/

தாய்மைத் துறப்பு: தமிழில்- லதா அருணாச்சலம்

மூலக்கதை: இன்னொசன்ட் ஷிஸோரம்

பற்களை இறுகக் கடித்துக் கொண்டும்,  முகச்சுழிப்பை நிரந்தரமாகத் தக்க வைத்துக் கொண்டும் இந்த வரிகளை வாசியுங்கள். கண நேரம் தவறினால்  கூட உங்கள் இதழ்களிலிருந்து காற்றைப் போல் வெளியேறி விடுமோவென்ற எண்ணத்தில் ஒவ்வொரு வார்த்தையையும்  நன்றாகச் சுவையுங்கள்.

ஒரு பெண் தாய்மையைத் துறக்கும் போது, அதை ஏன் அவள் மேற்கொள்கிறாள், அதன் காரணம் என்னவென்றெல்லாம் யாரும்  அவளைக் கேட்பதில்லை. யோனியில் பொதியப் பட்டுள்ள இயற்கையின் கருணை, முலைகளில் சூட்டப்பட்டுள்ள மகுடம்… இவ்வளவு அழகான பொருட்களை எல்லாம் விட்டுக் கொடுக்க அவள்  எப்படித் துணிந்தாள்?

உங்களுக்கு மூச்சு வாங்குவதைப் போன்ற பாவனையில் இந்த வரிகளை வாசியுங்கள்கரி அடுப்பின் கங்குகளை விசிறித் தழலாக்குவதற்கும், கோழி இறைச்சியை உரிப்பதற்குமான பணிகளுக்கிடையே மாறி மாறி உன் அன்னை சுழன்று கொண்டிருக்கையில் சமையலறையைக் கடந்து செல்லும் உன் தந்தையின் நண்பர்களுக்கு அவள் வந்தனம் கூறும் அதே மூச்சிறைக்கும் தொனியில் வாசியுங்கள்.

ஒரு பெண் தாய்மையைத் துறக்கையில், அவளுடைய இல்லத்திலிருந்து  நீரோடை வரை நடந்து செல்ல பணிக்கப்படுகிறாள். அப்போது அவள் சாம்பல் நிரப்பிய மட்பாண்டத்தைத் தலையில் சுமந்தபடியே  நடந்து சென்று  தானொரு பெண்ணாக இருப்பதில்  தோல்வியடைந்து விட்டதாக உலகுக்கு அறிவிக்க வேண்டும்.

முடிதிருத்தும் அழகு நிலையங்களில் அமர்ந்து கொண்டுஎன் கணவன் இப்படிப் பட்டவன்…  அப்படிப்பட்டவன் தெரியுமாஎன்று அரட்டைப் பேச்சுப் பேசும் பெண்களின் குரலில் இந்த வரிகளை வாசித்துப் பாருங்கள்.

ஒரு பெண் தாய்மையைத் துறக்கையில், நம் மகள்களிடம் அவளைக் காண்பித்துச் சொல்ல வேண்டும்;  ‘இது போல ஒரு பெண் எப்போதும் இருக்கக் கூடாது, தெரிந்து கொள்ளுங்கள்’ .

 இனக் குழுவின் ஆண்கள் கரடு முரடான குரலில் தங்களுக்குள் கூக்குரலிட்டுக் கொண்டே  ஒரு பெண்ணின் தலைவிதியை நிர்ணயம் செய்வது போல இதை வாசியுங்கள்

ஒரு பெண் தாய்மையைத் துறக்கையில் நாம் அவளுடைய கணவனை அரவணைத்து ஆறுதல் சொல்ல வேண்டும். இப்படிப்பட்ட பெண்ணின் கையில் ஒப்படைத்த அவனுடைய தனித்  தெய்வத்தின் இதயம் கல்லால் ஆனதாகத்தான் இருக்க வேண்டும். இதுவரை அவன் தானாக இன்னொரு மனைவியைத் தேடிக் கொள்ளாமலிருக்கும் பட்சத்தில் யாராவது ஒருவர் அவளைக்  கண்டுபிடித்துத் தர முன் வர வேண்டும்,

இதை வாசிக்கையில் எதையும் உணராதிருக்க முயற்சி செய்யுங்கள்.

ஒரு பெண் தாய்மையைத் துறக்கையில், அவள் இதுவரை தனது வீடு என்று நினைத்து வாழ்ந்த இடத்திலிருந்து வெறுங்கையுடன் நீங்கிச் செல்ல வேண்டும். முதிர்ந்த வயதில் அவள் இதை மேற்கொண்டு,பின்  குழந்தைகள், பணம் மற்றெதுவும் கைவசம் இல்லாமல்.  தன்னைப் பராமரிக்க இயலாமல் போகும் பட்சத்தில் கடவுள் மட்டும்தான்  அவளுக்கு உதவி செய்ய வேண்டும்.

II

வரவேற்பறையில் இருந்த தொலைபேசி மதிய நேரத்தின் அமைதியைக் குலைத்தபடி சிணுங்கிக் கொண்டிருந்தது.

‘கேரோ’ படுக்கையறையிலிருந்து அழைத்தாள் நுவாக்கேகோ

சற்று நேரம் இளைப்பாறிக் கொள்வது போலத் தயங்கி விட்டு மீண்டும் ஒலிக்கத் தொடங்கியது தொலைபேசி.

‘கேரோ’

இப்போதும் எந்தப் பதிலுமில்லை.

நுவாக்கேகோவின் வீட்டுப் பணியாள் கேரோ, அவளிடம் சொல்லிக் கொள்ளாமல் மீண்டுமொரு முறை வீட்டை விட்டு வெளியே சென்றிருக்கக் கூடும். கதவைத் தாழிடவும் மறந்திருப்பாள், கடந்த முறை மறந்தது போலவே… அதற்கு முன்புமொரு முறையும் கூட. அண்டை வீட்டாரான திருமதி கஸன்ந்திராவின் இல்லத்திலேயே தங்கிப் பணி புரியும் ஓட்டுனர் குன்லேவும், அவளும்  பின்கட்டில் அமர்ந்து காதல் சரசங்களில் ஈடுபடுவதை விட வீட்டின் பாதுகாப்பு மிக முக்கியமென்பதை கேரோவின் காதில் மறுபடியும்  ஓத வேண்டும் என்று மனதில் குறித்துக் கொண்டாள். தெருவோரத்தில் திரியும் திருட்டுப் பயல்கள் திறந்து கிடக்கும் வீட்டில் நுழைந்து விடுவதைப் பற்றிய விவரங்களால் நுவாக்கேகோவின்  சமூக வலைதளப் பக்கம் நிரம்பி வழிகிறது. அனைவரும் அதைப் பற்றிப் பேசுகிறார்கள். தேவாலயங்களில், பணியிடத்தில், தெரு முனையில் அமைந்திருக்கும் பல்பொருள் அங்காடியில் என அனைத்து இடங்களிலும் இந்தத் திருட்டுப் பயல்களைப் பற்றிய  பேச்சுதான்.

‘அவர்கள் நுழைந்தபோது நான் குளித்துக் கொண்டிருந்தேன். நல்ல வேளையாகக் குளியலறையை அவர்கள் எட்டிப் பார்க்கவில்லை. அப்படி மட்டும் நடந்திருந்தால் இப்போது நாம்  பேசிக் கொண்டிருக்கும் கதையே வேறாக இருக்கும்’ தன் வீட்டின் கொள்ளைச் சம்பவத்திற்குப் பின்னரான காலைப் பொழுதில் நுவாக்கேகோவைப்  பார்க்க வந்த அனேட்டா அவளிடம் இப்படித்தான் சொல்லிக் கொண்டிருந்தாள்.

உறங்குவதற்கு முன் வேலை பார்த்துக் கொண்டிருந்த கோப்புக் கட்டுகளைப் படுக்கையின்  ஒரு புறமாக ஒதுக்கி வைத்து விட்டு எழுந்து வரவேற்பறையிலிருந்த தொலைபேசியை நோக்கி நடந்தாள் நுவாக்கேகோ.

‘நுவாக்கேகோ,’ கெடு’? எப்படி இருக்கிறாய்?’ தொலைபேசி ஒலிவாங்கியின் சிறு துளைகள் ஊடாகத் துருவி எடுத்தது போல அம்மாவின் குரல் ஒலித்தது.  

‘நான் நன்றாக இருக்கிறேன் அம்மா. அங்கும் எல்லாம் நலம்தானே?’

‘ந்நே, இங்கு நிலைமை அவ்வளவு சரியில்லையம்மா, நான் தாய்மையைத் துறக்க முடிவு செய்து விட்டேன், இனிமேல் நான் எதுவுமே செய்யப் போவதில்லை’

காதில் விழுந்த  வார்த்தைகளைக் கேட்டவுடன் தன்னையறியாமல் தொலைபேசியின் ஒயர்களை உள்ளங்கை முழுக்கச் சுற்றி முறுக்கினாள்  நுவாக்கேகோ. காதில் விழுந்த வார்த்தைகளை அவை பிழிந்து கொடுத்தன  போல இறுகப் பற்றியிருந்தாள். ‘இப்போது ஏன் அம்மா? முப்பது வருடங்களாக நீங்கள் ஒரு தாயாகத்தானே இருந்தீர்கள்.?’

மறுபக்கமிருந்த பெண்மணி தொண்டையைச் செருமிக் கொண்டாள். ‘ந்நே… எப்போதோ செய்ய வேண்டியது, என்னை இங்கேயே இருத்தி வைப்பதற்காக உன்னுடைய அப்பா எப்போதும் ஒரு வழியைக் கண்டுபிடித்துக் கொண்டே இருப்பார். நான் போய் விட்டால்  என்னவாகும்? எமெக்கா, நீ, அப்புறம் இந்த இரட்டையர்கள் எல்லோருக்கும் நான் தேவைப் படுவேன். நான் போவதால் வரும் விளைவுகள் என்னென்ன என்று ஏதாவது சொல்லிக் கொண்டேயிருப்பார். ஆனால் இந்த முறை அது நடக்கவே நடக்காது’

‘துறத்தல் சடங்கு எப்போது?’

‘நாளை மறுநாள்’

‘அவ்வளவு சீக்கிரமா?’

‘ஆமாம். எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாக அதை செய்ய நினைக்கிறேன். நான் இதைச் செய்யக் கூடாதென்று நீங்கள் யாருமே எந்தக் காரணங்களையும் சொல்வதை நான் விரும்பவில்லை. சரி, இப்போது இந்த இணைப்பைத்  துண்டித்த பின், உன் இரட்டைச் சகோதரர்களை அழைத்தும் விஷயத்தைச் சொல்ல வேண்டும். உன் அண்ணன் எமெக்காவுடன் ஏற்கெனவே பேசிவிட்டேன்.’

‘அம்மா… பொறுங்கள், நான் யாரையாவது கூப்பிடுகிறேன். என் சிநேகிதி சர்வதேச மன்னிப்பு சங்கத்துடன் இணைந்து வேலை செய்கிறாள். நீங்கள் இதைச் செய்யக் கூடாது. அய்யோ… திஸ் ஈஸ் ஃபக்கிங் 2019 , தெரியுமா அம்மா?’

‘ஓஓ… உன்னுடைய வெளிநாட்டுச் சொல்லாடலைக் கொண்டு வந்து விட்டாயா?’ நுவாக்கேகோவின் அம்மா  மறுமுனையில் சிரித்தாள். ‘கடந்த வருடம் வக்கீலம்மா ஒபியாகெலி தாய்மையைத் துறந்த போது பாதுகாப்புக்காகப் போலீஸார்களை அழைத்து வந்திருந்தாள். அதைப் பார்த்தவர்கள் சொன்னார்கள். அந்தச் சடங்கு முடியும் வரை அவர்களால் ஒரு அடி கூட அசைய முடியவில்லை தெரியுமா?’

‘இது மூட நம்பிக்கை அம்மா. ப்ளீஸ்…’

‘ந்நே, அமைதியாக இரு’

‘நான் நாளையே வருகிறேன்.’

‘சரி வா, நாளை நேரில் பேசலாம். ’

தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்ட பீப் சப்தம் அடங்கி நெடு நேரமாகியும் கூட, அம்மாவின் தலைக்குள் அப்படி என்னதான் நுழைந்து இந்த தாய்மையைத் துறக்கும் எண்ணத்தை விதைத்திருக்கக் கூடும்  என்று ஆச்சர்யத்துடன் சிந்தித்துக் கொண்டிருந்தாள். இத்தனை வருடங்களாகத்  தனது கணவனையும், நான்கு குழந்தைகளையும் நன்கு பேணிப் பராமரித்தவள், கண்கள் சிவந்து போய், இரவெல்லாம் எரிச்சலுடன் உறுத்தப் போகுமென்று அறிந்திருந்தாலும் கூட அடுப்பில் கரியை ஊதி ஊதி நெருப்பு வளர்த்து உணவு சமைத்தவள், எண்ணெய்க் கறை படிந்த கணவனது உள்சட்டையைத் தோய்த்துச் சுத்தம் செய்தவள், பள்ளி நாட்களில்  குழந்தைகளின் சாக்ஸைக் கண்டுபிடிக்க உதவியவள்.. ஆனால், எப்போதும் எந்த முறையீடுகளும் அம்மாவிடம் இருந்ததில்லை, ஒரு கணம் கூட  அவள் தனக்காகச் சிந்தித்ததுமில்லை. அவளது விருப்பம் என்ன… அவளுக்கு என்ன தேவை… கணவனிடமிருந்தோ, குழந்தைகளிடமிருந்தோ இவையனைத்துக்கும் மாற்றாக  என்ன எதிர்பார்த்தாளென்றோ யாருக்கும் ஒரு சிறு குறிப்பு கூடத் தராதவள். எப்போதாவது சனிக்கிழமைகளில் உடாலா மரத்தின் கீழ் அமர்ந்து, தாயாக இருப்பதன் கனம் தாளாமல் கிழிந்து போயிருக்கும் தன் சருமத்தைத் தைத்துக் கொண்டிருக்கும் போது கூட ஒரு வறண்ட புன்னகையே அவள் முகத்தில் ஒட்டியிருக்கும்.

பின்கட்டில்  கதவு திறக்கும் கிரீச் சப்தம் நுவாக்கேகோவின் எண்ணங்களைக் கலைத்தது. கேரோ சந்தடியில்லாமல் வீட்டிற்குள் நுழைகிறாள் என்பதை உணர்ந்தாள். அவள் தாழ்ப்பாளின் குமிழியை ஓசையில்லாமல் திருகிக் கதவைப் பூட்ட முயற்சிக்கையில் அவளைக் கையும் களவுமாகப்  பிடிப்பதற்காகவே சமையலறைக்குள் நுழைந்தாள்.

‘மதிய வணக்கம் மேடம்… துவைத்துப் போட்ட துணிகள் எல்லாம் காய்ந்து விட்டதா என்று பார்ப்பதற்காகத்தான் வெளியே போனேன்’ நுவாக்கேகோ வாயைத் திறக்கும் முன்பே தன் பொய்யை அவிழ்த்து விட்டாள் கேரோ.

‘நீயும் குன்லேவும் கொல்லைப் புறத்தில் என்ன செய்கிறீர்களென்று எனக்குத் தெரியாதா என்ன? பரவாயில்லை… நடத்து’

அவர்கள் பேசும் கொச்சை பிட்ஜின் *ஆங்கிலத்திலேயே தானும் பேசினாள் நுவாக்கே. தான் கற்ற புதிய திறனான பிட்ஜின் ஆங்கிலம் பற்றி நுவாக்கேகோவுக்குப் பெருமிதமாக இருந்தது. ஆனால் அவளுடைய அமெரிக்க உச்சரிப்பு ஆங்கிலத்துடன் பிட்ஜின் ஆங்கிலம் சேர்கையில் எவ்வளவு வேடிக்கையாக உள்ளதென்று அவள் தோழிகள் சொல்லிச்  சிரிப்பார்கள். கடந்த வாரம் ஒரு திருமண விழாவில் ‘ஜாரே’ (போனால் போகிறது) என்று சொல்வதற்கு மாற்றாக  ஜுவாரே என்று அவள் சொல்லியதைக் கேட்டு அனேட்டோவுக்கு சிரித்து மாளவில்லை.

‘மேடம்… சத்தியமாகத் துணி காய்ந்திருக்கிறதா என்றுதான் பார்க்கப் போனேன். இன்னும் காயவில்லை. ஒரு துணி கீழே விழுந்து கிடந்தது, அதை எடுத்து மறுபடியும் அலசிப் போட்டு விட்டு வருகிறேன். இப்பவும் நான் பொய் சொல்கிறேன் என்று நீங்கள் நினைத்தால்..’

‘போதும் நிறுத்து’ என்று சொல்வதைப் போலக் கையை ஆட்டிய நுவாக்கேகோ, கண்களில் கடுமையைத் தேக்கி  உறுத்துப் பார்த்தாள்

‘உன்னுடைய காதலனைச் சந்திக்கச் செல்லும் முன் என் வீட்டுக் கதவைப் பூட்டிக் கொண்டு போ’ என்றாள்.

‘கடவுள் ஆணையாக எனக்குக் காதலன் யாருமே இல்லை மேடம்’

சட்டென்று குனிந்த கேரோ, தூசி படிந்திருந்த சமையலறைத் தரையைத் தன் வலது சுட்டு விரலால் துடைத்து, அதே விரலின் நுனியை நாவில்  தொட்டு பின் மேலே கூரையைச் சுட்டிக் காட்டினாள். ( கடவுள் ஆணையாக என்று சத்தியம் செய்யும் முறை)

யூஸ் அபி…’ – இனிமேல் இல்லை

அந்தக் கணத்திலேயே  கேரோவிடம்  அதைப் பற்றிப் பேசி விடமென்ற உந்துதல் ஏற்பட்டது. அடிப்படைப்  பாலியல் பாடம் குறித்தான விடயம். அவளுக்கும், குன்லேவுக்குமுள்ள உறவு இப்போதைக்குப் பிரச்சனைகளற்று இருப்பதாகத்  தோன்றினாலும் அதனால் வேறு ஏதாவது பின் விளைவுகள் ஏற்படக் கூடும் என்று எச்சரிக்கை செய்ய  நினைத்தாள். ஆனால் அப்படிச் செய்யவில்லை. அனேட்டா அவளுடைய வீட்டுப் பணியாளுக்கு ஒரு பாக்கெட் ஆணுறையை அளிக்கப்போய் மிகப் பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்ளப் பார்த்தாள். அந்தப் பணிப்பெண் கிராமத்திலிருக்கும் அவள் அன்னையைத் தொலைபேசியில் அழைத்து லாகோஸிலிருக்கும்  மேடம் தன்னை ஒரு விலைமகளாக மாற்ற முயற்சி செய்கிறாள் என்று புகார் கூறி விட்டாள். நுவாக்கேகோ எப்படியும் கேரோவிடம் இது குறித்து உரையாடத்தான் போகிறாள். ஆனால் இன்று இல்லை. அதுவும் அவள் அன்னையின் தொலைபேசி அழைப்பால் மனம் உழன்று கிடக்கையில் நிச்சயமாக இல்லை.

‘இன்றைக்கு இரவு என்ன சாப்பிடப் போகிறீர்கள் மேடம்?’

‘வெறும் காஃபி… பாலும் வேண்டாம், சர்க்கரையும் வேண்டாம்’

‘இப்படித்தான் காப்பியும் தேநீரும் ஒருவர் ஹாவதில் சாப்பிடுவார்களா?’

‘அது ஹார்வர்ட்’

‘ம்ஹ்ம்… எல்லாம் ஒன்றுதான்’

கேரோவும் நுவாக்கேகோவும் ஒரு சேர சிரித்து விட்டார்கள். கேரோவைப் போன்ற ஒரு பெண்ணிடம் நீண்ட நேரத்துக்குக் கோபம்  கொள்வது இயலாத காரியம்.

மாலையில், படுக்கையில் அமர்ந்தபடி காபியை உறிஞ்சிக் கொண்டே மறுநாள் பயணத்துக்கு வேண்டிய ஆடைகளை மடித்து வைத்துக் கொண்டிருந்த போது நுவாக்கேகோ தன் தாய் அடிக்கடி  அவளுக்கு நினைவுறுத்துவதை  எண்ணிக் கொண்டாள். ‘தாய்மை என்பது எப்படிப் பட்ட பணி  என்றால், ஒருவர் தன்னுடைய சகலத்தையும் அளித்து விட்டு அதற்குப் பிரதிபலனாக எதையும் எதிர்பார்க்காமல் இருப்பது. அது ஒரு புனிதச் சிலுவை. ஒருவர் இறக்கி வைக்கவே முடியாத சுமை.’ ம்ம்… யார் வேண்டுமானாலும் தாய்மையைத் துறக்கலாம். ஆனால் நிச்சயமாக  அவள் தாயாக மட்டும் இருக்கக்  கூடாது.

III

‘ஓனிட்ஷா! ஓனிட்ஷா போகிறவர்கள் வாருங்கள்.’

பஸ்  நிரம்ப  ஒரேயொரு இடம்தான் காலியாக இருக்கிறது. உடைசலான பீஜியாட் 504 வண்டியின் பம்ப்பரில் தன் முட்டியால் தட்டியபடி கத்திக் கொண்டிருந்தான் பயணச் சீட்டு விற்கும் இடைத் தரகன் ஒருவன். அவன் வலது உள்ளங்கை மடிப்பிலிருந்து பிதுங்கிக் கொண்டிருந்த கசங்கிய நைரா நோட்டுகளின் விளிம்புகள் சுவாசத்துக்காக ஏங்கிக் கொண்டிருந்தவை போலத் தெரிந்தன. அவனுடைய மார்பைச் சுற்றிப் போட்டிருந்த கிழிந்த ஆர்சனல் ஜெர்ஸி ஜாக்கட்டால் அவ்வப்போது முகத்தில் வழிந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டிருந்தான்.

‘ஒரே வாய்ப்புதான். மேடம், நீங்கள் போக வேண்டுமா?’ நுவாக்கேகோவைப் பார்த்துக் கேட்டான். இல்லயென்று தலையசைத்தபடி  பெட்டியை இழுத்துக் கொண்டு பேருந்து நிலையத்தின் மறுபக்கமாக நகர்ந்தாள். அவள் ஓனிட்ஷா செல்ல வேண்டும். ஆனால் இது போன்ற பதிவு செய்யப்படாத சிற்றுந்துகளில் பயணம் செய்து இலக்கை அடையும் முன்பே பாதி வழியில் இறங்க அவள் நிச்சயமாக விரும்பவில்லை.

‘த்தூ… லாகோஸ் முழுக்க இவளைப் போன்ற வேசைகள்தான் நிரம்பி வழிகிறார்கள்.’ அந்த டிக்கெட் தரகன் எச்சில் துப்பினான். அது கீழே விழாமல் அவன் தாடையிலேயே வழிந்தது. ‘பயணம் போகப் பணம் இல்லையென்று வாயைத் திறந்து சொல்ல மாட்டார்கள். வந்து விட்டார்கள்’

அவன் குரல் தெளிவாக ஒலித்தது. நிலையத்திலிருந்த அனைவரும் நுவாக்கேகோவை வெறித்தார்கள். அந்த மனிதன் சொன்னதற்கு ஆமாம் என்பது போலச் சிலரும், மற்றவர்கள் இரக்கம் மேலிடத் தலையசைத்து நம்பிக்கையூட்டும் பாவனையிலும் அவளைப்  பார்த்தார்கள்.

‘அவள் ஒரு பொறுப்பான பெண்மணி’ மற்றொரு பயணச் சீட்டு விற்பனையாளன் சொன்னான்.

‘அவளுடைய குட்டைப் பாவாடையைப் பார்… அப்படியே விபச்சாரி போலத் தெரிகிறாள். ஒலோஷோ ஜூர்’*

‘ஆனால் கண்களுக்கு மேல் மஞ்சள் நிறப் பூச்சு இல்லையே’

இவை எவற்றையுமே  கவனிக்காமல் நகர்ந்தாள் நுவாக்கேகோ.

சுமார் ஒரு மணி நேரமாக நிலையத்தில் அங்குமிங்கும் தேடியலைந்து, நிற்கும் ஊர்திகளைச் சலித்தெடுத்து அதன் ஓட்டுநர்களை மனதிற்குள் மதிப்பீடு செய்து இறுதியாக ஒரு பேருந்தில் ஏறினாள் .

பேருந்தின் ஒவ்வொரு குலுக்கலின் போதும் அவளது மார்புகளைத் ‘தவறுதலாக’ இடித்துக் கொண்டிருக்கும் பக்கத்து இருக்கைக்காரனுக்கும், மனந்திருந்துவதின் தேவையையும் நரகத்தில் எரிந்து கொண்டிருக்கும் நெருப்பைப் பற்றியும் ஓயாமல் கூக்குரலிட்டுக் கொண்டிருந்த மத ஊழியப் பெண்மணிக்கிடையிலும் அமர்ந்திருந்த நுவாக்கேகோ இனிமேல் நடக்கப் போகும் நிகழ்வுகளுக்குத் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள விழைந்தாள். முந்தைய இரவில் ஓனிட்ஷா பிராந்தியக் காவல் ஆணையத்தைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்தாள். ஆனால் ஆணையரைப் பிடிக்க முடியவே இல்லை. ஒரு வழியாகக் காலையில் அவர்கள் தொடர்பில் வந்த போது, நைஜீரியக் காவல் துறை, மக்களின்  தொல்குடி வழக்கங்களோடும், பாரம்பரிய மரபுகளோடும்  தாங்கள் தலையீடு செய்வதில்லை என்று உறுதியான குரலில் கூறி விட்டனர்.

‘ஓயே. என் மார்புகளைத் தொடுவதை நிறுத்தித் தொலை’ சாலையின் இன்னொரு குழிக்குள் பேருந்து இறங்குகையில் கத்தினாள் நுவாக்கேகோ. அவள் அருகில் அமர்ந்திருந்தவன் கண்ணாடியைச் சரி செய்து கொண்டே  ஏதோ ஒரு மன்னிப்புச் சொல்லை முணுமுணுத்தான்.

‘மேடம்… அமைதியாக இருங்கள். அவன் உங்கள் மார்பைத் தானே உரசினான். உங்கள் கால்சராயை உருவவில்லை அல்லவா…’ அவளுக்கு நேர் பின்னால் அமர்ந்திருந்தவன் எள்ளலாகக் கூறினான். ‘நான் ஏன் அமைதியாக இருக்க வேண்டும்?’ சீறினாள் நுவாக்கேகோ.

‘சகோதரர்களே… இறைவனைப் போற்றுங்கள். பார்த்தீர்களா… சாத்தான் எப்படி உங்கள் மீது இறங்கி வந்து ஜெஹோவாவின் சுவிசேஷத்தைக் குலைக்கிறது பார்த்தீர்களா?’ மத ஊழியம் செய்யும்  பெண் கிடைத்த வாய்ப்பைப் தவற விடாமல் பயன்படுத்திக் கொண்டு தன் போதனையை ஆரம்பித்து விட்டாள்.

                                                                                   IV

‘அம்மா… காலை வணக்கம்’

‘நுவாக்கேகோ… அட வந்து விட்டாயா?’

அம்மாவின் மறுமொழி மிகவும் உணர்வற்றிருந்தது. எழுந்து நின்று அணைத்து நுவா என்று சொல்லக் கூட இல்லை. தன் ஒரே ஒரு பெண் குழந்தையை லாகோஸ் வெய்யில் எப்படியெல்லாம் வாட்டியிருக்கிறது என்று அன்புடன் நலம் விசாரிக்கவில்லை. நுவாக்கேகோ தன் பெட்டியை சுவரோரமாக வைத்தாள். ஆனால் அம்மா இன்னும் கண்டு கொள்ளவில்லை. அறையின் மூலையில் எகோஸி  மூட்டைகளுக்கும், அம்மாவின் பழைய லப்பாக்கள் நிரம்பியிருந்த பெட்டிக்கும் நடுவே இருந்த நெசவுத் தறியில் அவரது கைகள் மும்முரமாக இயங்கிக் கொண்டிருந்தன.

க்பா க்பா.. தறியின்  மரச் சட்டங்கள் மாறி மாறி குதித்துக் கொண்டிருந்தன.

‘அம்மா… எப்படி இருக்கிறீங்க?’

தறிக்கு அருகில் சென்று அம்மாவின் தோளைக் கட்டிக் கொண்டாள். தோள் இப்போது குழைவாக, மிருதுவாக இருந்தது. கடந்த முறை அவள் வந்திருந்த போது, அம்மா எலும்பும் தோலுமாக இருந்தாள். பால் டப்பாவும், ஓவல்டின்னும் அதிகமாக வாங்கித் தந்து விட்டுச் சென்றாள்.

‘நீண்ட காலமாக இப்படியொரு நல்ல மனநிலையை நான் உணரவேயில்லை’ நுவாக்கேகோவின் அம்மா சொன்னார்.

கத்தரியை எடுத்து முடிச்சிட்டுக்கொண்ட நூலை நறுக்கினார். குறுக்காகவும் நெடுகவும் ஓடும்  ஊடு பாவும் இழைகள் ஒன்றோடொன்று சிடுக்கிட்டுக் கொள்ளாதிருக்க துணியை இழுத்துச் சீராக்கியவர் நெசவை நிறுத்தினார். மகளை நிமிர்ந்து பார்த்தவரின் முகம் ஒளிர்ந்தது. அதில் நிரந்தரமாகக் குடியிருக்கும் சுருக்கங்களும் கரும்புள்ளிகளும் மறைந்திருந்தன.

‘இப்போது நான் நெய்து கொண்டிருக்கும் இந்த ‘லப்பா’ ஆடையை நாளை அணிந்து கொண்டு நேடி உம்முன்னா   கிராம சபைத் தலைவர் முன்பு நின்று, நான் தாயாக இருப்பது போதுமென்று முடிவெடுத்து விட்டேன் என்று இந்த உலகத்துக்கே அறிவிக்கப் போகிறேன்.’

லப்பாவின் பிசிறான ஓரங்களைத் தவிர நெய்வது ஏறக்குறைய நிறைவு பெற்று விட்டது. கண்களை உறுத்தாத கறுப்பு வண்ணப் பின்னணியில் குறுக்காக அலையாடும் சிவப்பு மற்றும் நீலக் கோடுகள் .

‘பாரேன்… இது எவ்வளவு நயமான பட்டு. நல்ல கம்பளி நூல் போல இருக்கிறது.’ மகளின் கன்னத்தில் வைத்து லப்பாவைத் தேய்த்தபடியே உற்சாகத்துடன் கூறிக் கொண்டிருந்தாள் நுவாக்கேயின் அம்மா. இந்த நெசவுக்குப் பொருத்தமான நூலை  வாங்குவதற்கு நுக்போலோக்வு கடைத் தெரு முழுவதும் சுற்றியலைய வேண்டியிருந்தது.

‘என்ன நடந்தது அம்மா? இப்போது ஏன் இந்த துறப்பு?’

‘அந்தப் பன்றியிடமே போய்க் கேள்’

‘அவர் பன்றியில்லை அம்மா… அவர் இன்னும் என் அப்பா’ நெசவுத்தறிக்கு அடியில் இருந்த உயரம் குறைந்த ஸ்டூலை இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தாள் நுவாக்கே.

‘எப்போதும் போல இன்றும் அவருக்கே பரிந்து பேசு’

‘நான் யாருக்கும் பரிந்து பேசவில்லை’

‘அந்த உதவாக்கரை மனிதனுக்காக நாற்பது வருடங்கள் என் உள்ளங்கைகளைக் கொதிநீரில் மூழ்க வைத்திருந்தேன். அதற்காகப் பரிசோ, பணமோ, ஏன் வேண்டா வெறுப்பான நன்றிச் சொல்லோ கூட நான் எதிர்பார்க்கவில்லை. டயரைக் கெட்டியாக்கும்  அவருடைய சிறிய தொழிலிலிருந்து கிடைக்கும்  சிறிய வருமானத்தைக் குடித்தும் சீட்டாடியும் அழிப்பதைக் கூட என்னால் பொறுத்துக் கொள்ள முடியும். ஆனால் என் முகத்தில் மாட்டுச் சாணத்தை அப்புவதை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள மாட்டேன். எப்படியெல்லாமோ ஆக வேண்டும் என்று நான் கண்ட என்  கனவுகளை எல்லாம் விட்டுவிட்டு இந்த மனிதனின் பின்னால் வந்தேன். அவருடைய கனவுகள்… ம்ம்… அப்படி ஏதேனும் இருந்திருந்தால், அது என்னுடையதாக மாறிவிடும் என நம்பினேன். இப்போது மம்மா திரோ நடத்தும்  உணவகத்தில் பரிமாறும் வேலையிலிருக்கும் அந்தக் கவர்ச்சியான  மேனாமினுக்கிகளில் ஒருத்தியை அவருடைய புது மனைவியாகக்  கொண்டு வருவதற்கு நான் உடன்படவில்லை. என் அம்மாவின் கல்லறையில் முளைத்திருக்கும் காளான் மீது சத்தியமாக அது நடக்க  அனுமதிக்க மாட்டேனென்று சொல்லிவிட்டேன்.’ பேசப் பேச இமைகளைச் சிறகடித்தும் விழிகளை உருட்டியும் தேங்கிய கண்ணீரை விரட்ட முயன்றார் நுவாக்கேகோவின் அம்மா.

‘லாகோஸிலிருந்து நீண்ட பயணம் செய்து வந்திருக்கிறாய் நுவாக்கேகோ, போ, போய் ஓய்வெடு’.

தறியின் கீழே இருந்த மெலிதான பஞ்சு மெத்தையில் விழுந்த நுவாக்கே, கண்களை மூடிக் கொண்டு உறக்கத்தைக் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

V

எப்போதும் போல நடைக் கூடத்தில் இருக்கும் மரச் சாய்வு நாற்காலியில் சாவகாசமாகச் சரிந்திருந்தார் அப்பா. உற்சாகமான பாட்டை முணுமுணுத்துக் கொண்டும், விரல்களால் மார்பில் தாளம் போட்டுக் கொண்டும் இருந்தார். ‘பெண்கள் இல்லையேல் பிரச்சனை இல்லை’ என்னும் வரிகள் இடையிடையே சேர்ந்திசையாக பாடலில் ஒலித்தது. இரவு நன்றாகக் கவிந்து விட்டது, காம்பவுண்டின் நடுவில் கிளை பரப்பியிருந்த உடாலா மரம் முழுநிலவின் பாதியை விழுங்கியிருந்தது.

‘மாலை வணக்கம் அப்பா’

‘நீ எனக்கு வந்தனமெல்லாம் சொல்ல வர மாட்டாயென்று நினைத்தேன்.’ வயதான அந்த மனிதன் கைகளைக் கோர்த்துத் தன் புறமாகவே நகர்த்தி  வைத்துக் கொண்டார்.

புன்னகையை வலிந்து வரவழைத்துக் கொண்டாள் நுவாக்கேகோ. ‘அப்படி இல்லை அப்பா, நான் தூங்கிக் கொண்டிருந்தேன். குலுங்கிக் கொண்டே வந்த பயணத்தால் எலும்பெல்லாம் இடம் மாறி விட்டது போல அயற்சியாக இருந்தது. அப்புறம் நீங்கள் உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து உடாபா மூக்குப் பொடியை உறிஞ்சிக் கொண்டிருக்கும் போது நான் வந்து தொல்லை செய்ய விரும்பவில்லை.’

‘உன் அம்மா அவள் பக்கக் கதையைச் சொல்லியிருப்பாள்’

‘ம்ம்ம்…’

‘நுவாக்கே, நீ புரிந்து கொள்ள வேண்டும். ஆண்களுக்குச் சில தேவைகள் உள்ளன. உன் அம்மாவின் வயதில் அவளால் அந்தத் தேவைகளை நிறைவேற்ற முடியாது. உனக்குத் தெரியுமா… படுக்கையில் உன் அம்மா என்னைத் தொட்டால் என் ரத்தம் சூடாவதெல்லாம் நின்றுவிட்டது.’ பல்லை இளித்துக் கொண்டே நுவாக்கேகோவை விளையாட்டாக இடித்தார். மகள் அவ்வளவாக மனம் இளகவில்லை என்று உணர்ந்தவுடன் சிரிப்பை நிறுத்திக் கொண்டார்.

‘ஏன் இப்படி முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டிருக்கிறாய்? சிரிக்கக் கற்றுக் கொள். இப்படிப்பட்ட முகம் உன்னிடமிருந்து ஆண்களை தூர விரட்டி விடும். உன் அம்மாவின் ‘கணவன் -விரட்டி’ துறப்பு ஒன்று போதும். நிலைமையை இன்னும் மோசமாக்காதே’

நாற்காலியிலிருந்து எழுந்த மனிதன் வீட்டிற்குள்ளே சென்று விட்டார் 

நுவாக்கேகோ எப்போதுமே அப்பாவுக்கு சிறந்த மகளாக இருக்கவே விருப்பப்பட்டவள். ஆனால் எப்போதுமே அந்த வீட்டின் சுவர்களிலுள்ள துளைகள் அவளுடைய போதாமைகளை எதிரொலித்துக் கொண்டே இருக்கும். அவள் எவ்வளவு பிரயத்தனப்பட்டாலும் அவர் தன் மகன்களைப் பார்க்கும் அதே கண்களால் அவளைப் பார்க்க மாட்டார். இத்தனை வருடங்களாக அப்பாவின் அங்கீகாரத்திற்காகத் தொடர்ந்து தன்னை மாற்றிக் கொண்டே இருந்திருக்கிறாள். குறை சொல்லவே முடியாத அளவு சிறப்பான முறையில் கல்வியில் தேர்ச்சி, அம்மாவுடனான சண்டைகளில் அவர் பக்கமே சாய்ந்து நிற்பது, ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் முழு உதவித் தொகையுடன் இடம் பெற்று, அதற்காகவே, பொருளாதாரம் படிக்க வேண்டுமென்ற பேரார்வத்தையும்  கனவையும் சிதைத்து விட்டுப் பொறியாளராக ஆனது… இப்படியாக எத்தனையெத்தனை? இப்படியெல்லாம் வளைந்து கொடுப்பதை நிறுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது போல..

VI

காலையில் அவள் எழுந்த போது அம்மா வீட்டில் இல்லை. கதவின் பூட்டு திறந்திருந்தது. அம்மா, தனது துறப்பை உலகத்துக்கு அறிவிக்க நீரோடைக்குச் சென்றிருக்கிறாள் என அறிந்து கொண்டாள் நுவாக்கேகோ.

‘நுவாக்கேகோ அக்கா… காலை வணக்கம்.’ அவள் வரவேற்பறைக்குள் நுழைந்த போது  இரட்டையர்களான சிமா, சிமே இருவரும் ஒரே குரலில் சொன்னார்கள்.

‘எஜிமா… என் இரட்டைச் செல்லங்களே! என்னை விட உயரமாகி விட்டீர்கள். எப்போ வந்தீர்கள்?’

‘நடு ராத்திரி இருக்கும். எமேக்கா அண்ணன் லொகோஜாவிற்கு வந்து எங்களை அழைத்துக் கொண்டு வந்தார்.’ சிமே, இருவரில் உயரமானவன் பதிலளித்தான்.

‘எப்படிப் பளபளக்கிறாய் பார்… லாகோசில் சம்பாதிப்பதை எல்லாம் நீ மட்டுமே உண்கிறாய்.’ அவள் கன்னத்தைக் கிள்ளினான் இளையவன் சிமா.

‘காலை உணவு சாப்பிட்டீர்களா?’

‘ஆமாம், இஃபேபுச்சே அகாரா வடை பொறித்து அகாமு களி செய்திருந்தார்’

‘இஃபேபுச்சே யார்?’

‘நம்முடைய புது மனைவி… இல்லை. மன்னித்துக் கொள்… அப்பாவின் புது மனைவி’

துறப்புச் சடங்கு முற்றுப் பெறும்  முன்னேயே, இரட்டையர்கள் அவர்கள் அம்மாவின் நினைவுகளைப் புறந்தள்ளிவிட்டு  அந்தநம்முடைய’  புதிய மனைவிக்கு இதயத்தில் இடம் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

வீட்டிற்கு வெளியே எமெக்கா, அப்பா மற்றும் ஒரு பெண் மூவரும் தணிந்த குரலில் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். நுவாக்கேவை  விடச் சொற்ப வயதே மூத்தவளாகத் தோற்றமளித்த அந்தப் பெண்ணின் கைகள் அவளுடைய அப்பாவின் இடுப்பைச் சுற்றியிருந்தன.அவள்தான் இஃபேபுச்சேயாக இருக்கக் கூடும்.

‘அப்பா… எமெக்கா அண்ணா… காலை வணக்கம்.’

அவர்களைக் கடந்து செல்கையில் சிரத்தையில்லாமல் முணங்கிக் கொண்டு சென்றாள் நுவாக்கே. அவர்களிடமிருந்து பதிலேதுமில்லை.

VII

மாலையில் வீடு மனிதர்களால் நிரம்பத் தொடங்கியது. வாசல் கேட்டுக்குப் பக்கவாட்டில் போடப் பட்டிருந்த பந்தல்கூடம் வியர்வையால் நனைந்த உடல்களுடைய அத்தைகள், மாமாக்கள், மருமகன்கள், மருமகள்கள், அவர்கள் வழி உறவினர்கள் என, கூட்டத்தால் பிதுங்கியது. நுவாக்கேயின் அப்பா மற்றும் அவர் வயதொத்த நபர்கள் வரவேற்பறையில் மது அருந்திக் களித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் எல்லோரும் அவர் முதுகைத் தட்டிக் கொடுத்து தைரியமாக இருக்கும்படி கூறியும் இதைத் தாங்கும் வலு அவருக்கு இருக்க வேண்டுமென்றுமென்றும் இந்த இதயமேயில்லாத பெண்மணியை விட அவருடைய புதிய மனைவி நல்ல மாற்றாக இருப்பாளென்றும் உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

பூ வேலைப்பாடுகள் அச்சிட்ட நீள அங்கியை அணிந்திருந்த நான்கு பெண்கள் நுவாக்கேகோவின் அம்மாவை காம்பவுண்டின் மையத்திற்கு இழுத்து வந்தார்கள். அதில் ஒரு பெண்ணான ஒகோலி அம்மாவின் கன்னத்தில் பலமாக அறைந்து அவள் முகத்தில் காறித் துப்பினாள். மற்ற இரு பெண்களான உரே, உகோ இருவரும் அம்மாவின் லப்பாவை உருவி அதை சிறு சிறு துண்டுகளாகக் கிழித்தெறிந்தார்கள். கூட்டம் ஆரவாரிக்க, நிர்வாணமாக நின்ற அம்மா உள்ளங்கைகளால் முகத்தைத் தாங்கிக் கொண்டாள்.

‘ஒரு பெண்ணாக  இருக்க முடியாமல் தோல்வியடைந்தவள் நீ… இனிமேல் யாருக்குமே தேவையற்றவள்’. நுவாக்கேகோவின் அம்மாவின் முலைகளைக் கையில் பிடித்துக் கொண்டே ஒகோலி சொன்னாள். அதன் பின் பழுக்கக் காய்ச்சிய செந்தழல் முனைகள் கொண்ட உலோகக் கம்பிகளைக் கைகளில்  எடுத்து அம்மாவின் இரு முலைக் காம்புகளின் மீதும் வைத்தாள். மார்பின் முனைகள்  முழுவதுமாக மழுங்கி விட்டதென்று திருப்தியுறும் வரை காத்திருந்தாள்.  பின் எரிந்த ரணத்தின் மீதுபுனித நுஸு சுண்ணாம்பைத் துகளைத் தடவி விட்டு நகர்ந்து சென்றாள்.

நுவாக்கேகோ முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டாள். துறப்புச் சடங்குகள் முடியும் வரை அவளால் ஏதும் இடையூறு வந்து விடக் கூடாதென்று அவள் கைகளிரண்டையும் இரு புறமும் சிமாவும் சிமேவும்  அழுத்தமாகப் பிடித்துக் கொண்டு நின்றார்கள்.

சடங்கு நிகழ்வுகள் முடிவுக்கு வந்ததும் கூட்டம் கலைந்து சென்றது. நுவாக்கேகோவின் அம்மா இப்போது விடுதலை அடைந்து விட்டாள்.

VIII

‘நுவாக்கேகோ… நான் சொல்வதை நன்றாகக் கேள். உனது கனவுகளை விட்டுக் கொடுக்கும் அளவுக்கு எந்த ஆணும் தகுதி படைத்தவனல்ல’ தனது கடைசிப் பெட்டியை மூடிக் கொண்டே அம்மா சொன்னார். ‘உன் அப்பா என்னைத் திருமணம் செய்யும் முன்பு நான் என்னவெல்லாம் செய்ய விரும்பினேன் தெரியுமா…’

‘அம்மா… இதோ, பாருங்கள்… உங்கள் இடது மார்பிலிருந்து பால் சொட்டுகிறது’ அவசர அவசரமாகத் தன் கைப்பையைத் துழாவி அதிலிருந்து ஒரு காகிதக் கைக்குட்டையை எடுத்துத் தாயின் ஈரமான மேல்சட்டையின் மீது வைத்தாள் நுவாக்கேகோ.

‘இது சாத்தியமே இல்லை.’ அம்மா மேல் சட்டையைக் கழற்றினாள். ‘இதோ பார்… எனது இடது மார்பின் மூன்று நரம்புகள். அவை உன் அப்பா, எமெக்கா மற்றும் உனது. இப்போது  சுரக்கும் நரம்பு உனக்கானது மகளே’

‘இதன் அர்த்தம் என்ன?’

‘அதன் அர்த்தம் நீ இன்னும் என் தேவையை நாடுகிறாய். உனக்கு நான் வேண்டும். தயவு செய்து எனக்கு விடுதலை கொடு ந்நே… நான் செல்ல வேண்டும்.’

‘உங்களை எப்படி விடுவிப்பதென்று எனக்குத் தெரியவில்லையே அம்மா’

‘நுவாக்கேகோ… பார், உனது மார்பிலிருந்தும் பால் சொட்டுகிறது. இதன் பொருள் என்னவென்று அறிவாயா? இப்போது நான் உனக்கு சுமையாக இருக்கிறேன். அதே போல் நீயும் எனக்கு சுமையாக இருக்கிறாய். ஆனால் இந்த விஷயத்தை நான் ரகசியமாக வைத்துக் கொள்கிறேன். உனது வாழ்க்கையை அழிக்க நான் விரும்பவில்லை.’

‘ஏன் ரகசியமாக இருக்க வேண்டும்?’

’இது உன் அப்பாவுக்குத் தெரிந்தால் நீ அவரது வீட்டிலிருந்து வெளியேற்றப் பட்டு விடுவாய். நீ எப்போதும் அப்பா பெண். நீ அவருக்கு எவ்வளவு நெருக்கம் என்று எனக்குத் தெரியும்.’

‘ஒருவேளை நான் அப்பாவின் பெண்ணே இல்லையோ என்னவோ. ஒருவேளை நான் என் அம்மாவின் மகள் மட்டும்தானோ…’ நுவாக்கேகோ தன் அம்மாவின் கைகளைப் பற்றிக் கொண்டாள். ‘அம்மா… என்னுடன் லாகோஸ் வந்து விடுங்கள். நீங்கள் எப்போதுமே இந்த உலகம் முழுக்கச் சிறகடிக்க விரும்பியவர் அல்லவா… உங்கள் உலகம் லாகோஸில் உள்ளது அம்மா.’

‘லாகோஸோ, அல்லது வேறு எந்த இடமோ, நான் எப்போதும் பார்க்க விரும்பும் உலகம் நீதான் மகளே’

அப்படியாகத்தான்… ஒரு மகள் தன் தாயின் நெற்றியில் ஆழ்ந்த முத்தம் பதித்தாள். அதன் பின், மங்கிய வெளிச்சம் படர்ந்திருந்த அந்த அறையில் அமர்ந்து இருவரும் இரவு கவியும் நேரத்திற்காகக் காத்திருந்தார்கள். அங்கிருந்து அவர்கள் நீங்கிச் செல்லும் போது  யாரும் பார்த்து விடக்  கூடாது என்பதற்காக.

0

*பிட்ஜின் ஆங்கிலம்: நைஜீரியாவில் பேசப் படும் கொச்சையான ஆங்கில மொழி

நுவாக்கேகோ- A Child, more precious than wealth

ஓலோஷு ஜூர்- விலைமகள்

இன்னோசன்ட் ஷிஸோரம் : நைஜீரியாவின் லாகோஸ் நகரில் வசிக்கிறார். இவரது பல படைப்புகள், கட்டுரைகள் மிக முக்கியமான சர்வ தேச  இதழ்களில் பிரசுரிக்கப் பட்டுள்ளன. நைஜீரியாவின் நவீன இலக்கியத்தின் புதிய முகமாக பார்க்கப்படுபவர். அரசியல், கலாச்சாரம், பாலியல் தேர்வுகள்  ஆகியவற்றைப் பற்றித் தொடர்ந்து எழுதி வருபவர். அண்மையில் இவர் எழுதிய இந்தக் கதை Common wealth 2020 சிறந்த ஆப்பிரிக்கச் சிறுகதைக்கான பரிசை வென்றுள்ளது. இந்தக் கதையின் மையக் கரு தன் தாயிடம் கேட்டறிந்த வாய் மொழிக் கதையிலிருந்து உருவானது என்கிறார். ‘என் தாய் தாய்மையைத் துறக்கவில்லை. இதுவரை இல்லை. ஆனால் அவரைப் போன்ற, திருமணமும் பொறுப்புகளும் கனவுகளை விழுங்கி விட்ட  எண்ணற்றவர்களின் கதையாக இதை நான் முன் வைக்கிறேன்’ என்கிறார் இன்னோசண்ட்.

இன்னொசண்ட் ஷிஸோரம் தன்னைப் பால் துறந்தவராக அறிவித்துக் கொண்டவர்.

லதா அருணாச்சலம்

‘உடலாடும் நதி’ என்ற கவிதை தொகுப்பு, தீக்கொன்றை மலரும் பருவம் என்ற மொழிபெயர்ப்பு நூல்களின் ஆசிரியர். தொடர்ச்சியாக மொழிபெயர்ப்பு துறையில் ஈடுபட்டு வருகிறார்.

7 Comments

  1. மனம் கன்க்கிற்து. அருமையான மொழி பெயர்ப்பு. அன்பும் வாழ்த்தும் லதா..

  2. அருமை லதா! மிக அருமையான மொழியாக்கம்!! ஒரு கணம் அந்நாட்டுக்கும், அம்மக்களுக்கும் இடையே சென்று வந்தது போன்ற உணர்வு.

  3. சிறந்த கதை நல்ல மொழிபெயர்ப்பு பெண்களின் மனதுயரம்

  4. மிகச்சிறப்பான மொழிபெயர்ப்பு. பெண்களின் துயரங்கள் உலகெங்கும் ஒரே மாதிரி தான் போலும். உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  5. பின்னூட்டங்களில் கருத்துகள் தெரிவித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். மகிழ்ச்சி. -லதா.

உரையாடலுக்கு

Your email address will not be published.