ஈழ இலக்கியம் சார்ந்த எழுத்துக்களையும் பேச்சுகளையும் கவனிக்கும் போது அதில் அரசியல் தவிர்க்க முடியாததாக இருப்பதை அவதானிக்க முடிகிறது. அரசியல் நிலைப்பாடு என்பது நேரடியாகவோ மறைமுகமாகவோ பல படைப்பாளிகளிடம் வெளிப்படவே செய்கிறது. ஷோபா சக்தி விடுதலைப் புலிகளின் மீதான விமர்சனத்தையே தன் கதைகளின்(கண்டிவீரன்) வழியாக ஒரு பிரகடனமாக மாற்றுகிறார். தெளிவத்தை ஜோசப்பின் கதைகள் (மீன்கள்) முற்போக்கு மனிதாபிமானவாதத்தை பறைசாற்றுகிறவையாகவே உள்ளன. கலாமோகனுடையது (நிஷ்டை) இடப்பெயர்வால் சிதைவுறும் அகத்தினுடைய வலிகளைப் பேசும் உலகமாக இருக்கிறது.
ஆனால் இதுபோன்ற தீர்க்கமான பின்னணியை தமிழ்நாட்டின் முதன்மை புனைவெழுத்தாளர்களிடம் காண்பது அரிது. தமிழ்நாட்டுப் படைப்பாளிகளின் அரசியல் பெரும்பாலும் வெகுமக்கள் சார்ந்ததாகவே உள்ளது. தன்னை ஏதேனும் அரசியல் கட்சியுடன் அடையாளப்படுத்திக் கொள்ளும் எழுத்தாளர்களின் படைப்புகளில் கூட அவர்களுடைய சித்தாந்த சார்புக்கான ஆதரவுத் தடயத்தைக் காண இயலாது. ஒரு வகையில் இது இயல்பானதும் கூட. ஏனெனில் தமிழகம், ஈழம் போன்ற அரசியல் மோதல்களின், பண்பாட்டு மோதல்களின், போர்களின் நிலம் அல்ல. ஆகவே தமிழகத்தையோ மலேசியா சிங்கப்பூர் போன்ற பிற தமிழ் இலக்கியச்சூழல்களையோ ஈழ இலக்கியத்துடன் ஒப்பிடும்போது இந்த வேறுபாட்டை நினைவில் கொள்வது அவசியமென நினைக்கிறேன். ஏனெனில் தமிழகத்தைப் பொறுத்தவரை ‘அரசியல் எழுத்துக்கள்’ என்ற பெயரில் முன்வைக்கப்படுகிறவை வெறுமனே கட்சிப் பிரகடனங்களாக மட்டுமே இருக்கின்றன. செய்தித் தாள்களில் இருந்தும், கட்சி அறிவுஜீவிகளின் கட்டுரைகளில் இருந்தும் பெறப்பட்ட செயற்கையாக உணர்ச்சி ஏற்றப்ட்ட கதைகளாகவே தமிழகத்தில் எழுதப்படும் பெரும்பாலான அரசியல் கதைகள் உள்ளன. இதன் காரணமாகவே தமிழ் இலக்கியச்சூழலில் ‘சுயப்பிரகடனத்துடன்’ எழுத வருகிறவர்கள் மீது ஒரு அவநம்பிக்கை உள்ளது. அரசியல் நிலைப்பாடு காரணமாக ஒரு தற்காலிகமான வெளிச்சம் இத்தகைய புனைவுகளுக்கு கிடைத்தாலும் அவை உடனடியாக மறக்கப்பட்டும் விடுகின்றன. சென்னையை மையமாக வைத்து எழுதப்பட்ட சில நாவல்கள் இப்படி சிலாகிக்கப்பட்டு மறக்கப்பட்டது சமீபத்திய உதாரணம்.
ஆனால் ஈழத்தின் புனைவெழுத்துகளுக்குப் பின்னே போர் என்ற உடனடியான அரசியல் காரணம் இருக்கிறது. ஆகவே தன்னுடைய எழுத்து இதைத்தான் சொல்லப் போகிறது என்ற பிரகடனத்துடன் ஒருவர் எழுத வந்தாலும் அப்பிரகடனம் எழுத்தின் உண்மைத்தன்மையை பெரும்பாலும் பாதிப்பதில்லை. சக்கரவர்த்தியின் யுத்தத்தின் இரண்டாம் பாகம் தொகுப்பில் உள்ள பெரும்பாலான கதைகள் போருக்கு எதிரான அத்தகையதொரு தெளிவான பிரகடனத்தைக் கொண்டுள்ளன.
யுத்தத்தின் இரண்டாம் பாகம் தொகுப்பில் உள்ள அனைத்துக் கதைகளும் தொன்னூறுகளில் எழுதப்பட்டுள்ளன. நூல் இரண்டாயிரத்தில் வெளிவந்துள்ளது. ஏறத்தாழ இதே காலத்தில் எழுதிய ஷோபா சக்தியின் புனைவுகளின் நிலைப்பாடு எதுவோ அதுவேதான் சக்கரவர்த்தியினுடையதாகவும் இருக்கிறது. வன்முறைக்கு எதிராக நிலைகொள்ளும் எழுத்து. ஆனால் ஷோபாவிடமிருந்து சக்கரவர்த்தியை வேறுபடுத்தும் முக்கியமான அம்சம் இவர் கதைகளில் வெளிப்படும் சமநிலை. ஷோபா சக்தியின் புனைவுகளில் புலிகளின் மீதான கோபம் பெரும்பாலும் கரும்பகடியாக வெளிப்படுகிறது. பல தருணங்களில் வன்முறை மிகத்துல்லியமாக விளக்கப்படுகிறது. ம் நாவலில் இந்த வன்முறையை சில இடங்களில் கொண்டாடும் எல்லைக்கே ஷோபா நகர்த்திச் சென்று விடுகிறார். கதை சொல்லலை விட விமர்சனமே ஷோபாவின் நாவல்களில் பிரதானமாகின்றன. அவருடைய சிறுகதைகள் மேலும் கச்சிதமானவை என்றாலும் உடனடியாக நினைவுக்கு வரும் கண்டிவீரன், எழுச்சி போன்றவை தமிழின் சிறந்த பகடிக்கதைகளாகவே இருக்கின்றன. ஆனால் சக்கரவர்த்தி கதை சொல்வதில் ஆர்வங்கொண்டவராக இருக்கிறார். தமிழின் கதைசொல்லி எழுத்தாளர்களைப் போலவே உரையாடல்களை கலைநயத்துடன் கட்டமைக்கிறார். எந்தக் குழப்பமும் இல்லாமல் நேரடியாக கதை சொல்கிறார்.
முதிர்கன்னி, பிசாசுகளின் வாக்குமூலம் போன்ற சற்று மாயத்தன்மை கொண்ட கதைகளில் கூட எளிய ஆர்வமூட்டும் உத்திகளையே பயன்படுத்தி இருக்கிறார். இத்தொகுப்பின் கதைகள் எதிலும் உத்தி கதையை மறைப்பதில்லை. கதைக்களனும் மிகத் தெளிவாகவே இருக்கிறது. பெரும்பாலான கதைகளின் தொடக்கத்திற்கு முன்பு போருக்கு எதிரான கண்டிப்பான ஒரு வரி எழுதப்பட்டிருக்கிறது.
/இனச்சுத்தம் இனச்சுத்தம் எனச்சொல்லி
சோனகரை எல்லாம்
ஒற்றைநாள் இடைவெளியில்
நாட்டைவிட்டு நாம் விரட்டியடித்தோம்
நாமென்ன நாசிகளுக்கா பிறந்தோம்?
நம் பூர்வீகம் என்ன ஜெர்மனியா?/
‘யுத்தமும்…’ கதையின் முன் வரும் வரி இது.
‘யுத்தமும்’ , ‘அதன் இரண்டாம் பாகமும்’ என்ற இரு கதைகளும் தொகுப்பின் முதல் மற்றும் இறுதிக் கதைகளாக அமைகின்றன. ஆங்கிலேயர் வருகையால் ஒடுக்கப்பட்டவர்கள் மதமாற்றம் செய்யப்படுவதை தடுக்க ஒடுக்கப்பட்டோரை கொலை செய்ய முயலும் ஒரு உள்ளூர் அரசனின் கதையாக ‘யுத்தமும்’ விரிகிறது. ‘…அதன் இரண்டாம் பாகமும்’ என்ற கதை தமிழ் போராளிகள் இஸ்லாமிய விவசாயிகளின் நிலத்திற்கு தீவைப்பதையும் தீவைக்கப்பட்ட பிரதேசத்தை சேர்ந்த ஒருவன் அதனால் குற்றவுணர்வு கொள்வதையும் சித்தரிக்கிறது. இந்த கட்டமைப்பே இத்தொகுப்பை பற்றி ஒரு விஷயத்தை உணர்த்தி விடுகின்றன. இக்கதைகள் எதுவும் சிங்களப் பேரினவாதம் பற்றியோ அதை எதிர்த்த தமிழர் வீரம் பற்றியோ தமிழர் அடைந்த வெற்றி தோல்விகள் குறித்தோ பேசவில்லை. போர்ச்சூழல் தமிழர்களிடையே ஏற்படுத்திய பிளவுகளையும் கிழக்கு இலங்கையின் தமிழர்கள் – பெரும்பாலும் முஸ்லிம்கள் – யாழ்ப்பாணத் தமிழர்களால் ஒடுக்கப்படுவதையுமே பேசுகின்றன.
ஆடு புலி புல்லுக்கட்டு, பிசாசுகளின் வாக்குமூலம், யுத்தமும், …அதன் இரண்டாம் பாகமும் ஆகிய கதைகளில் இந்த சிக்கலை பேசுவதற்கு ஆசிரியர் ஓர் ஒடுக்கும் சுயத்தை தேர்ந்து கொள்கிறார். ஆடு புலி புல்லுக்கட்டு கதை ஒரு குண்டுவெடிப்பை நிகழ்த்திவிட்டு தப்பிச் செல்வதற்காக காத்திருப்பவனின் பார்வையில் விரிகிறது. அவனுடைய உண்மையான அடையாளம் தெரியாமல் அவனுடன் தங்கி இருக்கும் நண்பர்கள், விவசாய வேலைக்கு என்று நம்பி அவனுக்கு உரமும் லாரியும் கொடுக்கும் இஸ்லாமிய வியாபாரி என்று ஒவ்வொருவரையும் நினைத்து வருந்தியபடியே அந்த குண்டுவெடிப்பினை அவன் நிகழ்த்தச் செல்வதை இக்கதை சொல்கிறது. இக்கதையினூடாக கீதையின் வரிகள் சொல்லப்படுவது கதைக்கு கூடுதல் கனத்தை அளிக்கிறது. பிசாசுகளின் வாக்குமூலம் கதை இயக்கத்தில் இருந்து எண்ணற்ற கொலைகளை செய்த ஒருவன் தற்கொலை செய்து கொண்டு பிசாசாக மாறியபின் தன்னுடைய செயல்களை சக பிசாசுகளுடன் பகிர்ந்து கொள்வதாக அமைக்கப்பட்டுள்ளது. யுத்தமும் போர்த்துகீசியர் காலத்தில் நடைபெறும் கதை. மதம் மாறுகிறவர்களை கொல்வதற்காக பணிக்கப்படும் ஒரு தளபதியைப் பற்றிய கதை.
ஆண்-பெண் உறவின் ஆணவ மோதல் என்ற தளம் பொதுவாக ஈழ எழுத்துக்களில் அதிகம் காணக்கிடைக்காத ஒரு அம்சம். இத்தொகுப்பில் உள்ள ரூபம், மனசு, இறகுகள் போன்ற கதைகளை இவ்வகைமையில் சேர்க்கலாம். மனசு இந்தத் தளத்தில் எழுதப்பட்ட சிறந்த கதை. (சக்கரவர்த்தி புலம்பெயர்ந்த பிறகே இக்கதைகளை எழுதி இருக்கிறார் என்றாலும் மனசு, நானும் ஒகஸ்டீனாவும் ஒரு பந்தையக் குதிரையும் என்ற இரு கதைகள் மட்டுமே புலம்பெயர் வாழ்வின் சிக்கல்களை பேசுகின்றன.) கலாச்சார வேறுபாட்டால் மனைவியின் நடவடிக்கைகளை ஏற்காது மண வாழ்வில் கசப்படைந்த ஒருவன் கதைசொல்லியிடம் தன் வாழ்வைச் சொல்லி புலம்புவதாகவும் கதை சொல்லி அவனைத் தேற்றுவதாகவும் எழுதப்பட்டுள்ள இக்கதை இறுதியில் அவன் தன் மனைவியிடமே திரும்ப விரும்புவதாகச் சொல்லுமிடத்தில் புதுப் பரிமாணம் பெறுகிறது. ரூபம் உறவுச்சிக்கலை தத்துவார்த்தப்படுத்த முயலும் ஒரு எளிய கதை. இறகுகள் கதை மேம்போக்கான வாசிப்புக்கு பெண்களை கேலி செய்வது போலத் தெரிந்தாலும் தமிழ்ப் பெண்களின் சில ஆழமான பண்பாட்டுச் சிக்கல்களை சக்கரக்கட்டி, வெள்ளக்குட்டான் என்ற இயக்கப் பெயர்கள் கொண்ட இரண்டு பெண்களை மையமாகக் கொண்டு பகடி தொனிக்க கூறிச் செல்கிறார்.
முதிர்கன்னி இத்தொகுப்பின் சிறந்த கதைகளில் ஒன்று. போர் என்பது ஆழமான பாதிப்பை ஏற்படுத்துவது பெண்களிலும் குழந்தைகளிலும்தான் என்பது நமக்குத் தெரிந்தாலும் அந்த பாதிப்புகளின் பரிமாணங்கள் சொல்லி முடியாதவை. தொடர்ச்சியாக ஆண்களால் வெவ்வேறு விதங்களில் ஏமாற்றப்படும் பெண் காலப்பயணம் செய்து வேதாளத்தையும் விக்ரமாதித்தியனையும் சந்திப்பதாக இக்கதை சொல்லப்பட்டுள்ளது. ஆண்களால் ஏமாற்றப்படுதல் என்பதை ஒற்றைப்படையாக உணர்ச்சிகரமாக முன்வைக்காமல் அப்பெண்ணின் பலகீனமும் இரக்கவுணர்வும் ஒரு எல்லையில் முட்டாள்தனமும் அவள் என்று அவள் நிர்மூலமாக்கப்படுவதன் முழுப் பரிணாமமும் கதையில் வெளிப்படுகிறது.
படுவான்கரை, எண்ட அல்லாஹ் இரண்டு கதைகளும் சக்கரவர்த்தி பிரகடனமாக எதை முன்வைக்கிறாரோ அந்த நோக்கத்தை நன்கு நிறைவேற்றுகின்றன. அவ்வகையில் இத்தொகுப்பின் சிறந்த கதைகள் இவையே. படுவான்கரை கதையில் தமிழ் போராளிகளால் சிங்களர்களின் உளவாளி என்றும் சிங்களர்களால் தமிழ் போராளிகளின் உளவாளி என்றும் நம்பப்பட்டு சித்திரவதை செய்யப்படும் ஒருவனின் சித்திரம் பதிவாகி இருக்கிறது. எண்ட அல்லாஹ் மிகக் கச்சிதமான சிறுகதை. வியாபார விஷயமாக கணபதியை பார்க்க வரும் முஸ்தபா தமிழ் போராளிகளிடம் சிக்கிக் கொள்வதும் கணபதியால் அவனுக்கு இழைக்கப்படும் துரோகமுமே கதை. இந்த இரண்டு கதைகளிலும் பொது அம்சமாக தென்படுவது நம்பிக்கையின்மையும் அச்சமுமே. துன்பப்படுகிறவர்கள் மட்டுமல்ல துன்புறுத்துகிறவர்களிடமும் அச்சமே வெளிப்படுகிறது. இந்த அச்சத்தையும் நம்பிக்கையின்மையும் இக்கதைகளில் போரே உருவாக்குகிறது. குறிப்பிட்ட எத்தரப்பையும் தாக்க வேண்டும் அல்லது அம்பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கமெதுவும் இல்லாமால் வாழ்வின் இயல்பொழுக்கை நீர்த்துப் போகச் செய்யும் போர் என்கிற செயலின் மீதான விமர்சனமாகவே இக்கதைகள் வெளிப்பாடு கொள்கின்றன. கிழக்கு இலங்கையில் துன்புறுத்தப்பட்ட இஸ்லாமியர்கள் மீதான கரிசனம் குற்றவுணர்வாக பல கதைகளில் வெளிப்படுகிறது. மறுபுறம் பெண்களைப் பற்றிய காதல் மிகுந்த நுண்ணிய அவதானிப்புகள். இந்தக் காதலும் கரிசனமும் பகைப்புலமாகும் சக்கரவர்த்தியின் புனைவுலகில் முன்வைக்கப்படும் வன்முறை மீதான விமர்சனம் உயிர்ப்புடன் வெளிப்படுகிறது.
சுரேஷ் பிரதீப்
தமிழ்நாடு திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தொடர்ச்சியாக புனைவுகள், விமர்சனங்கள் எழுதிவருகிறார். அழகியலை முன்னிலைப்படுத்தி எழுத்தாளர்களின் சிறப்பியல்புகளை நுட்பமாக மதிப்பிடுபவர்.ஒளிர் நிழல் என்ற நாவலும் இரண்டு சிறுகதைத் தொகுப்புக்களும் வெளியாகியுள்ளன.