழுப்பதற்காக வில்சன், யானையுடன் இந்த ஊருக்கு வந்தான். யானையை ரங்சினாவின் தோட்டத்தில் கட்டினான். யானை ரங்சினாவின் தோட்டத்து கிதுள் கிளைகளுக்கு பழக்கப்பட்டபோது, யானைப் பாகனான வில்சன் அந்த வீட்டுக்கு பழக்கமானான். இரவுகளில் அந்த வீட்டுத் திண்ணையில் படுத்துக் கொண்டான். ஆண் துணையற்ற தன் வீட்டுக்கு ஒரு பாதுகாப்பு கிடைத்ததென ரங்சினாவின் விதவைத் தாய் நினைத்தாள்.
வில்சன் யானை மீது அமர்ந்து கம்பீரமாய் செல்லும் போதெல்லாம்
“இப்படி ஒரு ஆம்பள புருஷனா கிடைச்சா”
ரங்சினா பெருமூச்சு விட்டாள். ஆனால் அதிஷ்டம் வாய்த்தோ தங்கை ஹீன் நோனாவுக்குதான். ரங்சினா இதைப்பற்றி அறியும்போது, ஹீன் நோனா மூன்று மாத கர்பமாய் இருந்தாள்.
இளம் தம்பதியர்க்கு வீட்டிலிருந்த ஒரே அறை ஒதுக்கிக் கொடுக்கப்பட்டது. எப்படியோ இரண்டு வருடங்களுக்குப் பின் ரங்சினாவின் கனவு பழித்தது.
வயிற்றில் பிள்ளையை தரித்து, சொல்வதறியாது நின்ற போது,
“உண்மைய சொல்லுடி… யாருகிட்ட போய் வயித்த நெறச்சிகிட்டு வந்த”
ரங்சியின் தாய் ஒப்பாரி வைத்தாள்.
“ஒன்ன வெட்டி ஆத்துல போடுவே”
திட்டியபடியே மகளின் கருவை கலைக்க மருந்து செய்தாள்.
“என்னத்துக்கு மருந்து செய்ற, எனக்கு ரெண்டு பேர் பாரமில்ல… நீயும் எனக்கு பாரமில்ல…”
வில்சன் குடிபோதையில் கத்தியபோது, ரங்சினாவின் தாய் வாயடைத்து, அதிர்ந்து போனாள். அன்று அந்த வீட்டை விட்டு ஓடியவள், பக்கத்து ஊரில் தன் தங்கையின் வீட்டிலேயே தங்கிக் கொண்டாள்.
அக்காவின் இணைவை, அவள் தங்கை மௌனமாக ஆமோதித்தாள். இருவருமே சேர்ந்து வில்சனுக்கு பத்து பிள்ளைகளை பெத்துக் கொடுத்தார்கள்.
கடந்த பத்து வருடங்களாக, மனதுக்கு மகிழ்ச்சியையும், நிம்மதியையும் தரக்கூடிய எந்தவொரு நிகழ்வும் நடவாததாக ரங்சினா உணர்ந்தாள். தான் தனிமைப் பட்டுவிட்டதாக பரிதவித்தாள். வருடாவருடம் கர்ப்பமடைவதும், பிள்ளைகளின் இடைவிடாத கரைச்சலும், எதற்கெடுத்தாலும் வில்சனின் அடி உதையும் அவளை வயதுக்கு மீறிய முதுமைக்குள்ளாக்கியது.
“தங்கச்சிக்கு என்னா, அவ தாலிகட்டுன பொம்புள”
சிலநேரங்களில் ஹீன்நோனாவை நினைக்கையில் பொறாமை எட்டிப்பார்க்கும். ஆனாலும் தன் தங்கையின் பிள்ளைகளுக்கும் சேர்த்தே உழைத்தாள். எங்கயாவது ஒரு வீட்டில் வேலை செய்தோ, கூலி வேலை செய்தோ வீட்டுக்கு தேவையான உணவுப் பொருட்களை வாங்கிப் போட்டாள்.
இந்த பாடுகள் எல்லாம், எப்பயாவது வில்சன் கொண்டுவரும் ஒரு கிலோ அரிசிக்கும், கருவாடு துண்டுக்கும் அடங்கிவிடும்.
அடுக்கடுக்கான வில்சனின் அடக்குதலும், அதனாலான வாதைகளும் நினைவுறும்போது அவளுக்கு அவன் மீதான வெறுப்பு கூடிக்கொண்டே போனது.
“இவன்கிட்ட அன்போ, பிள்ளை பாசமோ எதுவுமேயில்ல.”
நினைவுகளையும், வார்த்தைகளையும் குழப்பியபடி, தனக்குத்தானே பேசிக் கொள்வாள்.
“ஐயோ… தங்கச்சி… நா ஒனக்கு துரோகம் பண்ணிட்டே… நா நாசமாத்தா போவே”
தன் தங்கையை நினைத்து புலம்புவாள். ரங்சினாவை விட பயந்த சுபாவமுள்ள ஹீன் நோனாவோ, எப்போதும் அக்காவை எதிர்த்து பேசியதில்லை. தன் கணவனை பங்கு போட்டுக்கொண்ட நாளிலிருந்து ரங்சினாவுடனான பேச்சை நிறுத்திக் கொண்டாள். நெஞ்சைக் கிழிக்கும் அவளது மௌனம், ரங்சினாவை வதைத்துக்கொண்டே இருந்தது.
“காலத்துக்கு இப்படி இருக்க முடியாது… பிள்ளைகளா பெத்தா மட்டும் போதுமா… யாரு திங்க கொடுக்கிறது”
காலம் கடந்த அவளது இந்த கோபம், வெறுப்பாய் மாறி, நெஞ்சம் கொதிக்க, வானத்தைப் பார்த்து, பெருமூச்சு விட்டபடி திடமானதொரு தீர்மானத்திற்கு வந்தாள்.
அது யானைகளுக்கு மதம் பிடிக்கும் காலம்.
இரவின் உச்சிப் பொழுது நிசப்தமாய் கடந்துக் கொண்டிருந்தது. தென்னை மரத்தில் கட்டியிருந்த யானையின் முனங்கல், சிறுக சிறுக பெரும் பிளிறலாக மாற, அதன் காதுகளை நனைத்தபடி மதம் வடியத்தொடங்கியது.
பௌர்ணமியை நெருங்கும் நிலவின் ஒளி, இரவை கறுப்பு நிறத்தில் மஞ்சள் நிறமாய் உருமாற்றியிருந்தது. யானை கண்களை திறந்து அந்த அமானுஷிய இரவை விழித்தது. அது எப்போதும் இப்படியான வேதனையை அனுபவித்ததில்லை.
இருட்டை களைக்கும் நிலவொளியின் கட்டுக்குள் அடங்கியிருந்த காட்டுக்குள்ளிருந்து வீசிய முன்ஜாமத்து காற்றின் தொடுகை, நடுக்கத்தையும் கூச்சத்தையும் ஒருசேர கொடுத்துக்கொண்டிருக்க, யானையின் பெரும் பிளிறலுடன், அங்குமிங்கும் நகரத் தொடங்கியது.
நள்ளிரவை கடக்கும் இரவில், யானை வில்சன் வீடும் எதுவும் அறியாத நிலையில் உறங்கிக்கிடந்தது. ஹீன் நோனா அடுத்த பிரசவத்திற்காக அம்மாவிடம் சென்றிருந்தாள். பிள்ளைகள் விராந்தையில் உறங்கிக்கிடந்தன. அந்த இரவு தம் வாழ்க்கையில் இரண்டு மாற்றங்களை நிகழ்த்தப்போவதாக அவர்கள் அறிந்திருக்கவில்லை.
“திரும்படி”
இருட்டுக்குள் வில்சன் குடிபோதையில் மிரட்டினான். ஆனாலும் ரங்சினா அசையாதிருந்தாள்.
“அடியேய் திரும்படி”
அவள் தோள்களை உலுக்கினான். அவன் கைகளின் பலத்தை, அவளது மனபலம் உடைத்தது.
“இந்த பக்கோ திரும்படி நாயே”
புணர்தலுக்கு அழைக்கும் புலியாய் உறுமிய வில்சன், ரங்சினாவின் மார்புக் கச்சையின் பட்டியை பிடித்து இழுத்தான். திடீரென்று திரும்பியவள், அவன் எதிர்ப்பாராத விதமாய் ஒரு செயலை செய்தாள்.
யானை அடித்தால்கூட பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு பொம்பளை கன்னத்தில் அறைந்ததை அவனால் தாங்கிக்கொள்ள முடியாமற் போயிற்று. காமம் மரித்து, பெருங்கோபம் பற்றி எரிந்தது..
“பட்ட வேச… இன்னக்கி ஒன்னய யானைக்கி பிடிச்சி கொடுக்கிறே”
அவள் தலை முடியை கத்தையாய் இறுகப் பிடித்து, இருட்டின் வழியே இழுத்து எடுத்தான்.
யானையின் உடலும், மனமும் தாங்காத வேதனையில் நிறைந்தது. தும்பிக்கையை அசைத்து, தூக்கி பக்கத்திலிருந்த மரத்தை தாக்கியது. நிலத்தை உதைத்து மண்ணை கிளறியது. இறுதியில் கால் விலங்குகளை இழுத்து உடைத்தெறிந்தது.
அப்போது கதவை திறந்துக் கொண்டு யாரையோ இழுத்துக்கொண்டு தன்வசம் வரும் தன் எஜமானைக் கண்டது. எஜமானிய பக்தி காற்றில் பறக்க, மதம் தீயாய் பற்றி, நிலவொளியில் ரௌத்திர தாண்டவமாடியது.
வில்சனை தும்பிக்கையால் பற்றி தூக்கிய யானை, அவனை ஓங்கி நிலத்தில் அடித்தது. மீண்டும் அள்ளி எடுத்து, வீசி எறிந்தது. பின் அதன் பக்கமாய் ஓடியது. அனைத்தம் எதிர்ப்பாராத விதத்தில், நேரத்தில் நடந்து முடிந்தது.
ரங்சினா அடி தொண்டையில் கத்தினாள். தன்நிலை மறந்தாள். இறுதித் தருவாயிலும் யானைக்கு அதன் பாஷையில் ஏதோ முனங்கியபடி வில்சன் மூச்சை விட்டான்.
அவன் செத்துவிட்டான் என்று அறிந்த மறுகணம், யானை தன் பக்கம் திரும்பியதை ரங்சினா உணர்ந்தாள்.
“என்னையும் கொன்று தின்னு”
கத்தினாள்.
ஒரு தும்பிக்கையின் இறுக்குப்பிடியில் மரணத்தின் வடிவத்தை எதிர்ப்பார்த்து, கண்களை மூடியபடி நின்றாள். பிள்ளைகளின் ஞாபகம், கடவுளை பிரார்த்திக்க வைத்தது.
காற்றின் வேகம் குறைந்திருந்தது. நள்ளிரவின் இடைவெளியில், ஏதோ நடந்துவிட்டதாக யானைக்கு பொறி தட்டியது. இரண்டு மனித உருவங்களை தெளிவாக இனங்கண்டது.
தும்பிக்கையின் வழியே தன் எஜமானின் வாசத்தை மணந்து, அதனூடாக வில்சனின் முகத்தை முகர்ந்து ஏதோவொன்றை அறிந்து நிச்சயித்துக்கொண்டது. காலம் தாழ்த்திய அதன் தெளிவு, அமைதியாக திரும்பி நடக்கத் தொடங்கியது.
திரும்பிச் செல்லும் யானையை ஆச்சரியமாக பார்த்துக்கொண்டிருந்த ரங்சினா.. ஏதோ ஞாபகம் வந்தவளாய்
“ஐயோ….. ஏ….. புருஷே”
ஊரே அதிர கத்தினாள்.
நிசங்க விஜேமான்ன
சிங்கள சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர். கலை ஆலோசகராக பணியாற்றுகிறார். நகரங்களுக்கு வெளியே வாழ்கின்ற சமூகங்களின் வெவ்வேறு அடுக்குகளையும், வெவ்வேறு காலங்களையும் எழுத்தின் மூலமாக ஆராய்கிறார்.