அகழ் இதழில் வெளியாகும் நேர்காணல்கள் அலைபேசி வாயிலாக பெறப்பட்டு தட்டச்சு செய்யப்பட்டு, மீண்டும் நேர்காணல் வழங்குபவரிடம் அனுப்பி வைக்கப்பட்டு, அவர்களின் பூரண சம்மதத்துடனே வெளியிடப்படுகின்றன. பல திருத்தங்களை நேர்காணல் வழங்குபவர்கள் செய்வது வழமை. அவற்றின் மென் பிரதிகள் மின்மடல்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. அகழ் ஆசிரியர் இவற்றில் பொறுப்புடன் நடந்து கொள்வதை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்.
0
“காற்சட்டை மேற்சட்டை போட்டு நிர்வாணமாய் திரிகின்றோம் அந்நியரின் பூமியிலே!” என்ற கவிதை வரிகள், செல்வம் அருளானந்தத்தினால் தமிழ் முரசில் 1987 சித்திரையில் எழுதப்பட்டு, ‘கட்டிடக்காடுகள்’ தொகுப்பில் சேர்க்கப்பட்டது. ஐரோப்பிய பண்பாட்டு சூழலுடன், ஈழத்து வாழ்வியல் சலனப்பட்டு ஏக்கமாக மோதும் மெல்லிய கோடு இக்கவிதையில் ஒலிக்கிறது. இந்த அனுபவத்தை பதிவு செய்த ஆரம்பகால கவிதையாக இதனை தயக்கம் இன்றி சொல்லலாம். அந்த வகையில் செல்வம், புலம்பெயர் அகப்பிரச்சினையை எழுத்தில் கொண்டு வந்ததில் முன்னோடியாகத் திகழ்கிறார். கி.பி.அரவிந்தன் தான் ஈழத்தின் புலம்பெயர் முன்னோடி கவிஞர் என்று பொதுவாக சொல்லப்படுவது, அல்லது பலரால் கோடிட்டுக் காட்டப்படுவது வழமை. கால வரிசையில் இது தவறு. செல்வம் அதற்கு முன்னரே எழுதியவர் என்பதை சுட்டிக்காட்டவே முன்னோடிக் கவிஞர் என்று அழுத்தமாக சுட்டி நேர்காணலில் ‘கேள்வி’ கேட்கப்படுகிறது. முன்னோடி என்பதற்கும், முதல் என்பதற்கும் வித்தியாசம் உண்டு. முன்னோடி என்பது முதன்மையாக அதன் போக்கை தீர்மானித்தவர்/கொண்டுவந்தவர் என்று சொல்ல உபயோகிக்கப்படுவது. ஆனால், ஈழத்து அரைகுறை விமர்சகர்கள் முதல் என்ற அர்த்தத்தில் அவர் முதலாவது கவிஞரா என்று எதிர்வினை செய்வது வேடிக்கையானது.
0
நவீனின் பேய்ச்சி நாவல் மலேசிய அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்டமை சார்ந்து, ‘அகழ்’ தனது நிலைப்பாட்டை தனிக்கட்டுரையாக பிரசுரித்துள்ளது. இன்றைய சூழலில் ஒரு நூலுக்கு தடைவிதிப்பது அது வாசகர்களை சென்றடையும் வேகத்தை அதிகப்படுத்தவே செய்யும். ஆனாலும் தடை என்பது ஒரு குறியீட்டுச் செயல்பாடு. கலைச்செயல்பாடுகளை தணிக்கை செய்ய நினைக்கும் அதிகார முகத்தின் வெளித்தெரியும் ஒரு சிறுநுனி. இத்தகைய செயல்பாடுகளை உலகம் முழுவதிலும் இருக்கும் தமிழ் இலக்கியத்தின் மீதும் கலைச்செயல்பாடுகள் மீதும் நம்பிக்கை கொண்ட அமைப்புகள் கண்டிக்க வேண்டும். அவ்வகையில் இக்கட்டுரை வழியாக மலேசிய அரசுக்கு ‘அகழ் மின்னிதழ்’ வன்மையான கண்டனங்களை பதிவு செய்கிறது.
0
தொ. பரமசிவன்
பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன் சென்ற மாதம் மறைந்தார். பண்பாட்டு ஆய்வுகள் புதிய ஆய்வு நோக்குகள் முன்வைக்கப்படும் போது விரிவடையும் தன்மை கொண்டவை. வரலாற்று மொழிதலில் நாட்டாரியல் கூறுகளை இணைப்பது குறித்த விவாதங்கள் சில பத்தாண்டுகளாக தமிழ்ச் சூழலில் நடைபெறுகின்றன. தொ.பரமசிவனின் பங்களிப்பு இந்தச் சூழலில் முக்கியத்துவம் வாய்ந்தது. தொ.பரமசிவனுக்கு அகழின் அஞ்சலி.
எம். வேதசகாயகுமார்
இலக்கிய விமர்சகர் எம்.வேதசகாயகுமார் சென்ற மாதம் மறைந்தார். வேதசகாயகுமாரை புதுமைப்பித்தன் கதைகள் குறித்து அவர் மேற்கொண்ட ஆய்வுகளுக்காகவே பலர் இன்று நினைவுகூர்கின்றன. சிக்கலானதும் பலதரப்பட்ட கதைகளைக் கொண்டதுமான புதுமைப்பித்தனின் புனைவுலகை தமிழ்ச்சூழலுக்கு வகுத்து அளிப்பவையாக அவர் தொகுத்த புதுமைப்பித்தன் சிறுகதைகள் நூலும் அந்நூலுக்கு அவர் எழுதிய முன்னுரையும் அமைந்தன. எம். வேதசகாயகுமாரின் இப்பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. எம்.வேதசகாயகுமாருக்கு அகழின் அஞ்சலி.
ஆ. மாதவன்
தமிழின் முன்னோடி புனைவெழுத்தாளர்களில் ஒருவரான ஆ.மாதவன் ஜனவரி ஐந்து அன்று மறைந்தார். பொதுவாக இருண்மையைப் பேசும் தமிழ் படைப்பாளிகள் பலரிடமும் இருண்மை குறித்த அச்சமும் விமர்சனமும் வெளிப்படுவதைக் காணலாம். ஆனால் ஆ.மாதவன் கதையுலகு இருண்மையை வாழ்வின் மற்ற உணர்வுகளைப் போலவே கையாள்கிறது. இருண்மையை நிதானமாக அவதானிக்கும் கண் கொண்டவராக ஆ.மாதவன் தன் கதைகளிலும் நாவல்களிலும் வெளிப்படுகிறார். பி கே பாலகிருஷ்ணனின் இனிநான் உறங்கட்டும் என்ற நுட்பமான நாவலை அதன் அழகியல் தன்மை கெடாமல் தமிழுக்கு கொண்டுவந்த வகையில் மொழிபெயர்ப்பாளராகவும் ஆ.மாதவன் சிறப்பான பங்களிப்பை செய்திருக்கிறார். ஆ.மாதவனுக்கு அகழின் அஞ்சலி.
Editors
Suresh Pradheep
Annogen Balakrishnan