தமிழின் முதல் நாவலான மயூரநாத பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் வெளிவந்து கிட்டத்தட்ட நூற்று நாற்பது ஆண்டுகள் ஆகிவிட்டபோதும் மருத்துவம், விஞ்ஞானம், பொருளாதரம் போன்ற பிற அறிவியல் துறைகளைக் களமாகக்கொண்டு வெளிவந்துள்ள நாவல்கள் வெகு சொற்பமே. அனைவருக்கும் கல்வியும் அதன் வழியே பரவலான வாசிப்பும் சென்றடையத் தொடங்கியிருக்கும் சமீப ஆண்டுகளில் அத்தகைய பல்வேறு முயற்சிகள் கைகொள்ளப்பட்டு வருகின்றன. துறை சார்ந்த அறிவோடு நவீன இலக்கியத்துடனான முறையான பரிச்சயமும் மொழி வன்மையும் புனைவாக்கும் திறமும் சரிவிகிதத்தில் இணையும்போது மேற்கண்ட இல்லாமைகள் இல்லாமலாகும். சமீப ஆண்டுகளில் அதற்கான சமிக்ஞைகள் மெதுவாகத் தெரிய ஆரம்பித்திருக்கின்றன. அப்படியாக சமீபத்தில் பங்குச் சந்தையைப் பின்புலமாகக் கொண்டு எதிர் வெளியீடாக வெளி வந்திருக்கிறது ‘இடபம்’ நாவல். இதை ஒரு பெண் எழுதியிருப்பது மேலும் ஒரு தனிச் சிறப்பு.
தொள்ளாயிரத்தின் ஆரம்ப வருடங்களிலேயே வை.மு.கோதைநாயகி போன்றோர் தமிழில் நாவல்கள் எழுதத் தொடங்கிவிட்டாலும் நவீன இலக்கியத் தமிழ் நாவல்களில் பெண்களின் பங்களிப்பு எண்ணிக்கை அளவில் வெகு சொற்பமே. அதிலும் பிற துறை அறிவோடு இலக்கியத்துக்குள் நுழைபவர்கள் இன்னும் குறைவே. அதற்கு பல்வேறு சமூக பொருளாதார அரசியல் காரணங்கள் உண்டெனினும், அத்தடைகளையெல்லாம் உடைத்து எழுத வந்தவர்களில் பலரும் தங்களை அழுத்தமாக நிறுவிக்கொள்ளத் தவறவில்லை.
பல்வேறு கலாச்சாரங்களின், வெவ்வேறு வாழ்வியல் முறைகளின் சங்கமமாக விளங்கும் பெங்களூரு போன்ற பெருநகரம், சுயமாகச் சம்பாதித்துத் தனக்கான சுதந்திரத்தை அடுத்தவரிடம் எதிர்பார்க்காமல் தனியாளாக வாழும் தமிழ்ப் பெண், பங்குச் சந்தையின்பால் அவளுக்கு இருக்கும் ஈர்ப்பு, அதன் பொருட்டெழும் அலைக்கழிப்பு என்று விரியும் நாவலின் ஆரம்ப அத்தியாயங்களே வாசிப்பவரை இழுத்துப் பிடித்து நிறுத்திவிடுகிறது.
ஏதேனும் ஒரு துறை சார்ந்து புனைவெழுதும்போது அத்துறைக்கு வெளியே இருப்பவர்களுக்குப் புரியாமல் போகக்கூடிய அத்துறை சார்ந்த கலைச் சொற்களைக் கையாள்வது சற்று கடினமான காரியம். முறையான பயிற்சியும் பரந்த வாசிப்பும் கூரிய அவதானிப்பும் அதைக் களைய கொஞ்சம் உதவக்கூடும். பங்குச் சந்தைப் பற்றி எனக்கிருக்கும் எளிய அறிவைக்கொண்டே அதன் நுணுக்கங்களை அலசும் இதன் பல பகுதிகளை அணுகிப் புரிந்துகொள்வது பெரிய சிரமமாக இருக்கவில்லை. கொஞ்சம் பிசகினாலும் பங்குச் சந்தை பற்றி விளக்கும் நூலாக மாறிவிடும் சாத்தியம் உண்டு. அவ்வகையில், அந்தச் சவாலை கண்மணி இந்நாவலில் திறம்பட கையாண்டிருக்கிறார்.
ஆரம்ப அத்தியாயங்களிலேயே வரும் தனித்து வாழும் கதை நாயகியின் செயல்பாடுகள் அவள் எடுத்துக்கொள்ளும் பாலியல் சுதந்திரம் முன்னாள் காதலனின் அலுவலகத்திலேயே வேலைக்குச் செல்வது போன்றவை முதலில் நெருடினாலும் நாவல் நகர நகர அவளிடத்தே இயல்பான தோழமை வாசிப்பவரிடத்தில் உண்டாகிவிடுகிறது.
குடும்பம், உறவுகள் போன்ற கட்டாயப் பிணைப்புகளும் அவற்றின் பொருட்டு மேற்கொள்ள வேண்டிய சமரசங்களும் இன்றைய யுவ யுவதிகளிடையே ஏற்படுத்தும் விலகலைச் சுட்டிக் காட்டி வரும் இடங்கள் சமகாலத்தினை மிக இயல்பாகப் பிரதிபலிக்கின்றன. அதே நேரத்தில் அவ்விலகலுக்கான காரணங்கள் குறித்த விசாரணை நாவலில் எங்குமே பேசப்படவில்லை. அதற்கான தர்க்கங்களும் முறையாக அடுக்கப்படவில்லை.
பங்குச் சந்தையின் போக்குக்கும் அதன் நிச்சயமற்ற தன்மைக்கும் நம் வாழ்வுக்கும் நெருக்கமான தொடர்பிருப்பதாகவே தோன்றுகிறது. ஒரு பங்கு மேலே செல்வதற்கும் பாதாளத்தில் வீழ்வதற்கும் உலக நாடுகளின் பொருளாரத்திலிருந்து உள்ளூரில் பெய்யும் மழை வரை ஓராயிரம் காரணங்கள் உண்டு. காளையை விரட்டிக் கொண்டிருப்பவர்கள் கரடியின் பிடியில் சிக்குவதும் (பங்குச் சந்தையின் மொழியில் காளை ஏற்றத்துக்கும் கரடி வீழ்ச்சிக்குமான குறியீடு) கரடியின் கைக்குளிருந்தும் காசு பார்ப்பவர்களும் இங்கே சாதாரணம். இப்படியான பங்குச் சந்தை நடக்கும் தரகு நிறுவனமான லக்கி ஸ்டாக்ஸிலேயே பெரும்பாலும் நாவல் நகர்கிறது. இருந்தபோதும் சலிப்பின்றி சந்தையின் நிலையற்ற தன்மையை எடுத்துக்காட்டி கோர்த்த சம்பவங்களின் வழியாகவும் சிபி, பிரதீப், ரத்னசாபாபதி, மஞ்சுநாதன் என்று அங்கே ஊடாடும் பல்வேறு கதாப்பாத்திரங்களின் வழியாகவும் நாவலைத் திறம்பட நகர்த்தியிருக்கிறார் ஆசிரியர். அதே நேரத்தில், கதைமொழியில் முதல் நாவலுக்கு உரிய போதாமைகள் வெளிடப்படும் இடங்கள் உண்டு.
பங்குச் சந்தை தொடர்பான நிகழ்வுகளையும் ஏற்றமும் இறக்கமுமாய் அலைவுறும் அதன் தன்மையையும் நுட்பங்களையும் திறம்பட கையாண்ட ஆசிரியர் கதைசொல்லியின் காதல் தருணங்களை அத்தகைய கவனத்தோடு கையாண்டதாகத் தெரியவில்லை. பொதுவாக தனித்து இருக்கும் மத்தியதர குடும்பப் பின்னணியிலிருந்து வரும் திருமணமாகாத பெண்ணுக்கு இருக்கும் அதீத எச்சரிக்கை உணர்வோ பதற்றமோ இன்றி நண்பர்களோடு பழகுவதும் நினைத்த நேரத்தில் அவர்களோடு உறவாடுவதும் கதைசொல்லியின் மீதான நம்பகத்தன்மையைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது. அதிலும் குறிப்பாக நண்பர் என்ற அளவில்கூட வைக்க முடியாத வேணுவுடனான தொடர்பும் அதைத் தொடர்ந்த பகுதிகளும் நாவலுக்கு எந்தவிதத்திலும் உதவுவதில்லை. மாறாக, இதுபோன்று தனித்து வாழும் பெண்கள் பற்றி பொதுப் புத்தியில் கட்டமைக்கப்பட்டிருக்கும் ஒழுங்கை மீறியவர்கள் என்பதான பிம்பத்துக்கு வலுசேர்ப்பதாக அமைந்திருப்பது துரதிர்ஷ்டவசமானது.
கதைசொல்லிக்கும் அவளின் வாகனமாக வரும் கரிக்குருவிக்கும் இருக்கும் ஒருவித பந்தம் இயல்பாகவும் அழகாகவும் வெளிப்பட்டிருக்கிறது. தனியாக வாழும் பெண்ணொருத்தி கண்டடையும் சுதந்திரம் வெளிப்படும் இடங்கள் சிறப்பாக வந்திருக்கின்றன. விரும்பியதைச் சமைப்பதும் வேண்டியதை உண்பதும் நிர்வாணமாய் அலைவதும் என்று சின்னச் சின்ன தகவல்களின் வழியே அவ்வுலகின் ஒரு பக்கத்தையும், அம்மாவும் அப்பாவும் அங்கிருந்து வெளியேறி சென்னை கிளம்பிவிட தனிமையின் நிழல் படியும் வெறுமை என்று தனித்து வாழ்வதின் மறுபக்கதையும் காட்சிப்படுத்தியிருக்கும் விதம் சிறப்பு.
நாவலின் இறுதிப்பகுதி ஒரு திரைப்படத்துக்கு உரித்தான விறுவிறுப்பையும் உச்சத்தையும் எட்டி இறுதியில் சுபம் என்பதாக முடிந்தாலும் வாழ்க்கை கொண்டுவந்து சேர்க்கும் அப்படியான அதிர்ஷ்டத்தின் மீதெழும் கேள்விகளுக்கோ அதன்பொருட்டு மேற்கொள்ளப்படும் அபத்த துணிவுக்கோ நாவலில் பதில் இல்லை. இப்படியாக, சில பகுதிகளின் நம்பகத்தன்மைக்கு கொஞ்சம் மெனக்கெட்டு இருந்தால் இன்னும் சிறப்பான இடத்தையும் கவனத்தையும் இந்நாவல் பெற்றிருக்கக்கூடும்.
கார்த்திக் பாலசுப்ரமணியன்
சென்னையில் வசித்துவரும் கார்த்திக் பாலசுப்ரமணியன், புனைவு பரப்பிலும், விமர்சன பரப்பிலும் தொடர்ந்து இயங்கிவருகிறார். டொரினா என்ற சிறுகதைத் தொகுப்பும், ‘நட்சத்திர வாசிகள்’ என்ற நாவலையும் வெளியிட்டுள்ளார்.