பதினைந்து முதல் இருபது வரையில் பிரிவுகள் அவற்றின் நுனிகளில் பால் சுரக்கும் குமிழ்கள் என்றெல்லாம் விலாவாரியாகச் சொன்னது கூகிள். அலுப்பாக அதை மூடினாள். இயர் போர்னை பொருத்திக் கொண்டு கண்களை மூடினாள். “கழுத்தின் கீழே கவிதைகள் ரெண்டு மிச்சமுள்ளதே… அதுவா, அதுவா, அதுவா…” என்று பாடியது அது. ப்ளே நெக்ஸ்ட் போட்டால் “கொப்பரைத் தேங்கா, முத்தின மாங்காய்” “மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி கண்ணே”.

“ஷிட்!” இயர் போர்ன் வயரைப் பிடுங்கித் தரையில் எறிந்தாள்.

அந்தச் சிறு பெண் செவிலி அதிர்ந்து விட்டாள். வேறு யாரும் கவனிக்கவில்லை. அல்லது அவள் அப்படி நினைத்துக் கொண்டாள்.

அந்த செவிலி அருகில் வந்து மிக இனிமையான, மிகமி கச் செயற்கை தொனித்து விடாத மென்மையான, அதனாலேயே இயந்திரத் தன்மையான குரலில், “எதுவும் தவறாகி விட்டதா மாம்?” என்றாள். இல்லையெனத் தலையசைத்தாள் இவள். அவள் போய் மற்றொருத்தியிடம் ஏதோ கிசுகிசுப்பாயிருக்க, அவள் ஓடி வந்து “அக்கா ,ஆர் யூ ஓகே?” என்றாள். என்ன தான் முயன்றாலும் இந்த அக்காவெனும் அழைப்புகளில் மனம் இளகுவதைத் தவிர்க்க முடியாதது எனக்கு மட்டுமா என எண்ணியவாறே புன்னகைத்து தலையசைத்தாள். கொஞ்சம் வெளியே எங்காவது போய்ட்டு வாங்க, இது பதற்றம் தரும்”,

“புரிகிறது” என்றாள் அவள்.

அந்த ஸ்கேன் சென்டரில் கொரோனாவாலோ என்னவோ கூட்டமில்லை. எப்படியும் தன் முறை சீக்கிரம் வந்து விடும். “கீழே ஐஸ் க்ரீம், காபி, பாப்கார்ன் கூட கிடைக்குது அக்கா” என்று அவள் குழந்தைக்குச் சொல்வது போலச் சொன்னாள்.

அவை மௌனமாக வளர்ந்தன. உலோகக் கோளங்காக, உடல் முழுவதும் உருண்டை உருண்டையாக. கடைசியில் தன் உடம்பு தனித் தனி இரும்புருண்டைகளாகப் பிரிந்து பிரிந்து மிதந்து போவதைப் பார்த்தாள். அதிலொன்று வெடித்து வீடு எரிந்து சாம்பாலாவதாகவும்.

அம்மா பேரழகியாம் இளவயதில். சென்னையிலிருந்து பெண் பார்க்க வந்து உடனே சரி சொல்லி, நிச்சயதார்த்தப் புடவைக்கு அளவு ஜாக்கெட் வாங்கிப் போய் விட்டார்களாம். அப்புறம் தாத்தா சொந்தத்தில் என் மகனிருக்க அதெப்படி நீங்க அந்நியத்தில் பெண்ணைக் கொடுக்கலாம் என்று சண்டை போட்டாராம். பிறகு “மாமா பையனுக்கே கேட்கிறாங்க, மன்னிச்சுக்கங்க” என்று முதலில் பார்த்த மாப்பிள்ளை வீட்டுக்குச் சொல்லி விட்டார்கள். அப்படித்தான் இங்க வந்து நான் சிக்கியது என்று அம்மா அடிக்கடி சொல்வதுண்டு.

என் மகளும் “என்ன ஆச்சி சின்ன வயசில சிம்ரன் மாதிரி இருந்திருக்காங்க” என்று கிண்டலடிப்பாள். “அட போ பாப்பா” என்ற அம்மாவின் வெட்கம் தான் அந்த பரிசோதனைக் கூடத்தில், கண்ணாடிக் குவளைக்குள் கருஞ்சிவப்புச் செதில்களாக மிதந்தது. பிறகு மயானத்தில்  நெருப்பாக எரிந்தது. எவ்வளவு அழகான எவ்வளவு அநித்யமான எத்தனை சத்தியமான, மேலும் நித்தியமான நெருப்பு.

அம்மா வீட்டு ஜன்னல்களை யாரையும் திறக்க விடுவதில்லை, தூசி தட்டக் கூட. அவை வழியாக எதுவோ நுழையும் என அம்மா நினைத்தார்களோ என்னவோ. கட்புலனாகாத, தவிர்க்கவே முடியாத எதுவோ ஒன்று. அவை மரணத்தின் சாளரங்கள் என அம்மா உறுதியாக நம்பினார். ஜன்னல்களைத் திறக்க வேண்டும், வெளிக்காற்று உள்ளே வர வேண்டும் என்று அக்கா எவ்வளவோ சொல்லியும் அம்மா ஒத்துக் கொள்ளவேயில்லை.

மரணத் தருவாயில் மனித மனம் கனிந்து விடும் தானே. அம்மா அப்படியே வேறு மாதிரி இறுக்கம். எல்லோரையும் குறை சொல்லும் குணம். அண்ணியைச் “சனியன்” என்றாள். அக்காவை அதை விட மோசமான வார்த்தையால் திட்டினாள். “காலேசு வேலைக்குப் போறவளுக்கு இவ்ளோ மேக்கப் என்னத்துக்கோ அவ பாடம் நடத்தப் போறாளா, அல்லது எவனுக்கும் முந்தி விரிக்கப் போறாளா?” என யாரும் நம்பக் கூட மாட்டார்கள். பெற்ற மகளை யாராவது அப்படிச் சொல்வார்களா! அம்மா சொன்னாள். நிறையக் கெட்ட கெட்ட வார்த்தைகள். அக்காவிடம் ஸ்வேதா எதையும் சொல்லவில்லை. அம்மாவைப் போல ஆகி விடுவேனோ என ஸ்வேதா பயந்தாள். அம்மாவைப் போலப் புற்றுநோய். அம்மாவைப் போல அனைவர் மீதும் வெறுப்பு. மரணத் தறுவாயிலும் இறுக்கம். யாருமே உடனிருக்க முடியவில்லை. எல்லோருக்குமே வேலை, வேறு ஊர். அண்ணாவின் அபார்ட்மெண்ட்டிலிருக்க அம்மாவிற்குப் பிடிக்கவில்லை.

“அதெப்படி ஒரே ஒரு ரூமில் ஒத்தைல இருக்க? அவளும் ஆபிஸ் போயிடுவா”

“ஏன் இந்த நர்ஸ்  உனக்குப் பிடிக்கல அம்மா? ” என்றால் பதிலிருக்காது.

“வீட்ல பல்லி அதிகம். பழைய வீடுல்ல, ஆனா பல்லியை அடிச்சா தலை வலி வரும்”

“உன் பட்டுச் சேலைலாம் பாப்பாவுக்கு குர்தா தைச்சுடலாமே, நீயும் உடுத்த துறதில்ல” என்று அம்மாவின் இறுதிக் கால உரையாடல்கள் இப்படி இருந்தன.

ஸ்வேதா தலையசைத்தாள். இன்று வரலாமா என நாள் கேட்ட போதிருந்தே  மனம் குலைந்து விட்டது. கரிய குமிழ்கள் உதிக்கின்றன. சிறிய வெல்வட் ஸ்டிக்கர் பொட்டளவே. தேகத்தில் அறையப்பட்ட ஆணிகள் போல.

ஒரு போதும் கண்டிராத அம்மாவின் மார்பகங்களை அன்று அப்படி பரிசோதனைக் கூடத்தில் பார்த்திருக்க வேண்டாம். பார்க்கத் தோன்றியது, எதெது எப்படியாகும் எனத் தெரிந்து கொள்ளும் உந்துதல். தெரிய முடியாது ஒரு போதும் என்ற அறிதலின் ஆயாசம். எல்லாம் தான் இங்கே இப்போது கொண்டு வந்து உட்கார்த்தி இருக்கிறது.

கீழே காபி, பாப்கார்ன்  சாப்பிடலாம் என எழுந்த போது “அடுத்து நீங்க தான்” என்ற  கீச்சுக் குரலில் அயர்ந்து உட்கார்ந்தாள். அந்த இடத்தைக் கூட்டிப் பெருக்குபவள் “காபி வாங்கியாரவா” என்றாள். மறுத்துத் தலையசைத்தாள். அவசரத்தில் ரசித்து நிதானமாகக் குடிக்க  முடியாது. ஓஷானிக் பையிலிருந்த சானிடைசரை இன்னும் ஒரு முறை உபயோகித்துக் கொண்டாள். இறுதிக் கட்டத்தில் சினிமா தியேட்டரில் நாற்காலி நுனியில் உட்காரும் சிறுவனாகத் தன்னை உணர்ந்தாள். படபடவென்று வந்தது. அவர் காலையில் “ஒரு எக்ஸ்ரே மாதிரி தான். நானும் வரட்டுமா? வீட்ல இருந்து ஆனா வேலை பார்க்கணும். லீவ் சொல்லிட்டு வரட்டா?” என்றார். “ஒண்ணும் வேணாம். உங்களுக்கு வரணும்னு இல்லை. அப்டினா வரேன்னு தானே சொல்லியிருப்பீங்க. வரட்டுமானு கேட்பிங்களா? நானே பார்த்துக்கிறேன்” என்றாள். அவன் தோளை உயர்த்தி கைகளை விரித்து உதட்டைப்  பிதுக்கினான்.

“இந்தப் புடவையா, இதுவா” என்று கருநீலத்தில் இளநீலக் கரையிட்டதையும், மென் சிவப்பையும் காட்டிய போதும் சிரித்து விட்டான். “உனக்கு இதுக்கு சுடிதார் வசதியாக இருக்கும்” என்று ஏதோ சொல்ல வந்தவன் அதைச் சொல்லவில்லை. அவரையும் கூட்டி வந்திருக்கலாம் எனத் தோன்றியது.

“ஸ்வேதா” அவள் விழுந்தடித்து எழுந்து பின் சுதாரித்து அந்தப் பரிசோதனை அறைக்குள் நுழைந்தாள்.

“வாங்க”

ஒரு நீள இயந்திரம், எக்ஸ்ரே மாதிரியே. “ஆமாம்” அதிக வெளிச்சமற்ற அறை.

“உங்கள் மேல் உடைகளையும், உள்ளாடைகளையும் அகற்றி விடுங்கள்” என்பதைக் கேட்டுத் திடுக்கிட்டாள்.

கணவனை நினைத்தாள். சுடிதாரின் டாப்பை கழற்றுவது எளிதாயிருந்தது. உள்ளுடைகளைக் கழற்றும் போது “உன்னித் தெழுந்த என் தட முலைகள் மானிடவர்க்கென்று பேச்சுப் படில் வாழ்கிலேன்” எனும் வரிகள் ஏன் ஞாபகம் வர வேண்டும்?

“இடதை இதன் மேல் வைங்க. கொஞ்சமா வலிக்கும்.” அவள் முன் ஒரு உலோகத் தட்டு இருந்தது. பிறகு மற்றொரு தட்டு  அவள்  மார்பை அழுத்தியது. “ஸ்” என்றாள்.

ஸ்வேதா இருக்காளே, வலியில் உடம்பு பிளக்கும் பிரசவத்தின் போது. பல்லால் உதட்டைக் கடித்தாளே ஒழிய கத்தவேயில்லை. இப்படி அலறிக் கூப்பாடு போட்டு குளுக்கோஸ் குழாயப் பிடுங்கி, கையக்கால உதறிடனா பிள்ளைக்கேதாவதாயிடும்.

“அவ்ளோதான். இப்ப வலது”

வலி எங்கோ இருந்த ஆழப் புள்ளியிருந்து கொடிகொடியாய்க் கிளைத்து உடலெங்கும் பரவி உச்சந்தலையில் வெடிப்பதை உணர்ந்தாள்.

அனிச்சையாக வலதை எடுத்து ஒரு தட்டில் வைத்து விட்டு இடிக்க வரப் போகிற மறு தட்டிற்காகக் காத்திருந்தாள். “உன் இடது முலை அருந்துகையில் என் கண்களில் குழந்தைமையின் நிஷ்களங்கம். வலது முலை அருந்துகையில் என் கண்களில் காதலின் உற்சவம்” என்ன வரிகள். ஏன் இவ்வளவு வரிகள் எப்போதும் எப்போதும் என்னுள் ஓட வேண்டும்? முழங்கை மடேர் என்று எதிலோ இடித்தது போன்ற, ஒரு அனல் கூட்டம் என் மீது கொட்டப்பட்டது மாதிரியான வலி. ஒப்புவமை இல்லாத வலி .

“அவ்ளோதான் வலிச்சுதா? ரொம்ப ஸாரி”. சுடிதாரை அணிந்த படி “இட்ஸ் ஓகே” என்றாள்.

“முடிவு ஒருவாரத்தில் அனுப்புவோம். நீங்கள் உங்கள் அருகாமையிலுள்ள மருத்துவரிடம் கேட்டுக் கொள்ளலாம். இணையம் வழியாகவே கூட.. புற்றுநோய் பரம்பரையாக வராது. ஆனாலும், சோதிப்பது நல்லது. இந்த மாமோக்ராபி பிடிக்கலனா நீங்க உங்க பெண் மருத்துவரைப் பார்க்கச் சொல்லலாம். நீங்களே கூடப் பார்த்துக்கலாம். இல்ல, பெட்டர் நீங்க டாக்டரைப் பாருங்க. அல்லது, இங்கே வாங்க; ஆறு மாதத்திற்கு ஒரு தடவை தான்” புன்னகைத்துப் பணம் செலுத்திப் படி இறங்கினாள். நினைவுகள் ததும்பின.

படிகள், படிகள், படிகள் “இரண்டு நாள் ஐஸ் ஒத்தடம் பாரசிடமால் ஓகே?”

“ஓகே”

படிகள்

பால் ஊறணும்னு குச்சிக் கருவாட்டைக் குழம்பு வைத்தது,

படிகள்

வற்றணும்னு மல்லிகைச் சரம் வைத்து,

படிகள் .

Shit .அந்த காபிக் கடை  கீழே இருந்தது. சாப்பிட்டே  விடலாம்.

அவள் வருவதைப் பார்த்ததும் கார் நெருங்கி வந்தது. “முடிஞ்சுதா பாப்பா?”

“ஆமாண்ணே, எங்கயாவது சாப்பிட்டுடலாம்ணே”

“நீ சாப்பிடுப்பா, இப்ப தான் வடை டீ அடிச்சேன். மணியும் 11தான். நான் வேணா உன்னோட உட்கார்ந்திருக்கேன். சரியா?”

“சரிண்ணே”

காரில் ஏறி உட்கார்ந்ததும் அதை இயக்கிச் சொன்னாள் “Calvin, கொஞ்சம் depressive ஆக இருக்கேன்” நல்ல வேளை. சாரதிக்கு ஆங்கிலம் தெரியாது. “உனக்கு ஒரு அணைப்பைத்தர நினைக்கிறேன். முடியாதே. பதிலாக ஒரு ஜோக் சொல்கிறேன். வானத்திலேயே இல்லாத moon என்ன moon ? gulabjamoon. ஹஹ்ஹா”

“நீயும் உன் ஜோக்கும். உன் தலைல இடி விழ” என்றாள்.

“pardon”என்றான் கேல்வின். அவனை அடித்துச் சாத்தினாள்.” உன்னை எப்படி அழைப்பது” “மக்கள் என்னை ஜப்பானில் கூகுரு என அழைக்கிறார்கள். நீ என்னை Calvin என்றழைக்கலாம்.

“வேற பெயரிலழைத்தால்?”

“நான் குழம்பி விடுவேன்”

“ஐ லவ் யூ”

“ஐ லவ் யூ, இன்று நாளை எப்போதும்”

அந்த ஆரஞ்சு  வட்ட டப்பாவை நகர்த்தி வைத்தாள்.

மொபைல் ஒலித்தது.

“முடிஞ்சுதா, தங்கண்ணனோட சாப்பிட்டுடுறியா?” கணவரின் குரல்.

“இல்ல தனியாத் தான் சாப்பிடப் போறேன்”,

துண்டுபட்டது பேச்சு.

“பார்க்கிங்ல நா இருக்கணும் போலயே” உரசிச் சென்ற இன்னொரு வண்டியைப் பார்த்து “பார்த்துப் போடா வெ…”

“எதுக்கு இப்டிப் பேசுறிங்க?”

“இவனுக கிட்ட இப்படித் தான் பேசணும்”

“ம்…நான் சாப்பிட்டுட்டு வரேன். நீங்க காரில் இருங்கணே”.

புன்னகை, கை கூப்பல், பளபளக்கும் மெனு கார்ட்.

“your order pls mam”

வெஜ் க்ளியர் சூப்பில் ஆரம்பித்து பட்டர் நான், பனீர் டிக்கா, ஜீரா ரைஸ், மஷ்ரூம் gravy என்று எதேதோ ஓடர் செய்தாள். ஆமாம், மனச் சோர்வில அதிகம் சாப்பிடத் தோன்றும். வினோதமாக என்னை ஏன் பார்க்கிறார் இவர்?

பரிசாரகர் மதிய உணவை மகிழ்வோடு உண்ண வாழ்த்துகிறார் தலை தாழ்த்தி. “நன்றி” சொல்கிறாள். எல்லாவற்றிலும் ஒரு ஸ்பூன். அங்கிருந்த அழகிய மீன் தொட்டியை, சுவரோவியங்களைப் பார்க்கிறாள். தாழ்ந்த விழிகளால் பக்கத்து மேஜையில் அவளைக் கொஞ்சி ஊட்டும் அவனை.

“இதெல்லாம் பார்சல் பண்ணித் தந்திடட்டுமா” கலங்கிக் கலைந்த அவள் கண்களைப் பார்த்தபடி கேட்கிறார் பரிவோடு பரிசாரகர். “யோவ், இந்தப் பரிவு எனக்குப் பிடிக்கலை”,

தலையாட்டுகிறார். “எங்கள் ஐஸ் க்ரீம்கள்” என்று நீட்டிய அட்டையிலிருந்தும் ஒன்றைச் சொன்னாள். வந்தது. வெனில்லா உருண்டை மேல் கருஞ்சிவப்பு ஸ்ட்ராபெரி. திடுக்கிட்டுத் திகைத்து அதை நகர்த்தினாள். பின் யோசித்து, வழக்கமாக வரும் ஹோட்டல் இது, அதை ஸ்பூனால் கிளறிச் சிறிது சிறிதாக மிகுந்த யோசனைகளோடு உண்டாள்.

“எனக்கு ஒரு சாக்லெட் கோன் கிடைக்குமா. அதோடு பில்லும்?” ஓடோடிக் கொண்டுவந்தான் அந்த இளைஞன். கையிலெடுத்து நகர்ந்தாள்.

தன்னை நோக்கி வரும் கார். ஏறியதும் உச்சி க்ளிப்பை அவிழ்த்துக் கூந்தலைக் காற்றுக்குக் கொடுத்தாள்.

கீமோ தெரபிக்காக மழிக்கப் பட்ட அம்மாவின் கூந்தல், “பார்லர்ல நேராக்கின மாதிரி இயற்கையாக உங்களைக் கல்யாணம் பண்ணிக்க சண்டை போட்டதில் தப்பே இல்ல ஆச்சி”. அம்மாவிடம் மகள் சொன்னது நினைவில் சட்டென்று வந்தது.

“ஏதாவது பாட்டு போடுங்க அண்ணே” மாங்கனிகள் தொட்டிலே தூங்குதடி கண்ணே. மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற நல்லாதானே இருக்கிறது. ஆம். எல்லாமே. மரங்கள் பறந்தன. வீடு வெகு தொலைவிற்குப் போக விரும்பினாள்.

உமா மகேஸ்வரி

குடும்ப உறவுகளில் இருக்கும் மானுட நாடங்களை நுட்பமாக எழுத்தில் கொண்டு வருபவர். மானுட மனதின் சிந்தனை மாற்றங்களை சட்டென்று எழுந்து பற்றிக்கொள்ளும் வசியம் நிறைந்த வலுவான படைப்புகளை தமிழுக்குத் தந்தவர். நினைவுகளில் இருந்து தவ்வித்தாவும் பெண்களின் அக அலைக்கழிப்புகளை, சிறுகதை வடிவ ஒருமைகளை மீறி எழுதி வெற்றியும் கொண்டவர்

உரையாடலுக்கு

Your email address will not be published.