‘இச்சா’ நாவல் குறித்து அகழ் இதழில் வெளியான நட்சத்திரன் செவ்விந்தியனின் கட்டுரை குறித்த விவாதத்தில் அகழ் ஆசிரியர் குழுவின் நிலைப்பாட்டை தெரிவிக்க விரும்புகிறோம்.
அதற்குமுன் ஆசிரியர் குழு நட்சத்திரன் செவ்விந்தியனின் கட்டுரைக்கு முழுப் பொறுப்பேற்றுக் கொள்கிறது.
முன்னோடிகளை தொடர்ச்சியாக வாசித்துவரும் எந்தவொரு வாசகரும் அல்லது விமர்சகரும் அவர்கள் எழுத்தில் நிகழும் முன்னகர்வுகளையும் பின்னடைவுகளையும் தொடர்ந்தபடியேதான் இருப்பார். வெகுகாலமாக எழுதிவரும் ஒரு படைப்பாளியை விமர்சிக்கும்போது அவர் படைப்புச் செயல்பாட்டில் நிகழ்ந்திருக்கும் மாறுதல்களை சுட்டிக்காட்டுவதும் ஆராய்வதும் நிகழ்கிறது.
அகழ் இதழின் முதன்மையான நோக்கங்களில் ஒன்று, படைப்பாக்கத்தில் இயங்கி, பின்னர் விலகிச் சென்ற அல்லது அதிகம் இயங்காத ஈழத்து படைப்பிலக்கியவாதிகளை மீண்டும் கொண்டுவருவது, அவர்களை அகழ் இதழ் வழியே அடையாளப்படுத்துவதாகும். சக்கரவர்த்தி, கலாமோகன் போன்றவர்களை அப்படி பலரிடம் கொண்டு சேர்த்து இருக்கிறோம் என்று நம்புகிறோம். அந்த வகையில் கவிஞராக தொண்ணூறுகளில் அறியப்பட்டு, பின்னர் இலக்கியத்தில் இருந்து விலகிச் சென்ற நட்சத்திரன் செவ்விந்தியனை மீண்டும் இலக்கியத்துக்குள் கொண்டுவர விரும்பினோம்.
ஷோபாசக்தியின் ‘இச்சா’ நாவல் குறித்த கட்டுரை தேர்ந்தெடுக்கப்பட்டது அந்நாவலின் மீதான ஒரு விமர்சனக் கோணத்தை அக்கட்டுரை முன்வைக்கிறது என்பதால்தான். ஷோபாசக்தியை மட்டுமல்லாமல் வேறு சில படைப்பாளிகளையும் அக்கட்டுரை அவர்களுடைய முந்தைய மற்றும் பிந்தைய படைப்புகளை ஒப்புவைத்து நோக்குகிறது. கட்டுரையில் நிகழ்த்தப்பட்டிருக்கும் ஒப்பீடுகளுடன் ஆசிரியர் குழுவுக்கு மாற்றுக்கருத்து உண்டு. ஆனால், இப்படி ஒப்பிட்டு நிகழ்த்தப்படும் வாசிப்பு, துரிதகதியில் எழுதப்படும் வாசிப்பனுபவ குறிப்புகள் விமர்சனங்களாக முன்வைக்கப்படும் இச்சூழலில் தேவையாகத் தோன்றியது. அனைத்து தரப்பு உரையாடலின் வெளியாக அகழ் இருக்கவேண்டும் என்பது எமது நிலைப்பாடு. தவிர, சேதன-அசேதன விவாதம் சார்ந்த எதிர்வினைகள் விவாதமாக நிகழும் என்று எண்ணியே இக்கட்டுரையை பிரசுரம் செய்தோம்.
ஷோபாசக்தி சமகாலத் தமிழிலக்கியத்தின் முதன்மை படைப்பாளிகளில் ஒருவர் என்பதில் ஆசிரியர் குழுவுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. நாம் வெவ்வேறு இதழ்களில் அவரது படைப்புகள் சார்ந்த கட்டுரைகளை அவருக்குரிய இடத்தை அளித்தே எழுதியிருக்கிறோம். பேசியிருக்கிறோம்.
படைப்பிலக்கியத்தில் அவரிடம் கற்றுக்கொள்ள நிறையவே உண்டு. அவரை சிறுமை செய்யும் நோக்கம் எமக்கு ஒருபோதும் கிடையாது.
ஷோபாவின் ஆரம்பகால அதிரடி விமர்சனங்கள், கலகங்கள் என்பவற்றை பார்த்து வியந்து வளர்ந்த தலைமுறையினர் நாம். குறிப்பிட்ட இக்கட்டுரையில் இருக்கும் எதிர்மறை அம்சங்கள், அவ்வாறான ஒரு கண்ணோட்டத்தில் கடக்கப்படும் என்றே எண்ணினோம். ஆனால், உருவாக்கியிருக்ககூடிய சமநிலைக் குலைவு எமக்கும் திடுக்கிடலை அளிக்கிறது.
கட்டுரை உருவாக்கிய எதிர்வினைகள் பிரசுர நோக்கத்துக்கு முழுவதும் மாற்றானவையாக இருந்தன. அகழ் இவ்வகையான எதிர்வினைகளை உருவாக்க வேண்டும் என்ற நோக்கமெதுவும் கொண்டிருக்கவில்லை என்பதை இங்கு தெளிவுபடுத்த விரும்புகிறோம். கட்டுரையை நீக்கச் சொல்லியும் மாற்றியமைக்கச் சொல்லியும் எழுத்தாளர்களும் வாசகர்களும் எமக்கு தனிப்பட்ட ரீதியிலும், பொதுவிலும் கருத்து தெரிவிக்கின்றனர். நாம் மதிக்கும் முன்னோடிகளிடம் இருந்தும் கண்டிப்புடனும், உரிமையுடனும் வரும் இச்செய்திகளை உள்வாங்கிக் கொள்கிறோம். ஒரு குறியீட்டுச் செயல்பாடாக இக்கட்டுரையை நீக்கலாம்; இக்கட்டுரையை பிரசுரம் செய்தபோது நாம் பொறுப்பை ஏற்றுக்கொண்டோம். நீக்குவது அந்தப் பொறுப்பிலிருந்து நழுவுவது போலாகும். இவை ஏற்படுத்தும் வாதப்பிரதிவாதங்களை முற்றிலும் நாம் ஏற்கிறோம். எதிர்வினைகளை அகழுக்கு அனுப்பினால் அவற்றை பிரசுரிக்க எப்போதும் தயாராக இருக்கிறோம்.
இதழ் ஆசிரியர்கள்
அனோஜன் பாலகிருஷ்ணன்
சுரேஷ் பிரதீப்
இவ்வளவு ஜெஸ்டிபை செய்கிறீர்களே..அந்த கட்டுரை பொருட்படுத்தத் தக்கது என்பதற்கு ஒரு எளிய காரணத்தையாவது உங்களால் சொல்லமுடியுமா?
குப்பை தீர்ந்து போனவர் இதல்லாம் என்னப்பா?
பால்மானி போன்ற மீட்டர் ஏதும் கையில் வைத்திருக்கிறீர்களா?
ஏறத்தாழ இருபது பத்திகள் கொண்ட கட்டுரையில் நான்கு பத்திகள் தான் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கும் நூலைப் பற்றி இருக்கிறது. மீதமுள்ளவை ஷோபாசக்தியின் மீதான தாக்குதல்கள் – ஷோபாசக்தி எழுதும்போது போதைப் பொருட்களை உபயோகிப்பாரா? ஷோபாசக்தி கதையைத் திருடினார், ஷோபாசக்தி விளம்பரம் செய்கிறார், Public relations இத்யாதி இத்யாதி. இதை ஒரு மாற்றுக்குரலாக, ஒரு விமர்சனக்குரலாக கலை, இலக்கியம் சார்ந்து இயங்கும் தளம் முன்வைக்க வேண்டியதன் காரணம் என்ன? தனிப்பேச்சு உரையாடல்கள், முகநூல் வம்புகள் இவற்றின் வகையறாவில் வந்திருக்க வேண்டிய ஒரு அருவெறுப்பான வார்த்தைக் குப்பைக்கு ஒரு இணைய இதழ் இடம் கொடுக்க வேண்டியதன் காரணம் என்ன? சேதனம், அசேதனம், இத்யாதி, இத்யாதி என மேற்கு விமர்சகர்கள் கூறுவதை அப்படியே உமிழ்ந்துவிட்டு இது சேதன நாவல், இது அசேதன நாவல் என தன் விழைவுக்கேற்ப, எந்த தர்க்க நியாயங்களையும் முன்னிறுத்தாமல் பகுத்து அதை ஒரு கட்டுரை என்று இணைய இதழ்கள் வெளியிடும் அளவுக்கா எழுத்துப் பஞ்சம் இருக்கிறது? இதை எழுதிய அருண் அம்பலவாணரின் முகநூல் பக்கத்திலோ பல கேவலமான மீம்கள் – தன்னைத் தானே கதாநாயகனாக முன்னிறுத்த முனையும் நார்சிஸப் போக்கினைத் தெளிவாகக் காட்டுபவை. தமிழ் இலக்கிய இதழ்கள் இப்படிப்பட்ட நபர்களிடம் கட்டுரை வாங்கி வெளியிட்டே ஆகவேண்டிய நிலையில் தான் இருக்கிறதா?