/

அரபு ஈச்சை மரங்கள் காத்தான்குடியில் பெரிதாக வளர்ந்துவிட்டன: சக்கரவர்த்தி

நேர்கண்டவர்: அனோஜன் பாலகிருஷ்ணன்

சக்கரவர்த்தி கிழக்கிலங்கையில் தேத்தாத்தீவில் பிறந்தவர். ஆயுதப்போராட்டம் வலுவடைந்த காலத்தில் குழந்தைப் போராளியாக டெலோ இயக்கத்தில் இணைந்து பின்னர் வெளியேறியவர். கனடாவுக்கு புலம்பெயர்ந்த பின்னர் மும்மரமாக எழுத்துச் செயற்பாட்டில் ஈடுபட்டார். யுத்தம் மீதான எதிர்ப்பே அவரது கதைகளில் மண்டிக்கிடக்கிறது. யுத்தத்தின் நேரடி சிதைவான மானுட அழிவு கொடுக்கும் வாழ்க்கை மீதான விரக்தி அவரது கவிதைகள் முழுவதும் விரவியிருக்கிறது. சக்கரவர்த்தி முஸ்லீம் தமிழ் சமூக உறவுப் பிளவின் மீது தீராத கவலை கொண்டவர். இவருடைய ‘என்ட அல்லாஹ்’ கதையை ஈழத்தின் தலைசிறந்த அரசியல் கதைகளில் ஒன்றாகத் தயக்கமின்றிச் சொல்லலாம்.

‘யுத்தசன்யாசம்’ என்ற கவிதை நூலும், ‘யுத்தத்தின் இரண்டாம் பாகம்’ என்ற சிறுகதைத் தொகுப்பும் இதுவரை வெளியாகியுள்ளன. 

கிழக்கிலங்கையில், படுவான்கரையை பெருமளவிற்கு இலக்கியத்தில் பதியப்படாத பிரதேசமென்று சொல்லலாம். நீங்கள் படுவான்கரையையும் அந்த ஊரின் வட்டார வழக்குகையும் புனைவில் கொண்டு வந்தவர்களில் முக்கியமானவர். உங்களுக்கும் படுவான்கரை மக்களுக்கும் இடையிலான  தொடர்புகளிலிருந்து இந்த நேர்காணலைத் தொடங்குவோம்.

என்னுடைய ஊருக்கும் படுவாங்கரைக்கும் இடையில் ஒரு ஆறு மட்டும்தான் இருக்கின்றது. அந்த ஆற்றைக் கடந்தால் படுவான்கரை. மட்டக்களப்பு மாவட்டத்தின் முக்கிய பகுதிகள் எழுவான்கரை, படுவான்கரை என்று இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளன என்பது உங்களுக்குத் தெரியும்தானே.

எழுவான்கரையையும் படுவான்கரையையும் அந்த ஆறு பிரிப்பதால் இரண்டு பகுதி மக்களின் வாழ்க்கை முறையும் வாழ்வியல் முறையும் 100 விகிதம் வித்தியாசப்படுகின்றன. எழுவான்கரை மக்களுக்கு கல்வி, தொழில்வாய்ப்பு என்பன கிடைக்கும் அதேவேளை படுவான்கரை மக்களுக்கு இவை கிடைப்பதில்லை என்றே சொல்லலாம். எங்களுடைய வயல் மற்றும் தாத்தாவுடைய தொழில் எல்லாம் படுவான்கரையைச் சார்ந்தே இருந்ததால் சிறுவயதில் படுவான்கரைக்கு அடிக்கடி போகவேண்டிய சந்தர்ப்பம் இருந்தது. அவர்களுடைய வயலும் வயல் சார்ந்த வாழ்க்கையும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

அதன் பிறகு யுத்தம் வந்தபின் தப்பியோடுவதற்கும் அடைக்கலம் புகுவதற்கும் உகந்த இடமாகவும் படுவான்கரைதான் இருந்தது. ஆற்றைக்கடந்து விட்டால் உயிருக்கு பாதுகாப்பு கிடைக்கும். ஏனென்றால் அங்கே இராணுவம், பொலிஸ்.. இப்படியொருவரும் வரமாட்டார்கள். இப்படித்தான் அந்த மக்களுக்கும் எனக்கும் உறவு ஏற்பட்டது.

அந்த மக்களுடைய உதவியால்தான் எங்களுடைய பகுதி மக்கள் வாழவேண்டி இருந்தது. அந்த நேரத்தில் நான் அங்கே அடிக்கடி போய் வந்திருந்ததால் அந்த ஊரின் நில அமைப்பு, கலாச்சாரம் என்பன மிகவும் பரிச்சயமாக இருந்தது. சிறுவயதில் எங்களுக்கு வீட்டை விட்டு வெளியே சுற்றிப் பார்க்கவேண்டுமென்றால் வயலும், மடையும், ஆறும் என்று நாங்கள் படுவான்கரைக்குத் தான் போவோம். 14, 15 வயதுக்குப் பிறகு தனியே சுற்றிப்பார்ப்பதென்றாலும் நாங்கள் செல்லுமிடம் படுவான்கரை தான். அந்த மக்களுடன் பழகும் வாய்ப்பு அந்தகாலப்பகுதியில்தான் அதிகம் கிடைத்தது.

துயரம் என்ன தெரியுமா? ஈழ விடுதலை போருக்கான காரணிகள் எதுவும் படுவான்கரை மக்களுக்கு பொருந்தவில்லை. இருந்தாலும் நடந்து முடிந்த போருக்காக இயக்கங்கள் அவர்களை துஸ்பிரயோகம் செய்தன. புலிகளுக்காக அந்த பகுதி சிறுவர்கள் வன்னிக்கு கொண்டு செல்லப்பட்டதை எப்படி மன்னிக்க முடியும்?

ரெலோக்காரர்களை படுவான்கரைக்கு கொண்டு சேர்த்த பழி என்னைத்தான் சேர வேண்டும்.

என்னுடைய வாழ்க்கை என்பது பெரிய துயரம் நிறைந்தது இல்லை. ஒரு வகையான சாகஸமும் ஒரு வகையான பரபரப்பும் நிறைந்ததுதான் அது. என்னுடைய அகதி வாழ்க்கையும் துயரம் நிறைந்தது இல்லை. புலம்பெயர்ந்த நாடுகளில் அகதி வாழ்க்கைபற்றிக் கதை எழுதுபவர்கள் துயரத்தைச் சற்று மெருகூட்டித்தான் கையாளுகிறார்கள்.

அந்தக்காலத்தில், அதாவது உங்களுடைய சிறுபிராயத்தில்  உங்கள் ஊரைச் சுற்றி வசித்த முஸ்லீம் மக்களுக்கும், தமிழர்களுக்கும் இடையிலான சமூக உறவு எப்படி இருந்தது? அவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு இருந்ததா?

அந்த வயதில் முஸ்லீம்களுடன் எனக்கு நட்பு என்று சொல்ல முடியாது. அவர்கள் பெருமளவிற்கு வியாபார சமூகம் என்பதால் எங்களுடைய குடும்பமும் வியாபாரம் சம்பந்தப்பட்டதால் அந்த மாதிரியான உறவுகள் இருக்கும். ஆனால் நெருங்கிப்பழகும் உறவுகள் இல்லை. அவர்களுடைய விழாக்களுக்கு வீடுகளுக்குப் போய் ஒரு பழக்கம் இருக்கும்.

எங்களுடைய ஊரில் இருந்து வடக்குப் பக்கமாக 15 கிலோ மீற்றர் போனால்தான் காத்தான்குடி வரும். அதே போல் தெற்குப்பக்கம் 15 கிலோ மீற்றர் போனால் சாய்ந்தமருது, மருதமுனை, கல்முனை பகுதிகள் வரும். அதனாலேயோ என்னவோ தனிப்பட்ட முஸ்லிம் நண்பர்கள் எனக்கு இருந்ததில்லை. அதே நேரத்தில் எங்களுடைய பகுதி மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்தது முஸ்லிம் சமூகம் தான். ஏற்கனவே சொன்னதுபோல வியாபார சமூகமாக அவர்கள் இருந்ததால் எங்களுடைய தேவையை நிவர்த்தி செய்வது அவர்களுடைய தேவையாகவும் இருந்திருக்கின்றது. இப்படி இரண்டு சமூகமும் ஒன்றுடன் ஒன்று சார்ந்துதான் வாழ்ந்தார்கள். தனித்தனியாக அங்கே வாழமுடியாதிருந்தது.

ஆயுதப் போராட்டம் எழுச்சியுற்ற போது ஒரு ‘குழந்தைப் போராளியாக’ அதிலே இணைந்துகொண்டீர்கள். ஒரு நேரடிக் கேள்வி. ஏன் இணைந்தீர்கள்..

இது என்னிடம் மட்டும் கேட்கவேண்டிய தனிப்பட்ட கேள்வி அல்ல. அந்தக்காலத்தில் வாழ்ந்த எல்லா சிறுவர்களிடமும், இளைஞர்களிடமும் கேட்கப்படவேண்டிய கேள்வி. அதற்கான சரியான காரணத்தை யாராலும் சொல்ல முடியாது. இயக்கத்துக்கு போகவேண்டும், அவ்வளவு தான். அது அந்த இயக்கமா, இந்த இயக்கமா, விடுதலைப்புலிகளா, ரெலோவா, ஈபிஆர்எல்ஆ என்றெல்லாம் இல்லை.

ஒருவேளை அதைச் சாகஸமான ஒரு மனநிலையாக உணர்ந்தீர்களா?

சாகஸம் என்பதற்கு அப்பால் இயக்கத்திற்குப் போகவிட்டால் பிழை என்ற மனநிலை இருந்தது. விடுதலைப் போராட்டத்தில் இணைய வேண்டும் என்பதற்காகச் சிலர் குறிப்பிடும் பொதுவான  காரணங்கள் இருக்கின்றனதானே, அந்தக் காரணங்கள் எதுவும் எனக்கில்லை. என்றாலும் போய்விட்டேன். எந்த இயக்கமென்றெல்லாம் அப்போது பிரித்துப் பார்க்கவில்லை. 

ஈ.பி.ஆர்.எல்.எப், டெலோ, புளொட், புலி என எல்லா இயக்கமும் அப்போது ஒன்றுதான், பெயர்கள் மட்டும்தான் வெவ்வேறு. கொள்கை அளவில்  ஒன்றாகவே இயங்கின. அனைத்தும் யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி இயங்கிய இயக்கங்கள். நான் போய்ச் சேர்ந்த இயக்கத்தின் பெயர் ரெலோ.

போராட்டத்தில் இணைவதற்கு ‘உங்களுக்குத்’ தனிப்பட்ட காரணங்கள் எதுவும் இல்லை என்று சொன்னதாகப் புரிந்துகொள்கிறேன். ஏனென்றால் இராணுவ வன்முறை தமிழர் பகுதிகளில் கிழக்கில்தானே முதலில் தொடங்கியது. அதற்கு எதிரான ஆயுதவழியிலான எதிர்ப்பும் கிழக்கில்தான் முதலில் நடந்திருக்கிறது.  நான் சொல்வது.. அறுபதுகளுக்கும் முன்னர்.. 58இல் துறைநீலாவணையில் பொலிஸ் ஜீப் ஒன்றின்மீது கிழக்கைச் சேர்ந்த ஒரு தமிழ்க்குழுவினர் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறார்கள்…

எனக்கு தெரிந்த காலத்தில் ராணுவம் என்பது அம்பாறை சீனித்தொழிற்சாலைக்கு கரும்பு வெட்டவும் காடு வெட்டவும்  சுதந்திர தின அணிவகுப்புக்குந்தான் பயன்பட்டுக்கொண்டு இருந்தது.

நான் வரலாற்றை பின் தொடர்பவன் அல்ல. நான் பட்டவற்றையும் பார்த்தவற்றையும்தான் பதிவு செய்ய முடியும். எனக்கு தெரிந்த காலத்தில் பட்டிருப்பு தொகுதிக்கான பொலிஸ் நிலையம் களுவாஞ்சிகுடியில் இருந்தது. அங்கிருக்கும் முப்பது பொலிஸ்காரர்களில்  இஸ்பெக்டர் உட்பட இருபத்தி ஐந்து பேரும் யாழ்ப்பாணத் தமிழர்கள்தான்.

படுவான்கரைப் பக்கம் இயக்கங்கள் நடமாட்டம் அதிகரித்ததும் வெல்லாவெளி பொலீஸ் நிலையம் பெரிதாக்கப்பட்டு, குவிக்கப்பட்ட காவல்படைக்கு  அதிகாரியாக இருந்தது யாழ்ப்பாணத்தமிழரான கணேசநாதன்.

எண்பத்தி ஏழாம் ஆண்டு என நினைக்கின்றேன். கொழும்பில் வைத்து என்னை பொலீஸ் பிடிக்கின்றது. போஹா குண்டு வெடிப்பு நடந்து அடுத்தடுத்த கிழமையாக இருக்க வேண்டும். என்னை கைது செய்த பொலீஸ் அதிகாரியின் பெயர் நடராஜா. எனக்கான சட்டத்தரணிகள் மோதிலால் நேரு, குமார் பொன்னம்பலம். என் வழக்கை விசாரித்த நீதிபதியின் பெயர் மகேந்திரன். இவர்கள் எல்லோருமே யாழ்ப்பாணத் தமிழர்கள். சிங்கள அரசுகள் எல்லாம் அடக்கு முறை அரசுகள்தான். ஆனால் அடக்கு முறையை தமிழ் மக்கள் மேல் ஏவி விட்ட அதிகாரிகள் எல்லோரும் யாழ்பாணத்தமிழர்கள்.

‘போர் எதிர்ப்பு’ என்பது உங்களது புனைவுகளில் பிரதானமாக உள்ளது. வன்முறையை தவிர்க்கும் உரத்த குரல் திரும்பத் திரும்ப ஒலிக்கிறது. மனித வாழ்கையின் இருத்தலை வலியுறுத்துகிறீர்கள். வன்முறை தழுவிய ஆயுதப் போராட்டத்தில்  ஒரு போராளியாக இணைந்தவர் நீங்கள். பின்னர் இந்த மாற்றத்திற்கு  வந்தடைந்த அனுபவங்களைச் சொல்லுங்கள்..

என்னுடைய 14 வயதில் இயக்கங்கள் சாதாரணமாக ஊருக்குள் வரத் தொடங்கியிருந்தன. அப்போதிருந்தே அதாவது 9ம்வகுப்பு படிக்கிற காலத்திலிருந்தே பாடசாலைக்குப் போகமுடியாத சூழ்நிலை எனக்கு உருவாகிறது. ஏனென்றால் இயக்கத்திற்கான வேலைகளைச் செய்துகொண்டிருந்தேன். அதாவது முழுநேர உறுப்பினன் இல்லை.  இயக்கத்துக்கு தேவையான பொருட்களை கொண்டு செல்லவேண்டும், கொண்டு வரவேண்டும். இந்த மாதிரி வேலைகள்..

எதிர்பாராதவிதமாக முழுநேர போராளியாக மாறியதற்காக சந்தர்ப்பம் ஒன்று ஏற்பட்டது. ரெலோ இயக்கத்தினரால் களுதாவளையைச் சேர்ந்த ஆட்டுக் கள்ளனை தேசத்துரோகி என்று அடையாளப்படுத்தி  அவர்கள் அடித்துக் கொல்வதை நான் நேரில் பார்த்தேன். எனக்கது உடன்பாடு இல்லாததால் நான் வெளியில் ஊருக்குள் சொல்லிவிட்டேன். அதே காலத்தில் தங்களிடம் இருந்த வெடி மருந்துகளை பரிசோதிப்பற்கு படுவான்கரையையும் எழுவான்கரையையும் இணைக்கின்ற பட்டிருப்பு பாலத்தை உடைத்தார்கள். எனக்கிந்த சம்பவங்கள் கோபத்தை உண்டாக்கின. ரொலோகாரர்கள்தான் பாலத்தை உடைத்தார்கள் என்பதையும் ஊருக்குள் சொல்லி விட்டேன். அவர்களுடைய இரகசியங்களை பகிரங்கங்கடுத்தியதற்கு தண்டனையாகத்தான் இனி நீ மட்டக்களப்பில் இருக்க முடியாது என்று பலவந்தமாக என்னை பிடித்து படகில் ஏற்றி அனுப்பி வைத்தார்கள்.  மட்டக்களப்பில் இருந்து மூதூர், மூதூரில் இருந்து நிலாவெளி, நிலாவெளியிலிருந்து முல்லைத்தீவு இயக்கச்சி வழியாக ஏழு நாட்கள் தரையிலும் கடலிலுமாக இரவில் பிரயாணம் செய்து என்னை யாழ்ப்பாணத்தில் வேலணையில் கொண்டு வந்து விட்டார்கள். வேறு வழியில்லை எனக்கு. முழுநேர போராளியாக மாறியே ஆகவேண்டும். அப்போது எனக்கு 15 வயது. அப்படிதான் இயக்க போராளியாக உருவாகினேன்.

அது 1985ஆம் ஆண்டு, அங்குள்ளவர்கள் எல்லோரும் 20 தொடக்கம் 25 வயதாக இருக்கும்போது நான் மட்டும் 15 வயதுப் பையனாக இருந்தேன். அங்கேதான் இன்றைய ஷோபா சக்தியை அந்தோனிதாசனாக சந்தித்திருந்தேன். அவர் புலிகள் இயக்கத்தில் இருந்தார். அக்காலங்களில்தான் என்னுடைய இயக்கத்தின் தலைவர் சிறி சபாரத்தினம்  கொல்லப்பட்டார். அந்தக் காலகட்டத்தைப் பற்றி சோபாசக்தியுடன் பிற்காலங்களில் கதைக்கும் போது நான்தான் இது(டெலோ) என்று நானும், நான்தான் அது(புலி) என்று அவரும் சொன்னோம். அந்தக் காலத்தில் சோபா சக்தியும் ஒரு சின்னப்பையனாகத் தான் இருந்திருக்க வேண்டும்.

வேலணை வங்களாவடி சந்தியில் புலிகளுக்கும் ரெலோவினருக்கும் இடையில் மிகப் பெரிய குழு ஆயுத மோதல் ஏற்பட்டது. அதில் நாங்கள் இருவரும் எதிர் எதிராக சுடுபட்டுக் கொண்டோம். இது நடந்தது மே மாதம் ஐந்தாம் திகதி எண்பத்தியாறாம் ஆண்டு. சண்டையை வேடிக்கை பார்த்த சில பொது மக்களும் ஒரு மனநோயாளியும் அன்றைய சண்டையில் பலியானார்கள். இந்த சம்பவம் நடந்து மறு நாள்தான் சபாரத்தினம் கொல்லப்பட்டார்.

அதாவது ரெலோ இயக்கம் மீது புலிகள் தடை விதித்தபோதுதான் போராட்டத்திலிருந்து உங்களுடைய விலகல் நடக்கின்றதா..?

அதை போராட்ட உரிமை மறுக்கப்பட்டதாகத்தான் உணர்ந்தேன். தனது மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றுதானே ஒருவர் போராட்டத்திற்குப் போகிறார். அந்தப் பிரச்சனையைத் தீர்ப்போம் என்றுதானே போகிறார். அப்பிடியிருக்க நீ போராடத் தேவையில்லை என்று விடுதலைப்புலிகள் எப்படிச் சொல்லமுடியும்..

நீங்கள் போராடுவதற்குரிய உரிமையை நாங்கள்தான் உங்களுக்கு தரவேண்டும் என்று விடுதலைப்புலிகள் பகிரங்கமாக அறிவித்தார்கள். யார் யார் போராட வேண்டும், யார் யார் போராடக்கூடாது என்ற அதிகாரத்தை கையிலெடுத்தார்கள். என்னுடைய போராடும் உரிமையை மறுக்க நீ யார்? அதுதான் எனக்கு விடுதலைப்புலிகள் மீது ஏற்பட்ட முதல் வெறுப்பு.

மற்றைய இயக்கங்களும் சளைத்தவை அல்ல. எந்த இயக்கமாக இருந்தாலும் அத்துமீறல், மனித உரிமை மீறல் போன்ற செயற்பாடுகள் உள்ளுக்குள்ளே நடந்தன. எதற்காக போராட வந்தார்களோ அதைச் செய்யாமல் வேறு வேறு காரியங்களில் ஈடுபட்டனர். சாதாரண விடயங்களுக்கு எல்லாம் அப்பாவி தமிழ் மக்களை பிடித்துக்கொண்டு போய் அடித்தல், கொல்லுதல் போன்ற சம்பவங்கள் எனக்கு அருவருப்பை ஏற்படுத்தின. அதன் பிறகுதான் அவன் யார் என்னைப்  போராட வேண்டாம் என்று சொல்வது, நானே போராடாமல் இருக்கின்றேன் என்றுவிட்டு வெளியேறினேன்.

இந்த நாடே வேண்டாம் என்று வெளியேற விரும்பினீர்களா? 

அது ஓர் எண்ணமாக எனக்கு இருக்கவில்லை. அக்காலத்தில்தான் இந்திய இராணுவம் நாட்டுக்குள் வந்தது. இந்திய இராணுவத்துடன் சேர்ந்து நாலைந்து இயக்கங்கள் இயங்கின. த்ரீ ஸ்ரார் என்ற பெயரில் ரெலோ, ஈபிஆர்எல்எப், புளொட் என்று புலிகளைத் தவிர அனைத்து இயக்கங்களும் இந்திய இராணுவத்துடன் சேர்ந்து இயங்கின. அந்த நேரத்தில் நான் மட்டக்களப்புக்கு வந்துவிட்டேன். எதிலும் ஈடுபடாமல்தான் இருந்தேன்.

இருந்தபோதும் இந்திய ராணுவம் இருந்த அன்றய சூழலை அசௌகரியமாக உணர்ந்தேன். எழுதுவதற்கான சுதந்திரம் எல்லாம் அப்போது இல்லை. இரவில் திருட்டுத் தனமாக துண்டுப்பிரசுரம் வெளியிடுவோம். கொழும்பில் அச்சடித்து ஊருக்கு கொண்டு வந்து இரவிரவாக விநியோகிப்போம். ஸ்டாலின் ஞானத்தை உங்களுக்கு தெரியும்தானே. கொழும்பு மட்டக்குளியில் இருக்கும் சேரிப் பகுதி ஒன்றில் வைத்துத்தான் பிரசுரங்களை தயார் செய்வோம். விடுதலைப்புலிகளுக்கு எதிராகவும் வெளியிடுவோம். இந்திய இராணுவத்துடன் சேர்ந்து இயங்கும் இயக்கங்களுக்கு எதிராகவும் வெளியிடுவோம். .போர் செய்பவர்களை நாங்கள் வெறுத்தோம்.

இது ஏதோ ஒரு வழியல் இந்திய ராணுவத்துடன் சேர்ந்து இயங்குபவர்களுக்கு தெரிந்துவிட்டது. தெரிந்தவுடன் பிடித்துக்கொண்டு போய் தேத்தாத்தீவு தேவாலயத்துக்கு முன்னால் வைத்து எனக்கு நன்றாக அடித்து விட்டார்கள். கிட்டத்தட்ட ஒரு மாதம் இரத்த வாந்தி. வீட்டுக்கார்கள் மருத்துவத்துக்காக என்னைக் கொழும்புக்கு கொண்டு வந்து விட்டார்கள். அப்போது எனக்கு ஒரு 17 அல்லது 18 வயது இருக்கும். ஒரு மாதத்தால் திரும்பவும் ஊருக்குப் போனேன்.

அங்கே அவ்வப்போது இந்திய இராணுவத்தினர் விடுதலைப்புலி இயக்கத்தைச் சேர்ந்தவர்களைச்  சுட்டுவிடுவார்கள். இரவில் புலிகள் இயக்கம் வீடு வீடாக வந்து இறந்தவருக்கு நாளைக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெறவுள்ளதால் நீ வாசலில் வாழை மரம் கட்டவேண்டும் என்று சொல்லுவார்கள். பிறகு அன்றைக்கு இரவு புலிகள் வேறு இயக்கத்தைச் சேர்ந்தவர்களை சுட்டுவிடுவார்கள். அந்த இயக்கக்காரர்களும் வாழை மரம் கட்டு என்று சொல்லிக்கொண்டு மறுநாள் வருவார்கள். அதிலும் முக்கியமாக வாழை மரம் கட்டடா என்று என்னுடைய வீட்டுக்குத்தான் வருவார்கள். அப்பாவைக் கேட்டால் எடுத்துக் கட்டு என்று சொல்லுவார். ஒரு வீட்டில் எத்தனை வாழைமரங்கள் இருக்கும். ஒரு கட்டத்தில் வாழைமரங்கள் இல்லாத நிலை வந்து விட்டது. நான் என்ன செய்தேன் என்றால் ஒரு வாழை மரத்தை வேரோடு பிடுங்கி வீட்டு வாசலில் கிடங்கு கிண்டி நட்டு வேலியும் கட்டிவிட்டேன். சாகிறவன் எல்லாம் சாகுங்கள். நீங்கள் எத்தனை பேர் செத்தாலும் ஒரு வாழைமரம் நிரந்தராமாக இருக்கும் என்று கட்டிவிட்டேன். எனது கோவமான நையாண்டி,  இந்திய இராணுவத்துடன் இணைந்து இயங்கிய இயக்கக்காரர்களுக்கு திரும்பவும் கோவத்தை உண்டாக்க எனக்கு திரும்பவும் நல்ல அடி அடித்துவிட்டார்கள்.

அதன் பிறகு விடுதலைப்புலிகள் என்னை அம்பிளாந்துறை என்ற கிராமத்துக்கு வரச்சொல்லி அழைத்தார்கள். ஆற்றைக் கடந்துதான் அந்த கிராமத்துக்கு போக வேண்டும். அந்தக் கிராமத்தில்தான் அவர்களுடைய அலுவலகம் இருந்தது. அங்கே எனக்கு ஓரளவுக்கு வேண்டப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த ரமணன் என்ற பையன் இருந்தான். என்னை விட இரண்டு மூன்று வயது கூடியவன். அவன்தான் அங்கு அலுவலகத்துக்கு பொறுப்பாக இருந்தவன். விடுதலைப்புலிகள் என்னை அழைத்தவுடன் என் வீட்டில் இருந்தவர்கள் எல்லோரும் உன்னை விடுதலைப்புலிகள் கொல்லப்போகின்றார்கள். நீ கொழும்புக்கு ஓடி விடு என்று சொன்னார்கள். நான் வீட்டுக்குத் தெரியாமல் தோணி ஒன்றில் ஏறி காலை 10 மணியளவில் அம்பிளாந்துறைக்குப் போய் விட்டேன்.

அங்கே வைத்து, ‘த்ரீ ஸ்ராருடன்  உனக்கு என்ன பிரச்சினை’ என்று ரமணன் கேட்டான். ஒரு பிரச்சினையும் இல்லை, ஏன் கேட்கிறீர்கள் என்றேன். அப்புறம் ஏன் உனக்கு அடித்தார்கள் என்று கேட்டான். பின்னர் “நான் உன்னைப் பற்றி கேள்விப்பட்டேன். எங்களுக்கு உன்னைப்பற்றி முழுத் தகவலும் வந்தது. நீ எங்கட மணியம் மாஸ்டரின் மகன் என்ற படியால் நாங்களும் ஓரளவுக்கு பொறுத்து பொறுத்துப் பார்த்தோம். இப்படியே போனால் ஒன்றில் நாங்கள்  உன்னை மண்டையில் போடுவோம். அல்லது அவர்கள் உன்னை மண்டையில் போடுவார்கள். உன்னுடைட செயல்பாடுகள் தொடர்ச்சியாக இப்படியே இருக்கும் என்றால் உன்னுடைய மூளையை நாய் நக்குவது நடக்கும். நீ நாட்டை விட்டு போ. ஒரு குடும்ப நண்பன் என்ற முறையில், உறவு என்ற முறையில் சொல்கிறேன் நீ இங்கே இருக்காதே.” என்றான். முப்பத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன் ரமணன் சொன்னது இப்பவும் என் மண்டைக்குள் கேட்டுக் கொண்டே இருக்கிறது. அதன் பிறகுதான் கொழும்புக்கு நிரந்தரமாக வந்தேன். அதன் பிறகு தமிழ்நாட்டுக்கு வந்து படிப்படியாக இங்கே வந்தேன். ஆனால் கட்டாயம் நாட்டை விட்டு வரவேண்டும் என்று வரவில்லை.

போர் என்பது வீரமும் கிடையாது, வெற்றியும் கிடையாது. அது வெறும் துயரம் மட்டுமே

சாரு நிவேதிதாவின் கோணல் பக்கங்கள் நூலில் நீங்கள் அகதியாகப் புலம்பெயரும் போது கையில் காசு ஏதும் இல்லாமல் சீனப் பெருஞ்சுவரில் தனிமையில் நின்று பீடி புகைத்த அனுபவத்தை குறிப்பிட்டு இருந்தார். அந்தக் காட்சியை கற்பனை செய்யும்போது பெரும் உளக்கிளர்ச்சி ஏற்படுகிறது. உங்களுடைய புலம்பெயர்ந்த பயண அனுபவங்கள் எப்படி இருந்தன?

ஊரை விட்டு 18 வயதில் நான் தமிழ்நாட்டுக்கு போனேன். அட உலகம் இவ்வளவு பெரிதானதா, அழகானதா, அதிசயமானதா சந்தோசமானதா என்று தமிழ்நாட்டுக்கு வந்த பின்பு தான்  தெரிந்தது. அந்த பிரமிப்பையும் பிரமாண்டத்தையும் வார்த்தைகளால் சொல்லி விளங்க வைக்க முடியாது.  தமிழ்நாட்டுக்கு வந்த பின் வாழ்க்கையில் எல்லாமே சுவாரசியமானதைப்போல இருந்தது. என்னுடைய நாட்டில் இருக்கும் போது சாகஸம் தனிய இருந்தது. இங்கே வந்த பிறகு சாகஸமும் சுவாரசியமும் சேர்ந்து கொண்டது.

தமிழ்நாட்டுக்கு வந்த பிறகு பம்பாய்க்குப் போய் சிறிது காலம் தங்கியிருந்தேன்.  வெளிநாடுகளுக்குப் போவதற்காகப் போகவில்லை. வேறு யாராவது அங்கிருந்து களவாக வெளிநாடு போவதற்காகப் போவார்கள். அவர்களோடு நானும் சும்மா போய் சிறிது காலம் ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம் தங்கி இருப்பேன். இப்படி ஒவ்வொரு ஊராக சுற்றினேன்.

 எனது சொந்தக்காரர்கள் நீ தமிழ்நாட்டையே சுற்றி சுற்றி வருகிறாய். ஒருமுறை சிங்கப்பூருக்கு வா என்றார்கள். சரி பார்ப்போமே என்று சிங்கப்பூருக்கு போனேன். அப்போது சிங்கப்பூரில் இருக்கும் ஒரு பயண முகவருடன் எனக்கு பழக்கமேற்பட்டது. அவர் தான் சீனாவுக்கு போவோம் வா என்று என்னை அழைத்தார். அது என்னைக் கனடாவிற்குக் கடத்துவதற்கான முயற்சி என்று எனக்கு அப்போது தெரியாது. சீனா தானே என்று நானும் எனது மாமாவிடம் திரும்ப தமிழ்நாட்டுக்கு போகின்றேன் என்று சொல்லிவிட்டு இவருடன் சீனாவுக்கு போனேன். ஆனால் என் உறவினர்களுக்கு  நான் சீனாவுக்குத் தான் போகின்றேன், அங்கிருந்து கனடா வருவேன் என்று தெரியும். சீனாவில் போய் இரண்டு மாதம் தங்கினேன். என்னை சீனாவில் வைத்து உறவினர்கள் கடத்தப்போகிறார்கள் என்று எனக்கு சிறியதாக ஒரு சந்தேகம் வந்தது. அதற்கு பிறகு நான் பிரயாண முகவரிடமிருந்து தப்பி ஓடிவிட்டேன். ஒரு இரண்டு மாதம் சீனாவில் உல்லாசமாகத் திரிந்தேன். அப்போது என்னிடம் கையில் கொஞ்சம் பணம் இருந்தது

பீக்கிங்கில் இருந்து ஒரு எண்பது கிலோ மீட்டர் இருக்கலாம். பன்றிகளை கறிக்கடைக்கு இறக்கிவிட்டு திரும்பிக் கொண்டிருந்த ஒரு வானில் ஏறிக் கொண்டுதான் பெருஞ் சுவர் இருக்கும் பகுதிக்கு போனேன். சுவர் என்பது சிறுமை. மலைகளின் மேல் கட்டப்பட்ட  நெடுஞ்சாலை அது. நாள் முழுவதும் அலைந்தேன். சுவரின் விளிம்பில் நான் அமர்ந்து இருந்த பகுதி சீனாவுக்கும் என் கால்கள் தொங்கிக் கொண்டிருந்த பகுதி மங்கோலியாவுக்கும் சொந்தமானது. ஒருவித பரவசம். அனுபவித்த தெல்லாவற்றையும் சந்தோசமாகத்தான் ஏற்றுக் கொண்டேன். கையிலிருந்து பணம் முடியும் தருவாயில் திரும்வும் பயணமுகவரிடமே போய் சேர்ந்தேன்.

1989இல் சீனாவில் தியானென்மென் சதுக்கத்தில் மாணவர் படுகொலை நடந்த காலத்தில் நான் அங்குதான் இருந்தேன். பிறகு பிரயாண முகவரே நீ சிங்கப்பூருக்கு போ. உன்னை வீட்டில் தேடுகின்றார்கள் என்று சொன்னார். சிங்கப்பூருக்கு போவதற்கு சீனாவிலிருந்து டோக்கியோ, பின்பு டோக்கியோவிலிருந்து சிங்கப்பூர் என பயண ஒழுங்கு செய்யப்பட்டிருந்து. சிங்கப்பூருக்கு போகும் விமானம் என்று ஒன்றில் ஏற்றிவிட்டார்கள். அதில் ஏறி இறங்கிய பிறகுதான் தெரிந்தது நான் இறங்கிய இடம் டோக்கியோ அல்ல. லொஸ் ஏஞ்சல்ஸ் என்று.

அதற்குப் பிறகு லொஸ் ஏஞ்சல்ஸ் இல் 3 மாதம் சிறையில் அடைத்தார்கள். சிறை என்றும் சொல்லமுடியாது. அது ஒரு முகாம் என்று நினைக்கின்றேன். பிறகு நீதிமன்றம் மூலம் வெளியே விட்டார்கள். லொஸ்ஏஞ்சல்சில் ஒரு வருடம் சுற்றித் திரிந்தேன். யோகன் என்கின்ற புண்ணியவானின் நட்பும் பணமும் அங்கு சுற்றித்திரிய உதவி செய்தது.

பிறகு அவர்தான் என்னை நியு யோர்க் மாநிலத்தில் இருக்கும் வபலோ நகருக்கு உள்ளூர் விமானத்தில் அனுப்பி வைத்தார். அங்கிருந்து வாடகைக் காரில் கனடாவின் எல்லைக்குப் போனேன். அங்கே Rainbow Bridge என்று கனடாவையும் நயாகராவையும் இணைக்கும் பாலம் ஒன்று இருந்தது. அந்த பாலம் வழியாக பெட்டியைத் தூக்கிக்கொண்டு நடந்தே போனேன். கனடாவிற்கு  ஏன் வந்தாய் என்று அதிகாரிகள் கேட்டார்கள். முழு விபரத்தையும் சொன்னேன். சில ஆவணங்களைத் தந்து வெளியே போகத்தெரியுமா என்று கேட்டார்கள்.  அதற்குப் பிறகு வாழ்க்கை இப்படியே போகின்றது.

என்னுடைய வாழ்க்கை என்பது பெரிய துயரம் நிறைந்தது இல்லை. ஒரு வகையான சாகஸமும் ஒரு வகையான பரபரப்பும் நிறைந்ததுதான் அது. என்னுடைய அகதி வாழ்க்கையும் துயரம் நிறைந்தது இல்லை. புலம்பெயர்ந்த நாடுகளில் அகதி வாழ்க்கைபற்றிக் கதை எழுதுபவர்கள் துயரத்தைச் சற்று மெருகூட்டித்தான் கையாளுகிறார்கள்.

தமிழ், முஸ்லிம் உறவுகளை உடைத்து சின்னாபின்னமாக்கியது இயக்கங்கள்தான் என்பதை நான் வெளிப்படையாகவே சொல்கின்றேன். அதே நேரம் அதனைத் தனியே  விடுதலைப்புலிகள் என்றுமட்டும் சொல்லமுடியாது. புலிகளுக்கும் பங்கு உண்டு, ஈபிஆர்எல்எப் உம் உண்டு, ரெலோவும் உண்டு, புளொட்டும் உண்டு, ஈரோஸும் உண்டு

உங்களுடைய எழுத்துக்கள் பற்றிப் பேசுவோம். ஓர் ஆயுத இயக்கத்தில் இருந்தேன் என்ற குற்ற உணர்ச்சிதானா உங்களை எழுத வைத்தது?

ஒரு வகையான மன உளைச்சல் இருந்தது என்பது உண்மைதான். அதாவது நான் தப்பித்துவிட்டேன். ஆனால் என்னையும் விட இளம் வயதான பையன்கள் போரில் இறந்துகொண்டிருக்கிறார்கள். போர் அவர்களை பயன்படுத்திக்கொண்டே இருக்கின்றது என்ற சஞ்சலம் இருந்ததுதான். நான் 15 வயதில் இருந்தபோது எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஒரு 15 வயது பையனிடம் துப்பாக்கியை கொடுப்பது எவ்வளவு ஆபத்தான விடயம் என்று இப்போது தெரிகின்றது. சிறார்களிடம் துப்பாக்கியை கொடுத்து சுடு என்றால் அவன் எல்லோரையும்தான் சுடுவான். அவனுக்கு எதிரி யார் என்று தெரியவா போகிறது. துவக்கைப்போலத்தான் சிறுவர்களுக்கும் எதிரிகள் கிடையாது. 

இந்தத் துயரங்களைக் கதைக்கின்றபோது, இவை பற்றி எழுதலாமே, இவை பதிவு செய்யப்பட வேண்டியவை, வெளியே சொல்லவேண்டும் என்ற எண்ணத்தைக் கொடுத்தவர் பத்திரிகையாளரான DBS ஜெயராஜ். அதற்குப் பிற்பாடுதான் எழுத ஆரம்பித்தேன்.. அதன் பின் கவிஞர் சேரனும், எழுத்தாளர் க.நவம் அவர்களும் உரம் ஊட்ட ஓவியர் கருணாவும் இணைந்தான். பின் நாட்களில் எழுதப்பட்ட சில கதைகளுக்கு ஸ்டாலின் ஞானமும் கற்சுறாவும் பெரிசும் உந்துதல் கொடுத்தார்கள்.

உங்களுடைய கதைகளை ‘வீரத்தின் மறுபக்கம்’ என்று குறிப்பிடுகிறீர்கள். இலக்கியம் ஊடாக அதனைச் சொல்ல வந்தீர்களா? அல்லது இலக்கியம் அதனைச் சொல்ல வைத்ததா?

நான் இலக்கியவாதி இல்லை. எனக்கு இலக்கியமெல்லாம் தெரியாது. இலக்கியம் எழுத வேண்டும் என்றெல்லாம் யோசித்ததும் இல்லை. உண்மையை சொல்ல வேண்டுமானால் நான் ஒரு தற்குறி.

போரும் வீரமும் இனிமையானவை இல்லை. இதற்கு பின்னால் பெரிய துயரமும், வலியும் இருக்கின்றது. இவற்றைத்தான் பதிவு செய்ய நினைத்தேன். போர் என்பது வீரமும் கிடையாது, வெற்றியும் கிடையாது. அது வெறும் துயரம் மட்டுமே. தமிழ் இலக்கியத்தில் மார்பில் வேல் பாய்ந்தால் வீரம், முதுகில் வேல் பாய்ந்தால் கோழை என்றெல்லாம் இருக்கின்றது. உண்மையில் தன் பிள்ளை இறந்ததைக் கண்ட தாய் இப்படியெல்லாம் சொல்லியிருப்பாரா.. இவற்றை வீரமாக புகழ்ந்து எழுதியது அரசனைச் சார்ந்த ஆண் கவிஞனாக  இருப்பான். 

போர், வீரம், வெற்றி இவற்றுக்கு அப்பாற்பட்ட துயரங்களை நாம் பதிவு செய்வதில்லைதானே. இப்போதுதான் இலக்கியத்தில் அப்படி நடக்கின்றது. அந்தக்காலத்தில் அதைச் சொல்ல பலர் விரும்பவில்லை. நான் வீரத்தினுடைய மறுபக்கம் துயரம் மட்டுமே என்பதைச் சொல்ல விரும்பினேன்.

யுத்தமும்  அதன் இரண்டாம் பாகமும், எண்ட அல்லாஹ் போன்ற சிறுகதைகள் அன்று தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் இருந்த சிநேக உறவையும், பின்னர் அதில் இடம்பெற்ற விரிசல்களையும் பேசுகின்றன. கிழக்கில் தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையிலான பிரிவினைக்கு ஒட்டுமொத்தமாக இயக்கங்களின் மீது பழியைப் போடுவது சரியா..?

ஆம். அதை இயக்கங்கள்தான் செய்தன. தமிழ், முஸ்லிம் உறவுகளை உடைத்து சின்னாபின்னமாக்கியது இயக்கங்கள்தான் என்பதை நான் வெளிப்படையாகவே சொல்கின்றேன். அதே நேரம் அதனைத் தனியே  விடுதலைப்புலிகள் என்றுமட்டும் சொல்லமுடியாது. புலிகளுக்கும் பங்கு உண்டு, ஈபிஆர்எல்எப் உம் உண்டு, ரெலோவும் உண்டு, புளொட்டும் உண்டு, ஈரோஸும் உண்டு. ஒருமுறை நான் மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா ஹொஸ்ரலில் இருக்கும் போது முஸ்லிம் கடாபி ஹொட்டலில் ஏதோ ஒரு பிரச்சினை ஏற்பட்டதில் தமிழ் முஸ்லிம் கலவரம் உண்டாகிவிட்டது. மஞ்சம்தொடுவாய், கல்லடி பக்கம் இருப்பவர்களுக்கும் காத்தான்குடி பக்கம் இருப்பவர்களுக்கும் கலவரம் ஏற்பட்டுவிட்டது. அந்தக் கலவரத்தை தமிழ் பக்கத்திலிருந்து தலைமை தாங்கியவர்கள் ஈரோஸ்காரர்கள்தான்.

இந்திய இராணுவத்துடன் இணைந்து இயங்கிய இயக்கங்களில் எனக்குத் தெரிந்த சில புளொட் பையன்களும் இருந்தார்கள். ஒருநாள் இந்திய ராணுவமும் அவர்களும் காத்தான்குடிக்குள் நுழையப்போகிறார்கள். அந்த புளொட் பையன்கள் என்னிடம், இந்திய இராணுவத்துடன் உள்ளே போனால் முஸ்லீம் பெண்களுடைய முலைகளைப் பிடிக்கலாம் வாடா என்று என்னைக் கேட்டார்கள். கனடாவில் ஒரு சீஸனுக்கு பழம் பழுத்தால் நாங்களாகப் போய் தோட்டங்களில் செர்ரி பழம் பிடுங்கலாம். இது மாதிரியான நிகழ்வுக்கு போவதைப்போல அவர்கள் என்னைக் கூப்பிட்டார்கள்.

இனங்களைப் பகையாக்கினால் இலாபம் என்று இயக்கங்கள் கருதினார்கள் என்று நினைக்கின்றேன். முஸ்லிம்களை வேட்டையாட இந்திய ராணுவமும் ஆர்வமாகவே இருந்தது.

என்னுடைய சிறு வயதுக் காலத்தில் கல்முனை கடற்கரைப் பள்ளிவாசலுக்கு எங்களுடைய  சுற்றத்தார் உறவுகள் எல்லோரும் திருவிழாவுக்கு போவார்கள். காலப்போக்கில் பகையாக மாறி முஸ்லிம்கள் என்று பிரித்துப் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். இது எப்படி, ஏன் நடந்தது என்று எனக்கு விளங்கவில்லை. இயக்கங்கள் பகை ஆக்காமல் இருந்திருந்தால் இரண்டு தரப்பினரும் ஒன்றாகத்தான் இருந்திருப்பார்கள். அண்மையில் கவிஞர் ஆத்மாவுடன் கதைத்தேன். முஸ்லிம் நண்பர் என்ற முறையில் அவருக்கு காத்தான்குடியில் இருக்கின்ற பள்ளிவாசல் பெருநாட்களை விடவும் மாமாங்கப் பிள்ளையார் கோவில், களுதாவளைப் பிள்ளையார் கோவில், உகந்தை முருகன் கோவில் திருவிழாவுக்குப் போய் அங்கே கிடைத்த மகிழ்ச்சிதான் அவருடைய நினைவில் இருக்கின்றது என்பதை உணர்ந்தேன். இப்போது அப்படி நடக்க முடியுமா? முஸ்லிம் மக்கள் இந்து கோவில்களுக்கு வருவது தடை செய்யப்பட்டுள்து. தான் கோயில்களுக்கு சென்று வந்த நினைவுகளில் வாழ்வதாக ஆதங்கப்பட்டு பதிவு செய்கிறார் எஸ்.எல்.எம் ஹனிபா.  இது கொடுமையில்லையா?

இனங்களுக்கு இடையிலான விரிசலுக்கு தமிழ் இயக்கங்கள்தான் காரணம் என்கிறீர்கள்.. ஆனால் இவற்றுக்குப் பின்னணியில் சிங்கள பௌத்த பேரினவாதம் ஒரு தூபமிடும் கருவியாகச் செயற்பட்டிருக்காது என்று நம்புகிறீர்களா.. ஏனென்றால் அது தன்னுடைய துணை இராணுவக் குழுக்களில் தமிழ் இளைஞர்களைப்போலவே முஸ்லீம் இளைஞர்களையும் இணைத்துப் பயிற்சி அளித்தது. அவர்களைக்கொண்டு புலிகளுக்கு எதிராக மட்டுமல்ல, அப்பாவித் தமிழ்ப்பொதுமக்களுக்கு எதிராகவும் தாக்குதல்களை நடத்தியிருக்கிறது. உங்களுடைய படுவான்கரை கதையில்கூட அதை எழுதியிருந்தீர்கள்… ?

ஆரைப்பற்றை, காரைதீவு போன்ற முஸ்லீம் ஊர்களின் எல்லையில் இருப்பவர்களுக்கு என்னுடைய அனுபவத்துக்கு  எதிராக அவர்களுடைய அனுபவம் இருக்கும்.  வீரமுனை தாக்குதலை ஜிகாதிகள்தான் இலங்கை ராணுவத்துடன் சேர்ந்து நடத்தினார்கள். காரைதீவு படுகொலைகளுக்கும் தீ வைப்புகளுக்கும் ஊர்காவல் படை என்ற பெயரில் இயங்கிய ஜிகாத் அமைப்பினர்தான் காரணம். ஆனாலும் தமிழ் இயக்கங்கள்தான் முஸ்லிம் தமிழ் பகைக்கு முதல் காரணம். அதனை சிங்கள அரசுகள், முஸ்லிம் ஜிகாதிகை உருவாக்கி கிழக்கு தமிழர்களை கொல்ல பயன்படுத்திக்கொண்டன. 

தமிழ் இயக்கங்களை அழிப்பதற்கு இஸ்ரேலின் மொஸாட் உளவு நிறுவனம் இலங்கை ராணுவத்துக்கு பயிற்சி அளிக்க வந்தபோது முஸ்லிம் மக்கள் அதனை எதிர்த்து போராட்டங்கள் நடத்தினார்கள். தமிழர்கள் என்ன செய்தார்கள்?  சோனியைக் கொல்ல ஜே. ஆர் இஸ்ரேல்காரனை கூப்பிட்டு இருக்கான் என்று, ஜயவர்தனாவுக்கு ஆதரவு தெரிவித்தார்கள். இத்தனைக்கும் இது நடந்தது எண்பத்தி ஐந்தில்.

யுத்தசன்யாசம் கவிதைத்தொகுப்பில்  உள்ள கவிதைகள் முழுவதிலும் விரக்தியே ஒலிக்கிறது. ஆங்காங்கே வாழ்கையின் நம்பிக்கைக்கு ஏதும் பிடி கிடைக்காதா என்று தேடுகிறது. அந்தக் கவிதைகளை தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் எழுதி இருந்தீர்கள். இன்று யுத்தம் முடிந்து பத்தாண்டுகள் கடந்தாகிவிட்டது. அந்த விரக்தி மனநிலையை இன்றைக்குத் திரும்பிப் பார்க்க என்ன தோன்றுகிறது?

தொன்னூறுகளின் தொடக்கத்தில் இந்த வாழ்க்கையை நான் விரக்தி மாதிரித்தான் நினைத்தேன். இது நான் விரும்பி ஏற்றுக்கொண்ட நாடு இல்லை. யாழ்ப்பாண சமூகத்தைப் பொறுத்தவரை அவர்கள் வெளியேற வேண்டும் என்ற ஆசையுடன்தான் வெளியேறினார்கள். அதற்குப் போர் பயன்படுத்தப்பட்டது. ஒரு வித்தியாசமான, மேட்டுக்குடி வாழ்க்கைக்கு ஆசைப்பட்டுத்தான் வெளியேறினார்கள். எனக்கு நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று ஒரு தேவை இருக்கவில்லை. நான் சந்தோசத்தை நாடி வரவில்லை. அதே நேரத்தில் போர் சூழலும் எனக்கு விருப்பமானதாக இருக்கவில்லை.

அப்போது ஒரு வித உளவியல் சிக்கலுக்கு உள்ளானேன். ஒரு மீட்கப்படாத தத்தளிப்பு நிறைந்த காலமாக அதை உணர்ந்திருந்தேன். அதை என் படைப்புகளில் எழுதி இருந்தேன். அப்போதுதான் கனடாவில் இருந்து தலைமறைவாகி நேபாளத்தில் லும்பினியிலும், சோனாலியிலும் அலைந்தேன். பக்மதி நதிக்கரையோரம் இருக்கின்ற காசி விஸ்வநாதர் கோயில் கொஞ்ச காலம் தங்கி இருந்தேன். அப்புறம் அம்மாவும் காதலியும் என்னை கண்டு பிடித்து திரும்பவும் கனடாவுக்கு அனுப்பி வைத்தார்கள்.

‘எண்ட அல்லாஹ்’ சிறுகதை அதனுடைய அரசியலுக்காக  இலக்கிய சூழலில் காரசாரமாக விமர்சிக்கப்பட்டது. அந்த விமர்சனங்கள் உங்களை இலக்கியச் சூழலில் இருந்து ஒதுக்கின என்று கூட சொல்லலாம். அது ஏன் அவ்வாறு நிகழ்ந்தது.

எண்ட அல்லாஹ் சிறுகதையை யாருமே விருப்பவில்லை. விடுதலை இயக்கத்துக்குள் பிழை கண்டு பிடிக்கக்கூடாது. ஒரு தமிழனை நீ, யாருக்கோ காட்டிக்கொடுத்து விட்டாய் என்று சொன்னார்கள். அந்த கதை எழுதியதற்காக  மன்னிப்பு கேட்டெல்லாம் எழுதச்சொன்னார்கள். அதே போல் முஸ்லிம் சமூகத்துக்குள்ளும் அது பிரச்சனை ஆனது. தங்கராசா என்று முஸ்லிம்களுக்கு பெயர் இல்லை என்று சொன்னார்கள். எனக்குத் தெரிய அன்று கிழக்கு முஸ்லிம்களில் அன்னலட்சுமி என்றெல்லாம் பெயர் இருந்திருக்கிறது.. முஸ்லீம் கலாசாரத்திற்கும் தமிழர்கள் கலாசாரத்திற்கும் இடையில் தொடர்புகள் இருந்தன. சில அம்மன் கோயில்களுக்கு வண்ணக்கர்களாக (தர்மகர்த்தா) முஸ்லீம்களும் இருந்திருக்கின்றார்கள். இப்போதுதான் அவர்கள் முற்றாக அரேபிய கலாசாரத்திற்குச் செல்கிறார்கள்.

மட்டக்களப்பில் கல்லடி சிவானந்தா பாடசாலை சுவாமி விபுலானந்தரால் திறக்கப்பட்ட ஒரு சைவப்பாடசாலை. அங்கே 40 பேர் படிக்கின்ற ஒரு வகுப்பறையில் 10 முஸ்லிம் மாணவர்களாவது இருப்பார்கள். காத்தான்குடியைச் சேர்ந்த நிறைய மாணவர்கள் கல்லடி சிவானந்தா பாடசாலையில் படித்தார்கள். முஸ்லீம், தமிழ் என்றெல்லாம் அப்போது அடையாளங்கள் இருக்கவில்லை. இருபத்தி மூன்று ஆண்டுகளுக்கு பின் ஊருக்கு போயிருந்தேன். எங்கள் காத்தான்குடியை காணவில்லை.

ஏ.பி.எம் இத்ரீஸிடம் பேசும்போது கூட நான் ஊரை விட்டு போகும் போது காத்தான்குடி இப்படி இல்லை. என்று கவலைப்பட்டேன். அங்கே வளர்க்கப்படுகின்ற ஈச்ச மரம் என்னை அந்நியப்படுத்துகின்றது. ஏதோ அரபு தேசத்துக்குள் போகும் ஒரு உணர்வு ஏற்படுகின்றது. இது ஏன் என்ற கேள்வி என்னிடம் எழுகிறது என்றேன்.

 ‘இந்த அரபு ஈச்சமரங்கள் வளராது’ என்று இத்திரிஸ் சொன்னார்.

‘இன்று அரபு ஈச்சை மரங்கள் காத்தான்குடியில் பெரிதாக வளர்ந்துவிட்டன.’

தீவிரமான அரசியல் கதைகள் எழுதிய அதே காலத்தில் ‘முதிர்கன்னி’ போன்ற கதைகளும் எழுதி இருக்கிறீர்கள். யுத்தத்தின் சிதைவில் சிக்குண்ட வாழ்கையைத்தான், ஆணாதிக்க சமூகத்தின் மத்தியில் வாழும் பெண்ணின் கதையாக அதில் சொல்லி இருந்தீர்கள். அப்படியிருக்க அந்தக் கதைக்கு பெண்ணியவாதிகளின் கண்டனக் குரல்கள் எதற்காக எழுந்தன..    

அவர்கள் நான் பெண்களின் சிக்கல்களை கவர்ச்சிகரமாக எழுதுகிறேன் என்று குற்றம் சொன்னார்கள். இங்கு ரொரண்டோவில் ஒரு பத்து தமிழ் பெண்ணியவாதிகள் இருக்கின்றார்கள். அந்த பத்துப்பேரும் ஒருவரை ஒருவர் விமர்சித்துக்கொண்டு அவர்களுக்குள் பகையாகத்தான் இருப்பார்கள். பெண்ணியத் தோழிகள் தாங்கள் முதலில் சந்திக்கின்ற ஆணின் மோசமான அனுபவங்களை கொண்டு எல்லா ஆண்களையும் அளவிடுவது சரியான பிழை.

உண்மையில் எனக்கும் சில பெண்ணியவாதிகளும் இடையே அவ்வப்போது பிரச்சினைகள் ஏற்படுவது உண்டு. அது அந்தரங்கமானது. அந்தப் பிரச்சினைகளுக்காக கதையை எதிர்மறையாக விமர்சித்தார்கள். அவர்களில் பலர் என் தோழிகள்தான். அவர்கள் அப்படிதான் கதைப்பார்கள்.  அவர்களுடைய காரசார விமர்சனங்களை ஏற்பது போல் நான் பாசாங்கு செய்வேன். அவர்களும் நம்பி விடுவார்கள்.

இலட்சியவாதத்தைவிட உயிர்வாழ்தல் முக்கியம் என்பதை திரும்பத்திரும்ப உங்கள் கதைகள் பேசுகின்றன. உயிர்வாழ்தல் என்பதற்கு அப்பால் மானுடத்திற்கு வேறு தேவைகள் இல்லையா? அதை நோக்கி உங்கள் கதைகள் ஏன் செல்லவில்லை?

அப்போதைய வயதில் நமது இருத்தலுக்காக போர் செய்யவேண்டும் என்று இருந்தது. ஆனால் போருடைய ஒட்டுமொத்த முடிவு எல்லாவற்றையும் அழிக்கப்போகின்றது என்று உணர்ந்தபோது தப்பி உயிர் வாழவேண்டும் என்ற எண்ணம்தான் எனக்கு ஏற்பட்டது. இதே போல உயிர்வாழ்வது தான் மனிதப்பிறப்பிற்கு முக்கியமா என சிலர் என்னிடம் கேட்டிருந்தார்கள். நாங்கள் கௌரவமாகவோ அல்லது ஓரளவு கௌரவமாக வாழ்வதற்குத்தான் புதிய சித்தாந்தகளை உருவாக்குகின்றோம். நாங்கள் போராடுவதெல்லாம் ஒரு கௌரவத்துக்காகத் தானே. இலட்சியவாதமோ போராட்டமோ எல்லாமே உயிர் வாழ்வதற்காகத்தானே.

தலைவர்களின் தொலை நோக்கில்லாத லட்சியத்துக்கா அப்பாவிச் சிறுவர்களை சாகடிப்பதெல்லாம் மாவீரம் என்று சொன்ன சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தானே நாம். லட்சியவாதத்திற்காக தெருக்களிலும் காடுகளிலும் அநாதைகளாக கௌரவம் இல்லாமல் சாவதை நான் வெறுக்கிறேன். சாவிலும் கூட ஒரு அறம் இருக்க வேணும்தானே.

முள்ளிவாய்க்கால் அழிவு வரப்போகின்றது என்பது எனக்குத் தெரியும். 2002ம் ஆண்டு குவர்னிகா என்ற ஒரு கதை எழுதியிருந்தேன். இந்தப் பேச்சுவார்த்தை முறியும். அதன் பின் ஒரு பெரிய அழிவு ஏற்படப்போகின்றது என்பது எல்லாவற்றையும் அதில் உணர்த்தியிருந்தேன். ஆனால் அந்த அழிவுக்குப் பிறகு என்ன நடக்கும், என்ன தீர்வு என்று எனக்கும் தெரியாது. இப்படி ஒரு அழிவு வரப்போகின்றது, தப்பி ஓடுங்கள் என்று சொல்லத் தெரிகின்றது. ஆனால் அதற்கு என்ன தீர்வு என்று சொல்லத் தெரியாது.

ஓரளவுக்கு கௌரவமாகவும், பிடித்த ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கும் முதலில் உயிர்வாழ வேண்டும். அதற்கு தப்பி ஓட வேண்டும். உங்களுக்குத் தெரியுமா.. முப்பது வருடங்களுக்கு முன்னர் இலங்கைக்குப் போய் போரில் ஈடுபடவேண்டும் என்று கனடாவில் ஓர் ஆயிரம் பேர் ஒன்று சேர்ந்தார்கள். அதாவது அங்கே போய் பிரபாகரனை வீழ்த்திவிட்டு ஆயுதப்போராட்டத்தை கைப்பற்றி நடாத்துவோம். கப்பல் வாங்குவோம், ஆயுதம் வாங்குவோம். என்றார்கள். இரண்டு மூன்று வருடங்களுக்கு பின்னர் அவர்களுக்கு திருமணம் முடிய அப்படியே விட்டுவிட்டார்கள். இப்போது அவர்களிடம் கேட்டால் அப்படியா, அப்படி ஒரு விடயம் நடந்ததா என்று கேட்பார்கள்.

அன்று உங்களுக்கு இருத்தலியல் சிக்கல்கள் இருந்தன. அதை வெளிப்படுத்த எழுதினீர்கள். இன்று அப்படி இல்லாதபடியால் எழுதுவதை குறைத்துவிட்டீர்களா? திடீரென்று நாடகப் பக்கம் சென்றுவிட்டீர்களே?

2002க்கு பிறகு நான் சிறுகதை எதுவும் எழுதவில்லை என்று நினைக்கின்றேன். இல்லை அதற்கு பிறகும் மூன்று கதைகள் எழுதி இருக்கின்றேன். பிறகு திடீரென்று நாடகத்துக்குள் புகுந்துவிட்டேன். ஒரு ஆறு அல்லது ஏழு வருடங்கள் நாடகங்கள் செய்து கொண்டிருந்தேன். அதற்கு என்ன காரணமென்றால் தீவிர நாடகம் என்று ரொறன்டோவில் போடுவார்கள். ஆனால் திரைச்சீலையை திறந்து விட்டு இரண்டு பேர் நின்று கதைப்பதைத்தான் நாடகம் என்று நிகழ்த்தினார்கள்.  அப்படி இல்லை, இப்படியும் ஒரு நாடகம் போடலாம் என்று ஒரு முயற்சி செய்தேன். அது வெற்றியளித்தது. இங்கே நாடக பிரதிகளை எழுதி மேடையேற்றும் வழக்கம் மிக அரிதாகவே இருந்தது. ஆங்கிலம், பிரஞ்சு மொழி நாடகத்தை எடுத்து அதன் மொழிபெயர்ப்பை நாடகமாக போடும் வழக்கம் தான் இருந்தது. அப்படியில்லாமல் நாங்களே எங்கள் போர் சூழலை மையப்படுத்தி பிரதி எழுதி  செய்யலாம் என்று முயற்சி செய்தேன். அதற்குப் பெருந்தொகையான மக்களை கொண்டு வந்து பார்க்க வைத்ததன் பின்னர் அதில் பெரிய ஆர்வம் வந்தது.

முதலில் கருமையம் என்ற அமைப்புடன் சேர்ந்து நாடகம் போட்டேன். ஒரு கட்டத்துக்குப் பிறகு அவர்களுக்கும் எனக்கும் ஒத்துவராததால் அதிலிருந்து விலகிவிட்டேன். பின்னர் அந்த அமைப்பு உடைத்து சின்னா பின்னமாக்கி விட்டது.

கறுப்பி சுமதி உயிர்ப்பு என்ற பெண்கள் பட்டறை வைத்திருந்தார். அந்த பெண்கள் பட்டறையுடன் சேர்ந்து  மூன்று அல்லது நான்கு நாடகங்கள் போட்டிருப்பேன். மோசமான இந்த ஆணாதிக்கவாதியுடன் கறுப்பி சேர்ந்து இயங்கியதால், கறுப்பிக்கு இருந்த பெண்ணியத் தோழிகளும் விலகிக்கொண்டு போய்விட்டார்கள்.

நாங்கள் முழுக்க முழுக்க அரசியல் நாடகங்கள் மட்டுமே போட்டோம்.

அதில் ஒன்று “போர் செய்ய ஒரு சாதாரண மனிதன் உளவியல் ரீதியாக எப்படி தயார் செய்யப் படுகின்றான்.” என்பதைப்பற்றி “என் மௌனத்தி்ன் மொழிபெயர்ப்பு” என்னும் நாடகம். அதேபோல போரில் குழந்தைகள் கொல்லப்படுவது சரியா என்பதைப் பற்றி “பகைப்புலம்” என்றொரு நாடகம் போட்டேன். பிறகு மூன்றாம் உலகப்போர் வந்து விடும் என்ற அச்சத்தில் ஒரு குழு இயேசுவைக் கடத்துவதாக “காலப்பயணம்” என்றொரு நாடகம். அவ்வாறே me from Jaffna என்றொரு நாடகம். யாழ்ப்பாணத்திலிருந்து கனடாவுக்கு புலம் பெயரும் ஒருவன் என்னென்ன கொண்டு வருவான் என்று முழுக்க முழுக்க மொழியே இல்லாத ஒரு நாடகம் அது. அதற்குப் பிறகு குட்டி குட்டி நாடகங்கள் போட்டிருக்கின்றோம். இப்போது அதுவும் இல்லை. முதலில் நாடகம் போடுவதென்றால் ஒரு நாடகத்துக்கு என்னுடன் 30 நடிகர்கள் இருந்திருக்கின்றார்கள். இப்போது இரண்டு பேரைச் சேர்த்தாலே பெரிய விடயம்.

சக்கரவர்த்தி

ஒரு காலத்தில் பாரிஸில் நிகழ்ந்ததைப்போல பிறகு கனடாவில்தான் ஏராளமான இலக்கிய முயற்சிகள் எழுச்சியாக நடந்தன. இன்று அப்படியல்ல. எல்லாமே ஓய்ந்து போனதைப்போலத் தோன்றுகிறது.  கனடாவில் தமிழ் இலக்கிய முயற்சிகள் எப்படி இருக்கின்றன?

இல்லை. இங்கே எதுவும் தேறாது. கனடாவில் உள்ள எழுத்தாளர்கள், தீவிரமான எழுத்தாளர்கள்கூட எண்ணிக்கைக்காகத்தான் எழுதுகின்றார்கள். இது எனக்குத் திருப்தி தருவதாக இல்லை. இனி எங்களுடைய பிள்ளைகள் எழுதினாலும் கனேடியர்களாகத்தான் எழுதுவார்கள். ஒரு ஈழத் தமிழரின் பிள்ளையாக அவர்கள் எழுத மாட்டார்கள். அதற்கான சூழல் இப்போது இல்லை.

என்னுடைய வீட்டில் வளர்கின்ற என் இரண்டு பிள்ளைகளையும் பார்க்கிறேன். அவர்கள் தமிழ் இலக்கியம், எழுத்து என எதுவும் செய்வார்கள் என்ற எந்த நம்பிக்கையும் இல்லை. அவர்கள் தமிழ் என்ற அடையாளமும் இல்லாமல்தான் வளர முற்படுகிறார்கள். ஒன்றிரண்டு உதிரிகள் இருக்கலாம். எஸ்.பொ சொன்னதுபோல புலம்பெயர் இலக்கியத்தில்தான் தமிழ் இலக்கியம் இனிமேல் வாழும் என்பது இன்று பெரும் நகைச்சுவையாகிவிட்டது. 2000ஆம் ஆண்டுடன் அந்த நிலை முடிந்துவிட்டது.

உண்மை என்னவென்றால் நாட்டின் நினைவுகளை எழுதித் தீர்த்தபிறகு இந்தப் புலம்பெயர்ந்த நாட்டிலே எங்களுக்கு அனுபங்கள் இல்லை. வேண்டுமானால் எதையாவது புனையலாம்.. 1970 ஆம் ஆண்டு நாட்டை விட்டு ஓடி வந்துவிட்டு முள்ளிவாய்க்காலில் நின்றது போல சிலர் எழுதுகிறார்கள் அல்லவா… அப்படி பொய்யான புனைவுகளை வேண்டுமென்றால் எழுதலாம்.

என்னைப் பொறுத்தவரை கனடா மாதிரியான நாட்டிலே எங்களுடைய வாழ்க்கை முறையும் எனக்கு புதிய அனுபவங்களைத் தரவில்லை. 15 வருடங்களாக எனது வாழ்க்கையில் அனுபவங்கள் என்று எதுவும் இல்லை. திரும்பத் திரும்ப ஒரே விடயத்தைத் தான் பார்த்துக் கொண்டும் கேட்டுக்கொண்டும் இருக்கின்றோம். அதே குளிர், அதே வேலை, அதே வெயில், அதே பூ, அதே மரம், அதே செடி கொடி அவ்வளவு தான். சம்பளமும் அதே சம்பளம் தான். கூடவும் இல்லை, குறையவும் இல்லை. எல்லாம் இப்படி இருக்கும் போது எப்படி நாம் புதிய அனுபவங்களை தேடிக்கொள்வது? முற்றிலும் புனைவாக புனைவதில் எனக்கு பெரிய உடன்பாடு இல்லை. அதை என்னால் செய்ய முடியாது.

ஊரை விட்டு ஓடி வரும்போது பெட்டி நிறைய நாம் கொண்டு வந்த பழைய உடைகளைப் போட்டு போட்டு பழையதாகி விட்டது. அதை எப்படி திரும்ப திரும்ப போடுவது? நாம் புது உடை வாங்க வேண்டும். இங்கே உள்ள புது உடைகள் அவ்வளவு பொருத்தமாக இல்லை. அவ்வளவு தான்.

அனுபவம் தீர்ந்துவிட்டதாக சொல்கிறீர்கள். ஆனால் அதே சம்பளம், அதே வேலை என்பது கூட ஓர் அனுபவம் தானே..?

2000இல் கணையாழி கனடா சிறப்பிதழுக்கு ஒரு கதை கேட்டார்கள். அப்போது நான், அன்றைய ரொரண்டோ தமிழ் சமுகத்தை பற்றி “போங்கடா டேய்” என்றொரு கதை எழுதிக்கொடுத்தேன். அந்தக் கதையை  எஸ்.பொவிலிருந்து எல்லோரும் ஒட்டுமொத்தமாக நிராகரித்தார்கள். இந்தக்கதையை வெளியிட்டால் புலம்பெயர் சூழலில் நிறையப் பிரச்சினைகள் வரும் என்றார்கள். அது மட்டுமில்லாமல் 21ம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியத்தை புலம்பெயர் இலக்கியம் தான் காப்பாற்றும் என்ற எஸ். பொவின் கூற்றுக்கு இக்கதை பிழையாக அமைகின்றது என்றார்கள்.

நீங்கள் இப்படியான கதைகளை எழுதாமல் கனடாச் சூழல் பற்றி கதை எழுதுங்கள் என்று அறிவுரையும் கூறினார்கள்.

பனியில் சறுக்கி விழுகின்ற பிரச்சினை, பலத்த காற்றில் வேலைக்குப் போகின்ற பிரச்சினை கிறடிட்கார்ட் தொல்லை இவற்றை வைத்து புலம்பெயர் சிறுகதை எழதச் சொன்னார்கள். எனக்கந்த ஞாபகம் வருகிறது இப்போது.

கனடாவிற்கு  வந்த ஆரம்பத்தில் 1990, 1991களில் ஆண்டு புதிய அனுபவங்கள் கிடைத்தனதான். அதன் பிறகு ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் தான் வாழ்க்கை போயக்கொண்டிருக்கிறது. கடந்த பத்து, பதினைந்து வருடங்களுக்கிடையில் வித்தியாசம் இல்லை. இப்போது இந்த கொரோனா காலத்தில்.. ஆறு மாதங்களாக காலையில் எழும்பி வெளியே போவேன். வீட்டுக்கு வந்து சமைப்பேன். செர்ரி மரத்துக்கு கீழே அமர்ந்திருந்து பியர் குடிப்பேன். சாப்பிடுவேன். நித்திரை கொள்ளுவேன். எழும்புவேன், தேனீர் குடிப்பேன், திரும்பவும் ஊர் சுற்றுவேன். ஒரு கியுபன் சுருட்டு புகைப்பேன். திரும்ப வருவேன். வொட்கா குடிப்பேன். யூ டியுப் பார்ப்பேன். இந்த வாழ்க்கையில் நான் என்ன அனுபவத்தைப் தேடுவது?

கவிதை எழுதினீர்கள், சிறுகதை எழுதினீர்கள். சொல்வதற்கு ஏதோவொன்று இருக்கின்றபோது அதற்கான வடிவத்தை தேர்ந்து எடுத்தீர்கள்.  நாவல் வடிவத்தில் சொல்வதற்கு ஏதும்  இல்லையா?

நாவல் எழுதுகின்ற திட்டம் இருந்தது. ஆனால் இனி எழுதுவதாக இல்லை. எங்களுடைய ஊரில் வன்னியன் என்று ஒருவர் இருந்தார். அவரைப்பற்றி ஒரு நாவல் எழுத வேண்டும் என்ற ஒரு ஆசை இருந்தது. அவர் பறையர் சமூகத்தால் காப்பாற்றப்பட்டு அந்த சமூகத்துக்காக உழைத்து வாழுகின்ற ஒருவர். அவர் புளொட் அமைப்பைச் சேர்ந்த ஒரு ஆயுதப்போராளி. பறையர் சமூகத்து மக்களை களுதாவளை பிள்ளையார் கோவிலுக்குள் ஆயுத காவலுடன் உட்புக வைத்தார். இந்த நிகழ்வு புலிகளை கோபமடையச் செய்து விட்டது. வன்னியனை கைது செய்த புலிகள் அவரை ட்ரைக்டரில் தலை கீழாக கட்டி ஊரெங்கும் தெருத் தெருவாக உயிருடன் இழுத்து திரிந்தார்கள். பிறகு வன்னியனின் தலையை வெட்டி பிள்ளையார் கோயில் துறையில் கம்பொன்றில் குத்தி வைத்தார்கள்.  இந்த போராளி வன்னியனைப் பற்றி நாவல் எழுதுகின்ற எண்ணம் தான் இருந்தது. பிறகு அது விடுபட்டு போய்விட்டது. இனி எழுதுவேன் என்ற நம்பிக்கை இல்லை. ஆனால் சிறுகதை தொடர்ச்சியாக எழுதுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எழுதுவேன். எழுதலாம் என்று நம்பிக்கொண்டிருக்கின்றேன். இனி அடுத்தடுத்த வருடங்களில் நிறைய ஓய்வு கிடைக்கும். இன்னும் பதுக்கி வைத்த கொஞ்சம் கொஞ்ச நினைவுகள் இருக்கின்றன. அந்த நினைவுகளை ஒருங்கிணைத்து சிறுகதை எழுதலாம் என்று ஒரு நம்பிக்கை இருக்கின்றது. அதற்கு அப்பால் எனக்கு online இல் வீடியோ கதைகள் சொல்ல விருப்பமாக இருக்கின்றது. ஏனெனில் இப்போது வாசிக்கின்ற மக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இனி காட்சி ஊடகம் தான் சரி என்ற நம்பிக்கையும் இருக்கின்றது.

சினிமா கனவும் இருந்தது. அதுவும் மெல்ல மெல்ல விடுபட்டு போய்விட்டது. நான் நாடகங்களில் ஓளியை அதிகம் பயன்படுத்தி வந்தேன். அப்போது சினிமா கனவுகளின் எச்சம் தான் அந்த நாடகங்கள் மூலம் வெளிப்படுகின்றது என்ற விமர்சனமும் வந்தது. சிறுகதை எழுதுவது தான் எனக்கு சாத்தியமான விடயம். இப்போது இல்லாவிட்டாலும் வரும் காலத்தில் சிறுகதை மட்டுமே எழுத முடியும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

கடைசிக் கேள்வியை உங்களுடைய கவிதை ஒன்றோடு முடித்து வைப்போம். ‘என்னுடைய இதயம் யாருக்காக வெடித்துக் கண்ணீர் சிந்துகிறதோ அவர்கள் உங்களுக்காகவும் வெடித்துக் கொள்கிறார்கள்’ என்று ஒரு கவிதையில் எழுதினீர்கள்..  அந்தக் கவிதையில் தெறிக்கின்ற அத்தனை கோபமும் யார் மீது..?

“பின்னென்ன உயர்குல வேளாளன்” என தலைப்பிட்ட அந்த கவிதை எழுதப்பட்ட சூழல் ஒரு சாதிய பிரச்சினையை சார்ந்தது. எமது நாட்டில் நடைபெறுவதைப்போன்ற பெரிய சாதியப் பிரச்சினைகள் தமிழர்களிடையே கனடாவிலும் ஏற்பட்டது. அந்தக் கவிதை தொடர்பாக  ரொரண்டோ தமிழ் சூழலில் பெரிய சர்ச்சை ஏற்பட்டது. ஆதிகணபதி என்கின்ற ஒரு பல் மருத்துவர் என் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கெல்லாம் இறங்கினார்.

இங்கே பாடசாலைகளில் கூட சாதிப்பிரச்சினை நடந்தது. நான் என்னுடைய பிள்ளைகளை தமிழ்ப் பாடசாலைக்கு அனுப்பாமல் மறித்தேன். அவர்களுடைய தமிழ்ப் புத்தகத்தில் உயர்குலம், வெள்ளாளர் என்றெல்லாம் இருந்தது. கனடாவில் எனக்குத் தெரிந்த சிலரை  கோயிலுக்குள் வரக்கூடாது என்ற மறித்து இருந்தார்கள். இங்கே உள்ள ஒரு தமிழ் பிள்ளைக்கு அந்தப்பிள்ளை சாதி மாறி காதலிக்கின்றது என்று அவருடைய மாமா Iron box ஆல் சித்திரவதை செய்திருக்கின்றார்.

இங்கு ‘கரீனா மகேந்திரன்’ என்று தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பெண்ணிடம் பெரும்பான்மை ஊடகம் ஒன்று ஏன் தமிழ் மக்களிடம் இப்படியான பிரச்சினை நடக்கின்றது என்று கேள்வி கேட்டது. அதற்கு அவர் சொன்ன பதில் “ஒட்டுமொத்த தமிழர்களிடம் இப்படி ஒரு பிரச்சினை இருக்கின்றது என்று சொல்லக்கூடாது. இங்குள்ள சாதி குறைந்தவர்களிடம் தான் இப்படி ஒரு பிரச்சினை இருக்கின்றது” என்று பதிலளித்தார். 2000, 2001 ஆம் ஆண்டுகளில் இங்கே கனடாவில் சாதிப் பிரச்சினை அதிகமாக தலை தூக்கியது. அதனால் தான் அந்த கவிதை எழுதவேண்டி வந்தது. போயும் போயும் உங்களுக்காக அவர்கள் அங்கே இறக்கின்றார்களே என்றுதான் அதை எழுதினேன். அது சமூகத்தின் மீதான கோபம்.

அந்த வரிகள்.. போராளிகளைக் குறித்த நெகிழ்ச்சியான உணர்வினைக் கொண்டிருக்கின்றன.. 

போராளிகள் மீது எனக்கு என்ன கோபம்? ஒவ்வொரு போராளியிலும் நான் என்னைத்தானே பார்த்தேன்.. ஒரு பதினைந்து வயது பெடியனுக்கு என்னென்ன உணர்வுகள் இருக்கும். நான்தான் ஒவ்வொரு போராளியும். இரண்டு தன் முனைப்பு கொண்ட தலைமைகளுக்காக ஏன் சிறார்கள் சாக வேண்டும்.

 அதனால் போரை நடாத்துபவர்கள் மேல் தான் எனக்கு கோபமே தவிர போராளிகள் மீது எனக்கு கோபம் எல்லாம் இருந்ததில்லை.

அனோஜன் பாலகிருஷ்ணன்

தமிழில் இளைய தலைமுறைப் படைப்பாளிகளில் குறிப்பிடத்தக்க சிறுகதை ஆசிரியர். இரண்டு சிறுகதைத் தொகுப்புக்கள் வெளியாகியிருக்கின்றன. இலக்கிய விமர்சன, மதிப்பீடுகளிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகிறார். தற்போது இங்கிலாந்தில் வாழ்கிறார்.

6 Comments

  1. நீண்ட காலத்திற்கு பின்பு சக்ரவர்த்தியின் எழுத்தை மீட்டெடுத்த அனோஜனுக்கு நன்றி சக்ரவர்த்தி கூறும் தன் அனுபவம் என்பதில் கணிசமான அனுபவம் பொதுவானதும்கூட.

    யாழ்பபாண சமூகம் …,அது மேற்கொண்ட போராட்டம் அதில் உள்வாங்கப்பட்ட குழந்தைகள், கிழக்குமாகண முஸ்லிம் தமிழ் முரண்பாடுகள் என பேசியவை அனைத்துமே பலருக்கும் பொதுவான அனுபவமாகவே இருக்கும்… அவர்கள் நியாயமான நீதியான அறம் சார்ந்த சுய விமர்சகர்களாக இருப்பின்.
    அப்படி அல்லாது தோற்கடிக்கப்பட்ட போராட்டம் மௌனிக்கப்பட்ட போராட்டம் என மீண்டும் ஆயுதம் ஏந்த தூண்டிக்கொண்டிருப்பவர்களுக்கு சக்ரவர்த்தி அப்போதும் துரோகிதான் இப்போதும் துரோகிதானே…. இல்லையா! அனோஜன & சக்ரவர்த்தி

  2. பயனுள்ள பல விடயங்களை அலசியுள்ள சக்கரவத்தியின் நேர்காணல். நீண்ட கால இடைவெளிக்குப் பின் !
    நன்றிகள் .

    • நீண்ட நாட்களின் பின் சக்கரவர்த்தியை கண்டது போன்றதொரு மகிழ்ச்சி. வன்னியன் பற்றி நிச்சயம் எழுதுங்கள். நீங்கள் எழுதாது விட்டால், யாரோ ஒருவர் வன்னியனைப் பற்றி புனைந்து எழுதி விடுவார்கள். பொய்களே சரித்திரங்களாக மாறும் காலமிது.

  3. மிகச்சிறப்பான நேர்காணல். போரின் சூழல்பற்றிதெளிவாக பேசியுள்ளார்.

உரையாடலுக்கு

Your email address will not be published.