/

குடிபெயர்தலும் குடியமர்தலும் – வந்தாரங்குடி நாவலை முன்வைத்து: சுரேஷ் பிரதீப்

நிலத்துக்கும் தனிமனிதனுக்குமான உறவு குறித்து இலக்கியம் நிறையவே பேசியிருக்கிறது. இந்திய அளவில் எடுத்துக் கொண்டால் மண்ணும் மனிதரும், நீலகண்ட பறவையைத் தேடி, பங்கர்வாடி போன்ற ஆக்கங்கள் உடனடியாக நினைவுக்கு வருகின்றன. வெளிவந்து ஒரு நூற்றாண்டுகூட ஆகியிருக்காத இந்த ஆக்கங்களை வாசிக்கும்போது வேறு ஏதோவொரு காலகட்டத்துக்குள் புகுந்துவிட்ட திகைப்பு ஏற்படுகிறது. நினைவுப்படுகையின் ஒரு அடுக்கை இப்படைப்புகள் தீண்டிவிடுகின்றன. இவ்வாசிரியர்களின் நிலம் மீதான பிரியமும் அவதானிப்புகளும் பிரம்மிப்பு ஊட்டக்கூடியவை. நிலம் என்பது ஒரு வகையான வாழ்க்கை முறையாக இருந்திருப்பதை இவ்வாக்கங்கள் நமக்கு காட்டுகின்றன. ஆனால் இக்காலகட்டத்தில் இணையாகவே இந்தியாவில் வேறொரு மாற்றமும் நடைபெறுகிறது. நீர்வளம் கொண்ட ஆனால் விவசாயம் நடைபெறாத இந்தியாவின் சமவெளிகளில் பிரிட்டிஷ் அரசாங்கம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் குடியேற்றங்களை அமைக்கிறது. விவசாயிகளுக்கு குத்தகை முறையில் நிலங்களை அளிப்பதன் வழியாக கிடைக்கும் உற்பத்தியை விற்பனை செய்து பொருளீட்டுகிறது. விவசாய உற்பத்தி இந்தியாவில் இருந்து பிரிட்டிஷ் அரசாங்கம் பெற்ற லாபத்தில் பெரும்பகுதியாக இருந்தது. நிலம் குறித்த பேச்சுகளில் நிலத்துடனான உணர்ச்சிகரமான பிணைப்பு மற்றும் நிலத்தில் இருந்து லாபமீட்டுதல் என்ற இவ்விரு இயங்குவதை நாம் காண முடியும்.

கண்மணி குணசேகரனின் வந்தாரங்குடியும் நிலத்தினைப் பற்றிய நாவலே. இந்த நாவல் நவீன காலத்தில் தனிமனிதனுக்கும் நிலத்துக்குமான உறவில் நிகழ்ந்திருக்கும் மாற்றங்களை ஒரு சமகாலச் சூழலையும் ஒரு இனக்குழுவையும் முன்னிறுத்தி பேச முனைகிறது.

வேப்பங்குறிச்சி என்ற கிராமம் அதன் சில குடும்பங்களுக்கு இடையேயான உறவும் பகையும் நாவலின் களத்தை கட்டமைக்கின்றன. ராஜ பாக்கியத்தின் மகளான பூமாதேவி அதிகாலையில் வயல்வெளிக்குச் செல்வதில் நாவல் தொடங்குகிறது. வேப்பங்குறிச்சி நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்கான நில எடுப்பு பணிக்காக எடுத்துக் கொள்ளப்படவிருக்கும் ஒரு கிராமம். நாவலின் தொடக்கத்திலேயே அது சொல்லப்பட்டும் விடுகிறது. நில எடுப்புப் பணியில் அரசுக்கும் மக்களுக்குமான சதுரங்கம் நாவலின் ஒரு இழையை கட்டமைக்கின்றன. ராஜ பாக்கியம் என்ற விவசாயியின் நிலத்துடனான உறவு நாவலில் மற்றொரு இழையாக அமைகிறது. இட ஒதுக்கீட்டுக்காகவும் நில எடுப்பின் போது சுரங்க நிர்வாகத்துடன் பேரம் பேசும் தரப்பாகவும் வன்னியர் சங்கம் நாவலில் இடம்பெறுகிறது. வன்னியர் சங்கம் பாட்டாளி மக்கள் கட்சியாக பரிணமிப்பதன் ஒரு கோட்டுச் சித்திரம் நாவலில் உள்ளது.

நாவலின் ஒரு இழையான நில எடுப்புப் பணி ஒரு கிராமத்து சம்சாரியின் பார்வையில் விளக்கப்படுகிறது. பொதுவாக கிராமங்கள் அரசாங்கத்தை நம்புவதில்லை. அரசின் மீது அச்சமும் மரியாதையும் இருக்குமே தவிர நம்பிக்கை இருக்காது. அப்படியொரு நம்பிக்கையின்மையின் தொனியிலேயே நில எடுப்பு இந்த நாவலில் பேசப்படுகிறது. பொதுவாகவே கண்மணி குணசேகரனின் எழுத்துக்களின் அழகியலை கட்டமைக்கும் பதற்றம் சஞ்சலம் போன்ற உணர்வுகள் இந்த நாவலில் நில எடுப்பினை மையமெனக்கொண்டு சுழல்கின்றன. அரசாங்கம் கொடுக்கும் தொகையினைப் பெற்றுக் கொண்டு விலகிப் போகும் மனநிலையில் இருக்கும் மக்களை அறிவழகன் மற்றும் சிகாமணியின் வழியாக நடைபெறும் வன்னியர் சங்க முன்னெடுப்புகள் போராட்டத்தை நோக்கி உந்துகின்றன. நிலத்திற்கான இழப்பீட்டுத் தொகையை உயர்த்திப் பெறுவது நிலம் எடுக்கப்பட்ட குடும்பத்தில் ஒரு உறுப்பினருக்கு வேலை என நில எடுப்புக்கு எதிரான போராட்டம் வெற்றி பெறுகிறது. நம்பகத்தன்மையுடனே எழுதப்பட்டிருந்தாலும்கூட இந்த போராட்டத்தின் எதிர் தரப்பான சுரங்க நிர்வாகம் முழுக்கவும் எதிர்மறையாகவே காட்டப்பட்டுள்ளதால் நாவலின் இந்த இழை சற்று செயற்கைத்தனம் மிகுந்ததாகவே உள்ளது.

உண்மையில் நாவலின் வலுவான பகுதி ராஜ பாக்கியம் (ராசோக்கியம்) இடம்பெறும் அத்தியாயங்களே.  ராஜ பாக்கியம் நிலத்திற்கான பணத்தைப் பெறுகிறார். அவருடைய மகனுக்கு நிலக்கரி சுரங்கத்தில் வேலையும் கிடைக்கிறது. ஆனாலும் அவரால் திருப்தியடையவே இயல்வதில்லை. நாவலில் இடம்பெறும் பாத்திரங்களில் நிலத்துடனான பந்தம் ஆழமாக வெளிப்படும் பாத்திரம் ராஜ பாக்கியம்தான். வடிவேலு நிலத்தின் மீதான அதிகாரத்தை இழந்து நிலத்திற்கான பணத்தைப் பெற்றதும் தன் மனைவியின் மீதும் அதிகாரத்தை இழக்கிறான். எப்போதும் குடித்தபடியே இருக்கும் கணேசன் நிலத்தை விற்று கிடைத்த பணத்திலும் வேலையிலும் பொறுப்புடன் வாழத் தொடங்குகிறான். ராஜ பாக்கியத்தின் மகன் சதாசிவமும் நிலக்கரி சுரங்கங்கத்தில் நிரந்தர வேலை கிடைத்ததும் பொறுப்பானவனாக மாறுகிறான். ஆனால் நிலத்தை வாழ்ந்த கிராமத்தை இழப்பதன் அகச்சிக்கல் ராஜ பாக்கியத்திடமே துல்லியமாக வெளிப்படுகிறது.

வேப்பங்குறிச்சிக்காரர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு மாற்றுக் குடியிருப்பை நோக்கி ஊர்மக்கள் அனைவரும் குடிபெயர்ந்த பிறகும்கூட ராஜ பாக்கியத்தால் ஊரை காலி செய்ய முடிவதில்லை. மொத்த ஊரும் ‘புது வேப்பங்குறிச்சியில்’ குடியேறிய பிறகும்கூட ராஜ பாக்கியம் தன் ஊரிலேயே இருக்கிறார். புதிய ஊரில் குடியேறாமல் உறவினர் வீடிருக்கும் முதனைக்கு விவசாயம் செய்வதற்காகப் போகிறார். அவ்வூரிலும் தரிக்க இயலாமல் மணக்கொல்லையில் நிரந்தரமாகக் குடியேறுகிறார். மேம்போக்காக பார்க்கும்போது ஒவ்வொரு ஊரிலும் ஏற்படும் பிரச்சினை காரணமாகவே ராஜ பாக்கியம் வேறு ஊர் நோக்கிப் போவதாகத் தோன்றினாலும் வேருடன் பிடுங்கப்பட்ட ஒரு தாவரத்தின் நிலையின்மையும் வாட்டமும் அவரைத் தொடர்வதை கண்டு கொள்ள முடியும். அந்த நிலையின்மையே ‘வந்தாரங்குடி’ என்ற பெயரில் வெளிப்படுகிறது.

வந்தாரங்குடி என்பது பெரும்பாலும் ஏளனமாகவும் வசையாகவும் பிரயோகிகப்படும் ஒரு சொல். புதிதாக ஒரு ஊரில் குடியேறும் யாருக்குமே அவர்களின் எல்லையை உணர்த்துவதாய் இச்சொல் அமையும். நகரம் யாருக்குமே சொந்தமில்லாதது. அங்கு உள் நுழைவும் வெளியேற்றமும் வேறொரு விதியால் இயக்கப்படுகின்றன. ஆனால் கிராமம் தன் உறுப்பினர்களை கூர்ந்து கவனித்துக் கொண்டே இருப்பது. ஒரு உயிருள்ள உடல் போலவே இயங்கக்கூடியது. தன் உடலில் குடியேறும் எந்த ஒரு புது மனிதரையும் அது கூடுமானவரை வெளியேற்றவே முயற்சி செய்கிறது. ராஜ பாக்கியம் எதிர்கொள்வது அத்தகையதொரு சிக்கலையே. அவரும் தன் ஊருக்கு ‘வந்தாரங்குடியாக’ வரும் ஒரு மனிதரை அவர் எப்படி நடத்தப்பட்டாரோ அவ்வாறு நடத்தியிருக்கவே வாய்ப்பதிகம்.

அவருடைய ஆளுமையில் ஏற்படும் தடுமாற்றம் ஒரு நிலத்தில் இருந்து பிடுங்கி இன்னொரு நிலத்தில் நடப்படுவதால் ஏற்படுவது. வந்தாரங்குடி நாவலின் மிக முக்கியமான பங்களிப்பென இந்த ‘பிடுங்கி நடப்படுதலின்’ துயரத்தை துல்லியமாகச் சொல்லி இருப்பதைக் கூறலாம். ராஜ பாக்கியத்துடன் அவர் மகள் பூமாவை இணைத்து வாசித்துப் பார்க்கலாம். பயணத்தின் இடையேயான ஒரு சிறு தூக்கம் அவளுக்கு தன் ஊரை மறப்பதற்கு போதுமானதாக இருக்கிறது. ராஜ பாக்கியத்தின் மனைவி பாஞ்சாலை கூட ஊரை நினைத்து பெரிதாக அலட்டிக் கொள்வதாகத் தெரிவதில்லை. ஒரு வகையில் இந்நாவலில் ஊர் நினைவை மீட்டிப் பார்க்கிறவர்கள் ஆண்களாகவே இருக்கின்றனர்!

நாவலில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இரு பாத்திரங்கள் அறிவழகனும் சிகாமணியும். வன்னியர் சங்கத்தின் வாயிலாக நில எடுப்புக்கான பேரத்தை முன்னின்று நடத்துகிறார்கள். அறிவழகன் சிறை வரை செல்கிறான். ஆனால் இருவராலுமே போராட்டத்தின் பலன்களை அனுபவிக்க இயலவில்லை. அறிவழகன் நேரடியாகவே புறக்கணிப்படுகிறான். சிகாமணிக்கு குடும்பத்தின் வழியே வேலை கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.

இந்த நாவலை வாசித்து வந்தபோது நாவலின் முதல் பாதியில் இடம்பெறும் வன்னியர் சங்க போராட்டங்கள் நாவல் போக்கிற்கு ஒட்டாமல் இருப்பதாகத் தோன்றியது. ஆனால் சற்று யோசித்தபோது இந்த நாவல் இரண்டு தடங்களில் பயணிப்பதை உணர முடிகிறது. ஒரு தளத்தில் நாவல் யதார்த்தமாக நகர்கிறது. வேப்பங்குறிச்சியும் அதன் குடும்பங்களும். மற்றொரு தளத்தில் நாவல் ஒரு வீரகதைப்பாடல்களுக்கு அருகில் செல்கிறது. நாவலில் இடம்பெறும் குறள்மணி, ஜி.ஆர் டாக்டர், ‘டாக்டர் அய்யா’ போன்றோரின் ‘லட்சிய பிம்பங்கள்’ மட்டுமே நமக்கு பார்க்கக் கிடைக்கின்றன. இந்த வீரகதைப்பாடல் தன்மை நாவலுக்கு ஒரு வகையான இனக்குழு அடையாளத்தை கொடுத்துவிடுகிறது. நாவலின் பெரும்பான்மையான பிரதானப் பாத்திரங்கள் வன்னியர்களாகவே இருக்கின்றனர். இது கூட புரிந்து கொள்ளக்கூடியதே. ஆனால் வன்னியர் சங்கத்தின் செயல்பாடுகள் அனைத்தும் ‘மக்கள் நலன்’ மட்டுமே சார்ந்ததாக சித்தரிக்கப்பட்டிருப்பதே இந்த நாவலின் மிகப்பெரிய பலகீனம். நவீன இலக்கியத்தின் அடிப்படை குணாம்சமே விமர்சனமும் அமைப்புகளை கேள்விக்கு உட்படுத்துவதும்தான் என்கிற நிலையில் இந்த நாவல் உருவாக்கும் சமகாலம் சார்ந்த லட்சிய பிம்பங்கள், மாற்று வரலாறு என்கிற ரீதியிலான சப்பைகட்டல்களும் விலக்கதையே அளிக்கின்றன.

அறிவழகன் சிகாமணி இருவரும் சங்கத்துக்காக உழைத்தவர்கள். இருவருடைய எதிர்காலமும் சங்கச் செயல்பாடுகள் காரணமாகவே நிச்சயமற்றதாகிறது. இந்த ஒரு புள்ளியைக் கடந்து நாவல் முழுக்கவே வன்னியர் சங்கம் மீதும் பாட்டாளி மக்கள் கட்சியின் மீதும் ஒரு வகையான வழிபாட்டு மனநிலையே செயல்படுகிறது. எத்தகைய புனிதத்துவம் வாய்ந்த அமைப்பு என்றாலும் அதன் கட்டமைப்பில் இருக்கும் வன்முறையும் மீறலும் தவிர்க்க முடியாதது. இந்த நாவல் சங்கத்தின் அத்தகைய மீறல்களை மௌனமாக கடந்து செல்கிறது. சி எம் முத்துவின் எழுத்துகளிலும் இந்தத் தடுமாற்றத்தைக் காணலாம். கீழ் தஞ்சையின் குடும்ப அமைப்பு, ஜாதிய அடுக்குகள், உறவுமுறைகள், இயற்கைச்சூழல் என பலவற்றையும் நுண்மையாகத் தொடும் சி எம் முத்துவின் எழுத்து அரசியல் என்று வரும்போது வழக்கமான எளிமைப்படுத்தலுக்குள் நுழைந்து விடுவதைக் காணலாம். அதுபோலவே கண்மணி குணசேகரனின் இந்த நாவலும் அமைந்துள்ளது. நிலம் கையகப்படுத்துதல் அது சார்ந்த பேரம் மனநிலைகள் போன்றவற்றை நேர்த்தியாக சித்தரிக்கும் நாவல் தன் கட்டமைப்பில் ஒரு அரசியல் இயக்கத்தை அனுமதிக்கும்போது தடுமாற்றமடைகிறது. அந்தத் தடுமாற்றத்தை தவிர்த்திருந்தால் வந்தாரங்குடி தமிழின் மிகச்சிறந்த நாவல்களில் ஒன்றாக இருந்திருக்கும்.

சுரேஷ் பிரதீப்

தமிழ்நாடு திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தொடர்ச்சியாக புனைவுகள், விமர்சனங்கள் எழுதிவருகிறார். அழகியலை முன்னிலைப்படுத்தி எழுத்தாளர்களின் சிறப்பியல்புகளை நுட்பமாக மதிப்பிடுபவர்.ஒளிர் நிழல் என்ற நாவலும் இரண்டு சிறுகதைத் தொகுப்புக்களும் வெளியாகியுள்ளன.

உரையாடலுக்கு

Your email address will not be published.